நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

22.1.11

சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர்
திருமழிசை ஆழ்வார்

திருநட்சத்திரம்: தை - 8 - மகம் 
(ஜன.22) 

திருமழிசை வைணமும்  சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி.  திருமழிசை என்னும் இந்த திருத்தலம். மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும்,  சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படுபவருமான  திருமழிசை ஆழ்வார் தோன்றினார். அவரது அவதாரம் குறித்த கதை இதோ...

தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய திருமழிசைத் திருத்தலத்தில்,  முனிவருக்கும், இவரது பத்தினி கனகாங்கிக்கும் 12 திங்கள் கருவில் உருவாகி,  சித்தாத்ரி ஆண்டு,  தைத் திங்கள் தேய்பிறை கிருஷ்ணபட்சம் பொருந்திய பிரதமை திதியின் ஞாயிற்றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆழி அம்சமாய் உடலில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம் பிறந்தது. மலையத்தனை வருத்தத்தை மனதில் கொண்டவர்களாய் அந்தப் பிண்டத்தை அருகில் இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்கள் அந்தத் தம்பதியர்.

திருமாலும்  திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண்டத்துக்கு உயிர் கொடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையாக மாற்றினார்கள். அவர்கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு வந்த திருவாளன் என்ற வயதான வேளாளன் அந்தக் குழந்தையைத் மகிழ்வுடன் எடுத்துச் சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான்.

திருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்காமல் சிறுநீர் கூடக் கழிக்காமல் அழுது கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட, அந்த ஊரில் சான்றோனான ஒரு முதியவர் வந்து பாலைக் கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த மீதிப்பாலைக் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற்றோர்கள் வாலிபம் திரும்பி இளையவர்களாக மாறி கணிகண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன்தான் திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.

திருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையும் பொருட்டு சீக்கியம், பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில் சேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கியம் என்ற பெயருடன் சிவவாக்கியர் திருஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.

பிறகு திருமயிலை வந்து பேயாழ்வாரைச் சந்தித்தார். அவர் நாராயணின் திருமந்திரத்தை இவருக்கு முறைப்படி உபதேசித்து இவரை ஸ்ரீவைஷ்ணவராக்கினார். அதன்பின் திருமழிசைக்கு வந்து அங்கிருந்த கஜேந்திரசரஸ் என்ற குளத்தின் கரையில் அமர்ந்து இறைவனின் அருளால் பல்வகை யோகங்கள் கைவரப் பெற்றார்.

திருவரங்கம்,  அன்பில்,  திருப்பேர் நகர்,  கும்பகோணம்,  கவித்தலம்,  திருக்கோட்டியூர்,  திருக்கூடல்,  திருக்குறுங்குடி,  திருப்பாடகம், திருவூரகம்,  திருவெஃகா,  திருவெள்ளூர்,  திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  துவாரகை,  பரமதம் ஆகியவை இவரால் பாடல் பெற்ற தளங்களாகும்.  

திருமாலின் கரத்திலுள்ள சக்கரத்தின் அம்சமாக திருமழிசை ஆழ்வார் வணங்கப்படுகிறார். இவரது பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருமொழியில் நான்முகன் அந்தாதி என்ற பெயரில் விளங்குகின்றன.

காண்க: 
திருவெஃகா
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக