நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

7.10.11

நமது பயணம் என்றும் தொடரும்...


அன்புள்ள சகோதரர்களுக்கு,

வணக்கம்!

கடந்த விஜயதசமியன்று இந்த தேசமே தெய்வம் வலைப்பூவைத் துவக்கினோம்.  சைவர்கள்   "அவனருளாலே  அவன் தாள்  வணங்கி'' என்று சிவனைப்  போற்றுவார்கள். அதுபோல,   பாரத அன்னையின் தவப்புதல்வர்கள் குறித்த அறிமுகத்தை இளம் தலைமுறைக்கு, குறிப்பாக இணையதளத் தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற தணியாத தாகத்துடன், பாரத அன்னையின் அருளால் இந்த வலைப்பூவைத்  துவக்கினோம்.

இதற்குக் காரணம் உண்டு. நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் உத்தமரான நீலகண்ட பிரம்மச்சாரி குறித்து இணையத்தில் தேடியபோது அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் சிரமப்பட்டோம்.

அதுபோலவே, பல விடுதலை வீரர்கள் குறித்த தகவல்கள் கிடைக்காமல் தேட நேர்ந்தது. அப்போதுதான், நமது பாரத தவப்புதல்வர்கள் குறித்த அறிமுகத்தையாவது- அவர்கள் பிறந்த, மறைந்த நாட்களை ஒட்டி - இணையத்தில் பதிவேற்றுவது என்று  முடிவெடுத்தோம்.

உண்மையில் இது ஒரு மாபெரும் பணி. பல்லாயிரக் கணக்கான தேசபக்தர்கள் குறித்து நாம் தொகுக்க வேண்டியுள்ளது.  ஆயினும்  அதுவரை பொறுத்திருந்து காலத்தை வீணாக்குவதை விட, நம்மால் இயன்ற அளவில் ஆன்றோர்- சான்றோர் வாழ்க்கை குறிப்புகளை தொகுக்கலாம் என்று திட்டமிட்டோம். தமிழகத்தில் தேசியமும்  தெய்வீகமும்  இரு கண்களாகத் திகழ்ந்துள்ளதை  காட்டும் வகையில்  நமது பதிவுகள் இருக்க வேண்டும்  என்றும்   திட்டமிட்டோம்.  

அதன்படி, கடந்த ஆண்டு நமது வலைப்பூ துவங்கப்பட்டது. இது வரையிலும் 200 -க்கு மேற்பட்ட பதிவுகளுடன் நமது வலைப்பூ தனது பயணத்தைத் தொடர்கிறது. இதுவரையிலும்  மாதத்துக்கு சராசரியாக  ஆயிரம் முறை பார்வையிடும் தளமாக இந்த வலைப்பூ மாறி இருக்கிறது. எல்லாம் அன்னை பாரதியின் அருளே.

எனினும், நாம் எண்ணியதுபோல முழு வேகத்துடன் இந்த வலைப்பூவைக் கொண்டுசெல்ல முடியவில்லை என்ற மனக்குறை உள்ளது. எழுத திட்டமிட்ட பலரது வாழ்க்கை சரிதம் இன்னும் எழுதப்படாமலே உள்ளது. இன்னும் பல மகத்தான மனிதர்களின் பிறந்த நாட்களும் நினைவு நாட்களும் தொகுக்கப்பட வேண்டியுள்ளது.

இதில் ஈடுபடும் அனைவரும் தன்னார்வலர்கள் என்பதும், ஒவ்வொருவரும் பல பணிகளுக்கு இடையேதான் இப்பணியைச் செய்ய வேண்டி இருப்பதும், நமது சுணக்கத்துக்கு  காரணமாக இருந்திருக்கலாம். வரும் நாட்களில் இந்தக் குறையை நிவர்த்தி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

தேசமே தெய்வம் வலைப்பூ இணையவட்டத்தில் பிரபலமாக உதவிய தமிழ்மணம், திரட்டி, தமிழ் இன்ட்லி ஆகிய பதிவுத் திரட்டிகளும் தமிழ் ஹிந்து இணையதளமும் நமது நன்றிக்கு உரியவை. இந்த வலைப்பூ குறித்து தங்கள் தளங்களில் அறிமுகம் செய்த பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இது ஒருவகையில் பயிற்சி ஆட்டம் போலவே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் நமது பணிகள் திறம்பட நடக்க இந்த ஓராண்டுகால அனுபவம் நிச்சயமாக உதவும். இந்த அரிய, பெரிய முயற்சியில் தோள் கொடுக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நாடு நலம் பெற யார் யாரெல்லாம் பாடுபட்டார்களோ, இந்த நாட்டு மக்கள் வாழ்க்கை சிறக்க யார் யாரெல்லாம் முயன்றார்களோ அவர்கள் அனைவரையும் சிறிய அளவிலேனும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம்.

நமது சமுதாயம் அத்தகைய அஸ்திவாரக் கற்கள் மீதுதான் நிலைகொண்டுள்ளது. அவர்களை நினைவில் கொள்வது நமக்கு உத்வேகமும் பெருமித உணர்வும் அளிக்க வல்லது. இப்பணியில் அனைவரது ஒத்துழைப்பையும் நாடுகிறோம்.

நன்றி.

என,
குழலேந்தி

காண்க:

நமது நோக்கம் 

.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Vanakkam Sir, How to write in this about freedom fighters who sacrificed their life? My e-mail id is nsrajain@yahoo.co.in With regards marmiraja

கருத்துரையிடுக