நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.9.12

தில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு வாழ்த்து!



தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து செப். 15, 16 தேதிகளில் புதுடில்லியில் நடத்திவரும் அகில  இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டுக்கு தேசிய சிந்தனைக் கழகம் அனுப்பிய வாழ்த்து:
14.09.2012

பெருமதிப்பிற்குரிய தினமணி ஆசிரியர்
        திரு. கே. வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கு,

வணக்கம்! 

தில்லி தமிழ்ச் சங்கத்துடன்  இணைந்து அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின்  மாநாட்டை  புதுதில்லியில் 'தினமணி' நடத்துவது குறித்து அறிந்து மகிழ்ந்தேன். ஓர் அற்புதமான நற்பணிக்கு தாங்கள் பிள்ளையார் சுழி இட்டிருக்கிறீர்கள். தமிழ் அமைப்புகள் அரசியல் காரணங்களால் பலவாறாகப் பிரிந்துள்ள சூழலில், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சிந்தனையே மிகவும் போற்றத் தக்கது. அதற்கு தமிழின் அடையாளமாக விளங்கும் 'தினமணி' நாளிதழ் கால்கோள் இடுவது சிறப்பு  மட்டுமல்ல பொருத்தமானதும் கூட.

பல்லாயிரம் ஆண்டு பாரம்பரிய  இலக்கியமும், நவீன இலக்கிய வீச்சும் கொண்ட,  முன்னைப்  பழமைக்கும் முன்னைப் பழமையான,  பின்னைப் புதுமைக்கும் புத்திளமை கொழிக்கின்ற  தமிழ்த் தாய்  புகழ் பாடவும், உலகு தழுவிய தமிழர்கள் நலம் காக்க ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவும், இன்றைய காலகட்டத்தில் நம்மிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. அதை இலக்கிய அமைப்புகளால் தான் சாதிக்க இயலும். அந்தக் கண்ணோட்டத்துடன் தான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். தங்கள் முயற்சி வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த அரும்பணியில் தங்களுடன் இணைந்துள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. எம்.என்.கிருஷ்ணமணி, பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வந்தனங்கள்.  இம்மாநாடு  சிறப்புற நடந்தேற  'தேசிய சிந்தனைக் கழகம்' சார்பில் வாழ்த்துகிறோம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத  மணித்திருநாடு!
வந்தேமாதரம்!


என,
ம.கொ.சி.ராஜேந்திரன்.
மாநில அமைப்பாளர்,
தேசிய சிந்தனைக்கழகம், தமிழ்நாடு.

காண்க:

தில்லி தமிழ் மாநாட்டில் அப்துல் கலாம் பேச்சு

14.9.12

இளைஞர்களை அழைக்கிறார் விவேகானந்தர்

சிகாகோ சர்வமத சபையில் பெரியோர்களுடன் சுவாமி விவேகானந்தர் 


செப்டம்பர் 11, 1893 - சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய நாள்.

இன்று (செப்டம்பர் 11) நினைவு தினம் காணும் பாரதியார் "இளைய பாரதத்தினாய் வா வா வா'' என்று முழங்கினாரே, அது பாரதியாரின் முழக்கம் மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தரின் முழக்கமும்தான். ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி கொண்ட நெஞ்சோடும் எதையும் சாதிக்கவல்ல இளைஞர்களை உருவாக்குவதே விவேகானந்தரது லட்சியம். அவரது வாழ்வும் போதனைகளும் பெரிதும் இளைஞர்களுக்கான செய்தியையே தாங்கியுள்ளது.

சிகாகோவில், "அமெரிக்க சகோதர, சகோதரிகளே'' என்று தன் உரையை அவர் ஆரம்பித்தபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கக் காரணம் என்ன? அந்த வாக்கியம் செய்த மாயமா - அது அல்ல! அந்த வாக்கியத்தை உச்சரித்த பெருமகன் உளப்பூர்வமாக அதைச் சொன்னதால் விளைந்த மாயம் அது.  

அமெரிக்கா செல்வதற்கு ஒரு துறவிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? அவர்மேல் மட்டற்ற மதிப்புக் கொண்ட பலர் அந்தத் தொகையைச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதில் நம் சென்னைக்குப் பெரும் பங்குண்டு. விவேகானந்தருக்கு உதவும் பேறு பெற்றவர்களில் சென்னையைச் சார்ந்த அளசிங்கப் பெருமாள் உள்ளிட்ட பலர் தலையாய இடம் வகித்தார்கள்.

'சென்னை தினம்' கொண்டாடுகிறோமே, சென்னையின் பெருமைகளில் மாபெரும் பெருமை எது தெரியுமா? விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே, அவர் சிகாகோ உரை மூலம் பெரும்புகழ் பெறுவதற்கும் முன்பே அவரை இனங்கண்டு போற்றியது சென்னையே என்பதுதான். அதுமட்டுமா, அவரது அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றியாக முடிந்து அவர் இந்தியா திரும்பியபோது சென்னை மக்கள்தான் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துவந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

விவேகானந்தரது போதனைகள் விவாதபூர்வமாக இளைஞர்கள் ஏற்கும் வகையில் நிறுவப்பட்டவை; உரத்துச் சிந்திக்கும் இன்றைய அறிவாற்றல் நிறைந்த நவீன இளைஞர்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தவை.

அவர் 'இதைச் செய், அதைச் செய்யாதே' என்றெல்லாம் நேரடியாக உபதேசிப்பதில்லை. ஆனால் தர்க்க நியாயங்களோடு வாதிடும் தனது அபாரமான சொல்லாற்றல் காரணமாக, தம் எழுத்தைப் படிக்கும் இளைஞர் மனத்தில் தான் சொல்ல விரும்பும் கருத்து தானாக எழுமாறு செய்யும் வல்லமை அவருடையது.

"இளைஞனே, நீ கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இப்போதைய வருந்தத்தக்க நிலைக்கு வந்திருக்கிறாய் என்று வைத்துக்கொள். அது எவ்வளவு சரியானது, அது ஒரு வாழ்க்கை விதி அல்லவா? அதை கவனமாகக் கண்டுணர்ந்து புரிந்துகொள்வாயாக. கடந்த காலத் தவறுகள் காரணமாக நிகழ்காலத்தில் உனக்கு இந்த அவல நிலை வருமானால், அந்த விதியிலேயே நீ நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்கள் காரணமாக எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை அடையமுடியும் என்ற உண்மையும் பொதிந்துள்ளதே, அதுகுறித்து நீ பெரும் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும்? இன்றிலிருந்து எதிர்காலம் சிறப்பாகும் வகையில் செயல்கள் செய்யத் தொடங்கு, நீ விரும்பும் எதிர்காலத்தை அடைவாய்''.

 இதைவிட அழகாக வேறு யாராலாவது வாழ்வின் விதியைக் கற்றுத்தர இயலுமா? ஒருபுறம் குளம். மறுபுறம் உயரமான சுவர். வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர். பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தார். பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தன. இப்போது என்ன செய்வது?

குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார். குரங்குகள் அவரை விடுவதாக இல்லை. அவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தின. திடீரென்று ஒரு குரல் கேட்டது. முன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது. பின்னால் திரும்பி நிலைமையைக் கவனித்துவிட்ட அவர் குரல் கொடுத்தார்.  

"குரங்குகளைக் கண்டு ஓடாதே, எதிர்த்து நில்; உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்?''

விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார். குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர். அவை அவரைத் தொடரவில்லை. அச்சத்தோடு தயங்கி நின்றன. மெல்லப் பின்வாங்கின. பிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.

விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனே, அந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளே; சோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.

தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும். சோதனைகளைக் கண்டு அஞ்சாதே. சோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''

விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார். 'நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் அல்லவா? இளைஞர்களைக் கால்பந்து விளையாடச் சொல்லும் அவர், தம் கல்லூரிக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில், வெற்றிப் பரிசாக ஒரு வெள்ளி பட்டுப்பூச்சி பொம்மையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன. இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

-திருப்பூர் கிருஷ்ணன் 
நன்றி: தினமணி (11.09.2012)

காண்க: 



.

13.9.12

'பால்காரர்' காட்டிய பாதை...


வர்கீஸ் குரியன்
(26, நவம்பர்  1921 - 9, செப்டம்பர் 2012)


இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.

விவசாயமே தொழில். அப்பகுதியில் 'ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.

'பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், ""வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே.

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது.

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் - அமுல்) "அமுல்'' என்கிற மந்திரச் சொல் ஆனது.

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனிசெஃப்' அமைப்பு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது.

"பசியிலிருந்து விடுதலை'' என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன்.

1946-ல் கூட்டுறவு ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது முதல் 1973 ஜூலை மாதம் தானாக முன்வந்து ஒய்வுபெற்றது வரை திருபுவன்தாஸ் படேல் 'அமுல்' தலைவராக மட்டுமல்லாமல், ஒரு கர்மவீரராக, கெய்ரா மாவட்ட ஒன்றியத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

உலகின் கவனத்தை 'அமுல்' ஈர்க்கும் வகையில், 1949 முதல் சில ஆண்டுகள் முன்வரை, பால் கூட்டுறவு இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாக்டர் வர்கிஸ் குரியன்.

சர்வதேச அளவில் 'பால் வளத்துறை நிபுணர்' என்ற அங்கீகாரம், மகஸúஸ, பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான்.

இவர் பின்னணி இதுதான்: கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921 நவம்பர் 26-ல் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார். மத்திய அரசின் 'ஸ்காலர்ஷிப்' உதவியுடன், அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பொறியியல் பட்டம் பெற்றார். இவர் விரும்பிக் கேட்டிருந்தது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு; கிடைத்ததோ, பால்வளத்துறை பொறியியல் - கிடைத்ததை ஏற்றார்.

அமெரிக்க மேல்படிப்புக்குப்பின் நாடு திரும்பிய குரியன் ஆனந்திலுள்ள மத்திய அரசு பால் பண்ணை ஆய்வகத்தில் பொறியாளராக 1949-ல் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மூடப்படும் நிலையில் இருந்த அந்த அலுவலகம், சில மாதங்களிலேயே மூடப்பட்டது.

மத்திய அரசு பண உதவியுடன் வெளிநாட்டில் படித்தார் என்பதால், அரசுப் பணியில் சில வருடங்கள் தொடர வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதற்கிடையே திருபுவன்தாஸýக்கும், குரியனுக்கும் ஆனந்தில் பரிச்சயம் ஏற்பட்டது. குரியன், கெய்ரா கூட்டுறவு அமைப்பில் தொடர வேண்டும் என்று திருபுவன்தாஸ் விரும்பினார். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. கெய்ரா மாவட்டம் சர்தார் படேலின் தொகுதியும்கூட.

கெய்ரா பகுதியில், 'பால்ஸன்' என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்து பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்கு பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தீவிரமாக முயன்றார்.

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகை பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த 'கிளாங்கோ', 'ஆஸ்டர் மில்க்' போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் 'குழந்தை உணவுப் பெüடர்கள்' இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன.

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது.

இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை.

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது.

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது.

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான "பிராண்டு' பெயர்களில் "அமுல்' ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று "குரியன் மாடலை'ப் பின்பற்றுகின்றன.

இத்தனை சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் வர்கிஸ் குரியன் 9-9-2012-ல் காலமானார். வெண்மைப் புரட்சியின் தந்தை மறைந்துவிட்டார். நண்பர்களாலும், பத்திரிகைகளாலும் செல்லமாக, 'பால்காரர்'' என்றழைக்கப்படும் குரியன் மறைந்தாலும் அவர் காட்டிய பாதை கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.

குரியன் அடிக்கடி கூறி வந்தார். "நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!'' கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! பல நாடுகள் குரியன் மாடலைப் பின்பற்ற முடியுமானால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே? நோய்வாய்ப்பட்டிருக்கும் கூட்டுறவு இயக்கம் - புத்துயிர்பெற அவர் காட்டிய பாதை உதவட்டும்!

- எஸ். கோபாலகிருஷ்ணன்

நன்றி: தினமணி  (13.09.2012)


Verghese Kurien (wiki)


11.9.12

மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை

 
சரித்திரம் 
மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு. ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய 'முப்பெரும் பாடல்கள்' உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவருடைய உயிரைக் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.

 'இந்தியா' பத்திரிகையைத் தொடங்கி சென்னையில் நடத்திய மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தனது பத்திரிகையை புதுச்சேரிக்கே கொண்டு சென்று, அதன் மூலம் பாரதியின் குரல் உலகம் முழுவதும் கேட்கும்படி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது. அவர் குறிப்பறிந்து உதவ பல உத்தமர்கள் கிடைத்தார்கள். ஆகையால், பாரதி புதுவைக்குக் குடியேறியது அவர் வாழ்வில் மறக்க முடியாத, முக்கியமான சம்பவமாக அமைந்துவிட்டது.

 மகாகவி பாரதி சென்னையில் சுதேசமித்திரனில் பணிக்கு அமர்ந்து பின்னர் அங்கிருந்து மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய "இந்தியா' பத்திரிகையில் பணிபுரிந்த சமயம் அது.

 "இந்தியா' பத்திரிகைக்கு ஆசிரியர் பணி முழுவதையும் பாரதியே செய்து வந்தார். என்றாலும் என்.ஸ்ரீநிவாசன் என்பவர் பெயர்தான் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் பத்திரிகை முதலாளியுடைய உறவினர். 1908-ஆம் வருஷம் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் ஆங்கில அரசின் கோபத்தைக் கிளறுவதாக அமைந்திருந்தன. ஆகவே அரசாங்கம் 'இந்தியா' பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய உத்தரவிட்டது. சந்தர்ப்பங்கள் அதன் 'ஆசிரியர்' என்று குறிப்பிட்டிருந்த ஸ்ரீநிவாசனின் கைதில் போய் முடிந்தது.

 உண்மையில் அரசாங்கம் கைது செய்ய நினைத்தது பாரதியாரைத்தான். அன்று நடந்தது என்னவென்றால் அலுவலக நேரம் முடிந்து பாரதி வீட்டுக்குச் செல்ல மாடிப்படி இறங்கி வந்தார். அப்போது வாயிலில் சிலர் வந்து 'ஆசிரியர் இருக்கிறாரா?' என்றனர். ஸ்ரீநிவாசனைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பாரதி 'அவர் மாடியில் இருக்கிறார்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வந்தவர்கள் சாதாரண உடையில் வந்த போலீசார். ஆசிரியரின் கைது இப்படித்தான் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியைச் சிலர் வேறு விதமாகக் கதை திரித்தும் விட்டனர்.

 ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அரசு தேடுவதோ பாரதியாரை என்று அறிந்துகொண்ட அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் உள்பட பலர் பாரதியார் கைது செய்யப்பட்டுவிட்டால் சிறைக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது என்பதை உணர்ந்தார்கள். பாரதியாருக்கு மிகவும் வேண்டியவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் படும் கஷ்டங்களை பாரதி மட்டுமல்ல, நண்பர்களும் அறிந்தே இருந்தார்கள். ஆனாலும் அந்தச் சிறைக் கொடுமைகளுக்குப் பாரதி பயப்படவில்லை. ஆனால், நண்பர்கள் மன வருத்தம் அடைந்தார்கள்.

 "பாரதி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் இருந்து தாக்குப்பிடிக்கக் கூடியவர். வயிறு நிரம்ப உணவு உண்ணும் பழக்கமும் அவரிடம் கிடையாது. கிடைத்தால் உண்பார், இல்லையேல், பட்டினியாகப் படுத்து உறங்கி விடுவார். எந்தச் செயற்கையான கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காதவர் பாரதி''. இப்படித் தன்னுடைய கட்டுரையொன்றில் கூறுபவர் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார்.

 பாரதியின் நண்பர்களான வக்கீல் துரைசாமி ஐயர் முதலானோர், பாரதியால் சிறைக் கொடுமைகளைத் தாங்க முடியுமா, அவர் ஒரு சுதந்திரப் பறவையாயிற்றே? அவரைப்போய் ஒரு கூண்டில் அடைத்தால் அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா? அங்கு சட்டதிட்டங்கள் மிகக் கடுமையானவைகளாக இருக்குமே? அவர்கள் கொடுக்கும் உடல் உழைப்பைக் கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்று வற்புறுத்துவார்களே, அவற்றை இவரால் செய்ய முடியுமா என்றெல்லாம் கவலைப்பட்டார்கள்.

 நண்பர்கள் பாரதியை வற்புறுத்தினார்கள். "பாரதி, உனக்காக இல்லாவிட்டாலும், உன் குடும்பத்தின் நலனுக்காக யோசித்துப் பார். நீ சிறையில் அடைபட்டு வருந்துவதனால் என்ன ஆகிவிடப் போகிறது. உன் எழுத்துகள் முடக்கப்படும். உன் குடும்பத்தார் சிரமங்களுக்கு ஆளாவார்கள். சிறைக்கொடுமை உன் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலுள்ள சென்னையிலிருந்து, பிரெஞ்சு ஆதிக்கத்திலுள்ள புதுச்சேரிக்கு நீ போய்விடுவாயானால், அங்கு உனக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க முடியும். நீயும் சுதந்திரப் பறவையாக இருந்து எழுதிக்கொண்டு, சுதந்திர வேள்வியில் உன் பங்கைச் செலுத்த முடியும். நாடும் மக்களும் பயன்பெறுவர், என்ன சொல்கிறாய்? உடனே புறப்படு" என்று சொல்லி அவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு பாரதியை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அழைத்துச்சென்று புதுச்சேரிக்கு ரயிலேற்றி அனுப்பி வைத்தார் துரைசாமி ஐயர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள்.

 புதுச்சேரி சென்றடைந்த பாரதியின் கையில் நண்பர் ஒருவர் "சிட்டி குப்புசாமி ஐயங்கார்' என்பவருக்குக் கொடுத்திருந்த அறிமுகக் கடிதம் ஒன்றுதான் இருந்தது. எங்கு செல்வது? எங்கு தங்குவது? பிழைப்புக்கு என்ன வழி என்றெல்லாம் குழப்பம் நிலவியது பாரதியின் மனத்தில். புதுச்சேரி ஊரும் பாரதிக்குப் புதிது. கடன் வாங்கிவிட்டுத் திரும்பக்கொடுக்க முடியாதவர்கள் தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கப் பயன்பட்ட ஊர்தான் புதுச்சேரி என்று ஒரு செய்தி உண்டு. அவர் அப்படியெல்லாம் கடன் வாங்கித் தலைமறைவாக வந்தவர் இல்லையே? இந்த பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எழுதிய குற்றத்துக்காக சிறையில் தள்ள நினைப்பவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பியல்லவா இங்கு வர நேர்ந்தது. ஆனால், பாரதி அங்கு சென்ற நேரமோ என்னவோ, கடன் வாங்கியோரின் புகலிடம் எனும் கெட்ட பெயர் புதுச்சேரிக்கு மாறிப் போய்விட்டது.  இந்திய தேசபக்தர்களின் புகலிடம் என்ற நல்ல பெயர் கிடைத்து விட்டது.

 பாரதி சென்ற பிறகல்லவா மகான் அரவிந்தர் அங்கு வந்தார். வ.வெ.சு.ஐயர் வந்தார், நெல்லை மாடசாமி பிள்ளை வந்தார். இப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் இவர்களைப் பார்ப்பதற்காக வந்து செல்லும் இடமாக அல்லவா புதுச்சேரி மாறிவிட்டது. இந்திய சுதந்திரத்துக்கு உதவிசெய்த சிறப்பும் இவ்வூருக்கு ஏற்பட்டுவிட்டது.

 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்றுவிட்டார் என்கிற செய்தி சென்னையிலிருந்த ஆங்கில அரசாங்கத்தின் போலீசாருக்குச் சில நாள்கள் கழிந்த பின்னர்தான் தெரியவந்தது. ஆனால், நீதிமன்றத்தில் 'இந்தியா' ஆசிரியர் மீது வழக்கு நடந்து கொண்டிருந்தபோதும், அவர் புதுச்சேரி சென்றுவிட்டார் என்ற செய்தியை போலீஸôர் மறைத்துவிட்டார்கள். ஏன் தெரியுமா? ஆங்கில அரசாங்கப் போலீஸிடமிருந்து தப்பிக்க இப்படியொரு வழி இருக்கிறதென்று எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களும் தெரிந்து கொண்டுவிட்டால் பின்னர் ஆபத்து அல்லவா அதனால்தான்.

 பாரதி, பெயர் தெரியாத பேர்வழி அல்லவே. அவரைத் தமிழகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறதே. செய்தி வெளிவராமல் இருக்குமா? மக்களுக்கும் தெரிந்துவிட்டது. பிரிட்டிஷ் போலீஸôரின் கைது நடவடிக்கையிலிருந்து பாரதி தப்பிப் புதுச்சேரி சென்றுவிட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொண்டு விட்டனர்.

 பாரதியார் புதுச்சேரி சென்றடைந்து அறிமுகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிட்டி குப்புசாமி ஐயங்கார் வீட்டை விசாரித்துக்கொண்டு அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு சென்றடைந்ததும் பயணக் களைப்பு போகும்வரை அங்கு தூங்கினார். அவர் வீட்டில் இரண்டு நாள்கள் கழித்தார். எப்படியும் சென்னைப் போலீசார் தன்னைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுபோக புதுச்சேரி வருவார்கள் என்ற நினைவும் பாரதிக்கு இருந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சென்னைப் போலீஸôரின் வேவுபார்ப்பவர்கள் புதுவைக்கு வந்து இவரை நோட்டமிடத் தொடங்கினார்கள்.

 பாரதியாரையும் மற்ற தேசபக்தர்களையும் வேவு பார்ப்பதற்காகவே சென்னை மாகாண சர்க்கர் ஒரு வேவுகாரப் படையை புதுச்சேரியில் அமைத்திருந்தார்கள். இந்த வேவுப் படையினரால் பாரதி பட்ட தொல்லைகள் ஏராளம். பலவிதமான வேடங்களைத் தரித்துக் கொண்டு வருவார்கள். நல்லவர்கள்போல நடிப்பார்கள். இவர் வாயைக் கிளறி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்ப்பார்கள். இவர்கள் எல்லோரையும் பாரதி விழுங்கி ஏப்பமிட்டுவிட்டார் என்று சொல்லலாம். இவர்கள் விரித்த வலையில் பாரதி சிக்கவேயில்லை.

 பாரதியைத் தங்க வைத்திருந்த சிட்டி குப்புசாமி ஐயங்காரை உளவுக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. அவரை அச்சுறுத்திப் பார்த்தார்கள். 'பாரதி ஒரு பயங்கரவாதி, அவருக்கு இடம் கொடுத்தால் ஐயங்காரும் சிறைக்குச் செல்ல நேரிடும்' என்றெல்லாம் சொல்லி மிரட்டினார்கள். பிரெஞ்சு போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய கையாள்களாக இருந்துகொண்டு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

 குப்புசாமி ஐயங்கார் அரசியல் அறிந்தவருமல்ல, பெரும் செல்வந்தருமல்ல. அவர் ஒரு வியாபாரியிடம் கணக்கு எழுதிக் கொண்டிருந்தவர். அவரைப்பற்றி மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் சொல்கிறார்: "அவர் சங்கீதத்தில் ஞானமுள்ளவர், நன்றாகப் பாடவும் செய்வார். வைதீக ஆசாரசீலர். அவருக்குத் தமிழ் தவிர, பிரெஞ்சு மொழியும், ஆங்கிலமும் தெரியும். பயந்த சுபாவம் உடையவர். போலீஸ் என்று சொன்னால் பயம்''.

 அப்படிப்பட்டவரிடம் ஆங்கில, பிரெஞ்சு போலீசார் போய் மிரட்டினால் பாவம் அவர் என்ன செய்வார்? நமக்கு ஏன் இந்த வம்பு என்று மிரண்டு போய்விட்டார். அவரிடம் போலீசார், "பாரதியை எப்படித் தெரியும்? அவரை ஏன் வீட்டில் தங்க வைத்திருக்கிறீர்?'' என்று மிரட்டியதில் அவர் பாரதியைத் தனக்குத் தெரியாதென்றும், ஒரு நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை வீட்டில் தங்க வைத்ததாகவும் சொல்லிவிட்டார்.

 'பாரதியார் ஆங்கில சர்க்காருக்கு எதிரானவர். சென்னையில் புரட்சியைத் தூண்டிவிட்டுவிட்டு இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட புரட்சிக்காரருக்கு இடம் கொடுத்தால் உமக்குத்தான் வம்பு. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவரை உடனடியாக வெளியே அனுப்பிவிடுவது நல்லது' என்று யோசனை சொன்னார்கள். குப்புசாமி ஐயங்காருக்கு தர்ம சங்கடம். பாரதியாரோ மரியாதைக்குரியவர். தகுந்த அறிமுகத்துடன் வந்திருப்பவர். வெளியே போகச்சொன்னால் எங்கே போவார்? ஐயங்காருக்கு போலீஸிடம் பயம், பாரதியாரை வெளியேபோகச் சொல்லவும் தயக்கம்.

 பாரதியாரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னார். தனக்கு ஒரே குழப்பமாக இருப்பதாகவும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், முடிந்தால் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளும்படியும் தயங்கியபடி சொன்னார்.

 பாரதியின் குணத்தை மண்டையம் மிகத் துல்லியமாக எடைபோட்டு வைத்திருக்கிறார். அவர் சொல்கிறார், ஏதாவது சிக்கல் என்றால் பாரதி முதலில் சிறிது கவலைப்படுவாராம், பிறகு ஆழ்ந்து யோசித்தபின் உறுதியோடு செயல்படுவாராம். பிறகு எந்தவிதத் தயக்கத்துக்கும் இடம் கொடுக்க மாட்டாராம். முதலில் அந்த குறைந்த நேரத்தில் அவர்படும் மனவேதனை சொல்லி முடியாது என்கிறார்.

 தன் சொந்த நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டி போராடுகின்ற காரணத்தால், அடுத்த நாட்டுக்குச் சொந்தமான ஊரிலும் இடமில்லாமலா போய்விடும்? தனக்கு ஏற்பட்ட இந்தச் சிக்கலை எண்ணி மிக அதிகமாக மனவேதனைபட்டாராம் பாரதி. என்றாலும் உடனடியாக குப்புசாமி ஐயங்காருக்குப் பதில் சொல்ல மனமில்லை. இன்னும் ஓரிரண்டு நாள்களில் ஏதாவது ஏற்பாடு செய்துகொண்டு வெளியேறி விடுகிறேன் என்று பதில் சொல்லிவிட்டார்.

 சொன்னபடி அடுத்த இரண்டு நாள்களும் அவர் பட்ட வேதனை, மனக்கஷ்டம் சொல்லி மாளாது. ஊர் புதிது. என்ன செய்வது? யாரைப் போய்க் கேட்பது என்ற தயக்கம். தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் கிடையாது. குப்புசாமி ஐயங்கார் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதுபோல பாரதி நினைத்தார். தம்மை யாருக்காவது பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்த நொடி அங்கிருந்து போய்விடும் குணம் உள்ள பாரதிக்கு இக்கட்டான நிலை. பெரிய பெரிய மனிதர்களைக்கூட தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் பாரதி.

    இங்கு வந்து இப்படி வாழும் நிலை வந்ததை எண்ணி மனம் புழுங்கினார். கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு, 'இப்போது கோபம் முக்கியமல்ல, இருக்க ஒரு இடம் வேண்டும். அதுதான் முக்கியம்' என்று எண்ணினார்.

  இந்த நிலையில் போலீஸ் குப்புசாமி ஐயங்காரைக் கூப்பிட்டு மறுபடி மிரட்டியது. மிரண்டுபோய் வீடு திரும்பிய ஐயங்காரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பாரதியாருக்கு. தமிழகத்தில் தம்மைத் தெரிந்தவர் பலர் இருக்க, இங்கு வந்து இப்படி யாரையும் தெரியாமல் அல்லல்பட நேர்ந்ததே, 'இந்தியா' பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் உள்ளவர் யாராவது இங்கு இருந்தால் நல்லது. அப்படிப்பட்டவர்கள் யார் இங்கு இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லையே? அப்படி யாராவது இந்தியா பத்திரிகை சந்தாதாரர் இருந்தால் நலமாக இருக்குமே என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு அன்றிரவு வீட்டின் வெளித்திண்ணையில் கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.

 அந்த நேரம் குப்புசாமி ஐயங்காரின் வீட்டுக்கு அருகில் இருந்த தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்பவரின் கண்களில் அடுத்த வீட்டுத் திண்ணையில் ஒரு புதிய மனிதர் உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. யார் அந்தப் புதியவர் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் குவளை அவரிடம் சென்று, "சுவாமி, தாங்கள் யார்? அடுத்த வீட்டில் என் சகோதரி இருக்கிறாள். அவளைப் பார்க்க வந்துவிட்டுத் திரும்பும்போது, தங்களைக் கவனித்தேன். புதியவராக இருப்பதால் யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்'' என்றார்.

 பாரதிக்குப் புத்துயிர் வந்ததுபோல் இருந்தது. 'ஆகா, இறைவன் வழிகாட்டிவிட்டான். இந்தக்  குள்ள மனிதன் நிச்சயம் தனக்கு உதவி செய்வான்' என்று தோன்றியது. என்றாலும் தான் யார், என்ன என்பதைப் பற்றியெல்லாம் பாரதி வாய் திறக்கவில்லை. குவளையிடம் கேட்டார், "இங்கு இந்தியா பத்திரிகை வாங்கிப் படிப்பவர் யாரையாவது உமக்குத் தெரியுமா?'' என்று.

 குவளைக் கண்ணன் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார், "ஆமாம், சுந்தரேச ஐயர் என்று ஒருவர். அவருக்கு இந்தியா பத்திரிகை வருகிறது. அவர் படித்ததும் நான் வாங்கிக்கொண்டு போய் படிப்பது வழக்கம்'' என்றார்.

 "அப்படியா நல்லது. அந்த சுந்தரேச ஐயரிடம் என்னை அழைத்துக் கொண்டு போக முடியுமா'' என்று கேட்டார் பாரதியார்.

 குவளைக் கண்ணன் பாரதியாரை அழைத்துக் கொண்டு போய் சுந்தரேச ஐயரிடம் கொண்டு விட்டுவிட்டு, அவரை யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே, அவரைப் பிறகு சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 சுந்தரேச ஐயரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும் அவருக்கு மகிழ்ச்சி. அவர் மூலம் வேறொருவர் வீட்டில் பாரதியார் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு புதிய இடத்தில் பாரதியார் தங்கத் தொடங்கிய சில நாட்களில் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்து, அங்கு பாரதியாரோடு சில நாள்கள் தங்கினார். மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரி சிறுவயதில் புதுவையில் படித்தவர். அங்கு அவருக்குப் பலரைத் தெரியும். இந்தச் சூழ்நிலையில் பாரதியாருக்குப் புதிய தெம்பு கிடைத்தது. சரியான துணை கிடைத்துவிட்டது. இனி சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியம் அடைந்தார்.

 இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த, 'இந்து', "சுதேசமித்திரன்' பத்திரிகைகளைத் தொடங்கியவரும், மகாகவி பாரதியாரை சென்னைக்கு அழைத்து வந்து தனது பத்திரிகையில் சேர்த்து உலகத்துக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் சிலரது தலையீடு காரணமாக விடுதலை பெற்றிருந்தார். அதைப் போலவே பாரதியாருக்கும் விடுதலை வாங்கி விடவேண்டுமென்று பாரதியின் மைத்துனர் அப்பாத்துரை விரும்பினார். ஆனால் பாரதிக்கு அதில் சம்மதமில்லை. அப்படிப்பட்ட கேவலம் எனக்குத் தேவையில்லை என்று மறுத்து விட்டார்.

 பாரதியார் புதுச்சேரி வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள் 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளர் ந.திருமலாச்சாரியார் அங்கு வந்து சேர்ந்தார். சென்னையில் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை இனி புதுச்சேரியிலிருந்து நடத்துவது எனும் எண்ணத்தோடு வந்திருந்தார். அங்கு சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சியினரின் அடக்குமுறையை எதிர்த்துக் கொண்டு எத்தனை நாட்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும், இங்கிருந்து நடத்தினால் பாரதியாரும் இங்கு இருப்பதால் சிறப்பாக, தொல்லை இல்லாமல் நடத்த முடியும் என்று கருதினார். தனது கருத்தை பாரதியாரிடம் சொல்ல, அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். "இந்தியா' புதுவையிலிருந்து வரத் தொடங்கியது.

 பாரதியாரின் புரட்சிக் கனல் பறக்கும் எழுத்துகள் 'இந்தியா'வில் வெளிவந்தன. சென்னையிலிருந்து மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்த எம்.பி.டி.ஆச்சார்யா என்பவரும் புதுச்சேரி வந்து சேர்ந்தார். இவர் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு பெரும் புரட்சிக்காரராக மாறி, பல சாகசங்களைச் செய்துவிட்டு, பல நாடுகளில் நடந்த புரட்சிக்குத் துணை நின்ற பிறகு இந்தியா திரும்பி வெறுப்புற்று மும்பையில் தனித்து வாழ்ந்து இறந்தார். இந்த எம்.பி.டி.ஆச்சார்யா, திருமலாச்சாரியாரின் தம்பி முறை ஆகும். இவர் புதுவையிலிருந்து கொழும்பு வழியாக இங்கிலாந்து செல்வதற்காக இங்கு வந்திருந்தார்.

 திருமலாச்சாரியார் புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு "இந்தியா' பத்திரிகை அலுவலகத்தைத் தொடங்கினார். பாரதியாருக்கு மீண்டும் பத்திரிகை வரத் தொடங்கிய பிறகுதான் மனதில் அமைதி தோன்றியது. அது தொடங்கி "இந்தியா' பத்திரிகை செய்த அதிசயங்கள், முதன் முதலாக கேலிச்சித்திரங்களை அறிமுகப்படுத்தியது, பின்னர், அரசாங்கம் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்தது போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், பாரதி எனும் தேசபக்தன், பெரும் கவிஞனாக உருவெடுத்து முப்பெரும் பாடல்களைப் படைத்து வரலாற்றில் இடம் பிடித்து பத்து ஆண்டுகள் அந்தப் புதுவை மண்ணில் வாழ்ந்தார் எனும் செய்தியை அவருடைய இந்த நினைவு நாளில் சிந்தித்துப் பார்ப்போம்.

(இன்று பாரதியார் நினைவு தினம்)

- வெ.கோபாலன் 

நன்றி: தினமணி (11.09.2012 )

.

வீரத் துறவியும் வீரக் கவிஞரும்


என்றும் நம் நினைவில் நிற்கும் தினங்களில் ஒன்று செப்டெம்பர் 11. மகாகவி பாரதியார் அமரரான தினம் அது. இந்த ஆண்டு பாரதியார் நினைவு தினத்துடன் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவும் சென்னையில் கொண்டாடப்படுகிறது.

சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தன் அருமையான பேச்சின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.

அதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்த இந்து சமயச் செய்திகள், பக்தி மற்றும் சம்பிரதாயங்கள் சார்ந்தவை. விவேகானந்தர் அமெரிக்க மக்களிடம் இந்து மதத்தை ஒரு தத்துவப் பெட்டகமாகவே அறிமுகப்படுத்தினார். மகாகவி பாரதியாரும் இதையே செய்தார். சமய ஒழுங்கு எல்லோருக்கும் தேவை. ஆனால், அந்த ஒழுங்கு வெறும் சடங்குகளுடன் நின்றுவிடக் கூடாது. தத்துவ ஞானத்தை ஊட்டுவது மனிதம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உலகத்தையும் புரிந்துகொள்ள உதவும். தத்துவ ஞானத்தைப் பெற சமயச் சார்பு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், சடங்குகள் சாராத சமய ஒழுங்கு தேவை என்பதை விவேகானந்தர் சொற்பொழிவுகளில் உணர்த்தியிருக்கிறார்.

அதற்குக் காரணம் அவர் தன் குருநாதராகிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவ விளக்கங்களை அத்யந்த சிஷ்யராக இருந்து அறிந்து கொண்டவர்.

கல்விக்கு உதவுவது தான தர்மங்களில் சிறந்தது. கல்வி அறிவை வளர்க்க வேண்டும்; அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவோடு வீரம் வேண்டும்; வீரத்துடன் கருணை வேண்டும்; மனம் திடமாக இருக்க வேண்டும் என்பனவற்றில் இவர்கள் உடன்படுகிறார்கள். இவர்களது ஒத்த கருத்துகளில் சிலவற்றை இங்கே காண்போம்.

விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "ஞான தீபம்' என்ற பெயரில் 11 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து சில வைர வரிகளை எடுத்துத் தருவதும் அவை இன்றைய நடப்புக்கு எப்படிப் பொருந்தும் என்பதை விளக்குவதும் பரமஹம்ஸர் - விவேகானந்தரின் நூல்களைப் படித்தவர்களின் கடமை.

"குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான, உறுதியான உதவுகின்ற எண்ணங்களே தோன்ற வேண்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்கள்'' -ஞானதீபம் 3, பக்கம் 210.

ஆங்கில நூலாசிரியர்கள் 'பாஸிட்டிவ் திங்கிங்' என்று சொல்வது இதுதான். பாரதியாரும் இதையே 'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்' 'கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமைதல் வேண்டாம்', 'சக்திதனக்கே கருவியாக்கு' என்றெல்லாம் சொன்னார்.

வேறொரு சந்தர்ப்பத்தில் விவேகானந்தர் சொன்னார்: ஆன்மிக உதவிக்கு அடுத்து வருவது அறிவு வளர்ச்சிக்கான உதவி. உணவு மற்றும் உடைகள் அளிப்பதைவிட 'வித்யா தானம்' அறிவு தானம் எவ்வளவோ மேலானது. ஒருவனது உயிரைக் காப்பதைவிடச் சிறந்தது அது. ஏனென்றால், மனிதனின் உண்மையான உயிர்நாடி, உண்மையான வாழ்க்கை அறிவில் மட்டுமே அமைந்துள்ளது. அறியாமை என்பது மரணம். அறிவுதான் வாழ்வு. அறியாமையிலும் துன்பத்திலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிற வாழ்க்கை பயனற்றது. -ஞானதீபம் 1, பக்கம் 162.

இதையே அன்ன சத்திரங்கள் கட்டுவதைவிட முக்கியமானது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'' என்று பாரதியார் சொன்னார். அன்னசத்திரம் உணவு தானம். கல்வி தருவது வித்யா தானம்.

கல்வி கற்பதனால் மட்டும் உயர்ந்த நிலையை அடைந்துவிட முடியாது. கல்வி அறிவு வளர்ச்சிக்கு வழி செய்ய வேண்டும். அறிவு எப்படி இருக்க வேண்டும்? ஒருவனின் அறிவு பிறரது அறிவைத் தூண்டுவதாக அமைய வேண்டும். வெறும் அறிவு என்பது பயனில்லாதது. அறிவு கருணையுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அந்த அறிவுதான் அறிவாளிக்கும் அவனைச் சேர்ந்த மக்களுக்கும் பயன்தரக் கூடியது.

அறிவு மற்றும் இதயத்தின் சங்கமம் வேண்டும். இதயம் மிக உன்னதமானது. அதன் வழியாக வாழ்க்கையின் சிறந்த அகத்தூண்டுதல்கள் பிறந்துள்ளன. கருணையே இல்லாமல் அறிவு மட்டுமே நிறைய இருப்பதைவிட, அறிவு சிறிதும் இல்லாமல் கருணை சிறிதேனும் இருப்பதை விரும்புகிறேன். நெஞ்சில் ஈரம் உள்ளவனுக்கே நல்ல வாழ்க்கையும் முன்னேற்றமும் உரியன. அறிவு மிகுந்த ஆனால் நெஞ்சில் ஈரமே இல்லாதவனின் வாழ்வு வறண்டு போகிறது, அவன் அழிகிறான். -ஞானதீபம் 3, பக்கம் 284.

இதையே பாரதியாரும், வலிய அறிவு வேண்டும்; மகத்தான அறிவு வேண்டும், 'சுடர்மிகும் அறிவு', 'மானிடம் பயனுற' உதவியாக இருக்க வேண்டும் என்றும் "அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்' என்றார்.

அன்பைப்பற்றி விளக்கும்போது விவேகானந்தர், "நாம் யாரையும் வெறுக்கக்கூடாது. இந்த உலகம் தொடர்ந்து நன்மை மற்றும் தீமைகளின் கலப்பாகவே இருக்கும். பலவீனர்களிடம் இரக்கம் கொள்வதும், தவறு செய்பவர்களிடம்கூட அன்பு செலுத்துவதும் நம் கடமை. இந்த உலகம் ஒரு பரந்த நன்னெறிக்கூடம். அதில் மேலும் மேலும் ஆன்மிக வலிமையானவர்களாக நாம் அனைவரும் பயிற்சி பெற வேண்டும்'' என்கிறார். -ஞானதீபம் 1, பக்கம் 127. மனிதர்களிடம் ஒற்றுமை நிலவ இதுவே சரியான வழி. இதையே பாரதியாரும் 'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்று பாடினார்.

மிருகத்தை மனிதனாகவும் மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம் என்றார் விவேகானந்தர் - ஞானதீபம் 6, பக்கம் 427 .

காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாடினார் பாரதியார்.

இந்த உலகம் ஒரு பயிற்சிக்கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்கே நாம் இங்கு வந்திருக்கிறோம். -ஞானதீபம் 6, பக்கம் 428 என்றார் சுவாமி விவேகானந்தர். பாரதியார் இதையேதான் 'உடலினை உறுதி செய்' என்று புதிய ஆத்திசூடியில் சொன்னார்.

எப்படிப்பட்டவர்கள் இன்று நாட்டுக்குத் தேவை? நூறு வருடங்களுக்கு முன்பே இப்படிச் சொன்னார் சுவாமி விவேகானந்தர். துணிச்சலும் வீரமும் மிக்கவர்களே இப்போது நமக்குத் தேவை. நம் தேவையெல்லாம் ரத்த வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப்படுத்துகின்ற கருத்துகள் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்; வலிமையாக இருங்கள்; சொந்தக் கால்களில் நில்லுங்கள். -ஞானதீபம் 5, பக்கம் 127.

"வலிமை, வலிமை என்று பாடுவோம் என்றும் வாழுஞ்சுடர்க் குலத்தை நாடுவோம்'' என்று பாரதியார் இதையே சொன்னார். வலிமை வெளிப்படாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல என்பது பாரதியாரின் கருத்து. "வீரனுக்கே இசைவார் திரு மேதினி எனும் இரு மனைவியர்'' என்பார் பாரதியார். அதாவது உலகின் மீது ஆட்சியும் செல்வத்தின் மீது ஆட்சியும் வீரத்தினால் மட்டுமே விளையும் என்பார்.

துணிச்சலாகக் கருத்துகளைச் சொன்னதனாலும், மக்கள் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று சொன்னதனாலும் விவேகானந்தரை வீரத் துறவி என்கிறோம். பாரதியாரை வீரக் கவி என்கிறோம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் பிறருக்கு உதவியாக வாழவும் இந்த இரு மகான்களும் நம் வழிகாட்டிகளாக அமைவார்களாக!

- நல்லி குப்புசாமி செட்டியார்.

நன்றி: தினமணி (11.09.2012)

8.9.12

அடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்


ராஜா தேசிங்கு
(பலிதானம்: அக். 23)

செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. தமிழகத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் கொடுத்த வீரன் ராஜ தேசிங்கு.

மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

செஞ்சிக் கோட்டை

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.


ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.


காண்க:

ராஜா தேசிங்கு  கதைப்பாடல் 

தேசிங்குராஜன் கதை (விர்சுவல்  யுனிவர்சிட்டி)

செஞ்சிக்கோட்டை வரலாறு

செஞ்சியும் தேசிங்கும் - எஸ்.ராமகிருஷ்ணன்

செஞ்சி (விக்கி)

.

4.9.12

தேவை நிதானம், ஆத்திரமல்ல!

சிந்தனைக்களம்



இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது  கோபம் நியாயமானது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக்கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதும் அரசியல் எதிர்வினைகளாக இருக்க முடியுமே தவிர, சரியான ராஜதந்திர நடவடிக்கையாக இருக்க முடியாது.

இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை?

இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா?

 இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்? இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது?

இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.

அருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.

 ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும் வழிமுறை.

ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது.

அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?

முன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல; சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன்? இன்றைய தேவை, நிதானம். ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல!

 
.