நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.9.11

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாகட்டும்!


மகாகவி பாரதி
(நினைவு தினம்: செப். 11)

"பொதுஜன நன்மையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள், இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக் கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்...''

“ இந்தியா (7.11.1908) நாளிதழில் "நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை' என்ற தலைப்பில் மகாகவி பாரதி எழுதியுள்ள விதிமுறைகள் இவை.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் எழுதுகோல் உதவியுடன் போராடிய ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நமது துரதிர்ஷ்டம், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பத்திரிகையுலகப் பணிகள் பெறாமலே உள்ளன. அவற்றை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது மிக அதிகமாகவே இருக்கிறது.

பாரதியின் பத்திரிகையுலகப் பணி 1904 நவம்பரில் "சுதேசமித்திரன்' பத்திரிகை வாயிலாகத் துவங்கியது. ஆரம்பத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணி பாரதிக்கு கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செய்திகளை தமிழில் தரும்போதும், நமது நாட்டின் நிலையை ஒப்பிட்டு செய்திகளை வழங்கினார் பாரதி.

இதனிடையே மகளிருக்கென்று துவங்கப்பட்ட "சக்கரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகவும் பாரதி பொறுப்பேற்றார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த முன்னோடிக் கருத்துக்களை அவர் எழுதினார். தனது பத்திரிகைப் பணி காரணமாக, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டார்.

தனது விடுதலை வேட்கையின் வேகத்திற்கு "சுதேசமித்திரன்' ஈடுகொடுக்காத காரணத்தால், நிரந்தர மாத சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி, 1906ல் "இந்தியா' பத்திரிகையில் சேர்ந்தார் பாரதி. அதில் அவரது எழுத்தாவேசம் கரைபுரண்டது. சுதேசியக் கல்வி, அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு, காங்கிரஸ் கட்சியின் நிலை, வெளிநாடுகளில் இந்தியர் நிலை, சமய மறுமலர்ச்சி, சமூக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல முனைகளில் பாரதியின் எழுத்துக்கள் புதுவீறுடன் வெளிவந்தன.

இந்தியா பத்திரிகையில், வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம், முதன்முதலாக கார்ட்டூன் வெளியீடு, பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தக வெளியீடு, விவாதங்களில் வாசகர் பங்கேற்பு, தமிழ்த்தேதி குறிப்பிடுதல் உள்ளிட்ட பல புதுமைகளை நிகழ்த்திய பாரதி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இதனால் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி, பத்திரிகையை சென்னையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி புதுவை சென்ற பாரதி, அங்கிருந்து மீண்டும் இந்தியா பத்திரிகையை புதிய வேகத்துடன் நடத்தினார். அங்கு "விஜயா' என்ற மாலை இதழையும் "பாலபாரதா' என்ற ஆங்கில இதழையும் பாரதி நடத்தினார். தவிர, கர்மயோகி, தர்மம், சூர்யோதயம், ஞானபானு ஆகிய பத்திரிகைகளிலும் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, புதுவையிலும் இந்தியா பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. அப்போதும், காளிதாசன், நித்யதீரர், உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயர்களில் காமன்வீல், நியூஇண்டியா, விவேகபானு போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்து தவத்தைத் தொடர்ந்தார் பாரதி.

"லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும், ஆங்கிலேய அரசு கொடுத்த தொல்லைகளுக்கு மத்தியில், பெரும் பொருளாதாரச் சிக்கல்களிடையே, உடல்நலிவுற்றபோதும், பாரதி நிகழ்த்திய சாதனைகள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் (1921) மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்த பாரதி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், எழுத்தாளர், முற்போக்குச் சிந்தனையாளர் என பலமுகங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாவதற்கு சில நாட்கள் முன்னரும், "சித்திராவளி' என்ற கார்ட்டூன் பத்திரிகையையும், "அமிர்தம்' என்ற வாரமிருமுறை இதழையும் வெளியிட அவர் முயன்றார். பத்திரிகைத்தொழில் மீதான பாரதியின் காதலையும், பத்திரிகை மூலம் சமூகத்தை மாற்ற அவர் துடித்த துடிப்பையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

பாரதி நினைத்திருந்தால், ஆங்கிலேய அரசுடன் சமரசம் செய்துகொண்டு பிரபல "பத்தி' எழுத்தாளராகப் பரிமளித்திருக்க முடியும். அரசுடன் குலாவியிருந்தால், 39 வயதிலேயே குடும்பத்தை நிர்கதியாக்கி, மருந்திற்கு காசின்றி இறந்திருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.
உயரிய விருதுகளுடன் வாழ்வதைவிட, நாட்டு மக்களுக்காக வாழ்வதே பத்திரிகையாளனின் கடமை என்று, அவர் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.

இந்நாளில் பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் தனி கெüரவம் உள்ளது. அரசு அஞ்சி மரியாதை செலுத்தும் பணியாக ஊடகத்துறை மாறிவிட்டது; ஊதியமும்கூட ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிகைத்துறையின் தேசியப் பங்களிப்பு உற்சாகம் அளிப்பதாக இல்லை.

நாட்டைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையிலும் முறைகேடுகள் பெருகிவிட்டன. அதிகாரத் தரகர்களுடனும், பதவிப் பித்தர்களுடனும் கூடிக் குலாவும் பத்திரிகையாளர்களால், ஊடகத்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். சுயபொருளாதார முன்னேற்றத்திற்காக தங்களை விற்கும் ஊடக அறிஞர்களைக் காணும்போது வேதனை மிகுகிறது.

இதற்கெல்லாம் ஒரே மருந்து, பாரதியின் பத்திரிகைப் பணிகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதுதான். இதழியல் பட்டப் படிப்பில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும். பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும். தற்போதைய தறிகெட்ட பத்திரிகை உலகிற்கு மருந்து பாரதி மட்டுமே.


நிறைவாக, இந்தியா பத்திரிகையில் "நமது விஞ்ஞாபனம்' எந்ற தலைப்பில் பாரதி எழுதிய மகத்தான வரிகள் இதோ...

“..இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது...''

-வ.மு.முரளி

காண்க: பாரதியைப் பார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக