பி. கக்கன் (பிறந்த தினம்: ஜூன் 18) |
மதுரை மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் - பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.
கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.
அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.
மக்களில் ஒருவராய்...
சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.
முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.
தியாகத் தழும்பு
கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி, குருதி கொட்ட தடியாலடித்த போதும், ''காந்தியார் வாழ்க", ''காமராஜர் வாழ்க"
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.
எளிமையின் சிகரம்
தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.
தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.
நன்றி: விஜயபாரதம்
காண்க: தியாகத் திருவிளக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக