நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.12.10

அறிவியல் தமிழின் புதல்வர்



பெ.நா. அப்புசுவாமி
. 
பிறப்பு: டிச. 31

தலைப்பாகையும்  பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில்,  லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த  பெ.நா.அப்புசுவாமி.

1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை லகுவாகத் தாண்டும். தள்ளாத பிராயத்தில் தான் எழுதிய படைப்பை ஹிந்து  பத்திரிகைக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகத்துக்கு நடந்தபோது தான் இந்த ஜாம்பவான் காலமானார் (1986 , மே 16)

படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம், அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமைதரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார்.

1936ல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளி யாத்திரை பற்றி எழுதியவர், துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரி சாட்டிலைட்) பற்றி 1965ல் அதே உற்சாகத்தோடு எழுதுகிறார். 'பண்டித நேருவைப் பறி கொடுத்தோமே' என்று கிராமபோனில் கேட்டு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நெக்குருகிக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கும் அப்புசாமி,  நவீன அறிவியல் கோட்பாடான மேதமை அமைப்பு (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னனு மொழிபெயர்ப்பு பற்றி 1960களின் இறுதியில் தமிழில் முதலாவதாக எழுதுகிறார்.

அது மட்டுமில்லை, "நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகி வருகிறது" என்று அவர் கணினிப் புரட்சிக்கு இருபது வருடம் முந்தைய   1969 லேயே அறிவியல் ஆருடம் சொல்லிவிடுகிறார்.


கமிட்டி போட்டுக் கலந்தாலோசித்து நத்தை வேகத்தில் தமிழில் கலைச் சொல்லாக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புசுவாமி அலட்டிக்கொள்ளாமல் 'பொங்கியெழுகேணி' (artesian well),  நுண்துகள்கொள்கை (corpuscullar theory), அறிவுக்குறி எண் (intelligent quotient) என்று போகிற போக்கில் நல்ல தமிழ்த் தொடர்களை வீசிப் பிரமிக்க வைக்கிறார்.

"வயிற்றோட்டமும் பலவீனமும் இருப்பின் அரை அல்லது ஓர் ஆழாக்கு சாராயம் தரலாம்" என்று கள்ளுக்கடை மறியல் காலத்தில் இவர் எழுதிய கட்டுரையும் சிறிய தரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.இந்த வைத்தியம் மனிதனுக்கு இல்லை, நோய் கண்ட பசுமாட்டுக்கு.

தமிழிலிலும் அறிவியல் கற்பிக்க முடியும் என்று நிரூபித்தவர், அறிவியல் தமிழ் எழுத்தாளர்  பெ. நா.அப்புசுவாமி.
அன்னாரது பிறந்த நாள்: 1841,  டிச. 31
 .

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்



காண்க:
தியாகி விஸ்வநாத தாஸ்
விடுதலைப்போரில் தமிழர்கள்
மறந்துபோன வரலாற்றிலிருந்து 
நாடக வீரர் விஸ்வநாத தாஸ் (விக்கி கட்டுரை)
.

எது நமக்கு புத்தாண்டு?


ஜனவரி - 1
புத்தாண்டா?
'நியூ இயரா?'
இரண்டுக்கும் இடையில்
என்ன வித்தியாசம்?

இங்கிலாந்து சென்று
சித்திரை முதல் தேதி
'ஹேப்பி நியூ இயர்'
சொல்லிப் பாருங்கள்-
வித்தியாசம்
புரியவைக்கப்படும்.

காலண்டர் மாற்றுவதாலும்
டைரி மாற்றுவதாலும்
ஜனவரி -1
புதிய ஆண்டு தான்.
விசேஷ நாட்களில் கூட ஒன்று.
விடுமுறை நாட்களில் கூட ஒன்று.
ஜனவரி -1 ஐ
கொண்டாட வேண்டியது தான்.

ஆனால்-
எது நமக்கு புத்தாண்டு?
புத்தாண்டைப் புரியாமல்
பூரித்துப் பயனென்ன?

செப்புமொழி பதினெட்டோடு
பத்தொன்பதாய்
ஆங்கிலமும் பயில்வதில்
பெருமை தான்.

ஜனவரி -1 ஐ
மகிழ்ச்சியாய் வரவேற்போம்.
எனினும்
புத்தாண்டை வரவேற்க
சித்திரைக்கே காத்திருப்போம்!

-வ.மு.முரளி

காண்க:
.

30.12.10

முடி காணிக்கையின் விளக்கமானவர்


மானக்கஞ்சாற நாயனார்

திருநட்சத்திரம்:
மார்கழி - 15 - சுவாதி
(டிச. 30)

கஞ்சனூரில் வாழ்ந்தவர் மானக்கஞ்சாறர். சிவனடியார் சேவையே வாழ்வின் அரிய பயன் என்று வாழ்ந்தவர். இவரது  அருமை மகளுக்கும், ஏயர்கோன் கலிக்காமருக்கும் (இவரும் ஒரு நாயன்மாரே) திருமணம் நடக்கவிருந்த நாளில், மானக்கஞ்சாறரின்  பக்தியை சோதிக்க, மாவிரத முனிவர் வடிவில் அவரது வீட்டிற்கு வந்தார் ஈசன்.

மணமேடையிலிருந்த  அவருடைய மகளின் நீண்ட கூந்தலை தனது 'பஞ்சவடி' எனப்படும், தலை முடியால் அகலமாகப் பின்னப்பட்ட மயிர்க்கயிற்றைப் பூணூலுக்குத் தேவை எனக் கூறி, அந்த அழகிய கூந்தலை தானமாகக் கேட்டார்.

உடனே சிறிதும் தயங்காமல் அப்படியே செய்தார் மானக்கஞ்சாறர். அவரது பக்தியை உலகறியச் செய்த ஈசன், முன் மாதிரியே அழகிய கூந்தலை அவரது மகளுக்கு அளித்து, திருமணம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எஞ்சிய நாளில் ஈசன் தொண்டாற்றி கயிலைபதம் அடைந்தார் மானக்கஞ்சாறர். 

அனைத்தும் இறைவனின் உடைமையே என்ற அடக்கமான உணர்வையே முடி காணிக்கை. உணர்த்துகிறது. அதன் உச்சபட்ச வடிவமாக மானக்கஞ்சாறர் விளங்குகிறார். அதன் காரணமாக நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் பேறு பெற்றார்.

காண்க:
மானக்கஞ்சாற நாயனார் (விக்கி)
டிசம்பர் மாத அடியார்கள் (தினகரன்)
மானக்கஞ்சாற நாயனார் (வீடியோ)
திருத்தொண்டர் புராணம்
MAANAKKANJAARA NAYANAR 
பெரியபுராணச் சொற்பொழிவு
தமிழ்க் களஞ்சியம்
பெரிய புராணம் (திண்ணை)
தேவாரம்
கஞ்சாறு தல புராணம்
.

27.12.10

மனைவியையும் தானமளித்த அடியார்

இயற்பகை நாயனார்
திரு நட்சத்திரம்:
மார்கழி - 12 - உத்திரம்
(டிச.27)
  
காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் உதித்தவர் இயற்பகையார். சிவனடியார் எது விரும்பினாலும் இல்லை என மறுக்காமல் தந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இல்லறத்தின் நற்பயன் சிவனடியாரை காப்பதே என்பது அவரது வாழ்வின் தெளிவாக இருந்தது.
அவரை சோதிக்க விரும்பிய ஈசன், வேதியர் வேடம் தாங்கி அவரது வீட்டிற்கு வந்தார். தான் என்ன கேட்டாலும் தர வேண்டும் என்று கோரி, இயற்கையாரின் மனைவியை தம்முடன் அனுப்புமாறு கேட்டார். இதுகேட்டு சிறிதும் தயங்கவில்லை, இயற்பகையார்.  அதன் படியே தம் மனைவியை சிவனடியார் வடிவில் வந்த ஈசனுடன் அனுப்பி வைத்தார். அவரது மனையாளும் கணவனின் சிவா கைங்கர்யத்திற்கு எதிர்ப்பேச்சு பேசாமல் சிவனடியாருடன் சென்றார்.
அவர்களுக்கு மற்றவர்களால் இடையூறு நேரா வண்ணம் தாமே காவலாக வாளேந்தியும் வந்தார். இதுகண்டு சீற்றமடைந்து தன்னை எதிர்த்த சுற்றத்தாருடன் போரிட்டு அவர்களை விரட்டினார்.  இதன்மூலம் இயற்பகையாரின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்திய ஈசன்,  நாடகத்தின் இறுதியில் அவருக்கு காட்சி தந்து ''பல்லாண்டு காலம் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இறுதியில் எம்மை வந்தடைவாய்'' என வரமளித்து மறைந்தார். இயற்பகையார் அவ்வண்ணமே வாழ்ந்து இறுதியில் ஈசன் கழலினை அடைந்தார்.
ஈசனின் அடியாருக்கு சேவை செய்ய தனது மனைவியையே தானம் அளித்த இயற்பகையார், பக்தியின் உச்சநிலைக்கு உதாரணமாகத் திகழ்கிறார். இதன்மூலம், நாயன்மார்களில் ஒருவராக இயற்பகையார் உயர்வு பெற்றார். பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் சோதனைகள் அவர்களது வைராக்கிய உள்ளத்தைப் பரிசோதிக்கவே என்பதையே இயற்பகையாரின் வாழ்க்கை காட்டுகிறது.
காண்க:
.

26.12.10

வில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்

                         
                      தலைநகர் சென்னையில் உள்ள அந்த பிரதான சாலையில் பரபரப்புடன் ஆயிரக் கணக்கான வாகனங்கள் பறந்து சென்றுகொண்டிருந்தன.
 
                     அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள்....
                     பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள்....
                     என, பலதரப்பட்ட மக்களும் பேருந்துகளில்,  இரு சக்கர வாகனங்களில்,   பயணித்துக் கொண்டிருந்த நேரம்: காலை 9 .00 மணி. எங்கிருந்தோ கூட்டமாய் வந்த சுமார் 150 மாணவர்கள் அந்த பிரதான சாலையை ஆக்கிரமித்தனர்; வாகனங்களைச் செல்ல விடாமல் மறித்தனர். கொஞ்ச நேரத்தில் வாகனங்களின் அணிவரிசை சாலையை அடைத்தது .

                     மக்களின் உணர்வுகளில் ஆவேசம்,  பதட்டம்,  ஆதங்கம்....
                     ஆதி திராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட,  பழங்குடி மாணவர்கள் அடிப்படை வசதிகளைக் கோரியே இந்தப்  போராட்டம். 

                     தங்களது குறையை நீக்க நியாயமாக இவர்கள் அரசாங்கத்தை,  அரசியல் கட்சிகளை, ஆதி திராவிட நலவாரிய அதிகாரிகளை எதிர்த்து அல்லவா  போராடி இருக்க வேண்டும்?

                     4 மணி நேரத்துக்கும் மேலாக சாலையை-   அதுவும் காலை 9 .00 மணி முதல் மதியம் 1 .00 மணி வரை - ' பீக் ஹவர்'  என்று சொல்லப் படுகின்ற நேரத்தில்-   மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் , தொழிலாளர்கள் , வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்டவர்களின் பயணத்தை முடக்கிப்போட்ட மாணவர்களை,  தயக்கத்துடன் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த காவல் துறை அதிகாரிகளை, என்னவென்று சொல்வது?

                     கோடிக் கணக்கான நிதியை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்குகின்ற மத்திய,  மாநில அரசுகள் நிதியை சரியாக, முறையாகப் பயன்படுத்தாததால் பாதிக்கப்பட்டது யார்?  மாணவர்கள் மட்டுமல்ல, அந்த மாணவர்களால் சமுதாயமும் தானே!

                    விடிந்தால் 'சமூக நீதி காத்த வீரர்கள்',  'இட ஒதுக்கீடு நாயகர்கள்',  'திராவிடத்தைக் காக்க வந்த தெய்வப் புதல்வர்கள்' என்றெல்லாம் தொண்டர்கள் மூலம் தங்களை புகழவைத்துப்  புளகாங்கிதமடையும் இன்றைய அரசியல் வாதிகளால் இளைய சமுதாயம், எதிர்காலத் தலைவர்களான மாணவர்கள் பொது அமைதிக்கு வில்லன்கள் ஆகலாமா?
 
-ம.கொ.சி.ராஜேந்திரன்
 
காண்க:
 

25.12.10

தமிழகத்தின் வீரப் பெண்மணி



வேலு நாச்சியார்
மறைவு: டிச. 25


வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது (1730)  இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி,  ராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். அரச குல வழக்கப்படி, வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.

இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம்பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று ராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது.  நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப்.  நேரம் பார்த்து நெருங்குவான்; நெருக்குவான்; கழுத்தை நெரித்துவிடுவான்.

சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல.  போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார், வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள்- வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையார்  கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தன; கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார்; இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது; கதறிஅழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார்;  எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். 

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். 

ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையார்  கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையார் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.

தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார்.  கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். 

ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் லட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.

வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது,  நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. 

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். 

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. 

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள். 

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில்  (25.12.1796)  இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.


காண்க:
வேலு நாச்சியார் (விக்கி)
வீர மங்கை வேலு நாச்சியார் (ஈகரை)
முதல் இந்திய வீரப் பெண்மணி
சிவகங்கை சீமை
நெருப்பைச் சுமந்த மலர்
சிவகங்கை சீமையின் வீர மங்கையர் (விஜயபாரதம்)
துரோகம் செய்தால் காசை வெட்டு (தினகரன்)
சிவகங்கை அரண்மனை (மணா)
Rani Velu Nachiyar
.

ஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு




மதன் மோகன்
மாளவியா

பிறப்பு: டிச. 25 (1861)


மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்கான பொருளைப் பெற, பல  ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார்;  பொருள் பெற்றார்.

காசியை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்றார் மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார்.

அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தான்.

சபை ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. மாளவியா அந்தக் காலணியை கையில் எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி மன்னர் பிரானே” எனக் கூறி, அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

வந்தவர், அரண்மனை வாசலில் ஒரு மேடையின் மீது ஏறி நின்று, “பெரியோர்களே, காசி மாநகரத்துச் சீமான்களே, சீமாட்டிகளே இதோ காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி... ஏலத்திற்கு விடப்போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம்''  எனச் சத்தமிட்டுக் கூவினார்.

பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து, கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர்.

இதைப் பார்த்த அரண்மனை அதிகாரி அவசரமாக உள்ளே ஓடி “அரசே உங்கள் காலணி ஏலம் போடப்படுகிறது. கால்பணம், அரைப்பணமாம். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதிமந்திரியை அழைத்தார்.

“ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள். என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். நிதிமந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது.

முடிவில் நிதிமந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச் செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா அவர்கள் “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக் கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச் சென்றார்.

-டாக்டர் கு.ஞானசம்பந்தம்
நன்றி: தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற மாத இதழ்) 

.

இரவல் 'டிரான்சிஸ்டர்'


ராஜாஜி
நினைவு: டிச. 25 (1972 )

1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் 'டிரான்சிஸ்டர்' ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள். 'கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்' என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதிய ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மாமனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதிய மகான் அவர்; அவர்தான் ராஜாஜி!

-ஆர்.சீனிவாச மூர்த்தி
நன்றி: துக்ளக் (29.12.2010)
காண்க: ராஜாஜி

24.12.10

தமிழகத்தின் பகுத்தறிவு பகலவன்






பெரியார்
ஈ.வே.ராமசாமி

நினைவு: டிச. 24

:
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் .வெ. ராமசாமி, (செப். 17, 1879 - டிச. 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் 
தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத்  தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும்,  பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றவைஇவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் பல தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை,  தீண்டாமை,  மூடநம்பிக்கை,  வர்ணாஸ்ரம தர்மம்பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
இம் மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை,  கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்ற கருதுகோளை முன்வைத்து.வெ.ரா,  தீவிர நாத்திகராக இருந்தார்.  ஆரிய- திராவிட பேதத்தை அரசியல் கருவி ஆக்கியவர் இவரே. இன்றும் தமிழகத்தின் அரசியலில் திராவிட வாதம் பேரிடம் வகிக்கிறது.
அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்  கிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார்.
 இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும்தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவரது கருத்துக்கள் சர்சைக்குரியவையாக இருப்பினும், ஏற்க இயலாதவை என்றாலும், தமிழகத்தின் வரலாற்றில் பெரியாரின் பங்களிப்பு புறக்கணிக்க இயலாதது.
நாட்டு ஒற்றுமைக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சியில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய இவர் இறுதிக்காலத்தில் நாட்டு ஒற்றுமைக்கு எதிராக முழங்கியதை காலத்தின் கோலம் என்றுதான் கொள்ளவேண்டும்.
 தீண்டாமைக்கு எதிரான இவரது வைக்கம் போராட்டம், மதுவிலக்கு போராட்டங்கள் புகழ் பெற்றவை. தள்ளாடும் வயதிலும் கிராமம் கிராமமாகச் சென்று பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் பெரியார். ஹிந்து மதம் குறித்த அவரது கருத்துக்கள் பலரது உள்ளத்தைப் புண்படுத்துபவை என்றாலும், கொள்கைக்காக இறுதிவரை வாழ்ந்தவர் அவர் என்பதை மறுக்க முடியாது.

காண்க
.வெ.ராமசாமி (விக்கி)
பெரியார் .வெ.ரா
தமிழ்ப் பெரியார்கள்- .வெ.ரா
பெரியாரின் மறுபக்கம் 
PERIYAR E.V.RAMASAMY 
About Periyar