நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.1.11

வாழ்க நீ எம்மான்!



மகாத்மா காந்தி

பலிதானம்: ஜன. 30 (1948)

வாழ்க நீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
 
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்
விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி
ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய,
புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!
 
கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!
 
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!
 
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!
 
-மகாகவி பாரதி

காண்க:
.

29.1.11

மணியான தலையங்கம்


குறை ஒன்று தீர்ந்தது

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், "கப்பலோட்டிய தமிழன்' "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.

  இந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல்! இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
 
  இத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.

  சிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.

  இந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.

 "வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ! வருந்தலை, என் கேண்மைக் கோவே!...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி! அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.

  சிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

  கோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, "தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தூத்துக்குடி "கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.

  "சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. "சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.

  மத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல!

 நன்றி: தினமணி (29.01.2011)

28.1.11

எப்போது சொல்லித் தரப் போகிறோம்?




லாலா லஜபதி ராய்

பிறப்பு: ஜன 28  (1865)

விடுதலைப் போராட்ட நிகழ்விலிருந்து ஒரு சிறு துளி...

1928 ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது.  ''சைமனே திரும்பிப் போ'' என்ற முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. அக். 30 ம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப்  சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 1928 , நவ.  17 ம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது. 


லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை,  லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து,  டிச. 17 ம் தேதியன்று பகத்சிங்கும்,  ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர். 

சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும்,  ராஜகுருவும் தலைமறைவாயினர்.  பின்னாளில் நாடளுமம்ன்றத்தில் குண்டுவீசி கைதானபோது, சண்டர்சன் கொலைவழக்கில் பகத்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.  சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  1931 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். 

நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்ததில்லை. லஜபதிராயின் தியாகமும் பகத் சிங்கின் வீரச்சமரும் நமது பாடப்புத்தகத்தில் இருட்டடிக்கப்பட்டதால்தான், நமது இளைய தலைமுறை சுதந்திரத்தின் மதிப்பறியாது விடுதலை தினத்திலும்கூட கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.

இந்நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது குழந்தைகளுக்கு நமது உண்மையான வரலாற்றை நாம் எப்போது சொல்லித் தரப் போகிறோம்?

காண்க:
பஞ்சநதத்தின் சிங்கம்
.
 

27.1.11

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

 
 
 
சுவாமி சகஜானந்தர்
 
பிறந்த தினம்:  ஜன. 27.
 
தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.
 
இளம் வயதில்: ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில், 1890,  ஜன. 27-ல்  அண்ணாமலை - அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.

தனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப்போகும் நேரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ’இப்படித்தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்’ என்றார். அந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.

பள்ளிப்படிப்பு: தனது ஊரில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த முனுசாமி 1901ல் ஆறாம் வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலை பள்ளியில் துவக்கினார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்தார். பூரித்துப்போன நிர்வாகம் அவருக்கு ஆறாம் வகுப்பிலேயே ’சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது.

அதோடு நிறுத்தாது அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்தியது. இரு ஆண்டுகள் கடந்தும் அவர்களது ஆசை நிறைவேறவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அமெரிக்கா சென்று படித்து பாதிரியாகத் திரும்பிவரலாம் என ஆசை காட்டினர்.

ஹிந்து மதத்தில் தீவிர பக்தி கொண்டிருந்த முனுசாமி மதம் மாற மறுத்ததால், எட்டாம் வகுப்பில் (1903) பாதியிலேயே அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் விடுதி பாக்கி ரூ. 60/- பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் கடன் தொல்லைக்கு ஆளாக்கியது.

ஞானப்படிப்பு:  படிப்பைத் துறந்து கூலி வேலை செய்யத்துவங்கினார் முனுசாமி. மாலை நேரங்களில் சமய சொற்போழிவுகளைக் கேட்பதில் கவனம் செலுத்தினார். நீலமேக சுவாமிகள் என்பவரிடம் பல ஆன்மீகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது எந்தக் கோயிலிலும் இவருக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தெய்வ தரிசனம் காண மனம் ஏங்கியது. கொதித்தது. ஆனாலும் சமுதாயத்தைத் திட்டாது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

தட்சிண ஸ்வாமி என்பவரிடம் ஆன்மீகத்தில் மேலும் பல விஷயங்களை பயின்றார். அவர் வியாசர்பாடியில் வாழ்ந்து வந்த கரப்பாத்திர சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். கரப்பாத்திர சுவாமிகள் பிச்சை ஓடு கூட வைத்துக் கொள்ளாமல் கரத்தில் வாங்கி உண்டுவந்ததால் கரபாத்திர சுவாமி என பெயர்பெற்றார். அவர் துறவிகளை உருவாக்கும் ஒரு குருகுலத்தையும் நடத்திவந்தார். பலருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனுப்பி வந்தார். அவரிடம் வந்து சேர்ந்தார் நமது முனுசாமி.

சகஜானந்தர் ஆக: குருகுலத்திலும் பிற துறவிகள் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதைக் கண்டு மனம் நொந்தார். ஆனால் தனது குரு அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உணர்ந்து அங்கேயே ஏழு வருடங்கள் தங்கி அனைத்து சாதிரங்களையும் கசடறக் கற்றார்.

கரப்பாத்திர சுவாமிகள் இவருக்கும் தீட்சை கொடுத்து ‘சுவாமி சகஜானந்தர்’ என நாமகரணம் செய்தார். மேலும் நடராஜப் பெருமானின், நந்தனின் நகரமான சிதம்பரத்திற்கு 1910 ஜூலை 7ம் தேதி ஆருத்திரா தரிசனத்தன்று ஆதிதிராவிட மக்களுக்காக தொண்டு செய்ய அனுப்பி வைத்தார்.

கல்விப்பணியில்:  1911 ஆம் ஆண்டு மூன்று மானவர்களுடன் பள்ளியைத் துவக்கினார். மக்கள் பஜனை மடமென கேலி செய்தனர். மனம் தளராது தொடர்ந்து பணி புரிந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டது.

அதே சமயத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்தார். அவர்களைக் கொண்டே 1916, ஜூலை 7ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இதில் வந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து சில வருடங்களுக்குள் பின்னத்தூர்,  ராதா விளாகம், கிள்ளை, கொடிப்பள்ளம் போன்ற ஏழு ஊர்களில் கிளைகளைத் துவக்கினார்.

மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாது, ஆன்மிக ஞானத்தையும், தொழிற்கல்வியையும் சேர்த்து போதித்தார். மாணவர்கள் தலையில் குடுமி கழுத்தில் ருத்திராட்சம் அணிய வைத்தார். மேலும் தமிழிசை சொல்லிக் கொடுத்தார்.

திருவிழாக்களின் போது நடராஜர் படத்தை எடுத்துக்கொண்டு தேவார, திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வரச் செய்தார். 1929ல் மாணவர் இல்லமும், 1930ல் மாணவியர் விடுதியும் துவக்கினார். மாணவர்களின் மேற்படிப்புக்காக மீனாட்சி கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இடம் வாங்கிக் கொடுத்தார்.

6 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  28க்கு மேற்பட்ட உயர்பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மானவர்கள் என்பதிலிருந்தே அவரது கல்வித் தொண்டை அறிந்துகொள்ள முடியும்.

இலக்கியத்தில்: வ.உ.சி எழுதிய அகமே புறம், மெய்யறம் என்ற இரு நூல்களுக்கும் சுவாமி சகஜாந்தர் அணிந்துரை எழுதியுள்ளார்.  நாரத சூத்திரத்தை தமிழில் ‘யார் பிராமணன்?’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலையும், பரஞ்சோதி: என்ற இதழையும், ஆக்ஸ்போர்டு என்ற அச்சகத்தையும் நடத்திவந்தார்.

பொதுவாழ்வில்: துறவு மேற்கொண்டாலும் தனது சமூக மக்களின் நலனுக்காக பலரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில் ஈடுபட்டார். இலவச மனைப்பட்டா, தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகள், வாரக்கூலி, விவசாயக் கூலி நிர்ணயம் போன்றவை மட்டுமல்லாது, வெட்டியான், தலையாரி, தோட்டி போன்றவர்களுக்கு பல உரிமைகளையும், நிவாரணங்களையும் போராடிப் பெற்றுத்தந்தார். சுமார் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.

ஆலய பிரவேசம்: 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் ஆலயத்தினுள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டுவந்தார். அந்த மசோதா தோல்வி அடைந்தது. ஆலய நுழைவுக்காக சகஜானந்தர் அணிதிரட்டி தொடர்ந்து போராடினார்.

1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட.

கடைசி மூச்சுவரை சமூக மேம்பாட்டுக்காக பணிபுரிந்த அவரை நினைவுகூர்வோம். இன்றும்கூட ஆங்காங்கே தொடரும் தீண்டாமைத் தீயை அணைக்க நாம் சகஜானந்தர் வழியில் செயல் புரிவோம்.
-பக்தன்
நன்றி: விஜயபாரதம்
 

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்





தாயுமானவர்
திருநட்சத்திரம்:
தை - 13 -  விசாகம்
(ஜன. 27)

தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள்.  இவரது காலம்:  பொ. யு.பின் 1705 – 1742.  தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்.

இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை.  திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

                                                                        (பராபரக்கண்ணி - 221)
என்ற இவரது பாடல்,  ஆன்மிக நேயர்களின் இலக்காக என்றும் மிளிர்வதாகும்.
தாயுமானவர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்: கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர் சமஸ்கிருதம்,   தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். 
கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர் மனைவி ராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.
ஒருமுறை  முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட,  இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர், அரசனுக்கும்  அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.
மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். மனைவியின் மறைவுக்குப் பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் இவரது தலமானது.  இன்றும் ஆண்டுதோறும் இங்கு தாயுமானவர் குருபூஜை தை மாத விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

காண்க:
தாயுமானவர் (விக்கி)
தாயுமானவர் பாடல்கள் (shaivam .org)
தாயுமானவர் பாடல்கள் (தமிழ் ஹிந்து)
தாயுமானவர் கோயில் (தினமலர்)
தவத்திரு யோகியர் மூவர்
தாயுமானவர் (தமிழ்வு)
தாயுமானவரின் பிரபஞ்சக் கோட்பாடு (ஈகரை)
THAYUMANAVAR

ஈசன் ஆணையைக் காக்க இன்பம் துறந்தவர்


திருநீலகண்ட நாயனார்
திருநட்சத்திரம்:
தை - 13 - விசாகம்
(ஜன. 27)

திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில்  மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி "என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!' என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.

இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். "இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன்!' என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை.

மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி "திருவோடு தொலைந்துவிட்டது!' என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார்.

அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

இறைவன் மீதான பக்தியின் உச்சத்திற்கு நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஈசன் மீது ஆணையிட்டதற்காக இல்லற வாழ்வையே தியாகம் செய்த திருநீலகண்டர், பக்தி வைராக்கியத்தின் ஒரு வடிவம். அவரது புகழை உலகறியச் செய்ய ஈசன் நடத்திய திருவிளையாடல், பக்தன் மீதான இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது. இன்றும் ஆண்டுதோறும் திருநீலகண்டர் குருபூஜையின் போது, சிதம்பரம்  இளமையாக்கினார் கோயிலில் உள்ள குளத்தில் தம்பதியராக மூழ்கி எழும் வைபவம் நடத்தப்படுகிறது.


காண்க:
திருநீலகண்டர் (விக்கி)
திருத்தொண்டர் புராணம்
திருநீலகண்ட நாயனார் புராணம் (தமிழ்க் களஞ்சியம்)
திருநீலகண்டர் புராணம்- ஆறுமுக நாவலர்
THIRUNEELAKANDA NAYANAR
கல்லிலே கலைவண்ணம் (தாராசுரம்)
தேவாரச் சொற்பொழிவு
திருநீலகண்டர் (திண்ணை)
திருநீலகண்ட நாயனார் புராணம் (ஹோலி இந்தியா)
THIRUNEELAKANDAR (HINDU SOCIETY)
திருநீலகண்டர் தலம் -சிதம்பரம்
இளமையாக்கினார் கோயில் (தினமலர்)
.

26.1.11

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்



நாட்டைக் காப்போம்!

நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை  மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!

நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!

நாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத்  தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட, நாம் இன்று சபதம் ஏற்போம்!

சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்!

நாடு என்பது நாமே என்று உணர்வோம்! உணர்த்துவோம்! நமது நாட்டை நாமே காப்போம்!

-குடியரசு தின உறுதிமொழி

கார்ட்டூன்: மதி
நன்றி: தினமணி (26.01.2011)
காண்க: காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள் 
.

'தமிழ்நாட்டிற்காக' உயிர் துறந்தவர்

தியாகி சங்கரலிங்கனார்
பிறப்பு: ஜன. 26

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் 1956 , அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


நன்றி: கீற்று

காண்க:
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம்
காங்கிரஸ்காரரின்  கனவு

வேண்டுகோள்: தியாகி சங்கரலிங்கனாரின் படம் இருப்பவர்கள் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்.
.

25.1.11

உடையவரின் உற்ற துணைவர்



கூரத்தாழ்வான்

திருநட்சத்திரம்:

தை - 11 - ஹஸ்தம்
(ஜன. 25)


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்,  (பொது யுகத்திற்குப் பின் 1010),  சௌம்ய வருடம்,  தை மாதம்,  ஹஸ்த நட்சத்திரத்தில்,  காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.

குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் 'ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்' என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.

காஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.

வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.
எப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக் கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.

***

ஒரு முறை ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் ராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.

"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்".

"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்".

"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்ய வேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்".

"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்".

"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்".

குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது.

***

"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?"

கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய 88 வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய 80 வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் ராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார்.

வயதில் மிகவும் முதிர்ந்த, ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது,அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ்நிலை ஏற்பட்ட காலம் அது.

ஒரு  நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் கோயிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.

"இது அரசகட்டளை. ராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை"

"ஆகா,  இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது"

"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு ராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்"

"ஐயோ,  இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!"

மிகுந்த வருத்தத்தோடு திருக்கோயிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.

***
எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு 108வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மீது கூரத்தாழ்வான் 'வரதராஜ ஸ்தவம்' என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் ராமானுசர்.

"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்"

"அப்படியே செய்கிறேன் சுவாமி"

"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"

***

திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.

"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"

"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?"

"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".

"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு ராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"

"அப்படியே தந்தோம்"

ராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.

***
"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது"

ராமானுசரின் வாக்கின் படி திருக்கோயிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.
"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?"

"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்".

"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்"

"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு"

மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். ராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக் கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை ராமானுசர் கொண்டாடினார்.

***

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!

 சிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க!

ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!

எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க!"



நன்றி: செங்கோட்டை ஸ்ரீராம்

நன்றி: பிரபந்தம்


காண்க:

.
   

24.1.11

பக்தியால் சிவனின் மைந்தனானவர்



சண்டேஸ்வர நாயனார் 
திருநட்சத்திரம்: தை - 10 - உத்திரம் 
(ஜன. 24)
சோழநாட்டில் மணியாற்றங்கரையில் சேய்ஞலூர் என்னும்  ஊரில் அந்தணர் மரபில் எச்சத்தன்,  பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளால்  வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள்  மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக் கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப் புடைத்தான். 
விசாரசருமர் இடையனைத் தடுத்து,  ஐயா! பசுக்கள் தம் உடலுறுப்புகளில் தேவர்களையும், முனிவர்க்ளையும்  புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளது. பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று எடுத்துத்துரைத்து, அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார். பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.  மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தார் ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை வைத்துக் கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஒளிந்துகொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவநிந்தை என்பதால் அவரது பாதத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டினார்.  எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து "நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கப்பட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்றுரிமையாக்கி "சண்டீசன்" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் "சண்டேஸ்வர நாயனார்" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
சிவ பக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசருக்கு தனி இடம் அளித்திருப்பதும் நாம் எண்ணி மகிழ வேண்டியவை.

காண்க:
.

இசையால் ராமனுடன் கலந்தவர்

 தியாகராஜ சுவாமிகள் 
ஆராதனை நாள்: ஜன. 24 


இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர்,  புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 

1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர்.  இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார். 

திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். 

திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். 

தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் 'ஏல நீ தயராது' என்று புகழ் பெற்ற பாடல். 

தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். 

தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி  செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் 'சாந்தமுலேக சவுக்கியமுலேது' (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).

முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன.  அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். 

ஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் 'நிதிசால சுகமா ? ராமுனி சந்நிதி ஸேவசுகமா?' என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். 

பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய சேத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் (1857) பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 

1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக  திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள். இந்த ஆண்டு 164  வது ஆராதனை நடக்கிறது. 

காண்க:
தியாகராஜர் (விக்கி)
தியாகராஜர் (தினமலர் )
தியாகராஜ சுவாமிகள் வரலாறு (பாரதி பயிலகம்)