நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

23.11.21

மகாகவி பாரதி- சில நினைவுகள்


-தஞ்சை வெ.கோபாலன்



(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு)

இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் மகாகவி பாரதியார். இளமையின் உச்சத்தில் இன்னும் எவ்வளவோ அரிய கவிதைகளைக் கவி காளிதாசன் போல், கவியரசர் கம்பன் போல் அளிக்க வாய்ப்பிருந்த நிலையில் தன் முப்பத்தி ஒன்பதாம் அகவையில் அமரர் ஆனார் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் மக்கள் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.சொற்களைக் கோர்த்து பொழுதுபோக்காகக் கவிதைகள் புனைந்தவனில்லை மகாகவி. ஒவ்வொரு கவிதையின் பின்னாலும் ஒரு பெருங்கதை மறைந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அதன் சிறப்பினை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

புதுச்சேரியில் அந்தக் காலத்தில் புழக்கத்திலிருந்தது புஷ் வண்டி எனப்படும் பயண சாதனம். அதில் புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்த ஒரு புஷ்வண்டியோட்டி மகாகவிக்கு அடிக்கடி சவாரி வருவது வழக்கம். அப்படியொரு நாள் அந்த மனிதர் பாரதியிடம், “ஐயா நான் உப்பளம் பகுதியில் வசிக்கிறேன். தாங்கள் ஒருநாள் எங்கள் பகுதிக்கு வர வேண்டும். வந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் முத்துமாரியம்மனைத் தரிசித்து அங்கு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.