நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

5.9.11

கப்பலோட்டிய தமிழர்


வ.உ.சிதம்பரம் பிள்ளை
(பிறப்பு: செப். 5)


வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது 1908-ம் ஆண்டு வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து வெள்ளைய நீதிபதி ஃபின்ஹே தீர்ப்பில் எழுதியுள்ள வரிகள்... இதுபோன்று எந்தவொரு இந்தியரும்கூட வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும், வேகத்துக்கும் சிறந்த அங்கீகாரத்தையும் தந்துவிட முடியாது.

வ.உ.சி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். தொடக்கக்கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பயின்று 1895-ம் ஆண்டு வழக்குரைஞரானார்.

வணிக நோக்கில் வந்த வெள்ளையர்கள் இங்கு நிலவிய சிறு, சிறு பாளையங்களாக ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இதனை எண்ணிய வ.உ.சி. வணிகம் மூலமாக நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்களை வணிக ரீதியாகவே விரட்ட வேண்டும் என, 1906-ம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார்.

வாணிபம் என்பது தமிழர்களுக்குப் புதிது இல்லை. சங்க இலங்கியங்களில்கூட, தமிழர்கள் திரைகடல்ஓடி திரவியம் தேடியுள்ளனர். சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பல நாடுகளில் கடல் வாணிபம் செய்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. எனவே, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளையர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வாணிபப் போட்டியில் ஈடுபட்டார்.

காலியா, லாவோ என இரு கப்பல்களை வங்கக்கடலில் விட்டு, கொழும்பு நகரத்துடன் வாணிபத்தைத் தொடங்கினார். அவரின் செயலைக் கண்டு மும்பை கடற்கரைக் கூட்டத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர் பேசும்போது, ""திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானி ஆகிய வ.உ.சி. தூத்துக்குடி - சிலோனுக்கு சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்துக்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்'' என்று பேசியுள்ளார்.

வ.உ.சி. பல இடங்களுக்குச் சென்று விடுதலை குறித்து மக்களிடையே பிரசங்கத்திலும் ஈடுபட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் வ.உ.சி.யின் மீது வழக்குத் தொடுத்து 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.

கோவைச் சிறையில் ஆங்கிலயர்கள் வ.உ.சி.யைக் கல்லுடைக்க வைத்துள்ளனர். அதில் அவரின் கையில் கொப்புளங்கள் ஏற்பட்ட நிலையிலும், துன்புறுத்துவதற்காக செக்கிழுக்க வைத்துள்ளனர்.

கொடுமைப்படுத்தப்பட்ட வ.உ.சி.யின் நிலையைக் கண்டு, அவரின் துணைவியார் மீனாட்சி அம்மையார் ஆங்கிலேய அரசருக்கு எழுதிய மடலில், ""சிறையதிகாரிகள் என் கணவரைச் செக்கிழுக்கவும், கல்லுடைக்கவும் வைத்துத் துன்புறுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இக்கணமே அவரைக் கண்மறைவாக அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுதல் நலம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்துக்காக மட்டும் அல்லாமல், தீண்டாமைக்கு எதிராகவும் போராடிய வ.உ.சி., சகஜாநந்தா என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தம் வீட்டில் தங்க வைத்து போதித்து, தமிழறிவு ஊட்டி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்குத் திலகமாகியுள்ளார்.

அதுபோல், விருதுநகர் இராமையா தேசிகர் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிறவிக் குருடரையும் தம் இல்லத்தில் தங்க வைத்து ஆதரித்துள்ளார். விதவை மறுமணம், கலப்புத் திருமணம் போன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளார்.

கையூட்டில் ஈடுபட்ட ஏகாம்பரம் என்ற துணை நீதிபதியையும், பஞ்சாபிகேசவராவ், வாசுதேவராவ் என்ற அதிகாரிகளையும் கோர்ட்டில் நிறுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி. 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இறந்தார். வ.உ.சி. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்கும் உழைத்த வரலாறு இன்றும் போற்றப்படத்தக்கதாக இருக்கிறது. இவர் போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நம்மவர்கள் ஜாதிப் பிரிவுக்குள் அடக்கி, விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் ஜாதிச் சங்கத் தலைவர்களாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், அவர்களின் வரலாற்றை வருங்காலச் சந்ததியினர் அறிய முடியாமல் போகும்.

அப்படி அறிய முடியவில்லையென்றால், சுதந்திரத்துக்காக உழைத்த மாபெரும் தலைவர்களின் வரலாறுகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துத் தரப்பு மக்களும், வளரும் தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு தலைவரின் வரலாறுகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பின்பற்றச் செய்ய வேண்டும். அதுகுறித்து வ.உ.சி. பிறந்த இந்நாளில் ஒவ்வொருவரும் பின்பற்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தியனின் நனவாக இருக்க வேண்டும்.

-மா.வீரபாண்டியன்
நன்றி: தினமணி

காண்க:

வ.உ.சிதம்பரம் பிள்ளை (விக்கி)

V.O.C.CHIDHAMBARAM PILLAI

Indian Post Stamp
 
கப்பல் ஓட்டிய தமிழர் (யாழ்)
 
வ.உ.சி எழுதிய பாடல் திரட்டு
 
தேசபக்த வீரர் வ.உ.சி. (தமிழ் ஹிந்து)
 
வ. உ.சி.யின் இலக்கிய, சமுதாயப் பணிகள் (தமிழ் மரபு அறக்கட்டளை)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக