நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.10.11

சன்மார்க்கம் கண்ட அருளாளர்


ராமலிங்க வள்ளலார்
(திருநட்சத்திரம்: புரட்டாசி - 18 - பூராடம்)  
(அக். 5)

மக்களை அறியாமைப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பல அருளாளர்கள் நம் தமிழ் மண்ணில் அவதாரம் எடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வும் தவமும் படைப்பும் புவியுள்ளளவும் மக்களுக்கு வழிக்காட்டக் கூடியவை.
சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்கே சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் 1823, அக்டோபர்,  5ம் நாள், ஞாயிற்றுகிழமை ராமலிங்க அடிகள் அவதரித்தார். தந்தையார் ராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. அருட்பிரகாச வள்ளலார் இவர்களுக்கு ஐந்தாவது பிள்ளை.
சிறு வயதில் ராமலிங்கம் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப் பற்றிப் பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டியவற்றை இறைவனிடமே  கற்றார்.
ஏழு, எட்டு வயதான போது சென்னை கந்தகோட்டத்து முருகனிடம் ஈடுபாடு உண்டானது. அந்த வயதிலேயே தெய்வ மணிமாலை’, ‘ கந்தர் சரணப்பத்துமுதலிய பாடல்களை இவர் பாடியதாகக்  கூறுவர்.  சின்ன வயதிலேயே பெரும்புலமைப் பெற்று விளங்கினார்.
தமையனார் பெரியபுராணக் கதை சொல்லச் சோமு செட்டியார் என்பவர் இல்லத்திற்குச் செல்ல முடியாமல் போனதாம். அப்பொழுது சிறுபிள்ளையாக இருந்த ராமலிங்க வள்ளலாரைத் தமையனார் சோமு செட்டியார் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ராமலிங்க வள்ளலார் ஒரே ஒரு பாடலுக்கு விடிய விடிய சொன்ன விரிவுரை கேட்டு மக்கள் வியந்து போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
நகரச் சந்தடிகளை விரும்பாத ராமலிங்கர் தனிமையை நாடிச் செல்லத் தொடங்கினார். இவர் திருவொற்றியூர் செல்லத் தொடங்கியபோது பன்னிரண்டு வயதாக இருந்திருக்கலாம்.
திருவொற்றியூருக்கு நடந்தே செல்லும் பழக்கமுடைய அடிகளார் ஒரு சமயம் வழக்கமாய்ச் செல்லும் நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்து வழியே செல்லாமல் தேரடித் தெரு வழியே ஆலயம் நோக்கிச் சென்ற போது, நிகழ்ந்த ஒரு பெருந்துறவி அங்கு நடமாடும் மனிதர்களை நாய் போகிறது; நரி போகிறது; மாடு போகிறதுஎன்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். அடிகளார் சென்ற அன்று அந்தத் துறவி, ‘இதோ ஒரு உத்தம மனிதன் போகிறான்என்று வியந்து கூறினாராம்.
வாலிப வயதில் ராமலிங்க அடிகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னரும் அடிகள் இல்லறத்தில் ஈடுபடாது இறைவன் நெறியிலேயே ஈடுபட்டு வந்தார்.
மாநிலக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவருக்குத் தலைமைச் சீடரானார். அவர்தான் வாழ்க்கைக் குறிப்பையும், ஐந்து திருமுறைகளாகத் திருவருட்பாப் பாடல்களையும் வெளியிட்டார்.
ஒளி வழிபாடு, உயிர்ப்பலி மறுப்பு, சாதி சமய எதிர்ப்பு ஆகிய கோட்பாடுகளைத் தீவிரமாக முன்மொழிந்தார். மரணத்தை வெல்லுதல் மனிதர்களுக்குச் சாத்தியப்படும் என்று கருதினார். இவற்றையெல்லாம் எடுத்து மொழியவும், சமரச சுத்த சன்மாக்க சத்திய சங்கத்தை நிறுவினார்.
தில்லைக்கு வடக்கே பார்வதிபுரம் என்கிற வடலூரைத் தெர்ந்தெடுத்துப் பசிப்பிணி தீர்க்கும் மையமாகச் சத்திய தர்மச் சாலையை 1867 இல் தோற்றுவித்தார்.  தருமச்சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பியது.
தனிமையை விரும்பிய அடிகளார் மேட்டுக்குப்பம் என்ற இடத்திற்குச் சென்று தங்கலானார்.(1870) அவ்விடத்திற்குச் 'சித்தி வளாகம்' என்று பெயர் சூட்டினார்.
ஒளிவழிபாட்டை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு வடலூரில் 1872ல் 'சத்திய ஞான சபை' என்ற வழிபாட்டுத் திருமாளிகையை அமைத்தார். அருட்பெருஞ்சோதி வழிபாடு அந்த ஆண்டு தைபூச் நன்னாளில் தொடங்கியது.
சித்தி வளாகத்தில் தங்கியிருந்த வள்ளல் பெருமான் 1873 ம் ஆண்டில் சன்மார்க்கக் கொடி ஒன்றை (மஞ்சளும் வெள்ளையும் கலந்தது) ஏற்றி அரிய அறிவுரைகள் நல்கி வந்தார்.
 சகாத மேல்நிலைகுறித்து பலகாலமாக சொல்லி வந்த ராமலிங்க வள்ளல் சித்திவளாகத் திருமாளிகையில் 30.1.1874 அன்று (தைப்பூச  நன்னாளன்று)  அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். ஒளியுடம்பு பெற்று அருள்வெளியோடு ஒன்றினார் வள்ளல் பெருமான்.
ராமலிங்க வள்ளலார் சமயம், சமுதாயம் இரண்டையும் ஒன்றாக்கி உயிர்கருனை தத்துவத்தைச் செயல்படுத்த பல அமைப்புகளை உருவாக்கினார். உலக மக்களை ஒருமை தன்மையோடு ஒரே வழி அன்புசெய்வது தான்.
மனிதர்களிடம் புரிதல் மேம்படும் போது அன்பு தழைக்கிறது. அன்பு தழைத்த இடத்தில் வேற்றுமை என்பதற்கு இடமிருப்பதில்லை. இதை மானிடர்கள் உணரும்போது எங்கும் அமைதி, எதிலும் இன்பம் என மானிட வாழ்வு மேன்மையுறும். மானிட வாழ்வை மேம்படுத்தவே வள்ளலார் போன்ற ஞானிகள் பாரத மண்ணில் தோன்றி வருகின்றனர்.
பாரத திருநாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு அன்பைப் பரப்ப உறுதி பூணுவோம்; செயல்படுவோம். 
வந்தேமாதரம்! வாழிய பாரத மணிதிருநாடு!
-ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:
ஜோதியில் கலந்த வள்ளலார் 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக