நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

12.7.11

திவ்யப் பிரபந்தம் தந்த மகான்நாதமுனிகள்

திருநட்சத்திரம்ஆனி - 27 - அனுஷம்

(ஜூன் 12)

தமிழின் பக்தி இலக்கியங்களில் வைணவர்களின் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு பேரிடம் உண்டு. வைணவ மகான்களால், ஆழ்வார்களால் பாடப்பட்ட அற்புதமான தெய்வத் தமிழ்ப் பாக்கள் சிதறிக் கிடந்த நிலையில், அவற்றைத் தொகுத்து 'நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாக' தமிழுலகுக்கு வழங்கியவர் நாத முனிகள்.

ஸ்ரீ வைணவ ஆசார்ய பரம்பரை, பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, விஷ்வக்ஸேநர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்தே வருவது. முதல் மூவர் பரமபதத்தில் இருப்பவர்கள். நம்மாழ்வாரோ 'ஆழ்வார்' பட்டியலில் இடம் பெறுபவர். ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளையே முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும்.

திருஅவதாரம்

முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்யசூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்பொது யுகத்திற்குப் பிந்தைய  823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈச்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்டபிறகு, நாதமுனிகள் ஆனார்.

தம் தந்தை ஈச்வரபட்டராழ்வாரோடும் குமாரர் ஈச்வர முனிகளோடும் காட்டுமன்னார் அனுமதி பெற்றுக் குடும்பத்தோடு வடநாட்டு யாத்திரை சென்றார் இவர். பல வைணவத் திருத்தலங்களைப் பார்த்துப் பாடிப் பரவசமடைந்து ஸ்ரீகோவர்த்தனபுரம் எனும் கிராமத்தில் 'யமுனைத் துறைவன்' பகவானைத் திருத்தொண்டால் மகிழ்வித்தபடி சில ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒருநாள் கனவில் காட்டுமன்னார் இவரை "வீரநாராயணபுரத்திற்கு மீண்டும் வருக'' என்றழைத்தார். எனவே குடும்பசகிதம் இவர் திரும்ப மன்னார் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கிருந்த வைணவ மக்கள் இவர் குடும்பம் தங்க ஒரு வீடும், வாழ்க்கை நடத்த வேண்டிய பொருட்களையும் கொடுக்க பெருமாள் சங்கல்பத்தால் நியமனம் செய்யப்பட்டனர்சில ஆண்டுகள் இவருடைய கைங்கர்யம் கோயிலில் தொடர்ந்து நடந்து வந்தது. அச்சமயம் சில வைணவர் வந்து பெருமாள் முன் "ஆராவமுதே'' என்கிற திருவாய்மொழிப் பாசுரம் பாடி வணங்கினர். அது நாதமுனிகளுக்கு மிக உகந்ததாக இருக்க, அவர் அவர்களிடம், "இத் திருவாய்மொழிப் பாசுரத்திலே சாற்றுப் பாட்டில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என வருகிறதே, உங்களுக்கு இப்படி அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாட்டும் வருமோ?'' என்று கேட்டார். "இல்லை; இப்பத்துப் பாட்டுகளே தெரியும்; மற்றவை கிடைக்கவில்லை'' என்று அவர்கள்  கூறிச் சென்றனர்.

குருகூர் புறப்பட்டார்
'குருகூர்ச் சடகோபன்' என வைணவர் குறிப்பிட்டிருந்ததால், திருக்குருகூருக்குச் சென்ற நாதமுனிகள், ஆழ்வார் பாசுரங்கள் பற்றி விசாரித்தார். மதுரகவி ஆழ்வார் பரம்பரையில் வந்த ஒருவரைச் சந்தித்தார். அவர் பெயர் பராங்குசதாசர் அவரோ, "திருவாய்மொழியும் திவ்யப் பிரபந்தங்களும் சில காலமாக மறைந்து விட்டன. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனும் பிரபந்தம் எம்மிடமுள்ளது. இந்தப் பதினோரு பாசுரங்களை, ஆழ்வார் திருஉருவம் முன் ஒரு முகப்பட்ட மனத்துடன் பன்னீராயிரம் உரு ஜெபித்தால், நியமத்துடன் ஆழ்வார் திருவடிகளை எண்ணிச் செய்தால் நம்மாழ்வார் பிரசன்னமாவார் என்றும் மதுரகவி அருளியிருக்கிறார்'' என்றார்.
அவரிடம் "கண்ணிநுண்சிறுத்தாம்பு' பாசுரங்களை உபதேசமாகப் பெற்று யோகியான நாதமுனிகள் பராங்குசதாசர் சொன்னபடியே தியானித்தார். ஆழ்வார் அவர் சமாதியில் நெஞ்சில் தோன்றினார். "உமக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்க, "திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருள வேணும்'' என்று நாதமுனிகள் விண்ணப்பித்தார்.

உடனே ஆழ்வார் நாதமுனிகளுக்கு "மயர்வற மதிநல'மருளி ரஹஸ்யத்ரயம்திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களையும் அவற்றின் பொருளோடு தந்து அஷ்டாங்க யோகத்தையும் உபதேசித்து, யோக வேதாந்தத்தை அறியச் செய்தார். அவற்றை அநுசந்தித்துக் கொண்டு ஆழ்வார் திருநகரியலேயே சிலகாலம் ஸ்ரீநாதமுனிகள் தங்கிவிட்டார். பிறகு மீண்டும் வீரநாராயணபுரப் பெருமாள் காட்டுமன்னனார் அழைக்கவே திரும்பி வந்தார்.

யோக சமாதியில் நம்மாழ்வாரிடம் ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் உபதேசமாகப் பெறும்போது "பொலிக பொலிக'' எனும் பாசுரம் வந்தது. இதில் "கலியும் கெடும் கண்டு கொண்மின்'' என்று நான் சொன்னதை உண்மையாக்கப் போகும் ஒரு மஹான் அவதரிக்கப் போகிறார்'' என்றார் ஆழ்வார்.

"அவரை அடியேன் சேவிக்க வேணும்'' என்றார் நாதமுனிகள். ஆழவாரும் அப்படியே உருவங்காட்டி சேவை சாதித்தார். உடனே நாதமுனிகள், "தேவரீரைக் காட்டிலும் அழகான இத் திருமேனியை எப்போதும் அடியேன் சேவித்துவர வழி செய்ய வேணும்'' என்க, அவ்வூர் சிற்பிக்கும் அப்படி சேவை சாதித்த ஆழ்வார், "இதேபோல விக்ரஹம் பண்ணி நம் சந்நிதியிலிருக்கும் நாதமுனிகளிடம் தருக'' என நியமித்தார். அதேபோல அவனிடம் நாதமுனிகள் ஒரு பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைப் பெற்றார். இது பின்னால் அவதரிக்கவிருந்த ஸ்ரீ ராமாநுஜருடைய திருமேனிச் சிலையாகும்.

நாதமுனிகளின் சீடர்கள்

இவருக்கு எட்டு சீடர்களிருந்தனர். அவர்களில் இருவர் மிக முக்கியமானவர். 1) புண்டரீகாட்சர் என்ற உய்யக் கொண்டார் 2) குருகைக்காவலப்பர். ஸ்ரீமந் நாதமுனிகளிடம் யோக வித்தையும் வேதாந்த ஞானமும் இரண்டுமே முழுமையாயிருந்தது.

குருகைக்காவலப்பரிடம், "அப்பா, எம்மிடம் யோகமும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த வேதாந்தமும் உள்ளன. யோக வித்தையால் நீர் ஒருவர் மட்டும் உய்ந்து போகலாம். இந்த வேதாந்த ஞானத்தால் உலகோரையும் உய்விக்கலாம். உமக்கு எது வேண்டும்'' என்று கேட்டார்.

"என் வழியைப் பார்த்துக் கொண்டு நான் போகிறேன். எனக்கு யோகத்தையே உபதேசியும்'' என்று வாங்கிக் கொண்டார் குருகைக்காவலப்பர். அவரிடம், ""என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்'' என்று கூறியனுப்பினார் நாதமுனிகள்.

புண்டரீகாட்சரை அழைத்து அதேபோல "யோகமா, வேதாந்தமா? எது உமக்கு வேண்டும்?'' என்று நாதமுனிகள் கேட்டார்.

"ஆசார்யரே, பிணம் கிடக்க மணம் புணருவாருண்டோ? ஆன்ம நாசமடைந்தவராய் மக்கள் அழிந்திருக்க, அடியேன் என் ஒருவன் உயர்விற்காக மட்டுமான யோகம் கேட்பேனோ? மக்களை அறியாமைப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் திருவடியில் சேர்ப்பிக்கும் திருவாய்மொழி திவ்யப் பிரபந்த ஞானமே வேண்டும்'' என்று கேட்டார்.

ஆகா! மக்களை உய்விக்கவந்த "உய்யக் கொண்டாரே' என்று நாதமுனிகள் அழைக்க, புண்டரீகாட்சர் 'உய்யக் கொண்டார்' ஆனார், அவரிடம் "ரகசியம் வெளியிடாதீர்'' என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த என்றதையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

உய்யக் கொண்டார் சரமதசை வரை, ஆளவந்தார் பிறக்காததால் அவருடைய சீடர் "மணக்கால் நம்பியிடம் பவிஷ்யதாசார்ய சிலையையும் வேதாந்தியாக ஆளவந்தாரை ஆக்கி தர்சன நிர்வாஹராக ஆக்குவதையும் விட்டுச் சென்றார். பின்னாளில் அவர் அதை நிறைவேற்றினார்.

மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை & மருமக்களை திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர். இவர்களே இன்றும் இப்படிச் செய்துவரும் 'அரையர்'களின் குலத்திற்கு ஆரம்பமாயினர்.

திருவாய்மொழி திவ்யப் பிரபந்தங்களை தேவகான இசையில் சேர்த்துத் தாமே பாடிப் பிரச்சாரம் செய்தார். மருமக்களிருவரையும் இதில் பழக்கி அர்ப்பணித்தார். தேவ கானத்தில் ராகம், தாளம் அமைத்து இயலும் இசையுமாக்கித் திவ்யப் பிரபந்தங்களைப் பரப்பினார். திருமங்கைமன்னன் செய்து வந்து நின்றிருந்த அத்யயன அருளிச் செயல் உற்சவங்களை மீண்டும் தொடங்கித் தாமே அரங்கன் முன் பாடி அபிநயம் பிடித்தும் காட்டி வந்தார். தம் குமாரர் ஈச்வரமுனிகளிடம் "உனக்கு ஒரு மகன் பிறப்பான். 'யமுனைத் துறைவன்' எனப் பெயர் வை'' என்றும் உணர்த்தி வைத்தார்.

இவருடைய நூல்கள்

இவர் 'நியாய தத்வம்', 'புருஷ நிர்ணயம்', 'யோகரகசியம்' என நூல்கள் எழுதியதாகச் சொல்வர். அவை இன்று கிடைப்பதில்லை. இவருடைய நியாய தத்துவ நூலிலிருந்து சில பகுதிகள், ஸ்ரீமத் ஆளவந்தார்,  எம்பெருமானார்ச்ருத ப்ரகாசிகா பட்டர்தேசிகர் முதலான பேராசிரிய ஆசார்யர்களால் தங்கள் நூல்களில் எடுத்துககாட்டப் பட்டுள்ளன. யோக ரகசியம், புருஷ நிர்ணயம் இவரின் நூல்களென பெரிய திருமுடியடைவில் இருந்து தெரிகின்றது. ஆனால் எந்நூலும் இன்று இல்லை.

இன்னொரு சமயம் வீரநாராயணபுரம் அருகில் இருந்த காட்டில் வேட்டையாடி விட்டு ராஜா, மந்திரி, ராணி வேலையாட்களுடன் இவரைப் பார்க்க வந்தபோதும் நாதமுனிகள் சமாதியில் இருந்தார். இவருடைய பெண்ணிடம் தான் வந்ததாகச் சொல்லி விட்டு அரசன் சென்றான். யோகநிலை விட்டு ஸ்ரீமந்நாதமுனிகள் எழுந்ததும் அவர் பெண், வேட்டைக்கார வேடத்துடன் அரசன் வந்ததை விவரித்தாள். கையில் வில், அம்புக்கூடு, தலையில் கொண்டையிட்டு துணி கட்டி இருந்த இரு ஆடவர், ஓரிளம்பெண், கூட ஒரு குரங்கு என்று சொல்ல, ஸ்ரீராமனே தம்பி இலக்குவனுடன், நடுவில் சீதாபிராட்டி வர, ஆஞ்ச நேயருடன் வந்திருக்கிறார் என்று பக்திப் பிரேமை மிகத் தேடிக் கொண்டு அவர்கள் போன வடதிசையில் ஓடினார். குரங்குக் காலடித் தடம் கண்டாராம். அவ்விடம் "குரங்கடி' எனப் பெயர் பெற்று இன்றும்  இருக்கிறது.

எங்கும் ஸ்ரீராமரைக் காணாமல் வியாகூலம் மேலிட பல இடங்களிலும் அலைந்து பரமபதித்து விட்டார். "வைகுந்தம் சென்றேனும் அவர்களைக் கண்டு வருவேன்' என்றே மூச்சை விட்டாராம்.அப்போது அவர் பிராயம் 93,  917 ல், தாது ஆண்டு, மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி அன்று திருநாடு அலஙகரித்தார். சீடர்கள் சேர்ந்து அவர் மகன் ஈச்வரமுனியைக் கொண்டு காரியங்களைப் பரக்க நடத்தினர். இவர் யோகசீடர் குருகைக்காவலப்பர் அந்த இடத்திலேயே தம் 70 ம் ஆண்டு கடைசி தினம் வரை யோகத்தில் இருந்தார். பிறகு அவர் சந்நிதி அங்கு உண்டானது.

- செங்கோட்டை ஸ்ரீராம்

காண்க:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக