நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

24.4.11

சேவையால் இறைவனைக் காட்டியவர்


ஸ்ரீ சத்ய பாபா

மறைவு: ஏப். 24

ஷீரடி  சத்ய சாய்பாபாவின் மறு அவதாரமாக வணங்கப்படுபவரும், மானுட சேவையால் இறைவனைக் காட்டியவருமான பகவான் சத்ய சாய்பாபா, புட்டபர்த்தியில் இன்று (ஏப். 24) இறைவனடி சேர்ந்தார். 

ஆந்திரப் பிரதேச மாநிலம், புட்டபர்த்தியில், பெத்தவெங்கமராஜு ரத்னாகரம்-  ஈச்வரம்மா தம்பதியினரின் எட்டாவது குழந்தையாக,  1926 ,  நவம்பர் 23  ல்  அவதரித்தார்,  பாபா. இயற்பெயர்: சத்யநாராயண ராஜு.

சிறு வயதிலேயே தனது அருளிச் செயல்களால் தனது அவதார மகிமையை வெளிப்படுத்திய சத்யநாராயண ராஜு, தான் ஷீரடியில் வாழ்ந்து மறைந்த பாபாவின் மறுபிறப்பே  என்று அறிவித்தார். பிறகு தனது 14  வது வயதில் (1940) சன்யாசம் பூண்டார். தனது சித்து விளையாட்டுகளால் பக்தர்களின் கவனத்தை ஈர்த்த பாபா, சத்ய சாய்பாபா என்று பெயர் பெற்றார். பாபா சிறந்த கவிஞராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

வெறும் கைகளில் விபூதி,  கற்கண்டு,  குங்குமம், லிங்கம்,  ஸ்படிக மாலை,   மோதிரம் போன்றவற்றை  வரவழைத்து பக்தர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாபாவின் அற்புதங்கள் பரவின. அவரது புகழ் பரவப் பரவ,  பக்தர்கள் வட்டம் பெருகியது. பக்தர்களின் நோய்களைப் போக்கியது, குறைகளைக் களைந்தது உள்ளிட்ட அற்புதங்களால் அவரை கடவுள் அவதாரமாகவே சாயி பக்தர்கள் கொண்டாடத் துவங்கினர். 1944  ல் புட்டபர்த்தியில் சாயி பக்தர்கள் அவருக்கு கோயில் எழுப்பினர். பாபாவின்  தலைமையகமான  பிரசாந்தி நிலையம் 1948  ல் கட்டப்பட்டு 1950 ல் நிறைவடைந்தது. அந்த இடம் நூறு ஏக்கர் பரப்பளவில் சாயி பக்தர்களின் தலைமையகமாக விளங்கி வருகிறது.

தேசம் முழுவதும் தீர்த்தாடனம் செய்த பாபா, உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆன்மிகத்தை பரப்பினார். ஆன்மிக உபதேசங்கள் மட்டுமல்லாது, பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலமாக மக்கள் சேவையிலும் பாபா ஈடுபட்டார். அதன்மூலமாக அரசு செய்ய இயலாத உள்கட்டமைப்பு வசதிகளையும் கூட பல பகுதிகளில் செய்து கொடுத்தார். பாபாவால் மேன்மையுற்ற அவரது பக்தர்கள் தாமாக முன்வந்து பல சேவைப்பணிகளைத் துவங்கினர்.

அன்பே சிவம் என்பதே பாபாவின் பிரதான கொள்கை. மானுட சேவையே இறைவனை அடையும் மார்க்கம் என்று அவர் உபதேசித்தார். இன்று பாபாவும்  அவரது  பக்தகோடிகளும்   பலநூறு சேவைப்பணிகளை ஆரவாரமின்றி நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 137  நாடுகளில்,   கோடிக் கணக்கான பக்தர்கள் உள்ளனர். 114  நாடுகளில் சத்யசாயி சேவை நிறுவனம் இயங்குகிறது. 

உலகெங்கும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் சாயி பக்தர்கள்  துயர்  துடைப்புப் பணிகளில் முன்னிற்கின்றனர். தன் மீதான பக்தியை மானுட சேவைக்கான வாய்ப்பாக உருமாற்றியவர் சாய்பாபா.

கல்வி, மருத்துவம், சேவை, சமூக மறுமலர்ச்சி, ஆன்மிகம், வளர்ச்சி பணிகள்  என்று பாபாவின் சேவைப்பணிகள் விரிந்து பரந்தவை. கீழ் ஆந்திராவின் அனந்தப்பூர், வடக்கு- கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலுள்ள  500 க்கு    மேற்பட்ட கிராமங்களுக்கும் (1996 - எல் அண்ட் டி திட்டம்) , தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கும் (2004 - தெலுங்கு கங்கை திட்டம்)  குடிநீர் வழங்கும்   பிரமாண்ட  திட்டங்களை நிறைவேற்றியது பாபாவின் சாதனையாகப் போற்றப்படுகிறது. புட்டபர்த்தியிலுள்ள பாபா நிறுவிய அதிநவீன மருத்துமனை ஏழை மக்களின் உயிர் காக்கும் மையமாகத் திகழ்கிறது.  அரிய அறுவை சிகிச்சைகள்  இங்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன.

பாபாவின் அருள்மொழிகள் எண்ணற்ற மொழிகளில் பலநூறு தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அத்வைதமே பாபாவின் அடிப்படி ஆன்மிகம் ஆகும்.  அனைத்து மதங்களும்   இறைவனை அடைபவையே என்பதும் பாபாவின் அருள்மொழி.

சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் உலக மதங்கள் அனைத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளன. ''அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய்; எல்லோருக்கும் உதவு; யாரையும் வெறுக்காதே'' - இதுவே பகவான் சத்ய சாய்பாபாவின் தாரக மந்திரம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் சாய்பாபாவின் அருளாசி வேண்டி புட்டபர்த்தி படை எடுத்தனர். உலகப் புகழ் பெற்ற தலைவர்களும் பிரபலங்களும் அவர் காலடியில் கண்ணீர் மல்க தவம் கிடந்தனர். ஆனால் அவரோ, ஏழை மக்களின் நல்வாழ்விற்கான சேவைப்பணிகளில்  தனது பக்தர்களை  அமைதியாக ஈடுபடுத்தியவாறு கர்மயோகியாக வாழ்ந்தார்.

எனினும் மானிட  அவதாரத்திற்கே உரித்த  இறுதிநாள் பாபாவிற்கும் வந்துவிட்டது. உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த பகவான் சத்ய சாய்பாபா, இன்று (2011, ஏப். 24) காலப்பெருவெளியில்   ஐக்கியமானார்.

இன்று நம்முடன் சத்ய சாய்பாபா உயிருடன் இல்லை. ஆயினும் அவர் அருளிய பொன்மொழிகள் நமக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும். அவரது சேவைப்பணிகள் உலகம் உள்ளவரை மானுட உயர்வுக்கு உதவும். அவரது வாழ்வு என்றும் நமக்கு உந்துசக்தியாக இருந்து நம்மை ஊக்குவிக்கும். பாபாவின் சித்து ஆற்றல் அவரது பக்தர்களுக்கு மன தைரியத்தையும், இழப்பிலிருந்து முன்னேறும் ஆற்றலையும் அளிக்கட்டும்.

பாபாவின் ஆன்மா எல்லையற்ற பரம்பொருளில் ஒன்றட்டும். அவரது அருளாசி உலகை வழிநடத்த தேசிய சிந்தனைக் கழகம் பிரார்த்திக்கிறது.

-குழலேந்தி

காண்க:




.

18.4.11

ஊடக உலகின் ஒளிவிளக்கு

 
 
ராம்நாத் கோயங்கா
 
பிறப்பு: ஏப். 18
 
காலவெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள்; அந்த வெள்ளத்திலேயே எதிர் நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின்  வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் அவர்களுடைய குணாம்சங்களாகக் கட்டாயம் இருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் - தலைவரான ராம்நாத் கோயங்கா அத்தகைய மாமனிதர்.
 

நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகவும் இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த இரண்டாவது சுதந்திரப் போரில் பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் திகழ்ந்தவர் ராம்நாத் கோயங்கா.
 

பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் 1904-ல் பிறந்த கோயங்கா, படிப்பை முடித்ததும் மாதச் சம்பள வேலை கிடைக்கும் என்று எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துகொள்ள கோல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார்.
 

சென்னைக்கு வந்தவர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், நாட்டின் எல்லோர் மனதிலும் வீசிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை அவரையும் விட்டுவைக்கவில்லை. சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து சாமானியர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.
 

சென்னைக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சுக துக்கங்களில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பித்த அந்த இளைஞரின் துடிப்பால் கவரப்பட்ட சென்னை அரசு நிர்வாகிகளால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா.
 

பதவி கொடுத்துவிட்டதே அரசாங்கம் என்று அதற்குத் துதி பாடிக் கொண்டிருக்காமல், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டி அவையில் சண்டமாருதம் செய்தார். இதனால் அரசு மட்டுமல்ல, மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர். தேசிய இயக்கத்தார் அவரைச் சுவீகரித்துக் கொண்டனர்.
 

மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற கதம்பக் குழுவுக்கு அவரையே செயலராக நியமித்தனர். தத்தளிக்கும் பல நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் காவலராக அவர் உருவெடுத்தார். நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுக்குத் தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தினார். தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார்.
 

அந்த வகையில்தான் டி. பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ். சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார். 1936-ம் ஆண்டு அக். 26-ம் தேதி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
 

அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பதையும் அவர் அப்போதே தீர்மானித்துவிட்டார்.
 

அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் அவருக்கு வேண்டியவர்களாக இருந்தனர். எனவே, அனைத்துத் தரப்பாரையும் இணைக்கும் இணைப்புக் கயிறாக அவரால் செயல்பட முடிந்தது. மற்றவர்களுடனான உறவும், நட்பும் எப்படி இருந்தாலும் பத்திரிகையைப் பொறுத்தவரை அதற்கு எது நல்லது என்பதைத் தீர்மானிப்பதில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அவர் அளிக்கவில்லை.
 

'இந்தியன் எக்ஸ்பிரஸ்', "தினமணி' ஆகிய பத்திரிகைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் செயல்படவும் அவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார் என்பது பெரிய குறைதான் என்றாலும், அப்படியிருந்த ஒரு தனி மனிதர் ஏராளமான மனிதர்கள் ஒரு குழுவாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத ஆற்றலும், வேகமும் கொண்டவராக இருந்ததால் பத்திரிகைக்கு அதுவே மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.
 

பத்திரிகைக்கு நல்ல ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமல்ல, பத்திரிகை என்பதைச் செயலில் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளை எடுத்து எழுதினால் பத்திரிகைக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
 

தமிழில் 'தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்துப் பிரமித்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் பத்திரிகை தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது பத்திரிக்கை குழுமம் வெற்றிநடை இட்டது. நாட்டின் அரசியலில் கலக்கும் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில்  என்றுமே எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமம் முன்னிற்கிறது.
 

அதிகாரமும், பதவியும் உள்ளவர்கள் எத்தனைதான் அச்சுறுத்தினாலும் தான் நினைப்பது சரியென்று பட்டுவிட்டால் அதைச் செய்து முடிக்காமல் அவர் இருந்ததில்லை.  பத்திரிகை உலகின் கம்பீரத்திற்கு சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991 , அக். 5  ல் மறைந்தார்.
 
நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் கோயங்காவுக்கு  என்றும் இடம் உண்டு. பத்திரிகை நடத்துவது லாபத்துக்காக மட்டுமே என்று எந்த நாளும் நினைத்தவர் அல்லர் அவர். அதனாலேயே அவர் இன்னமும் இந்தியப் பத்திரிகை அதிபர்களுக்குத் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
 
இந்திய ஊடகத் துறை தடுமாறியும் தடம் மாறியும் நிற்கும் இந்த வேளையில், ராம்நாத் கோயங்கா அவர்களுக்கு இருளில் ஒளிவிளக்காக வழி காட்டுகிறார்.
 
கட்டுரை ஆதாரம்: தினமணி (18.04.2011)
 
காண்க:
 
 
 
 
 
 
 
 

கருடனின் அம்சமாக அவதரித்தவர்



மதுரகவி ஆழ்வார்

திருநட்சத்திரம்:
சித்திரை - 5 - சித்திரை
(ஏப். 18)

திருக்கோளூர் - பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய இந்த ஊருக்கு இன்னுமோர் சிறப்பு சேர்ந்தது. அது - மதுரகவியாழ்வார் என்னும் வைணவ அடியாரைத் தோற்றுவித்த காரணத்தால்!

திருக்கோளூரில் சிறப்போடு வாழ்ந்த மக்களிடையே, முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அந்த மரபில், முன்குடுமிச் சோழிய மரபு சிறக்கும் வண்ணம், ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயாம்சராக (கருடனின் அம்சமாக) மதுரகவியாழ்வார் அவதரித்தார்.

இவர் தமிழ் மொழியிலும்,  வடமொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, பக்தி முதலியன வாய்க்கப் பெற்றிருந்தார்.  தமிழில் தேனினும் இனிய கவிதைகளைப் புனைந்து, திருமால் மீதான தம் பாடல்களைப் பாடிவந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவருக்கு 'மதுரகவியார்' என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்ணியம் நல்கும் திருப்பதிகளான அயோத்தி, மதுரா, கயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஏழு தலங்களையும் சேவிக்க யாத்திரை சென்றார். இங்கெல்லாம் சென்று, இறைவனை சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்தார். அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற ராமபிரானையும், சீதாபிராட்டியையும் சேவித்து திருவடி தொழுது அங்கு வசிக்கலானார்.

ஒருநாள் நள்ளிரவு. இவர் திருக்கோளூர் எம்பெருமானை எண்ணி, அந்தப் பதி இருக்கும் தென்திசை நோக்கித் தொழுதார். அப்போது அவர், தென்திசையில் வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்வியமான பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. அது இன்னதென்று அறியாமல், கிராம, நகரங்கள் ஏதும் வேகின்றனவோ? அல்லது காட்டுத் தீ சூழ்ந்ததோ? எனத் திகைத்து நின்றார். இவ்வாறே அடுத்த சில தினங்களிலும் கண்டு ஆச்சர்யத்தால் மேனி சிலிர்த்தார்.

அந்தத் திவ்விய ஒளி, முன்னினும் சிறப்புற அதிக ஒளி பொருந்தியதாய் விளக்கியதால், பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் ஆசையோடு தென் திசை நோக்கிப் புறப்பட்டார். நெடுந்தொலைவு வந்து, அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்து, இறுதியில் திருக்குருகூரை அடைந்தார். அதுவரையில் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இவ்வளவு தூரம் நடத்தி அழைத்து வந்த அந்த ஒளி, திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

மதுரகவியார் அவ்வூரில் உள்ளவர்களைப் பார்த்து, ''இங்கு ஏதேனும் சிறப்புச் செய்தி உண்டோ?''  என்று கேட்டார்.  அவர்கள், அந்த ஊரில் வாழும் நம்மாழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். நம்மாழ்வாரின் வரலாற்றைக் கேட்ட மதுரகவியார், கோயிலின் உள்ளே சென்று,  நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்தருளியிருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னது இவர் நினைவுக்கு வந்தது.

மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சரியப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். ''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று கேட்டார் மதுரகவியார்.

''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)

தனக்குத் தகுந்த விடை கிடைத்தவுடனே, நம்மாழ்வாரையே தன் குருவாக ஏற்றுக் கொண்டாடினார். பிறகு அவரருளைப் பெற்று, நம்மாழ்வார் அருளிச் செயல்களைப் பட்டோலையில் எழுதினர். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப் பாமாலையின் முதற்பா ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' எனத்  தொடங்குவதால்  அதற்குக்  'கண்ணிநுண்சிறுத்தாம்பு'   என்பதே  பெயராயிற்று.

இவ்வாறு இருக்குங்காலை,  நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்துகொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.

இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ''உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?'' என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ''இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்'' என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழப்  பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து,  திருவாய்மொழியில் 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.
அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார்.

அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.  பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார்.  சில காலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி. அவருக்கு மற்ற தெய்வங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்றுதான். அவை 'குருகூர் சடகோபன்' என்னும் நம்மாழ்வாரின் புகழை மட்டுமே கொண்டிருக்கின்றன. இருப்பினும் மதுரகவியாரே நம்மாழ்வாரைக் கண்டுபிடித்து பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் அவர் வைணவ உலகால் கொண்டாடப்படுகிறார்.

-செங்கோட்டை ஸ்ரீராம்

காண்க:

மதுரகவி ஆழ்வார் (விக்கி)

மதுரகவி ஆழ்வார் - சிறுகுறிப்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு

கண்ணிநுண்சிறுத்தாம்பு ௦ விளக்கவுரை (திராவிட வேதம்)

திருக்குருகூர் (தினமலர்)

மதுரகவி (தமிழ்முரசு)

மதுரகவி (தேசிகன்)

MADHURAKAVI AZHVAR

17.4.11

கொங்கு நாட்டின் சிங்கம்





தீரன் சின்னமலை

(பிறப்பு: ஏப். 17)

விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு பிற எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. 1857 ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர்கள் தமிழகத்தின் கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்டோர். இவர்களில் கொங்கு மண்டலத்தின் கதாநாயகனாகப் போற்றப்படும் தீரன் சின்னமலையின்  வீர வரலாறு இளைய தலைமுறையினர் அறிய வேண்டியதாகும்.
 
தீரன் சின்னமலை (ஏப். 17, 1756 -  ஜூலை 31, 1805) , கொங்கு நாட்டின்  முதல் விடுதலைப் போராட்ட வீரர். தமிழகத்தின் மேற்கப் பகுதியான கொங்கு மண்டலத்தில்,  இப்போதைய திருப்பூர்  மாவட்டத்தின் காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப். 17, 1756 அன்று கவுண்டர்  குலத்தில் பிறந்தவர்.  தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப் படுகிறது.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம்  போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். 

கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு  விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ''சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்'' என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப் படை ஒன்றுசேரா வண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். 

டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின்  மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக் கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

சின்னமலையின் கொங்குப்படை, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு  கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப். 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப்  பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார்.

ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர்துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப்  பாளையக்காரராக  அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். ஆனால், முந்தைய நாளே  போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர்,  தேவர்,  வன்னியர்,  நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
 
.
1801-இல் ஈரோடு-  காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும்,  1804-இல் அறச்சலூரிலும்  ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஆடிப் பதினெட்டாம் நாளன்று (ஜூலை 31, 1805 ) அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

அன்னாரது நினைவாக நமது அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. சின்னமலை ஆட்சி நடத்திய ஓடாநிலையில் அவருக்கு தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- கிண்டியில் தீரன் சின்னமலை சிலை உள்ளது.

அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து  போர்ப்படை  திரட்டிப் போராடி உயிர் நீத்த  மாவீரர் தீரன்  சின்னமலை. அவரது நினைவே நமக்கு உத்வேகமும் நல்லாற்றலும் வழங்கும்.


காண்க:

தீரன் சின்னமலை- செ.ராசு

சின்னமலை வாழ்க்கைக் குறிப்பு

தீரன் சின்னமலை (கீற்று)

திப்புவுக்கு தோள்கொடுத்த வீரன்

சின்னமலை கும்மிப்பாட்டு (கொங்கு தளம்)

தீரன் சின்னமலை.ORG

DHEERAN CHINNAMALAI (wiki)

ODANILAI (The Hindu)

16.4.11

அஹிம்சை தத்துவத்தின் பிதாமகர்


மகாவீரர்

(இன்று மகாவீர் ஜெயந்தி- ஏப். 16)

பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே. சமண சமயத்தை பரப்ப உதித்தவர்கள் 'தீர்த்தங்கரர்கள்' எனப்படுகின்றனர். அதன் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.

இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சித்திரை மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் அன்று பிறந்தார்.

அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது; காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய 'வர்த்தமானன்' என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14  சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.

சமண சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்)அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.

சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள், மதிப்பளித்தார்.அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார்.

மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது.

தமது 72 வது வயதில் பாவபுரி என்னுமிடத்தில், தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் (சமணர்கள் மோட்சம் அடைவதை இவ்வாறு கூறுவார்) எய்தினார். அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.

அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549- 477 காலத்தவராக கருதுகிறார்கள்.

மகாவீரரின் போதனைகள்:

மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன: மூன்று- கருத்துமயமானவை மற்றும் ஐந்து- நெறிவழிப்பட்டவை. இவற்றின் குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.

இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன.

அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன. அவை: அநேகாந்தவடா, சியாத்வடா மற்றும் கர்மா. 

ஐந்து நெறிவழிகளாவன: அகிம்சை,சத்தியம்,அஸ்தேயம், பிரமச்சரியம், அபாரிகிருகம்.

மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார்.

கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மா பளு கூடுதலாகிறது.

இதிலிருந்து விடுபட, மகாவீரர் நன்னம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  நல்லறிவு  (சம்யக்-ஞானம்), மற்றும் நன்னடத்தை (சம்யக்-சரித்திரம்') ஆகிய மூன்று மணிகள் தேவை  என்று வலியுறுத்தினார்.

நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
  • வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.
  • வாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
  • திருடாமை (அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
  • பாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
  • உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.

மகாவீரர், ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். அவரை அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட பின்பற்றினர்.  வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்; ஆண்துறவி (சாது), பெண்துறவி (சாத்வி), பொதுமகன் (ஷ்ராவிக்)  மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.

சமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர்.ஆயினும் தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.

உண்மையில் மகாவீரர், பாரத்ததின் தொன்மையான சனாதன  மதத்தின் சீர்திருத்தவாதியே ஆவார். பின்னாளில், அவரையும் சிலையாக்கி வழிபடும் முறை ஏற்பட்டது. மகாத்மா காந்தி சமணர்களின் அடிப்படைக் கொள்கையான அஹிமசையை அரசியல் போராட்ட ஆயுதமாக மாற்றியபோது தான் அதன் மாபெரும் சக்தி உலகிற்கு தெரிந்தது.

பாரதம் என்ற தேசத்தின் அடியாழத்தில் பாயும் நீரோட்டங்களில் சமணர் சமயமும் அவர்கள் வழங்கிய ஞானமும் முக்கியமானவை. மகாவீரர் அந்த நதிப்பெருக்கில் மாபெரும் அலைகளை ஏற்படுத்திய மகத்தான ஞானி ஆவார்.

நன்றி: விக்கி  பீடியா களஞ்சியம்

காண்க:

மகாவீரர் (விக்கி)

சமண சமயம்

தீர்த்தங்கரர்கள்

JAIN WORLD.COM

தமிழ்ச் சமணம்

மானுடம் வளர்த்த மகாவீரர் (தன்னம்பிக்கை)


14.4.11

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


ஸ்ரீ விக்ருதி ஆண்டு கழிந்தது;  கர ஆண்டு பிறந்திருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே வாழ்க்கை?

தமிழ் ஆண்டுக் கணக்கிற்கு பழமையான பாரம்பரியம் உண்டு. 60  ஆண்டுகள் கொண்ட ஒரு சுற்று முடிந்து அதே ஆண்டுகள் மீண்டும் சுழன்று வரும். அதற்குள் இரண்டு தலைமுறைகள் பிறந்திருக்கும்.

இயற்கையின் அடிப்படையில்  வசந்தத்தை வரவேற்பதாக அமைந்தது தமிழ் நாள்காட்டி. தொன்மையான தமிழகத்தில் இந்நாளை வசந்த விழாவாகக் கொண்டாடி  மகிழ்ந்திருக்கின்றனர்.   நாடு முழுவதும் இதே நாளை 'பைசாகி விழாவாகவும்'  கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதுமான ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இருப்பது தமிழ்ப் புத்தாண்டு.

எனினும் நமது மாநில அரசு தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தை மாதத்திற்கு மாற்றி அறிவித்தது. சமஸ்கிருதப் பெயர்களுடன் தமிழ் ஆண்டுகள் இருப்பது கூடாது என்ற குறுகிய பார்வையின் விளைவாக எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கை அது.

தை முதல் நாளை நாம் 'மகர சங்கராந்தியாகவும்' அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். அதனை புத்தாண்டாக ஏற்குமாறு அரசு ஓர் ஆணையின் மூலம் நிர்பந்தம் செய்தது. எனினும் தமிழ மக்கள், அரசு ஆணைக்கு அடிபணியாமல், இன்றும் சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடி வருகின்றனர்.

மக்களின் பாரம்பரிய வழக்கங்களையும் மத நம்பிக்கைகளையும் மக்களால் தேர்வு செய்யப்பட அரசில் இருப்பவர்கள் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மாற்றிடக் கூடாது. அரசு ஆதிக்கங்களை மீறியே  நமது தர்மமும் தொன்றுதொட்ட பண்பாடும் காக்கப்பட்டு வந்துள்ளன. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இன்று தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த மகிழ்ச்சியில் நமது வலைப்பூவும் பங்கேற்கிறது. இந்த சித்திரைக் கனி அனைவருக்கும் உவப்பாகவும் இனிப்பாகவும் அமையட்டும்!

-குழலேந்தி

காண்க:



.

சித்திரை மாத மலர்கள்


ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:


மகாவீரர் ஜெயந்தி
(ஏப். 16)

இசைஞானியார்
(சித்திரை - 4 - சித்திரை)

மதுரகவி ஆழ்வார்
(சித்திரை - 5 - சித்திரை)

திருக்குறிப்புத் தொண்டர்
(சித்திரை - 5 - சுவாதி)
(மறைவு: ஏப். 24 )


திருநாவுக்கரசர்
(சித்திரை - 15 - சதயம்)

வடுக நம்பி
(சித்திரை - 19 -அஸ்வினி)

சிறுத்தொண்டர்
(சித்திரை - 20 - பரணி)

உய்யக் கொண்டார்
(சித்திரை - 21 - கார்த்திகை)

தியாகராஜ சுவாமிகள்
(சித்திரை - 21 - கார்த்திகை)

மங்கையர்க்கரசியார்
(சித்திரை - 22 - ரோகிணி)

விறன்மிண்டர்
(சித்திரை - 24 - திருவாதிரை)

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
(சித்திரை - 24 - திருவாதிரை)

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி
(சித்திரை - 25 - புனர்பூசம்)

முதலி ஆண்டான்
(சித்திரை - 25 - திருவாதிரை)


சிவஞான சுவாமிகள்
(சித்திரை - 27 - மகம்)

உமாபதி சிவாச்சாரியார்
(சித்திரை - 31 - ஹஸ்தம்)


-----------------------------

சான்றோர்- மலர்வும் மறைவும்:

அண்ணல் அம்பேத்கர்
(பிறப்பு: ஏப். 14)

விஸ்வேஸ்வரய்யா
(நினைவு: ஏப். 14)

தீரன் சின்னமலை
(பிறப்பு: ஏப். 17)

(பிறப்பு: ஏப். 18 )

தாமோதர சாபேக்கர்
(பலிதானம்: ஏப். 18)

 மு.வரதராசனார்
(பிறப்பு: ஏப். 28)

கணிதமேதை ராமானுஜன்
(நினைவு: ஏப். 26)

தமிழ்த்தாத்தா உ.வே.சா.
(நினைவு: ஏப். 28)

வீரன் அழகுமுத்துக்கோன்
(நினைவு: ஏப். 29)

கவிஞர் பாரதிதாசன்
(பிறப்பு: ஏப். 29)

சகஜானந்தர்
(நினைவு: மே 1)

தளவாய் வேலுத்தம்பி
(பிறப்பு: மே 6)

(பிறப்பு: மே 7)

கோபாலகிருஷ்ண கோகலே
(பிறப்பு: மே 9)

கஸ்தூரிபா காந்தி
(பிறப்பு: மே 9)

மொரார்ஜி தேசாய்
(நினைவு: மே 10)

சுத்தானந்த பாரதியார்
(பிறப்பு: மே 11)

அண்ணலின் அமுத மொழி

அண்ணல் அம்பேத்கர்
பிறப்பு: ஏப். 14

  

ஜனநாயக அரசு வேண்டுமெனில்  

சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்


- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.

முதல் தவறு : அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.

இரண்டாவது தவறு, ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.

மூன்றாவது தவறு! அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.

ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால், தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.

இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.

இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம் : 282 )
.
நன்றி: கீற்று

13.4.11

ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்!


நிலப்பரப்பில் உலகிலேயே மிகப் பெரிய நாடு ரஷ்யா; மக்கள் தொகையில் மிகப் பெரிய நாடு சீனா;  வல்லரசு அமெரிக்கா. ஆனால், உலகிலேயே  மிகப் பெரிய  ஜனநாயக நாடு  இந்தியா தான்.  இந்தப் பெருமை  நமக்கே  உரித்தானது. 

எத்தனை ஏமாற்றங்கள் இருந்தபோதும், சர்வாதிகாரிகளின் பிடியில் இந்திய ஜனநாயகம்  சிக்கிக்கொள்ளவில்லை;   ராணுவம் இந்திய அரசின் காவலனாக மட்டுமே இருக்கிறது; வாக்குச்சீட்டுகளால் ஆட்சிகளை சத்தமின்றி மாற்றுவது இந்தியாவின் பலம். இதை உலகம் வியப்புடன் பார்க்கிறது.

நமது நாடு விடுதலை பெற்று 64  ஆண்டுகள் முடிந்தபோதும், வறுமை, கல்லாமை, தீண்டாமை உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆனால், அதற்கான முயற்சியில் நாம் பல படிகள் முன்னேறி இருக்கிறோம்.

நமது அரசியல்வாதிகள் ஊழலில் திளைக்கிறார்கள்; பல லட்சம் கோடி ஊழல் இப்போது சாதாரணமாகிவிட்டது.  உலக அளவில் ஊழலில் முதல் பத்து  நாடுகளில்  ஒன்றாக இந்தியா இருக்கிறது. இவை நமது ஜனநாயகத்தின் கரும்புள்ளிகள். ஆனால், இதே நாட்டில்தான் குஜராத்தின் நரேந்திர மோடியும் பிகாரின் நிதிஷ்குமாரும், ஒரிசாவின் நவீன் பட்நாயக்கும் ஊழலற்ற மக்கள்நல ஆட்சி செய்கிறார்கள்.

எந்த ஒரு அரசியல் தத்துவத்துக்கும் இருக்கும் நன்மை, தீமைகள் ஜனநாயகத்திற்கும் உண்டு. அதே சமயம், அதிகபட்ச நன்மைகளும் குறைந்தபட்ச தீமைகளும் கொண்டது ஜனநாயகம் மட்டுமே. மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது நன்மைகள் கூடுதலாகும்; மக்களின் விழிப்புணர்வு குறையும்போது தீமைகள் அதிகரிக்கும்.

ஆக, நமது ஜனநாயகத்தின் குறைபாட்டிற்கு காரணம் அமைப்பு அல்ல; அதை கடைபிடிக்கும் மக்களே என்பது தெளிவாகிறது. 'மக்கள் எவ்வழி; மன்னன் அவ்வழி' என்பதுதானே குடியாட்சிக் காலத் தத்துவமாக இருக்க முடியும்?

மக்கள் தூய்மையும் ஒழுக்கமும் நேர்மையும் மிகுந்தவர்களாக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளும் அவ்வாறே தேர்வாவார்கள். அந்தப் பிரதிநிதிகளால் அமையும் ஆட்சி உண்மையான மக்கள்நல ஆட்சியாக விளங்கும். தமிழகமும் ஆந்திரமும் கர்நாடகமும் கேரளமும் ஊழல், வன்முறை, ஜாதி அரசியல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் அரசியல் கட்சிகள் அல்ல; மக்களே.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் ஆண்டிப்பட்டி ராசா பிறந்த இதே தமிழகத்தில் தான் தியாகி கக்கன் வாழ்ந்திருக்கிறார்.  அதிகார அத்துமீறல்களுக்கு உதாரணமாகக் கூறப்படும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆண்ட இதே மாநிலத்தில் தான் ஓமந்தூர் ராமசாமியும் காமராஜரும் ராஜாஜியும் ஆண்டனர். இன்றும் கூட, பொதுநலனே   உயிர்மூச்சாகக் கொண்ட தலைவர்கள் பல கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால் ஊடக வெளிச்சம் அவர்கள் மீது விழாததால், நாம் நம்பிக்கை இழந்திருக்கிறோம்.

இன்று தமிழகத்தின்  14  வது சட்டசபைத் தேர்தல். ஆட்சி மாற்றம் நிகழுமா. அதே ஆட்சி தொடருமா, தொங்கு சபை அமையுமா, புதிய கட்சிகள் வெல்லுமா போன்ற பல கேள்விகளுக்கு மக்கள் இன்று தங்கள் வாக்குப்பதிவில் விடை அளிக்க இருக்கிறார்கள். அவர்களை விலைபேச முக்கிய கட்சிகள் முண்டி அடிக்கின்றன. இலவச வாக்குறுதிகளால் மக்களை கட்சிகள் பிச்சைக்காரகள் ஆக்குகின்றன. சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி வாக்கு சேர்க்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்நிலையில் மதிப்பிற்குரிய வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?

முதலில், நமது மக்களாட்சிமுறையின் சிறப்பை உணர்ந்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு '49 - ஓ' ஏற்பாடும் இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்காளரின் உரிமை; வாக்களிப்பது கடமை.

இன்றைய நிலையில் நாட்டு ஒற்றுமை, பொருளாதார நிலை, வேட்பாளரின் பண்புநிலை, போட்டியிடும் கட்சிகளின் தராதரம் ஆகியவற்றை ஒப்பிட்டு, விலைவாசி, ஊழல், மக்கள்நலத் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, வாக்களிக்க வேண்டும். 

இது வாக்காளரின் கடமை. நமது ஜனநாயகக் கோயிலில் தேர்தலே பூஜை. இந்த தேர்தல் நல்லவர்களை கோயிலில் கொண்டுவந்து இருத்தட்டும்!


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!

-குழலேந்தி



.