நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

29.6.12

எல்லைக்காவலில் தனியொருவன்

 

கான் அப்துல் கஃபார் கான்

(1890 -  1988, ஜனவரி 20)

இந்தியக் குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் (1987)  யார் தெரியுமா?

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம்:

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்:

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்:

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்:

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர்  (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

ஏப்ரல் 23, 1930 ல்  காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப் பிரிவினை:

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாக  கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்ல வேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :
''எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”   என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948 முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்தபட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய் தேர்ந்தெடுத்தது. ''இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988 , ஜனவரி 20ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார்.

அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக் கூடது என சொன்னதற்காக அவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக் கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

-ஜெயக்குமார் 

நன்றி:
தமிழ் ஹிந்து


காண்க: 

Khan Abdul Ghaffar Khan 

The Grandest Pakhtoon Hero

எல்லை காந்தி

 .

28.6.12

ரஜத் குப்தாவின் வீழ்ச்சி!

சிந்தனைக்களம்

 
ரஜத் குப்தா

ரஜத் குப்தா என்னும் பெயர் இப்போது பல நாட்டு ஊடகங்களிலும் பேசப்படுகிறது. ஜூன் 15-ஆம் தேதி முதல் அமெரிக்க ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுகிறது. உலகின் முக்கியமான பொருளாதாரப் பத்திரிகைகளில் அவரைப் பற்றிய விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அவரைப் பற்றி மற்றவர்களைவிடவும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தனது திறமையாலும் உழைப்பாலும் உலக அளவில் பல மிகப்பெரிய நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்.

அமெரிக்காவில் மிகவும் மதிப்புக்குரியவராக விளங்கி வந்தவரான அவர், அந்நாட்டு நீதிமன்றத்தால் உள் வணிகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்காகக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் இதுவரை அமெரிக்காவில் நடந்த, படித்து பொறுப்பிலிருப்பவர்கள் ஈடுபடக்கூடிய வெள்ளைக் காலர் குற்றங்கள் ஒன்றில் முக்கியமானதாக அவரது வழக்கு கருதப்படுகிறது.

தற்போது 63 வயதாகும் ரஜத் குப்தா கொல்கத்தாவில் பிறந்தவர். அவரது அப்பா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பத்திரிகையாளர். அம்மா பள்ளி ஆசிரியை. அவரது சிறு வயதிலேயே குடும்பம் தில்லிக்கு மாறியது. குப்தாவுக்கு பதினாறு வயது ஆகும்போது அப்பா காலமானார். இரண்டு ஆண்டு கழித்து அம்மாவும் இறந்துவிட்டார். தனது பதினெட்டு வயதில் அனாதையானார். கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர். பிறருடைய உதவியை நாடாமல் தாங்களே வாழ்க்கையை நடத்தத் துணிந்தனர்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் பதினைந்தாவது இடத்தைப் பெற்றார். தில்லி ஐ.ஐ..டியில் சேர்ந்து பி.டெக் படித்தார். கிடைத்த வேலையை உதறி விட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1973-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மெக்கென்சி அண்ட் கம்பெனி என்னும் உலகின் முன்னணி மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் பணியமர்ந்தார். பின்னர் 1994-ஆம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பான மேலாண்மை இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அந்தப் பொறுப்புக்கு, அமெரிக்காவில் பிறக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது அதுவே முதல் முறையாகும். மேலும் அதன் மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு முதன் முதலாகத் தலைமைப் பொறுப்பேற்ற இந்தியராக ஆனார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்திய கன்சல்டிங் துறையில் உலக அளவில் ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மிகப் பெரிய விஷயமாகும்.

அப்பொறுப்புக்குத் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் இருந்துவிட்டு 2003-ஆம் ஆண்டு பணியை நிறைவு செய்தார். அந்நிறுவன விதிகளின்படி ஒருவர் அதிகபட்சமாக அவ்வளவு காலம்தான் பணியாற்ற முடியும். பின்னர் அந்நிறுவனத்திலேயே மூத்த பங்குதாரராகத் தொடர்ந்தார்.

2007 முதல் அந்நிறுவனம் அவரைப் பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்ட மூத்த பங்குதாரராகக் கெüரவப்படுத்தி அவருக்குச் சம்பளம் உள்பட அலுவலகத்தையும் கொடுத்து வைத்திருந்தது.

மெக்கென்சி நிறுவனத்தின் முழுநேரப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் உலகின் பெரிய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளில் தலைவர், இயக்குநர், குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர் என பல பொறுப்புகளை வகிக்கிறார். உலகின் முன்னணி மூலதன நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் நுகர்பொருள்கள் துறையில் முக்கியமான ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். மேலும் பில்கேட்ஸ் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் பெரிய அமைப்பான கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பில் பொறுப்பேற்றுள்ளாôர்.

முக்கியமான சர்வதேச அமைப்புகளிலும் பதவிகள் அவரை நாடி வருகின்றன. உலகின் பல நாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சர்வதேசத் தொழில் அமைப்பின் (இன்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ்) தலைவராக இருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு மேலாண்மைச் சீர்திருத்தங்கள் சம்பந்தமான சிறப்பு ஆலோசகராகச் செயல்படுகிறார்.

உலகின் முன்னணி மேலாண்மை நிறுவங்களான ஹார்வர்டு, எம்.ஐ.டி மற்றும் கெல்லாக் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு உள்ளிட்டவற்றில் பொறுப்பு வகிக்கிறார். மேலும் அவரே கம்பெனிகள், கல்வி நிறுவனம் மற்றும் பொதுச்சேவைக்கான அமைப்பு ஆகியவற்றை நிறுவுகிறார்.

இவ்வாறு தொழில், கல்வி, வியாபாரம், பொதுச்சேவைகள் சம்பந்தப்பட்ட பல முக்கியமான அமைப்புகளில் அமெரிக்காவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் பொறுப்பு வகிக்கிறார். அவற்றையெல்லாம் ஒருவரே பெறுவது என்பது அசாத்தியமான காரியமாகும். அயல்நாட்டுக்குப் படிக்கச் சென்று வேலைக்கு அமர்ந்த ஓர் இந்தியர் உலக அளவில் அதிகபட்சமான பொறுப்புகளை வகித்தது அண்மைக்காலங்களில் இவராகத்தான் இருக்கக் கூடும்.

கூடவே, பிறந்த நாடான இந்தியாவுக்கும் அவர் தனது பங்கினை அளிக்கிறார். ஹைதராபாதிலுள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த இந்தியன் பிசினஸ் ஸ்கூல் அவருடன் மெக்கென்சியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த அனில் குமாருடன் சேர்ந்து ஆரம்பித்த மேலாண்மை நிறுவனமாகும். அவரே அதன் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.

இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைத் துரிதப்படுத்துவதற்காக அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்னும் அரசு சார்பற்ற அமைப்பை ஆரம்பித்தார். ஐந்து கோடி டாலர்களுக்கு மேல் பணம் திரட்டி இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் பெரிய அமைப்புகளில் ஒன்றாக அது விளங்குகிறது. மேலும் இந்தியப் பிரதமரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெறுகிறார்.

தன்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் இவ்வளவு சாதனைகளைப் புரிந்த அவர் வெளி நாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறும் மக்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்டவர் சென்ற ஜூன் 15-ஆம் தேதியன்று நியூயார்க்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் தீர்ப்பு சொல்லும்போது அந்தக் குழுவிலிருந்த இரண்டு பேர் கண்ணீர் விட்டனர். மாணவப் பருவத்தில் அனாதையாக ஆக்கப்பட்ட ஒரு மகத்தான சாதனையாளர், சமுதாயத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர், தனது பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவது என்பது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவர் மேலுள்ள குற்றங்கள் மேல்முறையீட்டிலும் உறுதி செய்யப்படும்போது தண்டனை அதிகபட்சமாக இருபது ஆண்டு வரைக்கும்கூட கொடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் அவருடைய கடந்தகால வாழ்க்கை, செய்து வந்த சேவைகள் மற்றும் தனது தவறுகளின் மூலம் நேரடியாகப் பயன் பெறாதது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தண்டனை வெகுவாகக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

ரஜத் குப்தா மேலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் அவர் இயக்குநர் குழுவில் இருந்தபோது அந்தக் கம்பெனி சம்பந்தமான விஷயங்களை, அவை முறையாக வெளியாவதற்கு முன்னரே தனது நண்பரான ராஜ் ராஜரத்தினம் என்பவருக்கு ரகசியமாகச் சொல்லிவிட்டார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டாகும். அதன் மூலம் அவற்றைப் பயன்படுத்தி ராஜரத்தினம் லாபம் சம்பாதிக்க அவர் காரணமாக இருந்து விட்டார்.

55 வயதான இந்த ராஜரத்தினம் இலங்கையில் பிறந்த தமிழர். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் படித்துப் பின்னர் அமெரிக்காவில் கேலியன் குரூப் என்ற மூலதன நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். அது உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் அவரது சொத்தின் நிகர மதிப்பு மட்டும் இன்றைய மதிப்பில் சுமார் ஒன்பதாயிரம் கோடிக்கு மேல் இருந்தது. எனவே அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்த மக்களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்தார்.

தனது வியாபார நடவடிக்கைகளுக்காகப் பல கம்பெனிகள் சம்பந்தமான விஷயங்களை, அவை பற்றித் தெரிந்தவர்களிடம் ரகசியமாகப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி பங்குச் சந்தை மூலம் லாபமடைந்தார் என அவர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதற்காக சென்ற ஆண்டு அவருக்கு பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் குடிமையியல் அபராதமும் விதிக்கப்பட்டது. எனவே, தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ராஜரத்தினத்தின் உள்வணிக நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்ததற்காக அவரது நண்பரான அனில்குமார் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்பிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

54 வயதாகும் இவர் மும்பை ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் பிரபலமான வார்ட்டன் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் படித்தவர். மெக்கென்சி கம்பெனியில் ரஜத் குப்தாவுடன் சிறப்பாகப் பணிபுரிந்தவர். அங்கேயே மூத்த பங்குதாரராகவும் இயக்குநராகவும் உயர்ந்தார். அவுட் சோர்சிங் துறைக்கு மூலகாரணமாக விளங்கியவர். இந்தியாவின் பெரிய தொழில் அமைப்பான சி.ஐ.ஐ.யின் அமெரிக்கத் தலைவராகவும் சமூகத்தில் நல்ல நிலையிலும் இருந்தவர்.

மேற்குறிப்பிட்ட மூவருமே தலைசிறந்த கல்விக்கூடங்களில் நன்கு படித்தவர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள். பெரிய வீடுகளையும் சகலவிதமான செüகரியங்களையும் பெற்றவர்கள். ரஜத் குப்தாவின் சொத்துகள் இந்திய மதிப்பில் 650 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் குமாருக்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களில் சொத்துகள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ரஜத் குப்தா மற்றும் அனில் குமார் ஆகியோர் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள். இவ்வளவும் இருந்து இவர்கள் ஏன் குற்றம் புரிகிறார்கள்?

ராஜ ரத்தினம் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி அதில் அதிகமாகச் சம்பாதித்த பின்னரும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உந்தப்பட்டார். அதற்காகத் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒத்துழைக்கக் கூடிய வகையில் தனது தொடர்புகளை வலையில் விழ வைத்தார்.

அப்படித்தான் வார்ட்டனில் படிக்கும்போது அறிமுகமான அனில் குமார் மூலம் அவர் கோல்டுமேன் சேக்ஸ் கம்பெனியில் பணியிலிருந்த காலத்தில் ரகசியமான விவரங்களைப் பெறுகிறார். ஆனால், அதற்காக அனில் குமாருக்குக் கிடைத்த தொகை மிகவும் குறைவு. ஆனாலும் தெரிந்தே தவறு செய்தார். ராஜரத்தினத்தை அவரது பேராசை அலைக்கழிக்க, கூடா நட்பின் மூலம் ஏற்பட்ட சபலம் அனில் குமாரை ஆட்கொள்கிறது.

குப்தாவைப் பொருத்தவரையில் தனது நடவடிக்கைகள் மூலம் அவர் எந்த விதமான பலனையும் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அவர் ஏன் சட்டத்தை மீறி தவறு செய்யத் துணிந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெரிய கம்பெனியை நடத்தி ராஜரத்தினம் அதிக அளவில் சொத்துகளை வைத்திருந்ததால் எதிர்காலத்தில் அவரது உதவியை எதிர்பார்த்து குப்தா அந்தத் தவறுகளைச் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எதிர்காலம் பற்றி ஏதேதோ கணக்குகளைப் போட்டு சட்டத்தை மீறிய தனது நடத்தைகள் மூலம் தனக்கிருந்த மரியாதை அனைத்தையும் குப்தா இழந்து விட்டார். வகித்து வந்த பெரிய பொறுப்புகள் அவரைவிட்டுப் போயின. தன்னுடைய கடந்த கால உழைப்பு மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிடைத்த அங்கீகாரங்கள் மற்றும் நற்பெயர் என எல்லாவும் போய் விட்டன. வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்றவர்கள் தலை கவிழ்ந்து கீழே பயணிக்கிறார்கள்.

இவர்கள் அவமானப்படுவதும், தண்டனைக்கு உள்ளாவதும் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவின் நற்பெயருக்கும், இந்தியர்களின் நம்பகத்தன்மைக்கும், நாணயத்துக்கும் அல்லவா களங்கம் கற்பித்திருக்கிறார்கள். பணமும், படிப்பும், புத்திசாலித்தனமும், நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும் இல்லாமல் போனால் அதனால் என்ன பயன்?

உழைப்புக்கு இளைஞர் சமுதாயம் முன்னுதாரணமாகக் கருதிய நபர்கள் இப்போது தவறான முன்னுதாரணமாக தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்களே என்பதுதான் வேதனை அளிக்கிறது.

மாணவப் பருவத்தில் அனாதையாக ஆக்கப்பட்ட ஒரு மகத்தான சாதனையாளர், சமுதாயத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர், தனது பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவது என்பது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகும்.

- பேரா. ப. கனகசபாபதி,
இயக்குநர், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம்
கோவை.


நன்றி: தினமணி (28.06.2012)
காண்க: ரஜத்  குப்தா (wiki)

26.6.12

எமர்ஜென்சி தின நினைவுகள்!

சிந்தனைக்களம்
இரா.செழியன்

இந்த ஆண்டு ஜூன் மாத நாளேட்டைப் பார்த்ததும் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் என் நினைவுக்கு வந்தது. 1975 ஜூன் 25-26 நள்ளிரவில்தான், உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பு அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியிடப்பட்டது. அது ஜனநாயக அடிப்படையில் நம்பிக்கை உள்ள எந்த இந்தியனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாத - வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவராலும் இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, சுதந்திர இந்தியாவில் அதற்கு முன் ஏற்பட்டிராத இருண்ட கால ஆட்சியின் ஆரம்பம்.

அடிப்படை மனித உரிமைகளுக்கான ஜனநாயகம் - தூய்மையான பொதுவாழ்வு நேர்மையான அரசாங்கம், சுயநலமற்ற தனி வாழ்வு ஆகியவை மகாத்மா காந்தி - ஜவாஹர்லால் நேரு காலத்திய காங்கிரஸ் இயக்கத்தின் இன்றியமையாத நடைமுறைக் கோட்பாடுகளாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோட்பாடுகள் இந்திய அரசியலில் மறக்கப்பட்டுவிட்டன அல்லது மறைந்துவிட்டன,

1966 ஜனவரியில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் இறந்ததும் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பெரு முயற்சியால் இந்திரா காந்தி பிரதமராக ஆக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் இந்திரா காந்தி பிரதமராக ஆனார்.

1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். ஆயினும், கட்சி முடிவை ஏற்றுக் கொள்ளாமல் பிரதமர் இந்திரா காந்தி, வி.வி.கிரியை ஆதரித்து ""அவரவர் மனசாட்சிப்படி உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்'' என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்து சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தார். இவ்வளவுக்கும் சஞ்சீவ ரெட்டி பெயரை முன்மொழிந்தவரே இந்திரா காந்திதான் என்பதுதான் வேடிக்கை.

அதன்பின் 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு அமைப்புகள் உருவாயின. 'கரீபி ஹட்டாவ்' (ஏழ்மையை விரட்டுவோம்) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியை வைத்து, 1971 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். 1971 டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ஆதிக்கத்தை எதிர்த்து கிழக்கு வங்காளத்தில் மக்கள் ஆதரவில் பிரமாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பங்களாதேஷ் சுதந்திர நாடாக ஆனது. அதனால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட பெருமையும் ஆட்சி அதிகாரமும் மேலும் பலமடைந்தன.

அதிகார பலம் மிகவும் அதிகமானால்,  அது தலைக்கேறி எதேச்சதிகாரம் தலையெடுக்கும் என்பார்கள். ஏழ்மை விரட்டப்படுவதற்குப் பதிலாக, ஏழை மக்கள் விரட்டப்பட்டனர். விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம் - பட்டினி, ஊழல் -ஊதாரித்தனம் - ஆட்சியின் அடக்குமுறை ஆகியவை ஏழை மக்களை வாட்டி வதைத்தன.

இந்திரா காந்தியின் அதிகாரத்தைவிட அதிகமான அளவுக்கு எதற்கும் துணிந்த இளவரசர் சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் சட்டம் - அரசாங்கம் - நீதி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு கொடிகட்டிப் பறந்து அதற்கு முன் இந்தியா காணாத தனிப்பட்ட ஒரு எதேச்சதிகார ஆட்சியாக மாறியது.

சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செயலற்று இருந்த நிலைமையில், இந்தியாவின் நற்காலமாக, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, ஈடு இணையற்ற போராட்ட வீரர், தன்னலமற்ற தியாகி, தூய்மையான மாமனிதர் என்று மகாத்மா காந்தியாரால் பாராட்டப்பட்ட ஜெயப்பிரகாசர் - அதுவரை அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தவர் - இந்திரா காந்தியின் அலங்கோல ஆட்சியையும், ஊழல் கடலில் மிதந்துகொண்டிருந்த அதிகார கும்பலையும் எதிர்த்து நிற்க, மக்கள் கவனத்தையும், மக்கள் சக்தியையும் திரட்டினார்.

மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர். அந்த அணியில் என்னையும் ஜே.பி. சேர்த்து அவ்வப்பொழுது முக்கிய பொறுப்புகளைத் தந்தார்.

பொதுமக்களின் அவல நிலைமைகளை நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உணர்த்தும் வகையில் 1975 மே 6, தில்லி மாநகரில் செங்கோட்டையிலிருந்து நாடாளுமன்றம் வரை ஒரு மாபெரும் பேரணியை ஜெயப்பிரகாசர் தலைமையேற்று நடத்தினார்.

அரசாங்கம் போட்ட பல்வேறு தடைகளையும் மீறி, ஐந்து லட்சம் மக்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆட்சியின் அரசியல் - பொருளாதார -சமுதாயச் சீர்குலைவுகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிலைநாட்டும் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் ஒரு மனுவைத் தந்தார் ஜே.பி.

இந்தியாவில் ஜே.பி. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மக்களின் வரவேற்பும் எழுச்சியும் வேகமாக வளர்ந்தன. அலைமோதும் மக்கள் கூட்டம் ஆட்சியாளர்களை ஆட்டி வைத்தது.

எதிர்பாராத வகையில், 1975 ஜூன் 25 -ல் இந்திரா காந்தியின் ஆர்ப்பாட்டத்தை அடக்கிடும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. 1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார்.

நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12-ம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அலகாபாத் தேர்தல் முடிவு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பேரிடியாக வந்தது. "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதையொட்டி, அதே ஜூன் 12-ம் நாளன்று குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன, அவற்றில், இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது.

இருப்பினும் அதிகார பலத்தையே நம்பி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆளவந்தார்களுக்கு எதையும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற பிடிவாதம் ஏற்பட்டுவிடும். 'இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்ற முழக்கத்துடன், இந்திரா காந்திதான் பிரதம மந்திரியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆரவாரத்துடன் ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்த 1975 ஜூன் 25-ம் தேதி மாலை தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜே.பி. தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

1975 ஜூன் 25-ஆம் தேதி காலை பத்து மணிக்கு ஜே.பி. இருக்குமிடத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான் சென்றபொழுது அங்கு மொரார்ஜி தேசாய், சரண்சிங், அசோக் மேத்தா, பிலு மோடி மேலும் சிலர் இருந்தனர். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்காக பெங்களூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அலகாபாத் தீர்ப்பின்படி இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் கண்டனக் கூட்டங்களை ஜூன் மாத இறுதி சனி-ஞாயிறு நாட்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிலும் பயன் இல்லை என்றால், ஓர் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தத் தயாராக வேண்டும் என்று ஜே.பி. கருதினார்.

கடைசியில் கூட்டம் கலையும்பொழுது அசோக் மேத்தா, மாலையில் கூட்டத்துக்குப் போகும்பொழுது செழியனை நான் அழைத்து வருகிறேன் என்றார். அருகிலிருந்த ஜே.பி. இடைமறித்து, "வேண்டாம், செழியனுக்கு நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன். அலகாபாத் தீர்மானத்தை இன்று இரவு செழியன் படித்துப் பார்த்து குறிப்புகளுடன் வந்தால், நாளை காலை நாம் ஒரு இறுதியான முடிவை எடுக்கலாம்'' என்றார்.

இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஐநூறு பக்கங்கள் இருக்கும். இரவு சாப்பிட்டுவிட்டு அந்தத் தீர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

இரவு 3-30 மணி அளவில் என்னிடம் பிலு மோடி பேசினார். ஜே.பி., மொரார்ஜி கைது செய்யப்பட்டனர் என்றார். எந்தக் குற்றங்களுக்காக என்று நான் கேட்டேன். பேச ஆரம்பித்த பிலு மோடி சற்று நிதானித்துக் கொண்டு "என் வீட்டருகில் ஒரு வேன் - போலீஸ் வேன்தான். எனக்கும் அழைப்பு வந்துவிட்டது, குட்பை'' என்று டெலிபோனை வைத்தார்.

எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த நிலைமையில் திகைப்பூட்டும் வகையில் என் வீட்டின் வெளியில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால் நெருங்கிய நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நின்று கொண்டிருந்தார். மிகவும் அவசரமாக "ஜே.பி. மற்றும் பலர் கைது செய்யப்படுகின்றனர். உனக்கும் அரஸ்ட் வாரண்ட் வரலாம். உடனே கிளம்பு'' என்றார். என் மனைவி பிரேமா எழுந்து வந்தாள். கட்டிய வேட்டி போட்டிருந்த சட்டையுடன், என் உதவியாளர் அன்புமணியையும் அழைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன்.

காரில் போகும்பொழுது சோம்நாத் சொன்னார்: இரவு 12 மணிக்கு எமர்ஜென்சி ஆர்டர் போடப்பட்டுள்ளது. 3.30 மணிக்கு ஜே.பி. கைது செய்யப்பட்டார், மேலும் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கைது ஆகின்றனர். முழுவிவரங்கள் காலையில்தான் தெரியும் என்றார்.

அப்பொழுது நள்ளிரவுக்குப் பிறகு மணி 3.45. அவருடைய நண்பர் வீட்டுக்கு சோம்நாத் எங்களை அழைத்துச் சென்றார்.

விடிந்ததும் - ஜூன் 26-ம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி:

அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாம். இந்த மாபெரும் காரியத்துக்கு உத்தரவிட்டவர் சஞ்சய் காந்தி என்று பிறகு தெரியவந்தது.




பிறகு இரவுதான் போடப்பட்ட உள்நாட்டு நெருக்கடி கால அறிவிப்பின் விவரங்கள் கிடைத்தன. 1971 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷ் போரையொட்டி வெளிநாட்டு நெருக்கடி காரணத்தினால் போடப்பட்ட ஒரு பிரகடனம் - அது அமலில் இருக்கும் பொழுதே அதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்துக்கான மற்றொரு நெருக்கடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரே காலத்தில் இரண்டு நெருக்கடி உத்தரவுகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

என் உதவியாளர் அன்புமணி எம்.பி. என்ற முறையில் எனக்குத் தரப்பட்டிருந்த பிஷாம்பர்தாஸ் மார்க், 12 நம்பர் வீட்டுக்குச் சென்று விசாரித்து வந்தார்.

ஜூன் 25 இரவில் 4 மணிக்குமேல் ஒரு போலீஸ் அதிகாரி வந்து கதவைத் தட்டினாராம். என் மனைவி பிரேமா கதவைத் திறந்தாள். வீட்டுக்கு முன்னால் பத்து காவல்காரர்கள் தாங்கிய ஒரு போலீஸ் வேன் இருந்ததாம். பிறகு தெரிந்த விஷயம் அதேபோல் வீட்டுக்குப் பின்னாலும் காவல்காரர்கள் அடங்கிய மற்றொரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது என்று. நான் தப்பி ஓடிவிடாமல் கைது செய்யத்தான் அத்துணை ஏற்பாடுகள்.

போலீஸ் அதிகாரி கையிலிருந்த அரஸ்ட் வாரண்டைக் காட்டி, எம்.பி. செரியனைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்.

பிரேமா: செரியன் என்று யாரும் இங்கு இல்லையே!''

""இது பிஷாம்பர்தாஸ் 12 நம்பர் வீடுதானே?''

""ஆமாம். ஆனால் செரியன் என்று யாரும் இங்கு இல்லை.''

போலீஸ் அதிகாரி போய் பங்களா முன்னுள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தாராம். திரும்ப வந்து வாரண்ட் சரியாக எழுதவில்லை என்று பையிலிருந்து மற்றொரு காகிதத்தை எடுத்து. ஆங்கிலத்தில் திருத்தமாக என் பெயரை எழுதி ""சரி எங்கே அவர்?'' என்று அதட்டிக் கேட்டாராம்.

கைது செய்யப்படுபவர் பெயர் எழுதாமல், மாஜிஸ்ட்ரேட் தமது கையெழுத்தைத் தாராளமாகப் பல அரஸ்ட் வாரண்ட்களில் போட்டுத் தந்திருந்தார்.. யாரை வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டும் என்றாலும் ஆட்சியில் இருந்த நெருக்கடி கால அதிகாரிகள் உத்தரவிட, சுலபமாகத் தேவைப்பட்டவர்களை போலீஸôர் கைது செய்துவிடலாம்.

மீண்டும் கேட்டபொழுது பிரேமா சொன்னது, "எம்.பி. சென்னைக்குப் போய்விட்டார்'' என்று.

போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் புகுந்து ஒவ்வொரு அறையாகப் பார்த்தாராம். யாரும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த பழனி என்ற நாய் நிரம்பக் குரைத்ததாம். போலீஸ் அதிகாரிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.

கடைசியாகத் தன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி எச்சரித்தாராம்: இருக்கட்டும் இன்று இந்த எம்.பி. சிக்கவில்லை. நாளை மாலைக்குள் அவரை நீங்கள் திகார் சிறையில்தான் பார்க்கவேண்டும்.

அன்றைக்கு சோம்நாத் சட்டர்ஜியின் சாமர்த்தியத்தால், நான் தப்பினேன். மறைவாக இருந்த நான் மறுநாள் இரவு விமானத்தில் சென்னை சேர்ந்தேன்.

அரசமைப்புச் சட்டப்படி நெருக்கடி கால உத்தரவுக்கு அது வெளியிடப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதன்படி 1975 ஜூன் 25 போடப்பட்ட உத்தரவை அங்கீகரிக்க ஜூலை 21 நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது. என்னைக் கைது செய்வதற்கான தில்லி போலீசாரின் உத்தரவு இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள நான் தில்லி சென்றால், என்னை அங்கு கைது செய்துவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

அதையும் மீறி, நான் ஜூலை 20-ம் தேதி இரவு தில்லி சென்று என் வீட்டுக்குச் செல்லாமல் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 8 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் என் அடையாளச் சீட்டைக் காண்பித்து நுழைந்து, அங்குள்ள நூல் நிலையத்தில் காத்திருந்தேன்.

11 மணிக்கு மக்கள் சபைக்குள் நான் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். நெருக்கடிநிலை உத்தரவைக் கண்டித்து கடுமையாக ஒரு மணி நேரம் பேசி விட்டு, மறுபடியும் மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, அன்று இரவே சென்னை திரும்பிவிட்டேன்.

அப்பொழுது இருந்த கடுமையான சென்சார் முறையில் எனது பேச்சுபற்றி எதுவும் இந்திய செய்தித்தாள்களில் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் சிறப்பாக அது வெளியிடப்பட்டதுடன் அதைப் பாராட்டி பிரபல செய்தியாளர்கள் எழுதியதாகவும் எனக்குத் தகவல் வந்தது.

எதிர்ப்பு அடங்கிவிட்டதாக ஒருவகை நினைப்பு அரசாங்கத்துக்கு இருந்தது என்றும் என்னைக் கைது செய்தால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் அதற்கு அதிகமான பாராட்டுதலைத் தரக்கூடும் என்றும் அரசாங்கம் என்னைக் கைது செய்யாமல்விட்டது என்று அப்பொழுது அமைச்சராக இருந்த ஒருவர் நெருக்கடி காலம் தீர்ந்ததும் என்னிடம் சொன்னார்.

1977 மார்ச் பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டதும், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி அமைந்ததும், பதவி ஆசையில் இந்திரா காந்தியுடன் இணைந்த ஜனதா எம்.பி.க்கள் மக்களாட்சியைக் கவிழ்த்ததும், பலரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும்.

அதேசமயம் தனிப்பட்டவர்க்கு ஏற்பட்ட நீதிபூர்வமான நெருக்கடியை நாட்டுக்கு ஒரு நெருக்கடியாக மாற்றி, மக்களை அடக்கியாண்ட எதேச்சாதிகாரம், அதையொட்டி எழுந்த ஜெயப்பிரகாசரின் போராட்டம், மக்கள் தந்த பேராதரவின் வெற்றி ஆகியவைகளும் இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

மக்களை அடக்கி எதேச்சாதிகாரம் இடையிடையே வெற்றிபெறலாம், ஆனால், எழுச்சிபெற்ற மக்கள் மீண்டும் வெற்றிபெறுவார்கள் என்பது உலக வரலாற்றில் காணப்படும் உண்மையாகும்.

1975 ஜூன்  25-ம் தேதி நள்ளிரவில் போடப்பட்ட நெருக்கடி காலம் 1977 மார்ச் 21 வரை நீடித்தது.

37 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் போடப்பட்ட போலீஸ் உத்தரவுகளைவிட நான் பட்ட சோதனைகளைவிட, அபாயங்களைவிட, அதிகமான அளவுக்குப் பல்வேறு அநீதிகள், கொடுமைகளைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுதியுடன், நெருக்கடி காலத்தின் கோரதாண்டவத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள்.

1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் - சிறைச்சாலைகள் - நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806.

அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன், இந்த ஜூன் 25-ஆம் தேதி நினைவு நாளன்று. அவர்களில் மறைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலி. வாழ்பவர்களுக்கு என் வாழ்த்துகள்!

'தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்' என்பதற்கு அவசரநிலைச் சட்டத்தையும், நெருக்கடி நிலையையும் மீறி வெகுண்டெழுந்த மக்களின் விடுதலை உணர்வும், மக்களாட்சியும், தனிநபர் சுதந்திரமும் நிலைநாட்டப்பட்ட சம்பவமும் மறக்கவே முடியாத நினைவுகள். எத்தனையோ சீர்கேடுகளுக்கு இடையிலும், இந்தியாவின் வருங்காலம் பற்றிய நம்பிக்கை முற்றிலுமாக அழிந்துவிடாமல் இருப்பதற்கு ஜே.பி. இயக்கத்தின் வெற்றிதான் காரணம்.

நெருக்கடி காலத்தில் செய்தியாளர்களின் குரல்வளைகளை அடக்கிக் கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டது. ஆனால், அவற்றை எதிர்த்துப் பத்திரிகையாளர்கள் சிலர் தலை நிமிர்ந்து நின்றனர். அதில் முதன்மையான இடத்தில் ராம்நாத் கோயங்கா இருந்தார்; எக்ஸ்பிரஸ்- தினமணி இதழ்கள் இருந்தன.

அப்படி இன்றும் தனித்து நிலை நிற்கும் தினமணி இதழில் இதை எழுதும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


 நன்றி: தினமணி (26.06.2012)

காண்க: The Emergency (India)

.

 
.

25.6.12

நெகிழச் செய்யும் தாயின் கடிதம்

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி
(பலிதானம்: ஜூன் 23)

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று நிலைநாட்ட காஷ்மீர் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம  பிரசாத் முகர்ஜி. முரய்டார் காவலில் வைக்கப்பட்ட அவர், அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உயிர்த் தியாகத்தால் தான் காஷ்மீர் இன்றும் இந்தியாவின் பகுதியாக நீடிக்கிறது.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் தாயார் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும்.   பிரதம மந்திரி நேரு அவர்களுக்கு, டாக்டர் எஸ்.பி. முகர்ஜியின் தாய் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள்  எழுதிய கடிதத்தின் விவரம் இதோ:

------------------------------------------------------

77, ஆஷுதோஷ் முகர்ஜி சாலை,
கல்கத்தா,
1953, ஜூலை, 4.

அன்பான திரு. நேருவுக்கு,

30, ஜுன் தேதியிடப்பட்ட உங்கள் கடிதம், எனக்கு திரு. பிதான் சந்திர ராய் மூலமாக ஜூலை 2ஆம் தேதி கிடைத்தது. உங்கள் அனுதாபச் செய்திக்கும் அனுதாபத்திற்கும் நன்றி.

என் அன்பு மகன் இறந்ததற்கு இந்த தேசமே துக்கம் அனுஷ்டிக்கிறது. அவர் ஒரு தியாகியாக இறந்துள்ளார். அவரது தாயான எனக்குள்ள துயரம் மிகவும் ஆழமானது. வெளிப்படுத்தப்பட முடியாத அளவு புனிதமானது. எனக்கு ஆறுதல் தேடுவதற்காக இதை நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால், உங்களிடம் நான் வலியுறுத்திக் கேட்பது நீதியைத்தான்.

என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இறந்திருக்கிறார்  - அதுவும் நீதி மன்றத்தில் எந்த வழக்கும் தொடரப்படாமல் சிறை வைக்கப்பட்டபோது – உங்கள் கடிதத்தில் நீங்கள் காஷ்மீர் அரசு தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது என்று கூற முற்பட்டுள்ளீர்கள். உங்களின் இந்தக் கூற்று, உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் உறுதி அளிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம். ஆனால், யார் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமோ அவர்களிடமிருந்து வந்த தகவல்களுக்கு எப்படி மதிப்பளிக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி. என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது காஷ்மீர் சென்றிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் மீது நீங்கள் கொண்டிருந்த நேசத்தைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அப்படியானால், அவரைச் சிறையில் சென்று சந்தித்து, அவரது ஆரோக்கியம் மற்றும் சிறையில் அவருடைய சவுகரிய ஏற்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விடாமல் உங்களைத் தடுத்தது எது?

அவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. அவர் இங்கே சிறை வைக்கப்பட்ட பிறகு அவரது தாயான எனக்கு காஷ்மீர் அரசிடமிருந்து வந்த முதல் தகவலே அவர் மரணச் செய்திதான். அதுவும் இரண்டு மணி நேரம் கழித்தே வந்தது என்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்று தோன்றவில்லையா? அதுவும் மர்மமான, கொடுமையான முறையில் அந்தத் தகவல் எனக்கு வழங்கப்பட்டது! தான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக என் மகன் அனுப்பிய தந்தி அவரது மரணச் செய்திக்குப் பிறகுதான் இங்கே வந்து சேர்ந்தது. என் மகன் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர் சரியாக நடத்தப்படவில்லை என்றும் அவர் பலமுறை தொடர்ந்து பல காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றும் எனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் அளிக்கப்படவில்லை என்று நான் காஷ்மீர் அரசிடம் அல்லது உங்களிடம் கேட்கிறேன்.

அவர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகுகூட, அவர்கள் அந்தத் தகவலை உடனடியாக எங்களுக்கோ அல்லது டாக்டர் பிதான் சந்திர ராய்க்கோ தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீர் அரசு ஷ்யாம் பிரசாதின் உடல் நிலை குறித்த முந்தைய மருத்துவ வரலாறு பற்றியோ அவருக்குத் தேவைப்படும் சிகிச்சை ஏற்பாடுகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியோ சிறிதுகூட அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதை ஒரு எச்சரிக்கையாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இந்தக் கொடுமை. ஜூன் 22ஆம் தேதியன்று அவர், “மூழ்குவதைப் போன்ற உணர்வு” ஏற்படுவதாக கூறியதை என்னால் நிரூபிக்க முடியும். இதற்கு அரசு என்ன செய்தது? மருத்துவ உதவியும் அளிப்பதில் அளவுகடந்த தாமதம், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சட்டத்துக்குப் புறம்பான மோசமான விதம், அவருடன் சிறை வைக்கப்பட்ட இரண்டு சகாக்களைக்கூட அவருடைய அருகில் இருக்க அனுமதிக்காத கொடுமை, இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மோசமான, இரக்கமற்ற நடத்தைக்கான உதாரணங்கள்.

ஷ்யாம் பிரசாத்தின் கடிதங்களிலிருந்து தான் நன்றாக இருக்கிறேன் என்று அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகளைக் கொண்டு தகவல் அளித்துவிட்டதால், அரசாங்கமும் அதன் மருத்துவர்களும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரிகளின் மதிப்புதான் என்ன? தனக்கு நெருக்கமான, நேசத்துக்குரியவர்களை விட்டு வெகு தொலைவில் சிறையில் இருக்கும் ஒருவர் – அதுவும் என் மகன் – தன் துயரங்களைக் கடிதம் மூலம் வெளிப்படுத்துவாரா, அல்லது தன் சொந்த ஆரோக்கியப் பிரச்சினையைக் கண்டறிவாரா? அரசாங்கத்தின் பொறுப்பு மகத்தானது மற்றும் தீவிரமானது.

அவர்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தங்கள் கடமைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சவுகரியங்களையும் வசதிகளையும் பற்றி நீங்கள் கூறினீர்கள். அது விசாரித்து அறியப்பட வேண்டியவை. குடும்பத்தினரிடம் எளிதாகக் கடிதத் தொடர்பு கொள்வதைக்கூட அனுமதிக்கும் நாகரிகம் இல்லாததுதான் காஷ்மீர் அரசு. கடிதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, மற்றும் சில மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரது மகள் மற்றும் என்னைப் பற்றிய செய்திகளுக்கு அவர் ஏங்கித் தவித்தது அவரது கடிதங்களில் வெளிப்பட்டது. ஜுன் 24ஆம் தேதி, ஒரு பாக்கெட்டில் காஷ்மீர் அரசு அனுப்பிவைத்த 15ஆம் தேதியிடப்பட்ட அவரது கடிதங்கள் எங்களுக்கு 27ஆம் தேதி ஜூன் இறுதிவாக்கில், அதாவது அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்ட பிறகு கிடைத்தன என்பதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? அந்த பாக்கெட்டில் இங்கே நானும் மற்றவர்களும் ஷ்யாம் பிராசத்துக்கு எழுதி அனுப்பிய கடிதங்களும் இருந்தன. இவை ஜுன் 11 மற்றும் 16ஆம் தேதிகளிலேயே ஸ்ரீநகருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன, ஆனால் ஷ்யாம் பிரசாத்துக்கு அளிக்கப்படவில்லை. இது மனரீதியான சித்திரவதைக்கு ஒப்பானது. அவர் மீண்டும் மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தேவையான இடத்தைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இட வசதி இல்லாமல் பெரும் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து இது அவருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதை உடல் ரீதியான சித்திரவதை இல்லையா?

'“அவர் எந்தச் சிறையிலும் அடைத்து வைக்கப்படவில்லை, பிரபல தால் ஏரி அருகில் ஒரு தனியார் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளார்” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து நான் ஆச்சரியமும் அவமானமும் அடைகிறேன். மிகச் சிறிய வளாகம் உள்ள மிகச் சிறிய ஒரு மாளிகையில், மிகத் தீவிரமாக இரவும் பகலும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் கண்காணிக்கப்பட்டுவந்தார். இதுதான் அவர் இருந்த நிலை. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சந்தோஷமாகவா இருப்பார்? இப்படிப்பட்ட தவறான பிரசாரத்தைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறேன். அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் உதவி அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. எனக்குக் கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானது. இது மிகவும் மோசமான, அப்பட்டமான கவனக் குறைவு என்பதுதான் மிகவும் பிரபலமான மருத்துவர்கள் இந்தத் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்த கருத்து. இந்த விஷயம் குறித்து, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை.

நான் இங்கே என் பிரியமான மகனின் மரணம் குறித்துப் புலம்பவில்லை. சுதந்திர இந்தியவின் ஓர் துணிவுமிக்க மகன், வழக்கு, விசாரணை எதுவும் இன்றி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மிகவும் சோகமான, மர்மமான முறையில் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். மகத்தான பேரிழப்பில் உள்ள ஒரு தாய், சுதந்திரமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு முற்றிலும் பாரபட்சமற்ற, பகிரங்கமான விசாரணை தாமதம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கிறேன். இறந்து விட்ட ஒருவரின் உயிரை எதனாலும் திருப்பிக்கொண்டு வர இயலாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நமது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியில் அதுவும் உங்கள் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட இந்த மாபெரும் சோக நிகழ்ச்சிக்கான உண்மையான காரணங்களை அறிந்துகொண்டு, அதன் நியாய, அநியாயங்களைத் தாங்களாகவே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஒரு தவறை எங்காவது, யாராவது செய்துவிட்டால்  - அவர் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் சரி - சட்டம் அதன் கடமையைச் செய்ய, அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். எனக்கு ஏற்பட்ட சோகம் இனி எந்தத் தாய்க்கும் ஏற்பட்டு கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படக் கூடாது.

உங்கள் மூலமாக எனக்கு எதாவது சேவை தேவைப்பட்டால் தயங்காமல் அதை வெளிப்படுத்தலாம் என்று நல்ல உள்ளத்தோடு தெரிவித்துள்ளீர்கள். இதோ என் சார்பிலும் இந்தியாவில் உள்ள அன்னையர்கள் சார்பாகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உண்மை வெளிச்சத்திற்கு வர அனுமதிக்கும் துணிவை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன், ஒரு முக்கியமான உண்மையைக் கூற விரும்புகிறேன். ஷ்யாமா பிரசாத்தின் டைரியையும் அவர் கையால் எழுதிய விஷயங்களையும் அவருடைய மற்ற உடமைகளுடன் சேர்த்து காஷ்மீர் அரசாங்கம் எனக்கு அனுப்பிவைக்கவில்லை. பக்க்ஷி குலாம் முகம்மது மற்றும் என் மூத்த மகன் ராம்பிரசாத் ஆகியோருக்கு இடையேயான கடிதங்களின் நகல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் அரசாங்கத்திடமிருந்து இந்த டைரி மற்றும் கையெழுத்துப் பிரதிகளை மீட்டுத் தந்தால் நான் ஆழ்ந்த நன்றி பாராட்டுவேன். இவை அவர்களிடம்தான் இருக்கும்.

என் நல்லாசிகளுடன்.


துயரத்துடன்
உங்கள் உண்மையான,

ஜோக்மயா தேவி
 
------------------------------------------------------

காண்க:

SALUTATIONS TO A GREAT MARTYR! (by L.K.Advani)

Syama Prasad Mookerjee

http://shyamaprasad.org/  






 






24.6.12

இவன் நிரந்தரமானவன்

கண்ணதாசன்
(பிறந்த தினம்: ஜூன் 24)

காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 இல் பிறந்தான் முத்தையா. நாட்டுக் கோட்டை நகரத்தார் சமுதாய வழக்கத்தின்படி, உடலெங்கும் திருநீறு பூசி சைவ நெறியில் வளர்ந்தான். எட்டாவது வரை மட்டுமே படித்த முத்தையாவை காலம் கவிஞனாக்கியது. சைவத்தில் வாழ்ந்த முத்தையா, பகவான் கண்ணனிடம் மனதை பறிகொடுத்ததால் கண்ணதாசனானார்.

ஸ்ரீ கிருஷ்ண கவசம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம் என கவிதை நூல்களை படைத்தார். கடைசிப் பக்கம், போய் வருகிறேன், வனவாசம், மனவாசம் என தன் வாழ்க்கையை வரைந்தார். பகவத்கீதையையும் அபிராமி அந்தாதியையும் எளிய தமிழில் விளக்கினார்.

திரையிசைப் பாடல்கள் அள்ளிக் கொடுத்தார். இவரை தமிழக அரசின் ஆஸ்தான கவிஞனாக அமரவைத்தார் எம்.ஜி.ஆர். சாகித்ய அகாடமி விருது இவரை அலங்கரித்தது. அமெரிக்க சிகாகோ நகர மருத்துவமனையில் 17-10-1981இல் மறைந்தார்.
இவன் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் இவனுக்கு மரணமில்லை.

அர்த்தமுள்ள வாழ்க்கை


சேலம் நகரில் திராவிட கழகத்தினர் ஸ்ரீராமன் படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும், வினாயகர் சிலைகளை செருப்பால் அடித்தும், உடைத்தும் நடத்திய ஊர்வலம் ஹிந்துக்களின் மனதை நோகடித்தது. நாத்திக கண்ணதாசன் இந்த ஆபாச ஊர்வலத்தை அறிந்து துடித்தார். துக்ளக் பத்திரிகையில் ‘நமது மூதாதையர் முட்டாள்களல்லர்’ என்ற தலைப்பில், ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார். மீண்டும் அதே பத்திரிகையில் ‘நான் ஒரு ஹிந்து’ என்று தலைப்பிட்டு தன்னிலை விளக்கக் கட்டுரை வடித்தார்.

அப்போது, தினமணிக் கதிர் ஆசிரியர் ‘சாவி’ அவர்கள், எங்கள் பத்திரிகைக்கெல்லாம் எழுத மாட்டீர்களா" என்று கேட்க, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ உருவானது. உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. நாத்திக நாற்றத்தை விரட்டியடித்தது கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம். இப்புத்தகத்தின் வெளிச்சத்தில் பாமர மக்களை கும்பல்களின் இருட்டுச் சிந்தனைகள் சிதறிப் போயின.

எரித்ததும் எறிந்ததும்

தி.மு.க. கம்ப ராமாயணம் எரிப்புப் போராட்டம் நடத்தியபோது ஓரிடத்தில் கவிஞரும் கலந்து கொண்டார். பகவான் கண்ணன் தன் தாசன் மனதில் புகுந்து என்ன லீலை செய்தானோ தெரியவில்லை. திடீரென கவிஞர் தன் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு கம்ப ராமாயணத்தை கட்டியணைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அதனை முழுவதுமாக படித்து முடித்தார். கம்பனின் கவிச்சொற்கள் கவிஞரின் நாத்திக அறிவை எரித்தது; அப்பொழுதே தி.மு.கவை தூக்கி எறிந்தார்.

கவிஞனின் கனிவு


ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் கவிஞர் வாலி. கண்ணதாசன் இரவு பதினோரு மணியாகியும் வரவில்லை. நள்ளிரவு நேரத்தில் அரங்கில் நுழைந்தார் கண்ணதாசன். கோபத்திலிருந்த வாலி, அவரை வரவேற்றார். செய்தித்தாள் ஒன்றை வாலியிடம் நீட்டிய கண்ணதாசன் ‘நாளைக்கு வாலிக்கு பிறந்தநாள், அதனால் வாலி பற்றி கவிதை எழுதி பேப்பரில் போடச்சொல்லி அச்சானதும் எடுத்து வந்தேன்’ என்று அறிவித்தார். வாலி தேம்பித் தேம்பி அழுதார்.


நன்றி: விஜயபாரதம்
.
காண்க:

காவியத்தாயின் இளைய மகன்

.



20.6.12

காக்கோரி ரயில் கொள்ளை!

 சரித்திரம்
 
இந்திய விடுதலைப் போர் காந்தியின் வழிகாட்டுதலில் பெரும்பாலும் சாத்வீகப் போராகத்தான் இருந்தது. எனினும் வெள்ளை அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களாலும் சுரண்டல் கொள்கைகளாலும் அதிகார ஆணவத்தாலும் வெறுப்புற்ற பொது மக்கள் ஆங்காங்கே ரகசியமாகப் புரட்சி இயக்கங்களையும் நடத்தினர். அந்த இயக்கங்கள் கொலை, கொள்ளை, பழிவாங்குதல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டன. அவற்றுள் ஒன்று ரயில் வண்டிகளில் போகும் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தல் ஆகும்.

1853-இல் முதல் ரயில் வண்டி பம்பாயிலிருந்து தாணாவுக்கும் அடுத்தது 1854-இல் ஹெளரா-ஹூக்ளிக்கு இடையிலும் விடப்பட்டது. 1900-க்குள் இந்தியாவின் பல பாகங்களும் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டன. அப்படி ஒரு வண்டி லக்னோவையும் ஷாஜஹான்பூரையும் இணைத்தது.

1897-இல் ஷாஜஹான்பூரில் பிறந்த பிஸ்மில் ராம் பிரசாத் இளமையிலேயே பள்ளிப் படிப்பை விட சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்ற விரும்பினான். அதற்குப் புரட்சி வழியைத் தேர்ந்தெடுத்தான். 1925-இல் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பைத் துவக்கினான். ஒருவனது கடுமையான உழைப்பினால் மற்றொருவன் பணக்காரன் ஆவதோ, ஒருவன் மற்றவனுக்கு எஜமானன் ஆவதோ தவறு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே அந்த அமைப்பின் நோக்கம். ஆனால் புதிய அமைப்பை வளர்ப்பதற்கு வேண்டிய பணத்திற்கு எங்கே போவது? தன் நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அவர்களும் அவனைப் போல் 20-25 வயது இளைஞர்கள், எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள்.

ராம் பிரசாத் பிஸ்மில்
 ஒருநாள் ராம்பிரசாத் ஷாஜஹான்பூரிலிருந்து ரயிலில் லக்னெü போய்க் கொண்டிருந்தான். வண்டி பல ஸ்டேஷன்களில் நின்றது. நின்ற இடங்களில் எல்லாம் பணப் பைகள் ஏற்றப்பட்டதைக் கண்டான். 'இந்தப் பணத்தையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் என்ன?' என்ற எண்ணம் திடீரென அவனது உள்ளத்தில் பளிச்சிட்டது.

லக்னோவிலிருந்து ஊருக்குத் திரும்பிய பின் சில நெருக்கமான நண்பர்களை ஷாஜஹான்பூருக்கு வருமாறு சொல்லி அனுப்பினான். அவர்களும் வந்தார்கள்.

அஷ்ஃபகுல்லா கான்
 அஷ்ஃபகுல்லா கான் செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். ராம் பிரசாதைவிட மூன்று வயது சிறியவன். இருவருக்கும் சொந்த ஊர் ஷாஜஹான்பூர். லாஹிரி ராஜேந்திரநாத் காசியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தான். தட்சிணேஸ்வரில் வெடிகுண்டு தயாரிப்பதைக் கற்றான். தாய்நாட்டு பக்தி மிகுந்தவன். மற்றொரு நண்பன் ரோஷன் சிங்கும் ஷாஜஹான் பூரைச் சேர்ந்தவனே-

பிஸ்மில் ராம் பிரசாத் தன் திட்டத்தை விவரித்தான்:"ஷாஜஹான்பூர் - லக்னெü மெயில் வண்டியில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கார்டு வண்டியில் பணம் ஏற்றப்படுகிறது. கார்டைத் தவிர விசேஷமாகக் காவல் எதுவுமில்லை. ரயிலை நிறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வது மிக எளிதாகச் செய்யக்கூடியது. அரசாங்கப் பணம் கொடுங்கோலர்களான ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து பறிக்கும் பணம்தான். அதை எடுத்து நமது அமைப்பை வளர்ப்போம். மக்களுக்கு உதவுவோம். மற்றொரு முக்கியமான விஷயம். நாம் ரயிலில் பயணம் செய்யும் நமது மக்களுக்கு எந்தவிதமான தொல்லையும் தரக்கூடாது.''

சந்திரசேகர் ஆஸாத்
 விவாதத்திற்குப் பின், ஆள் பலம் தேவை என்பதால் மேலும் நெருங்கிய சிலரைச் சேர்த்துக் கொள்வதென்றும், அந்த வண்டியைப் பல நாட்கள் ஆழ்ந்து கவனித்து அதன்பிறகு தான் திட்டத்தை அமல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பல நாட்கள் அந்த மெயில் வண்டியை கூர்ந்து கவனித்து, அது வரும் நேரம், ஸ்டேஷன்களில் நிற்கும் நேரம், கார்டு, வண்டி, அங்கே பணம் வைக்கப்படும் இடம், வைக்கப்படும் முறை, வண்டியில் உடன்வரும் காவல் ஏற்பாடுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னர், காக்கோரி ரயில் நிலையத்துக்கருகில் ஜனசஞ்சாரமற்ற இடத்தில் ரயிலை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடித் தப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.

ராஜேந்திரநாத் லாஹிரி
1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் 8 டவுன் ரயில் வண்டி ஷாஜகான்பூரிலிருந்து லக்னெüயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வண்டி காக்கோரியை நெருங்கிய நேரத்தில் புரட்சிக்காரர்களில் ஒருவன் அபாயச் சங்கிலியை இழுக்க, ரயில் நின்றது. அதன் காரணத்தை அறியும் பொருட்டு விரைந்து வந்த ரயில்வே கார்டை செயலற்றவராகச் செய்துவிட்டு, புரட்சிக்காரர்கள் கார்டு வண்டியிலிருந்த பணப் பெட்டியின் பூட்டை உடைத்து, அதிலிருந்து அரசாங்கப் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு லக்னோவுக்குத் தப்பியோடினர்.

உண்மையில் வண்டியை நிறுத்திப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பத்தே பத்து பேர்தான். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட MAUSER C96 SEMI AUTOMATIC துப்பாக்கிகளை புரட்சிக்காரர்கள் பயன்படுத்தினர்.

ரோஷன் சிங்

உடனடியாக அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ஷாஜஹான்பூர், ஆக்ரா, அலகாபாத், காசி, கொல்கத்தா, எட்டாவா, ஹர்டோய், கான்பூர், லாகூர், லக்கிம்பூர், லக்னெü, மதுரா, மீரட், ஓரை, பூனா, ராய்பரேலி, ஷாஜஹான்பூர், டெல்லி, பிரதாப்கர் ஆகிய பதினெட்டு இடங்களிலிருந்து 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதன்முதலாக 1925 செப்டம்பர் 26-ந்தேதி ஷாஜஹான்பூரில் பிஸ்மில் ராம்பிரசாத், ரோஷன் சிங் மற்றும் ஏழு பேர் போலீசாரிடம் சிக்கினார். ராஜேந்திரநாத் லாஹிரி கல்கத்தாவில் பிடிபட்டான். அஷ்ஃபகுல்லாகான் பத்து மாதங்களுக்குப் பின் வழக்கு முடிந்து தீர்மானிக்கப்பட்ட பிறகே டெல்லியில் கைது செய்யப்பட்டு, மீண்டும் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை பெற்றான். ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பனாரசிலாலும், இந்து பூஷன் மித்ராவும் அப்ரூவர் ஆனார்கள். ஐந்து பேர் தலைமறைவானார்கள். அவர்களில் இருவர் பின்னர் பிரபலமானார்கள். சந்திரசேகர் ஆசாதும், கேசவ் சக்கரவர்த்தி என்ற பெயரில் மறைந்து வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவாரும்.

சந்திரசேகர் ஆஸாத் 1928-ல் ஹிந்துஸ்தான் புரட்சி இயக்கம் துவங்கினார். 1931 பிப்ரவரி 27-ம் நாள் போலீஸ் தாக்குதலில் மாண்டார்.

சரியான சாட்சியங்கள் இல்லாததால், வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் 25 பேரில் (ராம்பிரசாத் பிஸ்மல்லும் பிறரும்) செக்ஷன் 121-ன் கீழ் (பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தல்), செக்ஷன் 120 (அரசியல் சதி), செக்ஷன் 396 (கொள்ளையும் கொல்லையும்), செக்ஷன் 302 (கொலை) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. வழக்கு 1926 மே 21-ந் தேதி தொடங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட இளம் தேச பக்தர்கள் சார்பில் பிரபலமான தலைவர்கள் கோவிந்த வல்லப பந்த், மோகன் லால் சக்சேனா, சி.பி.குப்தா, சுஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு வழக்கை நடத்தியது. மோதிலால் நேரு, மாளவியா, மகமது அலி ஜின்னா, லாலா லஜபத் ராய், ஜவஹர்லால் நேரு, கணேஷ் சங்கர் வித்யார்த்தி, சிவ பிரசாத் குப்தா, ஸ்ரீபிரகாசா, ஆசார்ய நரேந்திர தேவ் ஆகியோர் ஆதரவளித்தனர். சிறப்பு செஷன்ஸ் நீதிபதி ஒ.ஹாமில்டன் வழக்கை விசாரித்தார், பண்டிட் ஜகத் நாராயண் முல்லா சர்க்கார் தரப்பு பிராசிகியூட்டர்.

இன்றுபோல் அல்லாமல் வழக்கு ஒரே ஆண்டுக்குள் முடிந்துவிட்டது. ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திர நாத் லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறருக்கு மூன்றாண்டுகளிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

நாடெங்கும் இத்தண்டனைகளை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எழுந்தன. 1927 செப்டம்பர் மாதத்தில் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் 78 பேர்கள் கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பத்தை பண்டிட் மதன் மோகன் மாளவியா அரசுக்கு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் 16-ந் தேதி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, இங்கிலாந்து மன்னருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. 1927 டிசம்பர் 19-ம் தேதிக்குள் தூக்குத் தண்டனைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கடுமையான உத்தரவோடு கருணை மனு பிரிவு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் ரயில் கொள்ளையினால் எழுந்த இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல் 1927 டிசம்பரில் நிகழ்ந்த தூக்குத் தண்டனைகளால் (1927, டிசம்பர் 27) அடங்கியது. தேசபக்த புரட்சிக்கார வாலிபர்களின் ரத்தத்தால் மேலும் நனைந்து சிவப்பாக்கியது பாரத மண், அவர்களது நினைவில் காக்கோரியில் ஒரு நினைவு மண்டபம் எழுந்துள்ளது.

ராம் பிரசாத் ஒரு கவியும் கூட, அவன் பாடிய வரிகள் பிரசித்தமாகிவிட்டன. அதுவே இப்பாடல் வரிகள்:

''பிஸ்மில், ரோஷன், லாஹிரி, அஸ்பகுல்லா கொடுங்கோன்மையால் உயிரிழக்கின்றனர். ஆனால் அவர்களது ரத்தத்திலிருந்து அவர்களைப் போன்று நூற்றுக் கணக்கானவர் தோன்றினார்கள்''.

- மு.ஸ்ரீனிவாஸன்

நன்றி: தினமணி கதிர் (17.06.2012)
.

18.6.12

மகத்தான மாமனிதர்

பி. கக்கன்
(பிறந்த தினம்: ஜூன் 18)

மதுரை
மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் - பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.

கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.

மக்களில் ஒருவராய்...

சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.

தியாகத் தழும்பு

கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி,  குருதி கொட்ட தடியாலடித்த போதும், ''காந்தியார் வாழ்க", ''காமராஜர் வாழ்க"
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.

எளிமையின் சிகரம்

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.

தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.

நன்றி: விஜயபாரதம்

காண்க: தியாகத் திருவிளக்கு 



17.6.12

தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

வீரன் வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

'இந்திய
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்' ' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.

கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.
வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடி பிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

2.  இவர் தான் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 ல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிகையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர்.


இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது 'வந்தே மாதரம்' பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்:  "திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்''.

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்:

வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, "நல்ல செய்தியைச் சொன்னாய். நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது; கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், "இங்கிலாந்து சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது, "இப்பொழுது மட்டுமல்ல, இனி எப பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால், ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. "சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவவோர்  ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



.
 


11.6.12

கடவுளுக்குத்தான் வெளிச்சம்...

சிந்தனைக்களம்  



பொறுப்பான பதவிகளில் தகுதியானவர்கள் அமரும்போதுதான் அந்தப் பதவிக்குப் பெருமை. பதவியால் அலங்கரிக்கப்படுபவர்களைவிட, யாரால் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் மரியாதை. அரசியல் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தணிக்கை ஆணையர், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஆளுநர்கள் போன்ற எல்லாப் பதவிகளுமே சரியானவர்கள் பதவியில் இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கும் பெருமை, தேசத்துக்கும் பெருமை.

 குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேசத்தின் மிக உயர்ந்த பதவி குடியரசுத் தலைவர் பதவிதான். அந்தப் பதவியை வகிப்பவர்தான் தேசத்தின் முதல் குடிமகன் எனும்போது சர்வதேச அளவில் நமது நாட்டு மக்களின் தராதரத்திற்கு உதாரணமாகக் குடியரசுத் தலைவரைத்தான் அடையாளமாகக் கருதுவார்கள்.

 வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், அந்தப் பதவியை அலங்கரித்த மாமனிதர்களையும், அந்தப் பதவிக்கே களங்கம் கற்பித்த தவறான தேர்வுகளையும், குடியரசுத் தலைவர் பதவியின் மகத்துவம் உயர்ந்து மரியாதைக்குரியதாக இருந்த காலகட்டத்தையும், தரம் தாழ்ந்து நம்மைத் தலைகுனிய வைத்த சம்பவங்களையும் மீள்பார்வை பார்க்க வைக்கிறது.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்வதற்கு 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதுமா என்றால் "ஆமாம்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியவில்லை. கையெழுத்துப் போடத் தெரிந்தவராக, அரசியல் சட்டம் தெரிந்தவராக, தேசப்பற்று மிக்கவராக, சமைக்கத் தெரிந்தவராக, ஆமாம் சாமி போடத் தெரிந்தவராக என்று வெவ்வேறு விதமான தகுதிகள் கொண்டவர்களாக வெவ்வேறு காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை அனுபவம்.

 சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று குடியரசுத் தலைவர்களாகப் பதவியை அலங்கரித்த பாபு ராஜேந்திரப் பிரசாத், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹுசைன் ஆகிய மூவரும் 1950 முதல் 1969 வரை அவர்கள் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்களால் பதவி பெருமை பெற்றது என்பதுடன், இந்தியக் குடியரசு அவர்களை முதல் குடிமகன்களாகத் தேர்ந்தெடுத்ததில் பெருமிதம் அடைந்தது.

 ஜாகீர் ஹுசைனின் அகால மரணத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவமும், அதை அலங்கரித்தவர்களின் தகுதியும் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அடுத்த 15 ஆண்டுகள் குடியரசுத் தலைவர் மாளிகையின் இருண்ட காலம் என்று சொன்னால்கூடத் தவறில்லை. தேசத்தின் முதல் குடிமகனுக்கான அடிப்படைத் தகுதியே பிரதமரின் விரலசைப்புக்குத் தலையாட்டுவது என்று சட்டத்திருத்தம் கொண்டு வராத குறையாக அந்தப் பதவி தரம் தாழ்த்தப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை.

 காங்கிரஸ் கட்சியில் 1969-இல் ஏற்பட்ட பிளவு, குடியரசுத் தலைவர் பதவி தரம் தாழ்ந்து போனதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். அவரது வேட்புமனுவில் சஞ்சீவ ரெட்டியின் பெயரை முன்மொழிந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்தும் இட்டார்.

 சஞ்சீவ ரெட்டியையும், தனது கட்சித் தலைமையையும் முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகத்தை இந்திரா காந்தி அரங்கேற்றியதுதான், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்தப்பட்ட முதல் அவமரியாதை. தனது அதிகார பலத்தையும், நயவஞ்சகத்தையும் முழுமையாகப் பயன்படுத்தித் தான் சார்ந்த கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகளின் சுயேச்சை வேட்பாளரான வி.வி. கிரியைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வைத்தார் அவர்.

 இந்திரா காந்தி அனுப்பும் உத்தரவு எதுவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடுவதுதான் குடியரசுத் தலைவர் பதவியின் முழுமுதற் கடமை என்று செயல்பட்டதால் பெருமைக்குரிய "ரப்பர் ஸ்டாம்ப்' குடியரசுத் தலைவர் என்கிற கேலிப் பெயருக்கு ஆளானதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்ட குடியரசுத் தலைவர் வி.வி. கிரி. வி.வி. கிரியும் சரி, அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்த பக்ருதீன் அலி அகமதும் சரி, ஆளும் கட்சியின் கைப்பாவைகளாகவும், பிரதமர் அலுவலகம் அனுப்பும் அத்தனை உத்தரவுகளிலும் படித்துப் பார்க்காமல் கையொப்பமிடும் இயந்திரங்களாகவும் செயல்பட்ட அவலம் நிகழ்ந்தது.

 ஜூன் 25, 1975! சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள் அது. அன்றுதான் இந்திரா காந்தி அரசால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாவம், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நள்ளிரவில் தட்டி எழுப்பப்பட்டார். அவர்முன் நீட்டப்பட்ட அவசரநிலைச் சட்டப் பிரகடனத்தில், எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் கையெழுத்திட்டுத் தனது இந்திரா விசுவாசத்தைப் பிரகடனப்படுத்திய மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தூங்கப் போனார்.

 விடிந்தபோதுதான் இந்தியாவே இருண்டுவிட்டது வெளிப்பட்டது. செய்திகளே இல்லாமல் பத்திரிகைகள் வெளியாகின. விமர்சனத்துக்கு வழியே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியத் திருநாடே அவசரநிலைச் சட்டத்துக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகித் தவித்தது. கேள்வி எதுவும் கேட்காமல் அவசரநிலையைப் பிரகடனம் செய்த பக்ருதீன் அலி அகமது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்படுத்திய களங்கத்தின் கறை காலத்தால் அழியக்கூடியதா என்ன?

 1977-இல் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசு தோற்கடிக்கப்பட்டு, ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அவரால் பதவியின் இழந்த பெருமை மீட்கப்பட்டதா என்றால் இல்லை. 1982-ல் கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிற்று. மீண்டும் கிரி - அலி நாள்களுக்குத் தாழ்ந்தது குடியரசுத் தலைவர் பதவியின் மதிப்பும் மரியாதையும்!

 இந்திரா காந்தியின் அகால மரணமும், ராஜீவ் காந்தியின் வெற்றியும் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் சற்றும் எதிர்பாராதவை. தான் மீண்டும் இன்னொரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்தவுடன் அரசியல்வாதியான கியானி ஜெயில் சிங் தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் கூடப் பொருள்படுத்தாமல் தரம் தாழ்ந்து அரசியல்வாதி போலச் செயல்படத் துணிந்தார்.

 ராஜீவ் காந்தியைப் பதவி நீக்கம் செய்து இன்னொரு ஆட்சியைப் பதவியில் அமர்த்தினால் என்ன என்பது வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபடி சதித்திட்டம் தீட்டத் தொடங்கிய ஜெயில் சிங் மறந்துவிட்ட ஒரு எதார்த்த உண்மை என்ன தெரியுமா? ராஜீவ் காந்தி அரசுக்கு அன்றைய மக்களவையில் ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது என்பதுதான்.

 தரம் தாழ்ந்தவர்களைத் தகுதிக்கு மீறிய பெரிய பதவிகளில் தராதரம் தெரியாமல் அமர்த்துவதால் வரும் சோதனைகள் இவை. ஜெயில் சிங்கின் சிறுபிள்ளைத்தனமான (சில்லறைத்தனமான) செய்கைகளை நமது பத்திரிகைகள் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் போக்கு என்று வர்ணித்ததுதான் அதைவிட விசித்திரம்.

 பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனது இழந்த மரியாதையையும், பெருமையையும் மீண்டும் பெற்றது ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகவும் இக்கட்டான, பிரச்னைக்குரிய காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக ஆர். வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான், கூட்டணி அரசுகள் அமையும்போது குடியரசுத் தலைவராக இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் நெறிமுறைகளாக நிலை பெற்றன.

 எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும், எப்படிப்பட்ட நிலைப்பாடைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்ததால்தான், "விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலைவர்' (ரூல்புக் பிரசிடென்ட்) என்று ஆர். வெங்கட்ராமன் சரித்திரத்தில் இடம் பெற்றார். 1989-இல் தனிப்பெரும்பான்மை இல்லாத ஆனால், தனிப்பெரும் கட்சியாக 9 } வது மக்களவையில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது, கூட்டணி அமையுமானால் அதை எப்படி அனுமதிப்பது போன்ற சிக்கலான அரசியல் சட்டப் பிரச்னைகளுக்குத் தேர்ந்த முடிவுகளை எடுத்து, வரைமுறைகளை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திய வரலாற்றுப் பெருமை அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனையே சாரும்.

 ஆர். வெங்கட்ராமனைத் தொடர்ந்து சங்கர் தயாள் சர்மாவும், ஆர்.கே. நாராயணனும் அந்த உயர்ந்த பதவியின் மரியாதையைக் காப்பாற்றியதுடன் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர்களாகத் தங்களது செயல்பாடுகளால் மதிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து அரசியல் தொடர்புள்ளவர்களே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு மாற்றப்பட்டது அ.ப.ஜெ. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான். குடியரசுத் தலைவர் பதவிக்கு அதுவரை இல்லாத மதிப்பும், மரியாதையும், மக்கள் செல்வாக்கும் ஏற்பட்டதும் அவரது பதவிக்காலத்தில்தான்!

 அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதே ஒரு வித்தியாசமான அனுபவம். தான் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசால் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதே கூட அப்துல் கலாமுக்குத் தெரியாது. அன்றைய பிரதமர் வாஜ்பாயி, "எங்கே இருக்கிறார் அப்துல் கலாம்?' என்று விசாரிக்கச் சொன்னபோது, அவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிளஸ் டூ மாணவ - மாணவியருடன் உரையாடிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரைப் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது.

 தகைசால் சான்றோர் பட்டம், பதவிக்காக விண்ணப்பிப்பது வழக்கமல்ல என்பது அப்துல் கலாம் விஷயத்தில் நிரூபணமாகியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும்படி பாபு ராஜேந்திரப் பிரசாதை எல்லோரும் வற்புறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியை, வல்லபபாய் பட்டேலின் மறைவுக்குப் பிறகு காணப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சராகவும், 1952-இல் சென்னை ராஜதானியில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. காமராஜின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொள்ளச் செய்ய வற்புறுத்த வேண்டி வந்தது.

 வேறு சிலர் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வந்தும், சற்றும் பொருள்படுத்தாமல் தாங்கள் கொண்ட கொள்கையிலும், செயல்திட்டங்களிலும் தொடர்ந்து நடை போட்டனர். உதாரணமாக, சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராக இருக்கும்படி பண்டித ஜவாஹர்லால் நேருவே வற்புறுத்தியும் அதை நிராகரித்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். முதலிலேயே குறிப்பிட்டதுபோல, பதவிகள் அந்தப் பதவிகளை அலங்கரிப்பவர்களால்தான் பெருமை அடைகின்றன. தகுதியற்றவர்கள் மரியாதைக்குரிய பதவிகளில் அமர்த்தப்படும்போது மதிக்கப்படுவதில்லை, சகிக்கப்படுகிறார்கள், அவ்வளவே!

 1987-இல் மீட்டெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியின் கெüரவம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-இல் மீண்டும் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது. பிரதிபா தேவிசிங் பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கு அவருக்கு இருந்த தகுதிதான் என்ன? விடை தெரியாமல் புதிராக இருந்த இந்தக் கேள்விகளுக்கு ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோது விடையளித்தார்.

 ""நமது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் நேரு குடும்பத்துக்கு ஆற்றிய சேவைக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி. நேரு குடும்பத்தில் சமைப்பது, வரும் பார்வையாளர்களுக்கு டீ, காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது என்று கெüரவம் பார்க்காமல் சேவை செய்திருக்கிறார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், நாம் அப்படியெல்லாம் நேரு குடும்பத்துக்குக் காட்டும் நன்றி விசுவாசத்திற்குப் பலனில்லாமல் போகாது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான்'' என்று ரகசியத்தைப் போட்டு உடைத்து விட்டார் அவர்.

 பத்துப் பாத்திரம் தேய்த்த நன்றி விசுவாசத்துக்குக் கொடுக்கப்பட்ட பதவிக்கு, காங்கிரஸ் கட்சி மக்கள் மன்றத்தில் தந்த விளக்கமே வேறு. முதன் முறையாக ஒரு பெண்மணியைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று காரணம் கூறினார்களே, பிரதிபா பாட்டீலைவிடத் தகுதியான பெண்மணிகள் யாருமே காங்கிரஸ் கட்சியில் இல்லையா, இல்லை சோனியா காந்தியின் கண்களில் தட்டுப்படவில்லையா? ஒருவேளை, அவரைத் தவிர வேறு யாரும் நேரு குடும்பத்துச் சமையல் அறையில் வேலை செய்யவோ, பத்துப் பாத்திரம் தேய்த்துத் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தவோ முயற்சிக்கவில்லையோ என்னவோ...

 இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரவிருக்கிறது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பை 2007 போலவே மீண்டும் சோனியா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சோனியாவின் தேர்வு என்று சொன்னால், அது நிச்சயமாக அப்துல் கலாம் போன்ற தகுதியும் தரமும் வாய்ந்த, பதவிக்குப் பெருமை சேர்க்கும் ஒருவராக இருக்க வழியில்லை. நேரு குடும்பத்திற்குச் சேவகம் செய்யும், பத்துப் பாத்திரம் தேய்க்கும், வீட்டைப் பெருக்கி மெழுகும், தோட்டத்தைப் பராமரிக்க உதவும் இத்தியாதி இத்தியாதி சேவகம் செய்யும் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.

 இப்போதைக்கு பிரணாப் முகர்ஜி, மீராகுமார், பி.ஏ. சங்மா, ஹமீத் அன்சாரி போன்றவர்களின் பெயர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரணாப் முகர்ஜி அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். அவரது எண்ணம் புரிந்து கொள்ளக் கூடியதும்தான்.

 இன்றைய மத்திய அமைச்சரவையிலேயே அதிகமான பணிச்சுமையைத் தாங்குபவர் பிரணாப்தான். வயதுக்கு மீறிய வேலைப்பளுவால் துவண்டு போயிருக்கிறார் மனிதர். இரண்டாவதாக, தன்னை ஒருகாலமும் பிரதமராக்க சோனியா காந்தி சம்மதிக்க மாட்டார் என்று அவருக்குத் தெரியும். மூன்றாவதாக, இன்றைக்கு இருக்கும் நிதிநிலைமையில், இருபது ஆண்டு கால தாராளமயமாக்கலின் தாக்கத்தால் தளர்ந்தும் துவண்டும்போய்த் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் தன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது கூடவா அவருக்குத் தெரியாது.

 இதிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தஞ்சம் அடைந்துவிடப் பிரணாப் முகர்ஜி நினைப்பதில் தவறில்லை. ஆனால், சோனியா காந்தி அதற்கு அனுமதிப்பாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற உண்மையை உரக்கச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார் சங்மா. அதனால் அவரைக் குடியரசுத் தலைவராக்க சோனியா காந்தி ஒப்புக் கொள்வாரா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 சரி, மீரா குமார்? வேறு ஏதாவது வீட்டு வேலை நன்றாகச் செய்யும் ஊழியர்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

-எஸ்.குருமூர்த்தி 

நன்றி: தினமணி (09.06.2012)


.

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .