நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

21.11.10

கடைசி ஆழ்வாரான மன்னர்



திருமங்கையாழ்வார்
திருநட்சத்திரம்:
கார்த்திகை -5 (கிருத்திகை)
(நவ. 21)


திருமங்கையாழ்வார்   வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள்  ஒருவர். சோழ நாட்டில் பிறந்தவர்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.  அவை திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்),  சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்), பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்), திருநெடுந்தாண்டகம்  (30 பாடல்கள்),  திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்),  பெரிய திருமொழி (1084 பாடல்கள்)  ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளன.

திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின் இயற்பெயர் நீலன். லியன் என்றும் அழைக்கப்பட்டது உண்டு. சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவருக்கும் மனைவி வல்லித்திருவுக்கும்,  நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று, சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.

பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.

வாள், வில், வேல், ஈட்டி ஆகிய படைக்கலப் பயிற்சியிலும் வல்லவரானார்.  தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமையேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்கு பெரும் வெற்றிகளை தேடித் தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தார்.

நீலன் குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தைத் தொடங்கினார். மனைவி திருமணத்திற்கு விதித்த நிபந்தனைப்படி ஸ்ரீ வைஷ்ணவராக மாறிய நீலன்,  தன் கையில் கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமையால் அரசு காவலில் சிறை வைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான் வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.


பிறகு வினவ பக்தர்களுக்கு அமுது வழகுவதில் தனது பொருளனைத்தும்  செலவிட்ட நீலன், தனது செல்வம் அனைத்தும் கரைந்த நிலையில், பாகவத கைங்கர்யத்திற்காக வழிப்பரியிலும் இறங்கினார். அப்போது அவரை தடுத்தாட்கொண்ட திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் 'ஓம் நமோ நாராயணா' என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். அதன் பின் திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்ற நீலன், வைணவ நெறியைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார்.

இதன் பின் திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் ஆறு பிரபந்தங்களை (காண்க: கீழே இணைப்புகள்) அருளிச் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மனைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார். இவரே ஆழ்வார்களில் கடைசியாகக் கருதப்படுகிறார்.

காண்க:
திருமங்கையாழ்வார் (விக்கி)
திருமங்கையாழ்வார் (தேசிகன் பக்கம்)
திருமங்கையாழ்வார் சரிதம்
திருமங்கையாழ்வார் (தமிழ்வு)
திருவெழுகூற்றிருக்கை
திருநெடுந்தாண்டகம்
திருக்குறுந்தாண்டகம்
பெரிய திருமடல்
சிறிய திருமடல்
பெரிய  திருமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக