நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
போர்ப்படை நாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர்ப்படை நாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.1.12

தேசபக்தர்களின் பக்தர்


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(பிறப்பு: ஜன. 23)


இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...


ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!

கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!

``லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!

சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!

`குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

`நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!

போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!

ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!

`இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!

காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!

சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!

பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’

ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!

பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!

டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!

`ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.

நன்றி: ஆனந்த விகடன்


17.6.11

இந்தியாவின் வீரப் பெண்மணி


ஜான்சிராணி லட்சுமிபாய்
(பலிதான தினம்: ஜூன் 17)

இந்தியப் பெண்களின் வீரம் உலகில் வேறு யாருக்கும் சளைத்ததல்ல என்று ஆங்கிலேயே  அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சிராணி லட்சுமிபாய். வியாபாரம் செய்யவந்த வெள்ளையன் சிறுகச் சிறுக நாட்டை ஆக்கிரமித்து, ராஜ விவகாரங்களில் தலையிடத் துவங்கிய காலகட்டத்தில், ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இந்திய மன்னர்களில் முதன்மையானவர் ஜான்சிராணி லட்சுமிபாய். நாட்டின் உரிமைக்காக போர் நடத்தி தன் இன்னுயிரையும் போர்க்களத்தில் அவர் இழந்தார். அதன் காரணமாகவே, இன்றும் நமது மகளிரின் லட்சிய நாயகியாக இவர் போற்றப்படுகிறார்.

1835, நவ. 19 ல், வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்குப் பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா.  தனது 4 வயதில் தாயை இழந்தார். சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். 

ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 ல் மணிகர்ணிகாவை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை.  மணிகர்ணிகா லட்சுமிபாய்,  ஜான்சியின் ராணியானார். 1851 ல் அவருக்குப் பிறந்த மகவு  4 மாதங்களில் இறந்து போனது. 

1853 ல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். இதனால் தனது நாட்டின் வாரிசு வேண்டித் தனது தூரத்து உறவினச் சிறுவனான தாமோதரராவ் என்பவனைத் தத்தெடுத்தார். நவ. 21, 1853 ல் மன்னர் இறந்தார். மன்னர் கங்காதரராவ் மறைந்தபின், அவளது வளர்ப்பு மகன் தாமோதரராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினாள் ஜான்சிராணி. கணவரும்  விரைவில் இறந்துபோக தனிமரமான மணிகர்ணிகா, (1853 இல்) ஜான்சிராணியானார். 

அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி பிரபு,  வாரிசு இல்லாத ராஜ்ஜியங்களை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்றார். அதற்காக,   கிழக்கு இந்திய கம்பெனியின் 'டாக்டிரின் ஆப் லேப்ஸ்' என்ற சட்டத்தின் படி, இந்த தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.  

"ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்" என உரிமை கொண்டாடி வந்த பிரித்தானியர் ஜான்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர்.  ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமிபாய்.

தனது நாட்டை விட்டுக்கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லட்சுமிபாய்,  தனது படை வீரர்களை முன்னின்று வழிநடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும்,  மிகத் துணிச்சலுடனும் போர் புரிந்தார்.  பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு,  முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார். ஜனவரி 1858 ல் பிரித்தானியப் படையினர்  ஜான்சியை நோக்கி முன்னேறி இரு வாரங்களில் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் ராணி தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு வெளியேறி 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்த தந்தியாதோபே  என்பவருடன் இணைந்தாள். (இவரும்  பின்னர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்).

வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது.  'கோட்டாகி சேராய்' என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சிராணி போரிட்டார். வெள்ளையர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்றார்,  ஜான்சி ராணி.  பிரித்தானியர் குவாலியரை மூன்று நாட்களுக்குப்  பின்னர் கைப்பற்றினர். 1858, ஜூன் 17 ம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து,  வீரமரணம் அடைந்தார் ஜான்சிராணி லட்சுமிபாய். அப்போது அவருக்கு வயது 22 மட்டுமே.


பாரத விடுதலைக்காக நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் ஜான்சிராணியின் வீரம் செறிந்த போர் பிரதான இடம் வகிப்பதாகும். அந்தப் போர் தோல்வியுற்றாலும், பின்னாளில் சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. ஜான்சிராணியின் வீரம் நமது  நாட்டுப் பெண்களுக்கு என்றும் உந்துசக்தியாகத் திகழும்.

காண்க:


26.5.11

சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர நாயகன்



'ஜெய்ஹிந்த்' 
செண்பகராமன் பிள்ளை

நினைவு  நாள்:  மே 26

 " ஜான்சி! கவலைப்பட வேண்டாம் எனக்காக நீ உனது கடமைகளை செய்தாயா?" என்றவாறே தனது வலது கையை மெதுவாக நீட்டி, "எனது லட்சியங்களை நீ நிறைவேற்ற வேண்டும் ! " என தழுதழுத்த குரலில் வேண்டிக்கொண்டான் அந்த வீரன்.

அவனது மனைவியான லட்சுமிபாயும் தனது கைகளால் கணவரின் கையை பிடித்து சத்தியம் செய்வது போல மெதுவாக தட்டியபடி, "கட்டாயம் நிறைவேற்றுவேன்! ஆணையிடுங்கள் " என்றாள்.

தொடர்ந்தான் மாவீரன்:  " பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் அதன் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பரக்கும் கம்பீரமான யுத்தக்கப்பலில்தான் நான் பாரதம் திரும்புவேன் என்பதே எனக்கு லட்சியமும் சபதமும் ஆகும். ஆனால் இப்பொழுதுள்ள நிலைமையில் சுதந்திர பாரதத்தை காண்பதற்கு முன் இறந்துவிட்டால் எனது அஸ்தியை பத்திரப் படுத்திவை. நமது தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது சுதந்திரக் கோடிப் பறக்கும் அதே கப்பலில் எனக்காக நீ போ! நாம் பிறந்த தமிழ்நாட்டின் நாஞ்சில் பகுதியில் எனது தாயாரின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் எனது அஸ்தியின் ஒரு பகுதியை கரைத்துவிடு.  மீதியை வளம்மிக்க தமிழ்நாட்டின் வயல்களில் தூவிவிடு.  மேலும் நான் விட்டுச் செல்லும் பாரத சுதந்திரத்துக்கான பணிகளைத் தொடர்ந்து நீ செய்து நாடெங்கும் நமது சுதந்திரக் கொடி பறக்கும் என்னை நீ நினைத்துக்கொள்...

"ஜெய்ஹிந்த்" என்றே கோஷமிட்டு அந்தக் கோடியை வணங்கு!"  இவ்வாறு மூச்சுத் திணறியவாறே சொல்லி முடித்தவுடன் தனது பூதவுடலை விட்டு என்றும் அழியாத புகழுடம்பை எய்திய அந்த மாவீரனுக்கு அப்போது வயது 42. அவனது மனைவி  லட்சுமிபாய்க்கோ வயது 28.

பள்ளிப் பருவத்தில் தனது சக மாணவர்களையும், நண்பர்களையும் இணைத்து "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்ப்படுத்தி தனது தேச பக்தியை வளத்திக் கொண்டவன்.
திருவனந்தபுரம் பகுதிகளில் மிகுந்த வேதனையும்  கண்ணீருமாக நின்ற கிராமத்து அபலை  மக்களின் பொருட்களை ஆங்கிலேய அதிகாரிகள் வரிகள் என்ற பெயரில் ஜப்தி செய்ய இருந்த போது அம்மக்களிடையே வீர முழக்கமிட்டு வரிகொடா இயக்கத்தை நடத்தியவன். 
கல்லூரி காலங்களிலேயே தனது தாரக மந்திரமாக "ஜெயஹிந்த்" என்ற கோஷத்தை பிரபலமாக்கியவன்.

 17 ஆம் வயதினிலேயே 1908,  செப் 22ல் ஜெர்மனிக்கு புறப்பட்டு பாரத விடுதலைப் புரட்சிக்காக புதிய பாதையை ஐரோப்பிய நாடுகளில் திறந்து வைத்தவன்.
1912 ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீரிச் நகரிலேயே "சர்வதேச இந்திய ஆதரவு குழு"  அமைப்பை உருவாக்கி "Pro India" என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை அம்பலப்படுத்தியவன்.

ஜெர்மனி  சக்கரவர்த்தி கெய்சருக்கே  ஆலோசனை கூறுபவராக தேசப் பற்றும்  புரட்சிகரமான துணிச்சலையும் பெற்றிருந்த புரட்சிவீரன்.

1914 , செப். 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணிக்கு ஆங்கிலேயச் சென்னை நகரில் குண்டுகளை வீசி அந்நிய அரசை ஆட்டம் காண வைத்த "எம்டன் " நமது மாவீரன்.

1914, செப். 22  இரவு 3:00 மணி புதுவை துறைமுகம்;  பின்பு தெற்கு நோக்கி தூத்துக்குடி துறைமுகம்;  தென்மேற்கில் லட்சத்தீவு;  இறுதியில் திருவனந்தபுரம்,  கொச்சி கடற்க்கரை என "எம்டனில்" பயணித்த பாரத தேசத்து பெரும் வீரன்.

 ஒரு ரத்தின வியாபாரியைப் போல தலையில் பெரிய முண்டாசு தலைபாகை,  பேன்ட், கோட்டுடன் கள்ளிக்கோடு  மன்னர் யமரினை சந்தித்த சாகச வீரன்.
  1915 ,  டிச. 1 புதன்கிழமை,  ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில் உருவான "இந்தியாவின் சுதந்திர சர்க்கார்" (Provisional Government of India) ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சராய் அங்கம் வகித்த ஆற்றல் மிகு அரும் வீரன்!
  "ஒடுக்கப் பட்ட மக்கள் சங்கம் " அமெரிக்காவிலும் அமைத்து,  நீக்ரோ மக்களின் உரிமைக்காக 1919 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனை வெள்ளை மாளிகையிலேயே வாதாடிய வெற்றி வீரன்.

அறிவு திறமை, துணிச்சல் கவரப்பட்ட பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள இளம் பெண்களைப் புறக்கணித்து ,  பாரதப் " பெண்ணையே மணப்பேன்" என்ற உறுதியுடன் வீராங்கனை மேடம் காமாவின் வளர்ப்பு மகள் லட்சுமியை மணந்த பாரத மைந்தன்.
 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "இந்திய தேசிய ராணுவம்" (INA) அமைய வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் அமைந்த "இந்திய தேசிய தொண்டரணியை "(I .N .V) உருவாக்கிய உலக நாயகன்.
ஜெர்மனி  சர்வாதிகாரியாக இருந்த உலகத்தையே நடுங்க வைத்த ஹிட்லரை, இந்தியாவைப் பற்றி கூறிய தவறான கருத்துக்காக வருத்தத்தையும் மன்னிப்பையும் ஜெர்மனிலேயே கேட்க வைத்த, காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகன்.
 1934 ஆம் ஆண்டில் உயிர்நீத்த கணவரின் சபதத்தை - வேட்கையை - லட்சியங்களை. தான் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக  32 ஆண்டுகள் தவம் புரிந்து நிறைவேற்றிய வீராங்கனையான லட்சுமிபாயை மனைவியாகப் பெற்ற மனிதருள் மாணிக்கம்.

யாரிந்த மாவீரன்? புரட்சி வீரன் ? சாகச வீரன்? வெற்றி வீரன்?
யார் அந்த சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர வீரன்?

அவன் தான் தமிழினமும்,  தமிழகமும் தலை நிமிரச் செய்த ஜெய்ஹிந்த்' செண்பக ராமன் பிள்ளை!

 அவரது நினைவு நாளில் (26-05-1934)  அவர்  செய்த யாகங்களை போற்றிடுவோம் ! ஆற்றல் மிகு இளையசமுதாயத்தை உருவாக்கிடுவோம்! 

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத் மாதா கி ஜெய்!          

- ம.கொ.சி.ராஜேந்திரன்

காண்க:








3.4.11

சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்

சத்ரபதி சிவாஜி

நினைவு தினம்: ஏப். 3

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!

அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்

செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்

தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!

தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?

நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!

சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?

பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!

சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்!

தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!

நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்

செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்

உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்

வானுறு தேவர் மணியுல கடைவோம்,
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?

ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!

தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்

இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்

பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.
- மகாகவி பாரதி 

(சத்ரபதி சிவாஜி தனது சைனியத்திற்குக் கூறியது' என்ற தலைப்பில்
 தேசிய கீதங்கள்  பகுப்பில் உள்ள கவிதை.   முற்றுப்பெறாதது).




நினைவில் வாழும் வெற்றித் திருமகன்



பீல்ட் மார்ஷல் மானேக்ஷா
பிறப்பு: ஏப். 3

  40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும்,  போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்  தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்ஷா   என்ற பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.

  இந்திய ராணுவத்தில் 2 பேர்தான் 'பீல்டு மார்ஷல்' என்ற தகுதிநிலைக்கு உயர்ந்தவர்கள். ஒருவர்,  பீல்டு மார்ஷல் கரியப்பா, மற்றவர் பீல்டு மார்ஷல் மானெக்ஷா.

  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஹோர்முஸ்ஜி மானெக்ஷா- ஹீராபாய் என்ற பார்சி இன தம்பதியினருக்கு மகனாக ஏப். 3, 1914  ல் பிறந்தார் சாம் மானெக்ஷா.

  பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க அனுப்புமாறு தனது தந்தையிடம் கேட்டார் மானெக்ஷா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர்.  1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்ஷா.

  1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. மூர்க்கத்துடன் வந்த ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த்  தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது அவர் மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை அவர் பிடித்தார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்ஷாவின் உறுதியையும், துணிந்த நெஞ்சத்தையும் பாராட்டி போர்முனையிலேயே 'மிலிட்டரி கிராஸ்' விருதை அளித்தார்.

  படுகாயமடைந்த பின் உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். பிறகு ஆஸ்திரேலியாவில் 1946-ம் ஆண்டு சுற்றுலா சென்றார்.

  தேசப் பிரிவினைக்குப் பிறகு ராணுவத்தில் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார். இதையடுத்து 1968-ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.

  7 ஜூன், 1969-ம் ஆண்டு சாம் மானெக்ஷா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவ அனுபவத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெறச் செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.

  இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்ஷா. இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது.  இதையடுத்து  ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது.

  அவரது சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு 'பத்ம விபூஷண்' விருது நமது  அரசால் வழங்கப்பட்டது. 1973, ஜன. 1-ம் தேதி அவருக்கு 'பீல்டு மார்ஷல்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார்.

  இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்து இந்தியாவின் தங்க மகனாகத் திகழந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

- க.ரகுநாதன்

காண்க: