நினைவு நாள்: அக். 31
.
.
.
.
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் குறிப்பிடத் தக்க ஆளுமை வாய்ந்த பெண்மணி இந்திரா காந்தி. முதல் பிரதமர் நேருவின் மகள் (பிறந்த நாள்: 19.11.1917) என்ற முன்னுரிமை காரணமாக காங்கிரஸ் கட்சியில் முன்னிலைக்கு வந்தாலும், தனது தலைமை தாங்கும் பண்பு காரணமாக, நாட்டை தீரத்துடன் வழிநடத்தினார். 1966 முதல் 1977 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும் பாரதப் பிரதமராக இருந்தவர். அரசியல் ராஜதந்திரி என்ற பெயர் பெற்ற இவரால் தான், வங்கதேசம் என்ற நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த பாகிஸ்தானை, 1971 போரில் முழுவதுமாகத் தோற்கடித்து சரணாகதி அடையவைத்தவர்; அதன் காரணமாக, 'இந்தியாவின் நவீன துர்க்கை' என்று வர்ணிக்கப்பட்டவர் இந்திரா.
.
.
.
.
பார்சி குடும்பத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டவர். ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகிய இரு புதல்வர்களின் தாய். ராஜீவ் காந்தி, இவரது மறைவுக்குப் பின் (1984 - 89 ) பிரதமராக இருந்தார். பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பிரிவினைவாதப் போரை துணிவுடன் முறியடித்தவர். அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பயங்கரவாதிகள் முகாமிட்டவுடன், பின்விளைவுகளைப் பற்றிய அச்சமின்றி 'ஆபரேசன் ப்ளூஸ்டார்' என்ற அதிரடி நடவடிக்கையால் கோயிலை மீட்டார். அதற்கு பழி வாங்க, அவரது மெய்க்காப்பாளர்களான இருவர், இவரை 1984 , அக்டோபர் 31ல் சுட்டுக் கொன்றனர். ஒருகாலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டதன் பலனை இந்திரா அடைந்தார்; நாடு நல்ல தலைவியை இழந்தது.
.
.
.
.
வங்கிகள் தேசிய மயமாக்கம், ஜமீந்தாரிமுறை ஒழிப்பு, பசுமைப் புரட்சி உள்ளிட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர். என்றபோதும் ஜனநாயக நெறிமுறைகளை மீறும்வகையில் 1975ல் இவர் நாட்டில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இவரது வாழ்வில் ஒரு கரும்புள்ளியே. சுயநலன் இன்றி அரசியலில் நீடிக்க முடியாது என்றபோதும், நாட்டுநலனை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தவர் என்று இந்திரா காந்தி பாராட்டப்படுகிறார். இவரது மறைவுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை இன்னும் நீங்காமல் இருப்பதே, இவரது ஆளுமைக்கு சான்று. இவர் உயிருடன் இருந்திருந்தால் இலகையில் தமிழர்கள் சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளாக விட்டிருக்க மாட்டார் என்று பலரும் கூறுவதே இவரது ஆற்றலை வெளிப்படுத்தும்.
காண்க:
.
.