நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.12.12

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்


'சுவாமி விவேகானந்தர்- 150' ஆண்டு விழாவுக்காக, 
இன்று சங்கல்பம் மேற்கொள்வோம்!


 நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?
 
 நன்றி: தினமணி (24.12.2012)


17.12.12

பெயரில் என்ன இருக்கிறது?"காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் 'ஹரிஜனங்கள்' என்று பெயர் சூட்டுவானேன்?'' என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.

 வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா' என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 "முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர் மிகச் சிறந்த அமைப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது என்பது முற்றிலும் உண்மையே. அதேசமயம் அக்காலத்தில் எந்தப் பிரிவினர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எழவில்லை. நான்கு வர்ணத்தினரும் சரிநிகர் சமானமானவர்களாகவே கருதப்பட்டனர். ஏனெனில், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அந் நான்கு பிரிவினரின் சரிநிகரான பணியும் சார்பு நிலையும் அத்தியாவசியமாக இருந்தன. ஆனால், போகப்போகப் பின் நாட்களில் உயர்வு - தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இந்த மாற்றம் வர்ணாசிரம தர்மத்தை சின்னாபின்னமாக்கத் தொடங்கிற்று.

 அந்தணர்கள்  பிரும்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அடங்கிய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிவழியைக் கடைப்பிடித்த காலம் என்றோ மங்கி மறைந்துவிட்டது. இன்றைய குடும்பஸ்தர்களுக்கு பொருள் ஈட்டுவதும், சுகபோகங்களில் ஈடுபடுவதுமே அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைக் குறிக்கோளாகிவிட்டது''.

 காந்திஜி தமது முன்னுரையை இவ்வாறு முடிக்கின்றார்:

 "நவீன சகாப்தத்தில் ஒருவர்க்கொருவர் போட்டாபோட்டி போடுவதும், உலகாயத நாட்டங்களுமே வாழ்க்கையின் அம்சமாகிவிட்டன. எவரும் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் தேடிக் கொள்ளலாம் என்கிற தற்கால சூழ்நிலையில் வர்ணாசிரம முறை நடவாத காரியம்; சோம்பேறிகளின் பகற் கனவு. அந்நெறி முறையைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் எண்ணம் குழந்தைத்தனமான மடமையே ஆகும்''.

 "ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்'' என்ற தலைப்பில் காந்தி மகான் தமது  'அரிஜன்' (16-11-1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில், "இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய  வர்ணாசிரம விதிமுறைகளுக்கு நேர்எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து, ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது'' என்று ஐயந்திரிபற வலியுறுத்தியுள்ளார்.

 மற்றொரு கட்டுரையில் காந்திஜி, "பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய ஜாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர்ஜாதி - கீழ்ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக வாழ்வை இழிவுபடுத்திவிட்டது'', என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார். ('அரிஜன்', 2-5-1936).

 'பிறப்பினால் தீண்டத்தகாதோர் என்று சாத்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை. மேலும், பண்டைய வர்ணாசிரம தர்ம நியதிகளில் கலப்புத் திருமணத்திற்கும், சமபந்தி போஜனத்துக்கும் தடைகள் இருந்ததில்லை; ஸ்மிருதிகளிலும் வேறு நூல்களிலும் அவை குறித்துக் காணப்படும் தடைகள் மத்திய கால இடைச் செருகல்கள்' என்பதும் காந்திஜியின் கருத்து. ('அரிஜன்', 16-11-1935).

 சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பாருக்கு 1945 மே 6 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில் காந்திஜி, "தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி - சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம்.  இது ஒரு முக்கியமான கடிதம் - பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மகாத்மா காந்தி.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜனங்கள்' என்று 1931-இல் காந்திஜி பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி இவ்வாறு விளக்கம் அளித்தார்:

 "தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'எங்கள் குலத்தவர்களை  'அந்தியஜாஸ்' என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்த பங்கிகள்', 'பறையர்கள்' பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது! ஆகவே 'அந்தியஜாஸ்' (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

 சுவாமி சிரத்தானந்தர் தான் முதன்முதலில் 'தலித்' என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால்,  தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும்வரை, எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள்' என்று 'நவஜீவன்' (7-6-1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர்.  ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினன், 'ஹரிஜன்' என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில், "பல கிராமங்களில் ஏற்கெனவே 'ஹரிஜனா' என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும், மிகச் சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் - கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்' என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

 ஆகவே, 'ஹரிஜன்' என்ற சொல் புதிதல்ல. குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெனவே புனையப்பட்டது. தவிர, 'சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே' என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது'' ('அரிஜன்' 7-6-1931).

 1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், "ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா', என்பதே எனது பிரார்த்தனை.

 நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது'' என்று அறிவுறுத்தினார். ("தி ஹிந்து' 4-2-1946).

 "பெயரில் என்ன இருக்கிறது?'' என்ற தலைப்பில் தமது 14-4-1946 தேதியிட்ட 'அரிஜன்' வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்:

 "ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஓர் தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும், தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்றுவரை மிகமிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

 ஒவ்வொரு இந்துவும் உயர்வு - தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக்கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழந்தைகளாகி விடுவோம். அதுவே 'ஹரிஜன்' என்பதன் மெய்ப்பொருள்.

- லா.சு.ரங்கராஜன்

- தினமணி (17.12.2012)14.12.12

வெற்றியல்ல, தார்மிகத் தோல்வி!

சிந்தனைக்களம்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கொண்டு வந்த விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், இந்த வெற்றி தார்மிக வெற்றியா என்று கேட்டால், இல்லை என்றுதான் கூறவேண்டும். மக்களவையில் ஒரு தீர்மானத்தின் மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் 276 வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே அதை உண்மையான வெற்றியாகக் கருத முடியும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்குக் கிடைத்திருப்பது 253 வாக்குகள் மட்டுமே. எதிர்ப்பான வாக்குகள் 218.

பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 35 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அரசு வென்றுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழுமூச்சில் எதிர்ப்பு தெரிவித்த 22 உறுப்பினர்கள் உள்ள சமாஜவாதி கட்சியும் மற்றும் 21 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், வெளிநடப்பு செய்து அரசை மறைமுகமாகக் காப்பாற்றி இருக்கின்றன. இந்த வாக்குகளையும் எதிர்ப்பு வாக்குகள் என்று கருத்தில் கொண்டால், அரசு தோல்வி கண்டிருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாறுபட்ட முடிவால் (சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி) இன்று இந்தியா முழுவதும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இதை மாநில அரசுகளின் தனிப்பட்ட முடிவுக்கு விடும்போது, குறிப்பாக, ஒரு மாநிலத்தைப் பற்றி அண்டை மாநிலம் அக்கறை கொள்ளாதபோது எத்தகைய மோசமான விளைவுகள் நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு யார் சொல்லி விளங்க வைப்பது?

மதுவிலக்கைப் போன்றதுதான் சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீடும். பக்கத்து மாநிலத்தில் போய் குடிப்பதால், நமது அரசு வருவாய் இழப்பானேன் என்று மதுவிலக்கை ரத்து செய்வதுபோல பக்கத்து மாநிலத்தில் வால்மார்ட்டும் ஏனைய பன்னாட்டு வணிகர் குழுமங்களும் செயல்படுவதுபோல, நமது மாநிலத்திலும் செயல்படட்டும் என்று அத்தனை மாநிலங்களும் கதவைத் திறந்துவிடத்தான் போகின்றன.

இதில், மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தனித்து நிற்கலாம் என்பதே ஒரு தோற்றப்பிழை. மத்திய அரசு அனுமதித்துவிட்ட திட்டத்தில், அரசியல்வாதிகள் தங்களுக்கு லாபம் கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். அல்லது தங்கள் கட்சிக்கு நன்கொடை கிடைப்பதைத்தான் விரும்புவார்கள். ஆகவே, மக்களுக்காகக் கொஞ்சம் கூச்சப்பட்டு ""முடியாது'', ""வேண்டாம்'' என்றெல்லாம் சொன்னாலும், கடைசியில் எல்லா மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அன்னிய நேரடி முதலீடுக்கு அடிபணியும், கடைவிரிக்க அனுமதிக்கும் என்பதுதான் நிஜம்.

ஒரு சில மாநில முதல்வர்கள் இந்தத் திட்டத்துக்கு உண்மையாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட அந்த மாநிலங்களுக்கு மறைமுகமான பாதிப்புகள் ஏற்பட்டு, இவர்களை அனுமதிக்கும் கட்டாய நிலைமை உண்டாகும். உதாரணமாக, தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் வெங்காயத்துக்கு வடமாநிலங்களை நம்பியுள்ளன. குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் கொள்முதல்பலம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் வழங்குவதைத் தவிர்த்தால், இங்கே தட்டுப்பாடு ஏற்படும். விலை உயரும். மக்கள் ஆட்சியாளர்களை வசைபாடுவார்கள்.

மக்களிடம் "திட்டு' வாங்கி அனுமதிப்பதைக் காட்டிலும் "துட்டு' வாங்கி அனுமதிப்போம் என்ற முடிவுக்கு எல்லா மாநிலங்களும் தள்ளப்படும். அதனால் மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம் என்பது வெறும் சப்பைக்கட்டு மட்டுமே!

மக்களவை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது போல, மாநிலங்களவை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றதில் வியப்பு ஏதுமில்லை. இது ஒன்றும் எதிர்பார்க்காததல்ல. கடந்த நவம்பர் 22-இல் வெளிவந்த "ஈயமும் பித்தளையும்' தலையங்கத்தில், '"விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்' ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்கான கால அவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கே கூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது'' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். நாம் எதிர்பார்த்ததுதான் நடத்திருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம் என்று வாய்கிழிய வெளியே பேசிவிட்டு, வாக்களிப்பில் ஆதரவாக வாக்களிப்பதும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதும் புத்திசாலித்தனமான அரசியல் முடிவாக இருக்கலாம். இதற்கு ஆட்சி கவிழ்ந்துவிடும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. திமுகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவுடன் கொஞ்சிக் குலாவிக் கூட்டணி அமைத்து "ஆட்சி சுகம்' கண்ட கட்சிகள். மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்தால், அது மார்பில்தான் வந்து விழும் என்பதுகூட இவர்களுக்குப் புரியவில்லை.

சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்தித் தேர்தலிலும் வெற்றிபெற்ற பிறகு, அவைகளிலும் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அதைத் தெளிவாகவே கற்றுத் தேர்ந்திருக்கிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிகோலி இருப்பதுபோல, நாடாளுமன்றத்திற்கே அன்னிய நேரடி முதலீடு வராமல் இருந்தால் சரி... நமது கவலை அதிகரிக்கிறது!


23.11.12

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!


ஆச்சாரிய வினோபா பாவே அவர்கள் காந்தியை பற்றி எழுதிய கட்டுரை இது. 
'காந்தி இன்று' தளத்தில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

***
வினோபாவுடன் காந்தி

என் சிறுவயதிலிருந்தே இமயமும், வங்கமும் என்னை கவர்ந்திழுக்கும் இடங்களாக இருந்தன. அங்கு செல்லும் கனவுகளில் திளைத்திருந்தேன் - வந்தேமாதரம் என்னும் எழுச்சி முழக்கம் என்னை வங்கத்தை நோக்கிக் கவர்ந்ததென்றால், இமயத்தின் ஞான யோகம் என்னை ஈர்த்தது. 1916ல் வீட்டை விட்டு வெளியேறிய சமயம் இவ்விரண்டு  இடங்களுக்கும்  செல்ல நினைத்தேன். காசி இவ்விரண்டு இடங்களுக்கும் இடையில் இருந்ததால் சந்தர்ப்பம் என்னை அங்கு அழைத்துச் சென்றது. 

காந்தி அன்று பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் துவக்க விழாவில் இருந்தார். புகழ்பெற்ற பண்டிதர்களும், அரசர்களும், மகாராஜாக்களும், இவர்களை அனைவருக்கும் மேல், வைஸ்ராயும் இருந்த அவையில் அவர் ஆற்றிய எழுச்சி உரையை செய்தித்தாளில் வாசித்து அறிந்தேன். அது என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் அரசியல் விடுதலையையும், ஆன்மீக மலர்ச்சியையும் ஒரு சேர அடைய விரும்பும் மனிதர் இங்கே இருக்கிறார், என என் மனம் உணர்ந்தது. இதுவே என் விருப்பமாகவும் இருந்தது.

சில வினாக்களை எழுப்பும் விதமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.. அதற்கு அவர் பதிலளித்ததும் மேலும் பல கேள்விகள் கேட்டு இன்னொரு கடிதம் அனுப்பினேன், இம்முறை காந்திஜி ஆசிரம விதிகளை இணைத்து "வெறும் கடிதங்கள் மூலம் ஒன்றும் அடைய முடியாது, இங்கு வருவதே உங்களுக்கு நன்மை தரும்," என்று எழுதினார்.

என் பாதங்கள் காந்தியை நோக்கித் திரும்பின. நான் இமயத்திற்கோ, வங்கத்திற்கோ செல்லவில்லைதான் - ஆனால் அவ்விரண்டு இடங்களையும் நான் ஏககாலத்தில் அடைந்துவிட்டேன் என்று என் மனம் உணர்ந்தது. காந்தியில் நான் இமயத்தின் அமைதியையும் வங்கத்தின் புத்தெழுச்சியையும் கண்டுவிட்டேன்.

நான் காந்தியை ஜூன் 7, 1916-ல் கொச்ராப் ஆசிரமத்தில்தான் முதன்முறையாகப் பார்த்தேன். கடவுள்தான் தனது எல்லையில்லா கருணையினால் என்னை காந்தியின் பாதங்களில் சேர்ப்பித்திருக்கிறார். இன்று என் மனதையும் வாழ்க்கையையும் பரிசீலிக்கும்போது, அவையிரண்டுமே காந்தியின் பாதங்களில் நிலைபெற்றுள்ளதைக் காண்கிறேன்.

என்னால் அவரது போதனைகளையும் படிப்பினைகளையும் எந்த அளவுக்கு பின்பற்ற முடிந்ததென்று சொல்ல முடியாது,  அதை அவரோ வேறு எவரோ தெரிந்துகொள்ள வழியில்லை, கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இது.. ஆனால் இதை மட்டும் என்னால் தயக்கமின்றி சொல்ல முடியும் -  அவரது போதனைகளில் சிறிதளவேனும் எனக்கானதாய் எதை உணர்கிறேனோ, எது என்னை ஈர்க்கிறதோ அதை தொடர்ந்த கவனத்துடன்  பின்பற்ற முயற்சி செய்திருக்கிறேன் - சொல்லப் போனால் அவர் உயிருடன் இருந்தபோது செய்ததைவிட இப்போது இன்னும் அதிக கவனத்துடன் இதைச் செய்கிறேன் . என் முன்னும் பின்னும், என்னைச் சுற்றிலும் எங்கும் நான் காந்தி என்னோடு இருப்பதாகவே உணர்கிறேன்.

சங்கரர், ஒரு மனிதன் பெறக்கூடிய மிகப் பெரிய வரங்கள் மூன்று : மனிதனாய் பிறத்தல், முக்தியை நாடுதல், ஒரு மகாத்மாவை வழிகாட்டியாகப் பெறுதல், என்று கூறியதை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.

சங்கரரின் இக்கூற்றை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. உண்மையில் நான் வரம் அருளப்பட்டவன்தான் - மனிதனாய் பிறந்தேன், முக்தி நாட்டத்தால் தீண்டப்பட்டேன், காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் மனிதருடன் இணைந்திருக்கும் பாக்கியமும் பெற்றேன். முனிவர்களின், மகாத்மாகளின் சொற்களை புத்தகங்களைக் கொண்டு அறிவது வேறு, அவர்களுடன்  வாழ்வதும், அவர்களின் வழிகாட்டுதலில் பணியாற்றுவதும், அவர்கள் வாழ்வதை கவனித்து கற்றுக்கொள்வது வேறு. இப்பெரும் பேறு கிடைத்தது என் பாக்கியமே.

காந்தி எனக்கு ஏதும் சோதனை வைத்தாரா என்று சொல்ல முடியாது, ஆனால் நான் அவரை சோதனை செய்தேன், அவர் அறியாமல். முழுமையான சோதனை, அதில் அவர் தோற்றால் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும்  என்ற எண்ணத்துடன்.  ஆனால் அவர் என்னைச் சோதித்திருந்தால்? என்னிடம்  என்ன குறை கண்டாரோ? தெரியவில்லை, என்னைத் தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார்.

பாபு தன்னை குறைபட்டவராகவும், முழுமையற்றவராகவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்.. அவர் சொன்னதும் உண்மைதான். அவருக்கு உண்மையல்லாத ஒன்றை அவரால் சொல்ல முடியாது. அவர் உண்மையின் பக்தர். தங்களை பூரண மனிதர்களாகவும், முக்தி பெற்றவர்களாகவும் நினைத்துக் கொண்ட  பலரைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எவராலும் நான் கவரப்படவில்லை. ஆனால் தன்னை முழுமையற்றவராகச் சொல்லி கொண்ட பாபுவின்பால் எனக்கு ஏற்பட்ட  ஈர்ப்பு தனித்துவமான ஒன்று. என் மீது வேறு எவரும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.

நான் பாபுவைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடம் பற்று ஏற்பட்டு விட்டது.  அவரின் உள்ளும் புறமும் இருந்த ஒத்திசைவே அதற்குக் காரணம். பாபுவே எனக்கு கர்மயோக தத்துவத்தை அறிமுகம் செய்தார். ஆம், அது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் செயல் வடிவத்தை பாபுவின் வாழ்கையில்தான்  பார்த்தேன். இங்குதான் கீதையின் கர்ம யோகம் சிறப்பாக விளக்கப்படுகிறது.  திடசித்தனிடம் நாம் காணக்கூடிய குறிகளைக் கீதை பட்டியலிடுகிறது. எத்தனை பேருக்கு அந்த விவரணை பொருத்தமாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒருவனிடம் இருக்கக்கூடிய அத்தனை இயல்புகளையும் கொண்டவராக இருந்தார் பாபு.

அப்படிப்பட்ட ஒருவருடன் வாழவும் அவருடன் பணியாற்றவும் முடிந்தது என்பது எனக்கு ஒரு பெரிய கவுரவமாக இருக்கிறது. பெரிய மரங்களின் கீழ் இருக்கும் செடிகள் சத்தற்று வளர்ச்சி குன்றுவதைப் போல மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பவர்களின் வளர்ச்சி குறைபடும் என்று சொல்கிறார்கள்,. ஆனால் மரத்துடனான ஒப்புமை மகாத்மாக்களுக்குப் பொருந்தாது. அவர்களின் அணைப்பின்கீழ் வாழ்பவர்கள் தொழுவத்தில் இருக்கும் கன்றுகளைப் போன்றவர்கள். மரமோ தனக்குச் கீழே இருக்கும் செடிகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை தான் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசு, தான் புற்களை உண்டு தன் கன்றுகளுக்குப் பாலுட்டி அவைகளை பாசத்துடன் வளர்த்துத் தழைக்கச் செய்யும்.  இதுவே தன்னை பாபுவின் அணைப்பில் உணரும் ஒருவரின் அனுபவமாகும்.

ஒருவர் மோசமானவராக இருந்தால், அவரிடம் வந்ததும் நல்லவராகவும், கோழை அவரிடம் வந்தால் பயமற்றவராக மாறுகின்றனர். அவரால் ஆயிரக்கணக்கான பேர் புகழ் அடைந்துள்ளனர், இருந்தாலும் காந்தி அனைவரைவிடவும் தாழ்ந்தவராகவே தன்னைக் கருதினார்.

1916 ல் அவரைக் காணும்போது நான்  முதிர்ச்சியற்ற 21 வயது இளைஞன். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிக்கவனாக அங்கு சென்றேன். என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குத் தெரியும், அவ்வயதில் எனக்கு இங்கிதமோ, பண்பான நடத்தையோ சிறிதும் கிடையாது. நான் ஒரு வன விலங்கின் இயல்பு கொண்டவனாக இருந்தேன். பாபுவே என் கோபக் கனலையும், என்னுள் தகித்திருந்த காமத்தையும் தணித்தார். மழையாய் அவர் எனக்கு அருளாசி பொழிந்து கொண்டே இருந்தார். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அது அனைத்திற்கும் பாபுவிற்கே கடமைப்பட்டுள்ளேன். என்னைப் போன்ற ஒரு பண்பற்றவனையும் மக்கள் சேவகனாக மாற்றினார்.

ஆசிரம வாழ்க்கை முறை எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. வாழ்க்கை என்பது ஒன்றே, அது பகுக்க முடியாதது என்பதை உணர்ந்தேன்.  பாபு ஒருபோதும் தன்னை குருவாகவோ எவரையும் தன் சீடராகவோ உருவகித்ததில்லை. குரு சீட அமைப்பில் எனக்கு பெரிய ஈடுபாடு உள்ளபோதும் நானும் அது போலவே யாருக்கும் குருவாகவோ, யாருடைய சீடனாகவோ இருந்ததில்லை, பார்வையாலோ, வார்த்தையாலோ, தொடுகையாலோ தன் சீடனின் வாழ்வை மாற்றும் குருவை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டுமே.

உண்மையில் அப்படிப்பட்ட எந்த குருவையும் நான் அறிந்ததில்லை. குரு சீட உறவை பற்றி நீட்டிக்காமல் ஒன்று சொல்கிறேன், பாபுவின் காலடியில் நான் என்ன கற்று கொண்டேனோ அதுவே எனக்கு இன்றும் பயனளிக்கிறது. என்னுடைய கிராமதானம், பூதானம் நடைபயணங்களுக்குப் பின்னிருப்பது நெடு நாட்களுக்கு முன் ஆஸ்ரமத்தில் நான் மேற்கொண்ட தவமாகும்.  ஆசிரமத்தில் சேரும் முன் நான் செய்த தவம் முற்றிலும் உணர்ச்சிகரமானது, பிறகு ஆசிரமத்தில் செய்த தவத்தால்தான் புதிய பார்வை பெற்றேன். அது முற்றிலும் பாபுவின் ஆசியே.

நான் பாபுவிடம் சென்ற பிறகு 32 வருட காலத்தை தவத்தில் செலவிட்டுள்ளேன். என்னுடைய வாசிப்பும், எண்ணமும் தொடர்ந்து ஆன்மீகத்தை நோக்கியே இருந்தாலும், என்னுடைய தவம் செயல்பாட்டிலிருந்து விலகவில்லை. நான் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருகிறேன், சமூக தளங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்கிறேன். என்னவெல்லாம் பாபு எழுதினாரோ அவையனைத்தும் எனக்கு வழி  காட்டியுள்ளன.   நான் அவரது கருத்துகளை நுண்கவனத்துடன் படித்தும், அவற்றின்படி வாழவும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளேன். அப்படிதான் அகிம்சை எனும் நுட்பமான வழியைக் கண்டு கொண்டேன்.

பாகவத தர்மத்தைப் பற்றிய அழகான சுலோகம் ஒன்று உள்ளது. அதையே பாபு கண்டறிந்த அகிம்சை வழிக்கும் கொள்ளலாம். சுலோகம் என்னவென்றால், "பாகவத தர்மத்தை ஒருவன் நம்பிக்கையுடன் பின்பற்றினால் ஒருபோதும் அவன்  தவறிழைக்க மாட்டான். கண்ணை மூடி கொண்டு ஓடினாலும் விழுந்து விடாத பாதை போன்றதாகும் அதன் இயல்பு".

இந்த அழகிய, எளிய வழியைதான் பாபு எங்களுக்குக் காட்டினார். சர்வோதய சமூகத்தை நிறுவ விரும்புகிறோமெனில் நாம் பின்பற்ற வேண்டிய வழி இதுவேயாகும்.
-ஆச்சர்ய  வினோபா பாவே 
தமிழில்: கார்த்திகேயன்

4.11.12

பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை...

 
 பெரோஸ் காந்தி

மன்னராட்சி முறையில் கொடுங்கோல் ஆட்சி பெருகியதால், அல்லற்பட்ட மக்கள் தம்மால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவர் ஆட்சித் தலைவராகும் வகையில் குறிப்பிட்ட காலவரையறையில் தேர்தல்கள் மூலம், மக்களாட்சி முறையை அமைத்துக்கொண்டனர்.

அதிகாரம் குவிந்துவிட்டால், ஆட்சிக்கு வருகிற அனைவரும் நல்லவர்களாக நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு தருபவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆட்சிக்கு வந்ததும், ஆணவம், அடக்குமுறை, எதேச்சாதிகாரம் ஆகியவை வளரும். தடியெடுத்தவன் தாண்டவராயன் என்பதுபோல், கட்டுப்பாடற்ற தடியாட்சி முறை வந்துவிடும்.

முடியாட்சி, குடியாட்சி, தடியாட்சி ஆகியவற்றில் ஒன்றுக்குள் மற்றொரு முறை கலந்துவிடுவதை பல நாடுகளில் தவிர்க்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் முதலாவது உலகப் போருக்குப் பிறகு மக்களாட்சி முறையில்தான் ஜெர்மன் நாட்டில் அரசாங்கம் உருவானது.

ஆயினும் 1930-இல் அதே மக்களாட்சி அடிப்படைச் சட்டத்தின்கீழ் ஹிட்லரால் கொடூரமான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முடிந்தது.

ஏன், இந்தியாவில்கூட டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டத்துறையில் மேதாவிகள் என்று கருதப்பட்ட பலர் மூன்றாண்டு காலம் அரும்பாடுபட்டு 1950-இல் அமைத்த ஜனநாயக ஆட்சிக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன ஆயிற்று? அதே சட்டத்தின்கீழ் 1975 ஜூன் 25 நள்ளிரவில் ஒரு இருண்டகால எதேச்சாதிகாரம் தலையெடுக்கவில்லையா?

மன்னராட்சிகளில் குடும்பப் பாரம்பரியம் என்பது வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டது. ஆயினும் சுதந்திர ஜனநாயக நாடான இந்தியாவில் குடும்பப் பாரம்பரிய ஆட்சிமுறை மறைமுகமாக நிலவி வருகிறது.

அதிலும் ஒரு குடும்ப அளவில் பார்த்தால், ஜவாஹர்லால் நேரு, (1947-64), இந்திரா காந்தி (1966-77, 1980-84) ராஜீவ் காந்தி (1984-89) ஆகியவர்கள் பிரதமர்களாக இருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றித்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இன்றும் இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை இருந்தாலும், கடந்த நானூறு ஆண்டுகளில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் சபைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட நிலைமையில்தான் ஆட்சிமுறை அங்கு நிலவுகிறது.

மேலும் தேர்தலில் போட்டியிட்டு "காமன்ஸ்' (மக்கள்சபை) உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்தியாவில் பிரதமராக ஆகும் தகுதி மன்மோகன் சிங்குக்குத் துளியும் இல்லை. காரணம், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அங்கே பிரதமராக முடியாது.

மன்மோகன் சிங் 'பெயரளவில்' பிரதமராக இருந்தாலும், நடைமுறையில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையிலுள்ள அரசாங்கத்தையும் நடத்திச் செல்பவர் சோனியா காந்திதான். 1999 முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பதவி வகிக்கிறார்.

127 ஆண்டுகால தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தொடர்ந்து தலைவராக இருப்பவர் அவர்தான். சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் நேரு பரம்பரைக்குத்தான் இந்தியாவை ஆட்சி செலுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

'குடும்பப் பாரம்பரியம்' என்ற அளவில் இதுவரை விரிவாக இங்கு ஆராய்வதற்கான காரணம் இந்தியாவில் இருந்துவந்த 'பாரம்பரிய ஆட்சிமுறை' அண்மைக் காலத்தில் விரிவடைந்துவிட்டது.

ஜவாஹர்லால் நேரு காலத்தில் அவரின் மருமகன் பெரோஸ் காந்தி இருந்தார். தற்பொழுது இந்திரா காந்தியின் மருமகளின் மருமகன் ராபர்ட் வதேரா என்பவர் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்குடையவராக ஆகிவிட்டார். இந்த இரு மருமகன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

காந்தி, குஜராத் என்ற இரு பெயர்களைச் சொன்னதும், மகாத்மா காந்தி நினைவுக்கு வந்து, அவருக்கு பெரோஸ் காந்தி உறவினர் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படக் கூடும். பெரோஸ் காந்தி பார்சி வகுப்பைச் சேர்ந்தவர். நெருப்பை வழிபடும் ஸௌராஸ்ட்ரியர்.

மகாத்மா காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் பார்சிகளுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான குடும்பப் பெயராக 'காந்தி' என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

பெரோஸ் காந்தியின் தந்தை இறந்த பிறகு, அவரும் அவர் தாயாரும் அலாகாபாத் வந்துவிட்டனர். 1930-இல் இர்விங் கிறிஸ்தவக் கல்லூரியில் பெரோஸ் படிக்கும்பொழுது, ஆங்கில ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் அலாகாபாதிலும் நடைபெற்றது. அதில் ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவும், 13 வயதான மகள் இந்திரா பிரியதர்சினியும் கலந்துகொண்டனர். கடும் வெயிலில் கமலா நேரு மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதைக் கவனித்த பெரோஸ் ஓடிவந்து தண்ணீர் தெளித்து, அவரை ஆனந்த பவன் மாளிகையில் சேர்த்தார்.

கல்லூரிப் படிப்பை விட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் பெரோஸ். 1930-இல் கைது செய்யப்பட்டு லால் பகதூர் சாஸ்திரியுடன் சிறையில் இருந்தார். கமலா நேரு எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுது அவருடன் பெரோஸ் இருந்து உதவினார். நோய் முற்றிய நிலையில் கமலா நேரு மருத்துவச் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றபொழுது பெரோஸ் காந்தியும் அவருடன் சென்றார். கமலா நேரு 1936 பிப்ரவரியில் இறந்தபொழுது பெரோஸ் உடனிருந்தார்.

அந்த அளவுக்கு நேரு குடும்பத்தினருடன் நெருங்கி இருந்த பெரோஸ் மீது இந்திராவுக்கு நம்பிக்கையும் நட்பும் நாளடைவில் காதலும் உண்டானதில் ஆச்சரியமில்லை. முதலில் பெரோஸ் - இந்திரா திருமணத்துக்கு ஜவாஹர்லால் நேரு சம்மதிக்கவில்லை.

மகாத்மா காந்தி இடையிட்டு இந்திராவுடன் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்தார். கடைசியில் ஜவாஹர்லால் நேரு உடன்பட்டு 1942 மார்ச் மாதத்தில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். திருமணத்துக்குப் பிறகுதான் கணவன் பெயரை இணைத்து 'இந்திரா காந்தி' என்று இந்திரா அழைக்கப்பட்டார்.

திருமணமான ஆறு மாதத்திற்குள் இருவரும் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குச் சென்றனர். பின்பு வெளிவந்ததும் 1944-இல் ராஜீவ் காந்தியும் 1946-இல் சஞ்சய் காந்தியும் பிறந்தனர்.

1947-இல் ஜவாஹர்லால் நேரு, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் இந்திரா காந்தி தந்தையுடன் பெரும்பாலும் இருக்கவேண்டி வந்தது.

பிரதமர் மாளிகையில் இருப்பது பிடிக்காமல் பெரோஸ் தம் அளவில் தில்லியில் வேறொரு இடத்தில் தங்கிவிட்டார்.

1950-52-இல் இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெரோஸ் காந்தி உறுப்பினராக இருந்தார், பிறகு 1952 பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபை உறுப்பினராக ஆனார். மாமனார் ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தாலும், பெரோஸ் காந்தி தமது தன்மானத்தையும் அரசியல் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. முக்கிய பிரச்னைகள் எழும்பொழுது அரசாங்கத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக 1955 டிசம்பர் மாதத்தில் பிரபல செல்வந்தரான ராமகிருஷ்ண டால்மியாவின் வங்கி-இன்சூரன்ஸ் அமைப்புகளில் செய்த ஊழல்களைத் தக்க ஆதாரங்களுடன் மக்கள் சபையில் பெரோஸ் எழுப்பினார்.

எதிர்க்கட்சியினரைவிட அதிகமாக அவர் எழுப்பிய குரலும் ஊழலை எதிர்த்த கண்டனமும் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாயின. அவருடைய கண்டனத்தின் விளைவாக, டால்மியா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது. மக்கள் பணத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது பெரோஸ் காந்தி அந்தப் பிரச்னையை எழுப்பியதால்தான்.

1957 பொதுத்தேர்தலில் பெரோஸ் காந்தி மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபைக்கு வந்தார். 1958-இல் முந்திரா ஊழல் என்பதை பெரோஸ் அம்பலப்படுத்த முன்வந்தார்.

ஹரிதாஸ் முந்திரா என்னும் முதலாளிக்குச் சொந்தமான சில கம்பெனிகளின் பங்குகளை ஆயுள் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.54 கோடி கொடுத்து வாங்கியது. அந்தப் பங்குகளின் உண்மையான மதிப்பீட்டைவிட அதிகமான விலைக்கு அரசாங்க ஆதரவினால் வாங்கப்பட்டுவிட்டன என்பதற்கான விவரங்களை பெரோஸ், மக்கள் சபையில் 1957 டிசம்பர் 16 அன்று வெளிப்படுத்தினார். அவருடைய ஊழல் எதிர்ப்பினால் இரண்டாவது புயல் கிளம்பியது.

பெரோஸ் காந்தியின் குற்றச்சாட்டு நேரடியாக அப்பொழுதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரியாரைத் தாக்கியது. முந்திரா விவகாரத்தை விசாரணை செய்ய பம்பாய் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் விசாரணைக் குழுவை நேரு அரசாங்கம் அமைத்தது.

சாக்ளா குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விவியன் போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிதி அமைச்சர் மீது முழு குற்றச்சாட்டையும் போட்டது. கடைசியில் நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலாளி முந்திரா குற்றவாளியாகச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

முந்திரா ஊழலைப் பற்றி மக்கள்சபையில் பேசும்பொழுது பெரோஸ் காந்தி உணர்ச்சிபூர்வமாக ஒரு கருத்தை வலியுறுத்தினார். "நான் மிகவும் உறுதியுடன் இந்த விவாதத்தைத் துவக்குகிறேன். இப்பொழுது ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களின் நிதி தனிப்பட்ட ஒருவரின் தேவைகளுக்காகப் பயன்படுவது தவறானது, குற்றமானது. ஒரு குற்றம் நிகழும்பொழுது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது பெரிய குற்றமாகும்''.

மற்றொரு வகையில் முற்போக்கான ஒரு சட்டத்தை உருவாக்குவதில் பெரோஸ் காந்தி வெற்றிபெற்றார். அவருடைய முயற்சியினால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய சட்டம் 1956-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தவறுகள் எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுபவர் மீது எந்த நீதிமன்றத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டப்படக்கூடாது என்று சட்டபூர்வமான பாதுகாப்பு செய்தியாளர்களுக்குத் தரப்பட்டது.

1956-இல் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் பெரோஸ் காந்தியால் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து அந்தச் சட்டத்தை இந்திய அரசாங்கம் மற்றொரு சட்டம் போட்டு நீக்கிவிட்டது. அதாவது, 1975-76 நெருக்கடி காலத்தில் அந்தச் சட்டத்தை நீக்கியவர் வேறு யாருமில்லை பெரோஸ் காந்தியின் மனைவி பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்தாம். நெருக்கடிகாலம் நீங்கியதும், ஜனதா ஆட்சியில் பத்திரிகையாளர் சட்டம் மீண்டும் உயிர் பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.

முற்போக்கான சட்டத்தை முன்மொழியும் துணிவும், கடமை உணர்வும் பெரோஸ் காந்திக்கு இருந்தது, அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும், ஜனநாயகப் பண்பும் ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. ஆனால், அதை நீக்கிடும் எதேச்சாதிகார உணர்வு இந்திரா காந்திக்கு 1975-76-இல் ஏற்பட்டது. இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் குடும்பப் பாரம்பரிய அரசியல் அந்த அளவு மாறி மாசு படிந்துவிட்டது.

நாள்தோறும் காலையில் மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் பெரோஸ். 1958 செப்டம்பர் மாதத்தில் இதயநோய் அவரைத் தாக்கியது. இந்திரா காந்தி உடனடியாக வந்து அவரைக் கவனித்து உடல் நலம் பெறும்வரை உடனிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1960 செப்டம்பர் 8 இரண்டாவது முறையாக இதயத் தாக்குதல் வந்தது, அதிலிருந்து மீளமுடியாமல், 48-வது வயது நிறைவு பெறுவதற்கு நான்கு நாள்கள் முன்னதாக பெரோஸ் காந்தி இறந்தார்.

அரசியல் நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியவர்களின் கூட்டத்தைவிட பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரோஸ் காந்தி இல்லத்தின் முன் திரண்டு அவருக்கு அஞ்சலி செய்யக் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ணுற்ற ஜவாஹர்லால் நேரு கூறினாராம், "இந்த அளவுக்கு மக்களுடைய பாசமும் செல்வாக்கும் பெரோஸு  க்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது'' என்று. ஒரு மனிதனின் பெருமை அவன் மறைந்த பிறகுதான் அவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கே கூடத் தெரியவருகிறது.

பெரோஸ் காந்தி பிறந்த நாள் 1912 செப்டம்பர் 12; அவரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு 2012-இல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அவசியம் தற்கால காங்கிரஸ் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை என்றாலும், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்புத் தரும் சட்டத்தை உருவாக்கியவருக்கு நூற்றாண்டு விழா எடுக்காமற் போனாலும், தனிப்பட்ட முறையில் செய்தித் துறையும் வாசகர் வட்டங்களும் அவரை நினைவில் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்க, தமது பதவியை முழுமையாகப் பயன்படுத்தினார். அது 1950-60 வரை இருந்த குடும்ப அரசியல் நிலவரம். தற்பொழுதைய காங்கிரஸ் அரசியல் பாரம்பரியத்தில், பிரதமர் பதவிக்கும் மேலாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவதுடன், "வதேரா மீது நடத்தப்படும் தாக்குதல் காங்கிரஸ் மீது போடப்படும் தாக்குதல்'' என்கிறார்.

என்ன கொடுமை இது? "வதேரா என்றால் காங்கிரஸ் கட்சி'' என்று ஆகிவிட்டது! நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக் கொதித்து எழ பெரோஸ் காந்தி உயிருடன் இல்லை!
- இரா.செழியன்

- தினமணி-  31.10.2012


காண்க: 
Feroze Gandhi (Wiki)

பெரோஸ் காந்தி


11.10.12

21-ம் நூற்றாண்டில் காந்தி

சிந்தனைக் களம்

 வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்த காந்தி ஜெயந்தி வாரத்தில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  'மாட்டு வண்டிப் பொருளாதாரம்' என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு - இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. "சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது'' என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

"சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது'' என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. "கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்'' என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

"மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். "மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, "சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்'' எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

"நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய - ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்'' (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: ""கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'' நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். 'அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்' என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: ""காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. "கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்'' என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்'' (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

"மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்'' என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், "மகாத்மா காந்தி - ஆன் இண்டர்பிரிடேஷன்'' எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ''உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.'' (ஆதாரம்: 'ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்' - ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (04.10.2012)
.

2.10.12

வாய்மையே வெல்லும்!
*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும்

*உண்மை என்பது சுய ஆதாரம் கொண்டது. அதை மூடியிருக்கும் அறியாமை என்ற மூடியை விலக்கி விட்டால், உண்மை பளீரெனப் பிரகாசிக்கும்.

*நீ மேற்கொள்ளும் செயல் உண்மையானதாக இருந்தால் அது எந்த காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

*எத்தகைய ஆதரவுப் பிரசாரம் நடந்தாலும், பொய்மை எப்போதும் உண்மையாகாது. அதுபோல, பிறர் கவனிக்கவில்லை என்றாலும் உண்மை எந்த நேரத்திலும் பொய்மையாகாது.

*உண்மை பொய்மையைக் கொல்கிறது. அன்பு கோபத்தை வெல்கிறது. தன்னை வருத்துதல் வன்முறையை அறுக்கிறது. இந்த உயரிய கொள்கைகள் துறவிகளுக்கானதல்ல; நமக்கானது

-மகாத்மா காந்தி 

(இன்று காந்தி ஜெயந்தி)

15.9.12

தில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு வாழ்த்து!தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து செப். 15, 16 தேதிகளில் புதுடில்லியில் நடத்திவரும் அகில  இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு தேசிய சிந்தனைக் கழகம் அனுப்பிய வாழ்த்து:
14.09.2012

பெருமதிப்பிற்குரிய தினமணி ஆசிரியர்
        திரு. கே. வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கு,

வணக்கம்! 

தில்லி தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின்  மாநாட்டை  புதுதில்லியில் 'தினமணி' நடத்துவது குறித்து அறிந்து மகிழ்ந்தேன். ஓர் அற்புதமான நற்பணிக்கு தாங்கள் பிள்ளையார் சுழி இட்டிருக்கிறீர்கள். தமிழ் அமைப்புகள் அரசியல் காரணங்களால் பலவாறாகப் பிரிந்துள்ள சூழலில், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சிந்தனையே மிகவும் போற்றத் தக்கது. அதற்கு தமிழின் அடையாளமாக விளங்கும் 'தினமணி' நாளிதழ் கால்கோள் இடுவது சிறப்பு  மட்டுமல்ல பொருத்தமானதும் கூட.

பல்லாயிரம் ஆண்டு பாரம்பரிய  இலக்கியமும், நவீன இலக்கிய வீச்சும் கொண்ட,  முன்னைப்  பழமைக்கும் முன்னைப் பழமையான,  பின்னைப் புதுமைக்கும் புத்திளமை கொழிக்கின்ற  தமிழ்த் தாய்  புகழ் பாடவும், உலகு தழுவிய தமிழர்கள் நலம் காக்க ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவும், இன்றைய காலகட்டத்தில் நம்மிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. அதை இலக்கிய அமைப்புகளால் தான் சாதிக்க இயலும். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். தங்கள் முயற்சி வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த அரும்பணியில் தங்களுடன் இணைந்துள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. எம்.என்.கிருஷ்ணமணி, பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வந்தனங்கள்.  இம்மாநாடு  சிறப்புற நடந்தேற  'தேசிய சிந்தனைக் கழகம்' சார்பில் வாழ்த்துகிறோம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத  மணித்திருநாடு!
வந்தேமாதரம்!


என,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக்கழகம், தமிழ்நாடு.

காண்க:

தில்லி தமிழ் மாநாட்டில் அப்துல் கலாம் பேச்சு

14.9.12

இளைஞர்களை அழைக்கிறார் விவேகானந்தர்

சிகாகோ சர்வமத சபையில் பெரியோர்களுடன் சுவாமி விவேகானந்தர் 


செப்டம்பர் 11, 1893 - சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய நாள்.

இன்று (செப்டம்பர் 11) நினைவு தினம் காணும் பாரதியார் "இளைய பாரதத்தினாய் வா வா வா'' என்று முழங்கினாரே, அது பாரதியாரின் முழக்கம் மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தரின் முழக்கமும்தான். ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி கொண்ட நெஞ்சோடும் எதையும் சாதிக்கவல்ல இளைஞர்களை உருவாக்குவதே விவேகானந்தரது லட்சியம். அவரது வாழ்வும் போதனைகளும் பெரிதும் இளைஞர்களுக்கான செய்தியையே தாங்கியுள்ளது.

சிகாகோவில், "அமெரிக்க சகோதர, சகோதரிகளே'' என்று தன் உரையை அவர் ஆரம்பித்தபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கக் காரணம் என்ன? அந்த வாக்கியம் செய்த மாயமா - அது அல்ல! அந்த வாக்கியத்தை உச்சரித்த பெருமகன் உளப்பூர்வமாக அதைச் சொன்னதால் விளைந்த மாயம் அது.  

அமெரிக்கா செல்வதற்கு ஒரு துறவிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? அவர்மேல் மட்டற்ற மதிப்புக் கொண்ட பலர் அந்தத் தொகையைச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதில் நம் சென்னைக்குப் பெரும் பங்குண்டு. விவேகானந்தருக்கு உதவும் பேறு பெற்றவர்களில் சென்னையைச் சார்ந்த அளசிங்கப் பெருமாள் உள்ளிட்ட பலர் தலையாய இடம் வகித்தார்கள்.

'சென்னை தினம்' கொண்டாடுகிறோமே, சென்னையின் பெருமைகளில் மாபெரும் பெருமை எது தெரியுமா? விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே, அவர் சிகாகோ உரை மூலம் பெரும்புகழ் பெறுவதற்கும் முன்பே அவரை இனங்கண்டு போற்றியது சென்னையே என்பதுதான். அதுமட்டுமா, அவரது அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றியாக முடிந்து அவர் இந்தியா திரும்பியபோது சென்னை மக்கள்தான் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துவந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

விவேகானந்தரது போதனைகள் விவாதபூர்வமாக இளைஞர்கள் ஏற்கும் வகையில் நிறுவப்பட்டவை; உரத்துச் சிந்திக்கும் இன்றைய அறிவாற்றல் நிறைந்த நவீன இளைஞர்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தவை.

அவர் 'இதைச் செய், அதைச் செய்யாதே' என்றெல்லாம் நேரடியாக உபதேசிப்பதில்லை. ஆனால் தர்க்க நியாயங்களோடு வாதிடும் தனது அபாரமான சொல்லாற்றல் காரணமாக, தம் எழுத்தைப் படிக்கும் இளைஞர் மனத்தில் தான் சொல்ல விரும்பும் கருத்து தானாக எழுமாறு செய்யும் வல்லமை அவருடையது.

"இளைஞனே, நீ கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இப்போதைய வருந்தத்தக்க நிலைக்கு வந்திருக்கிறாய் என்று வைத்துக்கொள். அது எவ்வளவு சரியானது, அது ஒரு வாழ்க்கை விதி அல்லவா? அதை கவனமாகக் கண்டுணர்ந்து புரிந்துகொள்வாயாக. கடந்த காலத் தவறுகள் காரணமாக நிகழ்காலத்தில் உனக்கு இந்த அவல நிலை வருமானால், அந்த விதியிலேயே நீ நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்கள் காரணமாக எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை அடையமுடியும் என்ற உண்மையும் பொதிந்துள்ளதே, அதுகுறித்து நீ பெரும் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும்? இன்றிலிருந்து எதிர்காலம் சிறப்பாகும் வகையில் செயல்கள் செய்யத் தொடங்கு, நீ விரும்பும் எதிர்காலத்தை அடைவாய்''.

 இதைவிட அழகாக வேறு யாராலாவது வாழ்வின் விதியைக் கற்றுத்தர இயலுமா? ஒருபுறம் குளம். மறுபுறம் உயரமான சுவர். வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர். பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தார். பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தன. இப்போது என்ன செய்வது?

குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார். குரங்குகள் அவரை விடுவதாக இல்லை. அவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தின. திடீரென்று ஒரு குரல் கேட்டது. முன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது. பின்னால் திரும்பி நிலைமையைக் கவனித்துவிட்ட அவர் குரல் கொடுத்தார்.  

"குரங்குகளைக் கண்டு ஓடாதே, எதிர்த்து நில்; உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்?''

விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார். குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர். அவை அவரைத் தொடரவில்லை. அச்சத்தோடு தயங்கி நின்றன. மெல்லப் பின்வாங்கின. பிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.

விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனே, அந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளே; சோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.

தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும். சோதனைகளைக் கண்டு அஞ்சாதே. சோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''

விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார். 'நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் அல்லவா? இளைஞர்களைக் கால்பந்து விளையாடச் சொல்லும் அவர், தம் கல்லூரிக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில், வெற்றிப் பரிசாக ஒரு வெள்ளி பட்டுப்பூச்சி பொம்மையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன. இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

-திருப்பூர் கிருஷ்ணன் 
நன்றி: தினமணி (11.09.2012)

காண்க: .

13.9.12

'பால்காரர்' காட்டிய பாதை...


வர்கீஸ் குரியன்
(26, நவம்பர்  1921 - 9, செப்டம்பர் 2012)


இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.

விவசாயமே தொழில். அப்பகுதியில் 'ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.

'பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், ""வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே.

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது.

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் - அமுல்) "அமுல்'' என்கிற மந்திரச் சொல் ஆனது.

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனிசெஃப்' அமைப்பு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது.

"பசியிலிருந்து விடுதலை'' என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன்.

1946-ல் கூட்டுறவு ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது முதல் 1973 ஜூலை மாதம் தானாக முன்வந்து ஒய்வுபெற்றது வரை திருபுவன்தாஸ் படேல் 'அமுல்' தலைவராக மட்டுமல்லாமல், ஒரு கர்மவீரராக, கெய்ரா மாவட்ட ஒன்றியத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

உலகின் கவனத்தை 'அமுல்' ஈர்க்கும் வகையில், 1949 முதல் சில ஆண்டுகள் முன்வரை, பால் கூட்டுறவு இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாக்டர் வர்கிஸ் குரியன்.

சர்வதேச அளவில் 'பால் வளத்துறை நிபுணர்' என்ற அங்கீகாரம், மகஸúஸ, பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான்.

இவர் பின்னணி இதுதான்: கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921 நவம்பர் 26-ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார். மத்திய அரசின் 'ஸ்காலர்ஷிப்' உதவியுடன், அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பொறியியல் பட்டம் பெற்றார். இவர் விரும்பிக் கேட்டிருந்தது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு; கிடைத்ததோ, பால்வளத்துறை பொறியியல் - கிடைத்ததை ஏற்றார்.

அமெரிக்க மேல்படிப்புக்குப்பின் நாடு திரும்பிய குரியன் ஆனந்திலுள்ள மத்திய அரசு பால் பண்ணை ஆய்வகத்தில் பொறியாளராக 1949-ல் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மூடப்படும் நிலையில் இருந்த அந்த அலுவலகம், சில மாதங்களிலேயே மூடப்பட்டது.

மத்திய அரசு பண உதவியுடன் வெளிநாட்டில் படித்தார் என்பதால், அரசுப் பணியில் சில வருடங்கள் தொடர வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதற்கிடையே திருபுவன்தாஸýக்கும், குரியனுக்கும் ஆனந்தில் பரிச்சயம் ஏற்பட்டது. குரியன், கெய்ரா கூட்டுறவு அமைப்பில் தொடர வேண்டும் என்று திருபுவன்தாஸ் விரும்பினார். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. கெய்ரா மாவட்டம் சர்தார் படேலின் தொகுதியும்கூட.

கெய்ரா பகுதியில், 'பால்ஸன்' என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்து பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்கு பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தீவிரமாக முயன்றார்.

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகை பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த 'கிளாங்கோ', 'ஆஸ்டர் மில்க்' போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் 'குழந்தை உணவுப் பெüடர்கள்' இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன.

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது.

இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை.

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது.

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது.

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான "பிராண்டு' பெயர்களில் "அமுல்' ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று "குரியன் மாடலை'ப் பின்பற்றுகின்றன.

இத்தனை சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் வர்கிஸ் குரியன் 9-9-2012-ல் காலமானார். வெண்மைப் புரட்சியின் தந்தை மறைந்துவிட்டார். நண்பர்களாலும், பத்திரிகைகளாலும் செல்லமாக, 'பால்காரர்'' என்றழைக்கப்படும் குரியன் மறைந்தாலும் அவர் காட்டிய பாதை கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

குரியன் அடிக்கடி கூறி வந்தார். "நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!'' கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! பல நாடுகள் குரியன் மாடலைப் பின்பற்ற முடியுமானால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே? நோய்வாய்ப்பட்டிருக்கும் கூட்டுறவு இயக்கம் - புத்துயிர்பெற அவர் காட்டிய பாதை உதவட்டும்!

- எஸ். கோபாலகிருஷ்ணன்

நன்றி: தினமணி  (13.09.2012)


Verghese Kurien (wiki)