நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.5.11

சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர நாயகன்



'ஜெய்ஹிந்த்' 
செண்பகராமன் பிள்ளை

நினைவு  நாள்:  மே 26

 " ஜான்சி! கவலைப்பட வேண்டாம் எனக்காக நீ உனது கடமைகளை செய்தாயா?" என்றவாறே தனது வலது கையை மெதுவாக நீட்டி, "எனது லட்சியங்களை நீ நிறைவேற்ற வேண்டும் ! " என தழுதழுத்த குரலில் வேண்டிக்கொண்டான் அந்த வீரன்.

அவனது மனைவியான லட்சுமிபாயும் தனது கைகளால் கணவரின் கையை பிடித்து சத்தியம் செய்வது போல மெதுவாக தட்டியபடி, "கட்டாயம் நிறைவேற்றுவேன்! ஆணையிடுங்கள் " என்றாள்.

தொடர்ந்தான் மாவீரன்:  " பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் அதன் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பரக்கும் கம்பீரமான யுத்தக்கப்பலில்தான் நான் பாரதம் திரும்புவேன் என்பதே எனக்கு லட்சியமும் சபதமும் ஆகும். ஆனால் இப்பொழுதுள்ள நிலைமையில் சுதந்திர பாரதத்தை காண்பதற்கு முன் இறந்துவிட்டால் எனது அஸ்தியை பத்திரப் படுத்திவை. நமது தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது சுதந்திரக் கோடிப் பறக்கும் அதே கப்பலில் எனக்காக நீ போ! நாம் பிறந்த தமிழ்நாட்டின் நாஞ்சில் பகுதியில் எனது தாயாரின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் எனது அஸ்தியின் ஒரு பகுதியை கரைத்துவிடு.  மீதியை வளம்மிக்க தமிழ்நாட்டின் வயல்களில் தூவிவிடு.  மேலும் நான் விட்டுச் செல்லும் பாரத சுதந்திரத்துக்கான பணிகளைத் தொடர்ந்து நீ செய்து நாடெங்கும் நமது சுதந்திரக் கொடி பறக்கும் என்னை நீ நினைத்துக்கொள்...

"ஜெய்ஹிந்த்" என்றே கோஷமிட்டு அந்தக் கோடியை வணங்கு!"  இவ்வாறு மூச்சுத் திணறியவாறே சொல்லி முடித்தவுடன் தனது பூதவுடலை விட்டு என்றும் அழியாத புகழுடம்பை எய்திய அந்த மாவீரனுக்கு அப்போது வயது 42. அவனது மனைவி  லட்சுமிபாய்க்கோ வயது 28.

பள்ளிப் பருவத்தில் தனது சக மாணவர்களையும், நண்பர்களையும் இணைத்து "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்ப்படுத்தி தனது தேச பக்தியை வளத்திக் கொண்டவன்.
திருவனந்தபுரம் பகுதிகளில் மிகுந்த வேதனையும்  கண்ணீருமாக நின்ற கிராமத்து அபலை  மக்களின் பொருட்களை ஆங்கிலேய அதிகாரிகள் வரிகள் என்ற பெயரில் ஜப்தி செய்ய இருந்த போது அம்மக்களிடையே வீர முழக்கமிட்டு வரிகொடா இயக்கத்தை நடத்தியவன். 
கல்லூரி காலங்களிலேயே தனது தாரக மந்திரமாக "ஜெயஹிந்த்" என்ற கோஷத்தை பிரபலமாக்கியவன்.

 17 ஆம் வயதினிலேயே 1908,  செப் 22ல் ஜெர்மனிக்கு புறப்பட்டு பாரத விடுதலைப் புரட்சிக்காக புதிய பாதையை ஐரோப்பிய நாடுகளில் திறந்து வைத்தவன்.
1912 ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜீரிச் நகரிலேயே "சர்வதேச இந்திய ஆதரவு குழு"  அமைப்பை உருவாக்கி "Pro India" என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமைகளை அம்பலப்படுத்தியவன்.

ஜெர்மனி  சக்கரவர்த்தி கெய்சருக்கே  ஆலோசனை கூறுபவராக தேசப் பற்றும்  புரட்சிகரமான துணிச்சலையும் பெற்றிருந்த புரட்சிவீரன்.

1914 , செப். 22 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணிக்கு ஆங்கிலேயச் சென்னை நகரில் குண்டுகளை வீசி அந்நிய அரசை ஆட்டம் காண வைத்த "எம்டன் " நமது மாவீரன்.

1914, செப். 22  இரவு 3:00 மணி புதுவை துறைமுகம்;  பின்பு தெற்கு நோக்கி தூத்துக்குடி துறைமுகம்;  தென்மேற்கில் லட்சத்தீவு;  இறுதியில் திருவனந்தபுரம்,  கொச்சி கடற்க்கரை என "எம்டனில்" பயணித்த பாரத தேசத்து பெரும் வீரன்.

 ஒரு ரத்தின வியாபாரியைப் போல தலையில் பெரிய முண்டாசு தலைபாகை,  பேன்ட், கோட்டுடன் கள்ளிக்கோடு  மன்னர் யமரினை சந்தித்த சாகச வீரன்.
  1915 ,  டிச. 1 புதன்கிழமை,  ஆப்கானிஸ்தானில் தலைநகரான காபூலில் உருவான "இந்தியாவின் சுதந்திர சர்க்கார்" (Provisional Government of India) ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சராய் அங்கம் வகித்த ஆற்றல் மிகு அரும் வீரன்!
  "ஒடுக்கப் பட்ட மக்கள் சங்கம் " அமெரிக்காவிலும் அமைத்து,  நீக்ரோ மக்களின் உரிமைக்காக 1919 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனை வெள்ளை மாளிகையிலேயே வாதாடிய வெற்றி வீரன்.

அறிவு திறமை, துணிச்சல் கவரப்பட்ட பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள இளம் பெண்களைப் புறக்கணித்து ,  பாரதப் " பெண்ணையே மணப்பேன்" என்ற உறுதியுடன் வீராங்கனை மேடம் காமாவின் வளர்ப்பு மகள் லட்சுமியை மணந்த பாரத மைந்தன்.
 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "இந்திய தேசிய ராணுவம்" (INA) அமைய வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் அமைந்த "இந்திய தேசிய தொண்டரணியை "(I .N .V) உருவாக்கிய உலக நாயகன்.
ஜெர்மனி  சர்வாதிகாரியாக இருந்த உலகத்தையே நடுங்க வைத்த ஹிட்லரை, இந்தியாவைப் பற்றி கூறிய தவறான கருத்துக்காக வருத்தத்தையும் மன்னிப்பையும் ஜெர்மனிலேயே கேட்க வைத்த, காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகன்.
 1934 ஆம் ஆண்டில் உயிர்நீத்த கணவரின் சபதத்தை - வேட்கையை - லட்சியங்களை. தான் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக  32 ஆண்டுகள் தவம் புரிந்து நிறைவேற்றிய வீராங்கனையான லட்சுமிபாயை மனைவியாகப் பெற்ற மனிதருள் மாணிக்கம்.

யாரிந்த மாவீரன்? புரட்சி வீரன் ? சாகச வீரன்? வெற்றி வீரன்?
யார் அந்த சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர வீரன்?

அவன் தான் தமிழினமும்,  தமிழகமும் தலை நிமிரச் செய்த ஜெய்ஹிந்த்' செண்பக ராமன் பிள்ளை!

 அவரது நினைவு நாளில் (26-05-1934)  அவர்  செய்த யாகங்களை போற்றிடுவோம் ! ஆற்றல் மிகு இளையசமுதாயத்தை உருவாக்கிடுவோம்! 

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத் மாதா கி ஜெய்!          

- ம.கொ.சி.ராஜேந்திரன்

காண்க:








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக