நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.9.11

வீரத்தாயை வணங்குவோம்!

பகத்சிங்
(பிறப்பு: செப். 28)
 அஞ்சலிக் கவிதைசட்லஜ் நதியின் கலகல ஓசை
அதன் அருகில் தூங்க உனக்கும் ஆசை
ஹூசன்வாலா சமாதிக்குள் நீ….
நிரந்தரமாக சஹீத் ஆனாய்.

சந்தூ குடும்ப ஆதவன் நீ
பகத் என்ற தேச பக்தன் நீ
சந்தன மணம் பரப்பினாய் நீ
சிம்ம கர்ஜனை எழுப்பினாய் நீ

பதிமூன்று வயதில் தொடங்க ஒரு புரட்சி
ஆனது ஆங்கிலேய ஆட்சிக்கு ஒர் மிரட்சி
சர்க்காரின் புத்தகங்ளுக்குத் தீ
அவர்களது உடைகளுக்கும் தீ

பரவியது எங்கும் சுதந்திரத் தீ
அடிக்கு அடி எங்கும் செய்தி
அஞ்சா நெஞ்சம் கொண்ட தங்கமே
வெடிகுண்டை வைத்த இளம் சிங்கமே

“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற கோஷம்
கிளம்பியது நாட்டில் ஆக்ரோஷம்
ஆங்கிலயேர் மீது கொண்டது துவேஷம்
கலைந்து போனது அவர்களது வேஷம்.

நேர்ந்தது லாலா லஜபதிராயின் கொலை
வைத்தாய் ஆங்கிலேயருக்கு உலை
சுட்டாய் அவனைத் திட்டத்துடன்
தூக்கிலும் தொங்கினாய் மகிழ்ச்சியுடன்.

உன் தேசப் பற்றை என்னவென்று சொல்ல
யாரும் நிகரில்லை உன்னை வெல்ல.
உன்னை நாங்கள் எப்படி மறப்போம்?
உன்னைப் பெற்ற வீரத் தாயை வணங்குவோம்.

                      - விசாலம்
                       நன்றி: வல்லமை


காண்க:

புரட்சியின் தளகர்த்தர்கள்
.

26.9.11

ஏலம் போன நவாபின் காலணி


ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)  


மேற்குவங்கத்தின் மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தன் நண்பர்களோடு சேர்ந்து பலரிடமும் நன்கொடைகளை திரட்டுவதற்காக பக்கத்து மாநிலங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டுவந்தார்.


செல்வாக்குமிக்க நவாப் ஒருவரைச் சந்தித்து நன்கொடை வேண்டி நின்றார் வித்யாசாகர். மக்களின் அறியாமையை அகற்றி கல்விக்கண் திறக்கும் நோக்கோடு, பல்கலைக் கழகம் அமைக்க நன்கொடை வேண்டும் வித்யாசாகரின் முயற்சியைப் பாராட்டாமல், ஆணவத்தோடு தன்னுடைய ஷூ ஒன்றை கழற்றி அவரின் பையில் போட்டார் அந்த நவாப்.

நவாப்பின் இச்செயலால் அதிர்ச்சியோ, மனத்தளர்ச்சியோ அடையாத ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்கள் புன்முறுவலோடு நவாப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த ஷூவை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

அடுத்த நாள் நவாப்பின் அரண்மனைக்குச் சற்றுதூரம் தள்ளி ஒரு ஏலவிற்பனைக்கு ஏற்பாடு செய்தார் வித்யாசாகர். ”பெருமதிப்பு மிக்க நவாப் அவர்களின் ஒற்றை ஷூ ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்” என்று கூறியவுடன் நவாப்பின் ஷூ பெருந் தொகைக்கு ஏலம் போனது. இந்தச் செய்தி உடனடியாக நவாப்பின் காதுகளுக்கும் எட்டியது.

தன் ஷூ ஏலத்தில் விடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த நவாப் உடனடி யாக வித்யாசாகரை தன் அரண்மனைக்கு வரவழைத்தார்.

தான் அவமானப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாமல் அதையே வெகுமானமாக்கிய’ வித்யாசாகரின் செயலைப் பாராட்டி விட்டு அந்த ஷூ ஏலம்போன தொகையளவிற்கு நன்கொடையும் கொடுத்தனுப்பினார்.

துளையிடுதலை பொறுத்துக் கொள்ளும் மூங்கில்தான், புல்லாங்குழலாகி இதழ்களோடு உறவாடி, இனிய இசைதந்து காற்றின்வழி காதுகளை வருடி நம் மனங்களை கொள்ளை கொள்கிறது.

- ருக்மணி பன்னீர்செல்வம்


காண்க:


Ishwar Chandra Vidyasagar

வித்யாசாகர் வாழ்வில் (முத்துக்கமலம்)

பிரபலங்கள் வாழ்வில் (ஈகரை)

banglapedia.org

Ishwar Chandra (Encyclopædia Britannica)

25.9.11

சான்றோர் வாக்கு

தீன தயாள் உபாத்யாய
(பிறப்பு: செப். 25)
 
முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகிய இரு முறைகளுமே, பரிபூரண மனிதன், அவனது முழுமையான தன்மை, அவனது அபிலாஷைகள் ஆகியவற்றைகருத்தில் கொள்ளத் தவறிவிட்டன. அவனை பணத்திற்காக பறக்கும் சுயநலவாதியாக கருதுகிறது ஒன்று; மற்றொன்றோ, கடுமையான விதிகளால் கட்டுப்படுத்தினால் ஒழிய எந்த நல்லதும் செய்ய தகுதியற்றவனாக அவனை நோக்குகிறது. பொருளாதார, அரசியல் அதிகாரக்குவிப்பு, இரண்டிலுமே பொதிந்துள்ளது. எனவே, இரண்டுமே மனிதனை மனிதத் தன்மை இழக்கும்படிச் செய்கிறது.-பண்டித தீனதயாள் உபாத்யாய.
(ஏகாத்ம மானவ வாதம்- பக்: 91)

காண்க:


24.9.11

தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியவர்


மேடம் காமா
(பிறப்பு: செப். 24)

நமக்கு சுதந்திரம் வாங்கித்தர தன் உயிர், உடல், பொருள் என்று எல்லாம் நம் தேசத்திற்கு அர்ப்பணித்து விட்டவர் பலர். இதில் ஒரு பார்சீயப் பெண்மணி மிகவும் வீர தீரத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டார் .அவர் பெயர் மேடம் காமா. அவர் குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் 24-9-1861ல் பிறந்தார். அவரது இயற்பெயர் மேடம் பிகாஜி ருஸ்தம் காமா.


1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நட்ந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். முதல் தடவையாக ஒரு பெண் கலர் புடவைக் கட்டி இந்தியக் கலாசாரத்துடன் கூட்டத்திற்கு ந்டுவே முன்னேறி, "பாருங்கள் எல்லோரும், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி, இது பல இளைஞர்களின் தியாகத்தாலும் அவர்கள் சிந்திய இரத்த்தாலும் இசையப் பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு கை கொடுங்கள்" என்று வீரத்துடன் வெற்றி நடை நடந்து பெருமையாக அதை நாட்டினார்

இந்தச் சம்பவம் இன்றும் பலர் நினைவுக்கு வரும். அவள் செயல் ஒரு பெரிய மகாராணி மிடுக்குடன் வந்து கொடியை ஏற்றி வீரத்துடன் மொழிந்தது போல் இருந்தது. அநதக் கொடி இப்போது இருக்கும் தேசியக் கொடியைப் போல் இல்லை, கொஞ்சம் மாறுபட்டிருந்தது.

மேலே பச்சை வர்ணம், கீழே சிவப்பு வர்ணம் நடுவே மஞ்சள் வர்ணம் இருந்தன. சிவப்புக் வலிமைக்கும், மஞ்சள் வெற்றிக்கும், பச்சை முன்னேற்றத்திற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலே எட்டுத் தாமரைகள் இருந்தன அவை எட்டு பிராந்தியங்களைக் குறித்தன. நடுவில் தேவ நாகரி எழுத்தில் 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்தது. தேசத்தாய்க்குத் தலை வண்ங்குகிறோம் என்ற பொருள். உள்ளே சூரியனும் சந்திரனும் வரையப்பட்டிருந்தன, அது ஹிந்து முஸ்லிம் நம்பிக்கையைக் குறித்தது. இந்தக் கொடி வீர சாவர்க்கரால் வடிவாக்கப்பட்டது இதற்கு பல சுதந்திர வீரர்களும் உதவினர்.

மேடம் காமா பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும் மிக எளிமையை நாடினார் அவர் திரு ருஸ்டம் காமா என்ற பெரிய சீமானை மணந்து கொண்டார் அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்தும் நிம்மதி இல்லாமல் தேச சேவைச் செய்ய முனைந்தார் அந்த நேரத்தில் பிளேக் என்ற கொடிய நோய் பல இடங்களில் பாதித்தது. இவர் அவர்களுக்கு உதவ முன்வந்து பின் தானும் மிகவும் உடல் நிலை மோசமாகி படுத்து விட்டார். பின் சற்று தேறியவுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டு தேசப்பற்று மிக்க பல புத்தகங்கள் வெளியிட்டார். தன்னிடமிருந்த பணம் எல்லாம் கொடுத்து உதவினார். ஆங்கிலேயருக்கு இவரால் மிகுந்த தலைவலி உண்டாயிற்று.

இவர் ஜெர்மனி போய் திரும்பி வருவதற்குள் ஆங்கிலேயர் அவரைக் கொல்ல முயற்சித்ததால் தப்பி ஓடி, பிரான்ஸ் வந்தார். அங்கிருந்தே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடு பட்டார். பல சுதந்திர வீரர்களுடன் சமபந்தம் வைத்துக் கொண்டு உதவினார். பின் இந்தியாவிற்கு வர முயன்றும் அனுமதி கிடைக்காததனால் அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டி இருந்தது. வயது முதிர்ந்த பின் பாரதம் திரும்பினார். ஆனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. 13 -8 1936ல் காலமானார்.

அவர் வீர தீரத்துடன் நாட்டிய கொடியைத்  இந்திலால் யாக்னிக் என்பவர் குஜரரத்திற்கு எடுத்து வந்தார். இப்போது அது பூனாவில் மராத்தா புத்தகாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீரப் பெண்மணிக்குத் தலை வணங்குவணங்குவோம்!


காண்க:

விடுதலைப்போரில் ஒரு வீராங்கனை (ஈகரை)

Madom Bhikaiji Cama


நாடும் கொடியும் (லக்ஷ்மன் ஸ்ருதி)

சுதந்திரப்போராட்ட வீரர் (கூட்டாஞ்சோறு)

தேசியக்கொடியின் வரலாறு (ஒன் இந்தியா)

தீராத பக்கங்கள் (மாதவராஜ்)

17.9.11

ஆவணி மாத மலர்கள்

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:


பெரியவாச்சான் பிள்ளை
(ஆவணி - 6 - ரோகிணி)

செருத்துணை நாயனார்
(ஆவணி - 10 - பூசம்)

புகழ்த்துணை நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)

அதிபத்த நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)

இளையான்குடி நாயனார்
(ஆவணி - 11 - ஆயில்யம்)
 
மறைஞான சம்பந்தர்
(ஆவணி - 13 - உத்திரம்)

குலச்சிறை நாயனார்
(ஆவணி - 18 - அனுஷம்)

குங்கிலியக்கலய நாயனார்
(ஆவணி - 20 - மூலம்)

நாராயண குரு ஜெயந்தி
(ஆக. 22)

திருமுருக கிருபானந்த வாரியார்
(பிறப்பு: ஆக. 25)

----------------------------

சான்றோர் - மலர்வும் மறைவும்


மதன்லால் திங்ரா
(பலிதானம்: ஆக. 17)

தீரர் சத்தியமூர்த்தி
(பிறப்பு: ஆக. 19)

ஜீவானந்தம்
(பிறப்பு: ஆக. 21)

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்
(பிறப்பு: ஆக. 24)

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

சர்தார் வேதரத்தினம் பிள்ளை
(மறைவு: ஆக. 24)

தண்டபாணி தேசிகர்
(பிறப்பு: ஆக. 27)

வீரன் பூலித்தேவன்
(பிறப்பு: செப். 1)

தாதாபாய் நௌரோஜி
(பிறப்பு: செப். 4)

வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(பிறப்பு: செப். 5)

ஔவை துரைசாமி
(மறைவு: செப். 5)

மகாகவி பாரதி
(மறைவு: செப். 11)

வினோபா பாவே
(பிறப்பு: செப்.௦ 11)

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை
(பிறப்பு: செப். 15)

அண்ணாதுரை
(பிறப்பு: செப். 15)

விஸ்வேஷ்வரையா
(பிறப்பு: செப். 15)

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி
(பிறப்பு: செப். 16)

பெரியார் ஈ.வே.ராமசாமி
(பிறப்பு: செப். 17)

.

11.9.11

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!


மகாகவி பாரதி
(நினைவு தினம்: செப். 11)

"பொதுஜன நன்மையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள், இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக் கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்...''

“ இந்தியா (7.11.1908) நாளிதழில் "நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை' என்ற தலைப்பில் மகாகவி பாரதி எழுதியுள்ள விதிமுறைகள் இவை.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் எழுதுகோல் உதவியுடன் போராடிய ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நமது துரதிர்ஷ்டம், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பத்திரிகையுலகப் பணிகள் பெறாமலே உள்ளன. அவற்றை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது மிக அதிகமாகவே இருக்கிறது.

பாரதியின் பத்திரிகையுலகப் பணி 1904 நவம்பரில் "சுதேசமித்திரன்' பத்திரிகை வாயிலாகத் துவங்கியது. ஆரம்பத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணி பாரதிக்கு கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செய்திகளை தமிழில் தரும்போதும், நமது நாட்டின் நிலையை ஒப்பிட்டு செய்திகளை வழங்கினார் பாரதி.

இதனிடையே மகளிருக்கென்று துவங்கப்பட்ட "சக்கரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகவும் பாரதி பொறுப்பேற்றார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த முன்னோடிக் கருத்துக்களை அவர் எழுதினார். தனது பத்திரிகைப் பணி காரணமாக, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டார்.

தனது விடுதலை வேட்கையின் வேகத்திற்கு "சுதேசமித்திரன்' ஈடுகொடுக்காத காரணத்தால், நிரந்தர மாத சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி, 1906ல் "இந்தியா' பத்திரிகையில் சேர்ந்தார் பாரதி. அதில் அவரது எழுத்தாவேசம் கரைபுரண்டது. சுதேசியக் கல்வி, அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு, காங்கிரஸ் கட்சியின் நிலை, வெளிநாடுகளில் இந்தியர் நிலை, சமய மறுமலர்ச்சி, சமூக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல முனைகளில் பாரதியின் எழுத்துக்கள் புதுவீறுடன் வெளிவந்தன.

இந்தியா பத்திரிகையில், வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம், முதன்முதலாக கார்ட்டூன் வெளியீடு, பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தக வெளியீடு, விவாதங்களில் வாசகர் பங்கேற்பு, தமிழ்த்தேதி குறிப்பிடுதல் உள்ளிட்ட பல புதுமைகளை நிகழ்த்திய பாரதி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இதனால் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி, பத்திரிகையை சென்னையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி புதுவை சென்ற பாரதி, அங்கிருந்து மீண்டும் இந்தியா பத்திரிகையை புதிய வேகத்துடன் நடத்தினார். அங்கு "விஜயா' என்ற மாலை இதழையும் "பாலபாரதா' என்ற ஆங்கில இதழையும் பாரதி நடத்தினார். தவிர, கர்மயோகி, தர்மம், சூர்யோதயம், ஞானபானு ஆகிய பத்திரிகைகளிலும் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, புதுவையிலும் இந்தியா பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. அப்போதும், காளிதாசன், நித்யதீரர், உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயர்களில் காமன்வீல், நியூஇண்டியா, விவேகபானு போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்து தவத்தைத் தொடர்ந்தார் பாரதி.

"லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும், ஆங்கிலேய அரசு கொடுத்த தொல்லைகளுக்கு மத்தியில், பெரும் பொருளாதாரச் சிக்கல்களிடையே, உடல்நலிவுற்றபோதும், பாரதி நிகழ்த்திய சாதனைகள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் (1921) மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்த பாரதி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், எழுத்தாளர், முற்போக்குச் சிந்தனையாளர் என பலமுகங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாவதற்கு சில நாட்கள் முன்னரும், "சித்திராவளி' என்ற கார்ட்டூன் பத்திரிகையையும், "அமிர்தம்' என்ற வாரமிருமுறை இதழையும் வெளியிட அவர் முயன்றார். பத்திரிகைத்தொழில் மீதான பாரதியின் காதலையும், பத்திரிகை மூலம் சமூகத்தை மாற்ற அவர் துடித்த துடிப்பையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

பாரதி நினைத்திருந்தால், ஆங்கிலேய அரசுடன் சமரசம் செய்துகொண்டு பிரபல "பத்தி' எழுத்தாளராகப் பரிமளித்திருக்க முடியும். அரசுடன் குலாவியிருந்தால், 39 வயதிலேயே குடும்பத்தை நிர்கதியாக்கி, மருந்திற்கு காசின்றி இறந்திருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.
உயரிய விருதுகளுடன் வாழ்வதைவிட, நாட்டு மக்களுக்காக வாழ்வதே பத்திரிகையாளனின் கடமை என்று, அவர் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.

இந்நாளில் பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் தனி கெüரவம் உள்ளது. அரசு அஞ்சி மரியாதை செலுத்தும் பணியாக ஊடகத்துறை மாறிவிட்டது; ஊதியமும்கூட ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிகைத்துறையின் தேசியப் பங்களிப்பு உற்சாகம் அளிப்பதாக இல்லை.

நாட்டைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையிலும் முறைகேடுகள் பெருகிவிட்டன. அதிகாரத் தரகர்களுடனும், பதவிப் பித்தர்களுடனும் கூடிக் குலாவும் பத்திரிகையாளர்களால், ஊடகத்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். சுயபொருளாதார முன்னேற்றத்திற்காக தங்களை விற்கும் ஊடக அறிஞர்களைக் காணும்போது வேதனை மிகுகிறது.

இதற்கெல்லாம் ஒரே மருந்து, பாரதியின் பத்திரிகைப் பணிகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதுதான். இதழியல் பட்டப் படிப்பில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும். பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும். தற்போதைய தறிகெட்ட பத்திரிகை உலகிற்கு மருந்து பாரதி மட்டுமே.


நிறைவாக, இந்தியா பத்திரிகையில் "நமது விஞ்ஞாபனம்' எந்ற தலைப்பில் பாரதி எழுதிய மகத்தான வரிகள் இதோ...

“..இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது...''

-வ.மு.முரளி

காண்க: பாரதியைப் பார்!


5.9.11

கப்பலோட்டிய தமிழர்


வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)


வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது 1908-ம் ஆண்டு வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து வெள்ளைய நீதிபதி ஃபின்ஹே தீர்ப்பில் எழுதியுள்ள வரிகள்... இதுபோன்று எந்தவொரு இந்தியரும்கூட வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும், வேகத்துக்கும் சிறந்த அங்கீகாரத்தையும் தந்துவிட முடியாது.

வ.உ.சி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். தொடக்கக்கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பயின்று 1895-ம் ஆண்டு வழக்குரைஞரானார்.

வணிக நோக்கில் வந்த வெள்ளையர்கள் இங்கு நிலவிய சிறு, சிறு பாளையங்களாக ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இதனை எண்ணிய வ.உ.சி. வணிகம் மூலமாக நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்களை வணிக ரீதியாகவே விரட்ட வேண்டும் என, 1906-ம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார்.

வாணிபம் என்பது தமிழர்களுக்குப் புதிது இல்லை. சங்க இலங்கியங்களில்கூட, தமிழர்கள் திரைகடல்ஓடி திரவியம் தேடியுள்ளனர். சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பல நாடுகளில் கடல் வாணிபம் செய்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. எனவே, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வாணிபப் போட்டியில் ஈடுபட்டார்.

காலியா, லாவோ என இரு கப்பல்களை வங்கக்கடலில் விட்டு, கொழும்பு நகரத்துடன் வாணிபத்தைத் தொடங்கினார். அவரின் செயலைக் கண்டு மும்பை கடற்கரைக் கூட்டத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர் பேசும்போது, ""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானி ஆகிய வ.உ.சி. தூத்துக்குடி - சிலோனுக்கு சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்துக்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்'' என்று பேசியுள்ளார்.

வ.உ.சி. பல இடங்களுக்குச் சென்று விடுதலை குறித்து மக்களிடையே பிரசங்கத்திலும் ஈடுபட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் வ.உ.சி.யின் மீது வழக்குத் தொடுத்து 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.

கோவைச் சிறையில் ஆங்கிலயர்கள் வ.உ.சி.யைக் கல்லுடைக்க வைத்துள்ளனர். அதில் அவரின் கையில் கொப்புளங்கள் ஏற்பட்ட நிலையிலும், துன்புறுத்துவதற்காக செக்கிழுக்க வைத்துள்ளனர்.

கொடுமைப்படுத்தப்பட்ட வ.உ.சி.யின் நிலையைக் கண்டு, அவரின் துணைவியார் மீனாட்சி அம்மையார் ஆங்கிலேய அரசருக்கு எழுதிய மடலில், ""சிறையதிகாரிகள் என் கணவரைச் செக்கிழுக்கவும், கல்லுடைக்கவும் வைத்துத் துன்புறுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இக்கணமே அவரைக் கண்மறைவாக அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுதல் நலம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்துக்காக மட்டும் அல்லாமல், தீண்டாமைக்கு எதிராகவும் போராடிய வ.உ.சி., சகஜாநந்தா என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தம் வீட்டில் தங்க வைத்து போதித்து, தமிழறிவு ஊட்டி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்குத் திலகமாகியுள்ளார்.

அதுபோல், விருதுநகர் இராமையா தேசிகர் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிறவிக் குருடரையும் தம் இல்லத்தில் தங்க வைத்து ஆதரித்துள்ளார். விதவை மறுமணம், கலப்புத் திருமணம் போன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளார்.

கையூட்டில் ஈடுபட்ட ஏகாம்பரம் என்ற துணை நீதிபதியையும், பஞ்சாபிகேசவராவ், வாசுதேவராவ் என்ற அதிகாரிகளையும் கோர்ட்டில் நிறுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி. 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இறந்தார். வ.உ.சி. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்கும் உழைத்த வரலாறு இன்றும் போற்றப்படத்தக்கதாக இருக்கிறது. இவர் போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நம்மவர்கள் ஜாதிப் பிரிவுக்குள் அடக்கி, விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் ஜாதிச் சங்கத் தலைவர்களாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், அவர்களின் வரலாற்றை வருங்காலச் சந்ததியினர் அறிய முடியாமல் போகும்.

அப்படி அறிய முடியவில்லையென்றால், சுதந்திரத்துக்காக உழைத்த மாபெரும் தலைவர்களின் வரலாறுகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துத் தரப்பு மக்களும், வளரும் தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தலைவரின் வரலாறுகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பின்பற்றச் செய்ய வேண்டும். அதுகுறித்து வ.உ.சி. பிறந்த இந்நாளில் ஒவ்வொருவரும் பின்பற்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தியனின் நனவாக இருக்க வேண்டும்.

-மா.வீரபாண்டியன்
நன்றி: தினமணி

காண்க:

வ.உ.சிதம்பரம் பிள்ளை (விக்கி)

V.O.C.CHIDHAMBARAM PILLAI

Indian Post Stamp
 
கப்பல் ஓட்டிய தமிழர் (யாழ்)
 
வ.உ.சி எழுதிய பாடல் திரட்டு
 
தேசபக்த வீரர் வ.உ.சி. (தமிழ் ஹிந்து)
 
வ. உ.சி.யின் இலக்கிய, சமுதாயப் பணிகள் (தமிழ் மரபு அறக்கட்டளை)
.

4.9.11

நவுரோஜி வாழ்க!


தாதாபாய் நௌரோஜி
 (பிறப்பு: செப். 4)


முன்னாளில் இராமபிரான் கோதமனா
தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்
பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில
மக்களவ ரடிகள் சூழ்வாம்.

அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
மைந்தன், தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்
உயிர் துடைப்பேன் என்னப் போந்து,
யௌவன நாள் முதற்கொடுதான்
எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
யானுழைப்புத் தீர்த லில்லான்

கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்
கருணையும்அக் கருணைப் போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
நிகரின்றிப் படைத்த வீரன்,
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
எனஅதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித்
தனக்குழையாத் துறவி யாவோன்.

மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்
மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க;

எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு
இருந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
துக எமது பரதநாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
போற்புதல்வர் பிறந்து வாழ்க
விண்புல்லு மீன்களென அவனன்னார்
எவ்வயினும் மிகுக மன்னோ!

-மகாகவி பாரதி

ஆதாரம்: தேசிய கீதங்கள்- 43
 (மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்)

காண்க:
சுரண்டலை தட்டிக் கேட்ட தலைவர்