நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

10.11.10

ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணி



மணவாள மாமுனிகள்

திருநட்சத்திரம்:
ஐப்பசி 24  - மூலம் (நவ. 10)

'அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம்' என்று பெரியோர்கள் போற்றுவர். ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதரித்தது இந்த நன்னாளில்தான் (சாதாரண வருடம்). ஆழ்வார்திருநகரி தலத்தில்,  'திருநாவீறுடைய பிரன்தாஸரண்ணர்' என்ற மகானுக்குப் புத்திரனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள். பிள்ளைக்குத் திருவரங்கனின் பெயர் திகழ வேண்டும் என்று பெற்றோர் இவருக்கு அழகிய மணவாளன் என்று பெயரிட்டார்களாம்.

ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியாக வாழ்ந்த அழகிய மணவாளன் தம்முடைய பக்தி, ஞான, வைராக்கியத் தின் பலனால் 'திருவாய்மொழிப்பிள்ளை' என்று சிறப்பிக்கப்பட்ட திருமலையாழ்வாரின்  சீடராகும் பேறு பெற்றார். 

ஆழ்வார்திருநகரியில்  ஸ்ரீ ராமானுஜருக்கு  ஒரு கோயில் அமைக்கவேண்டும் என்று திருவாய்மொழிப்பிள்ளைக்கு விருப்பம். ஆசார்யரின் திருவுள்ளம் உவக்கும்படி எம்பெருமானாருக்கு  சந்நிதி அமைத்தார் அழகிய மணவாளர். அதனால் மகிழ்ந்த ஆசார்யர் இவரை, 'யதீந்த்ர ப்ரவணர்' என்று அழைத்தாராம். 

சந்நிதி அமைத்ததுடன் ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளில் 'யதிராஜவிம்சதி' என்ற ஸ்தோத்திரத்தையும்  சமர்ப்பித்தார், அழகிய மணவாளர். நாளடைவில் தனக்குப் பிறந்த குமாரருக்கும் 'ராமாநுசப் பிள்ளை' என்று ஆசார்யரின் ஆலோசனைப்படி பெயரிட்டாராம்!

ஸ்ரீரங்கத்தில் சடகோப ஜீயரிடம் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கனைத் தரிசிக்கச் செல்ல, திருவரங்கன் மகிழ்ந்து, 'அழகிய மணவாள மாமுனிகள்' என்று பெயரிட்டுச் சிறப்பித்து, பல்லவராயன் மடத்தையும் கொடுத்து, கடைசிக் காலம் வரை அந்த மடத்தில் இருக்கச் செய்தாராம். மடத்தின் ஒரு பகுதியை காலக்ஷேபக் கூடமாக ஆக்கி, அதற்கு 'திருமலையாழ்வார் மண்டபம்' என்றே பெயரிட்டு காலக்ஷேபங்களை நடத்திவந்தாராம் மணவாள மாமுனிகள்.

இவரின் சிறப்பை உலகறியச் செய்ய அரங்கன் அருள் புரிந்த சம்பவம் ஒன்றுண்டு.

ஒருமுறை, நம்பெருமாள் திருவுளப்படி ஸ்ரீரங்கம்- பெரிய திருமண்டபத்தில் ஒரு வருடம் முழுக்க திருவாய்மொழி காலக்ஷேபம் செய்தாராம் மணவாள மாமுனிகள். நம்பெருமாளும் உற்ஸவங்களையெல்லாம்  விட்டு, காலக்ஷேபம் கேட்டாராம். திருவாய்மொழி முழுதும் பூர்த்தியாகும் நாளில், பஹூமான சிறப்பு அளிக்கும் நேரத்தில், 4 வயது சிறுவனாக வந்த நம்பெருமாள், மணவாள மாமுனிகளைப் பார்த்து கைகளைக் கூப்பி 'ஸ்ரீசைலேஸ தயாபாத்ரம்' என்று தொடங்கும் ஆச்சர்யமான ஸ்தோத்ரத்தை அருளினாராம். 

மணவாள மாமுனிகளைப் போற்றும் இந்த ஸ்தோத்திரம், எம்பெருமானின் நியமனப்படியே எல்லா கோயில் தமிழ் மறை தொடங்கும்போது கூறப்படுகிறது!

உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி  முதலான தன்னுடைய தமிழ்ப் பிரபந்தங்களாலும், ஸ்தோத்ரங்கள் மூலமும் இன்றும் நம்மிடையே நித்திய வாசம் செய்கிறார் மணவாள மாமுனிகள். அடியார்தம் திருவடிகளைப் பணிந்து பலனடைவோம்.

நன்றி: கீதம்.நெட்

மேலும் காண்க:
ஆச்சார்ய பரம்பரை
உபதேச ரத்தினமாலை
திருவாய்மொழி நூற்றந்தாதி- வேளுக்குடி  ஸ்ரீ கிருஷ்ணன்
விசிஷ்டாத்வைதம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக