டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)
நாஞ்சில் நாட்டில் தோன்றி பல சாதனைகளை படைத்த, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, இன்று 103வது பிறந்த நாள். அவர் வாழ்க்கையில் பல லட்சியங்களைக் கொண்டிருந்தார். மவுனமாக பணியாற்றி, அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வைத்தார். அவரது செயல்பாடுகளை இப்போதைய தலைமுறையினர் பின்பற்றினால் முன்னுக்கு வருவர்.
டி.வி.ஆரின் சேவைகள், படாடோபமோ, விளம்பர மோ இல்லாத ஒரு மவுனப் புரட்சி, உழைப்பு, ஊக்கம், திறந்த உள்ளம், அடுத்தவரை தன்னைப் போல மதிப்பது, வாய்மை, இவை டி.வி.ஆரோடு பிறந்த சொத்துக்கள். அவரது பொதுஜன சேவைக்கு இவையே மூலதனம். அப்பாவி போல உலகை அளந்தவர். அதனால் தான் அற்புத மனிதன் ஆனார். தமிழில் அவர் கவிமணியின் கைப்பாவையாக இருந்தார்.
90 ஆண்டுகளுக்கு முன்பு, நாகர்கோவிலைச் சேர்ந்த வடசேரியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பு பாடம் நடக்கிறது. வீரமணி அய்யர் ஆசிரியர். அன்றைய பாடம் புகை வண்டி; புகைவண்டி என்று கூறுவது ரயிலைத்தான். "ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று பையன்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். "வயலைப் பார்த்திருக்கிறோம், வெயிலைப் பார்த்திருக்கிறோம், ரயிலைப் பார்த்ததில்லை; இப்போது தான் நீங்கள் சொல்லிக் கேட்கிறோம்" என்று ஒரு பிஞ்சு பையன் வெடித்தான். "இப்போது, திருநெல்வேலிக்கு சென்றால் பார்க்கலாம். இங்கிருந்து 50 மைல் பஸ்சில் செல்ல வேண்டும்" என்றார். "அங்கு வரை வந்திருக்கும் ரயில், இங்கு ஏன் வரவில்லை?" என்றான் ஒரு மாணவன். "அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் ஆசிரியர். பிறகு முறையே வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், கேள்வி கேட்ட அந்த பிஞ்சு உள்ளம் மட்டும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் நம்மைத் தீண்டாமல் நெல்லையை எல்லையாகக் கொண்டு படுத்து விட்டதே என்ற உண்மை பையனை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பையன்தான் டி.வி.ராமசுப்பையர் என்ற பெயரோடு கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். ரயில் சிந்தனையை அவன் மறக்காமல் உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
கல்லூரி படிப்பு முடிந்து அரசு வேலைக்குச் செல்வதில் அவருக்கு கொஞ்சமும் ஆசையோ, ஆர்வமோ இல்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், ராமாயண காலத்தில் அனுமான் சேனைகள் சேது அணை கட்டியபோது, அணில் தன்னால் முடிந்தளவு மணலில் புரண்டு அந்த மண்ணை குவித்ததாகச் சொல்வார்களே, அதே வாய்ப்பாடுதான் டி.வி.ஆர்., உள்ளத்தில் குடியேறியிருந்தது. மலையாளிகள் மத்தியில் தமிழர்கள் மல்லுக்கு நிற்கும் நிலையைப் போக்கிடப் போராட்டம் தேவை. போராட்டம் என்றால், அதற்கு ஆதாரமாக பிரசாரம் இப்போதைய நாகரிகப்படி சொன்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகைகள் தான் சத்தம் போடாத பட்டாசுகள். ஆனால், ஆயிரம் பட்டாசுகளை வெடிக்கச் செய்யும் சக்தி கொண்டது. ஆதலால், பத்திரிகை வேண்டும்.
அரிஜனங்களை சகஜமான நிலைக்கு கொண்டு வருவதில், சமபந்தி போஜனம் போன்ற புதுமைகளைச் செய்து வந்தனர். பிறப்பின் பெயரைச் சொல்லி மக்களைப் பாடுபடுத்திய மூடக்கொள்கை, நம்மை விட்டு ஒழிய வேண்டுமானால், முதலில் அவர்களின் மத்தியில் கல்வி அறிவைப் புகட்ட வேண்டும். கல்வி வாசனை பெறாத அரிஜனங்களை, உயர் நிலமைக்கு கொண்டு வரமுடியாது என்ற தத்துவத்தை டி.வி.ஆர்., தமது அனுபவத்தில் கண்டார். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முக்கிய பதவி வகித்த வைத்தியநாத அய்யர், முற்போக்கு எண்ணம் படைத்த ஏ.என்.தம்பி, மனோன்மணியம் சுந்தரனார் மகன் பி.எஸ்.நடராஜபிள்ளை இவர்களுக்கெல்லாம் மேலாக திவானாகிய சர்.சி.ராமசாமி அய்யர் மற்றும் பலர் டி.வி.ஆரின் நண்பர்களாகவும், ஒரு கொள்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மூலமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமாவது, கட்டாயக் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று காய்களை நகர்த்தினார். அவர்களும் சரி என சொல்லி நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அப்போது திருவிதாங்கூர் நாயர்கள், ஈழவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய பிரிவினர்களின் ஆதிக்கத்திலிருந்தது. அந்த மூன்று பிரிவினர்களும் ஒருமித்தக் கருத்துக்கு வந்தால்தான் சட்டம் கொண்டு வரமுடியும். தவளை தண்ணீருக்கு இழுக்க, எலி வரப்புக்கு இழுக்கும் நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலை. இதனால், திட்டம் அப்படியே கருகி விட்டது. ஆனால், டி.வி.ஆர். விடவில்லை.
மேலே கூறிய கருத்து வேறுபாடுகள் இல்லாத மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். எனவே, அந்த மாவட்டத்தில் கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்திப் பார்க்கலாம் என்றார் டி.வி.ஆர்., விடமாட்டார் போலிருக்கிறதே டி.வி.ஆர்., என்று கண்ட அவர்கள், திருவனந்தபுரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்காக மட்டும் கட்டாயக் கல்வி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள மடம் என்ற கிராமப் பள்ளிக்கூடத்தில், கட்டாயக் கல்வித் திட்டம் கால் ஊன்றப்பட்டது. இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊருக்கு பத்து பேர் பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், விரிவுரையாளர்களாகவும் பெருகி இருக்கிறார்கள் என்றால் டி.வி.ஆரும், அவரது ஆதரவாளர்களும் அன்று வெள்ள மடத்தில் விதைத்ததின் விளைவால் அல்லவா.இதற்கிடையிலும், நெல்லை - குமரி ரயில் திட்டத்தை, தளர விடாமல், தன்னந்தனியாக உருப்போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதைய உலக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்து வந்தார். அவர் அரசியலில் ஆகட்டும், நிர்வாகத்தில் ஆகட்டும், முடிவு எடுப்பதில் துணிச்சல் மிகுந்தவர். பாகிஸ்தான் விவகாரங்களில், அமெரிக்கா, பாகிஸ்தான் பக்கமே சாய்ந்திருந்தது. இந்திராவின் ராஜ தந்திரத்தால், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் தனி நாடாக பிரிந்தது. இது, பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பெரிய அடியாக மாறியது. அமெரிக்கா கோபமடைந்து, அவர்களது கப்பற்படையை இந்தியா பக்கம் திருப்பியது.
அதற்கு பதிலடியாக, தங்கள் கப்பல் படையை அனுப்புகிறோம் என்று ரஷ்யா, இந்தியா பக்கம் தலை வைத்தது. பெரிய போராக கூட வந்து விடுமோ என்று உலகம் எதிர்பார்த்தது. கடற்படை தாக்குதலை சமாளித்து, வெற்றிபெற என்னனென்ன தேவை என்பதை இந்திய ராணுவ அதிகாரிகளோடு, ராப்பகலாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். கடற்படை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால், கன்னியாகுமரி பகுதிகளில் போர்த் தளவாடங்களை குவிப்பதற்கான போக்குவரத்து வசதி இல்லை. போர்முனைக்கு தளவாடங்கள் செல்ல வேண்டுமானால், ரயில் வசதி முதன்மையானதும் முக்கியமானதாகும். அதனால், உடனே ரயில் பாதைக்கான கட்டுமான வேலைகளை துவக்க வேண்டும் என்று ராணுவம் கருத்து தெரிவித்தது. இத்திட்டம் எப்படியோ டி.வி.ஆரின் காதுக்கு எட்டியது. உற்சாகம் வந்தது; ஊக்கம் ஏற்பட்டது.'
வாரக் கணக்கில் டி.வி.ஆர்., டில்லியில் தங்கியிருந்து, அங்குள்ள தமிழக எம்.பி.,க்களை ஒன்று திரட்டி, தவம் இருந்தார். டிராபிக் சர்வே, இன்ஜினியரிங் சர்வே என்று திட்டம் தீப் பிடிக்க ஆரம்பித்து விட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில், நாகர்கோவிலிலிருந்து - கன்னியாகுமரிக்கு ஒரு பாதை, திருவனந்தபுரத்திற்கு ஒரு பாதை, அதுவும் அகல ரயில் பாதையாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை திட்டம் உருவெடுத்து, பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கின. இப்போதுதான் டி.வி.ஆரின் மனம் குளிரத் துவங்கியது. கனவு உலகில் ஓடிய ரயில், கண்முன் ஓடப்போகிறது என்று சந்தோஷமான சந்தோஷம்.
இதற்கிடையில், கொச்சி என்ற மலையாள சமஸ்தானத்தை திருவிதாங்கூரோடு தந்திரமாக இணைத்து விட்டார்கள். அதனால், திருவிதாங்கூர் மலையாளிகளின் பலம் இரட்டிப்பானது. திருவிதாங்கூரில் தமிழர்களின் நிலை படுபாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருந்தது. இந்த இழிநிலைக்கு ஒரு வழிகாண வேண்டும் என்று சிந்தித்தார். ஏற்கனவே நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி, சிதம்பரநாதன் போன்ற பெரும் புள்ளிகள் தமிழர் பகுதியை தமிழகத்தோடு இணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் போர் சத்தம் அப்படி அப்படியே வெளியே தெரியாமல் மங்கி வந்தது.
தமிழர்க்கு என பிரசாரம் செய்ய சொந்தமாக பத்திரிகை வேண்டும். மலையாளிகளின் பொய், புளுகுகளை தவிடு பொடியாக்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார் டி.வி.ஆர்., அதே ஆவேசம் மழைத்துளி போல் தோன்றி மறையவில்லை அச்சாணியாக பதிந்து விட்டது.பத்திரிகை துவங்குவதற்கான ஆயத்தங்களுக்கு முழுவீச்சாக இறங்கினார். 'தினமலர்' என்ற ராசியான பெயரும் தெய்வாதீனமாக அவர் மனதில் பட்டது. 1951 செப்டம்பர் 6ம் தேதி, 'தினமலர்' மார்க்கெட்டிற்கு வந்து, வாசகர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.
டி.வி.ஆர்., எதையுமே திட்டமிட்டுச் செய்வார். அவரிடம் அவசர புத்தி கிடையாது.
தினமலரால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும், அந்த நஷ்டத்தை தாங்க முடியுமா என்று அவரே கணக்குப் போட்டு, அதற்கான நிதியை ஒதுக்கி வைத்துக் கொண்டார். பத்திரிகைகளுக்கு ஆணிவேராக இருப்பவர்கள் முகவர்கள். முகவர்கள் கறாராக இருந்தால்தான், வண்டி தடம்புரளாமல் ஓடும். முகவர்கள் பணபாக்கி விஷயமாக அவர்களிடமிருந்து வரும் வாய்தா கடிதங்கள் வேடிக்கையாக இருக்கும். அதையும் டி.வி.ஆர்., சிரிப்போடு ஏற்றுக்கொள்வது டி.வி.ஆரின் மனப்பக்குவத்தையும் பறைசாற்றும் மலை இடிந்து விழுந்தாலும் தலை சாயாமல் நிமிர்ந்து எதிர்கொள்ளும் வீரகுணம் அவரோடு பிறந்தது. அதுதான் கடவுள் அவருக்குக் கொடுத்த வரம் என்று கூறலாம். பிரச்னையைக் கண்டு அஞ்ச மாட்டார். புன்சிரிப்போடு ஆலோசித்து தீர்வு காண்பார்.
- சி.உமைதாணு
நன்றி: தினமலர்
காண்க:
டி.வி.ராமசுப்பையர் (விக்கி)
T.V.RAMASUBBAYAR
Dinamalar Founder
தினமலர்
1 கருத்து:
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .
உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....
குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.
See this site :
http://www.vallalyaar.com/
கருத்துரையிடுக