நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
லா.சு.ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லா.சு.ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.10.14

காந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'!

-லா.சு.ரங்கராஜன்

“எனது பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவிப்பது கடுந்தண்டனைக்குரிய குற்றமென விதி வகுக்கப்பட வேண்டும். முனைப்புடன் நூல் நூற்றல் அல்லது வேறு ஏதாகிலும் தேசப்பணி புரிதல் மட்டுமே அன்று அனுசரிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அன்றைய தினம் முழுவதையும் நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கிஞ்சித்தும் வேண்டாம்”.

 - இவ்வாறு மகாத்மா காந்தி தமது ‘அரிஜன்’ (15.10.1938) இதழில் எழுதினார்.

2.10.14

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

-லா.சு.ரங்கராஜன்


 ‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.

6.6.14

காந்தியை மறந்தனர்; கைவிடப்பட்டனர்


சிந்தனைக்களம்

-லா.சு.ரங்கராஜன்


 

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, கோல்கேட், ஆதர்ஷ் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த பல ஊழல் விவகாரங்கள் காரணமாக இருக்கலாம்தான். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். காந்திஜியிடமிருந்து காங்கிரஸ் என்று விலகத் தொடங்கிற்றோ அன்றிலிருந்தே காங்கிரஸ் ஸ்தாபன அஸ்திவாரமும் செல்லரிக்கத் தொடங்கிவிட்டது.

1947 டிசம்பர் 11, 12 தேதிகளில் காங்கிரஸ் நிர்மாணத் திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி அறிவுறுத்தினார்:  ‘இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மை கெட்டுக் கறைபடும் அவலநிலைக்கு ஆட்படுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களாகிய நாம் அரசியலினின்றும் அறவே விலகி நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும்.

நமது அகத் தூய்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை வசப்படுத்திக் கொள்ள முடியும். வயது வந்தோர் அனைவர்க்கும் வோட்டுரிமை கிடைத்திருக்கும் இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகத் திட்டங்களில் கண்ணுங் கருத்தும் செலுத்தி நேர்மையுடன் செயலாற்றி, சாமான்ய மக்களின் நன் மதிப்பைப் பெற்றோமானால், நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கறோமோ அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்...

லஞ்ச ஊழலை, நடைமுறைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளத் தேவை இல்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'.

1947 ஜூன் 22 அன்று தில்லி அகதிகள் முகாமில் பணியாற்றி வந்த சமூக சேவகிகளுடன் காந்திஜி உரையாடியபோது, அரசியல் அரங்கில் மலிந்து வரும் லஞ்ச ஊழல்கள், உறவினர்க்கு சலுகை, நேர்மைக்குப் புறம்பான செயல் பற்றி முதன் முதலாகப் பிரஸ்தாபித்து மனம் வருந்தினார்:

 ‘பிரபல தலைவர்கள் என்று கருதப்படும் பல நபர்கள் கூட அரசியலில் ஆதாயம் தேட முனைந்து விட்டார்கள் என்று என்னிடம் புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன (அப்போது நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இயங்கிவந்தது).

காங்கிரஸ்காரர்கள் எவ்வாறெல்லாம் நாணயமற்ற வழிகளில் இறங்கிவிட்டார்கள் என்று விவரிக்கும் கடிதங்கள் வரப்பெற்றுள்ளேன். இவ்வாறு தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால் ஒரு நாள் அவர்கள் கொதித்தெழுவதை நம்மால் தடுக்க முடியாது' என்று எச்சரித்தார்.

ஊழல் விவகாரங்களினின்று காங்கிரஸ் ஸ்தாபனத்தை மீட்டு, நேர்மைமிக்க ஆட்சிமுறையைக் கடைப்பிடிக்கச் செய்யும் முயற்சியாகவே மகாத்மா காந்தி 29.1.1948 அன்று பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் வரைந்தார்:

 ‘இன்று வரையிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு,  ‘லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் புதிதாய் மலரச் செய்ய வேண்டும்' என்ற தொடக்கத்துடன் அப்புதிய அமைப்புக்கான விதிமுறைகளையும் மேலோட்டமாகப் பட்டியலிட்டார். ஆனால் அச் சாசனத்தைத் திருத்தமாய் அமைத்து விளக்கங்களுடன் வெளியிட அவகாசமின்றி விதி குறுக்கிட்டு விட்டது. மறுநாள் (30.1.1948) மாலையில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.

லோக் சேவக் சங்கப் பணிகள் கிராமப்புறங்களிலிருந்து தொடங்கி மாநில அளவில் விரிந்து சமூக, பொருளாதார, அரசியல், கல்வி தளங்களில் மக்களுக்குச் சேவை புரியும். அரசியலில் ஆர்வமுள்ள, நேர்மைமிக்க சங்க உறுப்பினர்களை தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கி அவர்களுக்கு லோக் சேவக் சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்பதே காந்திஜியின் நோக்கம் என்று அவர் கடைசி வாரத்தில் பேசி, எழுதிய வாசகங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. இது கிட்டத்தட்ட ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் - பாரதிய ஜனதா கட்சி உறவு முறை போன்றது எனலாம்.

நரேந்திர மோடி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  ‘நான் ஒரு ஹிந்து தேசியவாதி' என்று கூறியதைக் கேட்டு பார்த்தீர்களா? ஹிந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி என்றெல்லாம் இப்போதே வகுப்புவாதம் பேசக் கிளம்பிவிட்டார்' என்று காங்கிரஸ் பத்திரிகைத் தொடர்பாளர் அறிக்கை விடுத்தார்.

ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகாத்மா காந்தி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "நான் முதலாவதாக ஓர் ஹிந்து; அதன் பின்னரே தேசியவாதி' என்று தமது "யங் இந்தியா' வார இதழில் 1922ஆம் ஆண்டிலேயே அறிவித்துள்ளார்.

அதனை மேலும் விளக்குகையில்,  ‘நான் இவ்வாறு கூறுவதால் தேசப்பற்றில் எந்த ஒரு மிகச்சிறந்த தேசியவாதிக்கும் சளைத்தவன் அல்ல. நான் சொல்லவருவதின் தாத்பரியம் என்னவென்றால், நம் நாட்டின் நலனும் எனது மதமும் இரண்டறக் கலந்த ஒன்றே ஆகும் என்பதே'.

அயோத்திக்கு அருகிலுள்ள ஃபெயிஸாபாத் நகரில் நடந்த நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார மேடையின் பின்புறம் ஸ்ரீராமர் உருவப்படம் தாங்கிய பெரிய "பேனர்' வைக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்தது. "மதச் சின்னங்களை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்துவது கமிஷனின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே பா.ஜ.கவின் கட்சி அருகதையை ரத்து செய்ய வேண்டும்' என்று காங்கிரஸ் சட்ட இலாக்கா செயலர் முறையீடு செய்தார்.

ஆனால், ராமர் இந்திய மக்கள் அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர் என்று காந்திஜி 1909ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க இந்திய சமூகத்தினரின் பிரதிநிதியாக பாரிஸ்டர் காந்தி லண்டனில் நான்கு மாத காலம் தங்கியிருந்தபோது அங்குள்ள இந்தியர்கள் விஜயதசமி தினத்தையொட்டி அக்டோபர் 24 (1909) அன்று லண்டனில் உள்ள ஓர் இந்திய உணவு விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். பணம் செலுத்திப் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி அது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் எல்லோருமாக சுமார் 70 பேர் கூடியிருந்தனர். அழைப்பின்பேரில் சில ஆங்கிலேயர்களும் வந்திருந்தனர். பாரிஸ்டர் காந்தி அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். காந்திஜி தமது தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்:

 ‘ஸ்ரீராமச்சந்திரர் ஓர் சரித்திர மகா புருஷர்' என்ற நோக்கில் ஒவ்வொரு இந்தியனின் மதிப்புக்கும் கெüரவத்துக்கும் உரித்தானவர். இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள் யாராகட்டும், அனைவரும் தாம் "ஸ்ரீராமச்சந்திர பிரபுவைப் போன்ற மாமனிதரைத் தோற்றுவித்த தேசத்தின் பிரஜை' என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். மகத்தான இந்திய புண்ணிய புருஷர் என்கிற வகையில் ஸ்ரீ ராமனுக்கு மட்டிலா மரியாதை செலுத்த ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டவர்.

இந்துக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கடவுள். ராமச்சந்திரனையும், சீதா தேவியையும், லட்சுமணனையும் பரதனையும் இந்தியா திரும்பவும் தோற்றுவித்தால் பாரத தேசம் விரைவில் வளம் கொழிக்கும் நாடாகப் பரிணமிக்கும்'.

 ‘வந்தே மாதரம்' எனும் தேசிய எழுச்சி கோஷம் 1904-5இல் வங்க மாகாணப் பிரிவினையின் போது உதித்து இந்தியா பூராவும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முழக்கமாக ஒலிக்கத் தொடங்கியது. தேசிய தாரக மந்திரமாக மலர்ந்தது.

அப்பாடல் முழுவதும் தேசிய கீதமாகக் காங்கிரஸ் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் இசைக்கப்படலாயிற்று. ஆனால் அது ஹிந்து உருவ வழிபாட்டுப் பாடல் என்று முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியோ அத் தேசிய கீதம் எல்லோராலும் பாடத்தக்கது என்றார்.

வந்தே மாதரம் பாடலே சுதந்திர இந்தியக் குடியரசின் தேசிய கீதமாக ஏற்கப்படும் என்று காந்தி வெகுவாக எதிர்பார்த்தார். ஆனால் 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்ற தாற்காலிக பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டபோது, முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, வந்தே மாதரம் பாடலுக்கு பதிலாக தாகூர் இயற்றிய  ‘ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்கலாம் என நேரு சிபாரிசு செய்தார்.

 ‘ஜன கண மன இசையமைப்பு நமது தேசிய கீதமாக ஏற்கப்படுகிறது; அதே சமயம்,  ‘வந்தே மாதரம்' பாடலும் அதற்கு சரிநிகரான அந்தஸ்துடன் போற்றப்படும்' என்று சபைத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் அறிவித்து, அத்தீர்மானம் வோட்டெடுக்கப்படாமலேயே ஏற்கப்படுவதாகக் கூறி கூட்டத்தைச் சட்டென முடித்தார்.

இவ்வாறு தேசியத்தையோ, பாரதப் பண்பாட்டின் மாண்பையோ, நீர் - நிலவளங்களையோ போற்றி ஒரு அட்சரங்கூட இல்லாத ஜன கண மன பாடல் ‘தேசிய கீதமாக' நம் மீது திணிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசியக் கொடியிலும், கைராட்டைச் சின்னம் இருந்து வரும் என்று மகாத்மா காந்தி எதிர்பார்த்தார்.  ‘கைராட்டை வெறும் மரக்கட்டை அல்ல';  ‘அது அகிம்சையின் குறியீடு';  ‘போற்றலின் படிமம்; வீரத்தின் அடையாளம்';  ‘நம்மையும் எளிய மக்களையும் இணைக்கும் உயிர்ப்புள்ள பிணைப்பு' என்றெல்லாம் அறிவுறுத்தி வந்தார்.

ஆனால், அந்தோ, காங்கிரஸ் தனது கட்சிக் கொடியிலும் கூட கைராட்டைச் சின்னத்தை அகற்றி, கைச் சின்னத்தைப் பதித்து அழகு பார்த்தது. அவ்வெறுங் கை அவர்களுக்குக் கை கொடுக்காமல் அவர்களைக் கைவிட்டு விட்டது!

நன்றி: தினமணி (03.06.2014)
.




7.3.14

வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

 -லா.சு.ரங்கராஜன்




 தில்லையாடி வள்ளியம்மை
(பிப்ரவரி 22, 1898 - பிப்ரவரி 22, 1914)

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.
அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.

அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.

மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.

அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கிச் சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை. அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

வள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913-இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

இவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை மாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில் தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.

சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற
நேர்ந்தது.

அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:

"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.

"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.

"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.

"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள். 

அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்' 

(சுயசரிதம், அத்தியாயம் 40).

வள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது  ‘இந்தியன் ஒபீனியன்' வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், "அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார். இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.

காந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து குவிந்தன.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி  ‘இந்தியன் ஒபீனியன்' (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: "மறைந்த என் தமையனார் தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது..”

தில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். 

இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, "இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண்! நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண்முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல்நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்...” என்று கூறினார்/
(‘இந்தியன் ஒபீனியன்' கோல்டன் நம்பர், 1914).

ஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, "வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர்; இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் சிறைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்?' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில்  ‘வள்ளியம்மாள் மண்டபம்' ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.

இதுகுறித்து தனது  ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: "வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்'.

ஆம்! அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான் செய்கிறது.

.

குறிப்பு: கட்டுரையாளர், காந்திய அறிஞர்.
இந்த ஆண்டு தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு ஆண்டு.

நன்றி: தினமணி (22.02.2014)

காண்க: தில்லையாடி வள்ளியம்மை (விக்கி)

இதையும் காண்க: காந்தியைக் காத்த தமிழ்ப்பெண் (தேசமே தெய்வம்)

 .

16.10.13

'பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்'

சிந்தனைக்களம்                     -லா.சு.ரங்கராஜன்


"பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்திஜி பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தியாவின் வருங்கால அரசியல் அமைப்பு பற்றி விவாதித்து முடிவு காண்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 1931 செப்டம்பர் மாதம் லண்டனில் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டைக் கூட்டியது. மாநாட்டில் மொத்தம் 112 பிரதிநிதிகள். அதில் கலந்துகொள்ள இந்திய தேசிய காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக மகாத்மா காந்தி லண்டன் சென்றார்.

காந்திஜியைத் தவிர்த்து இந்திய தரப்பில் சென்ற மற்ற அனைவரும் வைஸ்ராயால் நியமனம் பெற்றவர்கள். சுமார் மூன்று மாத காலம் (1931 செப்டம்பர் 7 முதல் 1931 டிசம்பர் முதல் தேதி வரை) நடைபெற்ற அம் மாநாட்டிலும் அதன் தனிக் குழுக்களின் கூட்டங்களிலும் இழுபறி நிலைதான் மிஞ்சியது. இந்தியப் பிரதிநிதிகளிடையே சமரச முடிவுக்கோ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ இடமில்லாமற் போயிற்று. இந்தியப் பிரதிநிதிகள் அவரவர் சிறுபான்மையினரின் உரிமைக் கோரிக்கைகளை முன்வைப்பதிலேயே காலம் கடத்தினர்.

வட்டமேஜை மாநாட்டில் கூட்டாட்சி முறை பற்றி சாங்கி பிரபுவின் தலைமையில் நடந்த கமிட்டி விவாதத்தின்போது பேசிய காந்திஜி, "காங்கிரûஸப் பொறுத்தவரை அதன் வேட்பாளர் பட்டியலில் மாதர் உள்பட எல்லாப் பிரிவினருக்கும் கூடியவரை பிரதிநிதித்துவம் வழங்கப்படும்' என்று கூறினார். அதனைக் குறிப்பிட்டு, மாதர் பிரதிநிதிகளுள் ஒருவராக வந்திருந்த ராதாபாய் சுப்புராயன் (டாக்டர் பி. சுப்புராயனின் மனைவி) சில கேள்விகளை எழுப்பினார். மாநாட்டு நடவடிக்கை அறிக்கையில் அது பற்றிக் கண்டுள்ள அதிகாரபூர்வமான வாசகத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

ராதாபாய் சுப்புராயன்: மகாத்மா காந்தியிடம் வினயத்தோடு ஒரு கேள்வி எழுப்பட்டுமா? மாதர்களின் நிலைபற்றி நீங்கள் குறிப்பிடுகையில், மத்திய சட்டசபையில் பெண் உறுப்பினர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்கிற நிலை ஏற்பட்டால் அப்போது தகுதி வாய்ந்த சில பெண்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான ஷரத்து வருங்கால சட்டமன்ற விதிப்பட்டியலில் இடம்பெறுமா?

காந்திஜி: மகளிர் யாருமே தேர்ந்தெடுக்கப்படாத அல்லது அவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அற்ற சட்டசபையை நான் நிச்சயம் பகிஷ்கரிப்பேன். இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் நான் இதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். வருங்கால சட்டமன்றங்களில் மகளிருக்கு போதிய இடமளிக்க முழு ஆதரவும் காப்புறுதியும் தர தயங்க மாட்டோம். அதனை அமல் செய்வது மிக மிக எளிது. ஆனால் அதன் பொருட்டு மகளிர்க்காக ஒரு தனித் தேர்தல் தொகுதி அமைப்பதற்கு நான் ஒப்ப மாட்டேன்.

ராதாபாய் சுப்புராயன்: தனித் தொகுதி தேவையில்லைதான். ஆனாலும் பொதுத் தேர்தலில் ஓரளவுகூட பெண்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலை ஏற்பட்டால், மத்திய சட்டமன்றமே சில மாதர்களைத் தேர்ந்தெடுத்து, கூட்டு உறுப்பினர்களாக நியமிக்க வழி வகுப்பீர்களா?

காந்திஜி: அப்படியேதான்! தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றமே போதிய மாதர் பிரதிநிதிகளை வெளியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான தனி அந்தஸ்தை மகளிர் பெறுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத வரையில் சட்டமன்ற நடவடிக்கைகளை தொடர முடியாது என்கிற நிலை ஏற்பட வேண்டும்.

***

இந்தியா சுதந்திரம் பெறுவது நிச்சயமான 1946 இறுதியில் அண்ணல் காந்தி தமது வாராந்தர ’அரிஜன்' (7-4-1946) இதழின் கேள்வி - பதில் பகுதியில் மாதரின் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி இவ்வாறு விளக்கியுள்ளார்:

வாசகர் கேள்வி: "தேர்தல் அமைப்புகளில் பெண்களை அதிக அளவில் தேர்வு செய்ய காங்கிரஸ் தயக்கம் காட்டுவதைக் காண்கிறேன். பல்வேறு அமைப்புகளிலும் பெண்கள் பங்கு பெறுவது மிக அவசியமும் நியாயமானதும் ஆகும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இந்தப் பிரச்னையை நீங்கள் எவ்வாறு கையாளப் போகிறீர்கள்?''

பதில் (காந்திஜி): "சரிசமமான பிரதிநிதித்துவத்திலோ விகிதாசார நிர்ணயத்திலோ எனக்கு எவ்வித மோகமும் இல்லை. தகுதி ஒன்றே தேர்வின் உரைகல்லாக இருத்தல் வேண்டும். இருப்பினும், மாதரை இகழ்ச்சிக்கு உள்ளாக்கும் வழக்கம் இருந்துவருவதால் அதற்கு நேர்எதிர்மறையான வழக்கத்தைப் பழக்கத்தில் புகுத்த வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஆண்களுக்கு நிகராகத் தகுதி படைத்த பெண்களுக்கே எந்த ஒரு தேர்தலிலும் காங்கிரஸ் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பேன். அதன் விளைவாக ஆண்களே இல்லாமல் முழுக்க முழுக்கப் பெண்களே சட்டமன்ற அமைப்புகளில் இடம்பெறுவதானாலும் கூட ஒன்றும் பாதகமில்லை. இருப்பினும், பெண் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒரு அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பெண் வலியுறுத்துவது ஆபத்தான சமாசாரம்.

பெண்களாகட்டும், அல்லது வேறு எந்தப் பிரிவினராகட்டும், தனிச்சலுகைகள் பெறுவதை அவர்களே ஏளனமாகக் கருதி மறுக்க வேண்டும். அவர்கள் நியாயத்தை நாட வேண்டுமே தவிர, அனுகூலச் சலுகைகளை அல்ல. ஆகவே, பெண்கள் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை - ஏன்? ஆண்கள் கூடத் தான் - மகளிரிடையே அவரவர் தாய்மொழி வாயிலாய்ப் பொதுக் கல்வியறிவைப் புகட்டிப் பரப்பி, குடிமகளிருக்கான பல்வேறு கடமைகளை உணர்த்தி, பொதுவாழ்வில் பெண்கள் போதிய தகுதி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசியமான இந்த பெண் நலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஆண்களே முதன்மை வகிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். அது ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் ஆதரவுச் செயல் என்ற வகையில் நான் இவ்வாறு கூறவில்லை; மாறாக, பெண்களுக்கு என்றோ சேர்ந்திருக்க வேண்டிய நியாயத்தை இப்போது காலங்கடந்த நிலையிலாவது வழங்க ஆண்கள் முன்வர வேண்டும் என்பதே ஆகும்''.

***

இந்திய மாதரின் நிலைமையை உயர்த்துவதில் மகாத்மா காந்தியின் மகத்தான பங்களிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? தேசிய போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பது காந்திய சத்தியாக்கிரக இயக்கத்தின் ஓர் அம்சம். 1930 மார்ச் 12 அன்று தொடக்கம் பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சட்டமீறல் நடவடிக்கையின் பெயரில் சுமார் 30,000 பேர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு தண்டனைகளுக்கு உள்ளாகினர். அவர்களுள் 17,000 பேர்கள் பெண்கள் என்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சென்னையில் 1946 ஜனவரி 27 அன்று நடைபெற்ற நிர்மாணத்திட்ட ஊழியர் மாநாட்டில் காந்திஜி பேசியபோது ஒரு புதிய கருத்தை வெளியிட்டார். அதாவது, பஞ்சாயத்துத் தேர்தல்களிலோ சட்டமன்றத் தேர்தலிலோ நிற்கும் பெண் வேட்பாளர்கள், மக்களின் பொது நலனையே பொதுக் குறிக்கோளாக ஒருமித்து ஏற்று இணைந்து, கட்சி வேறுபாடுகளைத்  தவிர்த்து, மக்கள் நலனையே கருத்தில் இறுத்தி சட்டமன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

’பெண்களின் நிலை' என்ற தலைப்பில் அண்ணல் காந்தி 1929-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், "பெண்கள் தியாகத்தின் வடிவம்; பொறுமையின் பெட்டகம். அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடுகையில், தூய்மை மேலோங்கும். சொத்துக் குவிப்புப் பேராசையும், வரம்பு கடந்த புகழார்வத்தையும் கட்டுப்படுத்தும்'' என்றார்.

இறுதியாக, 1947 ஏப்ரல் 7 அன்று புது தில்லியில் அவரைச் சந்தித்த சாந்திநிகேதன் மாணவியருடன் உரையாடியபோது காந்திஜி கூறினார்: நமது சாத்திரங்கள் மாதரை ’அர்த்தாங்கினி’ (மானிடனின் சரிபாதி அங்கம்) என்று அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தில் குறிப்பிடுகின்றன. ஆனால் ஆண்களோ பெண்ணை ஏதோ விளையாட்டுக் கருவியாகப் பாவிக்கின்றனர்; அடிமை போல நடத்த முற்படுகின்றனர். பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது; ஆண் மகவு பிறந்தாலோ வீடு பூராவும் விழாக் குதூகலிப்புத்தான்! இந்தத் தீங்கான மனப்பான்மை ஓயும்வரை முன்னேற்றம் ஏதும் காண்பது அரிது'' என்று சாடினார்.

அந்த உரையாடலின்போது காந்திஜி மேலும் கூறினார்: "பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்வது, அவர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்களை நாள்தோறும் கேள்விப்படுகிறோம். அத்தகைய இழிவான நிகழ்வுகள், நாம் எவ்வளவு தூரம் வெட்கங்கெட்டு, கயமை தோய்ந்து, மிருகத்தினும் கேடு கெட்டவர்களாகிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன'' என்று கடிந்துரைத்தார்
(’கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி', நூல் 87 - பக். 229-230).

சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை காந்திஜி 1921-ஆம் ஆண்டிலேயே தமது ’நவஜீவன்' கட்டுரையொன்றில் பட்டியலிட்டுள்ளார். சுயராஜ்யத்திற்கான இரு முக்கிய நிபந்தனைகளாவன: "சுயராஜ்யம் என்றால் ஒவ்வொரு மாதரையும் தமது அன்னையாகவோ, சகோதரியாகவோ பாவித்துப் போற்றி மதிப்பளிக்க வேண்டும்; மேலும், என்றைக்கு ஓர் இளம் பெண் நள்ளிரவில் அச்சமேதுமின்றி தன்னந்தனியாக எங்கும் நடமாட முடிகிறதோ அன்றே பூரண சுயராஜ்யம் பெற்றவர்களாவோம்'', என்றும் விளக்கம் அளித்துள்ளார்..
(நவஜீவன்'; 14-8-1921).

சுதந்திர இந்தியாவின் சட்டசபைகளில் பெண்களுக்குப் போதிய இடம் அளிக்கப்பட வேண்டும். பெண்கள் தன்னந்தனியாக பயமின்றி நள்ளிரவிலும் செல்லும் நிலை ஏற்பட வேண்டும் என்கிற அண்ணல் காந்தியின் எதிர்பார்ப்புகள், இன்றைய இந்திய மகளிர் அனைவரின் அபிலாஷையும்கூட. அவை நிறைவுபெறும் பொன்நாள் எந்நாளோ?

நன்றி: தினமணி 

1.4.13

காங்கிரஸைக் கலைக்க காந்திஜி விரும்பினாரா?

சிந்தனைக் களம்               -லா.சு.ரங்கராஜன்

மகாத்மா காந்தி பிராணத் தியாகம் புரிவதற்கு முந்தைய தினம் (29-1-1948) பிற்பகலில் அவசர அவசரமாக ஒரு சாசனம் எழுதினார். "இன்று வரையிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் ஸ்தாபனத்தைக் கலைத்துவிட்டு, 'லோக் சேவக் சங்கம்' என்ற பெயரில் அதனைப் புதிதாய் மலரச் செய்ய வேண்டும். அப்புதிய அமைப்புக்கான விதி முறைகளாவன...''

இந்த அறிமுக வாக்கியத்தின் விளைவாகத் தான், "காங்கிரஸின் ஒரே நோக்கமாம் இந்திய பூரண சுதந்திரம் கிட்டிவிட்டதால், காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, அரசியலை அறவே தவிர்த்து 'லோக் சேவக் சங்கம்' என்ற புதுப்பெயரில் சமூக ரீதியில் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே காந்திஜியின் கடைசி விருப்பம்'' என்று பெரும்பாலான ஆய்வாளர்களும் காந்திய அறிஞர்களும் கூறி வருகிறார்கள். இது தவறான கருத்து என்பது அண்ணல் காந்தி இறுதி நாள்களில் ஆற்றிய பேச்சுகளிலிருந்தும் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது.

அந்த இறுதி சாசனத்தை எழுதுகையில், "எனக்குத் தலை சுற்றுகிறது; இருப்பினும் இதை இன்றே எழுதி முடித்தாக வேண்டும். அதற்காக இரவு வெகுநேரம் விழித்திருக்க நேரிடும்'' என்று தமது பெண் உதவியாளர் 'அபா'விடம் காந்திஜி கூறியதாக, அவரது அந்தரங்கச் செயலர் பியாரி லால், 'அரிஜன்' இதழில் பின்னர் வெளியான கட்டுரையில் பதித்துள்ளார்.

மறுநாள் (30 ஜனவரி 1948) காலை, காந்திஜி அந்த முன்வரைவு சாசனத்தைப் பியாரி லாலிடம் கொடுத்து, ''இதனைக் கவனமாகப் படித்து, ஆவன திருத்தங்கள் செய்து, விட்டுப்போன விஷயங்களையும் சேர்த்துத் திருத்தமாய் அமைத்துத் தயார் செய்; நான் இதை மிகக் களைப்புடன் சிரமப்பட்டு எழுதியுள்ளேன்; ஆகையால் மேலும் திருத்தமாய் அமைக்க வேண்டிவரும்'' என்று பணித்தார். பியாரிலால் அவ்வாறே அதைப் படித்து, சில வாசகங்களைத் திருத்தி, அன்று நடுப்பகலிலேயே காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஆசார்ய ஜுகல் கிஷோரிடம் கொடுத்தார். அவர் அதை காந்திஜியின் மறைவுக்குப் பிறகு பத்திரிகைகளில் பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தார். 
 ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 526 - 528).

ஜவாஹர்லால் நேரு, 1934-இல் ஃபெயிஸ்பூர் காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் பேசுகையில், "காந்திஜி காங்கிரஸில் இருக்கிறாரோ இல்லையோ, எதுவாயினும் அவர்தான் காங்கிரஸின் நிரந்தர சூப்பர் அக்கிராசனர்'' என்று புகழ்ந்துரைத்தார்.

(தமது முழு கவனத்தையும் அகில இந்திய கிராமிய கைத்தொழில் அபிவிருத்திக் கழகத்திற்கும் அரிஜன சேவைக்கும் செலவழிக்கும் பொருட்டு காந்திஜி 1934-இல் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்தார்).

1920 முதற்கொண்டு தாம் பேணி வளர்த்து, சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய 'சூப்பர் பிரசிடண்ட்' மகாத்மா, அப் பழம்பெரும் தேசிய ஸ்தாபனத்திற்கு முடிவுகட்டத் திட்டமிடுவாரா என்பதே கேள்வி.

''காங்கிரûஸக் கலைக்க வேண்டும்'' என்ற சொற்களை காந்திஜி அதன் நேரடி அர்த்தத்தில் கூறவில்லை என்பது அன்னார் அதற்கு இரண்டே நாள்களுக்கு முன் (ஜனவரி 27 அன்று) எழுதி, 'அரிஜன்'' (பிப்ரவரி 1, 1948) இதழில் வெளியான அவரது கடைசியோ கடைசி கட்டுரையிலிருந்து தெளிவுறத் தெரிய வருகிறது. அதன் வாசகம் பின்வருமாறு:

"இந்திய தேசிய காங்கிரஸ் நம் நாட்டின் தொன்மை வாய்ந்த தேசிய அரசியல் ஸ்தாபனமாகும். அது அகிம்சை வழியில் பல தேசிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. அந்த மகத்தான அமைப்பு மடிந்துபோவதை எவரும் அனுமதிக்க முடியாது. இந்த தேசமே அழியும்போதுதான் காங்கிரஸும் மாண்டு போகக்கூடும். அத்தகைய உயிர்ப்பான ஸ்தாபனம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகுமே தவிர, ஒருபோதும் ஒடுங்கி மடிந்து போகாது.

காங்கிரஸ் நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளது. ஆயினும், பொருளாதாரச் சுதந்திரம், சமூக மற்றும் தார்மிக சுதந்திரங்களையும் ஈட்டித்தரக் கடமைப்பட்டுள்ளது. இச் சுதந்திரங்கள் விடுதலைப் போராட்டம் போன்று அவ்வளவு எழுச்சிகரமானவையோ காட்சிப் பகட்டானவையோ அல்ல என்பது என்னவோ உண்மையே. இருப்பினும் இவை அரசியல் சுதந்திரத்தைக் காட்டிலும் அகல விரிவானவை, அத்தியாவசியமானவை, ஆக்கப்பூர்வமானவை. அச் சுதந்திரங்களைப் பெற கோடானுகோடி மக்கள் அனைவரையும் காங்கிரஸ் அரவணைத்து ஊக்குவிக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற பட்டியல் பதிவேடுகள் தேவையில்லை. இப்போது ஒரு கோடி உறுப்பினர்கள் பட்டியலில் இருக்கக்கூடும். அவர்கள் யார் யார் என்று யாருக்கும் தெரியாது! அவர்களைத் தவிர எத்தனையோ கோடி ஆண் - பெண்களும் காங்கிரஸ் ஆர்வலர்கள், அபிமானிகள்தாம். இருப்பினும், மக்கள் நலத்தில் ஈடுபாடுள்ள காங்கிரஸ் ஊழியர்கள் என்ற தனிப்பட்டியல் தயாரிக்கலாம். அத்தகையோர், காங்கிரஸ் கமிட்டி இடும் நிர்மாணப் பணிகளை ஏற்றுச் செயல்படக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். எனக்கு மட்டும் நேரமும் போதிய உடல் நலமும் இருந்தால், அச் சேவகர்களும் தலைவர்களும் தன்னலமற்ற சமூகப் பணிகளால் பொது மக்களின் ஆதரவுக்கும் மதிப்புக்கும் எவ்வாறு பாத்திரமாக்கிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியெல்லாம் மென்மேலும் விரிவாகப் பேசி, எழுதி, விவாதிக்க விரும்புகிறேன்'' ('அரிஜன்' - 1-2-1948).

இதன் பின்னணியிலே தான் காங்கிரஸ் சாசனத்தைத் திருத்தியமைப்பதற்கான தமது 1948, ஜனவரி 29 தேதியிட்ட பூர்வாங்கத் திட்ட வரைவில் அதற்கான விதிமுறைகளை வகுத்தளித்தார். அவற்றின் படு சுருக்கம் இதுதான்: "ஒவ்வொரு கிராமத்திலும் அக் கிராமத்தார்கள் அல்லது கிராம முன்னேற்ற மனப்பான்மை கொண்ட ஆண் - பெண் ஐந்து பேர் பஞ்சாயத் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்தடுத்த இரு பஞ்சாயத்துகள் இணைந்து ஒரு செயற்குழுவையும் தலைவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு நூறு பஞ்சாயத்துகள் ஒருங்கிணைந்து ஒரு முதல்மட்டத் தலைவரையும், இரண்டாம் மட்டத் தலைவரையும் தேர்வு செய்வர். இவ்வாறு மாகாணவாரியாக இந்தியா பூராவும் மக்களின் மதிப்பைப் பெற்ற 'லோக் சேவக் சங்க'த் தலைவர்கள் செயல்படுவார்கள். தவிர, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் சேவக- சேவகிகள் நியமனம் பெறுவர். அவர்களுக்கும், ஏனைய தலைவர்களுக்குமான தகுதிகளாவன: வழக்கமாகக் கதர் அணிபவராக இருக்க வேண்டும்; மது - லாகிரி வஸ்துகள் அருந்தலாகாது; மத நல்லிணக்கம் பேண வேண்டும். இந்துவாக இருந்தால் எந்த வடிவிலும் தீண்டாமை பாராட்டலாகாது போன்றவை'.

1947 டிசம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்மாணத்திட்டக் குழுவினருடன் கலந்துரையாடியபோது காந்திஜி இவ்வாறு பட்டவர்த்தனமாகக் கூறினார்:

"இன்று அரசியலில் ஊழல் ஊடுருவிவிட்டது. அரசியலில் எவர் புகுந்தாலும் தூய்மைகெட்டுக் கறைபடுகிறார். நிர்மாணத் திட்ட ஊழியர்களான நாம் அரசியலினின்றும் அறவே விலகியே நிற்க வேண்டும். அப்போதுதான் நமது செல்வாக்கு உயரும். நமது அகத்தூய்மை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எவ்வித முயற்சியுமின்றி நாம் மக்களை நம் வசமாக்கிக்கொள்ள முடியும்.

வயது வந்தோர் அனைவருக்கும் வோட்டுரிமை கிடைத்துள்ள இன்றைய சூழலில் நாம் மட்டும் சமூகநலத் திட்டங்களில் கண்ணுங்கருத்தும் செலுத்தி நேர்மையுடன் நடந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றோமானால் நாம் எவரை வேட்பாளராக நிறுத்தி வைக்கிறோமோ அல்லது ஆதரிக்கிறோமோ, அவரே தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்''.

காந்திஜி மேலும் கூறினார்: "பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடத்திய விடுதலைப் போராட்டத்தின்போது நாம் பின்பற்றியது பெயரளவில்தான் அகிம்சை வழிமுறை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். உண்மையில் அது அகிம்சை வழி அல்ல. கடவுள் அப்போது என் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் ஆக்கிவிட்டார். நடக்க வேண்டியதை என் மூலம் நிகழ்வித்தார். காரியம் நடந்தேறிய பிறகு இப்போது என் கண்களைத் திறந்துவிட்டார். விரிந்த கண்களுடன் 'இனி செய்யவேண்டியது என்ன?' என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். லஞ்ச ஊழலை, நடைச் சீரழிவை, அவை எங்கிருந்தாலும் சரி, ஒழித்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நீங்கள் எந்தக் கமிட்டியிலும் சேர வேண்டியதில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டியதில்லை. பாமர மக்களிடையேதான் உங்கள் பணி காத்துக் கிடக்கிறது'' ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 215 - 221).

கடைசி உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் (1948 ஜனவரி 16 அன்று) ஆசிரமவாசி ஒருவருக்குக் காந்திஜி எழுதிய நீண்ட கடிதத்தில், "காங்கிரஸ் இப்போதும் ஓர் மகத்தான தேசிய அரசியல் ஸ்தாபனமே ஆகும். வருங்காலத்திலும் அது அவ்வாறே இருந்துவரும். ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் அமரும்போது அது அரசியல் கட்சிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது'' என்று கூறியுள்ளார். ('கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி' நூல் 90, பக்கம் 434).

காந்திஜியின் வாசகங்களிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது: "இந்தியர்கள் அனைவரையும் நிபந்தனைகளின்றி காங்கிரஸ் உறுப்பினர்களாக அரவணைத்துக் காங்கிரஸின் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும். இருப்பினும், கள ஊழியர்கள், பலமட்டத் தலைவர்கள் அடங்கிய "லோக் சேவக் சங்க' காங்கிரஸ் கிளையினர், நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாகவும், நேர்மையும் நாணயமும் வாய்ந்தவர்களாகவும் இருத்தல் அவசியம். அவர்களில் எவரும் ஆதிக்க அதிகாரத்திற்கு ஆசைப்படாமல், அன்பின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களுள் அரசியல் ஆர்வம் கொண்ட அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர்கள் / காரிகள், லோக் சேவக் சங்கத்தின் ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுவர்'.

இதன் அடிப்படையில், வேறு கட்சியைச் சார்ந்த அல்லது சுயேச்சையாளர்கள் தகுதி நிறைந்தவராகவும் குணசீலராகவும் இருப்பின் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியின்றி காங்கிரஸ் ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் ஊகிக்க இடமுள்ளது.

இவ்வாறு, மகாத்மா காந்தி 1947 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுபோல, "காங்கிரஸ் ஸ்தாபனம் மத்திய அரசின் ஓர் கண்காணிப்பு அமைச்சகம் போன்று செயல்படும்'' இதுவே அவரது கடைசி சாசனத்தின் நோக்கம்.
- தினமணி (06.03.2013)

17.12.12

பெயரில் என்ன இருக்கிறது?



"காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் 'ஹரிஜனங்கள்' என்று பெயர் சூட்டுவானேன்?'' என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.

 வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா' என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 "முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர் மிகச் சிறந்த அமைப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது என்பது முற்றிலும் உண்மையே. அதேசமயம் அக்காலத்தில் எந்தப் பிரிவினர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு எழவில்லை. நான்கு வர்ணத்தினரும் சரிநிகர் சமானமானவர்களாகவே கருதப்பட்டனர். ஏனெனில், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அந் நான்கு பிரிவினரின் சரிநிகரான பணியும் சார்பு நிலையும் அத்தியாவசியமாக இருந்தன. ஆனால், போகப்போகப் பின் நாட்களில் உயர்வு - தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. இந்த மாற்றம் வர்ணாசிரம தர்மத்தை சின்னாபின்னமாக்கத் தொடங்கிற்று.

 அந்தணர்கள்  பிரும்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அடங்கிய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிவழியைக் கடைப்பிடித்த காலம் என்றோ மங்கி மறைந்துவிட்டது. இன்றைய குடும்பஸ்தர்களுக்கு பொருள் ஈட்டுவதும், சுகபோகங்களில் ஈடுபடுவதுமே அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைக் குறிக்கோளாகிவிட்டது''.

 காந்திஜி தமது முன்னுரையை இவ்வாறு முடிக்கின்றார்:

 "நவீன சகாப்தத்தில் ஒருவர்க்கொருவர் போட்டாபோட்டி போடுவதும், உலகாயத நாட்டங்களுமே வாழ்க்கையின் அம்சமாகிவிட்டன. எவரும் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் தேடிக் கொள்ளலாம் என்கிற தற்கால சூழ்நிலையில் வர்ணாசிரம முறை நடவாத காரியம்; சோம்பேறிகளின் பகற் கனவு. அந்நெறி முறையைத் திரும்பவும் உயிர்ப்பிக்கும் எண்ணம் குழந்தைத்தனமான மடமையே ஆகும்''.

 "ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்'' என்ற தலைப்பில் காந்தி மகான் தமது  'அரிஜன்' (16-11-1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில், "இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய  வர்ணாசிரம விதிமுறைகளுக்கு நேர்எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து, ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது'' என்று ஐயந்திரிபற வலியுறுத்தியுள்ளார்.

 மற்றொரு கட்டுரையில் காந்திஜி, "பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய ஜாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர்ஜாதி - கீழ்ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக வாழ்வை இழிவுபடுத்திவிட்டது'', என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார். ('அரிஜன்', 2-5-1936).

 'பிறப்பினால் தீண்டத்தகாதோர் என்று சாத்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை. மேலும், பண்டைய வர்ணாசிரம தர்ம நியதிகளில் கலப்புத் திருமணத்திற்கும், சமபந்தி போஜனத்துக்கும் தடைகள் இருந்ததில்லை; ஸ்மிருதிகளிலும் வேறு நூல்களிலும் அவை குறித்துக் காணப்படும் தடைகள் மத்திய கால இடைச் செருகல்கள்' என்பதும் காந்திஜியின் கருத்து. ('அரிஜன்', 16-11-1935).

 சேவாகிராம ஆசிரமப் பொறுப்பாளர் நரஹரி பரீக் என்பாருக்கு 1945 மே 6 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில் காந்திஜி, "தற்போது நிலவும் ஜாதி, உட்-ஜாதிப் பிரிவுகள் அகன்றபின், நாம் சற்றும் தயங்காமல் அதி - சூத்திரர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவே எனது அண்மைக்கால இறுதியான எண்ணம்.  இது ஒரு முக்கியமான கடிதம் - பிரதியெடுத்து நமது அலுவலகப் பதிவேட்டில் குறித்து வைக்கவும்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மகாத்மா காந்தி.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜனங்கள்' என்று 1931-இல் காந்திஜி பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்திஜி இவ்வாறு விளக்கம் அளித்தார்:

 "தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'எங்கள் குலத்தவர்களை  'அந்தியஜாஸ்' என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்த பங்கிகள்', 'பறையர்கள்' பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது! ஆகவே 'அந்தியஜாஸ்' (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.

 சுவாமி சிரத்தானந்தர் தான் முதன்முதலில் 'தலித்' என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால்,  தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும்வரை, எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள்' என்று 'நவஜீவன்' (7-6-1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர்.  ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினன், 'ஹரிஜன்' என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில், "பல கிராமங்களில் ஏற்கெனவே 'ஹரிஜனா' என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும், மிகச் சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் - கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்' என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

 ஆகவே, 'ஹரிஜன்' என்ற சொல் புதிதல்ல. குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெனவே புனையப்பட்டது. தவிர, 'சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே' என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது'' ('அரிஜன்' 7-6-1931).

 1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில், "ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா', என்பதே எனது பிரார்த்தனை.

 நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது'' என்று அறிவுறுத்தினார். ("தி ஹிந்து' 4-2-1946).

 "பெயரில் என்ன இருக்கிறது?'' என்ற தலைப்பில் தமது 14-4-1946 தேதியிட்ட 'அரிஜன்' வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்:

 "ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஓர் தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும், தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்றுவரை மிகமிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.

 ஒவ்வொரு இந்துவும் உயர்வு - தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக்கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழந்தைகளாகி விடுவோம். அதுவே 'ஹரிஜன்' என்பதன் மெய்ப்பொருள்.

- லா.சு.ரங்கராஜன்

- தினமணி (17.12.2012)



11.10.12

21-ம் நூற்றாண்டில் காந்தி

சிந்தனைக் களம்

 வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்த காந்தி ஜெயந்தி வாரத்தில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  'மாட்டு வண்டிப் பொருளாதாரம்' என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு - இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. "சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது'' என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

"சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது'' என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. "கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்'' என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

"மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். "மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, "சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்'' எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

"நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய - ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்'' (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: ""கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'' நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். 'அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்' என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: ""காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. "கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்'' என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்'' (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

"மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்'' என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், "மகாத்மா காந்தி - ஆன் இண்டர்பிரிடேஷன்'' எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ''உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.'' (ஆதாரம்: 'ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்' - ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (04.10.2012)
.

28.8.12

''என் வாழ்வே எனது செய்தி'' - மகாத்மா காந்தி

 சிந்தனைக்களம்


1947 புதுதில்லி சுதந்திரக் தினக் கோலாகலங்களைப் புறக்கணித்து மகாத்மா காந்தி கல்கத்தாவில் மதக்கலவரங்களினின்றும் அமைதி காக்கச் சென்று தங்கிய வரலாற்றை ஆதாரபூர்வமான விவரங்களுடன் அ. அண்ணாமலை தெளிவுபடக் கோத்தளித்துள்ளது ('தினமணி' 15-8-2012) சிலாகிக்கத்தக்கது.

 ஆகஸ்ட் 14 - 15 நள்ளிரவில் தலைநகரில் அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த அவைத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தமது தொடக்க உரையில், "சென்ற முப்பது ஆண்டுகளாக நமது சுதந்திர இயக்கப் பாதையில் வழிகாட்டும் பேரொளியாகத் திகழ்ந்து நம்மை வெற்றிச் சிகரத்துக்கு இட்டுச் சென்றவரும், தத்துவ தரிசியுமான மகாத்மா காந்தி நம் அனைவரின் மட்டற்ற மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரித்தானவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.

 அதையடுத்து ஜவாஹர்லால் நேரு தமது உணர்ச்சிகரமான பேருரையில் காந்திஜியை நினைவுகூர்ந்து இவ்வாறு பகன்றார்: இன்றைய தினம் நமது முதற்கண் நினைவுகள் இந்திய சுதந்திரத்தை நிர்மாணித்த சிற்பியான நமது தேசப்பிதாவையே சாரும்.

 பாரதப் பாரம்பரியத்தின் திருஉரு அவர். விடுதலை ஒளிப்பந்தத்தைத் தூக்கிப்பிடித்து நம்மைச் சூழ்ந்திருந்த காரிருளைக் களைந்து இந்தியாவை ஒளிமயமாக்கினார்.

 சென்ற காலத்தில் பல சமயம் நாம் அன்னாரது அறிவுரைகளினின்றும் பிறழி வழிதவறிச் சென்றோம். எனினும், நாம் மட்டுமல்ல, நமது வருங்காலச் சந்ததியரும் இந்தியத் தவப்புதல்வராம் மகாத்மா காந்தியின் அரிய அறிவுரைகளை இதயத்தில் பதிப்போமாக.

 திட நம்பிக்கையும், மன உரமும், துணிவும், அதேசமயம் பணிவும் ஒருங்கே திரண்ட மகோத்தமராகக் காந்திஜி திகழ்கிறார். புயல் வீசினாலும் அல்லது மழைகலந்த சூறாவளி குமுறினாலும் அவர் அளித்த சுதந்திர ஒளிப் பந்தத்தை நாம் ஒருபோதும் அணையவிட மாட்டோம்''.

 ஆகஸ்ட் 15 காலையில் சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற மவுண்ட்பாட்டன் பிரபு பின்வருமாறு அறிவித்தார்.

 "இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இனி நான் உங்கள் ஊழியன்.

 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அகிம்சை வழியில் இந்திய சுதந்திரத்தைச் செதுக்கி உருவாக்கிய மகாத்மா காந்திக்கு இந்தியா காலங்காலமாகக் கடமைப்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.

 அன்னார் இப்போது இங்கே நம்முடன் இருக்க இயலாமற்போனது நமது பேரிழப்பே ஆகும். அதைப்பற்றி நாம் எவ்வாறு வருந்துகிறோம். இங்கில்லாவிடினும் அவர் நம் அனைவரின் நினைவில் எத்துணை ஆழமாகப் பதிந்து நிலைகொண்டுள்ளார் என்பதை அவர் அறிவாராக...''

 கல்கத்தாவில் ஹைதரி மன்ஸில் என்ற பழைய கட்டடத்தில் தங்கியிருந்த காந்திஜி, சுதந்திர தினத்தை உபவாசம் அனுஷ்டித்தும், கைராட்டையில் நூல் நூற்றும் அமைதியாகக் கழித்தார். அந்நகரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

 மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் உயர் அதிகாரி காந்திஜியை அணுகி, பத்திரிகைகளில் பிரசுரிக்க அன்னாரது சுதந்திர தின அறிக்கை அல்லது செய்தி வேண்டினார். "என்னத்தைச் சொல்ல? நான் வெதும்பி வறண்டு போய்விட்டேன்'' என்று மறுதலித்தார் மகாத்மா. ""இத் தருணத்தில் உங்கள் ஆசிச்செய்தி இல்லையேல் அது நல்லதல்ல'' என்று அந்த அதிகாரி மன்றாடினார். "சொல்வதற்கு செய்தி ஏதுமில்லை; அது நல்லதல்ல என்றால் கெட்டதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!'' என்று தட்டிக்கழித்தார் அண்ணல் காந்தி.

 பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் (பி.பி.ஸி.) விசேஷ நிருபர் குரல் பதிவுக் கருவியுடன் அண்ணலை அணுகி "சுதந்திரதினச் செய்தி ஏதேனும் கூறுங்கள்; உங்கள் குரலிலேயே உலகமெங்கும் உடனடியாய் ஒலிபரப்புகிறோம்'' என்று கேட்டபோது காந்திஜி, "இம்மாதிரியான ஆசை காட்டலுக்கெல்லாம் நான் மசியமாட்டேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நீங்கள் மறந்துவிடத்தான் வேண்டும்'' என்று புன்முறுவிப் பதிலளித்தார்.

 இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1945 மே மாத இறுதியில் சிகாகோ டிஃபண்டர் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் அமெரிக்க நீக்ரோ பிரதிநிதி காந்திஜியைப் பேட்டி கண்டார். முடிவில், "சிறப்புச் செய்தி ஏதாகிலும் நீங்கள் அளியுங்களேன்?'' என்று விண்ணப்பித்தார்.

 அதற்கு காந்திஜி, "எனது வாழ்விலேயே என் செய்தி அடங்கியுள்ளது. அவ்வாறு இல்லையெனில், இப்போது நான் எதையும் புதிதாகச் சொல்வதினாலோ எழுதுவதினாலோ ஏதும் நிறைவுபெறப் போவதில்லை'' என்றார்!

 ஆம்! காந்திஜியின் வாழ்வே அவரது செய்தி. "அகிம்சை, அன்பு, சத்திய நாட்டம், எளிய வாழ்வு - உயரிய சிந்தனை, மத நல்லிணக்கம், அப்பழுக்கற்ற அரசியல், மக்களைப் பொருளாதார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்துதல், கடையனுக்கும் கடைத்தேற்றம்' இவையே அவரது வாழ்வின் சாரம். இவற்றை நாம் மனத்தில் இறுத்தி, கூடியவரை செயலில் கடைப்பிடிப்போமாக.


- லா.சு. ரங்கராஜன் 
நன்றி: தினமணி (28.08.2012)
 

8.8.12

செய் அல்லது செத்து மடி!

சரித்திரம்

ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே நாளில்தான் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' (குவிட் இந்தியா) தீர்மானத்தைப் பிரேரேபித்து நிறைவேற்றினார்.

அதோடு தேசமக்கள் அனைவருக்கும் ஓர் எழுச்சிமிகு அதிரடி மந்திர வாசகத்தையும் வழங்கினார். 'செய் அல்லது செத்து மடி' என்று அந்த கொதிப்புமிக்க வீர வாசகமே நாடெங்கும் ஆகஸ்ட் புரட்சியைப் பீறிடச் செய்தது.

1942 ஜூன் இறுதியில் இரண்டாம் உலக யுத்த நெருக்கடி நிலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தைத் திக்குமுக்காடச் செய்தது. பர்மாவை ஆக்கிரமித்துத் தலைநகர் ரங்கூனைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் இந்தியா - பர்மா எல்லை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்தன. ஏற்கெனவே சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணடைந்துவிட்டது. மேற்கே, வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமல் தலைமையிலான ஜெர்மானிய நாஜி ராணுவம் எகிப்தைக் கைப்பற்றி கிழக்கு நோக்கி முன்னேறியவண்ணம் இருந்தது.

ஜெர்மன்-ஜப்பான் படைகள் இந்தியாவில் சந்தித்து கைகோத்து வெற்றிகொண்டாடும் என யுத்த விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறினர். மலேயா, பர்மா நாடுகளிலிருந்து இந்திய அகதிகள் சாரிசாரியாக இந்தியாவுக்கு ஓடிவந்த வண்ணமிருந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பிரதேசங்களில் கொள்ளைக் கூட்டத்தினரின் அட்டகாசம் பெருகிற்று. பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம் வட்டாரங்களில் தானியப் பற்றாக்குறையால் கடும் பஞ்சம் உருவாகி வந்தது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அபாயம் நிலவியது.

இந்த இறுக்கமான நெருக்கடிச் சூழ்நிலையிலேதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி "இந்தியாவை விட்டு வெளியேறு'' - பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு உடனடியாய் விலக வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக பம்பாயில் ஆகஸ்ட் 7, 8 (1942) தேதிகளில் கூடியது.

அந்தத் தீர்மானத்தை முன்வைத்து மகாத்மா காந்தி முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் ஆற்றிய நீண்ட, உணர்ச்சிகரமான உரை, நம் நாட்டு மக்களை உலுக்கி உறைய வைத்தது. அவ்வுரையின் சில வாசகப் பகுதிகள்:

"உங்களைச் சோர்வினின்றும் தட்டி எழுப்பி, உண்மையான ஜனநாயக ஆட்சி பெறுவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் முன் பிரஸ்தாபிக்கிறேன். போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்; அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல. இயன்ற அளவு தியாகங்களால் உங்களது உறுதி படைத்த வலிமையை நிரூபித்தால் பிரிட்டிஷார் வேறு வழியின்றி நமக்கு சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும். என்னைப் பொறுத்தவரை அகிம்சை ஓர் அசைக்கவொண்ணா கோட்பாடு. ஆனால், நீங்கள் அகிம்சையை ஓர் அரசியல் கொள்கையாக மட்டுமே ஏற்கக்கூடும். கட்டுப்பாடான போர் வீரர்கள் போன்று நீங்கள் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து, அதனின்றும் சிறிதும் பிறழாமல் இந்த இறுதிப் போராட்டத்தில் செயல்படுவீர்களாக. இம்முறை நான், இந்திய சுயாட்சி, மந்திரிசபை போன்றவற்றிற்காக வைஸ்ராயுடன் பேரம் பேசப் போவதில்லை. பூரண சுதந்திரத்திற்கு எள்ளளவும் குறைவான வேறெதும் என்னைத் திருப்திப்படுத்தாது. ஒருக்கால் 'உப்புவரி நீக்கப்படும், மதுவிலக்கு அமலாகும் மாகாண மந்திரிசபைகளுக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கப்படும்' என்றெல்லாம் கூறி வைஸ்ராய் இறங்கி வரலாம். ஆனால், நான் பிடிவாதமாய்ச் சொல்வேன், 'பூரண சுதந்திரத்திற்குக் குறைவான வேறெதும் வேண்டாம்' என்று.

"இதோ, இத்தருணத்தில் ஒரு மந்திரம், சுருக்கமான தாரக மந்திரம், வழங்குகிறேன். அதனை நீங்கள் இதயத்தில் பதியுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், செயலும் அந்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமையட்டும். அந்த மந்திரம் இதுதான். "செய் அல்லது செத்துமடி'' . இந்தியாவை விடுவிப்போம், அன்றி அம் முயற்சியில் செத்து வீழ்வோம்! அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம். நமது தேசம் அடிமைத்தளையில் கட்டுண்டு அவலப்படுவதைக் காண கணமேனும் பொறுக்க மாட்டோம் என்கிற அசைக்கவொண்ணா வைராக்கியத்துடன், ஒவ்வொரு காங்கிரஸ்காரனும், காங்கிரஸ்காரியும் இந்தப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அதுவே உங்களது சபதமாக இருக்கட்டும். 'இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' என்று கடவுளையும் உங்கள் சொந்த உளச்சான்றையும் சாட்சியாகக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள். உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர், கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.

இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்!

"சுதந்திர இந்தியாதான் தன்னிச்சையாக நேச நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு அபாயத்தை முழு வீச்சுடன் எதிர்த்து முறியடிக்க முடியும். ஆனால், இன்றோ இந்தியர்கள் அடிமைத் தளையில் பிணைபட்டு நடைப்பிணங்களாக ஆகிவிட்டனர். மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். இந்திய மக்கள் ஒளி வீசும் கண்படைத்தவர்களாகப் புத்துயிர் பெற வேண்டுமாயின் சுதந்திரம் இன்றே, இப்போதே வேண்டும்; நாளை அல்ல. ஆகவேதான் உடனடியாய் சுதந்திரம் பெற நாம் உடனடியாய் முனைவோம். அல்லது அம் முயற்சியில் செத்துமடிவோம் என்று சூளுரைப்போம்...''

நேரு - ஆசாத் யோசனையின் பேரில் ஒரு சில திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேறியது. வெளியில் அலைமோதிய ஆயிரக் கணக்கான மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது.

ஆகஸ்ட் 8 முன்னிரவில் திரும்பவும் கூடிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காந்திஜி இவ்வாறு அறிவுறுத்தினார்: "நமது இறுதிப் போராட்டம் இக் கணமே தொடங்கிவிட்டதாகக் கருதக் கூடாது. நீங்கள் அனைவரும் என் கையில் போராட்ட அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள். மேன்மை தங்கிய வைஸ்ராயைச் சந்தித்து காங்கிரஸின் உரிமைக் கோரிக்கையை ஏற்கும்படி மன்றாடுவதே எனது முதல் நடவடிக்கை. அதற்கு இரண்டு - மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை காத்திருங்கள்''.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருக்கவோ காந்திஜிக்கு அவகாசமோ சந்தர்ப்பமோ அளிக்கவோ விரும்பவில்லை. மறுநாள் (1942 ஆகஸ்ட் 9-ம் தேதி) விடியற்காலை ஐந்து மணி அளவில் காந்திஜியும், பம்பாயிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களும் படுக்கைகளிலிருந்து எழுப்பப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாகவே ரகசியமாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

விடியற்காலையில் காந்திஜி கைதாகும்போது ஒரு சில பத்திரிகையாளர்களே அவ்விடத்தில் இருந்தனர். அவர்கள் மூலம் காந்திஜி இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்த சிலவரிச் செய்தி இதுதான்:

"அகிம்சை அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவரவர் இஷ்டப்படி மனதொத்த அளவில் செயல்படுவீர்களாக! ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம் போன்ற இதர அகிம்சை முறைகளைக் கையாளலாம். சத்தியாக்கிரகிகள் சாவுக்குத் துணிந்து வெளிவர வேண்டும். உயிர் வாழ்வதற்காகப் பின்வாங்கக் கூடாது. தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும். 'கரேங்கே யா மரேங்கே' (செய்வோம் அல்லது செத்துமடிவோம்).''

பூனாவுக்கு அருகில் ஆகாகானுக்குச் சொந்தமான ஓர் தனித்த பழைய அரண்மனையில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி காவலில் வைக்கப்பட்டார். சரோஜினி நாயுடு, மீராபெஹன், காந்திஜியின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோரும் அதே அரண்மனையில் காந்திஜியுடன் காவலில் வைக்கப்பட்டனர். அன்று மாலை பம்பாயில் காந்திஜி பேசவிருந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசப் போவதாக அறிவித்த காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகாகான் அரண்மனையில் காந்திஜியுடன் சிறைவாசம் தொடங்கினார். (கைதான மறுவாரமே, ஆகஸ்ட் 15 அன்று மகாதேவ் தேசாய் மாரடைப்பால் மரணமடைந்தார்).

அன்றைய தினமே (1942 ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாகாண, மாவட்ட, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தனர். அனைத்துக் காங்கிரஸ் குழுக்களும் சட்டவிரோதமானவை எனத் தடை செய்யப்பட்டது; அவற்றின் நிதிகள் முடக்கப்பட்டன. பத்திரிகைகளும் அச்சகங்களும் காங்கிரஸ் இயக்கங்கள் பற்றியோ அதற்கெதிரான அரசாங்க அதிரடி நடவடிக்கைகள் பற்றியோ செய்திகள் வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்து, அதைத் தொடர்ந்து படுகள அடக்குமுறையை அரசாங்கம் அவிழ்த்துவிட்டதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படித்த வகுப்பினர்களும் கொதித்தெழுந்தனர். வன்முறை வெடித்தது. காவல் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தபால் நிலையங்கள் தீக்கிரையாயின. ஆங்காங்கே தந்திக் கம்பிகளை அறுத்தல், ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தல், பாலங்களுக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தல், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்குதல் போன்ற அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின. அரசாங்கம் போலீஸ் அடக்குமுறையை மென்மேலும் முடுக்கிவிட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைதுகள், தடியடிகள், விசாரணையின்றி சிறைவாசம் மலிந்தன.

அரசாங்கம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் ஆகஸ்ட் புரட்சி வலுவிழந்து, அடுத்த இரண்டே மாதங்களில் பிசுபிசுத்துவிட்டது. தலைமறைவான இடதுசாரி காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்திய ரகசிய இயக்கமும் 1943-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடுக்கப்பட்டுவிட்டது.

1943 நவம்பரில் உடல்நலம் மிகக் குன்றி, படுத்த படுக்கையாக இருந்த கஸ்தூர்பா காந்தி, 1944 பிப்ரவரி மாதம் உயிர்நீத்தார். அன்னாரது உடல், ஆகாகான் அரண்மனை மைதானத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின், காந்திஜி கடும் மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார். அத்துடன் ரத்த சோகையும், குறைந்த ரத்த அழுத்தமும் அவரை வாட்டின.

"மிஸ்டர் காந்தியின் உடல்நிலை மிகவும் குன்றிவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் அவர் இல்லை. சிறைக் காவலில் அவர் மாண்டு போனால் மக்களிடையே அரசாங்கத்திற்கு விரோதமான உணர்வு மேலோங்கும்'' என்று வைஸ்ராய் லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் விளைவாக, காந்திஜியை 'உடல்நிலை காரணமாக' விடுவிக்க, 1944 மே 6-ஆம் தேதி வைஸ்ராய் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி மிக்க மன - உடல் சோர்வுடன் வெளியே வந்தார். அதுவே அவரது கடைசி சிறைவாசம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1945 ஜூன் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

1944 ஜூலை 28 அன்று காந்திஜி வெளியிட்ட அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறினார்: "... பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது உட்பட நாச வேலைகள் அனைத்துமே வன்முறைச் செயல்களே ஆகும். 'நடந்து போன அத்தகைய செயல்கள் மக்களின் மனத்தையும் ஆர்வத்தையும் உணர்ச்சிகரமாக உத்வேகித்தன' என்றெல்லாம் என்னிடம் பலர் எடுத்துக்காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள் நமது தேசிய இயக்கத்திற்கு தீங்கு விளைவித்துவிட்டன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை''.

ஆம்! ஆகஸ்ட் புரட்சியின் சில விளைவுகள் அரசியல் களத்தில் காங்கிரசுக்குப் பாதகமாகவே அமைந்தன. ஏறத்தாழ மூன்றாண்டு காலம் (1942-1945) காங்கிரஸ் தடை செய்யப்பட்டுச் செயலிழந்து கிடந்தது. தலைவர்கள் சிறையில் இருந்தனர். அதன் நிதிகள் முடக்கப்பட்டுவிட்டன. நடைமுறையில் காங்கிரஸ் ஸ்தாபனம் நிலைகுலைந்து ஸ்தம்பித்துவிட்டது எனலாம். முஸ்லிம் லீக் கட்சிக்கு இது ஒரு எதிர்பாராத நல்லதிருஷ்டமாகவே அமைந்தது. அத்தகைய தேசிய அரசியல் சூன்ய காலகட்டத்தில் முகமதலி ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக் ஒரு பலம் பொருந்திய கட்சியாகக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. பாமர முஸ்லிம் மக்களின் மத உணர்வைத் தூண்டிவிட்டு, தனி நாடு கிடைக்காவிடின் சுதந்திர இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய நேரிடும். இஸ்லாமுக்குப் பேராபத்து என்றெல்லாம் திகிலைக் கிளப்பி, காங்கிரஸýக்கு எதிராகத் தனிப் பெரும் கட்சியாக லீக் தலையெடுத்து, இந்தியப் பிரிவினைக்கு வழிகோலியது.



-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (07.08.2012)
.