நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
விடுதலை வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை வீரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.11.14

வினோபா பாவே - காந்தியம் உருவாக்கிய அதிசயம்

- பி.ஏ.கிருஷ்ணன்



 வினோபா பாவே மறைந்த தினம்: 15 நவம்பர், 1982 
 
லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை ஓரளவு சீரடைந்திருப்பதற்கு வினோபாவும் ஒரு காரணம். 

“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால், மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்.” இதைச் சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை, 14 ஆண்டுகளில் 70,000 கிலோ மீட்டர் நடந்தார். நடந்ததோடு நின்றுவிடவில்லை. இந்தியாவின் கிராமங்கள்தோறும் சென்று, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்கு வாங்கித் தந்தார்.

2.10.14

காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!

-லா.சு.ரங்கராஜன்


 ‘உண்மையில் காந்தியிசம்' (காந்தியம்) என்றால் என்ன என்று எனக்கே தெரியாது. நாட்டிற்கு நான் புதிதாக ஏதும் வழங்கவில்லை. இந்தியாவின் பாரம்பரியம் மிக்க மெய்யறிவுக்கு ஒரு புது வடிவம் அளித்துள்ளேன். அவ்வளவு தான். ஆகவே, அதனை காந்தியம் என்று கூறுவது தவறு' - என்று 1940 பிப்ரவரி 20 அன்று மலிகண்டா (வங்க மாகாணம்)வில் காதி கண்காட்சியைத் திறந்துவைத்து ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.

25.6.14

தொழிற்சங்க இயக்க வழிகாட்டி

 
ஜெயப்பிரகாஷ் நாராயணன் 
(பிறப்பு: 1902, அக். 11 -  மறைவு: 1979, அக். 8)


ஜெயப்பிரகாஷ் நாராயண் பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள சிடப்பியாரா என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் 11.10.1902இல் பிறந்தவர். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை, சிற்றுண்டி சாலையில் பாத்திரங்களை கழுவி, அதன் வருவாயை வைத்து கல்வி கற்றவர்.

23.7.12

வரலாற்று இரவு


 சிந்தனைக்களம்

வரலாறு மட்டும் பாடமல்ல; வரலாற்று நிகழ்வுகளை நடந்ததை நடந்தவாறு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என இலக்கணம் வகுக்கும் வரலாற்று வரைவியலும் ஒரு பாடமாகும்.

 மனிதகுலம் தோன்றிப் பயணித்த நீண்ட நெடிய காலப் பிரவாகத்தில், ஆறாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய ஆவணப்படுத்தப்பட்ட வரலாறே நம்மிடம் உள்ளது. இந்த வரலாற்றிலும் கூட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் குறித்த தடயங்களோ ஆவணங்களோ நம்மிடம் இல்லை. நாம் அறிந்திராத நமக்கு புலப்படாத இந்த நிலையை 'வரலாற்று இரவு'' என அழைக்கிறோம்.

 தடயங்களும் ஆவணங்களும் இருந்தும்கூட நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் சில இடங்களில் நடந்த சம்பவங்களைச் சரியான முறையில் பதிவு செய்யாத, செய்ய விரும்பாதவர்கள் இழைத்த வரலாற்றுப் பிழையை என்னவென்று அழைப்பது?

 உதாரணமாக தென்னிந்தியாவில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களின் சேவை, தியாகம் இவர்கள் வாழ்வில் சந்தித்த இன்னல்கள், சோகங்கள், சுருக்கமாக இவர்களின் வீரவரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை எனில் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? இவர்களின் பங்களிப்பு வரலாற்று இரவாக்கப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது இதற்கு ஏதேனும் பின்னணி உள்ளதா என பல ஐயங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.

 நடந்த சம்பவங்களிலிருந்தும் விளைவுகளிலிருந்தும் காரணங்கள் அல்லது வினாக்கள் நோக்கிச் செல்வது சமூகவியலின் தன்மை. காரணங்கள் அல்லது வினாக்களிலிருந்து சம்பவங்கள் அல்லது விளைவுகள் நோக்கிப் பயணிப்பது வரலாறு. இங்கே வைக்கப்படும் விவாதம் வரலாறு பற்றியதாக இருந்தாலும் சமூகவியல் நோக்கில் சில வினாக்களை முன்னிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 எத்தனையோ இந்திய விடுதலை இயக்க வீரர்களின் வாழ்வு நமக்கெல்லாம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதயம் கனக்க கண்கள் கலங்க தொண்டையில் சோகப்பந்து உருள்வதைப் போன்ற உணர்வோடு பகத்சிங்கையும், உதம்சிங்கையும் நாம் படிக்கவில்லையா?

 சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்ற திலகரின் சூளுரையைக்கேட்டு படித்தவர் மட்டுமல்ல, பாமரரும் பரவசமடையவில்லையா?

 லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால் ஆகிய மூவரை "லால், பால், பால்' என்று கொண்டாடவில்லையா? இதற்கெல்லாம் காரணம் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு போன்ற பன்முகத்தன்மைகளின் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பாராட்டிய நமது அருங்குணமேயாகும்.

 ஆனால், தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களின் வரலாறு பெரிதாக எழுதப்படாததன் காரணம் என்ன? வடஇந்திய மூவரான லால், பால், பால் போல தமிழகத்தின் மூவர் சுப்பிரமணிய பாரதியார், வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போற்றப்படாததன் காரணம் என்ன? தண்டி யாத்திரை முக்கியத்துவம் பெற்ற அளவுக்கு வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் வரலாற்றில் இடம்பெற்றதா?

 பாரதியாரின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். நாட்டுப்பற்றை எழுச்சிமிக்க பாடல்களால் உணர்த்திய கவிஞராக அறிமுகப்படுத்திய அளவுக்கு, விடுதலை இயக்க வீரராக அவரின் பங்களிப்பை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் பதிவு செய்திருக்கின்றன?

 ஒரு பத்திரிகையாளராக ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் துணிச்சலுடன் போராடியதை இளைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பதிவுகள் கொண்டு சேர்த்திருக்கின்றனவா? வரலாற்றுப் பேராசிரியர் பி.பி.கோபாலகிருஷ்ணனின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பாரதியார் பத்திரிகையாளராக நாட்டு விடுதலைக்குப் பங்களிப்பு செய்ததை நாம் அறிகிறோம்.

 'இந்தியா' எனும் இதழ் மூலமாக நாட்டு விடுதலைக்கான செய்திகளைக் கருத்துப்படங்களுடன் எடுத்துரைத்த பாரதியார் தொடர்பான இக்கட்டுரையின் தலைப்பு "இந்தியாவும் விடுதலை இயக்கமும்' என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய பாரதியார் தனது விடுதலை வேட்கைக்கான சரியான வடிகால் 'இந்தியா' இதழே என முடிவெடுத்து அதில் பணியமர்வதை அறிகிறோம். எழுச்சிமிக்க கட்டுரைகள் மூலம் தேசப்பற்றை ஊட்டி வளர்த்த பாரதியார் குறித்த சம்பவங்கள் தேசிய அளவில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வரலாறு பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதா?

 எஸ்.என். திருமலாச்சாரி என்பவரால் தொடங்கப்பட்டு சென்னை பிராட்வேயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இந்த வார இதழ் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரமான செய்திகளையும் கருத்துப்படங்களையும் வெளியிட்டு வந்தது. முதல் இதழிலிருந்தே பாலகங்காதர திலகர் மற்றும் விடுதலை இயக்கத்தில் தீவிர உணர்வு கொண்டவர்களின் கருத்துகளைத் தாங்கிவந்த 'இந்தியா' பிபின் சந்திரபால் 1907-இல் சென்னை வந்தபோது, அது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிட்டதாக பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

 விடுதலைப் போராட்டத்தின் முகத்தையும் முகவரியையும் சுட்டும் அடையாளங்களுள் ஒன்றாக என்றேனும் 'இந்தியா' எனும் இதழ் இனம் காணப்பட்டதா? இந்த இதழ் பற்றிய விளக்கம் மாணவர்களுக்குப் போதிக்கப்படும் வரலாற்றில் விரிவாக இடம் பெற்றிருக்கிறதா?

 அன்னியர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் அல்லும் பகலும் பாடுபட்டு அல்லலுற்ற பாரதியின் துயரங்களை 'பாரதிக்குத் தடை' எனும் புத்தகத்தின் வாயிலாக வரலாற்றுப் பேராசிரியரும் ஆய்வாளருமான முனைவர். வி.வெங்கட்ராமன் விளக்குகிறார். தேசிய மற்றும் மாநில ஆவணக்காப்பகங்களில் உள்ள அக்காலத்திய அரிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள்காட்டும் இந்த முழுமையான ஆய்வு நூலில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான அரசியல் வாழ்வில் பாரதி அடைந்த இன்னல்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

 பாரதி இயற்கை எய்தி ஆறு ஆண்டுகள் கழித்து அவரது புத்தகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. இதைக் கண்டித்து சென்னை மாகாண சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி குரலெழுப்பினார்.

 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், ரெüலட் சட்டம் இவற்றுக்கு எதிராக 1919-ஆம் ஆண்டு கூட்டு நாடாளுமன்றக் கமிட்டியின் பிரதிநிதியாக 32 வயதே நிரம்பிய சத்தியமூர்த்தி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 சுதேசி இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட சத்தியமூர்த்தி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயம் பயணத்தின்போது அவருக்கு தண்டு வடத்தில் அடிபட்டது. சென்னை பொது மருத்துவமனையில் காயங்கள் குணமாகாமல் 1943-ஆம் ஆண்டு தனது 56-வது வயதில் இன்னுயிரை நீத்த சத்தியமூர்த்தியை, 'இந்திய தேசிய இயக்கத்தின் குரல்' என புகழப்பட்டவரை எத்தனை வரலாற்றுப் புத்தகங்கள் நினைவு கூர்கின்றன?

 இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இந்தியச் சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்த முன்னோடி கட்டபொம்மன் என்ற கருத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா?

 ஸ்ரீரங்கப்பட்டினம், சித்தேஸ்வரம் போன்ற பகுதிகளில் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராகப் பெற்ற வெற்றியில் பெரும் பங்காற்றிய தீரன் சின்னமலையின் வாழ்க்கை குறித்து இந்தியாவின் பிற பகுதிகளில் பயிலும் வரலாற்று மாணவர்கள் அறிவார்களா?

 வீரத்திலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய மருது சகோதரர்களையும் அவர்களின் வீர வரலாற்றையும் இந்தியர்களில் எத்தனை பேர் அறிவார்கள்?

 ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றிய மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கட்டபொம்மன் போன்றோரின் வீரதீரச் செயல்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்துச் செயல்பட்ட தமிழகத்தின் விடுதலை இயக்க முன்னோடிகளின் தியாக வாழ்வும் இந்திய பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகமாகவில்லை எனில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தை முழுமையானதாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

 இந்தியாவின் விடுதலை வேள்வியில் தென்னிந்தியர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை எனும் மாயை உருவாக்கப்படுமேயானால், அதுவே உண்மை என எதிர்காலச் சந்ததியினரும், வெளிநாட்டினரும் நம்புவார்களேயாயின் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்பது யார்? அந்தக் குறையைச் சரி செய்வது யார்?

 நடந்ததை நடந்தவாறு கூறாமல்போன இந்த நிலையை வலிந்து உருவாக்கப்பட்ட 'வரலாற்று இரவு' என அழைக்காமல் வேறு என்னென்பது?

- ஆர். கண்ணன்


நன்றி: தினமணி (21.07.2012)
.

10.7.12

ஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்


வேலூர் புரட்சியில் பலியான வீரர்கள் நினைவுச் சின்னம்
இன்று வேலூர் சிப்பாய் புரட்சி நாள்
(1806, ஜூலை 10)

சரித்திரம்


இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806-ம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர்.

உண்மையில், 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு தன்னகத்தே பதிவு செய்து வைத்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து இதுதான் என்பதையும், இதை வேலூர் சிப்பாய் புரட்சி என்றுதான் வர்ணிக்க வேண்டும் என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர்.

புரட்சி வெடித்தது:

1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால், இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இன்னும் கோபத்தை இந்திய துருப்புகளுக்கு ஏற்படுத்தின.

வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.

இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.

இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது. கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.

உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும், அன்றைய முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி அரசு சார்பில் இந்த நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

 
காண்க: 
 
  

 

.
.

6.7.12

உலகளந்தான்

ஆசாரிய வினோபா பாவே
(1895, செப். 11 - 1982, நவ. 15)
தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்றி கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி,மீ.க்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலபரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர் .புரட்சிகரமான பூதான இயக்கத்தை தொடங்கி வழிநடத்தியவர்.சர்வோதயா இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். அவர் ஆச்சர்யா வினோபா பாவே.

1951 ஆம் ஆண்டில் சர்வோதயாவின் மாநாடு ஆந்திரத்தில் உள்ள சிவராம்பள்ளியில் நடந்தது. தனது வார்தா ஆசிரமத்திலிருந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறார். அப்பொழுது தெலுங்கானா பகுதியில் நக்சல் இயக்கத்தினர் பெறும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். வன்முறையை பிரயோகித்து வறியவர்களிடத்திலிருந்து நிலங்களை பிடுங்கி எளியவர்களுக்கு வழங்கினர்.அவர்களது வன்முறையை ஒடுக்க அரசு காவல் துறையை அனுப்பியது. கிராமங்கள் பகலில் போலீஸ் பிடியிலும் இரவில் நக்சல் பிடியிலும் சிக்கி சிதைந்து கொண்டிருந்தன.

சுமார் இருநூறு கிராமங்கள் முழுமையாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசு தனது பலத்தை பிரயோகித்து ஓரளவு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றது, ஆனால் அங்கு நிலவிய அடிப்படை பிரச்னை தீர்ந்தபாடில்லை. மாநாடு முடிந்தது, வினோபா பதட்டத்துக்குரிய அப்பகுதிக்குள் பயணிக்க திட்டமிடுகிறார். சிறையில் உள்ள நக்சல் இயக்க தலைவர்களை சந்திக்க அனுமதி கோரி,  ராம நவமியன்று அவர்களை சந்தித்து பேசுகிறார். வினோபாவிடம் எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் மக்களோடு மக்களாக கலந்து நடந்து கீதை சொல்லும் செய்தியை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே உள்ளுணர்வு அவரிடத்தில் இருக்கிறது. எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

வினோபா அவரது குழுவோடு  ஏப்ரல் 18 அன்று போச்சம்பள்ளி எனும் கிராமத்தை அடைகிறார். அங்கு மக்களை சந்தித்து உரையாடும் பொழுது, அந்த ஊரில் வாழும் நிலமற்ற ஏழை அரிஜன மக்கள் வினோபாவிடம் தங்களுக்கு நாற்பது ஏக்கர் நஞ்சை நாற்பது ஏக்கர் புஞ்சை நிலம் வேண்டும், நக்சல்கள் கொடுக்கவேண்டாம், அரசிடம் கேட்டு வாங்கி கொடுங்கள் என்று முறையிடுகிறார்கள். வினோபா கிராம மக்களின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்,  இந்த பிரச்னைக்கு என்ன செய்வது ? எப்படி இதை தகர்ப்பது என்று கேள்வி எழுப்பினார்.  ஒருக்கால் அரசு நிலம் ஏற்பாடு செய்யவில்லை என்றால்,கிராமத்தினரே அவர்களுக்குள் எதுவும் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறார். பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை, தான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயணம் மேற்கொள்வதால் ஒருவேளை இதுவே கடைசி சந்திப்பாக இருக்கக்கூடும் என்றார்.

அப்பொழுது அந்த கூட்டத்தில் அமர்ந்து இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமசந்திர ரெட்டி எழுந்தார்  "நான் அவர்களுக்கு எனது நிலம் 100 ஏக்கரை கொடுக்கிறேன் " என்றார். மீண்டும் மாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்திலும் உணர்ச்சி மிகுதியோடு அதையே கூறினார்,  இது யாரும் எதிர்பாராதது.  அஹிம்சையின் வழியில் அன்பின் வலிமை கொண்டு இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என்று வினோபா நம்பினார். நிலத்திற்காக ரத்தம் சிந்தி கொண்டிருக்கும் நிலபரப்பில் மனமுவந்து ஒருவர் நிலத்தை தானமாக கொடுப்பது மிகப் பெரிய செயலாகும்.  நிலத்தை பெற்றவர்களோ எங்களுக்கு என்பது ஏக்கர் போதுமானது அதை காட்டிலும் ஒரு ஏக்கர் கூட கூடுதலாக தேவையில்லை என்று உறுதியாக நின்றனர். இது மற்றுமொரு ஆச்சரியம். இது இறைவனின் திட்டமாக, ஓர் சமிக்ஞையாக உணர்ந்தார். எல்லாம் துலக்கம் பெற்றது. அங்கிருந்து தொடங்கியது தான் பூதான இயக்கம் .

வினோபாவும் அவரது சகாக்களும் அதிகாலை மூன்று மணிக்கு எழுவர். அவரது குழுவில் -  லட்சியவாதிகள்,  இளைஞர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பொதுவாக இருப்பார்கள். காலை எழுந்து அவர்களுக்குள் ஓர் சிறிய பிரார்த்தனை கூட்டம் நடத்தி முடித்துவிட்டு நடக்க தொடங்குவார்கள். நாளுக்கு பனிரெண்டு மைல் கணக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் திரளாக மக்கள் வரவேற்றனர்,  உணவும் இருப்பிடமும் கொடுத்து உபசரித்தனர். வினோபா மக்களிடம் பூமிதானத்தின் முக்கியத்துவத்தை பற்றி ஊர் மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அவரது தொண்டர்கள் அங்கு கிராமத்தினரை சந்தித்து நிலங்களை பெற்று வந்தனர். தெலுங்கானா  முழுவதும் நடந்தார், மக்கள் சாரை சாரையாக திரண்டு நிலங்களை வழங்க முன்வந்தனர். உள்ளார்ந்த கருணையின் ஒரு சிறு தீப்பொறி இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது.

நிலகிழார்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும், "நான் தங்களது கடைசி மகன், எனது பங்கு நிலங்களை பிரித்து தாருங்கள்" என்று போகுமிடமெல்லாம் கோரிக்கைகள் வைத்தார். இந்தியாவில் நிலமற்று வாழும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஐம்பது மில்லியன் ஏக்கர் நிலங்கள் வேண்டும் என்று கணக்கிட்டார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அவரால் ஒரு பனிரெண்டு வருட காலத்தில் இந்தியா முழுவதும் நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை மட்டுமே பூதான் இயக்கம் மூலம் பெற்றளிக்க முடிந்தது. ஆயினும் கூட இது ஓர் மகத்தான சாதனை தான்.

விநாயக் என்ற இயற்பெயருடைய வினோபா 1895 ம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று மகாராஷ்டிரத்தின் கொலோபா மாவட்டத்திலுள்ள ககோடா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தாயார் ருக்மிணி தேவி, அவரது சகோதரர் பாலகோபா சிவாஜி ஆகியவர்கள் வினாயக்கை வெகுவாக பாதித்தனர். அவரது சகோதரர் துறவு பூண்டு வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக மக்களுக்கு தொண்டாற்றினார்.

தனது இளம் வயதிலேயே வினோபாவிற்கு அபாரமான ஆன்மீக முதிர்ச்சி சாத்தியமானது. இன்டர்மீடியட் பரீட்சைக்கு மும்பைக்கு செல்வதாக இருந்த அவர் அதை கைவிட்டு வாரணாசி புறப்படுகிறார். அங்கு சமஸ்க்ருத பாடங்களை ஊன்றி கற்று தேறுகிறார். அப்பொழுது பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் காந்தி உரையாற்றுகிறார், அதன்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதங்கள் எழுதுகிறார். காந்தி அவரை தனது அகமதாபாத் ஆசிரமத்திற்கு சந்திக்க அழைக்கிறார்.

அவரது மனதில் ஆன்மீக தேடலுக்காக இமயத்திற்கு செல்வதா அல்லது சுதந்திர புரட்சி பற்றி எரிகிற வங்காளத்துக்கு செல்வதா என்று பெறும் குழப்பம் ஏற்பட்டது.  ஜூன் 1916 ல் காந்தியை சந்திக்கிறார் வினோபா,  அவரது அக கொந்தளிப்புகள் முடிவுக்கு வருகின்றன, பிற்காலத்தில் அந்த சந்திப்பை பற்றி சொல்லும் பொழுது "நான் காசியில் இருந்த காலத்தில் இமயத்திற்கு செல்வதே எனது லட்சியமாக இருந்தது, அதே சமயம் வங்காளம் செல்ல வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டினேன், எனது இந்த இரண்டு ஆசையும் நிராசையாகின, விதி என்னை காந்தியிடத்தில் இட்டுச் சென்றது, காந்தியிடம் நான் இமயத்தின் பேரமைதியை மட்டும் உணரவில்லை வங்காளத்தின் புரட்சியின் கனப்பையும் உணர்ந்தேன்".

வினோபா மூன்று விதமான மனிதர்களை தெலுங்கானாவில் சந்தித்ததாக எழுதுகிறார், எளிய பொதுமக்கள்,  ஊரிலிருந்து துரத்தப்பட்ட பெறும் செல்வந்தர்கள்,  மற்றும் கம்யுனிஸ்டுகள். இந்த மூன்று தரப்பினரிடத்திலும் வினோபா தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார் .கம்யுனிஸ்டுகளிடம் -  "உங்களது நோக்கம் எத்தனை உயர்வாக இருந்தாலும், உங்கள் சித்தாதம் முன்வைக்கும் லட்சிய சமூகத்தை இதுவரை எந்த தேசமும் உருவாக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவும் அதற்கு வன்முறை வழியில்லை, அதுவும் தற்பொழுது தான் இந்தியா சுதந்திரம் அடைந்துள்ளது,இந்த நேரத்தில் வன்முறை பிரயோகிப்பது நிச்சயம் தவறாகும் " என்றார். இவ்விளக்கம் அவர்களை திருப்தி படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதே போல் தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலக்கிழார்களை சந்தித்து துணிவுடன் ஊருக்கு சென்று ஏழை மக்களுக்கு சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார்.  ஒளிந்து வாழ்வதை காட்டிலும் மரணம் மேலானது என்றார்.

பூதானம் ஓர் வேள்வி என்றார் அவர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம் என்று தொடர்ந்து பயணித்தார் வினோபா. முதல் ஏழு வருடங்கள், அதாவது 57 வரை வெகு முனைப்பாக இந்த பூதான இயக்கம் செயல்பட்டது. பூதானத்தின் அடுத்த பரிணாமம் கிராம தான திட்டம். மே 1952 ல் உத்தரப் பிரதேசத்தில் பயணிக்கும் பொழுது மன்க்ராத் எனும் ஒட்டுமொத்த கிராமமே தானமாக கொடுத்தனர். தங்களது தனி சொத்தான நிலங்களை கிராம பொது சபைக்கு மக்கள் எழுதி கொடுத்தனர். இதுவும் ஓர் மிகப் பெரிய லட்சிய கனவாகும்.

தனி நபர் பூமி தானத்தை காட்டிலும் ஊரே இயைந்து வாழும் கிராம்தான திட்டம் சிறப்பானதாகும். இந்தியா முழுவதும் அப்படி சுமார் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் கிராமங்கள் கிராம தான இயக்கத்திற்கு கீழ் வந்தன.  அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு. இந்திய அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைக் காட்டிலும் பூதான இயக்கம் செறிவாக செயல்பட்டது அப்பட்டமான உண்மை. அரை மில்லியன் குடும்பங்களேனும் இதில் பயன்பெற்றது என்று ஓர் கணக்கெடுப்பு சொல்கிறது.

காந்தியின் தீவிரமான சீடராக திகழ்ந்தார். அவருக்கும் இவருக்குமான உறவு இருவரும் வாழும் வரை சீராகவே இருந்தது. 1923 ல் நாக்பூரில் சத்யாக்ரகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காந்தி அவரை வைக்கம் போராட்டத்திற்கு அனுப்பினார். பின் மீண்டும் 1932 ல் சிறைவாசம். 1940 ல் காந்தி வினோபாவை முதல் தனிமனித சத்யாக்ராகியாக தேர்ந்தெடுத்தார். கிராமீய பொருளாதாரம் மற்றும் காதியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்று காந்தியால் பாராட்டப் பெற்றவர். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

கீதை காட்டும் பாதையில் வாழ்ந்தார் வினோபா. தங்கத்தை துறந்து வாழ ஓர் இயக்கத்தை தொடங்கினார், அதே போல் பண்டைய காலத்து ரிஷிகள் போல் எருதுகளை பயன்படுத்தாமல் உழும் முறையை பிரபலபடுத்தினார்,  ஸ்ரமதானம்- பொது வேலையில் பங்கெடுப்பது,  சாந்தி சேனை, ஜீவ தானம் - தனது உயிரையே உயர்ந்த லட்சியத்திற்காக கொடுக்கத்  துணிவது போன்றவை அவர் தொடங்கிய முன்னோடி இயக்கங்கள்.

லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் விநோபாவால் ஈர்க்கப்பட்டு ஜீவ தானம் செய்துகொண்டார். இத்தனையும் சாதித்தவர் அறுபது வயதை நெருங்கி கொண்டிருந்த வயிற்றுப்  புண், வயிற்றுப்  போக்கு மலேரியா போன்ற நோய்களால் நீண்டகாலமாக வாதனையில் உழன்ற எளிய மனிதர் . அவரது வயிற்றுப்  புண்ணின் காரணமாக அவரது உணவே தேன், தயிர், மற்றும் பால் ஆகியவை மட்டும் தான்.

பூதான இயக்கம் உலகமெங்கும் கவனம் பெற்றது, அமெரிக்காவின் லூயிஸ் பிஷர் ,"அண்மைய காலத்தில் கிழக்கிலிருந்து நமக்கு கிடைத்த மிக சிறந்த படைப்பூக்கம் மிக்க திட்டங்களில் ஒன்று கிராம தானம்" என்றார். ஹல்லாம் டென்னிசன், பிரபல ஆங்கில கவிஞர் ஆல்பிரெட் டென்னிசன் அவர்களின் பெயரன், வினோபாவுடன் தான் இந்திய கிராமங்களுக்கு ஊடாக பயணித்ததை 'தி செயின்ட் ஆன்  தி மார்ச்' எனும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்தியாவின் பூதான இயக்கம் கம்யூனிசத்திற்கு சிறந்த மாற்று என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செஸ்டர் போவ்லேஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பிரித்தானிய தொழிலதிபர் ஈர்நெஸ்ட் பார்டர் பூதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காந்திய அரங்காவல முறையை ஏற்றுக்கொண்டு தனது நிறுவனத்தின் தொண்ணூறு பங்கு லாபத்தை தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு கொடுத்தார். 'டைம்' பத்திரிக்கை அட்டையில் வினோபா படத்தை போட்டு கௌரவித்தது .

சம்பல் பள்ளத்தாக்கில் பதுங்கி கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் ஆயுதங்களை துறந்து அவரிடம் சரணடைந்தது.உண்மையில் இது அஹிம்சையின் மாபெரும் வெற்றி. வாழ்க்கை முழுவதும் பயணித்தார், பல ஆயிரம் மேடைகளில் உரையாற்றினார்,  பதிமூன்று வருட சுற்று பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பினார். பின்னர் ஒரு நான்கு வருடம் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பின்பு பசுவதைக்கு எதிராக ஓர் இயக்கத்தை முன்னெடுத்தார். 74-75 வரை அவரது பௌனர் ஆசிரமத்தில் மௌன விரதத்தில் ஆழ்ந்தார். மெல்ல தனது வெளியுலக தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளத் துவங்கினார். அவரது ஆன்மீக பசி அவரை ஆட்க்கொண்டது.

பூதான இயக்கம் மற்றும் வினோபாவின் மேல் பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கிராமதான இயக்கத்தில் அனேக கிராமங்கள் உறுதிமொழியில் எளிதாக கையெழுத்து இட்டனர்; ஆனால் நடைமுறையில் அத்தனை கிராமங்களும் அப்படி மாறிவிடவில்லை. 70 களில் வெகு சில ஆயிரம் சிறிய கிராமங்களே நிலத்தை கிராமசபைக்கு ஒப்படைத்தது. அதுவும் அநேகமாக ஓர் இனக்குழுவாக, ஒரே சாதியாக வாழ்ந்து வந்த கிராமத்தினரே அப்படி செய்தனர். நாலு லட்சம் ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டாலும் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உரியவர்களை சென்றடைந்தது. மீதி நிலங்கள் சட்ட சிக்கல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ பயனற்றுப் போயின. நிலம் கொடுத்த நிலக்கிழார்கள் அனைவரும் வேண்டி விரும்பிக்  கொடுத்தனர் என்று சொல்ல முடியாது.  பலரும் நக்சல்களிடத்திளிருந்து பாதுக்காத்துகொள்ள பயந்து கொடுத்தனர். காந்தியை அதீதமாக நகலெடுக்கிறார் என்றும், காந்தி சொல்வதை எந்த ஓர் விவாதமும் இன்றி ஏற்றுகொள்வார் என்றும் வினோபா விமரிசிக்கப் பட்டார். அனைத்தையும் காட்டிலும், ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா அரசுக்கு எதிராக நடத்திய இயக்கத்தை அவர் ஆதரிக்கவில்லை,  இந்திரா கொண்டு வந்த அவசர கால சட்டத்தை, அது நாட்டிற்கு தற்பொழுதைய தேவை என்று ஆதரித்தது பலருக்கும் பெறும் அதிர்ச்சியை அளித்தது.

சில குறைகள் இருப்பினும் கூட, இந்தியாவில் காந்திக்குப் பிறகு , காந்திய வழிமுறைகளின் வலிமையை அதன் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு வினோபா உணர்த்தினார்.அவரது அணுகுமுறையால் கவரப்பட்ட ஜெ.பி. தன் வாழ்நாள் முழுவதும் சர்வோதயா அமைப்புக்காக போராடுவேன் என்று உறுதி பூண்டார். காந்தியத்தை இன்றளவிலும் உயிர்ப்புடன் வைத்து இருக்க வினோபா ஓர் முக்கிய ஆளுமையாகும்.

உலக அளவில் பூதான இயக்கம் அஹிம்சை வழியில் முன்னெடுத்து செல்லப்பட்ட மிக சிறந்த இயக்கங்களில் ஒன்றாகும். அது ஓர் மிகப் பெரிய கனவு, நிறைவேறா கனவு தான்.  ஆனால் அர்த்தமற்ற கனவில்லை. நீர், சூரியன், வானம் மற்றும் காற்றை போல் நிலமும் இயற்கை ஒட்டுமொத்த உயிரினகளுக்கு கொடுத்த கொடை என்றே அவர் எண்ணினார். மக்கள் சக்தியே அரசின் சக்தியை காட்டிலும் மகத்தானது என்றார். காந்தியின் கனவுகளை சுமந்து திரிந்தார். கிராமம் கிராமமாக கால்நடையாக அன்பையும் கருணையும் அவரோடு கொண்டு சென்றார். 1982 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று உடல் உயிரை துறப்பதற்கு முன், ஒரு வார காலம் உபவாசமிருந்து அவரது உயிர் உடலை துறந்தது. மற்றும் ஒரு மகாத்மா நம் புலன்களுக்கு அப்பால் புறப்பட்டார்.

மேலதிகம் வாசிக்க:

http://www.mkgandhi.org/vinoba/vinoba.htm
http://www.markshep.com/peace/GT_Vinoba.html

-சுகி
 
 
காண்க:
 

29.6.12

எல்லைக்காவலில் தனியொருவன்

 

கான் அப்துல் கஃபார் கான்

(1890 -  1988, ஜனவரி 20)

இந்தியக் குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் (1987)  யார் தெரியுமா?

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம்:

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்:

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்:

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்:

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர்  (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

ஏப்ரல் 23, 1930 ல்  காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப் பிரிவினை:

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாக  கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்ல வேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :
''எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”   என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948 முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்தபட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய் தேர்ந்தெடுத்தது. ''இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988 , ஜனவரி 20ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார்.

அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக் கூடது என சொன்னதற்காக அவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக் கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

-ஜெயக்குமார் 

நன்றி:
தமிழ் ஹிந்து


காண்க: 

Khan Abdul Ghaffar Khan 

The Grandest Pakhtoon Hero

எல்லை காந்தி

 .

25.6.12

நெகிழச் செய்யும் தாயின் கடிதம்

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி
(பலிதானம்: ஜூன் 23)

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று நிலைநாட்ட காஷ்மீர் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம  பிரசாத் முகர்ஜி. முரய்டார் காவலில் வைக்கப்பட்ட அவர், அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உயிர்த் தியாகத்தால் தான் காஷ்மீர் இன்றும் இந்தியாவின் பகுதியாக நீடிக்கிறது.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் தாயார் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும்.   பிரதம மந்திரி நேரு அவர்களுக்கு, டாக்டர் எஸ்.பி. முகர்ஜியின் தாய் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள்  எழுதிய கடிதத்தின் விவரம் இதோ:

------------------------------------------------------

77, ஆஷுதோஷ் முகர்ஜி சாலை,
கல்கத்தா,
1953, ஜூலை, 4.

அன்பான திரு. நேருவுக்கு,

30, ஜுன் தேதியிடப்பட்ட உங்கள் கடிதம், எனக்கு திரு. பிதான் சந்திர ராய் மூலமாக ஜூலை 2ஆம் தேதி கிடைத்தது. உங்கள் அனுதாபச் செய்திக்கும் அனுதாபத்திற்கும் நன்றி.

என் அன்பு மகன் இறந்ததற்கு இந்த தேசமே துக்கம் அனுஷ்டிக்கிறது. அவர் ஒரு தியாகியாக இறந்துள்ளார். அவரது தாயான எனக்குள்ள துயரம் மிகவும் ஆழமானது. வெளிப்படுத்தப்பட முடியாத அளவு புனிதமானது. எனக்கு ஆறுதல் தேடுவதற்காக இதை நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால், உங்களிடம் நான் வலியுறுத்திக் கேட்பது நீதியைத்தான்.

என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இறந்திருக்கிறார்  - அதுவும் நீதி மன்றத்தில் எந்த வழக்கும் தொடரப்படாமல் சிறை வைக்கப்பட்டபோது – உங்கள் கடிதத்தில் நீங்கள் காஷ்மீர் அரசு தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது என்று கூற முற்பட்டுள்ளீர்கள். உங்களின் இந்தக் கூற்று, உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் உறுதி அளிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம். ஆனால், யார் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமோ அவர்களிடமிருந்து வந்த தகவல்களுக்கு எப்படி மதிப்பளிக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி. என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது காஷ்மீர் சென்றிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் மீது நீங்கள் கொண்டிருந்த நேசத்தைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அப்படியானால், அவரைச் சிறையில் சென்று சந்தித்து, அவரது ஆரோக்கியம் மற்றும் சிறையில் அவருடைய சவுகரிய ஏற்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விடாமல் உங்களைத் தடுத்தது எது?

அவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. அவர் இங்கே சிறை வைக்கப்பட்ட பிறகு அவரது தாயான எனக்கு காஷ்மீர் அரசிடமிருந்து வந்த முதல் தகவலே அவர் மரணச் செய்திதான். அதுவும் இரண்டு மணி நேரம் கழித்தே வந்தது என்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்று தோன்றவில்லையா? அதுவும் மர்மமான, கொடுமையான முறையில் அந்தத் தகவல் எனக்கு வழங்கப்பட்டது! தான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக என் மகன் அனுப்பிய தந்தி அவரது மரணச் செய்திக்குப் பிறகுதான் இங்கே வந்து சேர்ந்தது. என் மகன் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர் சரியாக நடத்தப்படவில்லை என்றும் அவர் பலமுறை தொடர்ந்து பல காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றும் எனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் அளிக்கப்படவில்லை என்று நான் காஷ்மீர் அரசிடம் அல்லது உங்களிடம் கேட்கிறேன்.

அவர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகுகூட, அவர்கள் அந்தத் தகவலை உடனடியாக எங்களுக்கோ அல்லது டாக்டர் பிதான் சந்திர ராய்க்கோ தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீர் அரசு ஷ்யாம் பிரசாதின் உடல் நிலை குறித்த முந்தைய மருத்துவ வரலாறு பற்றியோ அவருக்குத் தேவைப்படும் சிகிச்சை ஏற்பாடுகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியோ சிறிதுகூட அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதை ஒரு எச்சரிக்கையாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இந்தக் கொடுமை. ஜூன் 22ஆம் தேதியன்று அவர், “மூழ்குவதைப் போன்ற உணர்வு” ஏற்படுவதாக கூறியதை என்னால் நிரூபிக்க முடியும். இதற்கு அரசு என்ன செய்தது? மருத்துவ உதவியும் அளிப்பதில் அளவுகடந்த தாமதம், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சட்டத்துக்குப் புறம்பான மோசமான விதம், அவருடன் சிறை வைக்கப்பட்ட இரண்டு சகாக்களைக்கூட அவருடைய அருகில் இருக்க அனுமதிக்காத கொடுமை, இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மோசமான, இரக்கமற்ற நடத்தைக்கான உதாரணங்கள்.

ஷ்யாம் பிரசாத்தின் கடிதங்களிலிருந்து தான் நன்றாக இருக்கிறேன் என்று அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகளைக் கொண்டு தகவல் அளித்துவிட்டதால், அரசாங்கமும் அதன் மருத்துவர்களும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரிகளின் மதிப்புதான் என்ன? தனக்கு நெருக்கமான, நேசத்துக்குரியவர்களை விட்டு வெகு தொலைவில் சிறையில் இருக்கும் ஒருவர் – அதுவும் என் மகன் – தன் துயரங்களைக் கடிதம் மூலம் வெளிப்படுத்துவாரா, அல்லது தன் சொந்த ஆரோக்கியப் பிரச்சினையைக் கண்டறிவாரா? அரசாங்கத்தின் பொறுப்பு மகத்தானது மற்றும் தீவிரமானது.

அவர்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தங்கள் கடமைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சவுகரியங்களையும் வசதிகளையும் பற்றி நீங்கள் கூறினீர்கள். அது விசாரித்து அறியப்பட வேண்டியவை. குடும்பத்தினரிடம் எளிதாகக் கடிதத் தொடர்பு கொள்வதைக்கூட அனுமதிக்கும் நாகரிகம் இல்லாததுதான் காஷ்மீர் அரசு. கடிதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, மற்றும் சில மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரது மகள் மற்றும் என்னைப் பற்றிய செய்திகளுக்கு அவர் ஏங்கித் தவித்தது அவரது கடிதங்களில் வெளிப்பட்டது. ஜுன் 24ஆம் தேதி, ஒரு பாக்கெட்டில் காஷ்மீர் அரசு அனுப்பிவைத்த 15ஆம் தேதியிடப்பட்ட அவரது கடிதங்கள் எங்களுக்கு 27ஆம் தேதி ஜூன் இறுதிவாக்கில், அதாவது அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்ட பிறகு கிடைத்தன என்பதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? அந்த பாக்கெட்டில் இங்கே நானும் மற்றவர்களும் ஷ்யாம் பிராசத்துக்கு எழுதி அனுப்பிய கடிதங்களும் இருந்தன. இவை ஜுன் 11 மற்றும் 16ஆம் தேதிகளிலேயே ஸ்ரீநகருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன, ஆனால் ஷ்யாம் பிரசாத்துக்கு அளிக்கப்படவில்லை. இது மனரீதியான சித்திரவதைக்கு ஒப்பானது. அவர் மீண்டும் மீண்டும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தேவையான இடத்தைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இட வசதி இல்லாமல் பெரும் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து இது அவருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதை உடல் ரீதியான சித்திரவதை இல்லையா?

'“அவர் எந்தச் சிறையிலும் அடைத்து வைக்கப்படவில்லை, பிரபல தால் ஏரி அருகில் ஒரு தனியார் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளார்” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து நான் ஆச்சரியமும் அவமானமும் அடைகிறேன். மிகச் சிறிய வளாகம் உள்ள மிகச் சிறிய ஒரு மாளிகையில், மிகத் தீவிரமாக இரவும் பகலும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் கண்காணிக்கப்பட்டுவந்தார். இதுதான் அவர் இருந்த நிலை. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சந்தோஷமாகவா இருப்பார்? இப்படிப்பட்ட தவறான பிரசாரத்தைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறேன். அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் உதவி அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. எனக்குக் கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானது. இது மிகவும் மோசமான, அப்பட்டமான கவனக் குறைவு என்பதுதான் மிகவும் பிரபலமான மருத்துவர்கள் இந்தத் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்த கருத்து. இந்த விஷயம் குறித்து, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை.

நான் இங்கே என் பிரியமான மகனின் மரணம் குறித்துப் புலம்பவில்லை. சுதந்திர இந்தியவின் ஓர் துணிவுமிக்க மகன், வழக்கு, விசாரணை எதுவும் இன்றி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மிகவும் சோகமான, மர்மமான முறையில் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். மகத்தான பேரிழப்பில் உள்ள ஒரு தாய், சுதந்திரமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு முற்றிலும் பாரபட்சமற்ற, பகிரங்கமான விசாரணை தாமதம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கிறேன். இறந்து விட்ட ஒருவரின் உயிரை எதனாலும் திருப்பிக்கொண்டு வர இயலாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நமது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியில் அதுவும் உங்கள் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட இந்த மாபெரும் சோக நிகழ்ச்சிக்கான உண்மையான காரணங்களை அறிந்துகொண்டு, அதன் நியாய, அநியாயங்களைத் தாங்களாகவே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஒரு தவறை எங்காவது, யாராவது செய்துவிட்டால்  - அவர் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் சரி - சட்டம் அதன் கடமையைச் செய்ய, அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். எனக்கு ஏற்பட்ட சோகம் இனி எந்தத் தாய்க்கும் ஏற்பட்டு கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படக் கூடாது.

உங்கள் மூலமாக எனக்கு எதாவது சேவை தேவைப்பட்டால் தயங்காமல் அதை வெளிப்படுத்தலாம் என்று நல்ல உள்ளத்தோடு தெரிவித்துள்ளீர்கள். இதோ என் சார்பிலும் இந்தியாவில் உள்ள அன்னையர்கள் சார்பாகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உண்மை வெளிச்சத்திற்கு வர அனுமதிக்கும் துணிவை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன், ஒரு முக்கியமான உண்மையைக் கூற விரும்புகிறேன். ஷ்யாமா பிரசாத்தின் டைரியையும் அவர் கையால் எழுதிய விஷயங்களையும் அவருடைய மற்ற உடமைகளுடன் சேர்த்து காஷ்மீர் அரசாங்கம் எனக்கு அனுப்பிவைக்கவில்லை. பக்க்ஷி குலாம் முகம்மது மற்றும் என் மூத்த மகன் ராம்பிரசாத் ஆகியோருக்கு இடையேயான கடிதங்களின் நகல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் அரசாங்கத்திடமிருந்து இந்த டைரி மற்றும் கையெழுத்துப் பிரதிகளை மீட்டுத் தந்தால் நான் ஆழ்ந்த நன்றி பாராட்டுவேன். இவை அவர்களிடம்தான் இருக்கும்.

என் நல்லாசிகளுடன்.


துயரத்துடன்
உங்கள் உண்மையான,

ஜோக்மயா தேவி
 
------------------------------------------------------

காண்க:

SALUTATIONS TO A GREAT MARTYR! (by L.K.Advani)

Syama Prasad Mookerjee

http://shyamaprasad.org/  






 






20.6.12

காக்கோரி ரயில் கொள்ளை!

 சரித்திரம்
 
இந்திய விடுதலைப் போர் காந்தியின் வழிகாட்டுதலில் பெரும்பாலும் சாத்வீகப் போராகத்தான் இருந்தது. எனினும் வெள்ளை அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களாலும் சுரண்டல் கொள்கைகளாலும் அதிகார ஆணவத்தாலும் வெறுப்புற்ற பொது மக்கள் ஆங்காங்கே ரகசியமாகப் புரட்சி இயக்கங்களையும் நடத்தினர். அந்த இயக்கங்கள் கொலை, கொள்ளை, பழிவாங்குதல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டன. அவற்றுள் ஒன்று ரயில் வண்டிகளில் போகும் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தல் ஆகும்.

1853-இல் முதல் ரயில் வண்டி பம்பாயிலிருந்து தாணாவுக்கும் அடுத்தது 1854-இல் ஹெளரா-ஹூக்ளிக்கு இடையிலும் விடப்பட்டது. 1900-க்குள் இந்தியாவின் பல பாகங்களும் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டன. அப்படி ஒரு வண்டி லக்னோவையும் ஷாஜஹான்பூரையும் இணைத்தது.

1897-இல் ஷாஜஹான்பூரில் பிறந்த பிஸ்மில் ராம் பிரசாத் இளமையிலேயே பள்ளிப் படிப்பை விட சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்ற விரும்பினான். அதற்குப் புரட்சி வழியைத் தேர்ந்தெடுத்தான். 1925-இல் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பைத் துவக்கினான். ஒருவனது கடுமையான உழைப்பினால் மற்றொருவன் பணக்காரன் ஆவதோ, ஒருவன் மற்றவனுக்கு எஜமானன் ஆவதோ தவறு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே அந்த அமைப்பின் நோக்கம். ஆனால் புதிய அமைப்பை வளர்ப்பதற்கு வேண்டிய பணத்திற்கு எங்கே போவது? தன் நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அவர்களும் அவனைப் போல் 20-25 வயது இளைஞர்கள், எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள்.

ராம் பிரசாத் பிஸ்மில்
 ஒருநாள் ராம்பிரசாத் ஷாஜஹான்பூரிலிருந்து ரயிலில் லக்னெü போய்க் கொண்டிருந்தான். வண்டி பல ஸ்டேஷன்களில் நின்றது. நின்ற இடங்களில் எல்லாம் பணப் பைகள் ஏற்றப்பட்டதைக் கண்டான். 'இந்தப் பணத்தையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் என்ன?' என்ற எண்ணம் திடீரென அவனது உள்ளத்தில் பளிச்சிட்டது.

லக்னோவிலிருந்து ஊருக்குத் திரும்பிய பின் சில நெருக்கமான நண்பர்களை ஷாஜஹான்பூருக்கு வருமாறு சொல்லி அனுப்பினான். அவர்களும் வந்தார்கள்.

அஷ்ஃபகுல்லா கான்
 அஷ்ஃபகுல்லா கான் செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். ராம் பிரசாதைவிட மூன்று வயது சிறியவன். இருவருக்கும் சொந்த ஊர் ஷாஜஹான்பூர். லாஹிரி ராஜேந்திரநாத் காசியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தான். தட்சிணேஸ்வரில் வெடிகுண்டு தயாரிப்பதைக் கற்றான். தாய்நாட்டு பக்தி மிகுந்தவன். மற்றொரு நண்பன் ரோஷன் சிங்கும் ஷாஜஹான் பூரைச் சேர்ந்தவனே-

பிஸ்மில் ராம் பிரசாத் தன் திட்டத்தை விவரித்தான்:"ஷாஜஹான்பூர் - லக்னெü மெயில் வண்டியில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கார்டு வண்டியில் பணம் ஏற்றப்படுகிறது. கார்டைத் தவிர விசேஷமாகக் காவல் எதுவுமில்லை. ரயிலை நிறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வது மிக எளிதாகச் செய்யக்கூடியது. அரசாங்கப் பணம் கொடுங்கோலர்களான ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து பறிக்கும் பணம்தான். அதை எடுத்து நமது அமைப்பை வளர்ப்போம். மக்களுக்கு உதவுவோம். மற்றொரு முக்கியமான விஷயம். நாம் ரயிலில் பயணம் செய்யும் நமது மக்களுக்கு எந்தவிதமான தொல்லையும் தரக்கூடாது.''

சந்திரசேகர் ஆஸாத்
 விவாதத்திற்குப் பின், ஆள் பலம் தேவை என்பதால் மேலும் நெருங்கிய சிலரைச் சேர்த்துக் கொள்வதென்றும், அந்த வண்டியைப் பல நாட்கள் ஆழ்ந்து கவனித்து அதன்பிறகு தான் திட்டத்தை அமல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பல நாட்கள் அந்த மெயில் வண்டியை கூர்ந்து கவனித்து, அது வரும் நேரம், ஸ்டேஷன்களில் நிற்கும் நேரம், கார்டு, வண்டி, அங்கே பணம் வைக்கப்படும் இடம், வைக்கப்படும் முறை, வண்டியில் உடன்வரும் காவல் ஏற்பாடுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னர், காக்கோரி ரயில் நிலையத்துக்கருகில் ஜனசஞ்சாரமற்ற இடத்தில் ரயிலை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடித் தப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.

ராஜேந்திரநாத் லாஹிரி
1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் 8 டவுன் ரயில் வண்டி ஷாஜகான்பூரிலிருந்து லக்னெüயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வண்டி காக்கோரியை நெருங்கிய நேரத்தில் புரட்சிக்காரர்களில் ஒருவன் அபாயச் சங்கிலியை இழுக்க, ரயில் நின்றது. அதன் காரணத்தை அறியும் பொருட்டு விரைந்து வந்த ரயில்வே கார்டை செயலற்றவராகச் செய்துவிட்டு, புரட்சிக்காரர்கள் கார்டு வண்டியிலிருந்த பணப் பெட்டியின் பூட்டை உடைத்து, அதிலிருந்து அரசாங்கப் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு லக்னோவுக்குத் தப்பியோடினர்.

உண்மையில் வண்டியை நிறுத்திப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பத்தே பத்து பேர்தான். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட MAUSER C96 SEMI AUTOMATIC துப்பாக்கிகளை புரட்சிக்காரர்கள் பயன்படுத்தினர்.

ரோஷன் சிங்

உடனடியாக அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ஷாஜஹான்பூர், ஆக்ரா, அலகாபாத், காசி, கொல்கத்தா, எட்டாவா, ஹர்டோய், கான்பூர், லாகூர், லக்கிம்பூர், லக்னெü, மதுரா, மீரட், ஓரை, பூனா, ராய்பரேலி, ஷாஜஹான்பூர், டெல்லி, பிரதாப்கர் ஆகிய பதினெட்டு இடங்களிலிருந்து 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதன்முதலாக 1925 செப்டம்பர் 26-ந்தேதி ஷாஜஹான்பூரில் பிஸ்மில் ராம்பிரசாத், ரோஷன் சிங் மற்றும் ஏழு பேர் போலீசாரிடம் சிக்கினார். ராஜேந்திரநாத் லாஹிரி கல்கத்தாவில் பிடிபட்டான். அஷ்ஃபகுல்லாகான் பத்து மாதங்களுக்குப் பின் வழக்கு முடிந்து தீர்மானிக்கப்பட்ட பிறகே டெல்லியில் கைது செய்யப்பட்டு, மீண்டும் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை பெற்றான். ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பனாரசிலாலும், இந்து பூஷன் மித்ராவும் அப்ரூவர் ஆனார்கள். ஐந்து பேர் தலைமறைவானார்கள். அவர்களில் இருவர் பின்னர் பிரபலமானார்கள். சந்திரசேகர் ஆசாதும், கேசவ் சக்கரவர்த்தி என்ற பெயரில் மறைந்து வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவாரும்.

சந்திரசேகர் ஆஸாத் 1928-ல் ஹிந்துஸ்தான் புரட்சி இயக்கம் துவங்கினார். 1931 பிப்ரவரி 27-ம் நாள் போலீஸ் தாக்குதலில் மாண்டார்.

சரியான சாட்சியங்கள் இல்லாததால், வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் 25 பேரில் (ராம்பிரசாத் பிஸ்மல்லும் பிறரும்) செக்ஷன் 121-ன் கீழ் (பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தல்), செக்ஷன் 120 (அரசியல் சதி), செக்ஷன் 396 (கொள்ளையும் கொல்லையும்), செக்ஷன் 302 (கொலை) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. வழக்கு 1926 மே 21-ந் தேதி தொடங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட இளம் தேச பக்தர்கள் சார்பில் பிரபலமான தலைவர்கள் கோவிந்த வல்லப பந்த், மோகன் லால் சக்சேனா, சி.பி.குப்தா, சுஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு வழக்கை நடத்தியது. மோதிலால் நேரு, மாளவியா, மகமது அலி ஜின்னா, லாலா லஜபத் ராய், ஜவஹர்லால் நேரு, கணேஷ் சங்கர் வித்யார்த்தி, சிவ பிரசாத் குப்தா, ஸ்ரீபிரகாசா, ஆசார்ய நரேந்திர தேவ் ஆகியோர் ஆதரவளித்தனர். சிறப்பு செஷன்ஸ் நீதிபதி ஒ.ஹாமில்டன் வழக்கை விசாரித்தார், பண்டிட் ஜகத் நாராயண் முல்லா சர்க்கார் தரப்பு பிராசிகியூட்டர்.

இன்றுபோல் அல்லாமல் வழக்கு ஒரே ஆண்டுக்குள் முடிந்துவிட்டது. ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திர நாத் லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறருக்கு மூன்றாண்டுகளிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

நாடெங்கும் இத்தண்டனைகளை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எழுந்தன. 1927 செப்டம்பர் மாதத்தில் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் 78 பேர்கள் கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பத்தை பண்டிட் மதன் மோகன் மாளவியா அரசுக்கு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் 16-ந் தேதி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, இங்கிலாந்து மன்னருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. 1927 டிசம்பர் 19-ம் தேதிக்குள் தூக்குத் தண்டனைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கடுமையான உத்தரவோடு கருணை மனு பிரிவு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் ரயில் கொள்ளையினால் எழுந்த இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல் 1927 டிசம்பரில் நிகழ்ந்த தூக்குத் தண்டனைகளால் (1927, டிசம்பர் 27) அடங்கியது. தேசபக்த புரட்சிக்கார வாலிபர்களின் ரத்தத்தால் மேலும் நனைந்து சிவப்பாக்கியது பாரத மண், அவர்களது நினைவில் காக்கோரியில் ஒரு நினைவு மண்டபம் எழுந்துள்ளது.

ராம் பிரசாத் ஒரு கவியும் கூட, அவன் பாடிய வரிகள் பிரசித்தமாகிவிட்டன. அதுவே இப்பாடல் வரிகள்:

''பிஸ்மில், ரோஷன், லாஹிரி, அஸ்பகுல்லா கொடுங்கோன்மையால் உயிரிழக்கின்றனர். ஆனால் அவர்களது ரத்தத்திலிருந்து அவர்களைப் போன்று நூற்றுக் கணக்கானவர் தோன்றினார்கள்''.

- மு.ஸ்ரீனிவாஸன்

நன்றி: தினமணி கதிர் (17.06.2012)
.

18.6.12

மகத்தான மாமனிதர்

பி. கக்கன்
(பிறந்த தினம்: ஜூன் 18)

மதுரை
மாவட்டம், தும்பைப்பட்டி எனும் சிற்றூரில் பூசாரி கக்கன் - பெரும்பி அம்மாள் தம்பதிக்கு 1909 ஜூன் 18ம் நாள் கக்கன் பிறந்தார்.

கோயில் பூசாரியாகவும், அரசு துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றிய தந்தையார், தன் மகனை லட்சியவாதியாக வளர்த்தார். தந்தையின் விருப்பப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேறி, ஆசிரியர் பயிற்சியை முடித்து, சேரிப்பகுதிகளில் இரவுப் பாடசாலைகளை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாத அய்யரும் கக்கன்ஜியும் சமுதாயப் பணியிலும், தேசப்பணியிலும் இணைந்தே செயல்பட்டனர். 1939 ஆகஸ்ட் 8இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஹரிஜன சமுதாயத்தினர் நுழைய வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன்ஜியும் போராடினார். பவண மீனாட்சி கோயிலிலும், கேரள ஆலயங்களிலும் கக்கன்ஜியினால் ஹரிஜன மக்கள் ஆண்டவனை தரிசிக்க முடிந்தது.

மக்களில் ஒருவராய்...

சென்னை அரசு பொது மருத்துவமனை. ஒரு முதியவரான நோயாளி மருத்துவமனையில் சேர்வதற்காகச் சென்றார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்ததால், மருத்துவமனை ஊழியர் தரையில் பாய் விரித்து படுக்கச் சொன்னார். ஒருநாள், ‘முதலமைச்சர் வருகிறார் எழுந்து உட்காருங்கள்’ என்று ஊழியர்கள் சொன்னபோதும், அந்த முதிய நோயாளியின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது.

முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன் மருத்துவமனையை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அந்த முதிய நோயாளியை கடந்து சென்றவர், சட்டென்று திரும்பி அருகில் அமர்ந்து, அவரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார். அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முதியவரை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். முதியவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்தச் செய்தார். அந்த முதியவர்தான் கக்கன். இந்த செய்தி கேட்ட தமிழகமே நெகிழ்ந்தது.

தியாகத் தழும்பு

கர்மவீரர் காமராஜரின் நேரடிச் சீடரான கக்கன்ஜி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் போராடியதால் சிறை சென்றார். சிறையில் கக்கன்ஜியை கம்பத்தில் கட்டி,  குருதி கொட்ட தடியாலடித்த போதும், ''காந்தியார் வாழ்க", ''காமராஜர் வாழ்க"
என்றே முழக்கமிட்டார். கக்கன்ஜி மண்ணோடு மறையும் வரை அந்த வீரத்தழும்புகள் அவரது தியாகத்தை கூறிக்கொண்டிருந்தன.

எளிமையின் சிகரம்

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி இழந்தது. கக்கன்ஜி அமைச்சருக்காக அளிக்கப்பட்டிருந்த அறையில் கோப்புகளையும், அவருடைய பதவிக்காக கொடுக்கப்பட்டிருந்த வாகனமான காரையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வெளியேறினார்.

தலைமைச் செயலகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து, மாநகரப் பேருந்தில் சாதாரண பொதுமக்களில் ஒருவராய் பயணித்தார். எளிமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகி கக்கன்ஜி 1981 டிசம்பர் 28ம் நாள் மறைந்தார்.

நன்றி: விஜயபாரதம்

காண்க: தியாகத் திருவிளக்கு 



17.6.12

தன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்

வீரன் வாஞ்சிநாதன்
(பலிதானம்: ஜூன் 17)

'இந்திய
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்' ' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.

கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.
வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடி பிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

2.  இவர் தான் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 ல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிகையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர்.


இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது 'வந்தே மாதரம்' பத்திரிகையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்:  "திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்''.

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்:

வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, "நல்ல செய்தியைச் சொன்னாய். நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது; கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், "இங்கிலாந்து சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது, "இப்பொழுது மட்டுமல்ல, இனி எப பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால், ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. "சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவவோர்  ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



.
 


4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .




29.2.12

மாமனிதர் மொரார்ஜி


 மொரார்ஜி தேசாய் 
(பிறப்பு: பிப். 29)  
 
பிப்ரவரி 29. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள். அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.

இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வையும், அதற்கு இணையான பாகிஸ்தானின் 'நிஷான்--பாகிஸ்தான்' என்ற விருதையும் பெற்ற ஒரே பாகிஸ்தானியர் கான் அப்துல் கபார்கான் என்றால், அவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்.

115 ஆண்டுகளுக்கு முன்பு, 1896-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை ரங்கோட்ஜி தேசாய் பவநகரில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தாய் வஜியா பென் மிகச்சிறந்த குடும்பத்தலைவி. தன்னுடைய தந்தை இறந்தபோது தேசாய் சொன்னார், "அவரிடமிருந்து நான் எந்தச் சொத்தையும் பெறவில்லை. கடமை உணர்வையும், சமய நம்பிக்கையையும், எல்லாச் சூழ்நிலைகளையும் சமமாகப் பாவிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டவை உண்மையில் விலைமதிக்க முடியாதவை ஆகும்''. 

1911-ம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோதே, அவருடைய தந்தை மரணமடைந்த மூன்றாவது நாளில், சுராஜ்பென் என்ற பெண்ணோடு அவருக்குத் திருமணம் நடைபெற்றது

பல்சாரில் இருந்த பாய் அவாபாய் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், மும்பை வில்சன் கல்லூரியில் பி.எஸ்சி. பயின்று, 1916-ம் ஆண்டு பட்டம் பெற்றார். 1918-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர், 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக உயர்ந்து, 1937-ம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்

 இதற்கிடையே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1932 முதல் 1934 வரை 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். 1935-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்குச் சென்று ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்த பிறகு, திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் முன்பு தன்னுள் முழுமையான அமைதியை உணர்ந்தார்

1935-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் அடிப்படையில், 1937-ம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்ததால், மும்பை மாகாணத்தில் பி.ஜி. கெர் தலைமையில் முதல் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது. அதில் மொரார்ஜி தேசாய் வருவாய், விவசாயம், வனம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அக்காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. மாகாண அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஆங்கிலேய அரசாங்கம் இந்தியத் துருப்புகளை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தத் தொடங்கியது. அம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1939-ம் ஆண்டு மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியபோது, மொரார்ஜி தேசாயும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அச்சூழ்நிலையில் குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக மீண்டும் பொறுப்பேற்ற அவர் 1946-ம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார். குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் அவர் விளங்கினார்

அண்ணல் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஆர்வத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பங்கேற்ற அவர், பலமுறை சிறை சென்றார். "செய் அல்லது செத்துமடி' என்ற மகாத்மாவின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, 1942-ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் 1945-ம் ஆண்டுதான் விடுதலை ஆனார்.

1946-ம் ஆண்டு நடைபெற்ற மாகாண தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் பி.ஜி. கெர் தலைமையிலான அரசாங்கம் அமைந்தபோது, தேசாய் அதில் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1952-ம் ஆண்டு புல்சார் தொகுதியில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாண முதலமைச்சர் ஆனார்.

1956 வரை அப்பதவியில் இருந்த அவர் பின்னர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1956, நவம்பர் 14 முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1958 மார்ச் 22 முதல் இந்தியாவின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதி அமைச்சராகப் பத்து நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த பெருமைக்குரியவர் அவர்.

மூத்த தலைவர்கள் எல்லாம் ஆட்சிப்பணியைத் துறந்து கட்சிப்பணிக்குச் செல்ல வேண்டும் என்ற காமராஜரின் திட்டத்தை ஏற்று 1963-ம் ஆண்டு அவர் பதவி விலகினார். 1964-ம் ஆண்டு பண்டித நேருவின் மரணத்தால் இந்திய அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டது. இனி இந்தியாவை வழிநடத்தப் போகிறவர் யார்? அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்தன.

அச்சூழ்நிலையில் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். ஆனால், இந்திய தேசியக் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு முன்னிறுத்த விரும்பினார். தலைவர் காமராஜரின் அறிவுரையை ஏற்று மொரார்ஜி தேசாய் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, பிரதமர் பதவியை லால்பகதூர் சாஸ்திரிக்கு விட்டுக் கொடுத்தார். சாஸ்திரியின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தக் குழுவுக்குத் தலைவராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார்.

1966-ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மரணமடைந்தபோது, பண்டித நேருவின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டது. அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற போட்டியில் மொரார்ஜி தேசாய் மீண்டும் முன் நின்றார். இம்முறை அவர் உறுதியாக இருந்தார். போட்டியிலிருந்து விலகத் தயாராக இல்லை

ஆயினும், ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சித் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரின் ஆதரவு பெற்ற இந்திரா காந்தி 355 வாக்குகள் பெற, முதுபெரும் காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி 169 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றுப்போனார். தோல்வியால் துவண்டுவிடவில்லை அவர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று, 1967-ம் ஆண்டு முதல் இந்தியாவின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால், 1969-ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நீலம் சஞ்சீவரெட்டியைத் தோற்கடிக்க பிரதமர் இந்திரா காந்தி முனைந்ததோடு, தேசாயிடமிருந்து நிதித்துறையையும் பறித்துக் கொண்டதால், மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திரா காந்தியின் நடவடிக்கைகளால் 1969-ம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

1975-ம் ஆண்டு இந்திரா காந்தி குஜராத் மாநில சட்டசபையைக் கலைத்ததால், மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதன் விளைவாக, அவ்வாண்டு ஜூன் மாதம் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனதா முன்னணி அறுதிப் பெரும்பான்மைபெற்று பாபுபாய் படேல் முதல்வரானார்.

1975 ஜூன் 12 அன்று, அலகாபாத் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த பிறகு, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி பதவி விலகவில்லை, இந்தத் தேசத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டு, அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் பறிபோனது

பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மொரார்ஜி தேசாய், 1977-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்

சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினர். பின்னர் ஏற்பட்ட ஜனதா புரட்சியின் விளைவாக, மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 542 இடங்களில் 330 இடங்களைக் கைப்பற்றி ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது

1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட ஊறுகளைக் களைந்தார்.

மாநில சட்டசபைகளும், மத்திய நாடாளுமன்றமும் கொண்டுவரும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என ஆய்வு செய்யும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன.

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்ற அண்ணல் காந்தியின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலவரியைக் குறைத்தல் மற்றும் பெருமளவில் மானியம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் விவசாய முன்னேற்றம் வேகப்படுத்தப்பட்டது.

ஏழை விவசாயிகளின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அவர், வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்காக, வேலைக்கு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கிராமங்களில் சாலைகளை அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி, 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற தேசியக் கவி பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கிக் காட்டியவரும் அவரே. ஏனென்றால், ஒவ்வோர் உணவு விடுதிகளும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டது. அந்த 'ஜனதா சாப்பாடு' ஏழைகளின் பசியைப் போக்கி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது

இரண்டு ஆண்டுகள், மிகச்சரியாகச் சொல்வதெனில் 857 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் மக்கள் எந்த வகையிலும் இன்னல் அனுபவிக்காவண்ணம் மிகச்சிறப்பான, நிர்வாகத் திறமை மிகுந்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.

சர்வதேச அளவிலே பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தபோதிலும், தனது திறமையான நிர்வாகத்தால் விலைவாசியைப் பெரிதும் கட்டுக்குள் வைத்திருந்தார். ரேஷன் பொருள்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்தார்.

அதன் மூலம் உற்பத்திப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதையும், அப்பாவி மக்கள் ஏமாறுவதையும் தடுத்தார். உற்பத்திப் பொருள்களின் மீது அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) குறிக்கப்பட வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி அதைக் கட்டாயமாக்கினார்.

இன்றைக்கு ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், மொரார்ஜி தேசாய் இந்தியா முழுமைக்கும் ஒரே வேளாண்மைப் பிராந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழி ஏற்படுத்தினார்

உள்நாட்டில் மட்டுமன்றி, அயலுறவுக் கொள்கையிலும் அவர் தூய்மையைக் கடைப்பிடித்தார். அவர் தூய அணி சேராக் கொள்கையை அறிவித்து அதைச் செயல்படுத்தினார். அமெரிக்காவுடனும், சோவியத் ரஷியாவுடனும் சம மட்டத்திலான உறவுகளைப் பராமரித்தார்.

பாகிஸ்தானின் 'ஜியாஉல் ஹக்' உடன் நேசக்கரம் நீட்டி அந்நாட்டுடன் நல்லுறவைப் பராமரித்தார். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை மறு சீரமைத்து பலப்படுத்திக் கொண்டார். அமைதிக்காகக்கூட அவர் அணு ஆயுதம் வெடிக்க விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணல் காந்தியின் அப்பழுக்கற்ற தொண்டரான அவர், இந்திய தேச மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்ததே அவர் செய்த மாபெரும் சாதனையாகும்.

ஜனசங்கத்தினர், ஜனதா கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் ஒரே சமயத்தில் அங்கம் வகித்ததால் எழுந்த இரட்டை உறுப்பினர் பிரச்னையாலும், சரண்சிங் ஜனதா கூட்டணியிலிருந்து விலகியதாலும், 1979-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தனது 83-வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வுபெற்றார். அதன் பின்னர், மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995-ம் ஆண்டு தனது 99-வது வயதில் இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

பொது வாழ்வில் நல்ல பல விழுமியங்களையும், அஞ்சாத நேர்மைத் துணிவையும், கொள்கை உறுதியையும்  கொண்டிருந்த அவர், அடிக்கடி சொல்லும் வார்த்தை "ஒருவர் தன் வாழ்வில் உண்மைக்கும், தனது நம்பிக்கைக்கும் விரோதமில்லாமல் செயல்பட வேண்டும்' என்பதே. அவ்வார்த்தைகளுக்கு அவரே மிகச்சிறந்த உதாரணம்.


- நா.சேதுராமன்
வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்,
பெரியார் கலைக்கல்லூரி, கடலூர்

நன்றி: தினமணி (29.02.2012)

.