ஜான்சிராணி லட்சுமிபாய்
(பலிதான தினம்: ஜூன் 17)
இந்தியப் பெண்களின் வீரம் உலகில் வேறு யாருக்கும் சளைத்ததல்ல என்று ஆங்கிலேயே அரசுக்கு நிரூபித்துக் காட்டியவர் ஜான்சிராணி லட்சுமிபாய். வியாபாரம் செய்யவந்த வெள்ளையன் சிறுகச் சிறுக நாட்டை ஆக்கிரமித்து, ராஜ விவகாரங்களில் தலையிடத் துவங்கிய காலகட்டத்தில், ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இந்திய மன்னர்களில் முதன்மையானவர் ஜான்சிராணி லட்சுமிபாய். நாட்டின் உரிமைக்காக போர் நடத்தி தன் இன்னுயிரையும் போர்க்களத்தில் அவர் இழந்தார். அதன் காரணமாகவே, இன்றும் நமது மகளிரின் லட்சிய நாயகியாக இவர் போற்றப்படுகிறார்.
1835, நவ. 19 ல், வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்குப் பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. தனது 4 வயதில் தாயை இழந்தார். சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார்.
ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 ல் மணிகர்ணிகாவை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. மணிகர்ணிகா லட்சுமிபாய், ஜான்சியின் ராணியானார். 1851 ல் அவருக்குப் பிறந்த மகவு 4 மாதங்களில் இறந்து போனது.
1853 ல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். இதனால் தனது நாட்டின் வாரிசு வேண்டித் தனது தூரத்து உறவினச் சிறுவனான தாமோதரராவ் என்பவனைத் தத்தெடுத்தார். நவ. 21, 1853 ல் மன்னர் இறந்தார். மன்னர் கங்காதரராவ் மறைந்தபின், அவளது வளர்ப்பு மகன் தாமோதரராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினாள் ஜான்சிராணி. கணவரும் விரைவில் இறந்துபோக தனிமரமான மணிகர்ணிகா, (1853 இல்) ஜான்சிராணியானார்.
அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி பிரபு, வாரிசு இல்லாத ராஜ்ஜியங்களை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்றார். அதற்காக, கிழக்கு இந்திய கம்பெனியின் 'டாக்டிரின் ஆப் லேப்ஸ்' என்ற சட்டத்தின் படி, இந்த தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.
"ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்" என உரிமை கொண்டாடி வந்த பிரித்தானியர் ஜான்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர். ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமிபாய்.
தனது நாட்டை விட்டுக்கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழிநடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும், மிகத் துணிச்சலுடனும் போர் புரிந்தார். பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார். ஜனவரி 1858 ல் பிரித்தானியப் படையினர் ஜான்சியை நோக்கி முன்னேறி இரு வாரங்களில் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் ராணி தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு வெளியேறி 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்த தந்தியாதோபே என்பவருடன் இணைந்தாள். (இவரும் பின்னர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்).
வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 'கோட்டாகி சேராய்' என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சிராணி போரிட்டார். வெள்ளையர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்றார், ஜான்சி ராணி. பிரித்தானியர் குவாலியரை மூன்று நாட்களுக்குப் பின்னர் கைப்பற்றினர். 1858, ஜூன் 17 ம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் ஜான்சிராணி லட்சுமிபாய். அப்போது அவருக்கு வயது 22 மட்டுமே.
பாரத விடுதலைக்காக நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் ஜான்சிராணியின் வீரம் செறிந்த போர் பிரதான இடம் வகிப்பதாகும். அந்தப் போர் தோல்வியுற்றாலும், பின்னாளில் சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. ஜான்சிராணியின் வீரம் நமது நாட்டுப் பெண்களுக்கு என்றும் உந்துசக்தியாகத் திகழும்.
காண்க:
ஜான்சிராணி லட்சுமிபாய் (விக்கி)
முதல் இந்திய சுதந்திரப் போர்
RANI LAKSHMIBAI
RANI OF JANSI
.
INDIAN REBELLION OF 1857
Jansi rani (Hindu History)
முதல் இந்திய சுதந்திரப் போர்
RANI LAKSHMIBAI
RANI OF JANSI
.
INDIAN REBELLION OF 1857
Jansi rani (Hindu History)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக