தியாகி சுப்ரமணிய சிவா
(மறைவு: ஜூலை 23)
பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்க வேண்டும் என்று சுதந்திர போராட்ட தியாகிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த வத்தலகுண்டு (இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருபகுதி). ராஜம் ஐயருக்கும், நாகலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 4.10.1884-ல் பிறந்தார்.
தனது 12-வது வயது வரை மதுரையில் படித்தார். பின்னர் கோவையில் ஓராண்டு படித்தார். அப்போதே, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக போயர்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதினார்.
பின்னர், சிவகாசியில் காவல்துறையில் எழுத்தராக சேர்ந்தார். ஆனால், சேர்ந்த மறுநாளே அப்பணியில் இருந்து விலகிவிட்டார். 1899-ம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற சுப்பிரமணிய சிவா, இளைஞர்களை ஒன்று திரட்டி, "தரும பரிபாலன சமாஜம்' என்னும் அமைப்பை உருவாக்கினார். இதனால், திருவிதாங்கூர் மாநில அரசால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதையடுத்து ஊர், ஊராக சுதந்திர வேட்கையை பரப்பிக்கொண்டே தூத்துக்குடி வந்து சிதம்பரனார் இல்லத்தில் தங்கினார். அங்கு கோரல் மில் தொழிலாளர்களின் உரிமைக்காக வ.உ.சி.யும், சிவாவும் தொடர்ந்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தினர். இருவரும் மேடை தோறும் விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசி இரட்டைசுழல் துப்பாக்கி போல செயல்பட்டனர்.
இருவரது பேச்சால் தேசபக்தர்களாக மாறிய தொழிலாளர்கள், வெள்ளையர்களுக்கு முகம்மழிக்கவும், துணி வெளுக்கவும் மறுத்தனர். தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற்றது.
சென்னை, கோல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு.
சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.
உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார்.
இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.
முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார்.
ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என்.தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு "பாரதபுரம்' என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தினர்.
மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர். ஆசிரமத்தில் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் தேசப்பற்றுடன் ஜாதி, மத பேதமின்றி ஒழுக்கம் தவறாமல் நடக்க வேண்டும் என்பது முக்கிய விதி.
பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், மகாத்மா காந்தியை அழைத்து வந்து அதற்கு அடிக்கல் நாட்ட எண்ணினார். ஆனால், கோல்காத்தாவை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி சித்தரஞ்சன்தாûஸ அழைத்து வந்து 23.1.1923-ல் அடிக்கல் நாட்டினார்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினர், அரிஜனங்கள், அந்தணர்கள் என ஜாதி,மத பேதமின்றி வழிபடுவதற்குரிய ஆலயத்தை கட்ட கனவு கண்டார்.
புதுச்சேரியில் தனது நண்பர் பாரதியும், அவரது நண்பர்களும் சேர்ந்து வடிவமைத்த பாரத மாதா சிலையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அந்த சிலையை பாப்பாரப்பட்டிக்கு கொண்டுவந்தார். இந்த சிலையை ஆலயத்தில் மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்றும், மாதாவுடைய பார்வையிலேயே மேற்கு நாடுகள் பூட்டிய அடிமை விலங்குகள் நொறுங்கிப் போகும் என்றும் நினைத்தார் சுப்பிரமணிய சிவா.
இங்கு பூசாரி இருக்கக் கூடாது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தாமாகவே மாதாவை தரிசித்து செல்ல வேண்டும். இந்த ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டிய சித்தரஞ்சன்தாஸ், தன்னால் இயன்ற சிறுதொகையை நன்கொடையாக வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார்.
22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இவ்வலக வாழ்வில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்.
பாரத மாதவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற கனவு, அவரது ரத்தத்திலும், சதையிலும், உயிரிலும் கலந்திருந்தது. ஆனால், இதுவரை கனகவாகவே இருந்து வருகிறது. அவரது நினைவிடம் இருந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து, பெருமைப்படுத்திய தமிழக அரசு, சிவாவின் கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோள்.
- பீ.ஜெபலின் ஜான், தர்மபுரி
நன்றி: தினமணி
காண்க:
.
1 கருத்து:
இது மிஹவும் னல்ல முயர்ச்சி மட்டும் அல்ல அவசியமன ஒன்ட்ரு..வாழ்க
கருத்துரையிடுக