நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

28.11.10

தீண்டாமையை எரிக்கக் கிளர்ந்த சுடர்



மகாத்மா
ஜோதிராவ் புலே.
நினைவு தினம்:
நவ. 28

மராட்டியத்தில்   பிறந்த மகாத்மா ஜோதிப கோவிந்தராவ் புலே (ஏப்ரல் 11, 1827), பாரதத்தின் சமூக சீர்திருத்த சிற்பிகளில் முதன்மையானவர்.  இவர் மிகச் சிறந்த அறிஞர்,  எழுத்தாளர்,  சமூக சீர்திருத்தப் போராளி,  கல்வியாளர்,  தத்துவவாதி என்று பல முகங்களை உடையவர். இவரும் இவரது மனைவி சாவித்திரி புலேவும் இணைந்து பாரதப் பெண்களின் கல்வி உயர பாடுபட்டனர்.


கல்வித்துறை மட்டுமல்லாது, விவசாயம், மகளிர் மேம்பாடு, வருணமுறைக்கு  எதிரான போராட்டம்,  விதவையர் மறுமணம் ஆகிய துறைகளிலும்  அரிய முத்திரை பதித்தவர் ஜோதிராவ் புலே.


மகாராஷ்ட்ராவில் உள்ள சதாராவில், 'மாலி' என்ற பிற்படுத்தப்பட்ட  ஜாதியில் பிறந்த புலே,  9 வயத்தில் தனது தந்தை  கோவிந்தராவை இழந்தார். அண்டைவீட்டினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களால் அவரது அறிவுத்திறன்  உணரப்பட்டது. அவர்களது உதவியுடன், உள்ளூர் ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்த புலே, அப்போதிருந்த ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் மனம் நொந்தார். தனது நண்பரின் இல்லத் திருமணத்தில் ஜாதி காரணமாக அவமதிக்கப்பட்ட நிகழ்வே (1848), புலேவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


பிரிட்டிஷ்  அறிஞர் தாமஸ் பெய்னின் 'மனித உரிமைகள்' என்ற நூல் அவரது வாழ்வில் லட்சியங்களை விதைத்தது. அவர் சமூகநீதிப்   போராளியாகவும்  சாதிமுறைக்கு எதிரான  கலகக்காரராகவும் உருவானார். 1873 -ல் புலே 'சத்திய சோதக் சமாஜ்' அமைப்பை நிறுவினார். இதன் பொருள் 'உண்மையைத் தேடும் சமுதாயம்' என்பதாகும். சமூகத்தில் மேல்ஜாதி ஹிந்துக்களால் அடக்கிவைக்கப்பட்ட சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், பஹுஜன்கள்  ஆகியோரின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அவர்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்வதுமே இதன் நோக்கம் என்று அறிவித்தார்.


கீழ்ஜாதி மக்கள் மீதான அடக்குமுறை கண்டு வெகுண்ட  புலே, தனது கோபத்தை வேதங்கள் மீது காட்டினார். நால்வருண முறைக்காக பிராமணர்கள் மீதும் அவரது கோபம் தொடர்ந்தது. இந்தியாவில் தோன்றிய பிராமண எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதர்ஷம் புலே தான். ஹிந்து மதத்தில் இருந்தபடியே, அதன் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசத்துடன் போராடினார் புலே. மதத்தைவிட மனிதநேயமே முக்கியமானது என்று வாதிட்டார் புலே. அதன் காரணமாக சனாதனிகளின் எதிர்ப்புக்கு ஆளானார்.


வேத அடிப்படியிலான மதத்திற்கு மாற்றாக சந்த்  துக்காராமின் 'அபாங்கம்' வழிபாட்டுமுறை அடிப்படையில் 'அகண்டாஸ்' என்ற முறையை புலே ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புலேவை தங்கள் குருவாக ஏற்று பின்பற்றினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக  குரல் கொடுத்த சைதன்ய மகாபிரபு,  ராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களையும் அவர் விமர்சித்தார். அவர்களுக்கு மாற்றான இறைநெறியை அவர் உருவாக்கினார். அதன் படி இறைவனுக்கு 'நிர்மிக்' (கர்த்தா) என்று பெயர் சூட்டினார்.


ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராகப் போராடியபோதும் மதம் மாறுவதை புலே ஆதரிக்கவில்லை. 'அனைத்து மதங்களிலுமே வல்லவனுக்குத் தான் வாய்ப்பளிக்கப்படுகிறது; தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக- பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்' என்று புலே உபதேசித்தார்.


சிலை வழிபாட்டுக்கு மாற்றாக இயற்கையை வழிபடும், 'தேயிசம்' என்ற முறையை அவர் பிரசாரம் செய்தார். எனினும் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியை புலே எதிர்க்கவில்லை. சமூக மாற்றத்திற்கு காரணமான சமூக நீதி அவர்களால்தான் கிடைத்தது என்பது புலேவின் கருத்து.


1848 -ல் இவரும் இவரது மனைவியும் நிறுவிய பெண்கள் பள்ளியே நாட்டின் முதல் பெண்கள் பள்ளியாகும். விதவையர் மறுமணம், பெண்சிசுக் கொலையைத் தடுத்தல், மகளிர் கல்வி ஆகியவற்றில் அதீத ஈடுபாடு காட்டினார். பண்டித ரமாபாய், கோலாப்பூர் மன்னர் சாஹு மகாராஜ் ஆகியோர் புலேவை ஆதரித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். புனே நகரமன்ற உறுப்பினராகவும் புலே (1876 -1882) பணியாற்றியிருக்கிறார்.


1890, நவ. 28 -ல் மகாத்மா  ஜோதிராவ் புலே மறைந்தார். அவர்து மறைவுக்குப் பின் 'சத்திய சோதக் சமாஜ்'  காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. தீண்டாமையை ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களுடனேயே  வசித்த புலே, இந்திய சமூக  சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவராக கருதப்படுகிறார். பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக விளங்கிய அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் புலே. இவரது வாழ்வு, ஜாதியின் பெயரால் அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களின் விடுதலைக்கு வித்திட்ட அர்ப்பண வாழ்வாகும். இவரை 'கிரந்தி சூர்ய' என்று (புரட்சிப் பகலவன்) மக்கள் அழைத்து மகிழ்கின்றனர்.

- குழலேந்தி

காண்க:
Jyotirao Pule
Cultural India

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக