நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

26.7.11

நல்லார் ஒருவர் உளரேல்...

ராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா


திருவனந்தபுரம் அனந்த பத்பநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள  பல லட்சம் கோடி மதிப்புள்ள  கோவில்  கருவூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  கோவிலின்   நிலவறைகளில்  மிகுந்த பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்னும் ஒரு நிலவறை திறக்கப்படாமல் நீதி மன்றத்தால்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த பத்திரிகையிலும்  இதே செய்தி தான். எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான வியப்பு இது. பலநூறு ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பாரதத்தின் பெரும் செல்வம் இது.

நாடே வியந்து பார்க்கும் பத்மநாபர் கோவில் சொத்துக்கள் குறித்து ஒரே ஒருவர் மட்டும் எந்த வியப்போ, அதிர்ச்சியோ இன்றி புன்னகைக்கிறார். அவர், இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரும், திருவிதாங்கூர் மகாராஜாவுமான ஸ்ரீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. 'கோவில் சொத்து யாருக்கு சேரும்?'' என்று ஊடகங்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ள நிலையில், ''அந்தச் செல்வம் யாருக்கும் சொந்தமானது இல்லை. நிச்சயமாக எங்கள் ராஜ குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. அவை கடவுளுக்கே சொந்தம்'' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்கிறார், மகாராஜா மார்த்தாண்ட வர்மா.

உண்மையில் இக்கோவிலில் சேமிக்கப்பட்டுள்ள செல்வங்களில் பெருமளவு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தவை. பல ஆபரணங்கள் ராஜ குடும்பத்தால் கோவிலுக்கு காணிக்கையாக்கப்பட்டவை. கோவிலின் கருவூலம் அளப்பரிய செல்வங்களைக் கொண்டிருந்தது தெரிந்தும், பல நூற்றாண்டுகளாக அதுபற்றி எந்த விளம்பரமும்  இன்றி, ரகசியம் பேணி, செல்வத்தைக் காத்துள்ளது ராஜ குடும்பம். ஆதிக்க சக்திகளால் கொள்ளை போக வாய்ப்பிருந்த நிலையிலும், சொந்த வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், கோவில் கருவூலத்தை வெளிப்படுத்தாமல் காத்தவர்கள் 'பத்மநாப தாசர்கள்' என்று தங்களை  அறிவித்துக் கொண்ட ராஜ குடும்பத்தினர் தான். அவர்களுக்கு நாடு நன்றியுடன் வீர வணக்கம் செலுத்துகிறது.

இன்றைய கேரளத்தின் பெரும் பகுதியை (திருவிதாங்கூர் சமஸ்தானம்) ஒருகாலத்தில் ஆண்ட சேரகுல பரம்பரையைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா குடும்பம் இப்போது மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறது. ஆயினும் எளிய மக்களுக்கான சேவைகளையும் செய்தபடி, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்கிறது இந்த மன்னர்  குடும்பம்.90  வயதிலும் கம்பீரமாக, பத்மநாபர் கோவிலுக்கு தினசரி வருகை தந்து செல்கிறார் ராஜா மார்த்தாண்ட வர்மா.

இக்கோவிலின் நிரந்தர அறங்காவலர் இவர்தான். கோவிலுக்கு ஒரு குழல் விளக்கு தானம் செய்தாலே, அதில் விளக்கை மறைக்கும் அளவுக்கு தனது பெயரைப் பொறிக்கும் சுயநலமிகள் மிகுந்துவிட்ட இந்த உலகில்,  பெரும் செல்வக் களஞ்சியத்தைப் பாதுகாத்துள்ள ராஜா, அதற்கான எந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்தாமல், ''இது இறைபணி'' என்கிறார்.  இவரை உள்ளூர் மக்கள் தெய்வத்திற்கு சமமாகப் போற்றுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்ட அவசர உலகில், அதிகாரபலம் கோலோச்சும் பரிதாபமான சூழலில், சுயநலமே புத்திசாலித்தனமாகக் கருதப்படும் இழிவான காலகட்டத்தில், நமக்கு நன்னம்பிக்கை அளிப்பவராக ராஜா மார்த்தாண்ட வர்மா விளங்குகிறார். சும்மாவா ஔவைப் பாட்டி சொன்னார்,  '...நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'' என்று!

-குழலேந்தி
 
காண்க:

23.7.11

சிவாவின் கனவு நனவாகுமா?

தியாகி சுப்ரமணிய சிவா

(மறைவு: ஜூலை 23)பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்க வேண்டும் என்று சுதந்திர போராட்ட தியாகிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த வத்தலகுண்டு (இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருபகுதி). ராஜம் ஐயருக்கும்,  நாகலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 4.10.1884-ல் பிறந்தார்.

தனது 12-வது வயது வரை மதுரையில் படித்தார். பின்னர் கோவையில் ஓராண்டு படித்தார். அப்போதே, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக போயர்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் எழுதினார்.

பின்னர், சிவகாசியில் காவல்துறையில் எழுத்தராக சேர்ந்தார். ஆனால், சேர்ந்த மறுநாளே அப்பணியில் இருந்து விலகிவிட்டார். 1899-ம் ஆண்டில் மீனாட்சி அம்மையாரை திருமணம் செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற சுப்பிரமணிய சிவா, இளைஞர்களை ஒன்று திரட்டி, "தரும பரிபாலன சமாஜம்' என்னும் அமைப்பை உருவாக்கினார். இதனால், திருவிதாங்கூர் மாநில அரசால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதையடுத்து ஊர், ஊராக சுதந்திர வேட்கையை பரப்பிக்கொண்டே தூத்துக்குடி வந்து சிதம்பரனார் இல்லத்தில் தங்கினார். அங்கு கோரல் மில் தொழிலாளர்களின் உரிமைக்காக வ.உ.சி.யும், சிவாவும் தொடர்ந்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தினர். இருவரும் மேடை தோறும் விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசி இரட்டைசுழல் துப்பாக்கி போல செயல்பட்டனர்.

இருவரது பேச்சால் தேசபக்தர்களாக மாறிய தொழிலாளர்கள், வெள்ளையர்களுக்கு முகம்மழிக்கவும், துணி வெளுக்கவும் மறுத்தனர். தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற்றது.

சென்னை, கோல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு.

சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.

உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார்.

இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.

முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார்.

ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என்.தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.

தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு "பாரதபுரம்' என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தினர்.

மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர். ஆசிரமத்தில் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் தேசப்பற்றுடன் ஜாதி, மத பேதமின்றி ஒழுக்கம் தவறாமல் நடக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், மகாத்மா காந்தியை அழைத்து வந்து அதற்கு அடிக்கல் நாட்ட எண்ணினார். ஆனால், கோல்காத்தாவை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி சித்தரஞ்சன்தாûஸ அழைத்து வந்து 23.1.1923-ல் அடிக்கல் நாட்டினார்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினர், அரிஜனங்கள், அந்தணர்கள் என ஜாதி,மத பேதமின்றி வழிபடுவதற்குரிய ஆலயத்தை கட்ட கனவு கண்டார்.

புதுச்சேரியில் தனது நண்பர் பாரதியும், அவரது நண்பர்களும் சேர்ந்து வடிவமைத்த பாரத மாதா சிலையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அந்த சிலையை பாப்பாரப்பட்டிக்கு கொண்டுவந்தார். இந்த சிலையை ஆலயத்தில் மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்றும், மாதாவுடைய பார்வையிலேயே மேற்கு நாடுகள் பூட்டிய அடிமை விலங்குகள் நொறுங்கிப் போகும் என்றும் நினைத்தார் சுப்பிரமணிய சிவா.

இங்கு பூசாரி இருக்கக் கூடாது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தாமாகவே மாதாவை தரிசித்து செல்ல வேண்டும். இந்த ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டிய சித்தரஞ்சன்தாஸ், தன்னால் இயன்ற சிறுதொகையை நன்கொடையாக வழங்கினார்.

தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார்.

22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இவ்வலக வாழ்வில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்.

பாரத மாதவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற கனவு, அவரது ரத்தத்திலும், சதையிலும், உயிரிலும் கலந்திருந்தது. ஆனால், இதுவரை கனகவாகவே இருந்து வருகிறது. அவரது நினைவிடம் இருந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து, பெருமைப்படுத்திய தமிழக அரசு, சிவாவின் கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோள்.


- பீ.ஜெபலின் ஜான், தர்மபுரி

நன்றி: தினமணி
காண்க:


.

சுதந்திரம் பிறப்புரிமை என்றவர்

 
பால கங்காதர திலகர்

(பிறப்பு: ஜூலை  23) 
(நினைவு: ஆக. 1)


சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்என சிங்கநாதம் செய்தவர் லோகமான்ய பாலகங்காதர திலகர்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திலகர்.
இவர் 1856, ஜூலை 23 அன்று மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பிறந்தார். தாயார்:  பார்வதி பாய், தந்தை:  கங்காதர சாஸ்திரி.  திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், 'கேசவராவ்' என்று மூதாதையர் பெயராலும், 'பாலன்' என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.
பூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்என்றனர்.
அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்என்றார்.
திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.
உண்மையே  பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.
இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து நியூ இங்லீஷ் ஸ்கூல்என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.
மேலும் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு ஊட்டும் விதமாக சில நண்பர்கள் இணைந்து 1881ம் ஆண்டு மராட்டி மொழியில் கேசரிஎன்ற பத்திரிகையும் (இன்றும் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது) ஆங்கிலத்தில் மராட்டாஎன்ற பத்திரிகையும் தொடங்கினார். கேசரி பத்திரிகை, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கம் மக்கள் படும் துன்பத்தை தெரிவித்தது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது.  இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை 'கேசரி' இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து 'டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி'யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே பெர்க்யூஷன் காலேஜ்என்று விரிவுபட்டது.
1885ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். 1896ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார்.
அந்த நேரத்தில் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மக்கள் பஞ்சத்திலும், நோயிலும் அவதியுறும் வேளையில், இப்படிப்பட்ட கொண்டாட்டம் தேவையா? என மக்கள் அரசை எதிர்த்தனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொண்டனர். இதைக் கண்டித்து திலகர் பத்திரிகையில் எழுதினார்.
1897ம் ஆண்டு இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி,  1.25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை லோகமான்யர்என்று அழைத்தனர்.
1898ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார்.
அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். 'அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்' என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர்  மீது நம்பிக்கை வைத்தார்.
1907ம் ஆண்டு நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது மித, தீவிர கருத்துடையோரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் தனித்தனியே கூடி தீர்மானங்கள் போட்டனர். திலகர், இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒற்றுமை இல்லையேல் சுதந்திரம் என்பது கனவு என்று கூறினார். எனினும் திலகர் தலைமையில் விடுதலை வீரர்கள் ஒருங்கிணைந்தனர்.
இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.
இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார்.
திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு  புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.
1919ல் ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது.
அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்என்று திலகர் தெரிவித்தார்.
1920ம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத  திலகர் இறைவனடி (1920,  ஆகஸ்ட் 1)  சேர்ந்தார்.
1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார்.  இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் 'திலகர் திடல்' கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.
கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.
இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது  நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.

-என்.டி.என்.பிரபு

காண்க:

Bal Gangadhar Tilak Biography


 

22.7.11

பாரதி கண்ட புதுமைப்பெண்


 
 
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
(மறைவு: ஜூலை 22)
 
பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தர சிசிக்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித்தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல்பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி-மேலும், சமூக சிர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் கவுரவமான ஒரு குடும்பத்தில் 1886-ம் ஆண்டு, ஜூலை 30௦- ல் பிறந்தார் முத்துலட்சுமி. நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்த இவருக்கு சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், ராமையா என்று ஒரு தம்பி.
முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமி, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு நான்கு வயதானபோது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். முத்துலட்சுமிக்கு வயதானபோது, படிப்பை நிறுத்த நினைத்தனர். ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்யவே, உயர் நிலைப்பள்ளி படிப்பைத்தொடர வாய்ப்பு பெற்றார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றவர் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்கத்தடை ஏதும் இல்லாமல் போனது.
சிறுவயதில் இருந்தே முத்துலட்சுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பில் கவனமாக இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது கண்பார்வை சற்று மங்கியது. அதற்குக் கண்ணாடி கூட போட்டுக் கொள்ளாமல் கல்லூரிப்பாடங்களுடன் ஷேக்ஸ்பியர்,  டென்னிசன்,  மில்டன், ஷெல்லி  போன்ற மேல்நாட்டு இலக்கிய நூல்களையும் படித்தார். தனது 20 வது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார்.
மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதிதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். இதனால் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கோ திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய விருப்பமெல்லாம் படிப்பிலும், சமூகப் பணியிலுமே இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவனாக டி.சுந்தரரெட்டி அமைந்தார்.
அக்காலத்தில் அடையாறில் அன்னிபெசன்ட்  அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தனர். அங்கேதான் முத்துலடசுமி-சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது.
கணவன்-மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடுபட்டனர். இந்த மனமொத்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகிக்கிறார்.
சரித்திரம் படைத்த பெண்மணிகள் வரிசையில் முத்துலட்சுமி ரெட்டி இடம் பிடித்தார். அந்தப் பெருமையை அவர் பெறக் காரணமானவற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
முத்துலட்சுமி ரெட்டியின் ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்றார்.
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அக்காலத்தில் வறுமையில் வாடிய பெண்களும் நடத்தையில் தவறிய பெண்களும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கம். அந்த மாதிரியான அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த, அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் தக்க மணமகளைப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்.
முத்துலட்சுமி, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு  கலக்கம் கொண்டாலும், விரைவில் மனதை திடப்படுத்திக் கொண்டார். மக்கள் சேவைக்கே தன் முழுநேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.
முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் இளம் வயதிலேயே இறந்து போனார். காரணம் இக்கொடிய நோய்க்கு நல்ல மருத்துவ மனைகளே இல்லாமல் இருந்தது. தன் தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்று, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது. பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்து, புகழ் பெற்ற முத்துலட்சுமி  1968ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி மறைந்தார்.
அவர் மறைந்து விட்டாலும் அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அன்வை இல்லமும், புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் விளங்கி வருகின்றன.