நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

18.11.10

செக்கிழுத்த செம்மல்

 





வ.உ.சிதம்பரம்  பிள்ளை
நினைவு நாள்:
நவ. 18

வ. உ. சிதம்பரம்பிள்ளை (செப். 5, 1872 - நவ. 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் நன்றியுடன் புகழப்படுபவர்.  விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை தம்பதியர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.


உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.

சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.

ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.

அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.  சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.

அவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது. 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார். தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார். வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மயிலை, சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார். விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார்.

சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
  • திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
  • மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
  • அகமே புறம் (தத்துவம்)
  • மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
  • திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
  • தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
  • வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
  • சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
  • சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
  • மெய்யறிவு (அற நூல்)

நாட்டு விடுதலைக்காக போராடி, சொத்துக்களை இழந்து, சிறைப்பட்டு துன்பம் மிக ஏற்ற வ.உ.சி. 1936, நவ. 18ல் வறிய நிலையில்  காலமானார். மகாகவி பாரதி, சுப்ரமணிய சிவா, வ.உ.சி. ஆகியோர் இணைந்த திரிசூலம் தமிழகத்தின் விடுதலைப் போரில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு. விடுதலைப்போராளி மட்டுமல்லாது தொழிற்சங்கத் தலைவர், தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் போன்ற பன்முகங்களை உடையவர் வ.உ.சி. அவரது நினைவே நமது தேசபக்தியை அதிகரிக்கும்.

காண்க:
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக