நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.10.11

தேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...


பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
(தேவர் ஜெயந்தி: அக். 30௦)
அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.
“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் - தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர்.
”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.
“வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று வீரத்துடன் விவேகத்-தையும் வளர்த்த இரண்டாம் விவேகானந்தர். தனது வீரப்பேச்சால் பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், தனது விவேக சிந்தனைகளால் பல்லாயிரக் கணக்கான அறிவாளிகளுக்கும் வழிகாட்டியாய் விளங்கியவர்.
1952 தேர்தலில் ஒரே மேடையில் பல பிரசாரக் கூட்டங்களில் தேவரும், ஈ.வெ.ரா. நாயக்கரும் பேசினார்கள். ஈ.வெ.ரா., தேவரை “தேவகுமாரன் இப்பொழுது பேசுவார்” என்று அறிவிப்பு செய்தது அன்றைய அரசியலில் ஓர் புதுமையான புரட்சிதான்.
1954ல் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சர்.சி.பி. ராமசாமி தலைமையில் “இந்து மதம்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதுவும் ஆங்கிலத்தில். பேச்சில் இந்து மதத்தின் பெருமை, நாட்டின் வரலாறு, காசியின் சிறப்பு, பாரதியாரின் பாடல்களை எல்லாம் குறிப்பிட்ட முத்துராமலிங்கத் தேவர், மாணவர்களுக்கான குறிப்பேட்டில் எழுதினார்:
“அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்.” என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை! தேவரின் பெருமைதான் என்னே!
1955 ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழர்களும், பர்மிய அறிஞர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டாம் முறையாக பர்மா செல்கிறார் தேவர். தொண்டர்களும், தமிழர்களும், பர்மியர்களும், புத்த பிட்சுக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவரை வரவேற்கின்றனர்.
வரவேற்பில் புதுமையாகவும் - அதே சமயத்தில் புத்தமதத் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த வரவேற்பும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தமதப் பெண்கள் வரிசையாக இரண்டு புறத்திலும் தரையில் படுத்துத் தங்கள் கூந்தலைத் தரையில் விரித்துக் கொள்வார்கள். தங்களால் வரவேற்கப்படும் தலைவர் அந்தக் கூந்தல் மீது  நடந்து விழா மேடைக்கு வருவார்.
வரவேற்பை ஏற்க மறுத்து தேவர் கூறினார்: “எங்கள் இந்து மதத்தின் படி, பராசக்தியின் திருவுருவில் தாய்க்குலத்தைப் பார்க்கிறவன் நான். அந்த இந்து மதத்தின் சாமான்யப் பிரதிநிதி என்கிற வகையில் அடியேனால் இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்” என்றார்.
பர்மா ஜனாதிபதியை சந்தித்த போது திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்த பெருமிதம் கொண்டார் தேவர் பெருமகன்.
பொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை; தனக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள தொகு-திக்-குள் செல்லவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத்-திற்கு அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டமன்றத்திற்கு முதுகுளத்தூர் தொகுதியிலும் ஒரே சமயத்தில் வெற்றி-யைப் பெற்று நாடே அதிசயித்த அரும் பெரும் தலைவர்.
வீரமும் விவேகமும் என்றும் இம்மண்ணில் தழைத்திட வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த ஆன்மிகப் புருஷர்,
தேசியமும், தெய்வீகமும் இம்மண்ணின் அடையாளங்களாகக் காட்டிய கர்ம வீரர்,
தன்னை ஒரு சாதித் தலைவராகக் காட்டாது, தாய்நாட்டின் பெருமைகளை சாதித்தத் தலைவராகக் காட்டிய கொள்கை மறவர்.
“வில்லுக்கு விஜயன், வீறுநடை தேசியக் சொல்லுக்கு முத்துராமலிங்கம்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான தேசியத் தலைவனாய், தெய்வீகத் திருமகனாய் விளங்-கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவில் போற்றுவோமாக! வாழ்வில் பின்பற்றுவோமாக!                
- ம.கொ.சி. ராஜேந்திரன்
காண்க:

தேசியமும் செய்வீகமும் இவரது கண்கள் 

27.10.11

தமிழ் வளர்த்த பேராசிரியர்


மு.வரதராசனார்
(பிறப்பு: 24 .04.1912  மறைவு: 10.10.1974 )
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும்,  தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனி இடமுண்டு என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அன்னாரின் சீரிய தமிழ்த்தொண்டு போற்றத்தக்கதாகும்.
தமது ஈடு இணையற்ற எழுத்தினால் உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் குடி புகுந்தவர் 'மு.வ.' என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசன் எம்.ஏ.,எம்.ஓ.எல்., பி.எச்.டி.,டி.லிட்.

இவர் தமிழ் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே 24 .04.1912 ல் பிறந்தார். தந்தையார் பெயர் முனுசாமி; தாயார் பெயர் கண்ணம்மாள்  மு.வ.வின் இயற்பெயர் திருவேங்கடம் என்பதாகும். எனினும் குடும்ப மரபுப்படி, 'தாத்தாவின் பெயரை இடுதல்' என்ற வழக்கப்படி இட்ட பெயரே 'வரதராசன்' என்பது. அப்பெயரே இறுதிவரை நிலைத்துப் புகழோங்கி நின்றது. 

தனது ஆரம்ப பள்ளிக் கல்வியை வேலத்திலும், வாலாசாவிலும் கற்றார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை திருப்பத்தூரில் பயின்றார். அன்னாரின் முதல் ஆசான் முருகய்ய முதலியார் ஆவார். அவரிடம் கற்றுத்தான் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். வரதராசன் 1928 ம் ஆண்டு அதாவது தமது 16 ஆவது வயதில் முதன்முதலாக தாலூகா அலுவலகத்தில் எழுத்தாளராகப் பணி புரிந்தார். எனினும் 1935 ம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பனந்தாள் பரிசான ரூ. 1000 பெற்றுக் கொண்டார். யோசித்துப் பாருங்கள்! அந்தக்காலத்தில் இந்தியப் பணம் ரூ. 1000!

விடா முயற்சியுடைய மு.வ. அவர்கள் 1939 ல் பி.ஓ.எல்.பட்டமும், 1944 ம் ஆண்டு எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார்.  இதற்கிடையில் 1935 ம் ஆண்டு தமது சொந்த மாமன் மகளான ராதாவை மணம் புரிந்தார்.  இல்லற வாழ்வின் பயனாக திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று ஆண்மக்களைப் பெற்று பேருவகை அடைந்தார். மூவருமே மருத்துவத்துறையில் மேதைகளானார்கள். 

திருமணம் முடித்த போது அவர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகக் கடமையாற்றினார். அன்னாரின் திறமையை நன்கறிந்து கொண்ட டாக்டர் சு.லட்சுமணசாமி முதலியார் அவரை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். 1939 ம் ஆண்டு முதல் 1944 ம் ஆண்டுவரை அங்கு பேராசிரியராக இருந்தவர் 1945 ம் ஆண்டு அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். 

தமிழ்த்துறைத் தலைவர் பதவி ஒருபுறம்,  எழுத்துத்துறை மறு புறமென எழுதிக் குவிக்கத் தொடங்கினார். தமிழ்த் தாயின் தலைமகன் மு.வ. அவர் எழுதிய முதல் நாவல் 'செந்தாமரை' ஆகும் இரண்டாவது நாவல் 'கள்ளோ? காவியமோ?' இந்த நாவல்தான் அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இந்த நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மிகவும் பிடித்த நாவலும் இதுவே!

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகள் கற்றுப் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் தமிழே அவரது உயிராக இருந்தது.  சொற்பகாலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசியராகப் பணி புரிந்த வரதராசனார் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் மறைவுக்குப்பின் 1961 ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரானார். இப்பணி 1971 ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1971 ம் ஆண்டு முதல் இந்தத் தமிழ்வேந்தர் காலமாகும்வரை அதாவது 10௦.10௦.1974 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பூத்த, இணையற்ற துணைவேந்தராகப் பணி புரிந்தார். 

1948 ல் சென்னைப் பல்கலைக்கழகத்திலே முதன்முதல் 'டாக்டர்' பட்டம் பெற்ற இவர் 1972 ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி டி.லிட் (இலக்கியப் பேரறிஞர்) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட் என்ற சிறப்புப்பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். 

அதுமட்டுமல்ல; ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மன், கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான உலக நாடுகளை வலம் வந்த முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற பெருமையும் அவருக்கே உரியது! அமரர் மு.வ.வாழுங் காலத்தில் பங்கு கொள்ளாத, தொண்டாற்றாத தமிழ்க் கழகங்களே இல்லை.  தமிழ்நாடு புத்தகக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம், ஆட்சி மொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ்வளர்ச்சிக்கழகம், தமிழிசைச் சங்கம்,
தமிழ்க்கலைமன்றம், என்பன அவற்றுள் சிலவாகும். 

டாக்டர் மு.வரதராசன் அவர்கள் பதின்மூன்று நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் 'அகல் விளக்கு' என்ற நாவல் இந்திய ஜனாதிபதியின் சாகித்திய அகாடெமி  விருதினைப் பெற்றது.  அன்னாரின் 'கள்ளோ? காவியமோ?' நாவலும்,  'அரசியல் அலைகள்' , 'மொழியியற் கட்டுரை' என்ற நூல்கள் சென்னை அரசாங்கத்தின் பரிசுகளைப் பெற்றன.

மேலும் 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்', 'ஓவச் செய்தி', 'மொழிநூல்',  'விடுதலையா?' போன்ற நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அவருக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்தன.
தவிர அன்னார்,  சிறுகதைகள் (2), நாடகங்கள் (6), சிந்தனைக் கதைகள் (2), கட்டுரை நூல்கள் (11), இலக்கிய நூல்கள் (24), கடிதஇலக்கியம் (4), இலக்கிய வரலாறு (1), மொழியியல் (6), பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு (4), ஆங்கிலநூல்கள் (2), சிறுவர் இலக்கியம் (4), சிறுவர் இலக்கணம் (3), மொழிபெயர்ப்பு நூல்கள் (2), 'யான்கண்ட இலங்கை' (1) என்ற பயண இலக்கியம் உட்பட எழுத்துத் துறையில் தொடாத துறையே இல்லை எனலாம். 
மேலும் டாக்டர் மு.வ.வின் உயிரோட்டமுள்ள புகழ்பூத்த பல நூல்கள் தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றன. இந்திய சுதந்திரப் பேராட்ட நூற்றாண்டின் போது, 15.08.1957 அன்று அவருக்கு சென்னை அரசாங்கம் 'தமிழிலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர்' என்ற பாராட்டுப் பத்திரம் வழங்கி, அழகிய நடராஜர் உருவம் பொறித்த செப்புக்கேடயத்தை வழங்கிக் கௌரவித்தது. 

கலைகளுள் எழுத்துக் கலைக்குத் தனி ஆற்றல் உண்டு, என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆண்டுகள் பல சென்றாலும், காலம் கடந்து வாழும் பண்பு எழுத்துக் கலைக்கே உண்டு. உயிரோவியங்கள் பலவற்றைப்படைத்து, ஆயிரம், ஆயிரம் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த டாக்டர் மு.வ.இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். 

அதனால் தானே என்னவோ 10.10.1974 அன்று சென்னையில் அவர் காலமாகும் போது கூட அதே எடுப்பான எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்றநெற்றி, புன்னகை பூத்தமுகம், நீண்ட மெல்லிய கைகள், அழகான பல்வரிசை, பண்பட்ட நெஞ்சம் உடையவராக இருந்தார். அவரது நூல்கள் எமக்கு வழிகாட்டும்!

- இணுவையூர் ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன்

காண்க:

26.10.11

நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?


கவிதை

நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!
 
ஊழல் செய்து வயிறு வளர்க்கும்
உழைப்பே இல்லா உண்ணிகள் ஆட்டம்!
லஞ்சப் பேயை லாவகம் ஆக்கி
லாபம் பார்க்கும் சுயநலக் கூட்டம்!
 
பகுத்தறி வென்ற பெயரினில் நாட்டின்
பாரம்பரியம் இகழ்ந்திடும் துஷ்டர்!
முற்போக் கென்று சொல்லிக் கொண்டே
முன்னேறாமல் தடுக்கும் கயவர்!
 
ஏழை, செல்வர் பிளவு பெருக்கி
ஏய்க்கும் எண்ணம் நெஞ்சில் கொண்டோர்!
பசியால் வாடும் ஏழைகளின் பால்
பரிவினைக் காட்டும் பண்பினை அற்றோர்!
 
கோயிலுக் குள்ளே குண்டு வெடிக்கும்
குரூர மான பயங்கர வெறியர்!
மதப்பிரி வினையால் நாட்டைப் பிளந்தும்
மனமடங் காத மமதை கொண்டோர்!
 
சாதிக ளுக்குள் சங்கடம் வளர்த்து
சண்டைகள் மூட்டும் சகுனி குலத்தோர்!
சேவை என்ற பெயரினில் நாட்டை
கூறாய் ஆக்கும் ஐந்தாம் படையோர்!
 
ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யும்
ஆணவம் மிக்க அரசியல் தலைவர்!
நம்பிய வர்களின் கழுத்தை அறுத்து
தன்னலம் பேணும் தந்திரக் காரர்!
 
அந்நிய நாட்டு சித்தாந் தங்கள்
அமுதம் என்று சொல்லித் திரிவோர்!
பண்பா டொழிக்க முயற்சிக் கின்ற
பதர்களுக் குதவும் பாவ மனத்தோர்!
 
மத மாற்றத்தால் நாட்டைக் குலைக்கும்
மதியிலி செயலை வளர்க்கும் தீயோர்!
காட்டிக் கொடுக்கும் துரோகத் தனத்தால்
நாட்டைக் கெடுக்கும் நாணய மற்றோர்!
 
ஒற்றுமை விதையில் அமிலம் ஊற்றி
ஒழிக்க நினைக்கும் அண்டை நாட்டோர்!
தினமும் படுகொலை செய்து மகிழும்
தீமையின் உருவாய் வாழும் பகைவர்!
 
எத்தனை வடிவம் எடுத்திடும் போதும்
எத்தர்கள் உருவம் ஒன்றே யன்றோ?
இத்தனை தெரிந்தும் இனிமேல் நாமும்
இழிவைத் தாங்கிப் பொறுப்பது நன்றோ?
 
நாடு என்பது நாமென்று உணர்ந்தால்
நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?
நாம் எல்லோரும் இணைந்து எழுந்தால்
நரகா சுரர்கள் அற்பம் தானே?


- வ.மு.முரளி
காண்க:
 எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை
அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
.

17.10.11

புரட்டாசி மாத மலர்கள்

ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:

அருணந்தி சிவாச்சாரியார்
(புரட்டாசி - 9 - பூரம்)

ஏனாதி நாயனார்
(புரட்டாசி - 18 - பூராடம்)

ராமலிங்க வள்ளலார்
(புரட்டாசி - 18 - பூராடம்)

மத்வ ஜெயந்தி
(புரட்டாசி - 19 - உத்திராடம்)

விஜயதசமி (புரட்டாசி - 19)

நரசிங்க முனையர்
(புரட்டாசி - 21 - அவிட்டம்)

வால்மீகி ஜெயந்தி
(புரட்டாசி - 24 - பௌர்ணமி)

உருத்திர பசுபதியார்
(புரட்டாசி - 26 - அஸ்வினி)

திருநாளைப்போவார்
(புரட்டாசி - 29 - ரோகிணி)

-----------------------------
சான்றோர் - மலர்வும் மறைவும்

மேடம் காமா
(பிறப்பு: செப். 24)


தீனதயாள் உபாத்யாய
(பிறப்பு: செப். 25)

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)

பகத்சிங்
(பிறப்பு: செப். 28)

அன்னிபெசன்ட் அம்மையார்
(பிறப்பு: அக். 1)

மகாத்மா காந்தி
(பிறப்பு: அக். 2)

லால்பகதூர் சாஸ்திரி
(பிறப்பு: அக். 2)

காமராஜர்
(மறைவு: அக். 2)

டி.வி.ராமசுப்பையர்
(பிறப்பு: அக். 2)

ம.பொ.சிவஞானம்
(மறைவு: அக். 3)

திருப்பூர் குமரன்
(பிறப்பு: அக். 4)

சுப்ரமணிய சிவா
(பிறப்பு: அக். 4)

(மறைவு: அக். 10.)
ஜெயபிரகாஷ் நாராயணன்
(பிறப்பு: அக். 11)
(மறைவு: அக். 8)


கே.பி.சுந்தராம்பாள்
(பிறப்பு: அக். 11)

சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)

அப்துல் கலாம்
(பிறப்பு: அக். 15)

வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)

கண்ணதாசன்
(நினைவு: அக். 17)

16.10.11

நிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை


வீரபாண்டிய கட்டபொம்மன்
(பலிதானம்: அக். 16)

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட 'குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது.

தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799, அக்டோபர் 16ம் தேதியன்று, கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

`Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்த பின்னும், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு?  முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது?

- வெங்கட சேது (வெப் துனியா)

காண்க:

வெள்ளையரை மிரட்டிய வீரச் சிங்கம்

.

15.10.11

தேசபக்தரின் பிரார்த்தனை

எழுச்சிதீபம் ஏற்றிவரும் தேசிய  நாயகர் கலாம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது லட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அறிவுப்புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
லட்சிய சிகரத்தையும் அறிவுப் புதையலையும்
இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள் புரிவாயாக.

- பாரத முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இன்று (அக். 15) இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன்
அப்துல் கலாமின் 80 வது பிறந்தநாள்.  

காண்க:


ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (விக்கி)

அப்துல் கலாம் (நெஞ்சின் அலைகள்)

A.P.J.ABDUL KALAM

கலாம் கற்ற பாடம்

அப்துல் கலாம் (ஈகரை)

கலாம் பொன்மொழி (தமிழ் தேசம்)

அக்னிச் சிறகுகள் (தரவிறக்கத்துக்கு)

WINGS OF FIRE

அப்துல் கலாமுக்கு அன்புடன் சலாம்! (குழலும் யாழும்)
.

13.10.11

பாரதியின் நிவேதனம்

 
சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)
 
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
   கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்
   பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
   பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
   நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

-மகாகவி பாரதி

குறிப்பு:  இன்று சகோதரி நினைவு நூற்றாண்டு துவங்குகிறது. 
                     அவரது மறைவு தினம்: 13.10.1911. 
காண்க:

ஆலிலை- மலர்மன்னன் (திண்ணை)

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்

.

சிரத்தையின் தீவிர வடிவம்

உருத்திரபசுபதி நாயனார்

(திருநட்சத்திரம்: புரட்டாசி- 26 -அஸ்வினி)
(அக். 13)

காவிரி பாயும் சோழ நன்னாட்டில் மறையவர் வளர்க்கும் சிவவேள்வியின் பயனாக மாதம் மும்மாரி பொழிந்தது. அம் மறைக்குலத்தில் பசுபதி நாயனார் அவதரித்தார். வேதவிற்பனர்கள் கண்மலரென நினைக்கும் திருஉருத்திர மந்திரத்தினைத் தூய அன்புடன் பசுபதி நாயனார் நியமத்துடன் ஓதி வந்தார்.

இறைஅருளைப் பெற அவசியம் தேவை சிரத்தை. இந்தச் சிரத்தையினால்தான் நசிகேதன் மரணத்தை வென்றவனானான்; இந்தச் சிரத்தையினால்தான் மார்கண்டேயன் சிரஞ்சீவியானான்; பல ஞானிகள் முக்தியை அடைந்தது இந்தச் சிரத்தையினால்தான். தொடர்ந்து ஒரு நற்செயலை விடாமல் செய்து வரும்பொழுது அச்செயலே முக்திகான வழிக்காட்டியாகி விடுகின்றது என்பதை பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளும், மகாத்மாக்களும் நிரூபித்துள்ளனர். அவ்வகையில் உருத்திரபசுபதி நாயனார் உருத்திர ஜபம் செய்து இறைவனை அடைந்தார். உருத்திர ஜபம் செய்வது அவர் எடுத்துக்கொண்ட நியமம்.

நாயன்மார்களின் வரலாறு மானுடர்கள் முக்தியை அடைய பல வழிகளை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறெல்லாம் நாயன்மார்கள் முக்தியை அடைந்தனர் என்பதை நோக்கும்போது, பிள்ளைக் கறி சமைத்து சிவத்தொண்டு செய்தவரும் உண்டு; உடலை உருக்கி பேய் உரு எடுத்து இறைவனை அடைந்தவரும் உண்டு; கண்களைப் பிடுங்கி இறைவனுக்குச் சமர்ப்பித்து முக்தி அடைந்தவரும் உண்டு; இதைப் போல எத்தனையோ கதைகள் உண்டு. நமக்கு இக்கதைகள் ஒன்றைத்தான் உணர்த்துகின்றன. அது சிரத்தையோடும், அர்ப்பண உணர்வோடும், உண்மையோடும் செய்யும் எச்செயலும் இறைவனை அடையும் வழியாகும் என்பதே.

நமக்குத் தெரிந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் தவிர சமகாலத்திலும் சத்தியப் பாதையில் சிரத்தையோடு இறையனுபூதி பெற செயல்படும் சிரோன்மணிகள் நம் பாரதநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் சத்தியத் தேடலும், பக்தியின்பால் ஈடுபாடும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அப்பாதையில் செல்லும் போது, அப்பாதையில் சென்ற முன்னோரின் வரலாறு பல தடைகளைக் கடந்து போக நமக்கு உதவும். எனவே, நாயன்மார்களின் வரலாறும், ஆழ்வார்களின் வரலாறும், மேலும் பாரத நாட்டில் தோன்றிய ஞானிகளின் வரலாறும் தெரிந்து கொள்வது ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படையாக அமையும்.

உருத்திரம் என்பதன் விளக்கம்:  யஜுர்வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்தினுள் பதினோரு அநுவாகங்களை உடையது திருவுருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கிரமும், அதன் இடையில் சிகாரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாக்கிரமாகும். வேதத்தின் கண் திருவுருத்திரம்; கண்மணி திருஐந்தெழுத்து என்பார்கள். உருத்திரன் என்ற சொல் ‘துன்பத்தினின்றும் விடுவிப்பவர்’ என்ற பொருளைத் தருகிறது.

- ராஜேஸ்வரி ஜெயகுமார்
காண்க:


உருத்திர பசுபதியார் (விக்கி)

URUTTIRA  PASUPATHI NAYANAR (saivam.org)

உருத்திர பசுபதி நாயனார் (பேரூர் ஆதீனம்)

உருத்திர பசுபதி நாயனார் புராணம்

உருத்திர பசுபதி நாயனார் (தமிழ்க் களஞ்சியம்)

உருத்திர பசுபதியார் (தினமலர்)
 
திருத்தலையூர்

உருத்திர பசுபதி நாயனார் (பெரியபுராண சொற்பொழிவு)

உருத்திர பசுபதியார் (திண்ணை)

உருத்திர பசுபதியார் (ஆறுமுக நாவலர்)

11.10.11

நாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்


கே.பி.சுந்தராம்பாள்

(பிறப்பு: அக். 11)



கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.


நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும்.

‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

 
காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்....

முழு கட்டுரையைக் காண்க:  ஆம்பல்

 

காண்க:


கே.பி.சுந்தராம்பாள் (விக்கி)

K.B.SUNDARAMBAL


கொடுமுடிக்குயில்  (கீற்று)

கே..பி.எஸ். (ஈகரை)

நாடக உலகின் ராணி (மாலைமலர்)

கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் (நட்பு)

கே.பி.எஸ்.சை மாற்றிய மகாத்மா சந்திப்பு (தினமலர்)

கருணாநிதி வசனத்தை  எதிர்த்த கே.பி.எஸ் (முருகன்.org)

கானக்குயில் (தமிழ்நாட்டு தியாகிகள்)

கே.பி.எஸ் பாடல்கள் (ஒலி)

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம்


வால்மீகி முனிவர்
(வால்மீகி ஜெயந்தி: புரட்டாசி- 24-பௌர்ணமி)
(அக். 11)
அன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது.  பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.
”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்!  கவிச்சக்கரவர்த்தி கம்பன்  தமிழ் மொழியில் தனது  மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது.
மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும்,  தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை.  பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.
கம்பராமாயணத்தின்  பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது -
வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே
(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)
இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது.  இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.
இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும்  வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது.
நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!
- ஜடாயு
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
 காண்க:

ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி


ஜெயப்பிரகாஷ் நாராயணன் 
(பிறப்பு: 1902, அக். 11 -  மறைவு: 1979, அக். 8)

'லோக்நாயக்என்பரால் மக்கள் தலைவர் என்று பொருள் .  இவ்வாறு அழைக்கப்படும்  பெருமைக்குரியவர்பீகாரில் பிறந்த விடுதலை வீரரும்,   நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின்  ஜனநாயகத்தைக்  காத்தவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.   

இந்தியாவில் 'சோஷலிசம்'  எனப்படும் சமதர்மக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் மூலவர் இவரே. 'முழுப் புரட்சி' என்ற சொல்லின்  பிதாவும் இவரே. வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கம் பரவலாக இவரது பணிகள் பெரும்பங்கு வகித்தன.

பிறப்பும் கல்வியும்:

பிகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் காயஸ்த ஜாதியைச் சார்ந்த  அரசு ஊழியர் ஒருவரது குடும்பத்தில்1902, அக். 11-ல் பிறந்தார்இவரது தாயின் பெயர் புல்ராணி தேவி. இவரது தந்தை ஹர்ஸ்தயாள் மாநில அரசு ஊழியராக இருந்ததால் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவராக இருந்தார். எனவே ஜெயப்பிரகாஷ் தனது பாட்டியுடன் சென்று ஆரம்பக்கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்விக்கு பாட்னா சென்றார்.

படிப்பில் சுட்டியாக விளங்கிய ஜெயப்பிரகாஷ், அந்நாளிலேயே 'பீகாரில் தற்போது ஹிந்தியின்  நிலைமை' என்ற கட்டுரை எழுதி பரிசு பெற்றார். பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். எனினும் விடுதலைப்போரில் ஆர்வம் கொண்டிருந்த அவரால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி ஆங்கிலேயர் நிதியுதவியால்  நடத்தப்பட்டது என்பதால், இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார் ஜெயப்பிரகாஷ் அப்போதுதான், அங்கு தான் பாபு ராஜேந்திர பிரசாத்தின் (நமது நாட்டின் முதல் ஜனாதிபதி) தொடர்பு ஜெயப்பிரகாஷுக்கு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.

ஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப்பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே படித்துவிட்டார். அந்தக்கால நவீன இளைஞர்கள் போலவே அவரும் மேலைநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திவந்த மார்க்ஸிசம் தத்துவம் மீது மோகம் கொண்டார். இந்த உலகின் அனைத்து செல்வ வளமும்  எல்லோருக்கும் பொதுவானது  என்ற கார்ல்மார்க்ஸின் முழக்கம் ஜெயப்பிரகாஷை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி இந்தியா அரசியலில் நுழைந்த சமயம் அது. அவரது அறைகூவலை ஏற்று நாடே ஒத்துழையாமை இயக்கத்தில் (1919) குதித்தது. ஜெயப்பிரகாஷும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அடக்குமுறை சட்டமான ரௌலட்   சட்டத்தை எதிர்த்து நடந்த இந்தப்போராட்டம் நாட்டில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதே காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷுக்கு திருமணம் நடந்தது. அவரது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்பவரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தீயவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. 1922 -ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஜெயப்பிரகாஷ் முடிவெடுத்தார். அப்போது அவருடன் வெளிநாடு செல்ல மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார் பிரபாவதி. அங்கு கச்துரிபா காந்தியின் மகளாகவே அவர் உடன் வாழ்ந்தார்.

வெளிநாட்டுப் பயணமும் கம்யூனிச மோகமும்:

அமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல சிறிய வேலைகள் செய்து  சம்பாதித்துக் கொண்டே மேற்படிப்பு படித்தார்.  ஹோட்டல் தொழிலாளியாகவும் கூட அவர் வேலை செய்திருக்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே விஸ்கான்சின் பல்கலையில் சமூகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதுகாரல்மார்க்ஸின் 'மூலதனம்நோல்லின் மூன்று பெரும் பாகங்களையும் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் படித்து முடித்தபின், சோவியத் ரஷ்யாவில் முனைவர் படிப்பு படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக இந்தியா (1929) திரும்ப நேர்ந்தது.

நாடு திரும்பிய ஜெயப்பிரகாஷுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அவர் காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழா விரும்பியதை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ். அவரது உள்ளம் முழுவதும் சோஷலிசக் கொள்கைகள் தீவிரமாகி இருந்த சமயம் அது. ஆயினும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை  அவரால் ஏற்க முடியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை இந்தியாவில் கட்டி  எழுப்பிய எம்.என்.ராயின்  பல ஆக்கங்களை படித்த அவர்தேசிய நீரோட்டத்துடன்  இணைய  முடியாமல்  கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நிற்பதை விமர்சித்தார்.   விடுதலைப்போரில்  முன்னிற்கும்  காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே சமயம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை  ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.  

விடுதலைப்போரில் அதிதீவிரம்:

காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்துவந்த ஜெயப்பிரகாஷுக்கு கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பப்ட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது, ஆனால் காலம் அதற்கு முரணாக இருந்தது. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ல் தனது தலைமைப்பண்பை அவர் வெளிப்படுத்த அறிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த ஆண்டு காங்கிரஸ் அறிவித்த சட்டமறுப்பு இயக்கம் அரசை சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்தபப்டி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடர்வதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த அரசு, இறுதியில் 'காங்கிரஸ் போராட்டத்தின் மூளை' ஜெயப்பிரகாஷ் என்று கண்டறிந்துசென்னையில்  இருந்த அவரை அதே ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. அவர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாசிக் சிறைவாசம்  தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வாகும். அமெரிக்கா சென்று படித்தபோது இடதுசாரி சிந்தனைக்கு ஆளானது போலவே, நாசிக் சிறையில் உடனிருந்த தோழர்களுடனான விவாதம் காரணமாக இந்திய அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.

நாசிக் சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தாமினு மசானிஅச்யுத் பட்வர்த்தன்யூசுப் தேசாய்  போன்ற சக சிறைவாசிகளுடன்  வாத பிரதிவாதங்களில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷுக்கு சோஷலிசம் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், ஒத்த சிந்தனையுள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து (1934) காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேதிரதேவும், செயலாளராக ஜெயப்பிரகாஷும் தேர்வு செய்யப்பட்டனர்காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷலிசம் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது. எனினும் இக்கட்சி, தேர்தல் அரசியலுக்கு ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சமதர்மக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும், இரு இயக்கங்களின் அடிப்படையான சமதர்ம சமுதாயம், விடுதலைப்போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியை அமைக்க ஜெயப்பிரகாஷால் இயன்றது. இக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும் பேரிடம் வகிப்பது கண்கூடு.

புரட்சியாளராக மாற்றம்:

இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது (1939) காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து பேதங்கள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும்  ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல்  ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்ப்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாஷின்  எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்பதே ஜெயப்பிரகாஷின் கருத்து. ஆனால் காந்தியின் கருத்து வேறாக இருந்தது. எனினும் காந்தி ஜெயப்பிரகாஷை மதித்தார்.

இந்நிலையில்ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் தான் காந்தி- நேதாஜி மோதல் முற்றி நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார். 9  மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து மீண்ட ஜெயப்பிரகாஷ் இவ்விருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். ஆனால், பலன் கிட்டவில்லைஅதன்பிறகு (1942) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி துவக்கினார். நேதாஜி காங்கிரசிலிருந்து முற்றிலும் வெளியேறி தனி புரட்சிப்பாதை அமைத்தது தனி வரலாறு.

இதனிடையே ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தில்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆயுதப்போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் கடிதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆயுதப்போருக்கு மக்களைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ''ஆயுதப்போருக்கு இந்தியா தலைவர் ஒருவர் ஆயத்தமாகிறார் என்றால், அதற்கு ஆங்கிலேய அரசின் கீழ்த்தரமான அடக்குமுறை  ஆட்சியே காரணம்'' என்றார்.

பிறகு காந்தி அறிவித்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5  தோழர்களுடன் சிறைச்சுவரை சுரண்டி ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷர், 'ஆசாத் தாஸ்தா' எனப்படும் விடுதைப்படையைத் திரட்ட முயன்றார். எனினும் ரயிலில் பஞ்சாப் செல்லும்போது 1943, செப்டம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பரில் இவர் அதிமுக்கியமான அரசாங்கக்  கைதி என்று அறிவிக்கப்பட்டார். லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷரை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது.  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதன் விளைவாக 1945, ஜனவரியில்  - ல் 16  மாதங்கள் கழிந்த நிலையில் ஜெயப்பிரகாஷர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைப்போரின் இறுதி கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலம் அது. அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷரையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி நிபந்தனையிட்டார். அதன்படி இருவரும் 1946, ஏப்ரலில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது. 'இந்திய  இளைஞர் இதயங்களின் மன்னன்' என்று ஜெயப்பிரகாஷ் புகழப்பட்டார்.

கட்டமைப்புப் பணியில் ஈடுபாடு:

அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சுயநலமிகளால் சோஷலிச கட்சியினர் புறக்கணிக்கப்பட்டனர். தேசப்பிரிவினை கட்டாயமானது என்றே சோஷலிசக் கட்சியினர் கருதினர். இதுபோன்ற கருத்து வேற்றுமைகளால் காங்கிரஸ் தலைமையிலான விடுதலைபோரட்ட மைய நீரோட்டத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிசக் கட்சியினர் விலகினர். பிற்பாடு தேசம் பிரிவினை செய்யப்பட்டபோது (1947)  நிகழ்ந்த சோகங்கள் சோஷலிசக் கட்சியினரையே அதிரவைத்தன.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிஷ கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து 'பிரஜா சோஷலிஸ்ட்கட்சியைத் துவக்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவஹர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க  அடிப்படையிலான சோஷலிசக் கனவினை  ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நேரு தலைமயிலான காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளமாக சோஷலிஸ்ட்கள் செயல்பட்டனர்.

1954 -ல் ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூதான  இயக்கத்துக்கும்  ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயப்பிரகாஷர்ஹசாரிபாகில் அதற்கென ஓர்  ஆசிரமத்தை நிறுவினார்கிராமங்களை  முன்னேற்றுவதே  தனது நோக்கம் என்று அவர் அறிவித்தார்இந்நிலையில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன்  சித்தாந்தம் தொடர்பான  கருத்து வேறுபாடுகளால் 1957 -ல்   அக்கட்சியிலிருந்து ஜெயப்பிரகாஷர் விலகினார். அதன்பிறகு நேரடி  அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் ஈடுபட்டார்.

1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

முழுப்புரட்சியும் நெருக்கடி நிலையும்:

1970 -களில் பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள பிரதானமான அரசியல் தலைவர்கள் பலர் (முலாயம் சிங்,  லாலு, நரேந்திர மோடி உள்பட பலர்)  அந்தக் காலத்ததில் வார்க்கப்பட்டவர்களே.

முழுப்புரட்சி இயக்கத்துக்காக  ஜனநாயகம் வேண்டும் குடிமக்கள்  (1974), மக்கள் குடியுரிமைகளுக்கான  மக்கள் கூட்டமைப்பு (1976) என்ற அரசு சாரா அமைப்புகளை தோற்றுவித்தார். அதே காலகட்டத்தில், தனது பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நெருக்கடி நிலை அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டின் (25.06.1975) மீது ஏவப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில், ஜெயப்பிரகாஷரும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். நாடு முழுவதும் கொந்தளித்த  நிலையில், அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.

நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் குறித்து மட்டுமே தனி ஒரு அத்தியாயம் எழுதப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷரின் பங்கு அளப்பரியது. பல்வேறு சித்தாந்த வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரசம் சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடத்சாரிகள் அல்லாத கட்சிகள இந்திரா காந்தியின் அடுக்குமோரை ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடுத்தினார் ஜெயப்பிரகாஷர். அதன் விளைவாக ஜனதா கட்சி மலர்ந்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய தலைமறைவுப் போராட்டமும் ஜெயப்பிரகாஷர் ஆசியுடன் நடைபெற்றது.

நெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளால் மிரண்ட இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். அந்தத் தேர்தல் தான் ஜனநாயகத்தை நாட்டுக்கு மீட்டுத் தந்த தேர்தல். நெருக்கடி நிலைக் காலத்திலேயே எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய ஜெயப்பிரகாஷர் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசியலுக்கு சவாலானார். இந்தத் தேர்தலில் ஜெயப்பிரகாஷர் வகுத்த வியூகம் வென்றது. இந்திரா காந்தி தோல்வியுற்றார்; ஜனநாயகம் மீட்கப்பட்டது; ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமர் (24.03.1977) ஆனார். அதன் பிறகு ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷருக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது.

ஆட்சியை மாற்றியபோதும் பதவியை நாடாத அந்த உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவது குறித்து சிந்தித்த அந்த தவயோகி,  தனது  ஒப்பற்ற தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட அந்த மாவீரர், நாட்டுநலனே  உயிர்மூச்செனக் கொண்ட  அந்த லோக்நாயகர்  உடல்நலக்குறைவால் 1979, அக். 8-ல் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவருக்கு பாரத நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' 1998 -ல் வழகப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் 'இந்திய  மனங்களின் மனசாட்சி' என்று வர்ணிக்கப்படுகிறார். அவர் ஒருபோதும் அதிகார அரசியலை நாடவில்லை. 1977-ல் அதிகாரவர்க்கமே அவர் முன் மண்டியிட்டபோதும் அவர் ஒரு சித்தராக, தபஸ்வியாக வாழ்ந்து மறைந்தார். அவரது வாழ்க்கை நமக்கு என்றும் வற்றாத ஆற்றலை வழங்கும் ஜீவநதியாகும்.   நாட்டில் ஊழல் மலிந்த இன்றைய சூழலில் ஜே.பி. குறித்த நினைவுகளே நமக்கு ஒரே நம்பிக்கையூற்றாகும்.

-குழலேந்தி

காண்க:









.