வால்மீகி முனிவர்
(வால்மீகி ஜெயந்தி: புரட்டாசி- 24-பௌர்ணமி)
(அக். 11)
அன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது. பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.
”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்! கவிச்சக்கரவர்த்தி கம்பன் தமிழ் மொழியில் தனது மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது.
மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும், தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை. பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.
கம்பராமாயணத்தின் பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது -
வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)
இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது. இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.
இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும் வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது.
நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!
- ஜடாயு
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
காண்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக