எல்லா செய்திகளையும் விட ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. அந்தச் செய்தி:
“தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை சீரமைப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. பாதித்த மாவட்டங்களைப் பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,600 கோடி அளிக்க கோரிக்கை...”
- என்று செய்தி தொடர்கிறது.
வருண பகவான் பருவந்தோறும் வருகிறான், கை வண்ணத்தைக் காட்டுகிறான். ஏதோ தன் கடமையை சரியா செய்வதாய் நினைத்துக்கொண்டு. ஆனால், நாமோ, நமது அரசு நிர்வாகமோ.... ஒவ்வொரு முறையும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்...
'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...' என்பது பழமொழி. கோயிலிருந்தால், அதன் அருகில் குளம் இருக்கும். குளம் இருந்தால் ஊருக்குள் வளம் இருக்கும். ஆக, கோயில் நல்ல உள்ளத்திற்கும், குளம் நல்ல வளத்திற்கும் அடையாளங்களாகத் திகழ்ந்தன.
ஆனால், இன்று இவையிரண்டும் தன் பெருமைகளை இழந்து நம்மாலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமையாலும், கால்வாய்கள், மதகுகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், புதிய அணைகள், ஏரிகள், குளங்கள் உருவாக்காததாலும், மழைநீர் வெள்ளமாய் ஊருக்குள் புகுந்து தன் கைவரிசையைக் காட்டுகிறது.
வள்ளுவன், “ஊருக்கு நடுவிலுள்ள குளம் போல், உயர்ந்த குணமுள்ளோரின் செல்வம் மக்களுக்கு பயன்படும்” என்று ஒரு குறளில் சொல்வான்:
'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு'
- குறள் (215)
ஆனால் தற்போது, மழைக்காலங்களில் குளத்தின் நடுவில் ஊர் இருக்க யார் காரணம்?
ஆமாம், மேலே சொன்ன குறளில் வள்ளுவன் சொன்ன செல்வம் எது? பணமா? இல்லை... பெரியோர்கள் சொன்ன 16 செல்வங்களா?
கேள்வியைக் கேட்டுவிட்டேன். கருத்துக்கள் உங்களிடமிருந்து, நமக்காக....
- ம.கொ.சி.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக