-சுவாமி விமூர்த்தானந்தர்
அண்மையில் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, தில்லியில்
மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூர நிகழ்வு. காமக் கொடூரர்களால்
சின்னாபின்னப்படுத்தப்பட்ட அந்த மாணவி இப்போது நம்மிடையே இல்லை. அந்த கொடிய
நிகழ்வு பல முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது. நமது தார்மிக
நெறிமுறைகள், பெண்களை மதிக்கும் பண்பாடு, பாரத பாரமபரியம் ஆகியவற்றை
கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது அந்த கொடிய இரவு.
இதற்கு நாம் என்ன
செய்வது? இதோ கேள்வி- பதில் வடிவில் இப்பிரச்னையை அணுகி இருக்கிறார், 'ஸ்ரீ
ராமகிருஷ்ணவிஜயம்' பத்திரிகையின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். இந்த பகுதி பிப்ரவரி மாத 'ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகையில் வெளியாகிறது. சுவாமிஜியின் அனுமதியுடன் இந்த கட்டுரை இங்கு வெளியாகிறது.
கடந்த ஆண்டில் ஒரு மருத்துவ மாணவிக்கு நடந்த கொடுமைக்கு யாரெல்லாம் பொறுப்பு?
பதில்:
அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த செய்தியால் பெருநகரங்களிலுள்ள
படித்த யுவதிகளும் இளைஞர்களும் கொதித்தெழுந்தனர். வன்கொடுமை செய்த
அக்குடிகார, காம அரக்கர்களுக்கு இரக்கமில்லாமல் விரைவில் தண்டனை தருவதுதான்
இன்றைய சமூகத்திற்கு ஏற்ற செயல். அவர்களுக்குத் தண்டனையைத் தாமதமாகத்
தருவது நீதிக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் மக்களுக்கும் செய்யக் கூடிய
அநீதிதான்.
இதற்கு மேலும் மிக மோசமானதும் நம் சமுதாயத்தைக் குறித்து
வருத்தப்பட வைப்பதும் ஒன்று உள்ளது. அந்தப் பெண் அலங்கோலமாக, கசக்கப்பட்டப்
பூவாக ஒரு மணி நேரம் தெருவில் கிடந்தபோது, அவளைக் கண்டும் காணாமல் அந்த
வழியே சென்ற, பிறரது துன்பத்தைப் பொருட்படுத்தாதச் சுயநலக் கோழைகளுக்கும்
யார் தண்டனை தருவது?
நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்பு, ஒரு முறை
பிரிட்டிஷ் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஓர் இளம் கர்ப்பிணிப் பெண்ணை
அடித்து இழுத்துச் சென்றனர். அவளைக் காப்பாற்ற யாருமில்லை. அதைப் பற்றி
அறிந்த அன்பே உருவான அன்னை ஸ்ரீ சாரதாதேவி, காப்பாற்ற அங்கு ஓர் ஆண்
மகன்கூட இல்லையா? என்று தார்மீகக் கோபத்துடன் கேட்டார்.
இதில்
பொதுமக்களுக்கு ஒரு முக்கிய பிரச்னையும் உள்ளது. எங்கே அப்பெண்ணைக்
காப்பாற்றப் போனால், போலீஸின் சிக்கலில் மாட்ட வேண்டி வருமோ என்ற நடைமுறை
அனுபவ பயம், பலருக்கும் வந்ததுதான் மிகக் கொடுமையானது. இது போன்ற
நேரங்களில் போலீஸ் நிர்வாகம் மக்களின் ஒத்துழைப்பைச் சரியாகப் பெறுகிறதா?
இவையெல்லாம் நல்லவர்களை மிகவும் வேதனைப்படுத்தக்கூடிய விஷயங்கள்.
பாலியல் குற்றங்கள் மேலை நாடுகள் போல் நமது நாட்டிலும் பெருகி
வருகின்றன. அவற்றை வெகுவாகத் தடுக்க எப்படிப்பட்ட சிந்தனைகள் நம்
இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவை?இந்தப் பிரச்னை
பற்றிப் பலரும் அவரவர் அளவில் யோசிக்கிறார்கள். பாலியல் குற்றங்கள்,
உடைதான், பிரச்னைக்குக் காரணம் - இது பலரின் கருத்து. 'இரவில் வீட்டை
விட்டு வெளியில் வருவதுதான் பிரச்னையே!' என்றார் ஆந்திராவின் போக்குவரத்துத்
துறை அமைச்சர் சத்யநாராயணா. 'பொடியுடன் வெளியில் போங்கள்' என டெல்லி
போலீஸ் தந்ததாம்! 'தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வதுதான்,
பிரச்னைக்குத் தீர்வு!' - இது பீகார் முதல்வரின் யோசனை. இந்தத் தீர்வுகள்
யாவும் ஓரளவிற்குப் புறப் பாதுகாப்புகளைத் தரலாம்.
ஆனால் நம் நாட்டின்,
பண்பாட்டின், ஆண் மற்றும் பெண்களின் மானம் காக்கப்பட வேண்டுமானால்,
ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பரஸ்பர நம்பிக்கையும் பொறுப்பும் வேண்டும்.
அப்பொறுப்பை ஆணும் பெண்ணும் மீறுவதற்கு அடிப்படையாக இருப்பது எது?
சில
ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கேம்பிரிட்ஜில் நடந்த மாநாட்டில்
மனவியல் நிபுணர்கள், மதாச்சாரியர்கள், விஞ்ஞானிகள் முதலானோர்
அமெரிக்காவின் போக்கு - The Modern American Trend என்ற தலைப்பில் ஆலோசனை
நடத்தினார்கள். ஆட்சித் திறன், அரசியல் லாபம், சுகபோகம், அறிவியல் முதலான
விஷயங்கள் பல அங்கு அலசப் பெற்றன.
எல்லாப் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும்
நிறைவுரையாகவும் சமூகவியல் அறிஞர் ஒருவர், ''நம்மில் பலரும்
டாலர் அரசனையும் காம அரசியையும்- Dollar King and Sex Queen - வழிபடுகிறோம்
என்றார். இதுதான் அமெரிக்காவின் சமுதாய, கலாச்சார மற்றும் நாட்டின்
வீழ்ச்சிக்குக் காரணம்'' என்றார் அந்தச் சமூகவியல் அறிஞர். அவர்
அமெரிக்காவைப் பற்றிக் கூறியது இன்று நம் நாட்டிற்கும் பொருத்தமாகி
வருகிறதா?
தனிமனிதனோ, சமூகமோ, நாடோ துன்பப்படுவதற்குத் தீய எண்ணங்களும்
கட்டுப்பாடற்ற ஆசைகளும் ஆதிக்க வெறிகளுமே காரணம். அந்த எல்லா வெறிகளின்
ஆணிவேராக உடல் இச்சை மற்றும் அதீத பொருளாசைகளே காரணம் என்கிறார்
ஸ்ரீராமகிருஷ்ணர். மனித மனங்களை இந்த இரு மோகங்கள் ஆட்டுவிக்கும்போது, அவன்
சுயநலமி ஆகிறான். சுயநலமிக்கவன் மனிதநேயத்தை இழந்து, மிருக நிலையைவிடத்
தாழ்ந்து போகிறான். இதன் தொடர்ச்சியாக இவை போன்ற வன்குற்றங்கள் வளர்கின்றன.
பேராசை பெருநஷ்டம் என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும்
பொருந்தும் அல்லவா!
பெண்களுக்கு எதிரான பலாத்காரத்தை
முறியடித்தேயாக வேண்டும். ஆனால் அதற்காக நடந்த போராட்டத்தில் பல
இளம்பெண்கள் தாங்கிப் பிடித்த பேனர்களிலிருந்த வாசகங்கள் உண்மையிலேயே
பெண்களை மேம்படுத்துமா?இன்றைய பெண்களுக்கு மதிப்பு இருக்க
வேண்டும். அவர்களது மானத்திற்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதற்குப்
பெண்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். பெண்கள் சரியாக மதிக்கப்பட
வேண்டும். இவ்வாறு கூறும் போதே தங்களைப் பிறர் மதிக்கும்படி பெண்களும்
நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம் ஆகிறது. பெண்கள் சரியான
மார்க்கத்தில் தான் போராடுகிறார்களா?
ஓர் இளவரசி எங்கோ ஒரு
குக்கிராமத்தில் சிக்கிவிட்டாள். அவள் யார் என்பது அங்குள்ளவர்களுக்குத்
தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, ஒரு காலத்திற்குப் பிறகு தன் பெருமை
என்னவென்பதை அந்த இளவரசியே மறந்துவிட்டாள். அப்படிப்பட்ட இளவரசி கூறுவதைப்
போல் தான், இன்றைய இளம்பெண் 'பேனர்' தூக்கிக் காட்டுகிறாள்.
இந்தப் பெண்கள்
ஏந்தும் பதாகைகளில் ஒன்று- 'தேவிகளாக்க வேண்டாம்; மனித பிறவிகளாகக்
கருதினாலே போதும்' என்று உள்ளது. பெண்களை தேவிகளாகப் பார்க்கும் நம் சமயப்
பண்பாட்டை அறியாத ஒரு சில மனித மிருகங்களால் நடத்தப்பட்ட வன்கொடுமையால்,
இந்தப் பெண்கள் இப்படி நினைக்க வேண்டியுள்ளது. பெண், தேவியின் சொரூபம்தான்
என உபதேசித்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தோன்றிய பூமியில் இப்படியும் சில
மனிதர்கள்!
பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் வெகுஜன மீடியாக்கள் மீது
இப்பெண்களின் கோபம் ஏன் திரும்புவதில்லை? அவ்வாறு காட்டும் பத்திரிகைகளை,
தொலைக்காட்சிகளை ஏன் இவர்கள் புறக்கணிப்பதில்லை? யோசியுங்கள்.
(மேலும்
ஓர் உண்மை நம் நெஞ்சை நெருக்குகிறது. நடந்த பலாத்காரம் மட்டுமே ஒட்டு
மொத்த இந்தியாவின் பிரச்னை அல்ல; கிராமப்புறத்தில் இப்படி நடந்து இருந்தால்
இப்படியான குரல்கள் எழுமா? என இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜு கூறினாரே! இதையும் நாம் யோசிக்க வேண்டும்.)
பெண்ணானவள் தனது சிறப்பியல்புகள், பெண்மைக்கே உரிய திறமைகள், பலங்கள்,
பலவீனங்கள் ஆகியவற்றை உணராதபோது அவள் என்ன செய்கிறாள்? பாரதப் பெண்ணான நம் இளம்பெண், தான் இன்றும் அந்நிய நாட்டிற்கு அடிமை என்பது
போல் அவர்களது கலாச்சாரத்தைக் கடைப்பிடித்துக் காட்டுகிறாள். மேலை
நாட்டின் அவசியமான அம்சங்களை ஏற்காமல், அவர்களின் அநாவசிய பழக்கங்களுக்கு
அடிமையாவதில் அப்படி என்னதான் மோகமோ, நம் பெண்களுக்கு!
மேலைநாட்டினர் பாரதத்தைப் பற்றி நன்கு படித்துவிட்டு நம் நாட்டிற்கு வருகிறார்கள். ஆனால் இங்கு நமது மக்களுள்
சிலர் அவர்களைப்போல் காப்பியடிப்பதைக் கண்டு திகட்டிவிடுகிறது
அவர்களுக்கு. அடுத்து, தனது திறமைகளை உணராத பெண், தான் ஆணுடன்
போட்டியிட்டால் தான் தனக்கு மதிப்பு என நினைக்கிறாள். அப்போட்டியில்
தோற்றுவிட்டால், தான் தகுதியற்றவள் என எண்ணுகிறாள். விளைவு? ஆணைப்
போட்டியாக நினைத்தாலும் பரவாயில்லை; அவனை எதிரியாகக் கருதும் அளவிற்குப்
பெண் தன்னை மறந்து பெண் என்ற குழப்ப நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
பெண்
போட்டி போடுகிறாள், இன்றைய கால கட்டம் அப்படி. அவள் ஆணின் அறிவோடும்,
திறமையோடும் போட்டியிட்டு வெல்லட்டும். பெண் ஆணின் பரபரப்பான மனநிலையுடனோ
அல்லது அவனது சாதாரண விஷயங்களுடனோ போட்டியிட்டால் பாதிக்கப்படுவது
பெண்தானே! மேலும், பெண் தனது போட்டியாக ஓர் ஆடவனைக் காணாமல், அவள் தன்
திறமைகளுடன் தானே ஏன் போட்டியிடக் கூடாது? வேறு யாருடனும் போட்டியிட
மாட்டேன். 'எனக்கு நானே போட்டி. எனது கடந்த வெற்றியை விடச் சிறந்த வெற்றி
பெறுவதுதான் என் குறிக்கோள்' என்று கூறும் பில்கேட்ஸை ஒரு கணம் நினைத்துப்
பாருங்கள்.
பெண்கள் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என ஒரு சிலர் உரக்கக் கூவுகிறார்களே?உலகம் முழுவதும் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளில் பல காலமாக நிலவி
வரும் ஆண் ஆதிக்கம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு முன் ஒன்றைச்
சிந்திக்க வேண்டும். பெண்ணின் வளர்ச்சிக்கு முதல் தடை பெண்ணே என்கிறார்கள்
பொறுப்பு மிக்கவர்கள். தனது தனித் திறமைகள், தன்னிகரற்ற இயல்புகள்,
சிறப்பம்சங்கள் - இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளட்டும்; பிறகு
வெளியுலகிற்குத் தனது சிறப்பம்சங்களைக் காட்டட்டும்.
மாறாக, மலினங்களைக்
காட்டினால், அவளது மனவளர்ச்சிக்கு அவளே முதல் தடை. உடை என்பது
சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் இருக்க வேண்டிய ஒன்று. My body
my right என்பது வாலிபத்தில் சரியாகத் தோன்றலாம். இதுபோன்ற மனநிலை
அவளை, பெண் என்ற நிலையிலிருந்து ஒரு Commodity என்ற நிலைக்குத்
தள்ளிவிடுகிறது. பெண்ணும் எப்போதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
உணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
'நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்,
என்ன வேண்டுமானாலும் செய்வேன், ஆனால், எனக்குத் தகுந்த பாதுகாப்பு தர
வேண்டும் என்றால், அப்படி ஒரு பாதுகாப்பைக் காவல் துறையாலும் தர முடியாது'
என்கிறார் திரு. ஆர்.நட்ராஜ், ஐ.பி.எஸ்., முன்னாள் டி.ஜி.பி. (நன்றி : அவள்
விகடன்.) மேலே உள்ள படத்தின் பதாகையைப் பாருங்கள். நம் இளைஞர்கள் எவ்வளவு
நேர்த்தியாகச் சிந்திக்கிறார்கள் என்பது புரியும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணை உயர்த்திப் பெண்ணைத் தாழ்த்துவதோ - பெண்ணை உயர்த்தி ஆணை இகழ்வதோ முன்னேறாத சமூகத்தின் முடக்குவாதங்கள்.
'ஆண்,
பெண் என்னும் எண்ணங்களை விட்டு, நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி
புரியவும் பிறந்திருக்கிறோம் என நினைக்க வேண்டும்' என சுவாமி விவேகானந்தர்
கூறுவதை உணர்ந்தால், ஆணினால் பெண்ணும், பெண்ணினால் ஆணும் முன்னேறுவார்கள்.
அதோடு
'பொறுப்புகளையும் உன் தோள்மீது சுமந்து கொள்' என்று அதே சுவாமிஜி
சொன்னதை நம் இளைஞர்கள் செவிமடுத்தால்... Mens Quality is also our
Responsibility - களின் தரம் எங்கள் பொறுப்பும் கூட என அப்போது பெண்கள்
நெஞ்சு நிமிர்த்தி கூற முடியும். அதற்கு ஆண்களும் Womens Diginity is also
our Responsibility - பெண்ணின் கௌரவம் எங்கள் பொறுப்பும்கூட என்று பறைசாற்ற
வேண்டும்.
இவ்வாறு ஆணும் பெண்ணும் நாட்டிற்காகப் போராடினால், நாம்
முன்னேறுவோம். இல்லாவிட்டால் ஆணோடு பெண்ணும், பெண்ணோடு ஆணுமான போட்டி
தொடர்ந்து கொண்டே இருக்கும்; முடிவே இருக்காது.
நமது பெரியோர்கள் பெண்களை எப்படியெல்லாம் மதித்திருக்கிறார்கள் என்பது நமது பெண்களுக்குத் தெரியுமா? ஒருமுறை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பர்மாவிற்கு
அழைக்கப்பட்டிருந்தார். அவரைக் கௌரவிப்பதற்காக அந்த நாட்டு வழக்கப்படி,
பெண்கள் தங்களது கூந்தலைத் தரையில் பரப்பி விட, அந்தக் கூந்தலின் மீது
தேவர் நடந்து செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட தேவர்
உடனடியாக அதை மறுத்தார். பெண்களை தேவியர்களாக மதிக்கும் நாட்டில் இருந்து
வருபவன் நான் என்று கூறி பெண்களின் பெருமைகளை விளக்கினார். அதன் பிறகே
அங்கிருந்த ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே பெண்களை மதிக்க வேண்டும்
என்று புரிந்தது.