நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.11.10

விளக்கேற்ற முடி ஈந்தவர்


கணம்புல்ல நாயனார்

திருநட்சத்திரம்:
கார்த்திகை-5 (கிருத்திகை)
(நவ. 19) 


தமிழகத்தின் வாடா வெள்ளாற்றின் தென்கரையில், இருக்கு வேளூர் (பேளூர்) எனும் தலத்தில் அவதரித்தவர் கணம்புல்லர். தினமும் ஈசனின் ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றும் திருப்பணியைப் புரிந்து வந்தார். நாளடைவில் அவருடைய செல்வம் கரைந்தது. எனினும் தளராமல் அவர் சிதம்பரம்  சென்று தனது பொருட்களை விற்று திருப்புலீச்வரம் எனும் சிவன் கோயிலில் திருப்பணியைத் தொடர்ந்தார்.  

விற்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் கணம்புல்லை அறுத்து விற்று அதில் வரும் வருமானத்தில் விளக்கேற்றினார்.  அதனால் அவர் கணம்புல்லர் என அழைக்கப்பட்டார். கணம்புல்லும் விற்காத போது, தன் தலைமுடிக்குத் தானே தீ  வைத்து அதையே விளக்காக்கி ஈசனருள் பெற்றார். தனது அதிதீவிர பக்தியால் ஈசனின்  அருளைப் பெற்ற கணம்புல்லர், தனது பிறவிப் பயனை நீங்கி அழியா சிவபதம் பெற்றார் என்று பெரிய புராணம் கூறுகிறது.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள பேளூர் (இருக்கு வேளூர்)தன்தோன்றீஸ்வரர் கோயிலில் நந்தி முன்பு, திருவிளக்கை கையில் ஏந்தியவாறு கணம்புல்ல நாயனாரின் சிலை உள்ளது.

இறைபக்தியில் இமயமாய் உயர்ந்தவர்கள்  நாயன்மார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஈசனை மேவுவதில் விஞ்சி நிற்கிறார்கள். தவிர சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் பக்தியாளர்கள் சைவம் வளர்த்ததையும் நாயர்மார் சரிதங்கள் காட்டுகின்றன. கணம்புல்லர் தன் முடிஈந்தும் திருவிளக்கு எரியச் செய்தது பக்தியின் வைராக்கிய நிலையை வெளிப்படுத்துகிறது.


காண்க:
கணம்புல்ல நாயனார்
தாராசுரம் சிற்பத்தில் கணம்புல்லர்
பெரியபுராணம்
நக்கீரன் கட்டுரை
கணம்புல்லர் சரிதம் (வீடியோ)
தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக