நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

1.1.11

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?


                     ஒரு திரைப்படப் பாடல் "கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின்,  பிரபல நடிகர்  நடித்த அத்திரைப்படத்தில் (இந்தியன்) ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றபோது, கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் ஊரோடு சேர்ந்து பாடும் காட்சியாக அது அமைந்திருந்தது.

                     ஆனால், நம் நாட்டை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களோ, பிரெஞ்ச்காரர்களோ இந்த நாட்டில் விட்டுச் சென்ற பல்வேறு எச்சங்களை நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம் என்பது கவலை தரும் விஷயம்.

                     ''இரவில் வாங்கினோம்  சுதந்திரம்... இன்னும்  விடியவே இல்லை'' என்னும்படியாக மேலைநாட்டவனின் அடிமைப்படுத்தும் அடையாளங்களை இன்னும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

                     ஆங்கிலேயரின் நடை, உடை, பாவனையில் தங்களை வெளிப்படுத்துவதில் நாம் மகிழ்வடைகிறோம். ஆங்கில மொழியோடு தமிழ் கலந்து 'தங்க்லீஷ்' பேசுவதை கௌரவமாகக் காண்கிறோம். ஆங்கில உரையாடலில் தவறு நேர்ந்தால் வருத்தப்படும் தமிழ் மேதாவிகள், தமிழில் பிழையுடன் பேசினால் சிறிதும் வருந்துவது இல்லை.

                     "நேற்று: இங்கு ஹிந்தி கற்று தரப்படும்; 
                       இன்று: இங்கு ஆங்கிலம் கற்று தரப்படும்;     
                       நாளை: இங்கு தமிழ் கற்று தரப்படும்."
                    -மேற்கண்ட விளம்பரப் பலகைகளைக்  காணும் நிலை, நமது செம்மொழியாம் தமிழ் அன்னைக்கு வந்துவிடக் கூடுமோ?

                    மேலும் தமிழகத்தில் மட்டுமே ஒரு விசித்திரமான போக்கைக் காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது. என்ன அது? சற்று யோசிப்போம்...

                     தமிழகத்தில் நான்கு வகையான புத்தாண்டு கொண்டாடும் அதிர்ஷ்டம் தமிழர்களாகிய (?) நமக்குக் கிட்டியுள்ளது:

                  1 . ஆயிரக் கணக்கான வருடங்களாக  நமது முன்னோர்களால் விஞ்ஞானத்தின் படி கொண்டாடப்படும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு.

                  2. தமிழ் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட தைப் புத்தாண்டு.

                  3. கிறிஸ்துவர்கள்  ஜன. 1 ல் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு.

                  4. இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஹிஜ்ரி புத்தாண்டு.

                - இதில் எது நமது சுதேசி வாழ்வியலுக்கு வலுவூட்டும் புத்தாண்டு? உங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

                 இன்னொன்றும் இங்கே குறிப்பிட அவசியமாகிறது. மேலைநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்தால் டிச. 31 ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பல அநாகரீக நிகழ்வுகள் மெல்ல நமது இளைஞர் சமுதாயத்தை அடிமைப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

               பல நட்சத்திர விடுதிகளில் இரவு முழுதும் மது அருந்துதல், இளம் பெண்களும்  ஆண்களும் கூடி நடனம் ஆடுதல், கேளிக்கைக் கூத்துகள் என்றெல்லாம் எதிர்கால வாழ்க்கையை வரவேற்கிறார்கள்.

               போதைக்கு அடிமையாவதும் ஆபாச எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுப்பதும்  இன்றைய இளைய தலைமுறைக்கு சகஜமாகி வருவதையும்  காண்கிறோம்.  இதற்கு அரசாங்கமும் துணைபோவதுதான் வெட்கக்கேடு.

                பண்டிகைகளும்,  விழாக்களும் நமது முன்னோர்களால்  வாழ்வில் மக்களை ஒன்றிணைக்கவும் உறவுகளை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டவை. அவை சமுதாயத்தின் பலமாக இருந்தன. இன்றோ, அது  தலைகீழாக  மாறிப் போனது. உலகிற்கே வழிகாட்டும் பண்பாடும் கலாச்சாரமும் கொண்ட நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்?

                மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்ற பாடல் நினைவுக்கு   வருவதைத்  தவிர்க்க முடியவில்லை.

-ம.கொ.சி.ராஜேந்திரன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக