நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

11.11.10

நவீனக் கல்வியின் சிற்பி


மௌலானா
அபுல் கலாம் ஆசாத்
பிறந்த நாள்: நவ. 11

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் மௌலானா  அபுல் கலாம் ஆசாத்திற்கு  பெரும் பங்குண்டு.  சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றவர்;  தேசியக்  கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர் ஆசாத். 
 
1888ம் ஆண்டு நவ. 11ம் தேதி,  மௌலானா கைருதீனுக்கும்,  அலியாவுக்கும்  மகனாக, மெக்காவில், மௌலானா  அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார்.  17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.  நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது,  அவர் கடுமையாக எதிர்த்தார்.  அரவிந்த கோஷ்சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.  இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு 'இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது'  என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். இவர் நடத்திய அல்-ஹிலால் என்ற பத்திரிகை விடுதலை வேட்கையை முஸ்லிம்களிடம் தூண்டியதன் காரணமாக 1914 ல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.  இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார்.  1920இல் திலகரையும் மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.  காங்கிரஸ் நடத்திய கிலாபத் இயக்கத்தின் தளகர்த்தராக ஆசாத் விளங்கினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.   காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார். முஸ்லிம் லீகின் பிரிவினை பிரசாரங்களையும் அடிப்படைவாதத்தையும்  கடுமையாக எதிர்த்தார்.
 
நாடு  சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வியமைச்சராக பொறுப்பேற்றார்.  1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார்.  அனைத்து கல்வித் திட்டங்களும்,  மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும்,  அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.  10+ 2+ 3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.  நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப்  பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 
 
 சங்கீத நாடக அகாடமி (1953),  சாகித்திய அகாடமி (1954),  லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகள்   உருவாகக்  காரணமாக இருந்தவர்  இவரே.    கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத்,  பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

பெண் கல்வி,  தொழிற் பயிற்சி,  வேளாண் கல்வி,  தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்.  பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.  வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.  உருது,  பார்சி,  அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேசத்  தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். 
 
ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றவர் ஆசாத்.  தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் கோரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை,  கான்பூர்,  தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன.  பல்கலைக்கழக மானியக் குழுவை 1956ல் ஆசாத் அமைத்தார்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977ல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.  மௌலானா  அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை (22.12.1958 ) இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.  மதத்தை மீறிய தேசபக்திக்கு அபுல் கலாம் ஆசாத் முன்னுதாரணம். மௌலானா  அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவ. 11ம் தேதி தேசிய  கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
காண்க:
தேசபக்தி திருத்தொண்டர் (ஆனந்த விகடன்)
Abul Kalam Azad 
Maulana Abul Kalam Azad
National Education Day  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக