நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

30.11.10

பகைவனுக்கும் அருளிய பண்பாளர்

மெய்ப்பொருள் நாயனார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை- 14 -உத்திரம் (நவ. 30)

மலையமாநாட்டின் தலைநகரம் திருக்கோவிலூர். இங்கிருந்து ஆட்சி செய்தவர் சிவநெறிச் செல்வர் மெய்ப்பொருளார். திருநீறு பூசியவர்களை சிவனாகவே கருதி வழிபடுவதும் விருந்தோம்புவதும்  தன் கடமையெனக் கொண்டிருந்தார், மெய்ப்பொருளார். இவரால் வெல்லப்பட்ட முத்தநாதன் என்ற அண்டைநாட்டு  குறுநில மன்னன், மெய்ப்பொருளார் மீது வெஞ்சினம் கொண்டிருந்தான். அவரை போரில் வெல்ல முடியாது என்றுணர்ந்த முத்தநாதன், சதிச்செயலில் மெய்ப்பொருளாரைக் கொல்லத் தீர்மானித்தான்.

அதற்கென சிவனடியார் வேடம் போட்டு,  மெய்ப்பொருளார் அரண்மனை வந்தான் முத்தநாதன். அப்போது மெய்ப்பொருளார் அந்தப்புரத்தில் துயில் கொண்டிருந்தார். அவருக்கு துணையாக மெய்க்காவலன்  தத்தன் என்பவன் இருந்தான். சிவவேடம் பூண்டிருந்ததால் அனைத்துத் தடைகளையும் தாண்டி பள்ளியறை வந்த முத்தநாதனை தத்தன் தடுத்தான். ஆனால்,  'அரசற்கு  ஆகமம்  உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான், வஞ்சமனத்தான்.

சிவனடியாரைக் கண்டதும், துயில் நீங்கிய மெய்ப்பொருளார், அரசியை அனுப்பிவிட்டு, சிவ உபதேசம் கேட்கத் தயாரானார். வஞ்ச நெஞ்சன் முத்தநாதனுக்கு உயரிய ஆசனம் அளித்து,  சிவாகமம் கூறுவதாகக் கூறிய முத்தநாதனை நம்பி, கண்மூடி கீழமர்ந்து, வாய்பொத்தி உபதேசம் கேட்டார்.

இதனை எதிர்பார்த்திருந்த முத்தன், தனது பையில் மறைத்து வைத்திருந்த குறுவாளால் மெய்ப்பொருளாரைக் குத்தினான். அவர் குருதி வழிய நிலத்தில் வீழ்ந்தார். மன்னரின் ஓலம் கேட்டு உள்ளே வந்த தத்தன், நிகழ்ந்துள்ள கொடூரத்தைக் கண்டு, வாளுடன் பாய்ந்தான். ஆனால், மெய்ப்பொருளார் தத்தனை தடுத்துவிட்டார். 'அப்போது அவர் சொன்ன வாசகம்:  'தத்தா நமர்' என்பதாகும். அங்கு, தன்னைக் குத்திய வஞ்சநெஞ்சனையும் சிவனாகவே பாவித்து வணங்கிக் கொண்டிருந்தார் மெய்ப்பொருளார்.

'சிவ வேடம் பூண்டவர் நமது எதிரியானாலும், அவர் சிவனே ஆவார். அவருக்கு எந்தத் தீங்கும் செய்தல் கூடாது. இங்கு நடந்த எந்த விஷயமும் வெளியில் தெரியும் முன்னர், சிவனடியாரை நகருக்கு வெளியே கொண்டுசென்று பாதுகாப்பாக அனுப்பிவிட்டு வா' என்று தனது மெய்க்காவலர் தத்தனைப் பணித்தார், மெய்ப்பொருளார். அதன்படி தத்தனும் முத்தநாதனை பாதுகாப்பாக அழைத்துக் சென்றான்.

செய்தியறிந்து முத்தனைத் தாக்கக் குழுமிய நாட்டு மக்களை 'அரசனின் ஆணை'யை எடுத்தியம்பி, சாந்தப்படுத்திய தத்தன், முத்தநாதனை எந்த பாதிப்பும் இன்றி அவனது நாட்டுக்கே அனுப்பி வைத்தான். அவன் திரும்பிவரும் வரையில் உயிரை தக்கவைத்திருந்த மெய்ப்பொருளார், தன்னைக் குத்தியவர் நாடு நீங்கப்பெற்றது தெரிய வந்ததும், அரசுரிமையை முறைப்படி அளித்துவிட்டு, ''இன்று எனக்கு அய்யன் செய்தது யார் செய்ய வல்லார்?'' என்று கசிந்துருகி, ''திருநீற்று நெறியைக் காப்பீர்'' என்று ஆணையிட்டு மறைந்தார்.

சிவ வேடமிட்டவர் என்றபோதும் அவரையும் சிவனாகவே கருதி வணங்கிய மெய்ப்பொருளார், நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்தார். திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மெய்ப்பொருளாருக்கு தனி சன்னதி உள்ளது. பகைவர்க்கும் அருளிய பண்பாளர் என்று சரித்திரத்தில் இடம்பெற்ற மெய்ப்பொருளார் வாழ்க்கை, நமக்கு என்றும் நல்வழிகாட்டியாகத் திகழும்.

காண்க:
மெய்ப்பொருள் நாயனார் (விக்கி)
தினகரன் சைவ மஞ்சரி
Meypporul Nayanaar 
மெய்ப்பொருள் நாயனார் புராணம்
தாராசுர சிற்பக் காட்சிகள்
மெய்ப்பொருளார் புராணம் (தமிழ்வு)
பெரியபுராணச் சொற்பொழிவு (வீடியோ)
மெய்ப்பொருளாருக்கு கோயில் (தினமலர்)
.

பாரதத்தின் அறிவியல் ரிஷி

ஜெகதீச சந்திர போஸ்
பிறப்பு: நவ. 30
மறைவு: நவ. 23

பூஜ்யம் முதல் வானவியல் வரை,  உலகம் வாழ பாரதம் வழங்கிய அருட்கொடைகள் ஏராளம். ஆனால், நமது அறிவியல் சாதனைகள் முறைப்படி பதிவு செய்யப்படாததால்,  நம்மைப் பற்றி நாமே தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த மயக்கத்தைப் போக்கிய அண்மைக்கால விஞ்ஞானி, வங்கம் தந்த ரிஷியான ஆச்சார்ய ஜெகதீச சந்திர போஸ்.

அடிமைப்பட்ட பாரதத்தில் உதித்து, ஆங்கிலேயனே வியக்கும் வண்ணமாக அரிய சாதனைகளை நிகழ்த்திய போஸ், தனது கண்டுபிடிப்புகளை சொந்த சொத்தாகக் கருதாமல், பழங்கால ரிஷிகள் போலவே உலகுக்கு அர்ப்பணித்தார். தனது தார்மிக நெறி மூலமாக, அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் உலக மக்களை சுரண்டும் போக்கிற்கு எதிராக அமைதியான முறையில் அறிவியல் சாதனைகளை செய்த போஸின் வாழ்க்கை,  இளம் தலைமுறையினர் அறிய வேண்டியதாகும்.

பிறப்பும் கல்வியும்:

வங்கத்தின் முன்ஷிகன்ச் மாவட்டத்தில் (தற்போது  வங்கதேசத்தில் உள்ளது) 1858, நவ. 30 ம் தேதி, பிறந்தார் ஜெகதீச சந்திரர். இவரது தந்தை, பகவான் சந்திர போஸ், உதவி ஆணையராகவும் துணை நீதிபதியாகவும் பாரித்பூர் என்ற நகரில் பணியாற்றினார்.  அவர் பிரம்ம சமாஜம் அமைப்பில் தலைவராக இருந்தவர்.   அவரது தாய்மொழிப் பற்றின்   காரணமாக, வங்க மொழியில் பயிலும் பள்ளியிலேயே ஜெகதீச சந்திரர் ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.

1869 ல் கொல்கத்தாவின் ஹரே பள்ளியில் சேர்ந்த அவர், பிறகு புனித சேவியர்  பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 1875 ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேறிய போஸ், புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்தார். 1879 ல் போஸ் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஐ.சி.எஸ். படிக்கவே போஸ் விருப்பம் கொண்டார். ஆனால், ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யும் அந்தப் படிப்பு வேண்டாம் என்று போசின் தந்தை கூறியதால், லண்டன் சென்று  மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் ஜெகதீச சந்திரர். ஆனால், உடல்நலக் குறைவால் இடையிலேயே படிப்பைவிட்டு விலகி தாய்நாடு திரும்ப வேண்டியதாயிற்று.

அப்போது, அவரது சகோதரியின்  கணவர் ஆனந்தமோகன் (இவர் இந்தியாவின் கணித மேதைகளுள் ஒருவர்) பரிந்துரைப்படி, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் சென்று கிறிஸ்ட் கல்லூரியில் இயல்அறிவியல் படிப்பில் சேர்ந்தார். அதுவே போசின் வாழ்வில் மகத்தான திருப்புமுனையாக அமைந்தது. அங்கு இயல்அறிவியலில்   'டிரிப்போஸ்' பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டமும்  பெற்று (1884) போஸ் நாடு திரும்பினார் (1885). போஸ் உலகம் வியக்கும் இயற்பியல் மேதையாக வேண்டும் என்ற இறைவன் வகுத்ததை யாரால் மாற்ற முடியும்?

கல்லூரிப்  பணியும் சுயமரியாதையும்:

பிறகு, அப்போதைய வைஸ்ராய் ரிப்பன் பிரபு பரிந்துரைப்படி, கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் துறையில் பயிற்சி பேராசிரியராக இணைந்தார். விஞ்ஞான ஆராய்ச்சியில் பெரும் தாகம் கொண்டிருந்த ஜெகதீச சந்திரருக்கு அங்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆயினும் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. ஆங்கிலேய அரசின் நிறவெறிக்  கொள்கையால் பாதிக்கப்பட்ட அவர், சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிவந்தது.

பிரெசிடென்சி கல்லூரியில் போசுக்கு வழங்கப்பட்ட  ஊதியத்திலும் பாரபட்சம் காட்டப்பட்டது. வைஸ்ராய் பரிந்துரைத்தும்கூட, ஜெகதீச சந்திரர் இரண்டாம் பட்சக் குடிமகனாகவே அங்கு நடத்தப்பட்டார். அங்கு பணிபுரிந்த ஐரோப்பாவைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு மாதம் ரூ. 300 சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், போசுக்கு ரூ. 100  மட்டுமே வழகப்பட்டது.  இந்த பாரபட்சத்திற்கு  எதிராக போஸ் போராடினார்.

தனக்கும் ஐரோப்பிய பேராசியர்களுக்கு வழங்கும் அதே  ஊதியம் தரும் வரையிலும், கல்லூரி நிர்வாகம் தரும் ஊதியத்தை வாங்கப் போவதில்லை என்று போஸ் அறிவித்தார்.  அதன்  காரணமாக பொருளாதார சிக்கல்களுக்கு ஆளான போதும், அவர் மனம் கலங்கவில்லை. அவ்வாறு மூன்று ஆண்டுகள் சம்பளம் பெறாமலே பேராசிரியர் பணியில் ஈடுபட்டார், போஸ். அந்த சமயத்தில் தான் (1887) பிரபல பிரம்ம சமாஜத் தலைவர் துர்க்கா மோகன்தாசின் மகள் அபலா என்பவரை திருமணம் செய்து கொண்டார், போஸ். அபலா கணவருக்கேற்ற பத்தினியாக விளங்கி, அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு துணை நின்றது வரலாறு.

போசின் மூன்று ஆண்டுகாலப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. அவரது திறமையை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், அவரை பணி நிரந்தரம் செய்ததுடன், மூன்று ஆண்டுகளுக்கும் சேர்ந்து போஸ் கேட்ட ஊதியத்தையே வழங்கியது.

ஆராய்ச்சிகளும் நிவேதிதை உதவியும்:

பிரசிடென்சி கல்லூரியில் ஆராய்ச்சி சாலை போதிய வசதிகள் இன்றி இருந்தது. வெறும் 24 சதுர அடி பரப்பளவுள்ள ஆய்வகத்தில் போஸ், தான்  எண்ணிய ஆராய்சிகளை செய்ய முடியாமல் தவித்தார். கல்லூரி நிர்வாகம் ஆய்வுகளை   ஊக்குவிக்காதபோதும்,   தனது ஊதியத்தின் பெரும்பகுதியை செலவிட்டு, தனது வீட்டிலேயே சிறு ஆய்வகம் அமைத்து இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் ஜெகதீச சந்திரர். அதற்கு ஊக்கம் அளித்தவர், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை.

அயர்லாந்தில் பிறந்த அந்த மாதரசி, பாரதத்தையே தனது தாயகமாக வரித்துக் கொண்டவர். அவருடனான நட்புறவு ஜெகதீச சந்திரருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. கொல்கத்தாவில் வெளியான சில பத்திரிகைகளில் நிவேதிதை, போஸ் நடத்தும் ஆய்வுகள் குறித்து எழுதி விளம்பரப்படுத்தினார். தவிர, இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் சிலருக்கு தனிப்பட கடிதம் எழுதி, ஜெகதீச சந்திரருக்கு தேவையான கருவிகளை வரவழைத்துக் கொடுத்தார்.

போஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. அந்தக் கட்டுரைகளை இங்கிலாந்தின் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு அனுப்பி, அவர்களது கருத்துகளைக் கேட்டார்; அமெரிக்காவிலுள்ள விவேகானந்தரின் சீடர்கள் வாயிலாகவும், போஸ் எழுதிய கட்டுரைகளை அமெரிக்க விஞ்ஞானிகளின் பார்வைக்கு நிவேதிதை கொண்டு சென்றார். அவரது முயற்சிகளின் விளைவாக, இங்கிலாந்து, அமெரிக்க விஞ்ஞானிகளிடையே போசின் புகழ் பரவியது. அதன்பிறகு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசால் போசின் திறமைகளை மூடி மறைக்க முடியவில்லை; அவர் கோரிய வசதிகளை அரைகுறை மனத்துடன் அரசு செய்து கொடுத்தது.

தொடர் தவமும் கண்டுபிடிப்புகளும்:

கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே போஸ் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மின்காந்த அலைகள் குறித்து அவர் கவனம் சென்றது.  வளிமண்டலத்தில்  உள்ள  மின்காந்த அலைகளின் இருப்பு குறித்து அப்போதுதான் ஆராயப்பட்டு வந்தது. தகவல் தொடர்பில் அவற்றை பயன்படுத்த  முடியும் என்று போஸ் கூறினார். அதற்கு மின்காந்த அலைகளின் நீளத்தை குறைப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.

1893 ல் ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கோலா டெஸ்லா ரேடியோ அலைகளை முதல்முறையாக நிரூபித்தார். அதற்கு ஓராண்டு கழித்து, அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் நிரூபித்துக் காட்டினார் போஸ். 1894 , நவம்பரில்,  கொல்கத்தா நகரமன்ற அரங்கில், துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்சி முன்னிலையில், வெடிமருந்தை எரியச் செய்து, சிறிது தொலைவிலிருந்த மணியை மி.மீ. நீள மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்கச் செய்தார் போஸ்.

இதனை 'கண்ணுக்குத் தெரியாத ஒளி' என்று குறிப்பிட்ட போஸ், ''இந்த ஒளி செங்கல் சுவர்களையும் கட்டடங்களையும் ஊடுருவும் தன்மை கொண்டது. இந்தக் கண்டுபிடிப்பின் உதவியால், கம்பியில்லாத  தொலைதொடர்பு  எதிர்காலத்தில் சாத்தியமாகும்'' என்று கூறினார்.

அடுத்ததாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய போஸ்,  மின்காந்த அலைகளை வசீகரிக்கும் 'செமி கண்டக்டர்' குறித்து பல உண்மைகளைக் கண்டறிந்தார். அதன் பயனாக தொலைதொடர்புத் துறையிலும்  மின்னணுவியலிலும்    அரிய பல கண்டுபிடிப்புகள் பிற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

வானொலியைக்   கண்டுபிடித்ததாக உலகம் புகழும் மார்கோனிக்கு முன்னதாகவே அதன் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ஜெகதீச சந்திர போஸ். ஆனால், அதனை அவர் தனது காப்புரிமையாக பதிவு செய்வதைத் தவிர்த்தார். அதன் காரணமாகவே, அந்த கண்டுபிடிப்புகளுக்கான பெருமை (1897)  மார்கோனியைச் சென்றடைந்து. அவரது ரேடியோ அலைகளை ஈர்க்கும் 'செமி கண்டக்டர்' குறித்த ஆய்வு முடிவுகள், பிற்காலத்தில்  கண்டறியப்பட்ட  (தற்போது புழக்கத்திலுள்ள) என்-பி-என் மின்னணுவியல் கண்டுபிடிப்பில் மிக்க உதவியாக இருந்தன.

நோபல் விஞ்ஞானி சர். நெவில் மோட் (1977), ''ஜெகதீச சந்திர போஸ் தான் வாழ்ந்த காலத்திலேயே,  பின்னாளில் 60   ஆண்டுகள் கழித்து நிகழவுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தை கணித்திருக்கிறார்'' என்று புகழ்கிறார்.

தாவரவியலிலும் சாதனை:

இயற்பியலில் மட்டுமல்லாது, உயிரியல், தாவரவியல், தொல்லியல் ஆகியவற்றிலும் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர் போஸ். தாவரங்களின் இயங்கியல் குறித்த போசின் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளன.

ரேடியோ  அலைகளுக்கு தாவரங்கள்  எதிர்விளைவு காட்டுவதையும், தாவரங்களின் திசுக்களும் விலகுகளின் திசுக்களும் ஒத்திருப்பதையும், போஸ் தான் கண்டறிந்த கருவி மூலமாக நிரூபித்தார். தாவரங்களுக்கும் உயிருண்டு என்று தனது  'கிரஸ்கோ  கிராப்' கருவியால் உலகிற்கு போஸ் நிரூபித்துக் காட்டினார். இனிய இசையால் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுவதையும் போஸ் கண்டறிந்தார். ரசாயனங்களால் தாவரங்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதையும் போஸ் கண்டறிந்தார்.

''தாவரங்களும்  மனிதர்களைப் போலவே வழியால் துடிக்கின்றன; மனிதர்களைப் போலவே அன்புக்காக ஏங்குகின்றன'' என்று போஸ் பிரகடனம் செய்தார். தாவரவியலிலும், உயிர் இயற்பியலிலும் போஸ் கண்டறிந்து கூறிய உண்மைகள் பிற்கால விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அறிவுசார் சொத்துரிமைக்கு எதிர்ப்பு:

பல அரிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் கண்டறிந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்வதை போஸ் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது உலகை சுரண்டுவதாகும் என்று அவர் கருதினார்.

கம்பியில்லா தொலைதொடர்பில் மின்காந்த அலைகளின் பயன்பாடு, மின்காந்த அலைகளின் அலைநீளத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் போஸ் உருவாக்கிய கருதுகோள்கள் முன்னோடியாக இருந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட சொத்தாக  அவர் சொந்தம் கொண்டாடவில்லை. அதன் காரணமாக வானொலியைக்  கண்டறிந்த விஞ்ஞானி  என்ற சிறப்பை மார்கோனி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, போசை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காக பெரும்பொருள் வழங்குவதாக அறிவித்தபோதும், போஸ் அதனை ஏற்கவ்ல்லை. தனது கண்டுபிடிப்புகள் உலகம் நன்மை பெற பயன்படுமானால், யார் வேண்டுமாயினும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போஸ்.

எனினும், போசின் அமெரிக்க நண்பர்கள்,  அவரது கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (பேட்டன்ட்) பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியின் வேண்டுகோளை ஏற்று, தனது 'மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்' என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து காப்புரிமை (US755840)  பெற்றார் போஸ். அந்த வகையில், இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி என்ற சிறப்பை (1901)போஸ் பெற்றார்.

பன்முகத் திறமைகள்:

போஸ் விஞ்ஞானி மட்டுமல்ல. வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் ஆவார். 'நிருடேஷ்வர்  கஹ்னி'  என்ற போசின் அறிவியல் புதினம், வங்க மொழியில் எழுதப்பட்ட முதல் அறிவியல் புதினமாகும்.

பலநூறு அறிவியல் கட்டுரைகளை வங்க மொழியில் எழுதியுள்ள போஸ், Response in the Living and Non-லிவிங் (1902) ,   Plant response as a means of physiological investigation (1906), Comparative Electro -Physiology, Researches on Irritability of Plants (1913),  Physiology of the Ascent of Sap  (1923),  The physiology of photosynthesis (1924), The Nervous Mechanisms of Plants (1926), Plant Autographs and Their Revelations (1927), Growth and tropic movements of plants  (1928), Motor mechanism of plants(1928) ஆகிய ஆராய்ச்சி நூல்களையும் உலகிற்கு வழங்கியுள்ளார்.

1917 ல் கொல்கத்தாவில் போஸ் ஆராய்சிக் கழகத்தை நிறுவினார் போஸ். இன்றும் அது தனது அறிவியல் பணியை செம்மையாகச் செய்து வருகிறது. 1937, நவ. 23 ல் டாக்டர் சர். ஜெகதீச சந்திர போஸ் மறைந்தார்.

உலக அளவிலான பல்வேறு விஞ்ஞானக் கழகங்களின் விருதுகளையும் சர் உள்ளிட்ட கௌரவப் பட்டங்களையும் போஸ் பெற்றவர் போஸ்.  பணமும், அதிகாரமும் ஜெகதீச சந்திர போசை என்றும் மயக்கியதில்லை. அறிவியல் ஆய்வே தனது வாழ்வாகக் கொண்டிருந்த மகத்தான மேதையான போஸ், இக்கால விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டி; அரும்பும் பருவத்திலுள்ள மாணவமணிகளுக்கு ஆசார்ய ஜெகதீச சந்திரர் ஒரு கலங்கரை விளக்கம்.
- குழலேந்தி

காண்க:
Jagadish Chandra Bose
Dr.J.C.Bose
MM Wave Research
Father of  Radio 
calcuttaweb.com
Vigyan Prasar Science Portal 
Bose Institute 
The Pioneer of Science
Invention of  Radio

28.11.10

நாம் எல்லோருமே இந்நாட்டு 'ராசாக்கள்' தான்!


                   பேருந்தில் ஏறி பத்து ரூபாய்த் தாளை நடத்துனரிடம் நீட்டி பயணச்சீட்டைக் கேட்டேன். ரூபாய்   5 .50 போக 2  இரண்டு ரூபாய் நாணயங்களுடன் பயணச்சீட்டை என் கையில் திணித்தார் நடத்துனர். மீதி 50 பைசாவைத் தராமல் இருந்தவரிடம் கேட்டால், "சில்லறை இல்லை" என்பதுதான் பதிலாக வந்தது.

                   நான் இறங்கும் நிறுத்தம் வரை பல முறை என்னைக் கடந்து போன நடத்துனர்,  தீண்டத்தகாத ஜந்துவைப் போல,  பிள்ளைப்பூச்சியைப் போலவே என்னைப்  பார்த்தார் கடைசிவரை சில்லறை தராமலேயே இருந்த அந்த நடத்துனர் அந்த நேரத்திற்கு 'ராசவாகவே'  எனக்குக் காட்சியளித்தார்.

                  சந்தடி மிக்க தெருவோரத்தில் இருந்தது அந்த சின்ன பெட்டிக்கடை. 'தினமணி'யை வாங்கிவிட்டு  ஐந்து ரூபாய் கொடுத்த என் கையில், ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் ஒரு இனிப்பு மிட்டாயும் தரப்பட்டன.  50 பைசாவுக்குப்  பதிலாக ஒரு இனிப்பு மிட்டாய். கேட்டால் "சில்லறை இல்லை". இந்த கடைக்காரரும் அந்த நேரத்துக்கு 'ராசாவாகவே'  எனக்குத் தோன்றினார்.

                 மக்கள் கூடும் இடங்களில்... பேருந்து நிலையங்களில்... திரையரங்குகளில்... ஏன் சில சமயம் வழிபாட்டுத் தலங்களிலேயே புகைபிடிப்பவர்கள்,  எச்சில் துப்புபவர்கள் அந்த நேரத்து 'ராசாக்களே' !.

                 குப்பைகளை பக்கத்து வீடுகளுக்கு முன் கொட்டுபவர்கள், சாலைஓரத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எல்லோருமே நம்மில் 'ராசாக்களாக'த் தான் இருக்கிறார்கள்.

                 வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமைந்தால், நாம் எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் 'ராசாக்களே'. நமக்கு சொந்தமில்லாத,  தேவையில்லாத பொருட்களை அபகரிக்கவோ களவாடவோ நாம் தயங்குவதே இல்லை. விதிவிலக்காக  சிலர் இருக்கலாம். அந்த எண்ணிக்கை திருப்திகரமான வகையில் இல்லை என்பதே உண்மை.

                 இலவசங்களைப்  பெறுவதில்  யாரும் வெட்கப்படுவதில்லை- ஏற்கனவே  ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தும் அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியை பெறுவதில்....  தவறான விவரங்களைக் கொண்ட பல லட்சக் கணக்கானப்  போலி குடும்ப அட்டைகள்  இங்கே சர்வ சாதாரணமாக  உலவ முடிகிறது.

                 தொகை ஐம்பது பைசாவாக இருக்கலாம்;  ஐந்து ரூபாயாக இருக்கலாம்; ரூ.  1.76 லட்சம் கோடியாகவும்  இருக்கலாம். வித்து எதுவாக இருந்தாலும் விளைநிலம் பதராக உள்ளதே!

                வித்யாசம்  தொகையிலா?  இல்லை, நமது மனப்பான்மையிலா?  அந்த வகையிலே நாம் எல்லோருமே 'இந்நாட்டு ராசாக்கள்' தானே ?

                சுவாமி விவேகானந்தரின் கூற்றுதான் இங்கே நினைவுக்கு வருகிறது: 
                 "சொன்னபடி இரு: சொன்னபடி உருவாக்கு!"  ( Be and make )
                 ''எளிமையாக வாழ்: எடுத்துக்காட்டாக  வாழ்!"  (Be simple and Be sample )         

-ம.கொ.சி.ராஜேந்திரன் 

காண்க:
   

தீண்டாமையை எரிக்கக் கிளர்ந்த சுடர்



மகாத்மா
ஜோதிராவ் புலே.
நினைவு தினம்:
நவ. 28

மராட்டியத்தில்   பிறந்த மகாத்மா ஜோதிப கோவிந்தராவ் புலே (ஏப்ரல் 11, 1827), பாரதத்தின் சமூக சீர்திருத்த சிற்பிகளில் முதன்மையானவர்.  இவர் மிகச் சிறந்த அறிஞர்,  எழுத்தாளர்,  சமூக சீர்திருத்தப் போராளி,  கல்வியாளர்,  தத்துவவாதி என்று பல முகங்களை உடையவர். இவரும் இவரது மனைவி சாவித்திரி புலேவும் இணைந்து பாரதப் பெண்களின் கல்வி உயர பாடுபட்டனர்.


கல்வித்துறை மட்டுமல்லாது, விவசாயம், மகளிர் மேம்பாடு, வருணமுறைக்கு  எதிரான போராட்டம்,  விதவையர் மறுமணம் ஆகிய துறைகளிலும்  அரிய முத்திரை பதித்தவர் ஜோதிராவ் புலே.


மகாராஷ்ட்ராவில் உள்ள சதாராவில், 'மாலி' என்ற பிற்படுத்தப்பட்ட  ஜாதியில் பிறந்த புலே,  9 வயத்தில் தனது தந்தை  கோவிந்தராவை இழந்தார். அண்டைவீட்டினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களால் அவரது அறிவுத்திறன்  உணரப்பட்டது. அவர்களது உதவியுடன், உள்ளூர் ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்த புலே, அப்போதிருந்த ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் மனம் நொந்தார். தனது நண்பரின் இல்லத் திருமணத்தில் ஜாதி காரணமாக அவமதிக்கப்பட்ட நிகழ்வே (1848), புலேவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


பிரிட்டிஷ்  அறிஞர் தாமஸ் பெய்னின் 'மனித உரிமைகள்' என்ற நூல் அவரது வாழ்வில் லட்சியங்களை விதைத்தது. அவர் சமூகநீதிப்   போராளியாகவும்  சாதிமுறைக்கு எதிரான  கலகக்காரராகவும் உருவானார். 1873 -ல் புலே 'சத்திய சோதக் சமாஜ்' அமைப்பை நிறுவினார். இதன் பொருள் 'உண்மையைத் தேடும் சமுதாயம்' என்பதாகும். சமூகத்தில் மேல்ஜாதி ஹிந்துக்களால் அடக்கிவைக்கப்பட்ட சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், பஹுஜன்கள்  ஆகியோரின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அவர்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்வதுமே இதன் நோக்கம் என்று அறிவித்தார்.


கீழ்ஜாதி மக்கள் மீதான அடக்குமுறை கண்டு வெகுண்ட  புலே, தனது கோபத்தை வேதங்கள் மீது காட்டினார். நால்வருண முறைக்காக பிராமணர்கள் மீதும் அவரது கோபம் தொடர்ந்தது. இந்தியாவில் தோன்றிய பிராமண எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதர்ஷம் புலே தான். ஹிந்து மதத்தில் இருந்தபடியே, அதன் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசத்துடன் போராடினார் புலே. மதத்தைவிட மனிதநேயமே முக்கியமானது என்று வாதிட்டார் புலே. அதன் காரணமாக சனாதனிகளின் எதிர்ப்புக்கு ஆளானார்.


வேத அடிப்படியிலான மதத்திற்கு மாற்றாக சந்த்  துக்காராமின் 'அபாங்கம்' வழிபாட்டுமுறை அடிப்படையில் 'அகண்டாஸ்' என்ற முறையை புலே ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புலேவை தங்கள் குருவாக ஏற்று பின்பற்றினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக  குரல் கொடுத்த சைதன்ய மகாபிரபு,  ராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களையும் அவர் விமர்சித்தார். அவர்களுக்கு மாற்றான இறைநெறியை அவர் உருவாக்கினார். அதன் படி இறைவனுக்கு 'நிர்மிக்' (கர்த்தா) என்று பெயர் சூட்டினார்.


ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராகப் போராடியபோதும் மதம் மாறுவதை புலே ஆதரிக்கவில்லை. 'அனைத்து மதங்களிலுமே வல்லவனுக்குத் தான் வாய்ப்பளிக்கப்படுகிறது; தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக- பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்' என்று புலே உபதேசித்தார்.


சிலை வழிபாட்டுக்கு மாற்றாக இயற்கையை வழிபடும், 'தேயிசம்' என்ற முறையை அவர் பிரசாரம் செய்தார். எனினும் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியை புலே எதிர்க்கவில்லை. சமூக மாற்றத்திற்கு காரணமான சமூக நீதி அவர்களால்தான் கிடைத்தது என்பது புலேவின் கருத்து.


1848 -ல் இவரும் இவரது மனைவியும் நிறுவிய பெண்கள் பள்ளியே நாட்டின் முதல் பெண்கள் பள்ளியாகும். விதவையர் மறுமணம், பெண்சிசுக் கொலையைத் தடுத்தல், மகளிர் கல்வி ஆகியவற்றில் அதீத ஈடுபாடு காட்டினார். பண்டித ரமாபாய், கோலாப்பூர் மன்னர் சாஹு மகாராஜ் ஆகியோர் புலேவை ஆதரித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். புனே நகரமன்ற உறுப்பினராகவும் புலே (1876 -1882) பணியாற்றியிருக்கிறார்.


1890, நவ. 28 -ல் மகாத்மா  ஜோதிராவ் புலே மறைந்தார். அவர்து மறைவுக்குப் பின் 'சத்திய சோதக் சமாஜ்'  காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. தீண்டாமையை ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களுடனேயே  வசித்த புலே, இந்திய சமூக  சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவராக கருதப்படுகிறார். பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக விளங்கிய அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் புலே. இவரது வாழ்வு, ஜாதியின் பெயரால் அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களின் விடுதலைக்கு வித்திட்ட அர்ப்பண வாழ்வாகும். இவரை 'கிரந்தி சூர்ய' என்று (புரட்சிப் பகலவன்) மக்கள் அழைத்து மகிழ்கின்றனர்.

- குழலேந்தி

காண்க:
Jyotirao Pule
Cultural India

23.11.10

அன்பின் மொழி



 



ஸ்ரீ சத்திய சாயிபாபா ஜெயந்தி 
(நவ. 23)
 
கடவுள்மேல் ஒருவன்கொண்ட அன்பு (பக்தி) என்பது, நிச்சயம் மனிதனுக்கான அன்பாக மலர வேண்டும்;
அது தொண்டு அல்லது சேவை எனத்  தன்னை  வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்வாழ்வே நான்தரும் செய்தி,  நான்தரும் செய்தி அன்பு என்பதே!
"Love for God must be manifested as Love for man, and Love for man must express itself as Service.  My Life is My Message and My Message is Love."
-ஸ்ரீ சத்ய சாய்பாபா

காண்க:

மாலவனின் ஸ்ரீவத்ச அம்சம்




திருப்பாணாழ்வார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை- 7 -ரோகிணி (நவ.23)


திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டின் உறையூரில்,  செந்நெல் பயிரில் (கி.பி. 8-ம் நூற்றாண்டு) துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம், தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன்கிழமையன்று ரோகிணி நட்சத்திரத்தில் திருமாலின் ஸ்ரீவத்ஸ அம்சராக திருப்பாணாழ்வார் அவதரித்தார்.

திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர். ஆதலால் திருவரங்கத்தின்  உள்ளே செல்வதற்கு இவர் அனுமதிக்கப்படவில்லை.  அதனால் இவர் காவிரியின்  மறுகரையில் இருந்தவாறே  பண்  இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார்.
ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன், ரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர்,  பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் (அமலனாதிபிரான்) பாடியுள்ளார்.  இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம்,  மார்பு,  கழுத்து,  வாய், கண்கள், உடல்,  தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.  எக்குலத்தவராயினும் அரங்கன் அடியார் எனில் உய்வு உண்டு என்று உலகுக்கு உணர்த்தியவர், திருப்பாணாழ்வார்.  
காண்க:
திருப்பாணாழ்வார் (தமிழ் ஹிந்து)
திருப்பாணாழ்வார் திருச்சரிதம்
அமலனாதிபிரான்
நான்காயிரம் அமுதத் திரட்டு
தேசிகன் பக்கம்
சாதிகள் இல்லையடி பாப்பா