நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.6.11

மக்களாட்சியும் மனசாட்சியும்



      உலகில்  மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் பாரததேசம்!  பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்டிருக்கும் மக்கள் வாழும் பூமி.  ஆனாலும் அவையெல்லாம முரண்பாடாக அமையாமல், தங்களை இணைக்கும் பாலமாக,  நூலாக, மாலையாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை  வாழும் மக்களை 'ஏதோ ஒன்று' இணைத்து வருகிறது/ அந்த 'ஏதோ ஒன்று'  என்ன?

     சுவாமி விவேகானந்தர் சொன்னபடி ஆன்மீகமாக இருக்கலாம்;  நம் நாட்டில் சமீபத்தில் சுற்றுபயணம் செய்த அமெரிக்க வெளியுறவு (பெண்) அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வியந்த குடும்ப உணர்வாக இருக்கலாம்;  பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக இப்பூமியில் தொடர்ந்த வண்ணம் உள்ள 'தர்மம்'  என்ற கண்ணோட்டமும் காரணமாக இருக்கலாம்.

     மேலே சொன்ன ஆன்மீகமோ, குடும்ப உணர்வோ, தர்ம சிந்தனையோ எதுவாக இருந்தாலும் நம் பாரததேசம் இன்றும் உலகம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகாணும் களமாக இருபதற்கு காரணம்- இந்தியாவில் வாழும் மக்கள் தேசத்தையே தெய்வமாய்க்   காணும் பார்வைதான்.

     பல ஆயிரம் வருடங்களாக ஞானிகள்,  மகான்கள்,  பேரரசர்கள் உருவாகி இந்த  மண்ணைப் பெருமைப் படுத்தினார்கள்; மக்களுக்காக வாழவும் செய்தார்கள். அதன் அடையாளங்களே அவர்கள் கட்டிய பிரமாண்டமான கோவில்களும், அவர்கள் காலத்தில் தோன்றிய இலக்கியங்களும்.
 
    தர்மம் தாழ்ந்து, அதர்மம் தலையெடுக்கும் போது மக்கள் பொறுமை காப்பதும்,  மனத்தில் ஆற்றாமையால் புலம்புவதும் சற்று நீர்க்குமிழிக் காலம் தான்.  "நம்மை  மீட்க அவதாரப் புருஷன் வருவான்; அநீதி செய்வோருக்கு தண்டனை தருவான்; அதனால்  மக்களால் அவன் அவதாரபுருஷன் என்னும் புகழைப் பெறுவான்" எனும் நம்பிக்கை ஆழமாய் ஆண்டாண்டு காலமாய் நம்மில் வேரூன்றியுள்ளது.

     மக்களாட்சியின் தத்துவமான ஜனநாயகத்தில் ஆட்சி புரிவோர் அதிகார துஷ்பபிரயோகம் செய்யும் போது அதிகார வர்க்கம் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம்லாம்; ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வையில் செல்வந்தர்கள் கோடிகளைக்  குவித்து கொண்டாட்டம் போடலாம்;  அறிவுஜீவிகளாய் நடமாடும் மெக்காலே புத்திரர்கள் மௌன சாமிகளாக மாறிப்போகலாம்.

     ஆனால், இவையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ  ஓர் ஒளி மக்களின் மனதில் நம்பிக்கை என்னும் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது;  எங்கிருந்தோ வரும்  ஓர்  ஒலி மக்களின் மனசாட்சியாய் எதிரொலிக்கிறது.

    இன்றைய  ஒளி: அன்னா ஹசாரே!  இன்றைய ஒலி : பாபா ராம்தேவ்!
 
-ம.கொ.சி.ராஜேந்திரன்
 
 
குறிப்பு: இன்று அன்னா ஹசாரே பிறந்த நாள்

காண்க:



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக