நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.1.12

தேசபக்தர்களின் பக்தர்


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(பிறப்பு: ஜன. 23)


இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...


ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!

கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!

``லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!

சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!

`குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

`நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!

போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!

ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!

`இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!

காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!

சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!

பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’

ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!

பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!

டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!

`ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.

நன்றி: ஆனந்த விகடன்


15.1.12

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


செங்கதிர்த்தேவன் 
சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்... 
அவன் எங்களறிவினைத் 
தூண்டி நடத்துக!

-காயத்ரி மந்திர விளக்கம்.

தமிழில் மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதத்தில்) 

அனைவருக்கும் இனிய சங்கராந்தி, பொங்கல் நல்வாழ்த்துக்கள்!5.1.12

தந்தையின் தியாகம்...தனயனின் தீரம்

குரு கோவிந்த சிம்மன்

மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக்கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர். அவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ஆன்ம பலத்தின் பெருமையை உலக்கு உணர்த்திய ஒப்பற்ற மகான் அவர்.

கி.பி.1622-ஆம் ஆண்டு சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோவிந்தின் கடைசிப் புதல்வராக அம்ருதசரசில் தேக் பகதூர் பிறந்தார். தேக் பகதூர் என்றால் நலிந்தவரின் ஊன்றுகோல் அல்லது நண்பன் என்று பொருள்படும். ஹர் கோவிந்தின் மூத்த மகன் பாபா குர்திதா அவருக்கு முன்னாலேயே இறந்து விட்டபடியால் குர்திதாவின் மகனான ஹர்ராயை அடுத்த குருவாக நியமித்தார் குரு. ஆனால் அவரும் தனது முப்பதாவது வயதில் இறக்கவே, அவரது ஐந்துவயது மகன் ஹர்கிஷன் அடுத்த குரு ஆனார். ஆனால் குரு ஹர்கிஷன் எட்டு வயதில் இறக்கவே. அவருக்கு அடுத்த ஒன்பதாவது குரு ஆனார். தேக் பகதூர் ஹர்கிஷனுடைய தாத்தாவின் இளைய சகோதரர் தேக் பகதூர்.

அப்போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியில் தேக் பகதூர் கண்டு பிடிக்கப்பட்டு ஒன்பதாவது குருவானார். மகன்ஷா என்ற பஞ்சாபி வணிகர் ஒரு சீக்கியர். கடலில் அவரது சரக்குக் கப்பல் முழ்கும் அபாயத்தில் இருந்தது. அப்போது குருவை வேண்டி, புயலிலிருது தப்பிக் கப்பல் கரை வந்து சேர்ந்தால். குருவுக்கு ஐநூறு பொன் மோகராக்கனை காணிக்கையாகச் செலுத்துவதாக நேர்ந்து கொண்டார், அவர்.

கப்பலும் குருவருளால் கரை சேர்ந்தது. குருவை காணப் பஞ்சாப் வந்து சேர்ந்த போது ஹரி கிஷனது மரணச் செய்தியையும் அடுத்த குரு பக்கலா கிராமத்தில் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டார். அந்த வணிகர். அங்கே பலர் தாங்களே குரு என்று ஏழை எளியவர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, உண்மையான குருவை கண்டுபிடிக்க ஒரு வழியை கையாண்டார். குருவெனக் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு சாதுவுக்கும் ஒரு மோகரா கொடுத்தார். யாரும் மீதம் 449 மோகராக்களைக் கேட்கவில்லை. வேறு யாராவது பாபா உண்டா என்று தேடிய போது தியானத்திலேயே பொழுதைக் கழிக்கும் தேக் பகதூரிடம் வந்து சேர்ந்தார். அவருக்கும் ஒரு தங்க மோகராவைக் கொடுத்தார்.

தேக் பகதூர் புன்சிரிப்புடன் ""நேர்ந்து கொண்ட காணிக்கை ஐநூறு மோகராக்களல்லவா?'' என்று கேட்டார். மகன்ஷா மிகுந்த பக்தியோடும் மகிழ்ச்சியோடும் தேக் பகதூரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு பாக்கி தொகையைக் கொடுத்துவிட்டு மொட்டைமாடியில் ஏறி நின்றுகொண்டு குரு லடோ ரே (குருவை கண்டு பிடித்து விட்டேன்'") என்று பலமுறை உரக்கக் கூவினார். உடனேயே ஊர் கூடிவிட்டது. அனைவரும் குருவின் பாதங்களினல் விழுந்து வணங்கிப் பின் அவரைக் குரு பீடத்தில் அமர்த்தினார்கள். அவரது தந்தை குரு ஹர்கோவிந்த் இறந்தபோது, தேக் பகதூரின் வயது 23. தந்தை விருப்பப்படி குகாரி என்ற பெண்னை மணந்தார்.

ஹர்கோவிந்தின் ஆணையை ஏற்று தன் தாய் நான்கியோடும் மனைவியோடும் பத்தொன்பதாண்டுகள் பக்காலாவில் அமைதியாக தியானம் ஜபம், தவத்தில் ஈடுபட்டு 1664-ல் தனது 42வது வயதில் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக ஆனார். பதினொரு ஆண்டுகள் ஒப்பற்ற குருவாக விளங்கினார். 1675-ஆம் ஆண்டு அவுரங்கசீபின் கொடுமையை எதிர்த்துத் தன் உயிரையே மக்களுக்காகத் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கை ஒரு வீரக்கதை ஆனால் நம் நெஞ்சை நிறைக்கும் சோகக் கதையும் கூட.

சீக்கியர்களுக்கு குருநானக்கிலிருந்து குரு கோவிந்த சிம்மன் வரை பத்து குருக்கள், ஐந்து வயதில் குருவாகி, எட்டு வயதில் மறைந்த குரு ஹரிகிஷனைத் தவிர, பிற குருக்களின் சேவை மகத்தானது. ஜாதி மத பேதமற்ற தெய்வத் தேடலை லட்சியமாகக் கொண்ட ஒரு மதத்தை ஸ்தாபித்தார். நானக். குரு அஙகத் குருமுகி லிபியை ஆக்கியவர். குரு அமர்தாஸ் பொது உணவுக் கூடத்தை அமைத்தார். குரு ராமதாஸ் அம்குருதசரஸ் குளத்தை வெட்டினார். குரு அர்ஜுன் தேவ் ஆதி கிரந்தத்தைத் தொகுத்தார். குரு ஹர்கோவிந்த் சாதுக்களைப் போர்வீரர்களாக்கினார். குரு தேக் பகதூர் தர்மத்தைக் காக்கக் தன் உயிரையே தியாகம் செய்தார். குரு கோவிந்த சிம்மன் கல்சாவைத் துவக்கி, மக்களைத் தெய்வ பக்தர்களாகவும், தேசத்திற்காக ஒரு நொடியில் தங்கள் உயிரைக் கொடுக்கச் சித்தமான வீரர்களாகவும் செய்தார்.

குருவான உடன் முதற்காரியமாக அவர் ஆற்றிய பணி கிரத்பூருக்கு வெளியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் கலூர் ராஜா அளித்த ஒரு பரந்த நிலத்தில் அனந்தபூர் என்ற புதிய நகரத்தை உருவாக்கியது. குரு ஆற்றிய மற்றொரு பெருந் தொண்டு பஞ்சாபிலுள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களிடையே மதஒற்றுமை, சமுதாய நம்பிக்கை முதலியவற்றைப் பரப்பினார். சென்ற இடமெல்லாம் கிணறுகளும் குளங்களும் வெட்டச் செய்தார். வறியவர் பசி தீர்த்திடப் பொது இலவச அன்னதானக் கூடங்கள் (லங்கர்) திறந்து வைத்தார். பிறகு டெல்லி, குருசேத்திரம், ஆக்ரா, பிராயகை, காசி, கயா, பாட்னா சென்று தங்கினார்.

பாட்னாவில் தனக்கு மகன் பிறந்ததும் அங்கு சென்று சில காலம் தங்கினார். பிறகு அனந்தப்பூருக்குத் திரும்பினார். பாட்னாவிலிருந்து குடும்பத்தையும் அனந்தபூருக்கு அழைத்து வந்து மகன் கோவிந்தராயை நன் வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். பஞ்சாபிலும் பிற இடங்களிலும் மொகலாயர் கொடுமையும், பலவந்த மத மாற்றங்களும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தன. குறிப்பாகக் காஷ்மீரில் ஹிந்துக்களின் வாழ்க்கை நரகமாகியது, ஹிந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டன அங்கெல்லாம் மசூதிகள் எழுந்தன. அந்தணர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் காஷ்மீர ஆளுநர் ஷெர்கான் மத மாற்றம் செய்த இந்துக்களின் பூணூல் மட்டும் ஒன்றே கால் மாண்டு எடை அளவு இருந்ததாம்.

காஷ்மீரை முஸ்லிம் நாடாக மாற்றிவிட்டால், இந்தியாவின் பிற பாகங்களும் எளிதில் மாறிவிடும் என்று நினைத்தான் அவுரங்கசீப், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் சீற்றமுற்ற அவன் மதம் மாறுவதற்கு ஆறு மாதத் தவணையளித்தான். இல்லையெனில் தண்டனை. இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு காஷ்மீர் பிராமணப் பிரமுகர்கள் குரு தேக் பகதூரிடம் வந்து முறையிட்டனர். அவர்களது துன்பத்தைக் கேட்டு குருவின் உள்ளம் உருகியது. கோவிந்தராய் நுழைந்து தந்தையின் கவலைக்கு காரணத்தை வினவினான். காஷ்மீர் இந்துக்களுடைய துன்பத்தைக் குரு எடுத்துக் கூறி அவர்களுடைய துன்பம் நீங்க ஒரே வழி ஒரு மகாத்மா அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று முடித்தார்.

அப்போது வருங்கால கோவிந்த சிம்மன் ""குருவே பிறர் துன்பம் துடைக்க உயிர்த்தியாகம் செய்யத் தங்களைவிடப் பூரண மனிதன் யாருளர்? என்று கேட்டான். குருவும் தந்தையுமான தேக் பகதூர் முகம் மலர்ந்து கோவிந்த ராயின் சொல்லைத் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு உயிரை அர்பணிக்கச் சித்தமானார். மகனிடம் சொன்னார். ''என் உயிர்த் தியாகத்திற்கு பின் நீ ஆன்மிக நெறியைப் போதிப்பாய் அத்துடன் நாடு உயிர்த்தெழ வாள் பிடித்து போரும் செய்வாய் என்பதில் எனக்கு ஐயமில்லை'' என்று.

பிறகு தாயியிடமும் மனையிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு பாய் மட்டி தாஸ் பாஞூ குருதித்த, மற்றும் மூன்று சீடர்களோடு டெல்லிக்கு புறப்பட்டார். காஷ்மீரப் பிராமணர்களை அவரங்கசீபுக்கு. குரு தேக் பகதூர் இஸ்லாமைத் தழுவினால், நாங்கள் அனைவரும் அவரை பின்பற்றுவோம். என்று தெரிவிக்கச் சொன்னார். அதைக் கேட்டு அவுரங்க சீப் மகிழ்ந்தான்.

குரு டெல்லிக்கு வந்ததும், அவரைக் கைது செய்து சிறையில் இட்டான். பிறகு குருவுக்குப் பட்டமும் பதவியும் வேண்டியதெல்லாம் தருவதாகவும் சொல்லிப் பார்த்தான் குரு எதற்கும் மசியவில்லை, பிறகு அச்சமூட்டிப் பார்த்தான் பாய் மட்டி தாஸை ரம்பத்தால் இருபாதிகளாக அறுக்க செய்தான் பாய் சதிதாஸை பஞ்சில் சுற்றி எரிக்கச் செய்தான். குரு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் சலனமில்லாமல் அவரையே இரும்புக் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்தான் பாதுஷா. குரு மனங்கலங்கவில்லை. சிறையிலிருந்தே ஒரு தேங்காய், ஐந்து பைசாக்களை மந்திரம் ஓதி, கோவிந்த சிம்மனுக்கு அனுப்பினார். இச் சடங்கு அடுத்த குரு நியமனத்தை உறுதிப்படுத்தும் ஒன்று. இனி, குரு மனம் மாறமாட்டார் என்பதை உணர்ந்த அவுரங்கசீப், அவருக்கு மரண தண்டனை விதித்தான்.

அப்போது அனந்தபூரிரிலிருந்து வந்த தூதன் பாய் ஜேத்தாவிடம் குரு சொன்னார்: ''என் இறுதி நேரம் வந்து விட்டது. என் தலை துண்டிக்கப்படும்போது அருகிலேயே இரு. என் தலை என் மடியிலே விழும் எதற்கும் அஞ்சாமல் அதை எடுத்துக்கொண்டு அனந்தபூருக்குப் போ. அங்கே என் மகன் அதனை தகனம் செய்வான்"". இரும்புக் கூண்டிலிருந்து வெளியே வந்த குரு குளித்து விட்டு அங்கிருந்த ஆலமரத்தடியில் ஜபம் செய்யத் தொடங்கினார். சமாதி நிலையில் அவர் தலையைத் தாழ்த்திய போது கொலையாளி ஆரம்ஷா அவரது தலையைத் துண்டித்தான். இக்கொடுமையை பார்க்க வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை பாய்ஜேத்தாவின் மடியில் விழுந்தது.

அப்போது அதுவரை டெல்லி கண்டிராத ஒரு புழுதிப் புயல் எழுந்து எங்கும் கவிந்தது. பாய்ஜேத்தா யார் கண்ணிலும் படாமல் அனந்தபூரை நோக்கி விரைந்தான்.

தலையற்ற குருவின் சடலத்தை ஓர் எளிய சீக்கிய வண்டிக்காரன் பஞ்சும் தானியங்களும் ஏற்றபட்டிருந்த வண்டியில் மறைத்துக் கொண்டு டெல்லியிலிருந்து வெளியேறி, ரய்சினாமேட்டில் தங்கள் குடிசை ஒன்றில் வைத்து யாரும் சந்தேகப்படாமல் இருக்கும் பொருட்டுத் தங்கள் குடிசையோடு கொளுத்திவிட்டான். மறுநாள் காலை குருவின் அஸ்தியை ஒரு செப்புத் குடத்திலிட்டு, அங்கேயே புதைத்துவிட்டு, கோவிந்த சிம்மனிடம் சென்று தெரிவித்தான். அந்த இடத்தில் தான் இன்று குருத்வாரா 'ராக்கப் கஞ்ஜ்' நிற்கிறது.

குரு தேக் பகதூர் கொலை செய்யப்பட்ட நேரம் மாசி மாதம், சுக்லபட்ச பஞ்சமி ததி வியாழக்கிழமை, பிற்பகல் நவம்பர் 11, 1675 அப்போது அவருக்கு வயது 53. தெய்வ சிந்தனையைத் தவிர வேறெதற்கும் இதயத்தில் இடங்கொடாத உத்தம ஞானி தேக் பகதூர். இறைவனைப் பாடிய இன்னிசைக் கவிஞர். இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் அவனை அங்கேயே காணலாம் என்று ஒரு பாடல்:

"உள்ளும் புறமும் உறையும் அவனை
எங்கே தேடிச் செல்லுகிறாய்?
எள்ளுக்குள்ளே எண்ணெயைப் போல்
மலருக்குள்ளே மணத்தைப் போல்
இதயத்துள்ளே இருப்பவனை
எங்கே தேடிச் செல்லுகிறாய்?
நானக் அருளிய நல்மொழியை
நன்றாய் அறிந்து நலம் பெறுவாய்!

உலகைப் படைத்துக் காக்கும் இறைவனது வழிகளை நாம் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது. நாம் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் அவனது பதமலர் பற்றி அவனிடம் பூரண நம்பிக்கையுடன் வாழ்வதே.

" கடவுளின் வழிகளைக் கண்டவர் யார்?
தனித்து வாழும் தவசியும் ஞானியும்
தரணியில் எவரும் அறியார் அவன் செயல்
பிரபுவாய் ஆக்குவான் பிச்சைக்காரனை
அரசனை ஆண்டியாய் ஆக்குவான் கணத்துள்
அனைத்தும் அவனது வழிகள் அன்றோ,
உலகைப் படைத்த உயர்ந்தவன் அவனே!
என்றும் அதனைக் காப்பதும் அவனே
ஆயிரமாயிரம் அளவிட முடியா
வடிவமும் பற்பல வண்ணமும் உடையான்
ஆயினும் அனைத்துக்கும் அப்பால் நிற்பவன்
மாயமும் மயக்கமும் தந்ததும் அவனே
மயக்கம் தெளிந்தவன் மலரடி பற்றி
மாண்புற வாழென நானக் சொல்கிறான்''

இந்த உலகம் ஒரு கணவு ஒரு மணல் வீடு,
நொடிப்பொழுதில் சரிந்து விழும்.
இறைவனின் திருப்பெயர் ஒன்றே சதம் என்கிறார். தேக் பகதூர்:

"உண்மையை உணர்வாய் உலகொரு கனவே
விழித்தெழு விடுபடு,
மணல் வீடு கட்டி வாழ்வது எப்படி?
நாலே நாட்களில் நசித்து வீழந்திடும்.
இன்பங்கள் உலகினில் இத்தகையனவே
இவற்றில் வீழும் இழிநிலை வேண்டாம்.
இறைவன் நாமத்தை இதயத்தில் இருத்தி
இடைறாது ஜபித்து ஏற்றம் பெறுவாய்
முயன்று முன்னோர் கண்ட வழிஇது.
நானக் காட்டும் நல்வழி இதுவே!'


(குறிப்பு: பாடல்கள் இயற்றிய சீக்கிய குருக்கள் யாராயினும் நானக்கின் பெயரிலேயே பாடினார்கள்)
மரணத்தைச் சந்திக்கும் முன் குரு தேக் பகதூர் பாடிய இறுதிப்பாடல்:

"இறைவன் நாமத்துக் கிணையாக
எதுவும் உண்டோ இப்புவியில்
துயரமும் குறைகளும் எல்லாமே
தொலைந்து மறையும் அச்சொல்லால்
இறைவன் தரிசனம் கிட்டிவிடும்
இதனினும் இன்பம் வேறுள்ளதோ?

பத்தாவது குருவும் அவரது மகனுமான குரு கோவிந்த சிம்மன் பாடிய பாடல்:

" உடலெனும் சட்டியை அவுரங்கசீப்
பாதுஷாவின் தலையில் உடைத்துவிட்டு,
அவர் பரலோகம் சென்றார்.
தேக்  பகதூரின் தியாகத்திற்கு
இணையாக உலகில் வேறெவரும் இல்லை.
குருவின் மரணத்திற்காக
மண்ணுலகில் ஓலக்குரல், அழுமை,
ஆனால் விண்ணுலகிலோ
பேருவகை, பெருமகிழ்ச்சி..''


பாடல்களின் தமிழ் வடிவமும், கட்டுரையும்: மு.ஸ்ரீனிவாஸன்

நன்றி: தினமலர்

குறிப்பு:

சீக்கியர்களின்  பத்தாவது குருவான குரு 
கோவிந்த சிம்மன்,  ஆங்கிலத் தேதிப்படி டிச. 22 ,1666 -ல் பிறந்தவர். எனினும், சீக்கியர் பஞ்சாங்கப்படி அவரது பிறந்த நாள் விழா ஜனவரி 5 -ல் வந்துள்ளது.
குரு கோவிந்த் நினைவாக, அவரது தந்தை பற்றிய கட்டுரை இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

காண்க:

குரு கோவிந்த சிம்மன் (விக்கி)

GURU GOBIND SINGH

SIKHISM

Guru Gobind Singh Jeyanthi

.

3.1.12

நடைபாதை அமைத்தோரை நன்றியுடன் நினைவுகூர்வோம்!முன்னுரை:

இன்று நாம் நடை பயிலும் பாதை முன்பு கல்லும் முள்ளுமாகக் காட்சி அளித்த கரடு. அதில் ஒற்றையடிப்பாதையாக நடந்தவர்கள் பலர். அதை சீர்திருத்தி சாலையாக்கியவர்கள் பலர். அந்தப்  பாதையில்   செல்லும் நாம்,  அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!

இந்தப் புதிய பகுதி, இனி ஆங்கில மாதந்தோறும் முதல் நாளில் வெளிவரும். ஜனவரி மாத நன்றிக்குரியவர்கள் பட்டியல் இது...


பிறந்த நாட்கள்:

ஜனவரி 1 - மகாதேவ தேசாய்
(காந்திஜியின் தனி செயலாளர்)

ஜனவரி   3   -  வீரபாண்டிய கட்டபொம்மன்
(ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்ட மறுத்த தமிழகத்தின் மாவீரர்)

ஜனவரி  4  - லூயி பிரெய்லி
(பார்வையற்றோருக்கான எழுத்துக்களை வடிவமைத்தவர்)

ஜனவரி  8 - ஸ்ரீ ரமணர்
(ஆன்மிக அனுபவத்தின் எளிமையான வடிவம்)

ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தர்
(தேசத்தை விழிப்புணர்வடையச் செய்தவர்)

ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
(தமிழகத்தின் முகவரியானவர்)

ஜனவரி 17 - எம்.ஜி.ராமசந்திரன்
(ஏழைகள் மனதில் மறக்க முடியாத முதல்வர்)

ஜனவரி 18 -  மகா கோவிந்த ரானடே
(மகாராஷ்டிர  மாநில விடுதலை வீரர்)

ஜனவரி 19 -  ஜேம்ஸ் வாட்
(நீராவி இயந்திரத்தை வடிவமைத்தவர்)

ஜனவரி 23 -  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 
(மறவழியில் தேசம் காக்க முயன்றவர்)

ஜனவரி  26 -  தியாகி சங்கரலிங்கனார்        
(தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டி  உயிர் துறந்தவர்)

ஜனவரி 27 - சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தர்
(தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய துறவி)

ஜனவரி 28 - லாலா லஜபதி ராய்
(விடுதலைப் போராளிகளின் தாத்தா) 

ஜனவரி 30 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 
(அமெரிக்க முன்னாள் அதிபர்) 


நினைவு நாட்கள்:


ஜனவரி 2 -  மகாவித்துவான் தொ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(தமிழ் இலக்கியத்தின் முன்னோடி) 

ஜனவரி 4 -  ஜி.டி.நாயுடு
(சிந்திக்கச் சொன்ன சுதேசி விஞ்ஞானி)

ஜனவரி 10 - லால் பகதூர் சாஸ்திரி
(எளிமையின் வடிவமான் முன்னாள் பிரதமர்)

ஜனவரி 11 - திருப்பூர் குமரன்
(தேசியக் கொடிக்கு அர்ப்பணமானவர்)

ஜனவரி 16 - மகா கோவிந்த ரானடே
(விடுதலைப் போராட்ட கால சீர்திருத்தவாதி)

ஜனவரி  17 - நமச்சிவாய தேசிகர்
(திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்- குருபூஜை நாள்: தை 3)

ஜனவரி 21 - ராஷ் பிஹாரி போஸ்
(இந்திய தேசிய ராணுவத்தின் ஆரம்ப நிறுவனர்)

ஜனவரி 21 -  விளாடிமிர் லெனின்
(ரஷ்யப் புரட்சியின் தந்தை)

ஜனவரி 24 - வின்ஸ்டன் சர்ச்சில்
(பிரிட்டன் முன்னாள் பிரதமர்)

ஜனவரி 26 - எட்வர்ட் ஜென்னர்
(அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி)

ஜனவரி 30 - மகாத்மா காந்தி
(நாட்டின் தந்தை)

ஜனவரி 30 -  ஓர்வில் ரைட்
(விமானத்தை முதலில் வடிவமைத்தவர்)