நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.11.10

நாம் எல்லோருமே இந்நாட்டு 'ராசாக்கள்' தான்!


                   பேருந்தில் ஏறி பத்து ரூபாய்த் தாளை நடத்துனரிடம் நீட்டி பயணச்சீட்டைக் கேட்டேன். ரூபாய்   5 .50 போக 2  இரண்டு ரூபாய் நாணயங்களுடன் பயணச்சீட்டை என் கையில் திணித்தார் நடத்துனர். மீதி 50 பைசாவைத் தராமல் இருந்தவரிடம் கேட்டால், "சில்லறை இல்லை" என்பதுதான் பதிலாக வந்தது.

                   நான் இறங்கும் நிறுத்தம் வரை பல முறை என்னைக் கடந்து போன நடத்துனர்,  தீண்டத்தகாத ஜந்துவைப் போல,  பிள்ளைப்பூச்சியைப் போலவே என்னைப்  பார்த்தார் கடைசிவரை சில்லறை தராமலேயே இருந்த அந்த நடத்துனர் அந்த நேரத்திற்கு 'ராசவாகவே'  எனக்குக் காட்சியளித்தார்.

                  சந்தடி மிக்க தெருவோரத்தில் இருந்தது அந்த சின்ன பெட்டிக்கடை. 'தினமணி'யை வாங்கிவிட்டு  ஐந்து ரூபாய் கொடுத்த என் கையில், ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் ஒரு இனிப்பு மிட்டாயும் தரப்பட்டன.  50 பைசாவுக்குப்  பதிலாக ஒரு இனிப்பு மிட்டாய். கேட்டால் "சில்லறை இல்லை". இந்த கடைக்காரரும் அந்த நேரத்துக்கு 'ராசாவாகவே'  எனக்குத் தோன்றினார்.

                 மக்கள் கூடும் இடங்களில்... பேருந்து நிலையங்களில்... திரையரங்குகளில்... ஏன் சில சமயம் வழிபாட்டுத் தலங்களிலேயே புகைபிடிப்பவர்கள்,  எச்சில் துப்புபவர்கள் அந்த நேரத்து 'ராசாக்களே' !.

                 குப்பைகளை பக்கத்து வீடுகளுக்கு முன் கொட்டுபவர்கள், சாலைஓரத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எல்லோருமே நம்மில் 'ராசாக்களாக'த் தான் இருக்கிறார்கள்.

                 வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமைந்தால், நாம் எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் 'ராசாக்களே'. நமக்கு சொந்தமில்லாத,  தேவையில்லாத பொருட்களை அபகரிக்கவோ களவாடவோ நாம் தயங்குவதே இல்லை. விதிவிலக்காக  சிலர் இருக்கலாம். அந்த எண்ணிக்கை திருப்திகரமான வகையில் இல்லை என்பதே உண்மை.

                 இலவசங்களைப்  பெறுவதில்  யாரும் வெட்கப்படுவதில்லை- ஏற்கனவே  ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தும் அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியை பெறுவதில்....  தவறான விவரங்களைக் கொண்ட பல லட்சக் கணக்கானப்  போலி குடும்ப அட்டைகள்  இங்கே சர்வ சாதாரணமாக  உலவ முடிகிறது.

                 தொகை ஐம்பது பைசாவாக இருக்கலாம்;  ஐந்து ரூபாயாக இருக்கலாம்; ரூ.  1.76 லட்சம் கோடியாகவும்  இருக்கலாம். வித்து எதுவாக இருந்தாலும் விளைநிலம் பதராக உள்ளதே!

                வித்யாசம்  தொகையிலா?  இல்லை, நமது மனப்பான்மையிலா?  அந்த வகையிலே நாம் எல்லோருமே 'இந்நாட்டு ராசாக்கள்' தானே ?

                சுவாமி விவேகானந்தரின் கூற்றுதான் இங்கே நினைவுக்கு வருகிறது: 
                 "சொன்னபடி இரு: சொன்னபடி உருவாக்கு!"  ( Be and make )
                 ''எளிமையாக வாழ்: எடுத்துக்காட்டாக  வாழ்!"  (Be simple and Be sample )         

-ம.கொ.சி.ராஜேந்திரன் 

காண்க:
   

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Very good analysis!
Each and everybody has RAJA's attitude!
but there is any chance , they also become a Big "RAJA"!

கருத்துரையிடுக