நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

8.5.11

ஷண்மத ஸ்தாபகர் ... அத்வைத சாதகர்


ஆதி சங்கரர்

சங்கர ஜெயந்தி:
சித்திரை  -25-  புனர்பூசம்
(மே 8)
ஆன்மீக நெறியை உலகில் பிரகாசிக்கச் செய்யும் ஒப்பற்ற நாடு நம் பாரத நாடு. இம்மண்ணில் ஆயிரமாயிரம் அருளாளர்கள் தோன்றி பக்தி நெறியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பலவிதமான புறச்சமயங்கள் மக்களை திசை திருப்பிய காலத்தில், கயிலை மலையிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து சென்று, சமய உட்பூசல்களைக் களைந்து, இந்து சமய ஒற்றுமைக்கு அஸ்திவாரம் அமைத்த பெருமை ஆதிசங்கரர் என்ற மகானுக்கே உரியதாகும்.  

முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த அவ்வருளாளர், வைதீக தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்தியவர். வழிபாட்டிற்கு உதவும் வகையில் காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்னும் அறு சமய நெறிகளை வகுத்து இந்து மதத்தின் ஒற்றுமைக்கு வழிகாட்டிய அவரது தொண்டு ஈடு இணையற்றது. சங்கரர், சிவபெருமானின் அம்சமாகவே அவதரித்தவர் என்பது பெரும்பாலோர் நம்பிக்கை.
மே  8ம் தேதி ஆதிசங்கரர் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கேரள மாநிலத்தில், திருச்சூர் அருகில் உள்ள 'காலடி' என்ற கிராமத்தில் சங்கரர் அவதரித்தார். சிவகுரு-ஆர்யாம்பா தம்பதியருக்கு மகனாக நந்தன வருஷம்,  சித்திரை  மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி- புனர்பூசம் நட்சத்திர நன்னாளில் இறையருளால் தோன்றினார். சிறுவயதில் வேத சாஸ்திரங்களை நன்கு பயின்றார்.
வேதவித்யார்த்திகள் நாள்தோறும் பிச்சை எடுத்து அந்த உணவை உண்ண வேண்டும் என்பது நியதி. அன்று துவாதசி திதி. சங்கரர் ஒரு அந்தணர் வீட்டின் முன்பு நின்று பிச்சை கேட்டார். அந்த அந்தணரோ பரம ஏழை. அச்சமயத்தில் வீட்டில் இருந்த பெண்மணி, ""ஒரு மணி அரிசிகூட இல்லையே'' என்று வருந்தினார். பிறகு வீட்டில் இருந்த ஒரேயொரு உலர்ந்த நெல்லிக்கனியை சங்கரருக்கு அளித்தார். அந்த மாதுவின் தரும சிந்தனையைக் கண்டு நெகிழ்ந்தார் சங்கரர். மகாலஷ்மியைப் பிரார்த்தித்து, "அங்கம் ஹரே புளக பூஷணம் ஆச்ரயந்தி'' என்று தொடங்கும் பதினெட்டு ஸ்லோகங்கள் பாடி அவ்வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தார். அது "கனகதாரா ஸ்தோத்திரம்'' என்னும் துதியாகும்.
எட்டு வயதில் துறவு மேற்கொண்டு வடதிசை நோக்கி தமது யாத்திரையைத் தொடங்கினார் சங்கரர். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள குகையில் 'கோவிந்த பகவத் பாதர்' என்னும் மகானை தரிசித்து "தசஸ்லோகி'' என்ற பத்து ஸ்லோகங்களைப் பாடினார். உடனே சங்கரரை சீடராக ஏற்றுக் கொண்டார் கோவிந்த பகவத் பாதர். உபநிஷத், பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரங்களை உபதேசித்து, அவைகளுக்கு வியாக்யானம் எழுதுமாறும், அத்வைத சித்தாந்தத்தை பல சீடர்களுக்கு உபதேசிக்கும்படியும் குருநாதர் ஆணையிட்டார்.
பின்னாளில் சங்கரர் பாடிய பிரபலமான துதிகளில், 'பஜ கோவிந்தம்' என்பதும் ஒன்று. இது திருமாலின் பெருமைகளையும், வாழ்க்கையின் நிலையாமையையும் எடுத்துரைக்கின்றது. இத்துதியில், "கோவிந்தம்' என்று பாடி தனது குருவின் திருப்பெயரையும் சங்கரர் பதிவு செய்திருப்பது ஓர் நயம்.
காசியில் தம் சீடர்களுக்கு பிரம்மசூத்திர விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் சங்கரர். அப்போது பகவான் வியாசரே முதிய அந்தணர் வடிவில் வந்து சங்கரரிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்டார். சிவனின் அம்சமான சங்கரரும், விஷ்ணுவின் அம்சமான வியாசரும் விவாதம் நடத்தியதைக் கண்ட சங்கரரின் சீடர் பத்மபாதர் அவர்களைப் போற்றித் துதித்தார்.
பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் குமாரில பட்டரை சந்தித்தார் சங்கரர். "மீமாம்ச நெறி'யைப் பின்பற்றிய பட்டர், சங்கரரால் அத்வைத உபதேசம் பெற்றார்.

அந்நாளில் பிரபல 'மீமாம்ச நெறி' விற்பன்னராக இருந்த மண்டன மிச்ரரையும் மாஹித் மதி நகரில் சந்தித்து, அவருடன் அத்வைத நெறி பற்றி வாதித்தார் சங்கரர். அப்போது மிச்ரரின் மனைவி உபய பார்வதி என்ற சரஸ்வதி, நடுவராக இருந்து வாதத்தைக் கேட்டார். ஏழு நாட்கள் நடந்த வாதத்தில் மண்டன மிச்ரர் அணிந்த மாலை வாடியதால் அவர் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். சங்கரரிடம் சந்நியாசம் பெற்று "சுரேச்வரர்'' என்ற திருநாமம் பெற்றார்.
ஸ்ரீசைலத்தில் இறைவனை வணங்கி, 'சிவானந்த லஹரி' என்னும் அற்புத தோத்திரத்தைப் பாடி அருளினார் சங்கரர். அங்கிருந்த காபாலிகன் சங்கரரின் சிரத்தை வெட்ட வாளை ஓங்கியபோது நீராடிக் கொண்டிருந்த பத்மபாதர் தம் குருவுக்கு ஆபத்து நேரப் போவதை உணர்ந்து நரசிம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஓடிவந்தார். ஸ்ரீநரசிம்மரே காபாலிகனை சாய்த்து சங்கரரைக் காத்தார். இதையுணர்ந்த சங்கரர், அஹோபிலத்தை அடைந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட்டார்.
துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரியில் ஸ்ரீசாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் சங்கரர். அங்கிருந்தபோது தம் அன்னையின் உடல் நிலை கவலைக்குரியதாக இருந்ததை அறிந்தார். உடனே காலடி சென்று தாய் ஆர்யாம்பாவைக் கண்டபோது ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் தாய். அப்போது விஷ்ணுவின் தூதர்கள் அன்னைக்குத் தென்பட அவளது ஆவி பிரிந்தது. சந்நியாசம் மேற்கொண்ட சங்கரர், ஈமக்கடன்களை செய்வதை உறவினரும் ஊராரும் விரும்பவில்லை. ஆயினும் தாமே சிதை அமைத்து, தாயின் உடலை அதில் கிடத்தி அக்னி தேவனை வணங்கி அன்னையின் சடலத்துக்கு எரியூட்டினார் சங்கரர்.

திருமலை வேங்கடவனை தரிசித்து அங்கு 'தனாகர்ஷண' எந்திரத்தைப் பதித்தார். காஞ்சியில் ஏகாம்பரேச்வரர், வரதராஜர், காமாட்சியம்மன் திருக்கோயில்களைப் புதுப்பித்தார். கயிலை மலையில் சிவபிரானை தரிசித்து அங்கிருந்து பஞ்சலிங்கங்களை பெற்றார். கேதாரத்தில் முத்திலிங்கம், நேபாளத்தில் வரலிங்கம், சிதம்பரத்தில் மோட்ச லிங்கம், சிருங்ககிரியில் போகலிங்கம் என்று பிரதிஷ்டை செய்தார்.
திருவிடைமருதூரில் பிற மதத்தவர்களுடன் வாதிட்டு அத்வைதமே உண்மையான தத்துவம் என்பதை நிறுவினார். திருச்செந்தூரில் சுப்ரமண்யபுஜங்கமும், மதுரையில் மீனாட்சி பஞ்சரத்னமும் பாடி தரிசித்தார். திருவனந்தபுரம், கோகர்ணம், சொல்லூர் முதலான தலங்களை தரிசித்தார். ஸ்ரீபலி என்ற ஊரில் ஊமைப் பையனைப் பார்த்து "நீ யார்?'' என்று வினவினார். அதுவரை வாயே திறவாமல் இருந்த அந்தச் சிறுவன், 13 ஸ்லோகங்களில் ஆத்ம தத்துவத்தைப் பதிலாக உரைக்க, அவனைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு "ஹஸ்தமாலகர்'' என்று பெயரிட்டார் சங்கரர்.
துவாரகையில் ஒரு மடம் நிறுவி உஜ்ஜயினி, வட மதுரை, பூரி, பிருந்தாவனம், பதரிகாச்ரமம் முதலியவைகளை தரிசித்தார் ஆதி சங்கரர். பின்னர் ஸ்ரீரங்கம் வந்து ரங்நாதரை வழிபட்டார். திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி ஆவேசமாக இருப்பதைக் கண்டு அம்பிகையின் எதிரில் கணபதியை பிரதிஷ்டை செய்தார். அம்பிகைக்கு நவமணிகளால் ஆகிய தாடங்கம் (காதணி) அணிவித்து சாந்த வடிவினளாக இருக்கச் செய்தார். கன்னியாகுமரியை தரிசித்து ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
பாரதம் முழுவதும் யாத்திரை செய்து அத்வைத சித்தாந்தத்தை நிறுவிய சங்கர பகவத்பாதர், கேதாரத்தில் இந்திராதி தேவர்களால் பூஜிக்கப்பட்டார்; பிரம்மாவால் வாழ்த்தப்பட்டார்.
இவர் 'சர்வக்ஞ பீடம்' ஏறியது காஞ்சியில் என்றும், காஷ்மீரத்தில் என்றும் இரு வேறு கருத்துகள் பண்டிதர்கள் மத்தியில் உள்ளன. தம் அவதார நோக்கங்கள் நிறைவேறிய பின்னர் சங்கரர், கயிலையை அடைந்ததாக கருதுவாரும் உண்டு.
இவர் இயற்றிய அத்வைத சித்தாந்த நூல்களில் உபதேச லஹரி, ஆத்ம போதம், விவேக சூடாமணி, வாசுதேவ மனனம், சர்வ வேதாந்த சித்தாந்த ஸங்க்ரஹம் போன்றவை குறிப்பிடத் தக்கவை. கணேசர், லலிதை, ஹனுமார், மீனாக்ஷி ஆகியோர் மீது பஞ்சரத்னங்களும், தக்ஷிணாமூர்த்தி, அன்னபூரணி, காலபைரவர், கிருஷ்ணர், பாண்டுரங்கன் உள்பட பல தெய்வங்களின் மீது அஷ்டகங்களும் பாடியுள்ளார். மேலும் இவர் இயற்றிய சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம், சிவானந்த லஹரி, செüந்தர்ய லஹரி ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.

""எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்மாவும், பரமாத்மாவும் ஒன்றே! வேறல்ல; சிவபெருமானும், திருமாலும் ஒரே பரம்பொருளின் இரண்டு அம்சங்கள். உயிரானது பிறப்பு, இறப்புகளிலிருந்து விடுதலை பெறும் மோட்சம்தான் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பது. கர்மம், பக்தி, ஞானம் ஆகியவை முக்திக்கு வழிகள். இறைவனின் திருநாம கீர்த்தனமே "சித்த சுத்தி'க்கு வழி. சித்தம் சுத்திகரிக்கப்படாதபோது அதில் ஞானம் தங்காது. எனவே இக்கலியில் இறைவனது நாம கீர்த்தனமே ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் ஏற்ற ஒரே உபாயம்'' என்பது ஆதி சங்கரரின் அற்புத உபதேசமாகும்.
-வலையப்பேட்டை.ரா.கிருஷ்ணன்

காண்க:

ஆதி சங்கரர் (விக்கி)

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி (தமிழ் ஹிந்து)

சிருங்கேரி சாரதாபீடம் (தினமலர்)

சுப்பிரமணிய புஜங்கம்

கனகதாரா ஸ்தோத்திரம் (ஒலி)

மாத்ரு பஞ்சகம்

ADI SANKARA

இறைவனை  வழிபடு (குழலும் யாழும்)

Sankaracharya.org

ஆதி சங்கரர் வாழ்க்கை சரிதம் (நிலாச்சாரல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக