சிந்தனைக்களம்
-லா.சு.ரங்கராஜன்
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, கோல்கேட், ஆதர்ஷ் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த பல ஊழல் விவகாரங்கள் காரணமாக இருக்கலாம்தான். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். காந்திஜியிடமிருந்து காங்கிரஸ் என்று விலகத் தொடங்கிற்றோ அன்றிலிருந்தே காங்கிரஸ் ஸ்தாபன அஸ்திவாரமும் செல்லரிக்கத் தொடங்கிவிட்டது.
1947 டிசம்பர் 11, 12 தேதிகளில் காங்கிரஸ் நிர்மாணத் திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி அறிவுறுத்தினார்: ‘இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மை கெட்டுக் கறைபடும் அவலநிலைக்கு ஆட்படுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களாகிய நாம் அரசியலினின்றும் அறவே விலகி நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும்.
நமது அகத் தூய்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை வசப்படுத்திக் கொள்ள முடியும். வயது வந்தோர் அனைவர்க்கும் வோட்டுரிமை கிடைத்திருக்கும் இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகத் திட்டங்களில் கண்ணுங் கருத்தும் செலுத்தி நேர்மையுடன் செயலாற்றி, சாமான்ய மக்களின் நன் மதிப்பைப் பெற்றோமானால், நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கறோமோ அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்...
லஞ்ச ஊழலை, நடைமுறைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளத் தேவை இல்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'.
1947 ஜூன் 22 அன்று தில்லி அகதிகள் முகாமில் பணியாற்றி வந்த சமூக சேவகிகளுடன் காந்திஜி உரையாடியபோது, அரசியல் அரங்கில் மலிந்து வரும் லஞ்ச ஊழல்கள், உறவினர்க்கு சலுகை, நேர்மைக்குப் புறம்பான செயல் பற்றி முதன் முதலாகப் பிரஸ்தாபித்து மனம் வருந்தினார்:
‘பிரபல தலைவர்கள் என்று கருதப்படும் பல நபர்கள் கூட அரசியலில் ஆதாயம் தேட முனைந்து விட்டார்கள் என்று என்னிடம் புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன (அப்போது நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இயங்கிவந்தது).
காங்கிரஸ்காரர்கள் எவ்வாறெல்லாம் நாணயமற்ற வழிகளில் இறங்கிவிட்டார்கள் என்று விவரிக்கும் கடிதங்கள் வரப்பெற்றுள்ளேன். இவ்வாறு தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால் ஒரு நாள் அவர்கள் கொதித்தெழுவதை நம்மால் தடுக்க முடியாது' என்று எச்சரித்தார்.
ஊழல் விவகாரங்களினின்று காங்கிரஸ் ஸ்தாபனத்தை மீட்டு, நேர்மைமிக்க ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கச் செய்யும் முயற்சியாகவே மகாத்மா காந்தி 29.1.1948 அன்று பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் வரைந்தார்:
‘இன்று வரையிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு, ‘லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் புதிதாய் மலரச் செய்ய வேண்டும்' என்ற தொடக்கத்துடன் அப்புதிய அமைப்புக்கான விதிமுறைகளையும் மேலோட்டமாகப் பட்டியலிட்டார். ஆனால் அச் சாசனத்தைத் திருத்தமாய் அமைத்து விளக்கங்களுடன் வெளியிட அவகாசமின்றி விதி குறுக்கிட்டு விட்டது. மறுநாள் (30.1.1948) மாலையில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
லோக் சேவக் சங்கப் பணிகள் கிராமப்புறங்களிலிருந்து தொடங்கி மாநில அளவில் விரிந்து சமூக, பொருளாதார, அரசியல், கல்வி தளங்களில் மக்களுக்குச் சேவை புரியும். அரசியலில் ஆர்வமுள்ள, நேர்மைமிக்க சங்க உறுப்பினர்களை தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கி அவர்களுக்கு லோக் சேவக் சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்பதே காந்திஜியின் நோக்கம் என்று அவர் கடைசி வாரத்தில் பேசி, எழுதிய வாசகங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. இது கிட்டத்தட்ட ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் - பாரதிய ஜனதா கட்சி உறவு முறை போன்றது எனலாம்.
நரேந்திர மோடி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘நான் ஒரு ஹிந்து தேசியவாதி' என்று கூறியதைக் கேட்டு பார்த்தீர்களா? ஹிந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி என்றெல்லாம் இப்போதே வகுப்புவாதம் பேசக் கிளம்பிவிட்டார்' என்று காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் அறிக்கை விடுத்தார்.
ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகாத்மா காந்தி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "நான் முதலாவதாக ஓர் ஹிந்து; அதன் பின்னரே தேசியவாதி' என்று தமது "யங் இந்தியா' வார இதழில் 1922ஆம் ஆண்டிலேயே அறிவித்துள்ளார்.
அதனை மேலும் விளக்குகையில், ‘நான் இவ்வாறு கூறுவதால் தேசப்பற்றில் எந்த ஒரு மிகச்சிறந்த தேசியவாதிக்கும் சளைத்தவன் அல்ல. நான் சொல்லவருவதின் தாத்பரியம் என்னவென்றால், நம் நாட்டின் நலனும் எனது மதமும் இரண்டறக் கலந்த ஒன்றே ஆகும் என்பதே'.
அயோத்திக்கு அருகிலுள்ள ஃபெயிஸாபாத் நகரில் நடந்த நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார மேடையின் பின்புறம் ஸ்ரீராமர் உருவப்படம் தாங்கிய பெரிய "பேனர்' வைக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்தது. "மதச் சின்னங்களை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்துவது கமிஷனின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே பா.ஜ.கவின் கட்சி அருகதையை ரத்து செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் சட்ட இலாக்கா செயலர் முறையீடு செய்தார்.
ஆனால், ராமர் இந்திய மக்கள் அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர் என்று காந்திஜி 1909ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்தினரின் பிரதிநிதியாக பாரிஸ்டர் காந்தி லண்டனில் நான்கு மாத காலம் தங்கியிருந்தபோது அங்குள்ள இந்தியர்கள் விஜயதசமி தினத்தையொட்டி அக்டோபர் 24 (1909) அன்று லண்டனில் உள்ள ஓர் இந்திய உணவு விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். பணம் செலுத்திப் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி அது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் எல்லோருமாக சுமார் 70 பேர் கூடியிருந்தனர். அழைப்பின்பேரில் சில ஆங்கிலேயர்களும் வந்திருந்தனர். பாரிஸ்டர் காந்தி அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். காந்திஜி தமது தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்:
‘ஸ்ரீராமச்சந்திரர் ஓர் சரித்திர மகா புருஷர்' என்ற நோக்கில் ஒவ்வொரு இந்தியனின் மதிப்புக்கும் கெüரவத்துக்கும் உரித்தானவர். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள் யாராகட்டும், அனைவரும் தாம் "ஸ்ரீராமச்சந்திர பிரபுவைப் போன்ற மாமனிதரைத் தோற்றுவித்த தேசத்தின் பிரஜை' என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். மகத்தான இந்திய புண்ணிய புருஷர் என்கிற வகையில் ஸ்ரீ ராமனுக்கு மட்டிலா மரியாதை செலுத்த ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டவர்.
இந்துக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கடவுள். ராமச்சந்திரனையும், சீதா தேவியையும், லட்சுமணனையும் பரதனையும் இந்தியா திரும்பவும் தோற்றுவித்தால் பாரத தேசம் விரைவில் வளம் கொழிக்கும் நாடாகப் பரிணமிக்கும்'.
‘வந்தே மாதரம்' எனும் தேசிய எழுச்சி கோஷம் 1904-5இல் வங்க மாகாணப் பிரிவினையின் போது உதித்து இந்தியா பூராவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முழக்கமாக ஒலிக்கத் தொடங்கியது. தேசிய தாரக மந்திரமாக மலர்ந்தது.
அப்பாடல் முழுவதும் தேசிய கீதமாகக் காங்கிரஸ் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் இசைக்கப்படலாயிற்று. ஆனால் அது ஹிந்து உருவ வழிபாட்டுப் பாடல் என்று முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியோ அத் தேசிய கீதம் எல்லோராலும் பாடத்தக்கது என்றார்.
வந்தே மாதரம் பாடலே சுதந்திர இந்தியக் குடியரசின் தேசிய கீதமாக ஏற்கப்படும் என்று காந்தி வெகுவாக எதிர்பார்த்தார். ஆனால் 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்ற தாற்காலிக பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டபோது, முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, வந்தே மாதரம் பாடலுக்கு பதிலாக தாகூர் இயற்றிய ‘ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்கலாம் என நேரு சிபாரிசு செய்தார்.
‘ஜன கண மன இசையமைப்பு நமது தேசிய கீதமாக ஏற்கப்படுகிறது; அதே சமயம், ‘வந்தே மாதரம்' பாடலும் அதற்கு சரிநிகரான அந்தஸ்துடன் போற்றப்படும்' என்று சபைத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் அறிவித்து, அத்தீர்மானம் வோட்டெடுக்கப்படாமலேயே ஏற்கப்படுவதாகக் கூறி கூட்டத்தைச் சட்டென முடித்தார்.
இவ்வாறு தேசியத்தையோ, பாரதப் பண்பாட்டின் மாண்பையோ, நீர் - நிலவளங்களையோ போற்றி ஒரு அட்சரங்கூட இல்லாத ஜன கண மன பாடல் ‘தேசிய கீதமாக' நம் மீது திணிக்கப்பட்டது.
இந்தியாவின் தேசியக் கொடியிலும், கைராட்டைச் சின்னம் இருந்து வரும் என்று மகாத்மா காந்தி எதிர்பார்த்தார். ‘கைராட்டை வெறும் மரக்கட்டை அல்ல'; ‘அது அகிம்சையின் குறியீடு'; ‘போற்றலின் படிமம்; வீரத்தின் அடையாளம்'; ‘நம்மையும் எளிய மக்களையும் இணைக்கும் உயிர்ப்புள்ள பிணைப்பு' என்றெல்லாம் அறிவுறுத்தி வந்தார்.
ஆனால், அந்தோ, காங்கிரஸ் தனது கட்சிக் கொடியிலும் கூட கைராட்டைச் சின்னத்தை அகற்றி, கைச் சின்னத்தைப் பதித்து அழகு பார்த்தது. அவ்வெறுங் கை அவர்களுக்குக் கை கொடுக்காமல் அவர்களைக் கைவிட்டு விட்டது!
நன்றி: தினமணி (03.06.2014)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக