நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
மகத்தான மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகத்தான மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.9.12

அடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்


ராஜா தேசிங்கு
(பலிதானம்: அக். 23)

செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. தமிழகத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் கொடுத்த வீரன் ராஜ தேசிங்கு.

மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

செஞ்சிக் கோட்டை

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.


ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.


காண்க:

ராஜா தேசிங்கு  கதைப்பாடல் 

தேசிங்குராஜன் கதை (விர்சுவல்  யுனிவர்சிட்டி)

செஞ்சிக்கோட்டை வரலாறு

செஞ்சியும் தேசிங்கும் - எஸ்.ராமகிருஷ்ணன்

செஞ்சி (விக்கி)

.

18.5.12

பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்


 சிந்தனைக் களம் 

- பாலகுமாரன்-


அந்த
க் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.

எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.

அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ?
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.

பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா?
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா?

இல்லை.

இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.

முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.

அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு...?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.

அப்படியானால் சாரப்பள்ளம்.

சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம்.

இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?

பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).

எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று.

இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.

கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.

உளிகள், நல்ல எகு இரும்பால் ஆனவை. பெரிய கல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.

நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.

கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.

முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை.

கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.

மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.

கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்ன வித கோவில்?

விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.

இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார்.

இது போதுமா கடவுளைச் சொல்ல?

ரொம்ப பெரிசு ஐயா கடவுள்.

கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.

விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன்.

அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம்.
இன்றளவும்.

தகவல்: வி.ஸ்ரீனிவாசன்


காண்க: http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_23.html

16.10.11

நிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை


வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட 'குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது.

தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799, அக்டோபர் 16ம் தேதியன்று, கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

`Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னும், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு?  முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது?

- வெங்கட சேது (வெப் துனியா)

காண்க:

வெள்ளையரை மிரட்டிய வீரச் சிங்கம்

.

3.8.11

தீரன் சின்னமலை கும்மிப் பாட்டு


தீரன் சின்னமலை

(பலிதானம்: ஆடிப் பதினெட்டு)
(ஆக.  3) 


கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன்
கருப்பசேர்வையும் பின்னடக்க
வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை
யதோ வார சவுரியம் பாடுங்கடி

பட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும்
பாளையத்துக் காரர்கள் முன்னடக்க
வெட்டுந்துரை மகன் சின்ன மலை
வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி

பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்
பூரித்து வீரப் புலி போலச்
சேனைக் கதிபதி சின்னமலை
வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி

கச்சைகட்டுந் தடிக்காரர்களே- வெள்ளைக்
காரர்களையெங்கு கண்டாலும்
காலையொடித்துத் துரத்துங்கள் என்றுமே
கட்டளையிட்டானாம் சின்னமலை

கும்மியடிப் பெண்ணே, பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிட கும்மியடி
எங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ
வார ஒய்யாரம் பாருங்கடி…..

 
காண்க:
 

17.4.11

கொங்கு நாட்டின் சிங்கம்





தீரன் சின்னமலை

(பிறப்பு: ஏப். 17)

விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு பிற எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. 1857 ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர்கள் தமிழகத்தின் கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்டோர். இவர்களில் கொங்கு மண்டலத்தின் கதாநாயகனாகப் போற்றப்படும் தீரன் சின்னமலையின்  வீர வரலாறு இளைய தலைமுறையினர் அறிய வேண்டியதாகும்.
 
தீரன் சின்னமலை (ஏப். 17, 1756 -  ஜூலை 31, 1805) , கொங்கு நாட்டின்  முதல் விடுதலைப் போராட்ட வீரர். தமிழகத்தின் மேற்கப் பகுதியான கொங்கு மண்டலத்தில்,  இப்போதைய திருப்பூர்  மாவட்டத்தின் காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப். 17, 1756 அன்று கவுண்டர்  குலத்தில் பிறந்தவர்.  தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப் படுகிறது.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம்  போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். 

கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு  விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ''சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்'' என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப் படை ஒன்றுசேரா வண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். 

டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின்  மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக் கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

சின்னமலையின் கொங்குப்படை, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு  கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப். 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப்  பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார்.

ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர்துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப்  பாளையக்காரராக  அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். ஆனால், முந்தைய நாளே  போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர்,  தேவர்,  வன்னியர்,  நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
 
.
1801-இல் ஈரோடு-  காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும்,  1804-இல் அறச்சலூரிலும்  ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஆடிப் பதினெட்டாம் நாளன்று (ஜூலை 31, 1805 ) அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

அன்னாரது நினைவாக நமது அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. சின்னமலை ஆட்சி நடத்திய ஓடாநிலையில் அவருக்கு தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- கிண்டியில் தீரன் சின்னமலை சிலை உள்ளது.

அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து  போர்ப்படை  திரட்டிப் போராடி உயிர் நீத்த  மாவீரர் தீரன்  சின்னமலை. அவரது நினைவே நமக்கு உத்வேகமும் நல்லாற்றலும் வழங்கும்.


காண்க:

தீரன் சின்னமலை- செ.ராசு

சின்னமலை வாழ்க்கைக் குறிப்பு

தீரன் சின்னமலை (கீற்று)

திப்புவுக்கு தோள்கொடுத்த வீரன்

சின்னமலை கும்மிப்பாட்டு (கொங்கு தளம்)

தீரன் சின்னமலை.ORG

DHEERAN CHINNAMALAI (wiki)

ODANILAI (The Hindu)

3.4.11

சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்

சத்ரபதி சிவாஜி

நினைவு தினம்: ஏப். 3

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

வானுறு தேவர் மணியுல கடைவோம்,
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.
- மகாகவி பாரதி 

(சத்ரபதி சிவாஜி தனது சைனியத்திற்குக் கூறியது' என்ற தலைப்பில்
 தேசிய கீதங்கள்  பகுப்பில் உள்ள கவிதை.   முற்றுப்பெறாதது).




19.2.11

ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்


சத்ரபதி சிவாஜி
(பிறப்பு: பிப். 19)
தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின்  வாழ்க்கையாகும்.
பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும்  உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி.
இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630,  பிப்  19  ம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார். சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த வீரனாக, பகைவர்களை வெல்பவனாக, அரசாட்சி செய்பவனாக, ஹிந்து ராஜ்யம் அமைப்பவனாக விளங்கவேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்.
எனவே சிவாஜி பிறந்ததும் தாயே, ஹிந்து தேசத்தை பெரியதாக்கி அதையும் சீக்கிரமாக எங்கள் கண்முன் காட்டுவாயாகஎன வேண்டிக்கொண்டார். சிவாஜிக்கு, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து ராமர், கிருஷ்ணர் மற்றும் பலரின் வீர தீரங்களையும் கதைகளாக சொல்லிவந்தார்.
தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பொறுப்பில் சிவாஜியை வளர்க்க ஏற்பாடு செய்தனர். மேலும் புனே பாளையத்தின் நிர்வாகப்  பொறுப்பையும் தாதாஜியிடமே கொடுத்தனர். தாதாஜி பொறுப்பேற்ற பின்பு புனே பாளையம் செழிப்பான நிலைக்கு வந்தது.
விவசாயத்தை மக்களிடம் உற்சாகப்படுத்தவும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஏர் ஒன்றை சிவாஜியைக் கொண்டு உழச் செய்தார் தாதாஜி. மக்களுக்கு தன்னம்பிக்கையும் புது தெம்பும் பிறந்தது.
சிவாஜி, வாள், வில் பயிற்சியும், குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்ற பயிற்சிகளைப்  பெற்றார். போர் செய்யும் கலைகளை அறிந்தார். மேலும் மராத்தி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளைக்  கற்றார். சிவாஜி தன் நண்பர்களுடன் மலை, அடர்ந்த காடுகளில் சுற்றினார். சில இளைஞர்களைக் கொண்டு படை ஏற்படுத்தினார். சுதந்திர தேசத்தை உருவாக்கும் எண்ணத்தில் உறுதிகொண்டிருந்தார்.
அதன் தொடக்கமாக ரோஹித் கோட்டைக்குள் இருக்கும் ஆலயத்தில் நண்பர்களுடன் இறைவனை பிரார்த்தனை செய்தார். அப்போது தன் உடைவாளையெடுத்து தன் விரலை கீறி ரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்றார். அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் அவ்வாறே சபதம் ஏற்றனர்.
1646 ம் ஆண்டு பிஜாபுரின் தோரன் கோட்டையை வென்றார். பின்பு சாகன் கோண்டனா, புந்தர் கோட்டைகளை கைப்பற்றினார். தொடர்ந்து பல கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டே இருந்தார். சிவாஜி வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு, பீஜப்பூர்  சுல்தான், சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார்.
இந்த சூழ்நிலையில் சிவாஜி, மொகலாயப் பேரரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நாங்கள் தங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம் என்பதாகக் குறிப்பிட்டார். மொகலாய மன்னர் சாஜி, மற்றும் சிவாஜியின் வீரத்தை அறிந்திருந்ததால், இவர்கள் நம்முடன் இருப்பது நல்லது என நினைத்து சாஜியை விடுதலை செய்ய செய்தார்.
சிவாஜி எப்போதும் தன்முன் வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு, எந்தெந்தக் கோட்டைகளை பிடிக்கலாம் என ஆலோசனை செய்வார். இந்த இவருடைய திட்டமிடலால், அவருடைய ராஜ்யம் விரிவாகிக் கொண்டே போனது.
பீஜப்பூர் சுல்தான் இறந்த பிறகு அவருடைய மகன் சிறுவனாக இருந்ததால் பீஜப்பூர் சுல்தானின் மனைவி சாயிபா அரசை கவனித்துவந்தார். ஒரு ஹிந்து பீஜப்பூர் மொகலாய அரசை எதிர்ப்பதைக் கண்டு அவமானப்பட்டாள். எனவே சிவாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டினாள். இத்திட்டத்தை அப்சல்கான், தான் செய்வதாக ஏற்றுக்கொக்கொண்டான்.
அப்சல்கானும் சிவாஜியும் சந்திக்க ஏற்பாடாகியது. அப்சல்கான் உருவம் பெரியது;  மாமிச மலை. சிவாஜி உருவமோ சிறியது. அப்சல்கான், சிவாஜி வந்ததும் கட்டித் தழுவிக் கொண்டான். கட்டி இறுக்கினான். பிடியிலிருந்து விலக முயலும்போது தன் உடைவாளை எடுத்து விலாவில் பாய்ச்சினான். சிவாஜி தான் அணிந்திருந்த கவசத்தால் தப்பினார். அப்சல்கான் சற்றும் எதிர்பாரா விதமாக சிவாஜி புலி நகங்களை கொண்டு அவனது வயிற்றில் குத்தி கிழித்தார்.  பின் பீஜப்பூரை வென்றார்.
சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்துவருவதை எப்படியும் தடுக்க வேண்டும் என்று முகலாய மன்னர் அவுரங்கசீப் நினைத்தார். ஷெயிஷ்டகான் என்பவன் தலைமையில் படையை அனுப்பிவைத்தார். திருமண ஊர்வலம் போன்று வேஷமிட்டு கோட்டைக்குள் சென்று அவர்கள் அயரும் நேரம் பார்த்து அவர்களை விரட்டியடித்தார் சிவாஜி. மேலும் எருதுகளின் கொம்புகளில்  துணிப் பந்தங்கள் கட்டி அதில் தீ வைத்தனர். முகலாயர்கள் சிவாஜியின் படை என்று எண்ணி மிரண்டு ஓடினர்.
எனினும், முகலாயரின் படைத்தளபதி ஜயசிங்குடன் போர் புரியாமல், நாட்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற காரணத்தால் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹிந்து ஒற்றுமைக்கு அழைப்பு  விடுத்தார். மெதுவாக ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியை செம்மையாக செய்துவந்தார். 1674 ம் ஆண்டு பட்டாபிஷேகம் செய்து கொண்டார். சத்ரபதி பட்டம் வழங்கப்பெற்று சத்ரபதி சிவாஜி ஆனார்.
 நீதியின் வழியில் அவர் தன் வாழ்க்கையைச் செலுத்தினார். சிவாஜி சிறந்த ஆட்சியாளராய் திகழ்ந்தார். மிகச்சிறந்த ராஜதந்திரியாக விளங்கினார். சமர்த்த ராமதாசரின் ஆசியுடன் செயல்களை செய்து வந்தார்.
சிவாஜி தன்னுடைய நன்னடத்தை, திடமான சக்தி மற்றும் தேச பக்தியினால் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். அவரின் ஆட்சியில் அனைத்து மக்களும், அவரவர் சம்பிரதாயத்தில் நடக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் நிருவியபோதிலும் பிற மதங்களை அவர் வெறுக்கவோ, நசுக்கவோ இல்லை.
தனது குருநாதர் சமர்த்த ராமதாசரிடம் குருதட்சிணை­யாக ராஜ்யத்தை சமர்ப்பித்து, அவரின் பிரதிநிதியாக எண்ணியே ஆட்சி செய்து வந்தார். சிறுதுகாலம் நோய்வாய்பட்டிருந்த சிவாஜி 1680ம் ஆண்டு ஏப். 3  ம் தேதி தேதி இயற்கை எய்தினார்.
பல நூற்றாண்டுகளில் செய்ய செய்யவேண்டிய சாதனைகளை வெறும் 53 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த சிவாஜி, செய்து முடித்தார். வெற்றியை மட்டுமே சிந்தையில் கொண்ட சத்ரபதி சிவாஜி, வெற்றிக்கு சிறந்த உதாரணம் ஆவார். எனவேதான் தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் சிவாஜி ஒரு லட்சிய புருஷராக விளங்கி வருகிறார்.
-என்.டி.என்.பிரபு

காண்க: