நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்
ஊடக அறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடக அறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.7.12

இனம் காக்க வந்த மீட்பர்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
(ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945)

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945),   அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர்.  பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, 'பறையன்' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார்.  தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர்.  சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.

படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்' என்றார்.

1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப்  'பறையன்'  என்று பெயர் வைத்தார்.

'பறையன்', 15 ரூபாய்  மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல்  'பறையர் மகாஜன சபை'யை  இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.  1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு 'பறையன்' பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம்  30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி 'ராவ்சாகிப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

''செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்'' என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.

இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.

காண்க:

சம உரிமைக்கான முதல்குரல் 

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 .

4.6.12

பலர் அறியாத 'தியாகதீபம்'


 சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு
 (பிறப்பு: ஜூன் 4 )

 சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலை வகித்தது தமிழகம் என்பது மட்டுமல்ல, தன்னிகரற்ற பல தலைவர்களை விடுதலை வேள்விக்கு அளித்ததும் தமிழகம்தான். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு.

அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து ஒதுக்குதல், அன்னியத் துணிகளை எரித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் அவரைக் கவர்ந்தன.

வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த தேசிய எழுச்சி அவரைப் பெரிதும் ஈர்த்தது. சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணிந்தார் வரதராஜுலு நாயுடு. கல்வி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் அவரது நடவடிக்கைகளைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய இரண்டு இந்திய மருத்துவத் துறைகளிலும் படிப்பறிவும் பட்டறிவும் ஏற்பட்டு முழுநேர மருத்துவராகத் தொழில் புரிந்துவந்தார் அவர். 1908 ஆம் ஆண்டிலேயே தனது 21-வது வயதில் சுப்பிரமணிய பாரதியாரின் முன்னிலையில் புதுச்சேரியில் சுயராஜ்ய சபதம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார்.

தொண்டறத்தின் மீதுள்ள தாகமும் அரசியல் ஆர்வமும் மேலோங்க அக்காலத்தில் ரூ. 2,000 மாத வருவாய் வந்துகொண்டிருந்த மருத்துவத் தொழிலைக் கைவிட்டு 1917 இல் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். டாக்டர் அன்னி பெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தில் பங்குபெற்றார். படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கியபோது வரதராஜுலு நாயுடு அவ்வியக்கத்தில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். அரசுக்கு வரி கட்டவில்லை. கட்டவேண்டிய வரிக்கு ஈடாக அவருடைய காரை ஆங்கில அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், காரை ஓட்டிச்செல்ல எவரும் முன்வரவில்லை. கடைசியில், மாவட்ட ஆட்சியரே அந்தக் காரை ஓட்டிச்செல்ல வேண்டியதாயிற்று.

பலமுறை சிறைத்தண்டனையும் பற்பல அடக்குமுறை வழக்குகளையும் சந்தித்துப் பொதுவாழ்வில் புடம்போடப்பட்டவர் வரதராஜுலு நாயுடு. தொழிலாளர்கள், விவசாயிகள், இலங்கை பர்மா தமிழர்கள் என பொதுமக்கள் பிரச்னைகளுக்குப் போராடி அவர்களுக்குப் பல உரிமைகளை, சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர்.

வரதராஜுலு நாயுடுவின் அரசியல் வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அன்று. தியாகங்களின் வரலாறு அது. 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்குப் போடப்பட்டு அரசு நிந்தனை புரிந்த குற்றத்துக்காக 18 மாதம் கடுங்காவலுக்குள்ளானார்.

வரதராஜுலு நாயுடுவுக்காக ராஜாஜியே நேரில் வாதாடினார். மேல்முறையீட்டில் ராஜாஜியின் வாதத்திறமையால் அவருக்கு விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நீண்டநாள் நீடிக்கவில்லை. அவரை வெளியே உலவ விடக்கூடாது என்பதில் பிரிட்டிஷ் அரசு தீவிரமாக இருந்தது.

1919 இல் தமிழ்நாடு இதழில் எழுதிய இரண்டு அரசியல் கட்டுரைகள் ராஜ துரோகமானவை எனப் புதிய குற்றச்சாட்டை எழுப்பி அவரைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. விளைவு: ஒன்பது மாத சிறைத்தண்டனை அவருக்குக் கிடைத்தது.

வெளியில் வந்து சில மாதங்கள்தான் கடந்தன. மீண்டும், 1923 இல் பெரியகுளம் மாநாட்டில் தடை உத்தரவை மீறிப்பேசியமைக்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், தமிழக மேல்சபை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பல பொறுப்புகளை வகித்து சாதனை புரிந்தவர் வரதராஜுலு நாயுடு. காந்தி, சி.ஆர்.தாஸ் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர்.

சேலம், திருப்பூர் வருகையின்போது காந்தியடிகள் வரதராஜுலு வீட்டில்தான் தங்கினார். அதனால் சேலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வீடு இருந்த சாலைக்கே காந்தி சாலை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1925 இல் வ.வே.சு. அய்யர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனிப்பந்தி அனுசரிக்கப்படுவதை எதிர்த்து சீர்திருத்தப்போர் ஆரம்பித்தது. பெரியார் ஈ.வெ.ரா., திரு.வி.க., ஆகியோருடன் வரதராஜுலு நாயுடுவும் அதில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியிடம் பிரச்னை கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியில் இத்தகைய குலப்பிரிவினைக்கு எதிராக எஸ்.ராமநாதன் முன்மொழிந்த ஒரு தீர்மானமும் ஏற்கப்பட்டது.

வரதராஜுலு நாயுடுவின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்தவர் காமராஜ் என்பது இன்னொரு சுவையான செய்தி.

பெரியார் காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கிய நிலையில் நீதிக்கட்சியினர் தொடர்பு பலப்பட்டு பின்னாளில் அக்கட்சியைப் பகுத்தறிவாளர் கட்சியாக திராவிடர் கழகமாகப் பரிணாமம் எடுத்த பின்னணியில் வரதராஜுலு நாயுடு நீதிக்கட்சியை எக்காலத்திலும் ஆதரிக்கவில்லை என்பதுடன் அதன் எதிர் முகாமிலேயே நின்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சமுதாய முற்போக்குக் கொள்கையை முன்னிறுத்த வேண்டும் என்பதிலும் பெரியார் ஈ.வெ.ரா.வும் வரதராஜுலு நாயுடுவும்

ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. அரசியல் விடுதலையை வலியுறுத்த மறுத்தபோது, வரதராஜுலு நாயுடு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

காங்கிரஸ் பேரியக்கத்திலும் காந்தியடிகளின் தலைமையிலும் அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வரதராஜுலு நாயுடு பின்னாளில் காந்தியடிகள் (1930-32) நடத்திய உப்பு

சத்தியாகிரகத்திலும் சட்டமறுப்பு இயக்கத்திலும் பங்கேற்காமல் போனதுடன் அவற்றை முழுமூச்சாக எதிர்த்தது மிகப்பெரிய அரசியல் புதிராகத் தொடர்கிறது. முன்பு வரிகொடா இயக்கத்தில் முனைந்துநின்ற வரதராஜுலு நாயுடு அரசுக்கு எதிரான பின்னாள் அறவழிப் போராட்ட முடிவுகளை ஏன் கண்டிக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் ஆலயப்பிரவேச உரிமை இயக்கம் தலையெடுத்தபோது அதில் வரதராஜுலு நாயுடு மும்முரமாகப் பணியாற்றினார். 1925 இல் தமிழ்நாடு என்னும் செய்திப்பத்திரிகை (வார இதழ்) தொடங்கி இதழாளராகவும் பரிமளித்தார். தமிழ்நாடு இதழ் வெற்றிகரமாக இயங்க "அக்ரகாரத்து அதிசய மனிதர்' என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனையாளர் எழுத்தாளர் வ.ரா. என்னும் வ.ராமசாமி அய்யங்கார் வரதராஜுலு நாயுடுவுக்குத் துணையாக இருந்தார்.

அதேபோல் பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கமும் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1932 இல் ஆங்கில இதழ் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை (5 செப்டம்பர் 1932) ஆரம்பித்தார். தமிழ்நாடு இதழ் அலுவலகத்திலிருந்தே அதை அச்சடித்து விநியோகம் செய்துவந்தார். தொடங்கிய ஒரே வருடத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட அதை "ப்ரீ ப்ரெஸ் ஜர்னல்' ஆசிரியரான எஸ். சதானந்தத்திற்கு விற்றுவிட்டார். பிறகு அது சுதந்திரப் போராட்ட வீரரான ராம்நாத் கோயங்காவுக்குக் கைமாறியது. கோயங்காவின் கைக்கு வந்ததும் அரசு நிர்வாக எந்திரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சுதந்திர இதழான அதன் குணாம்சமும் வீச்சும் மேலும் தீவிரம் கண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை 1934 இல் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை "தேசிய சங்கநாதம்' என்னும் தலைப்பில் எழுதி நூல்வடிவில் கொணர்ந்தார். 1933 வரையிலான அவரது வாழ்வின் பகுதிகள் அதில் ஓரளவு விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் நிறுவனர் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரைப்போல் வரதராஜுலு நாயுடுவும் இதழுலகில் தனிச்சுடராக விளங்கினார் என வ.உ.சி.யே பாராட்டி இருக்கிறார்.

வ.உ.சி.யின் நன்மதிப்பைப் பெற்று அவரால் "தென்னாட்டுத் திலகர்' என்னும் பாராட்டும் பெறவேண்டுமானால் வரதராஜுலு நாயுடு எத்தனை பெரிய மனிதராக விளங்கியிருக்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

வ.உ.சி. எழுதிய வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை சரிதத்தின் ஆங்கில வடிவம் நீலகண்ட பிரம்மச்சாரியால் எழுதப்பட்டு வெளிவந்தது. பிறகு அதில் திருத்தம் செய்யப்பட்டு 1948 இல் புதிய பதிப்பு வெளியாயிற்று. 1955 இல் வெளியான அவரது பிறந்தநாள் மலரில் மேலும் சில விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ""இவை அனைத்துமே போதுமான தகவல்களை உள்ளடக்கிய முழு வரலாறு என்று சொல்லிவிட முடியாது. எனவே, அவரைப் பற்றி முழுமையாகவும் விரிவாகவும் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும் என பெ.சு.மணி கருத்து வெளியிட்டுள்ளார்.

வரதராஜுலு நாயுடுவின் குடும்பத்தினர், சந்ததிகள், நட்பு வட்டத்தின் இந்நாள் பிரதிநிதிகள், தேசிய இயக்க வரலாற்று மாணவர்கள் ஒன்றுபட்டு முயன்றால் வரதராஜுலு நாயுடுவின் முழுமையான சரிதையை வெளிக்கொணர முடியும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக, டாக்டர். வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் பங்களிப்பும் தியாகமும் வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டன. இத்தனைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழகத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய பெருமகனார் வரதராஜுலு நாயுடு.

சுதந்திர இந்தியா சுயநல அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்தக் குத்தகையாகி விட்டதன் விளைவாக, வரதராஜுலு நாயுடு போன்ற உண்மையான தியாகிகளின் பங்களிப்பு பேசப்படாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. வெளிச்சத்திற்கு வரவேண்டிய வரலாறுகளில் ஒன்று வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

(இன்று அன்னாரது 125-வது பிறந்ததினம்)

-கல்பனாதாசன் 
நன்றி: தினமணி (04.06.2012)

காண்க: 

பெ. வரதராஜுலு நாயுடு (விக்கி)

Perumal Varadarajulu Naidu

'தேசிய சங்​க​நா​தம்' டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு குருகுலப் போராட்ட வீரர் (காலச்சுவடு)

டாக்டர் வரதராஜுலு நாயுடு- தஞ்சை வெ.கோபாலன்

 .




11.12.11

மகாகவியின் பிரார்த்தனை


மகாகவி பாரதி
(பிறப்பு: டிச. 11)

வேண்டுவன

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

-மகாகவி பாரதி

காண்க:

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகட்டும்!






2.10.11

செயற்கரிய செய்த பெரியார்


டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)

நாஞ்சில் நாட்டில் தோன்றி பல சாதனைகளை படைத்த, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, இன்று 103வது பிறந்த நாள். அவர் வாழ்க்கையில் பல லட்சியங்களைக் கொண்டிருந்தார். மவுனமாக பணியாற்றி, அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வைத்தார். அவரது செயல்பாடுகளை இப்போதைய தலைமுறையினர் பின்பற்றினால் முன்னுக்கு வருவர்.

டி.வி.ஆரின் சேவைகள், படாடோபமோ, விளம்பர மோ இல்லாத ஒரு மவுனப் புரட்சி, உழைப்பு, ஊக்கம், திறந்த உள்ளம், அடுத்தவரை தன்னைப் போல மதிப்பது, வாய்மை, இவை டி.வி.ஆரோடு பிறந்த சொத்துக்கள். அவரது பொதுஜன சேவைக்கு இவையே மூலதனம். அப்பாவி போல உலகை அளந்தவர். அதனால் தான் அற்புத மனிதன் ஆனார். தமிழில் அவர் கவிமணியின் கைப்பாவையாக இருந்தார்.

90 ஆண்டுகளுக்கு முன்பு, நாகர்கோவிலைச் சேர்ந்த வடசேரியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்பு பாடம் நடக்கிறது. வீரமணி அய்யர் ஆசிரியர். அன்றைய பாடம் புகை வண்டி; புகைவண்டி என்று கூறுவது ரயிலைத்தான். "ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று பையன்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். "வயலைப் பார்த்திருக்கிறோம், வெயிலைப் பார்த்திருக்கிறோம், ரயிலைப் பார்த்ததில்லை; இப்போது தான் நீங்கள் சொல்லிக் கேட்கிறோம்" என்று ஒரு பிஞ்சு பையன் வெடித்தான். "இப்போது, திருநெல்வேலிக்கு சென்றால் பார்க்கலாம். இங்கிருந்து 50 மைல் பஸ்சில் செல்ல வேண்டும்" என்றார். "அங்கு வரை வந்திருக்கும் ரயில், இங்கு ஏன் வரவில்லை?" என்றான் ஒரு மாணவன். "அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் ஆசிரியர். பிறகு முறையே வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், கேள்வி கேட்ட அந்த பிஞ்சு உள்ளம் மட்டும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் நம்மைத் தீண்டாமல் நெல்லையை எல்லையாகக் கொண்டு படுத்து விட்டதே என்ற உண்மை பையனை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பையன்தான் டி.வி.ராமசுப்பையர் என்ற பெயரோடு கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். ரயில் சிந்தனையை அவன் மறக்காமல் உருப்போட்டுக் கொண்டிருந்தான்.

கல்லூரி படிப்பு முடிந்து அரசு வேலைக்குச் செல்வதில் அவருக்கு கொஞ்சமும் ஆசையோ, ஆர்வமோ இல்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், ராமாயண காலத்தில் அனுமான் சேனைகள் சேது அணை கட்டியபோது, அணில் தன்னால் முடிந்தளவு மணலில் புரண்டு அந்த மண்ணை குவித்ததாகச் சொல்வார்களே, அதே வாய்ப்பாடுதான் டி.வி.ஆர்., உள்ளத்தில் குடியேறியிருந்தது. மலையாளிகள் மத்தியில் தமிழர்கள் மல்லுக்கு நிற்கும் நிலையைப் போக்கிடப் போராட்டம் தேவை. போராட்டம் என்றால், அதற்கு ஆதாரமாக பிரசாரம் இப்போதைய நாகரிகப்படி சொன்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகைகள் தான் சத்தம் போடாத பட்டாசுகள். ஆனால், ஆயிரம் பட்டாசுகளை வெடிக்கச் செய்யும் சக்தி கொண்டது. ஆதலால், பத்திரிகை வேண்டும்.

மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதி, டி.வி.ஆரும் பிறந்திருப்பதால், அவருக்கு ஓய்வே இல்லாத உழைப்பையே ஊட்டும் நட்சத்திரமாக மாறியது. காந்தியின் அரிஜன முன்னேற்றக் குரல் நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவியது. அது, டி.வி.ஆரை சற்றுக் கடுமையாகச் சுட்டுவிட்டது போலும். அரிஜனங்களைத் தேடி அவர்கள் குடியிருக்கும் வாசல்களைத் தட்ட ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக டாக்டர் எம்.ஈ.நாயுடு, நாராயணப் பெருமாள் நாடார், சிவமுத்துக்கருப்பப் பிள்ளை, சிவதாணுப் பிள்ளை, சிவன் பிள்ளை, காந்திராமன் பிள்ளை போன்ற காந்தியவாதிகள் உயிரேற்றி வந்தார்கள்.

அரிஜனங்களை சகஜமான நிலைக்கு கொண்டு வருவதில், சமபந்தி போஜனம் போன்ற புதுமைகளைச் செய்து வந்தனர். பிறப்பின் பெயரைச் சொல்லி மக்களைப் பாடுபடுத்திய மூடக்கொள்கை, நம்மை விட்டு ஒழிய வேண்டுமானால், முதலில் அவர்களின் மத்தியில் கல்வி அறிவைப் புகட்ட வேண்டும்.  கல்வி வாசனை பெறாத அரிஜனங்களை, உயர் நிலமைக்கு கொண்டு வரமுடியாது என்ற தத்துவத்தை டி.வி.ஆர்., தமது அனுபவத்தில் கண்டார். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முக்கிய பதவி வகித்த வைத்தியநாத அய்யர், முற்போக்கு எண்ணம் படைத்த ஏ.என்.தம்பி,  மனோன்மணியம் சுந்தரனார் மகன் பி.எஸ்.நடராஜபிள்ளை இவர்களுக்கெல்லாம் மேலாக திவானாகிய சர்.சி.ராமசாமி அய்யர் மற்றும் பலர் டி.வி.ஆரின் நண்பர்களாகவும், ஒரு கொள்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மூலமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமாவது, கட்டாயக் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று காய்களை நகர்த்தினார். அவர்களும் சரி என சொல்லி நடவடிக்கை எடுத்து வந்தார்கள். அப்போது திருவிதாங்கூர் நாயர்கள், ஈழவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய பிரிவினர்களின் ஆதிக்கத்திலிருந்தது. அந்த மூன்று பிரிவினர்களும் ஒருமித்தக் கருத்துக்கு வந்தால்தான் சட்டம் கொண்டு வரமுடியும். தவளை தண்ணீருக்கு இழுக்க, எலி வரப்புக்கு இழுக்கும் நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலை. இதனால், திட்டம் அப்படியே கருகி விட்டது. ஆனால், டி.வி.ஆர். விடவில்லை.

மேலே கூறிய கருத்து வேறுபாடுகள் இல்லாத மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். எனவே, அந்த மாவட்டத்தில் கட்டாயக் கல்வி சட்டத்தை அமல்படுத்திப் பார்க்கலாம் என்றார் டி.வி.ஆர்., விடமாட்டார் போலிருக்கிறதே டி.வி.ஆர்., என்று கண்ட அவர்கள், திருவனந்தபுரம் கன்னியாகுமரி மாவட்டத்திற்காக மட்டும் கட்டாயக் கல்வி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள மடம் என்ற கிராமப் பள்ளிக்கூடத்தில், கட்டாயக் கல்வித் திட்டம் கால் ஊன்றப்பட்டது. இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊருக்கு பத்து பேர் பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், விரிவுரையாளர்களாகவும் பெருகி இருக்கிறார்கள் என்றால் டி.வி.ஆரும், அவரது ஆதரவாளர்களும் அன்று வெள்ள மடத்தில் விதைத்ததின் விளைவால் அல்லவா.இதற்கிடையிலும், நெல்லை - குமரி ரயில் திட்டத்தை, தளர விடாமல், தன்னந்தனியாக உருப்போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதைய உலக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்து வந்தார். அவர் அரசியலில் ஆகட்டும், நிர்வாகத்தில் ஆகட்டும், முடிவு எடுப்பதில் துணிச்சல் மிகுந்தவர். பாகிஸ்தான் விவகாரங்களில், அமெரிக்கா, பாகிஸ்தான் பக்கமே சாய்ந்திருந்தது. இந்திராவின் ராஜ தந்திரத்தால், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் தனி நாடாக பிரிந்தது. இது, பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பெரிய அடியாக மாறியது. அமெரிக்கா கோபமடைந்து, அவர்களது கப்பற்படையை இந்தியா பக்கம் திருப்பியது.

அதற்கு பதிலடியாக, தங்கள் கப்பல் படையை அனுப்புகிறோம் என்று ரஷ்யா, இந்தியா பக்கம் தலை வைத்தது. பெரிய போராக கூட வந்து விடுமோ என்று உலகம் எதிர்பார்த்தது. கடற்படை தாக்குதலை சமாளித்து, வெற்றிபெற என்னனென்ன தேவை என்பதை இந்திய ராணுவ அதிகாரிகளோடு, ராப்பகலாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். கடற்படை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால், கன்னியாகுமரி பகுதிகளில் போர்த் தளவாடங்களை குவிப்பதற்கான போக்குவரத்து வசதி இல்லை. போர்முனைக்கு தளவாடங்கள் செல்ல வேண்டுமானால், ரயில் வசதி முதன்மையானதும் முக்கியமானதாகும். அதனால், உடனே ரயில் பாதைக்கான கட்டுமான வேலைகளை துவக்க வேண்டும் என்று ராணுவம் கருத்து தெரிவித்தது. இத்திட்டம் எப்படியோ டி.வி.ஆரின் காதுக்கு எட்டியது. உற்சாகம் வந்தது; ஊக்கம் ஏற்பட்டது.'

வாரக் கணக்கில் டி.வி.ஆர்., டில்லியில் தங்கியிருந்து, அங்குள்ள தமிழக எம்.பி.,க்களை ஒன்று திரட்டி, தவம் இருந்தார். டிராபிக் சர்வே, இன்ஜினியரிங் சர்வே என்று திட்டம் தீப் பிடிக்க ஆரம்பித்து விட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில், நாகர்கோவிலிலிருந்து - கன்னியாகுமரிக்கு ஒரு பாதை, திருவனந்தபுரத்திற்கு ஒரு பாதை, அதுவும் அகல ரயில் பாதையாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை திட்டம் உருவெடுத்து, பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கின. இப்போதுதான் டி.வி.ஆரின் மனம் குளிரத் துவங்கியது. கனவு உலகில் ஓடிய ரயில், கண்முன் ஓடப்போகிறது என்று சந்தோஷமான சந்தோஷம்.

இதற்கிடையில், கொச்சி என்ற மலையாள சமஸ்தானத்தை திருவிதாங்கூரோடு தந்திரமாக இணைத்து விட்டார்கள். அதனால், திருவிதாங்கூர் மலையாளிகளின் பலம் இரட்டிப்பானது. திருவிதாங்கூரில் தமிழர்களின் நிலை படுபாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருந்தது. இந்த இழிநிலைக்கு ஒரு வழிகாண வேண்டும் என்று சிந்தித்தார். ஏற்கனவே நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி, சிதம்பரநாதன் போன்ற பெரும் புள்ளிகள் தமிழர் பகுதியை தமிழகத்தோடு இணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் போர் சத்தம் அப்படி அப்படியே வெளியே தெரியாமல் மங்கி வந்தது.

தமிழர்க்கு என பிரசாரம் செய்ய சொந்தமாக பத்திரிகை வேண்டும். மலையாளிகளின் பொய், புளுகுகளை தவிடு பொடியாக்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார் டி.வி.ஆர்., அதே ஆவேசம் மழைத்துளி போல் தோன்றி மறையவில்லை அச்சாணியாக பதிந்து விட்டது.பத்திரிகை துவங்குவதற்கான ஆயத்தங்களுக்கு முழுவீச்சாக இறங்கினார். 'தினமலர்' என்ற ராசியான பெயரும் தெய்வாதீனமாக அவர் மனதில் பட்டது. 1951 செப்டம்பர் 6ம் தேதி, 'தினமலர்' மார்க்கெட்டிற்கு வந்து, வாசகர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

டி.வி.ஆர்., எதையுமே திட்டமிட்டுச் செய்வார். அவரிடம் அவசர புத்தி கிடையாது.
தினமலரால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும், அந்த நஷ்டத்தை தாங்க முடியுமா என்று அவரே கணக்குப் போட்டு, அதற்கான நிதியை ஒதுக்கி வைத்துக் கொண்டார். பத்திரிகைகளுக்கு ஆணிவேராக இருப்பவர்கள் முகவர்கள். முகவர்கள் கறாராக இருந்தால்தான், வண்டி தடம்புரளாமல் ஓடும். முகவர்கள் பணபாக்கி விஷயமாக அவர்களிடமிருந்து வரும் வாய்தா கடிதங்கள் வேடிக்கையாக இருக்கும். அதையும் டி.வி.ஆர்., சிரிப்போடு ஏற்றுக்கொள்வது டி.வி.ஆரின் மனப்பக்குவத்தையும் பறைசாற்றும் மலை இடிந்து விழுந்தாலும் தலை சாயாமல் நிமிர்ந்து எதிர்கொள்ளும் வீரகுணம் அவரோடு பிறந்தது. அதுதான் கடவுள் அவருக்குக் கொடுத்த வரம் என்று கூறலாம். பிரச்னையைக் கண்டு அஞ்ச மாட்டார். புன்சிரிப்போடு ஆலோசித்து தீர்வு காண்பார்.

- சி.உமைதாணு

நன்றி: தினமலர்

காண்க:

டி.வி.ராமசுப்பையர் (விக்கி)

T.V.RAMASUBBAYAR

Dinamalar Founder

தினமலர்

15.7.11

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை

 
மறைமலை அடிகள்
 
(பிறப்பு: ஜூலை 15)
 
'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே' - என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர்.  
 
"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

 நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.

 திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு 'வேதாசலம்' என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித்தமிழில் 'மறைமலை' என்று மாற்றிக்கொண்டார்.

 நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.

 மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் "மறைமலையடிகள் நூலகம்" அமைய அது உதவியது.

 மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். நான்கு ஆண் பிள்ளைகளையும் மூன்று பெண் பிள்ளைகளையும் மக்கட் செல்வங்களாகப் பெற்றனர் அத்தம்பதியினர்.

 மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.

 தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் "சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.

 தமிழும், சைவமும் தமது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள்.  முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம், அதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம் போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார்.

 மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.

 "சமய உணர்ச்சி சிலர் மட்டும் விரும்பக்கூடிய அலங்காரப் பொருள் அன்று. மக்களை விலங்கினின்று பிரித்து தெய்வமாக்குவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் சக்தியாகும் அது", என 'சைவ சமயத்தின் தற்கால நிலை'  என்ற நூலில் சமய உணர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

 மறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போதும் கடுமையான கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே 'தனித்தமிழ்' என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா! என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.

 அடிகள் சிறந்த இதழாளராகவும் விளங்கினார். இளமைப் பருவத்திலேயே செய்திகளைச் சேகரித்து 'நாகை நீலலோசினி' என்ற நாளிதழுக்கு அளித்தார். பின்னாளில் 'ஞானசேகரம்' என்ற இதழை அவரே நடத்தினார். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, 'மிஸ்டிக் மைனா', 'தி ஓரியண்டல் விஸ்டம்' என்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.  இவை உலகில் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாயின. 1897ம் ஆண்டு சே.எம்.நல்லாசாமிப் பிள்ளை என்பவர் தொடங்கிய 'சித்தாந்த தீபிகை' என்ற தமிழ், ஆங்கில மொழிகளுக்கான இரண்டு இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 

 16 வயதிலேயே இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்து, தாம் எழுதிய நூல்களுக்கு ஆங்கிலத்திலும் முன்னுரை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மறைமலையடிகள், ஐம்பத்தி ஆறு நூல்களை எழுதியுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு 'மணிமொழி நூல் நிலையம்' என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
  • தமிழர் மதம்
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவம்
  • சிறுவருக்கான செந்தமிழ் நூல்
  • மாணிக்கவாசகர் காலமும், வரலாறும்
  • மரணத்தின் பின் மனிதர் நிலை
  • தனித்தமிழ்மாட்சி
  • பண்டைக்காலத் தமிழரும், ஆரியரும்
  • உரைமணிக்கோவை

- போன்ற 40க்கும் மேற்பட்ட சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். 

சமயநெறி, இலக்கியத்தில் ஹரிஜனங்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். ஹரிஜனங்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார் மறைமலையடிகள்.

1937ல் ராஜாஜி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார். 

தமிழ்மொழி சீர்கேடுற்று சைவ நெறி தாழ்வுற்றிருந்த காலத்தில் வீறுகொண்ட ஞாயிரெனத் தோன்றி, தமிழுக்கும், சைவத்துக்கும் மிகுந்த பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம். 

மறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகும், சைவ உலகும் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.

தங்க விளக்கே ஆனாலும் தூசி படிந்து மூலையில் கிடந்தால் அதன் அருமையை யாரால் அறிந்து கொள்ள முடியும்.  தங்கத் தமிழ் தீபத்தை பேச்சால், எழுத்தால் தூசி தட்டித் துடைத்து ஏற்றி வைத்தவர் மறைமலையடிகள் என்றால் அதில் இரண்டாவது கருத்துக்கே இடம் கிடையாது. 

இப்போதைய நமது கடமை, அந்தத் தீபத்தை என்றென்றும் அணையாமல் பாதுகாப்பதுதான். தமிழறிஞரைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்; தமிழைக் காப்பாம்; தமிழராக வாழ்வோம்.
 
 
காண்க:
 
 
 

18.4.11

ஊடக உலகின் ஒளிவிளக்கு

 
 
ராம்நாத் கோயங்கா
 
பிறப்பு: ஏப். 18
 
காலவெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள்; அந்த வெள்ளத்திலேயே எதிர் நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின்  வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் அவர்களுடைய குணாம்சங்களாகக் கட்டாயம் இருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் - தலைவரான ராம்நாத் கோயங்கா அத்தகைய மாமனிதர்.
 

நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகவும் இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த இரண்டாவது சுதந்திரப் போரில் பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் திகழ்ந்தவர் ராம்நாத் கோயங்கா.
 

பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் 1904-ல் பிறந்த கோயங்கா, படிப்பை முடித்ததும் மாதச் சம்பள வேலை கிடைக்கும் என்று எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துகொள்ள கோல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார்.
 

சென்னைக்கு வந்தவர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், நாட்டின் எல்லோர் மனதிலும் வீசிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை அவரையும் விட்டுவைக்கவில்லை. சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து சாமானியர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.
 

சென்னைக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சுக துக்கங்களில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பித்த அந்த இளைஞரின் துடிப்பால் கவரப்பட்ட சென்னை அரசு நிர்வாகிகளால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா.
 

பதவி கொடுத்துவிட்டதே அரசாங்கம் என்று அதற்குத் துதி பாடிக் கொண்டிருக்காமல், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டி அவையில் சண்டமாருதம் செய்தார். இதனால் அரசு மட்டுமல்ல, மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர். தேசிய இயக்கத்தார் அவரைச் சுவீகரித்துக் கொண்டனர்.
 

மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற கதம்பக் குழுவுக்கு அவரையே செயலராக நியமித்தனர். தத்தளிக்கும் பல நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் காவலராக அவர் உருவெடுத்தார். நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுக்குத் தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தினார். தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார்.
 

அந்த வகையில்தான் டி. பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ். சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார். 1936-ம் ஆண்டு அக். 26-ம் தேதி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
 

அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பதையும் அவர் அப்போதே தீர்மானித்துவிட்டார்.
 

அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் அவருக்கு வேண்டியவர்களாக இருந்தனர். எனவே, அனைத்துத் தரப்பாரையும் இணைக்கும் இணைப்புக் கயிறாக அவரால் செயல்பட முடிந்தது. மற்றவர்களுடனான உறவும், நட்பும் எப்படி இருந்தாலும் பத்திரிகையைப் பொறுத்தவரை அதற்கு எது நல்லது என்பதைத் தீர்மானிப்பதில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அவர் அளிக்கவில்லை.
 

'இந்தியன் எக்ஸ்பிரஸ்', "தினமணி' ஆகிய பத்திரிகைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் செயல்படவும் அவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார் என்பது பெரிய குறைதான் என்றாலும், அப்படியிருந்த ஒரு தனி மனிதர் ஏராளமான மனிதர்கள் ஒரு குழுவாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத ஆற்றலும், வேகமும் கொண்டவராக இருந்ததால் பத்திரிகைக்கு அதுவே மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.
 

பத்திரிகைக்கு நல்ல ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமல்ல, பத்திரிகை என்பதைச் செயலில் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளை எடுத்து எழுதினால் பத்திரிகைக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
 

தமிழில் 'தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்துப் பிரமித்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் பத்திரிகை தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது பத்திரிக்கை குழுமம் வெற்றிநடை இட்டது. நாட்டின் அரசியலில் கலக்கும் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில்  என்றுமே எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமம் முன்னிற்கிறது.
 

அதிகாரமும், பதவியும் உள்ளவர்கள் எத்தனைதான் அச்சுறுத்தினாலும் தான் நினைப்பது சரியென்று பட்டுவிட்டால் அதைச் செய்து முடிக்காமல் அவர் இருந்ததில்லை.  பத்திரிகை உலகின் கம்பீரத்திற்கு சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991 , அக். 5  ல் மறைந்தார்.
 
நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் கோயங்காவுக்கு  என்றும் இடம் உண்டு. பத்திரிகை நடத்துவது லாபத்துக்காக மட்டுமே என்று எந்த நாளும் நினைத்தவர் அல்லர் அவர். அதனாலேயே அவர் இன்னமும் இந்தியப் பத்திரிகை அதிபர்களுக்குத் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
 
இந்திய ஊடகத் துறை தடுமாறியும் தடம் மாறியும் நிற்கும் இந்த வேளையில், ராம்நாத் கோயங்கா அவர்களுக்கு இருளில் ஒளிவிளக்காக வழி காட்டுகிறார்.
 
கட்டுரை ஆதாரம்: தினமணி (18.04.2011)
 
காண்க: