நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.8.12

12 மணிநேரம் நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழா

தேசிய சிந்தனைக் கழகம் திருப்பூரில் உள்ள பல்வேறு அன்மைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியது.

இந்நிகழ்வில் தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர்  நகரத் தலைவர் திரு. அரிமா எம் ராமகிருஷ்ணன் அவர்களும் ஆலோசகர் குழலேந்தியும் பங்கேற்றனர்.

இவ்விழா குறித்த செய்தித் தொகுப்பு இது.... 

(நன்றி: IDCC அமைப்பின் 'சுதந்திரம் காப்போம்' வலைப்பூ)


------------------------------------------------------
சுதந்திர தினத் திருவிழாவில் பேசுகிறார் தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் திரு. கிருஷ்ண ஜெகநாதன்.

 சுதந்திர தின விழாவை சம்பிரதாயமான விழாவாகக் கொண்டாடாமல், புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் கொண்டாட திருப்பூர் சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதற்கென 50க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகள் தொடர்பு கொள்ளப்பட்டன. அனைவரது உதவி, ஒத்துழைப்புடன் சுதந்திர தினத் திருவிழா ஆக. 15 ,  புதன்கிழமை, திருப்பூர், டவுன்ஹாலில் சிறப்பாக நடந்தேறியது. அந்த விழாவின்  நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பு இது:

தேசியக் கொடியேற்றம்:

காலை 9 மணியளவில் டவுன்ஹாலில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வுடன் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர சங்கத்தின் தலைவர் K.P.G. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

D.K.T. கல்வி நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான 'லிங்க்ஸ்' D.சவுகத் அலி, காந்திய மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் A. ராதாகிருஷ்ணன், திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கத்தின் தலைவர் தாமு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூரைச் சேர்ந்த முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும் (வயது: 88) அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி G.முத்துசாமி அய்யா தேசியக் கொடியேற்றி வைத்தார்.

அடுத்து டவுன்ஹாலில் விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி மேடையின் பின்புறத்தை அலங்கரித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொழிலும் பொருளாதாரமும்- கருத்தரங்கம்:

அடுத்து காலை 9.30 மணியளவில் முதல் கருத்தரங்கம் துவங்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் M.P.முத்துரத்தினம் தலைமை வகித்தார். திருப்பூர் சாய ஆலை  உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் S.முருகசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் T.R. விஜயகுமார், தொழிலதிபர் ஆர்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியின் தலைவரும் வார்சா ஏற்றுமதி நிறுவனத் தலைவருமான ராஜா சண்முகம், கோவையில் உள்ள தழ்நாடு நகரில் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ப.கனகசபாபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

காண்க:

1 . பனியன் தொழிலில் உள்முகக் கோளாறுகளை சரி செய்ய வேண்டும்- ராஜா சண்முகம்.

2 . கலாசாரம் சார்ந்த பொருளாதாரத்தால்  இந்தியா முன்னேறி வருகிறது- பேராசிரியர் ப. கனகசபாபதி


இளம் சிறுவனின் இனிய இசை நிகழ்ச்சி:

அடுத்து 'வளரும் செல்வன்' சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மகிழன் பரிதி தனது மழலை கலந்த இனிய பாடல்களால் அனைவரையும் வசீகரித்தான். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் V.வீரராகவன் தலைமை வகித்தார். திருப்பூர் குர்பானி அறக்கட்டளை செயலாளர்  M. அகமது பைசல் முன்னிலை வகித்தார். 

இதனிடையே, மேகலா குழும நிறுவனங்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினர்.

இயற்கை வளங்களும் சுகாதாரமும் - கருத்தரங்கம்:

அடுத்து பகல் 12 மணியளவில் இரண்டாவது கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் R. அண்ணாதுரை தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் N.S.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோட்டைச் சேர்ந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வெ. ஜீவானந்தம், திருமானூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் டாக்டர் அ.காசிப்பிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அடுத்து திருப்பூர் - தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் அனைவருக்கும் மதிய உணவு வழங்கியது.

காண்க:

'இயற்கையைச் சார்ந்து வாழ்வதே சுகாதாரம்'


கண்கவர்ந்த கலைநிகழ்ச்சிகள்:

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 2.15 மணியளவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் K.கிங் நார்சியஸ் தலைமை வகித்தார்.  திருப்பூர் இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முதல் அரை மணி நேரம் வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி ஆகியவற்றின் மாணவர்கள் இசை நிழ்ச்சிகளை  நடத்தினர். அடுத்து K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி  மாணவ மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சிகள் அரைமணி நேரம் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.


அரசியலும் நிர்வாகமும்- கருத்தரங்கம்:

அடுத்து பிற்பகல் 3 .15 மணியளவில் மூன்றாவது கருத்தரங்கம் துவங்கியது. இந்நிகழ்வுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் திருப்பூர் பகுதி தலைவர் R. ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொழிலதிபர்  ஓகே டெக்ஸ்டைல்ஸ் M.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர்  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவருமான K. தங்கவேலு கருத்தரங்கில் முதலில் பேசினார். அடுத்து கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், AICCTU தொழிற்சங்கத் தலைவருமான R. லட்சுமண நாராயணன் உரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் கருத்தரங்கின் இறுதியில் பதில் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.


கல்வியும் பண்பாடும்- கருத்தரங்கம்:

அடுத்து மாலை 5 மணியளவில், நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் P.V.ரவி தலைமை வகித்தார். திருப்பூர், K. செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் எக்ஸ்லான் K. ராமசாமி முன்னிலை வகித்தார்.

தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியான சிந்தனையாளர் கிருஷ்ண.ஜெகநாதன், கன்னியாகுமரி- விவேகானந்த கேந்திராவில் பணிபுரியும் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.


சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா:

அடுத்து திருப்பூர் வட்டாரத்தில் செயல்படும் சேவை அமைப்புக்களை பாராட்டும் நிகழ்வு இரவு 7 மணியளவில் நடைபெற்றது. திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் S.குணசேகரன் தலைமை வகித்தார். மேகலா நிறுவனங்களின் தலைவர் C.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

 இதில், அன்பு இல்லம் (திருமுருகன்பூண்டி), வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை முதியோர் இல்லம் (கரடிவாவி), பாரதி குரு குலம் (அலகுமலை), மகாத்மா காந்தி கருணை இல்லம் (அமராவதிபாளையம்), குர்பானி அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு (திருப்பூர்), காதுகேளாதோர் பள்ளி (முருகம்பாளையம்) ஆகிய சமூக சேவை அமைப்புகளை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பின்னலாடை உரிமையாளர் சங்க செயலாளர் எம்பரர் V.பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்.

காண்க:

1 .சுதந்திர தின விழாவில் சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு

2 . போட்டிகளில் வென்ற மாணவ மணிகள் பட்டியல்


நாட்டிய நாடகம்:

அடுத்து இரவு 7 .30 மணியளவில், அருள்புரம் ஜெயந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் பகுதி தலைவர் அரிமா M ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் அருள்நிதி T R முரளிதரன் முன்னிலை வகித்தார்.

புறநானூற்று தமிழ்ப் பெண்ணின் வீரத்தையும் தன்மானத்தையும் விளக்கும் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம் பார்வையாளர்களால் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது.


விழா நிறைவு நிகழ்ச்சி:

இரவு 7 .50 மணியளவில் சுதந்திர தினத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி துவங்கியது. தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் K.பரஞ்சோதி தலைமை வகித்தார். திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி M.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், ஈரோடு பாரதி வாசகர் வட்டத்தின் செயலாளர் சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. திருப்பூர் நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் N.அருணாசலம் நூலை வெளியிட, சக்தி M.சுப்பிரமணியம் அதைப் பெற்றுக் கொண்டார். திருப்பூர்  இளைஞர் T.A.ஷான் தயாரித்த 'தேசபக்திப் பாடல்கள்' குறுந்தகடும் இந்நிழ்வில் வெளியிடப்பட்டது.

விழா நிறைவாக, 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் K. வைத்தியநாதன் விழா பேருரையாற்றினார். முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

காண்க:
 

அடிமை மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டும்! - 'தினமணி' ஆசிரியர்


      தேசிய கீதத்துடன் விழா இரவு 9.15 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.


காலை முதல் இரவு வரை சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற இவ்விழாவில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோரும் திரளாகக் கலந்துகொண்டனர். இவ்விழா சிறக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அமைப்புகளுக்கும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

28.8.12

''என் வாழ்வே எனது செய்தி'' - மகாத்மா காந்தி

 சிந்தனைக்களம்


1947 புதுதில்லி சுதந்திரக் தினக் கோலாகலங்களைப் புறக்கணித்து மகாத்மா காந்தி கல்கத்தாவில் மதக்கலவரங்களினின்றும் அமைதி காக்கச் சென்று தங்கிய வரலாற்றை ஆதாரபூர்வமான விவரங்களுடன் அ. அண்ணாமலை தெளிவுபடக் கோத்தளித்துள்ளது ('தினமணி' 15-8-2012) சிலாகிக்கத்தக்கது.

 ஆகஸ்ட் 14 - 15 நள்ளிரவில் தலைநகரில் அரசியல் நிர்ணய சபையில் சுதந்திர நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்த அவைத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் தமது தொடக்க உரையில், "சென்ற முப்பது ஆண்டுகளாக நமது சுதந்திர இயக்கப் பாதையில் வழிகாட்டும் பேரொளியாகத் திகழ்ந்து நம்மை வெற்றிச் சிகரத்துக்கு இட்டுச் சென்றவரும், தத்துவ தரிசியுமான மகாத்மா காந்தி நம் அனைவரின் மட்டற்ற மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரித்தானவர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.

 அதையடுத்து ஜவாஹர்லால் நேரு தமது உணர்ச்சிகரமான பேருரையில் காந்திஜியை நினைவுகூர்ந்து இவ்வாறு பகன்றார்: இன்றைய தினம் நமது முதற்கண் நினைவுகள் இந்திய சுதந்திரத்தை நிர்மாணித்த சிற்பியான நமது தேசப்பிதாவையே சாரும்.

 பாரதப் பாரம்பரியத்தின் திருஉரு அவர். விடுதலை ஒளிப்பந்தத்தைத் தூக்கிப்பிடித்து நம்மைச் சூழ்ந்திருந்த காரிருளைக் களைந்து இந்தியாவை ஒளிமயமாக்கினார்.

 சென்ற காலத்தில் பல சமயம் நாம் அன்னாரது அறிவுரைகளினின்றும் பிறழி வழிதவறிச் சென்றோம். எனினும், நாம் மட்டுமல்ல, நமது வருங்காலச் சந்ததியரும் இந்தியத் தவப்புதல்வராம் மகாத்மா காந்தியின் அரிய அறிவுரைகளை இதயத்தில் பதிப்போமாக.

 திட நம்பிக்கையும், மன உரமும், துணிவும், அதேசமயம் பணிவும் ஒருங்கே திரண்ட மகோத்தமராகக் காந்திஜி திகழ்கிறார். புயல் வீசினாலும் அல்லது மழைகலந்த சூறாவளி குமுறினாலும் அவர் அளித்த சுதந்திர ஒளிப் பந்தத்தை நாம் ஒருபோதும் அணையவிட மாட்டோம்''.

 ஆகஸ்ட் 15 காலையில் சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற மவுண்ட்பாட்டன் பிரபு பின்வருமாறு அறிவித்தார்.

 "இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இனி நான் உங்கள் ஊழியன்.

 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அகிம்சை வழியில் இந்திய சுதந்திரத்தைச் செதுக்கி உருவாக்கிய மகாத்மா காந்திக்கு இந்தியா காலங்காலமாகக் கடமைப்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.

 அன்னார் இப்போது இங்கே நம்முடன் இருக்க இயலாமற்போனது நமது பேரிழப்பே ஆகும். அதைப்பற்றி நாம் எவ்வாறு வருந்துகிறோம். இங்கில்லாவிடினும் அவர் நம் அனைவரின் நினைவில் எத்துணை ஆழமாகப் பதிந்து நிலைகொண்டுள்ளார் என்பதை அவர் அறிவாராக...''

 கல்கத்தாவில் ஹைதரி மன்ஸில் என்ற பழைய கட்டடத்தில் தங்கியிருந்த காந்திஜி, சுதந்திர தினத்தை உபவாசம் அனுஷ்டித்தும், கைராட்டையில் நூல் நூற்றும் அமைதியாகக் கழித்தார். அந்நகரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.

 மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் உயர் அதிகாரி காந்திஜியை அணுகி, பத்திரிகைகளில் பிரசுரிக்க அன்னாரது சுதந்திர தின அறிக்கை அல்லது செய்தி வேண்டினார். "என்னத்தைச் சொல்ல? நான் வெதும்பி வறண்டு போய்விட்டேன்'' என்று மறுதலித்தார் மகாத்மா. ""இத் தருணத்தில் உங்கள் ஆசிச்செய்தி இல்லையேல் அது நல்லதல்ல'' என்று அந்த அதிகாரி மன்றாடினார். "சொல்வதற்கு செய்தி ஏதுமில்லை; அது நல்லதல்ல என்றால் கெட்டதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!'' என்று தட்டிக்கழித்தார் அண்ணல் காந்தி.

 பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் (பி.பி.ஸி.) விசேஷ நிருபர் குரல் பதிவுக் கருவியுடன் அண்ணலை அணுகி "சுதந்திரதினச் செய்தி ஏதேனும் கூறுங்கள்; உங்கள் குரலிலேயே உலகமெங்கும் உடனடியாய் ஒலிபரப்புகிறோம்'' என்று கேட்டபோது காந்திஜி, "இம்மாதிரியான ஆசை காட்டலுக்கெல்லாம் நான் மசியமாட்டேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நீங்கள் மறந்துவிடத்தான் வேண்டும்'' என்று புன்முறுவிப் பதிலளித்தார்.

 இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1945 மே மாத இறுதியில் சிகாகோ டிஃபண்டர் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் அமெரிக்க நீக்ரோ பிரதிநிதி காந்திஜியைப் பேட்டி கண்டார். முடிவில், "சிறப்புச் செய்தி ஏதாகிலும் நீங்கள் அளியுங்களேன்?'' என்று விண்ணப்பித்தார்.

 அதற்கு காந்திஜி, "எனது வாழ்விலேயே என் செய்தி அடங்கியுள்ளது. அவ்வாறு இல்லையெனில், இப்போது நான் எதையும் புதிதாகச் சொல்வதினாலோ எழுதுவதினாலோ ஏதும் நிறைவுபெறப் போவதில்லை'' என்றார்!

 ஆம்! காந்திஜியின் வாழ்வே அவரது செய்தி. "அகிம்சை, அன்பு, சத்திய நாட்டம், எளிய வாழ்வு - உயரிய சிந்தனை, மத நல்லிணக்கம், அப்பழுக்கற்ற அரசியல், மக்களைப் பொருளாதார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்துதல், கடையனுக்கும் கடைத்தேற்றம்' இவையே அவரது வாழ்வின் சாரம். இவற்றை நாம் மனத்தில் இறுத்தி, கூடியவரை செயலில் கடைப்பிடிப்போமாக.


- லா.சு. ரங்கராஜன் 
நன்றி: தினமணி (28.08.2012)
 

15.8.12

"1947 ஆகஸ்ட் 15 - காந்தியடிகள் எங்கே?''

 
 சரித்திரம்

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெருவெல்லாம் கொண்டாடியது போய் இப்போது பள்ளிகளுக்குள்ளும் அரசு அலுவலகங்களுக்குள்ளும் நடைபெறும் ஒரு சம்பிரதாய விழாவாக மாறிவிட்டது.

'இந்திய நாட்டின் தந்தை' என்று போற்றப்படும் காந்தியே சுதந்திர தினத்தைக் கொண்டாடவில்லை, நாம் ஏன் கொண்டாட வேண்டும்?' என்று சிலர் கேட்கிறார்கள்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நம்முடைய தன்மான உணர்வு, சுயகெüரவம், பெருமை என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவில்லை. உணர மறுக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் வடிவமைத்து, மக்களைத் திரட்டி சுதந்திரம் என்ற உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றாரே காந்தியடிகள், அவர் அந்த முதல் சுதந்திர தின விழாவின்போது என்ன செய்து கொண்டிருந்தார், எங்கிருந்தார் என்பதைப் பற்றிய சில வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வரலாற்றுப் பின்னணி: 1946-லேயே வங்காளம் கலவர பூமியாக மாறிவிட்டிருந்தது. அதற்கான சரித்திரப் பின்னணி தெரிந்தால்தான் இந்து - முஸ்லிம் உறவு, பாகிஸ்தான் பிரிவினை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

1946-ல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டிஷ் அரசு, அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அது 'அமைச்சர்களின் தூதுக்குழு' என்றழைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லியின் முயற்சியின் பலனாக இக்குழு உருவானது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் வழிமுறைகளையும், சுதந்திர இந்தியா எத்தகைய ஆட்சிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று முடிவு செய்யவும் இக்குழுவை அமைப்பதாக அட்லி கூறினார். முக்கிய இந்தியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து இந்தியப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு இந்தியா வந்தது.

இதில் இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்திக் லாரன்ஸ் பிரபு, வர்த்தக வாரியத்தின் தலைவர் சர் ஸ்டாஃபர்ட் கிரிப்ஸ், கடற்படை முதன்மைத் தளபதி ஏ.வி. அலெக்ஸôண்டர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இருவகைத் திட்டங்களை 1946 மே, ஜூன் மாதங்களில் முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஒரு மத்திய அரசு உருவானது.

இரண்டாவது திட்டத்தில் பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தபடி பாகிஸ்தான் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை விரைவுபடுத்திச் செயல்படுத்த முஸ்லிம் லீக் திட்டமிட்டது. அதன்படி முஸ்லிம் லீகின் தலைவரான முகமது அலி ஜின்னா ஆகஸ்ட் 16, 1946-ஆம் நாளை 'டைரக்ட் ஆக்ஷன் டே' (நேரடி நடவடிக்கை தினம்) என்று அறிவித்து விட்டார். அப்போது வங்காளத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் முதல்வர்தான் சாஹித் சுரவர்த்தி.

வெறுப்பு, நெருப்பாய் பற்றியது: வங்காளத்திலும் அதனைத் தொடர்ந்து பிகாரிலும் கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் மிருகத்தனமாக வேட்டையாடிக் கொன்று குவித்தனர். சராசரி இந்தியர்களின் மனதே பதறியபோது, அகிம்சையும் அன்புமே வாழ்வின் ஆதாரமாக வேண்டும் என்று கூறிய காந்தியடிகளின் மனது பதறாதா?

தன்னுடைய வாழ்வின் கடைசி சோதனைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் காந்தியடிகள். கூட்டமாய் அல்ல, தன்னந்தனி மனிதராய் தன்னுடைய உதவியாளர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றார் - வங்காளத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அல்ல, தைரியத்தைக் கொடுப்பதற்காக.

126 நாள்கள் (அக்டோபர் 29, 1946 முதல் மார்ச் 3, 1947 வரை) எந்த இந்தியத் தலைவரும் சென்றுவராத இடங்களுக்கெல்லாம் இரவு பகலாய், காலில் செருப்பின்றி நடந்தே சென்றார். அவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அரசாங்கம் அஞ்சியது. ஆனால் "என்னுடைய உயிர் ஆண்டவன் கையில்தான் உள்ளது'' என்று கூறிவிட்டார் காந்தியடிகள். இந்த நவகாளி யாத்திரைக்குப் பின்னர்தான் அமைதி திரும்பியது.

கலவரத்தைக் கட்டுக்குள் வைத்து அரசாங்கத்தைத் தனிநாடு கோரிக்கைக்கு இணங்க வைத்துவிடலாம் என்று எண்ணிய அரசியல்வாதிகளின் கணக்கு தப்பாகிவிட்டது. அன்றைய முதல்வராக இருந்த சுரவர்த்தியே அதற்கு சாட்சி.

இந்தப் பின்னணியில்தான் கசப்பான இந்தியப் பிரிவினை நடக்கிறது. ஏற்கெனவே ரணமாகிப் போயிருந்த வங்காளத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. கல்கத்தா நகரம் தீப்பிடித்து எரிகிறது. 1946-ல் முதல்வராய் இருந்து கலவரத்துக்குத் துணைபோன சாஹித் சுரவர்த்தி தற்போது செய்வதறியாது காந்தியடிகளின் துணையை நாடி நின்றார்.

காந்தியடிகளின் அகிம்சைக்கு ஒரு சவால்: 9 ஆகஸ்ட், 1947 முதல் 7 செப்டம்பர், 1947 வரை 30 நாள்கள் கல்கத்தாவில் தங்கி அமைதிப்பணி ஆற்றினார் காந்தியடிகள். பாலியாகட்டாவில் உள்ள ஹைதரி மன்ஸில் என்னும் (முஸ்லிம்) வீட்டில் தங்கியிருந்தார். சுரவர்த்தியும் உடனிருந்தார்.

ஆகஸ்ட் 14 படுக்கைக்குப் போவதற்கு இரவு 11 மணி ஆகிவிடுகிறது. கலக்கத்தோடு காணப்பட்டார். விடியற்காலை வழக்கத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே காலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார்.

ஆகஸ்ட் 15, காந்தியடிகளின் நிழலாக இருந்து மகனாய் மலர்ந்த மகாதேவ் தேசாயின் நினைவு நாள். ஆகவே, அன்று உண்ணாவிரதமும் நூற்பும் செய்வது வழக்கம். அன்றும் அதையே செய்ய முடிவு செய்தார்.

சில முஸ்லிம்கள் இந்தச் சுதந்திரம் வரக் காரணமாக இருந்த காந்தியடிகளைப் பார்த்த பின்புதான் தங்களுடைய நோன்பை முடிப்போம் என்று காத்திருந்தார்கள். அதில் இந்துக்களும் இருந்தார்கள். அவர்கள் காந்தியடிகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போதே சாந்திநிகேதன் குழந்தைகள் தங்களுடைய இனிமையான குரலால் கவி தாகூரின் சுதந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள். பிரார்த்தனைக்கு இடையூறு இல்லாமல் தங்களுடைய பாடலை நிறுத்திக்கொண்டு பிரார்த்தனை முடிந்தவுடன் தொடர்ந்து பாடினார்கள்.

அமைச்சர்களுக்கு ஆலோசனை: காலையில் மேற்கு வங்க அமைச்சர்கள் காந்தியிடம் ஆசி வாங்க வந்தார்கள். அவர்களிடம், "இன்றிலிருந்து நீங்கள் முள் கிரீடத்தை அணிந்துகொள்ளப் போகிறீர்கள். உண்மையையும் அகிம்சையையும் வளர்த்தெடுக்க சளைக்காமல் பாடுபடுங்கள். பொறுமையோடும் பணிவோடும் இருங்கள். பிரிட்டிஷ் ஆட்சி உங்களுக்குக் கொடுத்த சோதனைகள் உங்களுக்கு மன உறுதியையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேல்தான் அதனை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்கப் போகிறார்கள். அதிகாரத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அதிகாரம் உங்களின் நேர்மையைச் சிதைத்துவிடும். அதனுடைய பகட்டிலும் ஆரவாரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். இந்திய கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்காகத்தான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு உதவி செய்வாராக'' என்று பேசினார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து காந்தியடிகளைச் சந்தித்து, "எல்லாமே நம் கைமீறிப் போய்விட்ட நிலையில் நாங்கள் என்ன செய்வது?'' என்று ஆலோசனை கேட்டார்கள். வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மறைந்த தோழர் ஜோதிபாசுவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பூபேஷ் குப்தாவும்!

"இதுபோன்ற சிக்கலான நேரங்களில் பெரிய பெரிய கூட்டங்கள், பேரணி எல்லாம் நடத்துவது இயலாது. ஆகவே நம்மால் முடிந்த அளவு சிறு சிறு கூட்டங்கள் நடத்தலாம். இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம். யாராக இருந்தாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நாடு, மதத்தின் பெயரால் சிதறுண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?'' என்றார் காந்தியடிகள்.

அன்றைய வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி வந்து காந்தியடிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக குறிப்புகள் உள்ளன. ஆனால், கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய நூலில் 16-ஆம் தேதி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வ சமயப் பிரார்த்தனையின் அற்புதம்: மாலையில் ராஷ் பெகன் மைதானத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 30,000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். 'இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்', 'இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக' என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, காந்தியடிகளுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் வரவேற்பு கொடுத்தார்கள். பிரார்த்தனைக்குப்பின் காந்தியடிகள் உரையாற்றினார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகக் கூடி பிரார்த்தனையில் கலந்து கொண்டதற்கு கல்கத்தா மக்களைப் பாராட்டினார்.

"இந்துக்கள் எந்த மாதிரியான கோஷங்களைக் கூறுகின்றார்களோ அதே கோஷங்களை முஸ்லிம்களும் கூறுகிறார்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூவர்ணக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் பறக்கவிடுகிறார்கள். கல்கத்தாவின் இந்த மனநிலை மற்ற பகுதிகளுக்கும் பரவி அங்கும் அமைதி நிலவட்டும்'' என்று நிறைவான செய்தியைக் கூறினார் காந்தியடிகள்.

லண்டனில் உள்ள அகதா ஹேரிசன் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில், "பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு நன்றி சொல்வதுதான் இன்றைய தினம் போன்ற மிகச் சிறந்த நிகழ்வை நான் கொண்டாடும் வழி'' என்று எழுதினார்.

அன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் பார்க்க உடன் இருந்தவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார் காந்தி. தான் எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. பயத்திலும் சோகத்திலும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட அவர் மனது விரும்பவில்லை.

ஆனால் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தது அவருக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இரவில் கல்கத்தா நகரின் பிற பகுதிகளுக்குச் சென்று பார்க்கிறார். மக்கள் உற்சாகத்தோடு சென்றுவருவதைப் பார்த்து அவருடைய மனது நெகிழ்ச்சியடைகிறது.

ஆதலால்தான் அடுத்த நாள் ஹரிஜன் பத்திரிக்கைக்கு அவர் எழுதிய தலையங்கத்திற்குத் தலைப்பிடும்போது "அற்புதமா அல்லது விபத்தா?'' என்று கல்கத்தாவில் அமைதி திரும்பியதைப்பற்றி உருக்கமாக எழுதுகின்றார். "இந்துக்கள் மசூதிகளுக்கும் முஸ்லிம்கள் கோவில்களுக்கும் உற்சாகமாகச் சென்று வருகின்றார்கள். வெறும் நடிப்பாக இல்லாமல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இவை வெளிப்பட்டிருந்தால் கிலாபத் இயக்கக் காலங்களைவிடச் சிறந்த நிலை இது என்றுதான் சொல்லவேண்டும்'' என்று எழுதியுள்ளார்.

அமைதி வீரனாய் காந்தி: அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு, காந்தியடிகளை 'தனிமனித ராணுவப்படை' என்று கூறி பிரமிப்பு அடைந்தார். 50,000 ராணுவ வீரர்களால் மேற்கு இந்தியாவில் ஏற்படுத்த முடியாத அமைதியைத் தனி மனிதராக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தினார் காந்தி என்று புகழ்ந்து கூறினார். "கல்கத்தாவில் அற்புதம்'' என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் காந்தியடிகளோ, ""இந்தப் பணி இறைவனின் திருப்பணி; அவர் இட்ட பணி என் மூலமாகவும் சுரவர்த்தி போன்றோர் மூலமாகவும் இறைவன் செய்து முடிக்கின்றார்'' என்றார்.

சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் டெல்லியில் இல்லை. முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. செங்கோட்டையில் தேசியக்கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறந்தபோது அதைக்காண அவர் அங்கில்லை. தன்னோடு இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

அதற்குக் காரணம் அதைவிட ஒரு முக்கியமான இறைப்பணி காந்திக்காகக் காத்திருந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே அமைதியை ஏற்படுத்தி இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட ரணத்தை ஆற்றும் முயற்சியில் இறங்கியிருந்தார் அவர்.

எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினார். ஒற்றுமையாக, அமைதியாக, அன்போடு கொண்டாட வேண்டும் என்றே எண்ணினார். நம்முடைய இந்தியச் சமுதாயம் நாகரிகமான சமுதாயம் என்பதை உலகுக்கு உணர்த்த சமூக நீதியுடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு அனைத்துத் தரப்பு மக்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுதான் காந்திக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

- அ. அண்ணாமலை
 
நன்றி: தினமணி (15.08.2012) 

14.8.12

திருப்பூரில் சுதந்திர தினத் திருவிழா


திருப்பூரில் பல்வேறு பொதுநல அமைப்புக்கள் இணைந்து நாளை சுதந்திர தினத் திருவிழாவை நடத்துகின்றன. இதில் நமது தேசிய சிந்தனைக் கழகமும் பெருமையுடன் பங்கேற்கிறது.

இவ்விழாவில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றம் துவங்கி, 4 கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சி, மாணவர் கலை நிகழ்சிகள், சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. திருப்பூர் நகரின் பிரமுகர்கள் பலரும் பலதுறை நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர். நிறைவாக தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் விவரங்களுக்கு காணவும்: வாழ்க சுதந்திரம் வலைப்பூ.

.

காந்தியடிகளும் திரு.வி.க.வும்

திரு.வி.க
 சிந்தனைக்களம்

திரு.வி.க.வின் உள்ளத்தில் காந்தியடிகளுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. 'போலக்' என்பவர் சென்னையில் ஒரு முறை காந்தியடிகளைப் பற்றி ஒரு சொற்பொழிவு செய்தார். அவரது பேச்சு திரு.வி.க.வின் உள்ளத்தில் காந்திய விதையை விதைத்தது. அவர் படித்த அற நூல்களின் பொருளாக காந்தியடிகள் விளங்கினார். மகாத்மா காந்தியை 'காந்தியடிகள்' என்று முதன் முதலில் அழைத்தது திரு.வி.க.தான்!

 'மகாத்மா' என்ற சொல்லுக்கு 'அடிகள்' என்று பொருள் என்கிறார் திரு.வி.க. அவர் உள்ளம் முழுவதும் காந்தியடிகளே நிறைந்திருந்தார். அவரின் பேச்சும் மூச்சும் காந்தியமே. காந்தியடிகளின் கொள்கைகளின்படி வாழ்ந்த பெருந்தகையாளர் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.

 எளிய உணவு, எளிய உடை, எளிய வாழ்க்கை, தூய உள்ளம், தொண்டாற்ற விழையும் நெஞ்சம், இன்சொல் கூறல், நாட்டுப்பற்று, அழுக்காறு இல்லாத, அவா இல்லாத, கோபம் இல்லாத தூய வாழ்க்கை இவை எல்லாமே திரு.வி.க. காந்தியத்திலிருந்து பெற்றதுதான். அப் பெருந்தகை எழுதிய நூல்களிலேயே அவர் உள்ளத்துக்கு நிறைவானதும் அவர் மனதை மிகவும் கவர்ந்ததுமான நூல் ஒன்று உண்டென்றால் அஃது 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூல்தான். காந்தியடிகளின் திருவருள் நோக்கையும் அப் பெருமானின் மாசிலா மனதில் ஓர் இடத்தையும் பெற்ற பெரும்பேறு திரு.வி.க.விற்கு உண்டு.

 திரு.வி.க.வின் ஒரே குறிக்கோள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே. ஓர் இடத்தில் திரு.வி.க. இப்படி எழுதியுள்ளார், "நாட்டில் எல்லாம் நடைபெறலாம். அடிப்படையில் விடுதலை நோக்கிருக்க வேண்டும். தேசத்துக்காகவோ பதவி மோகமோ இருத்தல் கூடாது. அவர் கொண்ட அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைப்பவர் காந்தியடிகள் ஒருவரே'' என்று உறுதியாக நம்பினார்.

 நாட்டில் காந்தியடிகள் தலைமையில் மிகவும் வேகமாக விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. சுதந்திர வேள்விக்காக மக்களை அவர் தயார் செய்து கொண்டிருந்தார். அப் பணியில் அவர் ஓயாது உழைத்தார்.

 தமிழ் நாட்டில் திரு.வி.க.வும் 'தேசபக்தன்' வாயிலாகவும் கூட்டங்கள் வாயிலாகவும் சுதந்திரப் போராட்டப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் பணி நிமித்தமாக அவர் சேலம் சென்றிருந்தார். அங்கே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, "நான் அரக்கோணத்தில் காந்தியடிகளைச் சந்திப்பேன்'' என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய சேலம் விஜயராகவாச்சாரியார் திரு.வி.க.விடம் "நான் ஒரு கடிதம் தருகிறேன். அதை காந்தியடிகளிடம் கொடுங்கள்'' என்று கூறி, அக் கடிதத்தில் திரு.வி.க.வைப் பற்றியும் அறிமுகமாக சிறிது எழுதியிருந்தார்.

 அக் கடிதத்துடன் திரு.வி.க. சேலத்தில் இருந்து புறப்பட்டு, 18.3.1919 அன்று அரக்கோணம் சென்றார். ரயில் நிலையத்தில் காந்தியடிகள் வரும் வண்டியை நோக்கி நின்றார். அடுத்து என்ன நடந்தது என்று திரு.வி.க.வே எழுதுகிறார் பாருங்கள்.

 "பம்பாய் மெயில் ஓடி வந்தது. ஆருயிர் காந்தியடிகளைத் தேடிக் கண்டேன். வணக்கம் செய்தேன். முடங்கலை நீட்டினேன். அடிகளை அரிச்சந்திரனோ, புத்தரோ, திருவள்ளுவரோ என்று மனம் நினைந்தது'' உரையாடல் ஆரம்பமானது.

 "தேசபக்தன் எம் மொழிப் பத்திரிகை?'' - காந்தியடிகள்.

 "தமிழ்ப் பத்திரிகை'' - திரு.வி.க.

 "நீங்கள் பட்டதாரியா?'' - காந்தியடிகள்

 "யான் பட்டதாரி அல்லன். மெட்ரிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன். தமிழாசிரியனாக இருந்தவன். என்னால் நன்றாக மொழிபெயர்க்கத் தெரியும். தொழிற்சங்கக் கூட்டங்களில் வாடியா, அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சுகளை நான்தான் மொழி பெயர்ப்பேன்'' - திரு.வி.க.

 "என் பேச்சை மொழிபெயர்ப்பீரா?''

 "தொழிலாளர் கூடும் கூட்டத்தில் நானே மொழி பெயர்ப்பாளனாக இருப்பேன். மற்ற கூட்டங்களில் எப்படியோ?''

 "நீங்கள் மொழிபெயர்ப்பாளர்''

 காந்தியடிகளுக்கும் திரு.வி.க.வுக்குமான உரையாடல் இவ்வாறு அமைந்தது.

 அதுமுதற்கொண்டு திரு.வி.கவை காந்தியடிகள் காணும் போதெல்லாம், "என்ன மொழிபெயர்ப்பாளரே!'' என்றே அழைத்து வந்தார்.

 சில ஆண்டுகள் கழித்து சென்னையில் காந்தியடிகள் திரு.வி.க.வைக் கண்டபோது, "நீங்கள் மொழிபெயர்ப்பாளர் அல்லவா?'' என்று கூறிப் புன்முறுவல் பூத்தார். திரு.வி.க. தான் பிறந்த பயனை அடைந்தார்.

 சென்னைக்கு காந்தியடிகள் வந்தபோது "தேசபக்தன்' அலுவலகத்திற்கு அருகில் இருந்த 'திலகர் பவனம்' என்ற கட்டடத்தில் தங்கினார். அச்சமயம் காந்தியடிகளை அடிக்கடி கண்டு உரையாடும் பேறு திரு.வி.க.விற்குக் கிடைத்தது.

 சென்னையில் காந்தியடிகள் திலகர் பவனத்தில் திரண்டிருந்த கூட்டத்திலும், கடற்கரைக் கூட்டத்திலும் பேசினார். காந்தியடிகளின் பேச்சை திரு.வி.க.வே மொழிபெயர்த்தார்.

 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார். திரு.வி.க. உள்ளிட்ட ஒருசில பிரமுகர்களிடம் காந்தியடிகள், "சத்தியாகிரகி என்றொரு பத்திரிகை என்னால் வெளியிடப்படும். அதே பெயரில் அப்பத்திரிகை இங்கும் (தமிழில்) வெளிவருதல் வேண்டும். அப் பணிக்கு ஒரு கூட்டம் தேவை'' என்றார். காந்தியடிகள் கூறிய அக் கூட்டத்தில் திரு.வி.க.வும் இருந்தார்.

 (காந்தியடிகளின் விருப்பப்படியே 'சத்தியாகிரகி' தமிழில் வந்தது. வெளிவந்த நாள் 14.4.1919. எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் வெளியிட்டார். ஆசிரியர் குழுவினர் டி.பி.வெங்கடராம ஐயர், ஜார்ஜ் ஜோசப், கொண்டா வேங்கடப்பய்யா. வெளியீட்டின் பின்னணியில் நின்றவர் திரு.வி.க.)

 "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற நூல் திரு.வி.க.வின் வாழ்நாளிலேயே ஆறு பதிப்புகள் கண்டது. அந்நூலில் திரு.வி.க., "இன்று என் மன அமுதாகக் காந்தியடிகளை யான் காண்கிறேன். அக் காட்சியான் எனது உள்ளத்துற்ற மாறுதல் எனக்கே தெரியும்'' என்கிறார்.

 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அவர் சந்தித்த சோதனைகளாலும் துன்ப, துயரங்களாலும் அவர் சோர்ந்து விடாதவாறு அவரைக் காப்பாற்றி, தொடர்ந்து தொண்டாற்றும்படி செய்தது அவர் கண்ட காந்தியமே ஆகும்.

 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் வாழ்வு காந்தியமாகவே இருந்தது.
-க.துரியானந்தம்

நன்றி: தினமணி (14.08.2012)
.

8.8.12

ஏனிந்தப் போலித்தனம்?

தினமணி தலையங்கம்


லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?

ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?

இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!

பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.

ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.

அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?

ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.

தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.

ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!

இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?

பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.

இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?

ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.

தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

நன்றி: தினமணி (08.08.2012)

செய் அல்லது செத்து மடி!

சரித்திரம்

ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே நாளில்தான் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' (குவிட் இந்தியா) தீர்மானத்தைப் பிரேரேபித்து நிறைவேற்றினார்.

அதோடு தேசமக்கள் அனைவருக்கும் ஓர் எழுச்சிமிகு அதிரடி மந்திர வாசகத்தையும் வழங்கினார். 'செய் அல்லது செத்து மடி' என்று அந்த கொதிப்புமிக்க வீர வாசகமே நாடெங்கும் ஆகஸ்ட் புரட்சியைப் பீறிடச் செய்தது.

1942 ஜூன் இறுதியில் இரண்டாம் உலக யுத்த நெருக்கடி நிலை பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தைத் திக்குமுக்காடச் செய்தது. பர்மாவை ஆக்கிரமித்துத் தலைநகர் ரங்கூனைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் இந்தியா - பர்மா எல்லை நோக்கி விறுவிறுவென முன்னேறிக் கொண்டிருந்தன. ஏற்கெனவே சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணடைந்துவிட்டது. மேற்கே, வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமல் தலைமையிலான ஜெர்மானிய நாஜி ராணுவம் எகிப்தைக் கைப்பற்றி கிழக்கு நோக்கி முன்னேறியவண்ணம் இருந்தது.

ஜெர்மன்-ஜப்பான் படைகள் இந்தியாவில் சந்தித்து கைகோத்து வெற்றிகொண்டாடும் என யுத்த விமர்சகர்கள் ஹேஷ்யம் கூறினர். மலேயா, பர்மா நாடுகளிலிருந்து இந்திய அகதிகள் சாரிசாரியாக இந்தியாவுக்கு ஓடிவந்த வண்ணமிருந்தனர்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பிரதேசங்களில் கொள்ளைக் கூட்டத்தினரின் அட்டகாசம் பெருகிற்று. பஞ்சாப், ராஜஸ்தான், வங்காளம் வட்டாரங்களில் தானியப் பற்றாக்குறையால் கடும் பஞ்சம் உருவாகி வந்தது. இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அபாயம் நிலவியது.

இந்த இறுக்கமான நெருக்கடிச் சூழ்நிலையிலேதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி "இந்தியாவை விட்டு வெளியேறு'' - பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு உடனடியாய் விலக வேண்டும் என்கிற தீர்மானத்தை ஆராய்ந்து நிறைவேற்றுவதற்காக பம்பாயில் ஆகஸ்ட் 7, 8 (1942) தேதிகளில் கூடியது.

அந்தத் தீர்மானத்தை முன்வைத்து மகாத்மா காந்தி முதலில் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் ஆற்றிய நீண்ட, உணர்ச்சிகரமான உரை, நம் நாட்டு மக்களை உலுக்கி உறைய வைத்தது. அவ்வுரையின் சில வாசகப் பகுதிகள்:

"உங்களைச் சோர்வினின்றும் தட்டி எழுப்பி, உண்மையான ஜனநாயக ஆட்சி பெறுவதற்கான வழிமுறையை நான் இன்று உங்கள் முன் பிரஸ்தாபிக்கிறேன். போரிட்டுத்தான் சுதந்திரம் அடைய முடியும்; அது வானத்திலிருந்து தானாக வீழ்ந்து கிடைக்கக்கூடியதல்ல. இயன்ற அளவு தியாகங்களால் உங்களது உறுதி படைத்த வலிமையை நிரூபித்தால் பிரிட்டிஷார் வேறு வழியின்றி நமக்கு சுதந்திரம் அளிக்கத்தான் வேண்டும். என்னைப் பொறுத்தவரை அகிம்சை ஓர் அசைக்கவொண்ணா கோட்பாடு. ஆனால், நீங்கள் அகிம்சையை ஓர் அரசியல் கொள்கையாக மட்டுமே ஏற்கக்கூடும். கட்டுப்பாடான போர் வீரர்கள் போன்று நீங்கள் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து, அதனின்றும் சிறிதும் பிறழாமல் இந்த இறுதிப் போராட்டத்தில் செயல்படுவீர்களாக. இம்முறை நான், இந்திய சுயாட்சி, மந்திரிசபை போன்றவற்றிற்காக வைஸ்ராயுடன் பேரம் பேசப் போவதில்லை. பூரண சுதந்திரத்திற்கு எள்ளளவும் குறைவான வேறெதும் என்னைத் திருப்திப்படுத்தாது. ஒருக்கால் 'உப்புவரி நீக்கப்படும், மதுவிலக்கு அமலாகும் மாகாண மந்திரிசபைகளுக்கு அதிக அளவு அதிகாரம் வழங்கப்படும்' என்றெல்லாம் கூறி வைஸ்ராய் இறங்கி வரலாம். ஆனால், நான் பிடிவாதமாய்ச் சொல்வேன், 'பூரண சுதந்திரத்திற்குக் குறைவான வேறெதும் வேண்டாம்' என்று.

"இதோ, இத்தருணத்தில் ஒரு மந்திரம், சுருக்கமான தாரக மந்திரம், வழங்குகிறேன். அதனை நீங்கள் இதயத்தில் பதியுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், செயலும் அந்த மந்திரத்தின் வெளிப்பாடாக அமையட்டும். அந்த மந்திரம் இதுதான். "செய் அல்லது செத்துமடி'' . இந்தியாவை விடுவிப்போம், அன்றி அம் முயற்சியில் செத்து வீழ்வோம்! அடிமை வாழ்வு தொடர்வதைக்காண நாம் உயிருடன் இருக்க மாட்டவே மாட்டோம். நமது தேசம் அடிமைத்தளையில் கட்டுண்டு அவலப்படுவதைக் காண கணமேனும் பொறுக்க மாட்டோம் என்கிற அசைக்கவொண்ணா வைராக்கியத்துடன், ஒவ்வொரு காங்கிரஸ்காரனும், காங்கிரஸ்காரியும் இந்தப் போராட்டத்தில் குதிக்க வேண்டும். அதுவே உங்களது சபதமாக இருக்கட்டும். 'இனி சுதந்திரம் அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; அதை அடையும் முயற்சியில் எங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்' என்று கடவுளையும் உங்கள் சொந்த உளச்சான்றையும் சாட்சியாகக் கொண்டு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள். உயிரைத் தியாகம் செய்யத் துணிபவர் உயிர் பெறுவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிபவர்கள் அதனை இழப்பர், கோழைகளும் மன உரமற்றவர்களும் சுதந்திரத்திற்கு சற்றும் அருகதை அற்றவர்கள்.

இதுவே இந்நாடு முழுவதற்குமான எனது அறைகூவல்!

"சுதந்திர இந்தியாதான் தன்னிச்சையாக நேச நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு அபாயத்தை முழு வீச்சுடன் எதிர்த்து முறியடிக்க முடியும். ஆனால், இன்றோ இந்தியர்கள் அடிமைத் தளையில் பிணைபட்டு நடைப்பிணங்களாக ஆகிவிட்டனர். மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். இந்திய மக்கள் ஒளி வீசும் கண்படைத்தவர்களாகப் புத்துயிர் பெற வேண்டுமாயின் சுதந்திரம் இன்றே, இப்போதே வேண்டும்; நாளை அல்ல. ஆகவேதான் உடனடியாய் சுதந்திரம் பெற நாம் உடனடியாய் முனைவோம். அல்லது அம் முயற்சியில் செத்துமடிவோம் என்று சூளுரைப்போம்...''

நேரு - ஆசாத் யோசனையின் பேரில் ஒரு சில திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேறியது. வெளியில் அலைமோதிய ஆயிரக் கணக்கான மக்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது.

ஆகஸ்ட் 8 முன்னிரவில் திரும்பவும் கூடிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காந்திஜி இவ்வாறு அறிவுறுத்தினார்: "நமது இறுதிப் போராட்டம் இக் கணமே தொடங்கிவிட்டதாகக் கருதக் கூடாது. நீங்கள் அனைவரும் என் கையில் போராட்ட அதிகாரத்தை ஒப்படைத்து விட்டீர்கள். மேன்மை தங்கிய வைஸ்ராயைச் சந்தித்து காங்கிரஸின் உரிமைக் கோரிக்கையை ஏற்கும்படி மன்றாடுவதே எனது முதல் நடவடிக்கை. அதற்கு இரண்டு - மூன்று நாட்களாவது ஆகும். அதுவரை காத்திருங்கள்''.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் காத்திருக்கவோ காந்திஜிக்கு அவகாசமோ சந்தர்ப்பமோ அளிக்கவோ விரும்பவில்லை. மறுநாள் (1942 ஆகஸ்ட் 9-ம் தேதி) விடியற்காலை ஐந்து மணி அளவில் காந்திஜியும், பம்பாயிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களும் படுக்கைகளிலிருந்து எழுப்பப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாகவே ரகசியமாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

விடியற்காலையில் காந்திஜி கைதாகும்போது ஒரு சில பத்திரிகையாளர்களே அவ்விடத்தில் இருந்தனர். அவர்கள் மூலம் காந்திஜி இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்த சிலவரிச் செய்தி இதுதான்:

"அகிம்சை அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக அவரவர் இஷ்டப்படி மனதொத்த அளவில் செயல்படுவீர்களாக! ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம் போன்ற இதர அகிம்சை முறைகளைக் கையாளலாம். சத்தியாக்கிரகிகள் சாவுக்குத் துணிந்து வெளிவர வேண்டும். உயிர் வாழ்வதற்காகப் பின்வாங்கக் கூடாது. தனிநபர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடினால்தான் தேசம் உயிர் வாழும். 'கரேங்கே யா மரேங்கே' (செய்வோம் அல்லது செத்துமடிவோம்).''

பூனாவுக்கு அருகில் ஆகாகானுக்குச் சொந்தமான ஓர் தனித்த பழைய அரண்மனையில் ஒரு பகுதியில் மகாத்மா காந்தி காவலில் வைக்கப்பட்டார். சரோஜினி நாயுடு, மீராபெஹன், காந்திஜியின் செயலர் மகாதேவ் தேசாய் ஆகியோரும் அதே அரண்மனையில் காந்திஜியுடன் காவலில் வைக்கப்பட்டனர். அன்று மாலை பம்பாயில் காந்திஜி பேசவிருந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசப் போவதாக அறிவித்த காந்திஜியின் மனைவி கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகாகான் அரண்மனையில் காந்திஜியுடன் சிறைவாசம் தொடங்கினார். (கைதான மறுவாரமே, ஆகஸ்ட் 15 அன்று மகாதேவ் தேசாய் மாரடைப்பால் மரணமடைந்தார்).

அன்றைய தினமே (1942 ஆகஸ்ட் 9) நாடு முழுவதும் போலீஸார் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாகாண, மாவட்ட, நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்தனர். அனைத்துக் காங்கிரஸ் குழுக்களும் சட்டவிரோதமானவை எனத் தடை செய்யப்பட்டது; அவற்றின் நிதிகள் முடக்கப்பட்டன. பத்திரிகைகளும் அச்சகங்களும் காங்கிரஸ் இயக்கங்கள் பற்றியோ அதற்கெதிரான அரசாங்க அதிரடி நடவடிக்கைகள் பற்றியோ செய்திகள் வெளியிடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்து, அதைத் தொடர்ந்து படுகள அடக்குமுறையை அரசாங்கம் அவிழ்த்துவிட்டதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படித்த வகுப்பினர்களும் கொதித்தெழுந்தனர். வன்முறை வெடித்தது. காவல் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தபால் நிலையங்கள் தீக்கிரையாயின. ஆங்காங்கே தந்திக் கம்பிகளை அறுத்தல், ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தல், பாலங்களுக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தல், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்குதல் போன்ற அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின. அரசாங்கம் போலீஸ் அடக்குமுறையை மென்மேலும் முடுக்கிவிட்டது. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கைதுகள், தடியடிகள், விசாரணையின்றி சிறைவாசம் மலிந்தன.

அரசாங்கம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் ஆகஸ்ட் புரட்சி வலுவிழந்து, அடுத்த இரண்டே மாதங்களில் பிசுபிசுத்துவிட்டது. தலைமறைவான இடதுசாரி காங்கிரஸ் தலைவர்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடத்திய ரகசிய இயக்கமும் 1943-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடுக்கப்பட்டுவிட்டது.

1943 நவம்பரில் உடல்நலம் மிகக் குன்றி, படுத்த படுக்கையாக இருந்த கஸ்தூர்பா காந்தி, 1944 பிப்ரவரி மாதம் உயிர்நீத்தார். அன்னாரது உடல், ஆகாகான் அரண்மனை மைதானத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின், காந்திஜி கடும் மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்டார். அத்துடன் ரத்த சோகையும், குறைந்த ரத்த அழுத்தமும் அவரை வாட்டின.

"மிஸ்டர் காந்தியின் உடல்நிலை மிகவும் குன்றிவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடும் நிலையில் அவர் இல்லை. சிறைக் காவலில் அவர் மாண்டு போனால் மக்களிடையே அரசாங்கத்திற்கு விரோதமான உணர்வு மேலோங்கும்'' என்று வைஸ்ராய் லண்டனுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் விளைவாக, காந்திஜியை 'உடல்நிலை காரணமாக' விடுவிக்க, 1944 மே 6-ஆம் தேதி வைஸ்ராய் உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி மிக்க மன - உடல் சோர்வுடன் வெளியே வந்தார். அதுவே அவரது கடைசி சிறைவாசம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1945 ஜூன் 14 அன்று காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

1944 ஜூலை 28 அன்று காந்திஜி வெளியிட்ட அறிக்கையில் அவர் பின்வருமாறு கூறினார்: "... பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிப்பது உட்பட நாச வேலைகள் அனைத்துமே வன்முறைச் செயல்களே ஆகும். 'நடந்து போன அத்தகைய செயல்கள் மக்களின் மனத்தையும் ஆர்வத்தையும் உணர்ச்சிகரமாக உத்வேகித்தன' என்றெல்லாம் என்னிடம் பலர் எடுத்துக்காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் அந்த நடவடிக்கைகள் நமது தேசிய இயக்கத்திற்கு தீங்கு விளைவித்துவிட்டன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை''.

ஆம்! ஆகஸ்ட் புரட்சியின் சில விளைவுகள் அரசியல் களத்தில் காங்கிரசுக்குப் பாதகமாகவே அமைந்தன. ஏறத்தாழ மூன்றாண்டு காலம் (1942-1945) காங்கிரஸ் தடை செய்யப்பட்டுச் செயலிழந்து கிடந்தது. தலைவர்கள் சிறையில் இருந்தனர். அதன் நிதிகள் முடக்கப்பட்டுவிட்டன. நடைமுறையில் காங்கிரஸ் ஸ்தாபனம் நிலைகுலைந்து ஸ்தம்பித்துவிட்டது எனலாம். முஸ்லிம் லீக் கட்சிக்கு இது ஒரு எதிர்பாராத நல்லதிருஷ்டமாகவே அமைந்தது. அத்தகைய தேசிய அரசியல் சூன்ய காலகட்டத்தில் முகமதலி ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக் ஒரு பலம் பொருந்திய கட்சியாகக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. பாமர முஸ்லிம் மக்களின் மத உணர்வைத் தூண்டிவிட்டு, தனி நாடு கிடைக்காவிடின் சுதந்திர இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய நேரிடும். இஸ்லாமுக்குப் பேராபத்து என்றெல்லாம் திகிலைக் கிளப்பி, காங்கிரஸýக்கு எதிராகத் தனிப் பெரும் கட்சியாக லீக் தலையெடுத்து, இந்தியப் பிரிவினைக்கு வழிகோலியது.



-லா.சு.ரங்கராஜன்
நன்றி: தினமணி (07.08.2012)
.