நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.1.11

பாரதத்தின் சாரம் சொன்னவர்

திருவள்ளுவர் 
திருவள்ளுவர் தினம்: ஜன. 16

திருவள்ளுவரைப் பற்றிய கதைகளுக்கு தமிழகத்தில் பஞ்சமில்லை. ஆதி, பகவன் ஆகியோரின் மகன்; திருமயிலையில் பிறந்தவர்; சமண மதத்தைச் சார்ந்தவர்; வாசுகி என்ற கற்புடைய மனைவியின் கணவர்; வள்ளுவர் இனத்தைச் சார்ந்தவர்; சமரசப் பொதுநோக்கு உடையவர்... இவ்வாறெல்லாம் திருவள்ளுவர் குறித்த சித்திரங்கள் தீட்டப்படுகின்றன. சூரியனை எப்படி அழைத்தாலும் சூரியன் தானே. எனவே அவரது வாழ்க்கை சரிதம் பற்றிய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அவரது இலக்கியச் செழுமையை ஆராய்வோம்.

தமிழக அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறது. பொங்கலை அடுத்து வரும் நாளை திருவள்ளுவர் தினமாக அறிவித்து அதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டும் (இந்த ஆண்டு 2041 - 42)  அரசால் கடைபிடிக்கப்படுகிறது. ஒப்புக்கு என்றாலும், அவரை நினைவுறுத்த இந்த ஒரு நாள் கிடைத்ததே என்ற உவகையுடன், அரசின் உள்நோக்கம் தவிர்த்து நாமும் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடலாம், தவறில்லை.

பாரதத்தின் அடிப்படை லட்சியமான தர்மார்த்த காம மோட்சம், பகவத் கீதை முதற்கொண்டு பாரதத்தின்  எந்த ஒரு பழமையான இலக்கியத்திலும் ஒளிவீசும். அதில் திருவள்ளுவரின் குறளும் விதிவிலக்கில்லை. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களில் 1330 குறட்பாக்கள் வாழ்வின் இலக்கை விளக்குகின்றன.   வீடு எனப்படும் மோட்சம் குறித்து தனி பால் அமைக்கவில்லை என்றாலும், அறத்துப் பாலில் வீடு குறித்த குறட்பாக்கள் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. பிறவிப் பெருங்கடல் நீந்துவது எப்படி என்ற முதல் அதிகாரப் பாடலே திருவள்ளுவரின் தேசிய இலக்கியப் பழக்கத்திற்குச் சான்று.

தனது குறளில் எந்த ஒரு இனம், மொழி, மதம், காலம், இடம்  குறித்தும் உரிமையுடைவராக எழுதாமல் சென்றதன் மூலமாக, திருவள்ளுவர் எக்காலத்திற்கும் ஏற்ற  பொதுமறை நாயகராகத் திகழ்கிறார். அவரது புகழ் பாடுவதைவிட, அவரது குறளில் ஒன்றையேனும் கடைபிடித்தால், வாழ்வில் ஏற்றமும், நாட்டில் நன்மையையும் விளையும். இதுவே இன்றைய தேவை.
காண்க:
திருவள்ளுவர் (விக்கி)
திருவள்ளுவர் (தமிழ்வு)
திருக்குறள்.com
THIRUVALLUVAR
திருவள்ளுவர் (ஈகரை) .
உலகப் பொதுமறை கண்ட தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக