நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

31.3.11

சமணர் கண் திறந்தவர்



தண்டியடிகள் நாயனார்

திருநட்சத்திரம்:
பங்குனி மாதம் - 17 - சதயம்
(மார்ச் 31)

சோழநாட்டிலுள்ள  திருவாரூரில் பிறந்தவர் தண்டியடிகள். இவர் பிறவிக் குருடர். அகக்கண்ணிலே ஆண்டவனை தொழுதுவந்தார். தினமும் திருவாரூர் கோயிலை வலம் வருவார். ஐந்தெழுத்து மந்திரத்தை மறவாது ஓதுவார்.

திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று இருந்தது. அதன் நான்கு பக்கங்களிலும் சமண மடங்கள் நிறைய காணப்பட்டன. எனவே, திருக்குளம் ஆக்கிரமிப்பால் சுருங்கியும் பராமரிப்பு இன்றியும் காணப்பட்டது.

தண்டியடிகள் திருக்குளத்தை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்த விரும்பினார். திருக்குளத்தின் நடுவிலே ஒரு கம்பை நட்டார். மற்றொரு கம்பை குளத்தின் கரையிலே நாட்டினார். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கயிறு கட்டினார். கயிற்றைத் தடவிக் கொண்டே குளத்திற்குள்  இறங்கி மண்ணைத் தோண்டுவார், அதைக் கூடையிலே சுமந்து வந்து கரையில் கொட்டுவார்.

தண்டியடிகளின் செயலைக் கண்ட சமணர்கள்  பொறாமை கொண்டனர். எனவே அவர்கள் தண்டியடிகளிடம் சென்று, நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் அவற்றிலுள்ள சிறு பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் இறக்கும். எனவே, அவற்றை துன்புறுத்த வேண்டாம் என்று கூறினார்கள்.  அதற்கு  அடிகள் ''அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியாது'' என்று கூறி உழவாரப் பணியைத் தொடர்ந்தார்.

இதைக் கண்ட சமணர்கள் கோபமடைந்து ''நாங்கள் சொன்னதும் அறிவுரையே. அதைக் கேட்கமாட்டாய் போலிருக்கிறதே! உனக்கு செவியும் இல்லையோ?'' என்றனர். உடனே அடிகளோ, ''சிவனடியை அன்றி பிறிதொன்றை என் கண் பாராது. அந்த விஷயம் உங்களுக்குப் புரியாது. புற உலகம் காண, நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என பதிலுக்கு கேட்டார்.

''நீ உன் தெய்வ வலிமையால் கண்பெற்றால். நாங்கள் இந்த ஊரை விட்டே போய்விடுகிறோம்'' என்ற சமணர்கள் தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டிகள், நட்டுவைத்த கம்புகள், கயிறு ஆகியவற்றையும் பிடுங்கி கொண்டு சென்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த தண்டியடிகள். திருக்கோயிலை அடைந்து இறைவனிடம் முறையிட்டார். அன்று இரவு, தண்டியடிகள் கனவில் சிவபெருமான் தோன்றி, அன்பனே, கவலைப்படாதே. உன்னுடைய கண்கள் காணவும், சமணர்களுடைய கண்கள் குருடாகவும் அருள் செய்வோம் என்றார்.

அதே சமயம், அந்த நாட்டு மன்னனின் கனவிலே தோன்றி, தண்டி என்பவன் என்னுடைய குளத்தை சீரமைக்கிறான். சமணர்கள் அதற்கு இடையூறு செய்கிறார்கள். எனவே நீ அவனிடம் சென்று அவனது விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக என்றார்.

பொழுது விடிந்தது. மன்னன் தண்டியடிகள் இருக்கும் இடத்தை அடைந்தான். தான் கண்ட கனவை அவரிடம் கூறினான். தண்டியடிகளும், தான் மேற்கொண்ட வேலையையும் அதற்கு சமணர்கள் செய்த தொந்தரவுகளையும் மன்னனிடம் விவரித்தார்.

மன்னன் சமணர்களை விசாரணைக்கு அழைத்தான். அவர்களோ, தண்டி கண்பார்வை பெற்றால் தாங்கள் இந்த ஊரைவிட்டு போவதாக உறுதி கூறினார்கள். உடனே, தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் சென்றான். மன்னன் கரையிலே நின்று கொண்டு, தண்டியடிகளை நோக்கி, சிவநேயரே, சிவனருளால் கண்பார்வை பெறுதலை காட்டுக என்றான்.

தண்டியடிகளும் சிவபெருமானை மனமுருக பிரார்த்தித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே குளத்தினுள் மூழ்கினார். கண்பார்வை பெற்று எழுந்தார். சமணர்களோ, கண்பார்வை இழந்து தடுமாறினர். அந்த காட்சியைக் கண்ட மன்னன், சமணர்களை ஊரைவிட்டு வெளியேற்றினான். தண்டியடிகள் விருப்பப்படி திருக்குளத்தை சீரமைத்தான்.

தண்டியடிகள் வழக்கம்போல சிவத்தொண்டு செய்து இறுதியில் சிவபெருமான் திருவடிநிழலை அடைந்தார். அன்று முதல், தண்டியடிகள் நாயனார் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

தனது ஊனக்கண்கள் இருண்டிருந்தபோதும், சிவபக்தியால் பார்வை பெற்ற தண்டியார், சமணரின் ஞானக் கண்களைத் திறந்தவராக வணங்கப்படுகிறார். அந்தக் காலத்திலேயே மதப் பிரசாரத்திற்கு எதிரான குரலாக தண்டியரின் குரல் ஒலிப்பதைக் காண்கிறோம். ஒவ்வொருவரும் தமது பாரம்பரியத்தைக் காப்பதில் தண்டியார் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே பெரிய புராணம் கூறும் நீதி.

- அம்பைசிவன்   
 
 
காண்க:
 
 
 
 
 
 
 
 
 
 
.

28.3.11

தமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி



தீரர் சத்தியமூர்த்தி
நினைவு: மார்ச் 28

இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணிய ஆங்கிலேய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லையென்றால், யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டார்.
யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல.  அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்என்றார் அந்த சுதந்திரப் போராட்ட வீரர். இந்த பதிலைக் கேட்டு ஜேம்ஸ் அதிர்ந்து விட்டார். இவ்வாறு துணிச்சலாக கூறியவர்  சத்தியமூர்த்தி. இப்படி பல வகையிலும் துணிச்சலாக அவர் நடந்து கொண்டதால், அவர் தீரர் சத்தியமூர்த்திஎன்று புகழ்ந்து பாராட்டப்பட்டார்.
அந்த வீரர் பிறந்தது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமயம் ஆகும். 1887, ஆக. 18ம் நாள் பிறந்தார்.  தந்தை சுந்தரேச சாஸ்திரி. திருமயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சத்தியமூர்த்தி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.
படிக்கும்போதே, எந்தத்  தலைப்பாக இருந்தாலும், சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்தார். இவரது சொற்பொழிவு கேட்போரை மெய்மறந்து கேட்கச் செய்திடும் வல்லமை உடையது. ஒருமுறை வடமொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்து தமிழில் சொற்பொழிவாற்றும் இவர், அனைவரும் வியக்கும்படி வடமொழியில் ஆற்றினார். இந்நிகழ்வு வடமொழியிலும் இவருக்கு புலமை இருந்ததைத் தெளிவுபடுத்தியது.
நாடகத்தில் நடிப்பதுஇயக்குவது ஆகியவற்றில்  ஆர்வம் கொண்டிருந்தார்;  பம்மல் சம்மந்த முதலியார் அவர்களின் நாடகத்தில் நடித்துள்ளார்;  திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்;  தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.
வழக்கறிஞரான இவர் நாட்டுப்பற்று கொண்டிருந்ததால்,  நாட்டு  விடுதலைக்காப் போராடி வந்தார். 'ஹோம் ரூல்' இயக்கத்தில் பங்கேற்றிருந்தபோது அவ்வியக்கத்துடன் உண்டான கருத்து வேறுபாட்டினால், அதிலிருந்து விலகினார். பின் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
1919ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு நவீன  அரசியல் கோட்பாடுகளை கற்றார். அவற்றை நம் நாட்டிற்கு எடுத்துக் கூறி வழிநடத்தவும் செய்தார். காங்கிரஸ் பேரியக்கம் 1992ல் பிளவுபட்டு 'சுயராஜ்யக் கட்சி' உதயமான போது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
1923ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். சென்னை மாநகராட்சியிலும் உறுப்பினரானார். சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றார். 1936ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.
1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை பாதிக்கப்ட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அவரால் முன்பு போல் பொதுவாழ்வில் ஈடுபட முடியாமல் போனது. 1943, மார்ச் 28ம் நாள் சத்தியமூர்த்தி  இயற்கை எய்தினார்.
இவரைப் போன்ற பலரின் தியாகமே நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது.  கர்மவீரர் காமராஜரின்  அரசியல் குருவாக தீரர் சத்தியமூர்த்தி   போற்றப்படுகிறார்.
தீரர் சத்தியமூர்த்தி,  இலக்கியம், நாடகம்திரைப்படம்அரசியல் என பல துறைகளில் ஈடுபட்டு முழுமை பெற்ற மனிதராக வாழ்ந்ததை நினைப்போம். அவரது  பல்துறை ஆர்வத்தையும் தேச நேசத்தையும் நாமும் நம்முள் காண்போம்.
-என்.டி.என்.பிரபு
காண்க:
.

எங்கே போகிறது தமிழகம்?

சிந்தனைக்களம்

''நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர்.  தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில் பெரும்பாலானோர் அரசியலில் வளர்வதற்காகச் செயல்படுகின்றனர். வெகு சிலரே வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுகின்றனர்'' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் போட்டா போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின் சொற்ப எண்ணிக்கையும் குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவோம் என்பதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது 'அவுட் ஆஃப் ஃபேஷனா'கிவிட்டது.  இதையெல்லாம் இதுவரை எந்த அரசும் நிறைவேற்றியதும் இல்லை,  இனி செய்யப்போவதும் இல்லை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, தங்களது வாக்குகளை இலவசங்களுக்கு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய அப்துல் கலாமை அளித்த தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.

பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வித்திட்ட சி.சுப்பிரமணியம்,  கல்விக் கண் திறந்த காமராஜ்,  எதிர்கால இந்தியாவின்மீது குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால் சூழப் பட்டுள்ளது.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம்.

வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக் கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!

எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.

வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க முன் வருகிறார்கள். உழைத்துக் களைத்துச் சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்; ஒரு பொருளைச் சும்மா கொடுத்தால்கூட வாங்கத் தயக்கம் காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை என வீதியில் போராடுகிறான் தமிழன். 

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச டி.வி. தருகிறோம், இலவச அரிசி தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எடுபடாமல் போனாலும்கூட தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது? இலவசங்களுக்குத் தமது வாழ்வையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும் விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகிறது.

'தர்மம் போடுங்க சாமீ' என்று யாரேனும் யாசிக்கும்போதுகூட மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுக் 'கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட்டால் என்ன கேடு' என்று எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?

50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள் நம்முள் ஓடுகின்றன.  இந்த நாடு ஏன் முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்டது என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?

குறைந்தபட்சம் பிச்சைபோடும் நேரத்திலாவது, வறுமை என்று ஒழியும், எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள் நம் நாட்டில் குறைவுதானே?  "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற சிந்தனையை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.

தொகுதிக்கே எங்கள் எம்.எல்.ஏ. வருவதில்லை என்று குற்றஞ்சாட்டும் மக்களையோ அல்லது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி, ஓட்டுக் கேட்க வரும் கட்சியினரைப் பார்த்துப் பொங்கி எழும் வாக்காளர்களையோ காண முடிவதில்லை. அப்படியே பொங்கினாலும், நீங்கள் ஒன்றும் சும்மா ஓட்டுப் போடவில்லையே, சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டும் இலவசங்களைப் பெறவும்தானே வாக்களித்தீர்கள் என்று ஏளனமாய் கேட்கப்படும் அவல நிலையில் இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால், ஒரு மாநிலமே சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது!

-க.ரகுநாதன் 

காண்க: 

விலை போகும் ஜனநாயகம் (தினமணி தலையங்கம்-19.03.2011)

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம்... (தினமணி தலையங்கம்- 25.03.2011)
.

27.3.11

யாழ்நூல் இயற்றிய துறவி

விபுலானந்த அடிகள்

பிறப்பு: மார்ச் 27


ஈழத்தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் சேர்த்த வளம் குறித்துத் தனியாக பல நூல்கள்  எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு, குறிப்பாக இசைத் தமிழுக்கு தனதுயாழ் நூல் என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர்.

யாழ் நூல் தவிர, மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த உன்னதமான  துறவிகளில் ஒருவர். ஆன்மிகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த  பெருமகன்.

அவர் இலங்கை, மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி - கண்ணம்மை தம்பதிக்கு 1892, மார்ச் 29ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங்களில் ஒன்றானமயில்வாகனன் என்ற பெயரிட்டு வளர்த்தனர்.அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும், வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக,  நன்னூல்,  சூளாமணி நிகண்டு உள்ளிட்டவற்றையும்  குறளையும்  ஆழ்ந்து கற்றார்.

அவரது ஆழ்ந்த ஆன்மிக உணர்வுக்கான அடித்தளம் அவர் மாமன்களான  சிவகுருநாதப் பிள்ளை மற்றும்  வரதராசப் பிள்ளை  ஆகியோரால் இடப்பட்டது.  இவர்களிடம் கந்தபுராணம் மற்றும் பாகவதம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே  மயில்வாகனன் கற்றார்.

கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும்  முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக் கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.

கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே,  கைலாச பிள்ளை, கந்தையா பிள்ளை உள்ளிட்ட சில முக்கியத் தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால்  அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின்  வித்துவான் தேர்விலும் வென்றார்.

தமிழோடு ஆன்மிகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம்  கொழும்பிலிருந்த இராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மையும்தான்.

1922ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையானராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையானவேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார்.

1924ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக  இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார்.

1925ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கு வந்த புதிதில் அவரை ஒரு கூட்டத்தில் பேச வைத்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் ‘விபுலானந்தஜி பேசுவார் என்று போட்டிருப்பதைப் பார்த்து யாரோ வடநாட்டு சன்யாசி உரை நிகழ்த்துகிறார் என்று நினைத்தவர்கள் கம்பீரமான தீந்தமிழில் விபுலானந்தரின் முழக்கத்தைக் கேட்டு வியந்தனர்.

இமயமலை யாத்திரை, ‘பிரபுத்த பாரதம் என்ற வேதாந்த இதழின் ஆசிரியர் என இவரது ஆன்மிகப் பணிகளும் ஓசையின்றி நடந்தது வந்தன. விவேகானந்தஞானதீபம் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் இவரது ஆன்மிகப் பணியில் அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரியத்திலும் சிறப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்த விபுலானந்தர், மகாகவி பாரதியிடத்திலும் மனத்தைப் பறி கொடுத்தார். மூத்த தமிழ் அறிஞர்கள் பாரதியைக் கண்டு கொள்ளாமலிருந்த அந்தக் காலத்தில் பாரதியின் படைப்புகளில் ஈடுபட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அடிகளார்.

தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934ல் உருவான "சொல்லாக்கக் கழக"த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.

இசைத் தமிழ் குறித்து கிட்டத்தட்ட தனது 14 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக மிக முக்கிய இசைத் தமிழ் நூலான யாழ்நூலை விபுலானந்தர் படைத்தார். சிலப்பதிகாரத்தில் உள்ள ஏராளமான அரிய இசைச் செய்திகள் குறித்து போதிய அளவுக்கு விரிவான ஆழமான விளக்கங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் சிலம்பின் இசை நுட்பங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை விபுலானந்தரின் யாழ்நூலுக்கு உண்டு. இதன் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் ஆழத்தையும் அவர் நிறுவினார்.

சிலம்பிலுள்ள இசைத் தகவல்களின் ஆழத்தில் முக்குளிக்கப் போதிய இசைப் புலமை வேண்டும். அதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணிபுரிந்த இசை மேதை பொன்னையாப் பிள்ளை உள்ளிட்ட சிலரிடம் இசை இலக்கண நுட்பங்களையெல்லாம் அறிந்தார் விபுலானந்தர்.

பாயிரவியல்,  யாழ் உறுப்பியல்,  இசை நரம்பியல்,  பாலைத் திரிபியல்,  பண்ணியல்,  தேவார இயல்,  ஒழிபியல் என,  7 இயல்களால் ஆனது இந்த நூல்.
நாடக இலக்கணங்களை வகுத்துக் கூறும் ‘மதங்க சூளாமணி, விபுலானந்தரின் மற்றோர் அரிய படைப்பு.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23வது ஆண்டு விழாவின் போதுஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும் என்ற தலைப்பில் அங்கு விபுலானந்தர் உரை நிகழ்த்தினார். இந்த உரை விழாவுக்கு வந்திருந்த .வே.சாமிநாதய்யரால் மிகவும் பாராட்டப்பட்டது.  பின்னாளில் இந்த உரையையேமதங்க சூளாமணி என 3 இயல்களால் ஆன நூலாக விபுலானந்தர் படைத்தார்.

இவரது புகழ் பெற்றயாழ் நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்த அடுத்த மாதமே விபுலானந்தர் (19.07.1947) காலமானார்.

வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய  அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

- தேசிகன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)