நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

25.6.14

தொழிற்சங்க இயக்க வழிகாட்டி

 
ஜெயப்பிரகாஷ் நாராயணன் 
(பிறப்பு: 1902, அக். 11 -  மறைவு: 1979, அக். 8)


ஜெயப்பிரகாஷ் நாராயண் பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை, சிற்றுண்டி சாலையில் பாத்திரங்களை கழுவி, அதன் வருவாயை வைத்து கல்வி கற்றவர்.

24.6.14

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

சிந்தனைக்களம்                    

-பேராசிரியர் ப.கனகசபாபதி 

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக "சிலப்பதிகாரம்' அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக "அர்த்த சாஸ்திரம்' கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.

பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.

உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.

இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.

அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.

1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.

அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான கொள்கைகளை உறுதியாக வகுக்க இயலாது.

நன்றி: தினமணி (17.06.2014)

22.6.14

தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேச்சு சென்னை, ஜூன் 21: தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர்? நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்?

அப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.

செல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் ?

இதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.

வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும்? இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.

ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.

சின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.

இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.

நன்றி: தினமணி (22.06.2014)

21.6.14

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்பு சிறுகதைப் போட்டிஉங்கள் சிறுகதை 175 ஆயிரம் பிரதிகளில் அச்சாகி நீங்கள் பரிசு வெல்ல வேண்டுமா?

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மனிதநேய மகான்கள், அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்கள் யாவும் இன்றும் மக்களுக்கு வழிகாட்டி வருகின்றன; சிக்கலான சமயங்களில் அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கி வருகின்றன.

அந்த அடிப்படையில், சிறந்த சிந்தனைகள் எப்படியெல்லாம் நடைமுறையில் செயல் வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் வகையில் தொண்டு, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றைக் கூறும் சிறுகதைகளைப் படைப்பாளிகள், எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

படைப்பாளிகளே, 1,75,000 பிரதிகள் அச்சாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் உங்களது சிறுகதைகளும் வெளிவர இன்றே எழுதி அனுப்புங்கள்.

முதல் பரிசு ரூ.10,000/-  * இரண்டாம் பரிசு ரூ. 8,000/-
மூன்றாம் பரிசு ரூ. 6,000/-
5 ஊக்கப் பரிசுகள் ரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-

எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.

முடிவுகள் செப்டம்பர் மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

சிறுகதைகளை அனுப்ப கடைசித் தேதி: 25.7.2014

மின்னஞ்சல்: sriramakrishnavijayam@gmail.com

***

நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும்
சிறப்புச் சிறுகதைப் போட்டி
மொத்தப் பரிசுத் தொகை ரூ. 34,000

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன.

இந்த வகையில் சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை விளக்கும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

சிறந்த சிந்தனைகள் எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்பிப் பரிசினைப் பெறுங்கள்.

உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது,
* சாஸ்திரங்களின்  கருத்துகளையோ, மகான்களின் சம்பவங்களையோ கூறும்போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.
* எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
* கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம்.
* இணையதளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தேவை.
* பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

முடிவுகள் செப்டம்பர் மாதத்து ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

 -ஆசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்

கதைகளை அனுப்ப கடைசித் தேதி : 25.7.2014

அனுப்ப வேண்டிய முகவரி : ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், 31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600004.

17.6.14

ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்- 65 வயதில் 146 முறை தானம்ஜூன் 14-ம் தேதி உலக ரத்த தான தினம். இந்த தினத்தைக் கொண்டாடியவர்கள் இனி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரமுகர் திருச்சியில் இருக்கிறார். 

ரத்த தானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இவர் மனதில் உருவாக்கியவர் ஒரு சிறுமி. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச தாதத்துக்கு 25 வயது இருக்கும்போது அவர் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ரத்தம் தேவை, உடனே ஏ ஒன் பாசிட்டிவ் குரூப் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் மருத்துவர். அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள்கூட ரத்த தானம் என்கிற வார்த்தையைக் கேட்டதும் தெறித்து ஓடினர். 

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நாம் ஏன் ரத்தம் வழங்கக் கூடாது என யோசித்தார் தாதம். உடனே முடிவெடுத்து ரத்தம் வழங்கி அந்த குழந்தையைக் காப்பாற்ற உதவினார். இது நடந்தது 1975-ம் ஆண்டில்.
 .
பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை (ரத்த தானம் வழங்க மருத்துவ உலகம் சொல்லும் இடைவெளி விட்டு) தொடர்ந்து ரத்த தானம் வழங்கி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இப்போது தாதத்துக்கு வயது 65. மருத்துவ உலகம் 65 வயதுக்கு மேல் ரத்ததானம் செய்வது உகந்தது அல்ல என தெரிவித்துள்ளதால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கடைசியாக 146-வது முறை ரத்த தானத்துடன் தனது ரத்த தான பயணத்தை நிறைவு செய்தார். 

தற்போது திருச்சி சங்கம் ஹோட்டலில் நிர்வாகப் பிரிவு அலுவலராக இருக்கும் தாதம் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிற நபர்களிடம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்த மறப்பதே இல்லை.
 .
“என்னால் செய்ய இயலா ததை என்னைப் போன்றவர்களைக் கொண்டு செய்ய வைப்பேன்” என்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறார் தாதம். கல்லூரிகள், தொண்டு நிறுவனங் கள், சமூக நல அமைப்புகள், ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்து ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். 

இவரால் திருச்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்ட தன்னார்வ ரத்த தானம் வழங்குவோர் சங்கம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி யிருக்கிறது. பல நூறு தன்னார்வ ரத்த தான வழங்குநர்களை உருவாக்கியுள்ளது. தொடரட்டும் இந்த அரிய பணி. 
- அ.சாதிக் பாட்சா

நன்றி: தி இந்து (14.06.2014)

6.6.14

காந்தியை மறந்தனர்; கைவிடப்பட்டனர்


சிந்தனைக்களம்

-லா.சு.ரங்கராஜன்


 

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, கோல்கேட், ஆதர்ஷ் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த பல ஊழல் விவகாரங்கள் காரணமாக இருக்கலாம்தான். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். காந்திஜியிடமிருந்து காங்கிரஸ் என்று விலகத் தொடங்கிற்றோ அன்றிலிருந்தே காங்கிரஸ் ஸ்தாபன அஸ்திவாரமும் செல்லரிக்கத் தொடங்கிவிட்டது.

1947 டிசம்பர் 11, 12 தேதிகளில் காங்கிரஸ் நிர்மாணத் திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி அறிவுறுத்தினார்:  ‘இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மை கெட்டுக் கறைபடும் அவலநிலைக்கு ஆட்படுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களாகிய நாம் அரசியலினின்றும் அறவே விலகி நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும்.

நமது அகத் தூய்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை வசப்படுத்திக் கொள்ள முடியும். வயது வந்தோர் அனைவர்க்கும் வோட்டுரிமை கிடைத்திருக்கும் இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகத் திட்டங்களில் கண்ணுங் கருத்தும் செலுத்தி நேர்மையுடன் செயலாற்றி, சாமான்ய மக்களின் நன் மதிப்பைப் பெற்றோமானால், நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கறோமோ அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்...

லஞ்ச ஊழலை, நடைமுறைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளத் தேவை இல்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'.

1947 ஜூன் 22 அன்று தில்லி அகதிகள் முகாமில் பணியாற்றி வந்த சமூக சேவகிகளுடன் காந்திஜி உரையாடியபோது, அரசியல் அரங்கில் மலிந்து வரும் லஞ்ச ஊழல்கள், உறவினர்க்கு சலுகை, நேர்மைக்குப் புறம்பான செயல் பற்றி முதன் முதலாகப் பிரஸ்தாபித்து மனம் வருந்தினார்:

 ‘பிரபல தலைவர்கள் என்று கருதப்படும் பல நபர்கள் கூட அரசியலில் ஆதாயம் தேட முனைந்து விட்டார்கள் என்று என்னிடம் புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன (அப்போது நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இயங்கிவந்தது).

காங்கிரஸ்காரர்கள் எவ்வாறெல்லாம் நாணயமற்ற வழிகளில் இறங்கிவிட்டார்கள் என்று விவரிக்கும் கடிதங்கள் வரப்பெற்றுள்ளேன். இவ்வாறு தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால் ஒரு நாள் அவர்கள் கொதித்தெழுவதை நம்மால் தடுக்க முடியாது' என்று எச்சரித்தார்.

ஊழல் விவகாரங்களினின்று காங்கிரஸ் ஸ்தாபனத்தை மீட்டு, நேர்மைமிக்க ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கச் செய்யும் முயற்சியாகவே மகாத்மா காந்தி 29.1.1948 அன்று பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் வரைந்தார்:

 ‘இன்று வரையிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு,  ‘லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் புதிதாய் மலரச் செய்ய வேண்டும்' என்ற தொடக்கத்துடன் அப்புதிய அமைப்புக்கான விதிமுறைகளையும் மேலோட்டமாகப் பட்டியலிட்டார். ஆனால் அச் சாசனத்தைத் திருத்தமாய் அமைத்து விளக்கங்களுடன் வெளியிட அவகாசமின்றி விதி குறுக்கிட்டு விட்டது. மறுநாள் (30.1.1948) மாலையில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.

லோக் சேவக் சங்கப் பணிகள் கிராமப்புறங்களிலிருந்து தொடங்கி மாநில அளவில் விரிந்து சமூக, பொருளாதார, அரசியல், கல்வி தளங்களில் மக்களுக்குச் சேவை புரியும். அரசியலில் ஆர்வமுள்ள, நேர்மைமிக்க சங்க உறுப்பினர்களை தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கி அவர்களுக்கு லோக் சேவக் சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்பதே காந்திஜியின் நோக்கம் என்று அவர் கடைசி வாரத்தில் பேசி, எழுதிய வாசகங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. இது கிட்டத்தட்ட ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் - பாரதிய ஜனதா கட்சி உறவு முறை போன்றது எனலாம்.

நரேந்திர மோடி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  ‘நான் ஒரு ஹிந்து தேசியவாதி' என்று கூறியதைக் கேட்டு பார்த்தீர்களா? ஹிந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி என்றெல்லாம் இப்போதே வகுப்புவாதம் பேசக் கிளம்பிவிட்டார்' என்று காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் அறிக்கை விடுத்தார்.

ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகாத்மா காந்தி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "நான் முதலாவதாக ஓர் ஹிந்து; அதன் பின்னரே தேசியவாதி' என்று தமது "யங் இந்தியா' வார இதழில் 1922ஆம் ஆண்டிலேயே அறிவித்துள்ளார்.

அதனை மேலும் விளக்குகையில்,  ‘நான் இவ்வாறு கூறுவதால் தேசப்பற்றில் எந்த ஒரு மிகச்சிறந்த தேசியவாதிக்கும் சளைத்தவன் அல்ல. நான் சொல்லவருவதின் தாத்பரியம் என்னவென்றால், நம் நாட்டின் நலனும் எனது மதமும் இரண்டறக் கலந்த ஒன்றே ஆகும் என்பதே'.

அயோத்திக்கு அருகிலுள்ள ஃபெயிஸாபாத் நகரில் நடந்த நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார மேடையின் பின்புறம் ஸ்ரீராமர் உருவப்படம் தாங்கிய பெரிய "பேனர்' வைக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்தது. "மதச் சின்னங்களை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்துவது கமிஷனின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே பா.ஜ.கவின் கட்சி அருகதையை ரத்து செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் சட்ட இலாக்கா செயலர் முறையீடு செய்தார்.

ஆனால், ராமர் இந்திய மக்கள் அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர் என்று காந்திஜி 1909ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்தினரின் பிரதிநிதியாக பாரிஸ்டர் காந்தி லண்டனில் நான்கு மாத காலம் தங்கியிருந்தபோது அங்குள்ள இந்தியர்கள் விஜயதசமி தினத்தையொட்டி அக்டோபர் 24 (1909) அன்று லண்டனில் உள்ள ஓர் இந்திய உணவு விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். பணம் செலுத்திப் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி அது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் எல்லோருமாக சுமார் 70 பேர் கூடியிருந்தனர். அழைப்பின்பேரில் சில ஆங்கிலேயர்களும் வந்திருந்தனர். பாரிஸ்டர் காந்தி அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். காந்திஜி தமது தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்:

 ‘ஸ்ரீராமச்சந்திரர் ஓர் சரித்திர மகா புருஷர்' என்ற நோக்கில் ஒவ்வொரு இந்தியனின் மதிப்புக்கும் கெüரவத்துக்கும் உரித்தானவர். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள் யாராகட்டும், அனைவரும் தாம் "ஸ்ரீராமச்சந்திர பிரபுவைப் போன்ற மாமனிதரைத் தோற்றுவித்த தேசத்தின் பிரஜை' என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். மகத்தான இந்திய புண்ணிய புருஷர் என்கிற வகையில் ஸ்ரீ ராமனுக்கு மட்டிலா மரியாதை செலுத்த ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டவர்.

இந்துக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கடவுள். ராமச்சந்திரனையும், சீதா தேவியையும், லட்சுமணனையும் பரதனையும் இந்தியா திரும்பவும் தோற்றுவித்தால் பாரத தேசம் விரைவில் வளம் கொழிக்கும் நாடாகப் பரிணமிக்கும்'.

 ‘வந்தே மாதரம்' எனும் தேசிய எழுச்சி கோஷம் 1904-5இல் வங்க மாகாணப் பிரிவினையின் போது உதித்து இந்தியா பூராவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முழக்கமாக ஒலிக்கத் தொடங்கியது. தேசிய தாரக மந்திரமாக மலர்ந்தது.

அப்பாடல் முழுவதும் தேசிய கீதமாகக் காங்கிரஸ் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் இசைக்கப்படலாயிற்று. ஆனால் அது ஹிந்து உருவ வழிபாட்டுப் பாடல் என்று முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியோ அத் தேசிய கீதம் எல்லோராலும் பாடத்தக்கது என்றார்.

வந்தே மாதரம் பாடலே சுதந்திர இந்தியக் குடியரசின் தேசிய கீதமாக ஏற்கப்படும் என்று காந்தி வெகுவாக எதிர்பார்த்தார். ஆனால் 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்ற தாற்காலிக பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டபோது, முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, வந்தே மாதரம் பாடலுக்கு பதிலாக தாகூர் இயற்றிய  ‘ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்கலாம் என நேரு சிபாரிசு செய்தார்.

 ‘ஜன கண மன இசையமைப்பு நமது தேசிய கீதமாக ஏற்கப்படுகிறது; அதே சமயம்,  ‘வந்தே மாதரம்' பாடலும் அதற்கு சரிநிகரான அந்தஸ்துடன் போற்றப்படும்' என்று சபைத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் அறிவித்து, அத்தீர்மானம் வோட்டெடுக்கப்படாமலேயே ஏற்கப்படுவதாகக் கூறி கூட்டத்தைச் சட்டென முடித்தார்.

இவ்வாறு தேசியத்தையோ, பாரதப் பண்பாட்டின் மாண்பையோ, நீர் - நிலவளங்களையோ போற்றி ஒரு அட்சரங்கூட இல்லாத ஜன கண மன பாடல் ‘தேசிய கீதமாக' நம் மீது திணிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசியக் கொடியிலும், கைராட்டைச் சின்னம் இருந்து வரும் என்று மகாத்மா காந்தி எதிர்பார்த்தார்.  ‘கைராட்டை வெறும் மரக்கட்டை அல்ல';  ‘அது அகிம்சையின் குறியீடு';  ‘போற்றலின் படிமம்; வீரத்தின் அடையாளம்';  ‘நம்மையும் எளிய மக்களையும் இணைக்கும் உயிர்ப்புள்ள பிணைப்பு' என்றெல்லாம் அறிவுறுத்தி வந்தார்.

ஆனால், அந்தோ, காங்கிரஸ் தனது கட்சிக் கொடியிலும் கூட கைராட்டைச் சின்னத்தை அகற்றி, கைச் சின்னத்தைப் பதித்து அழகு பார்த்தது. அவ்வெறுங் கை அவர்களுக்குக் கை கொடுக்காமல் அவர்களைக் கைவிட்டு விட்டது!

நன்றி: தினமணி (03.06.2014)
.