நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.6.11

சுரண்டலை தட்டிக் கேட்ட தலைவர்


தாதாபாய் நௌரோஜி
(மறைவு: ஜூன் 30)

நமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறப் போராடியவர்களுள் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் தாதாபாய் நௌரோஜி. காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர இவரது பங்களிப்பு மகத்தானது. சுதந்திரம் என்ற கருதுகோள் உருப்பெற இவரது சிந்தனைகள் காங்கிரஸ் கட்சிக்குள் செயலூக்கம் அளித்தன. அடிமைப்பட்ட இந்தியாவில் ஆங்கிலேயரின் சுரண்டலுக்கு எதிராக கூர்மையான வாதங்களை முன்வைத்த முதற்பெரும் தலைவர் இவரே.

தாதாபாய் நௌரோஜி (செப். 4, 1825  ஜூன் 30, 1917) குறித்து  தமிழகத்தின் மகாகவி பாரதியார், பாடல் எழுதி இருக்கிறார்.  காங்கிரஸ்  இயக்க  நிறுவனர்களுள் இவர் தலையாயவர். காங்கிரசுக்குள் இரு  பிரிவுகளாக    இருந்த தலைவர்களை ஒன்றுபடுத்தும்  விசையாக  தாதாபாய் திகழ்ந்தார்.

 1825, செப். 4 ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) ஒரு பார்ஸி குடும்பத்தில் நவ்ரோஜி பிறந்தார்.  அவருக்கு 4 வயதாக இருந்த போது தந்தை பலன்ஜி தோர்டி உயிரிழந்து விட்டாலும், தாதாபாய் நவ்ரோஜிக்கு தரமான கல்வி வழங்கத் தேவையான அனைத்தையும் அவரது தாய் மானெக்பாய் செய்து கொடுத்தார்.

பம்பாயில் உள்ள எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நவ்ரோஜி, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கல்லூரியில் கணிதம், தத்துவப் பாடத்திற்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  கடந்த 1852இல் தனது அரசியல் பயணத்தை துவக்கிய நவ்ரோஜி, ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையை தீவிரமாக எதிர்த்ததுடன், அதனை கடுமையாக விமர்சித்து அப்போதைய ஆங்கிலேய வைஸ்ராய், கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததற்குக் காரணம் இந்திய மக்களின் அறியாமையே என்பதை உணர்ந்த தாதாபாய், மக்களுக்கு கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் 'கியான் பிரசார்க் மண்டல்' என்ற அமைப்பை உருவாக்கினார்.


1855ல் இங்கிலாந்திற்கு சென்ற தாதாபாய், அங்கு முதல் இந்திய வர்த்தக அமைப்பை 1859ல் துவக்கினார். இங்கிலாந்தில் வசித்த காலத்தில் அந்நாட்டு மக்களிடையே இந்திய மக்களின் துன்பகரமான நிலையை தனது பேச்சுகள், கட்டுரைகள் மூலம் தாதாபாய் விளக்கினார். 

இதன் பின்னர் தாயகம் திரும்பிய தாதாபாய், இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு,கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார். கடந்த 1870ம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ. 20 மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட தாதாபாய்,  ஆங்கிலேயே ஆட்சியாளர்கள்,  ராணுவத்தினர்,  முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் இந்தியர்களின் மூலதனம்,  ஊதிய வருமானம்,  வரி வருவாய்,  லாபம்,  வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று குவிக்கிறார்கள் என்றும் குற்றம் சாற்றினார்.

அதே தருணத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நவ்ரோஜியின் ‘பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும்,  இந்தியாவின்  வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) என்ற நூல் ஆங்கிலேயர் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.


தாதாபாய் நவ்ரோஜியின் நடவடிக்கைகளால் ஆங்கிலேய அதிகாரிகள் ஆத்திரமடைந்தாலும், சூழ்நிலை கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். 'சுயராஜ்ஜியம்' என்ற கொள்கையை முதல்முதலில் கையில் எடுத்த பெருமையும் தாதாபாய் நவ்ரோஜியையே  சேரும்.

பெருந்தலைவராகப் போற்றப்பட்ட மகாத்மா காந்தி உட்பட முன்னணி இந்தியத் தலைவர்கள் பலர் தாதாபாய் நௌரோஜியை தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்.


1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தாதாபாய் செயல்பட்டார். 1892 முதல் 1895  வரை ஐக்கிய ராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

'ஒன்றாக இருந்து சுயாட்சி பெற்று அதனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே வறுமையிலும், பஞ்சத்திலும் உழன்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய மக்களை காப்பாற்ற முடியும். அப்போதுதான் பண்டைய காலத்தில் இருந்தது போல் உலகின் மிக உயரிய, பண்பட்ட நாடாக இந்தியா உருப்பெறும்' என, தாதாபாய் நவ்ரோஜி குறிப்பிட்டார். 

அவரது நினைவுநாளான இன்று அவர் நினைவைப்  போற்றுவோம்.  இன்றைய  ஊழல்மயமான   அரசியலில் இருந்து நாடு விடுபட  நாமும்  செயலூக்கம்  பெறுவோம்.


காண்க:

தாதாபாய் நௌரோஜி (விக்கி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக