ராணி துர்காவதி
(பலிதானம்: ஜூன் 24)
இந்தியப் பெண்கள் ஆண்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல; போர்முனையிலும் கூட சாகசங்களை நிகழ்த்தியவர்கள் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், கோண்ட்வானா ராணி துர்காவதியின் தீரம் மிகு சரித்திரம்.
ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, சந்தேல் மன்னர் பரம்பரையில் மன்னர் கீர்த்திராயின் மகளாக 1524 , அக்டோபர் 5 ல் பிறந்தார் துர்காவதி.
சந்தேல் மன்னர் பரம்பரைக்கு ஆக்கிரமிப்பாளன் கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்ட பாரம்பரியம் உண்டு. இந்த மன்னர் பரம்பரையில் வந்த வித்யாதர் மன்னர்தான் கஜினியின் கொள்ளைகளை தனது பிராந்தியத்தில் தடுத்து நிறுத்தியவர். உலகப் புகழ் பெற்ற கஜுரேகா கோயிலும், கலஞ்சார் கோட்டையும் இவரால் கட்டப்பட்டவை. அந்தப் பரம்பரையில் வந்த துர்காவதியும் தனது வீர பராக்கிரமத்தால் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
கோண்ட்வானா ராஜ்ஜியத்தின் மன்னர் சங்க்ராம் ஷாவின் மைந்தர் தல்பத் ஷாவை 1542 ல் திருமணம் செய்தார் துர்காவதி. இதன்மூலமாக சந்தேல், கோண்ட்வானா ராஜ்ஜியங்களுக்குள் இணக்கமும் பிணைப்பும் ஏற்பட்டன. இந்த ஒற்றுமையின் விளைவாக முஸ்லிம் ஆட்சியாளர் ஷேர்ஷா ஷுரியின் படையெடுப்பை இரு நாட்டுவீரர்களும் இணைந்து எதிர்த்து முறியடித்தனர். அந்தப் போரில் ஷேர்ஷா (1545, மே 22 ) கொல்லப்பட்டார். அதே ஆண்டுதான் ராணி துர்காவதி வீர்நாராயண் என்ற மகனை ஈன்றார்.
வீர்நாராயணனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது (1950) மன்னர் தல்பத்ஷா இறந்தார். எனவே ஆட்சிப்பொறுப்பு முழுவதும் ராணி துர்காவதியின் பொறுப்பில் வந்தது. மகனை முன்னிறுத்தி, ராணி துர்காவதியே கோண்ட்வானா நாட்டின் அரசியாக ஆட்சி செய்தார்.
அடுத்துவந்த 14 ஆண்டுகளும் தனது மதியூகமும் நிர்வாகத் திறனும் கொண்டு நாட்டை சிறப்பாக ஆண்டுவந்தார். அவருக்கு திவான் ஆதர் சிம்ம கயஸ்தா உள்ளிட்ட அமைச்சர்கள் உதவி புரிந்தனர். அவர் தனது தலைநகரத்தை சவ்ரகாரிலிருந்து சாத்புரா மலைத்தொடரில் உள்ள ஷிங்ககாருக்கு மாற்றினார். இது போர் முக்கியத்துவமும் பாதுகாப்பும் வாய்ந்த முடிவாகும்.
ஷேர்ஷாவின் மறைவுக்குப் பிறகு, மாள்வா பிராந்தியத்தை சுஜத்கான் என்ற முஸ்லிம் தளபதி ஆக்கிரமித்தார். அப்பகுதியை அவரது மகன் பாஜ் பகதூர் (1556) ஆண்டுவந்தார். ராணி துர்காவதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவரது ராஜ்ஜியத்தை பாஜ் பகதூர் தாக்கினார். ஆனால் அப்போரில் அவர் படுதோல்வியுற்றார். இதனால் ராணி துர்காவதியின் புகழ் நாடு முழுவதும் பரவியது.
1562 ல் மாள்வா ராஜ்யத்தை முகலாயப் பேரரசர் அக்பர் ஆக்கிரமித்தார். அப்போது ராணி துர்காவதியின் நாட்டின் செல்வச் செழிப்பு குறித்து கேள்வியுற்ற அக்பர் அதனையும் ஆக்கிரமிக்க விரும்பினார். தனது தளபதி குவாஜா அப்துல் மஜீத் ஆசப்கானை கோண்ட்வானா மீது படையெடுக்குமாறு பணித்தார்.
முகலாயப் பேரரசின் படைபலத்தை விளக்கிய திவான், அக்பருடன் சமாதானமாகப் போவதே நல்லது என்று ராணிக்கு அறிவுரை கூறினார். ஆனால், ''அவமானப்பட்டு உயிர் வாழ்வதைவிட, மரியாதைக்குரிய விதமாக தன்மானத்துடன் சாகவே விரும்புகிறேன்'' என்று முழங்கினார் ராணி துர்காவதி; தனது படைகளை போருக்கு ஆயத்தப்படுத்தினார்.
நாராய் என்ற பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயினும் முதல்நாள் போரில் ராணி துர்காவதியின் கரமே ஓங்கியது. எனினும் ராணியின் தளபதி அர்ஜுன்தாஸ் போரில் கொல்லப்பட்டார். எனவே துர்காவதியே போருக்கு தலைமை ஏற்றார்.
மறுநாள் போருக்கு முன்னதாக, இரவே முஸ்லிம் படைகளை தாக்க வேண்டும் என்று ராணி துர்காவதி கூறினார். ஆனால், அது போர் தர்மமல்ல என்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிநவீன ஆயுதங்களுடன் நன்கு பயிற்சி அளிக்கப்பட படையுடன் உள்ள முகலாயப் படையை நேருக்கு நேர் மோதுவதை விட மறைமுகமாகத் தாக்குவதே நல்லது என்று ராணி கருதினார். ஆயினும் அமைச்சர்கள் ஆலோசனைப்படி இரவுத் தாக்குதலைக் கைவிட்டார்.
மறுநாள் தில்லியிலிருந்து வந்த பெரும் பீரங்கிப்படையுடன் ஆசப்கான் போர்முனைக்கு வந்தார். யானை மீதேறி ராணி துர்காவதியும் மைந்தர் வீர் நாராயணும் போர்முனைக்கு வந்தனர். இந்தப் போரில், பீரங்கி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் கோண்ட்வானா வீரர்கள் பெருமளவில் பலியாகினர். வீர் நாரயணும் படுகாயமுற்று போர்க்களத்திலிருந்து விலகினார். ஆயினும் ராணி துர்காவதி சளைக்காமல் போரில் ஈடுபட்டார்.
அப்போது எதிரிப்படையினரின் அம்புகள் ராணி துர்காவதியின் கழுத்தை துளைத்தன. அவரது தோல்வி உறுதியாகிவிட்டது. அவரும் நினைவிழந்தார். அப்போது, போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்று மாவுத்தன் அறிவுறுத்தினான். ஆனால், துர்காவதி அதனை ஏற்கவில்லை. ''படுதோல்வியுற்று எதிரியின் கரத்தில் சிக்குவதை விட, உயிரை மாய்த்துக் கொள்வதே சிறப்பானது'' என்று கூறிய ராணி துர்காவதி, தனது குறுவாளால் மார்பில் குத்திக்கொண்டு போர்க்களத்திலேயே (1564, ஜூன் 24) உயிர்நீத்தார்.
ராணி துர்காவதியின் வீரமரணம் முகலாயப் பேரரசர் அக்பரையே நிலைகுலையச் செய்தது. அவரது ஆக்கிரமிப்புத் திட்டங்கள் பலவற்றை ராணியின் வீர மரணம் மறுசிந்தனைக்கு உள்ளாகியது.
ராணி துர்காவதியின் தீரம் இன்றும் பழங்கதைப் பாடல்களில் புகழப்படுகிறது. அவரது வீரம் இந்தியப் பெண்களின் வீரத்திற்கான மறைக்க முடியாத சான்றாக விளங்குகிறது.
-குழலேந்தி
காண்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக