ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
(பிறப்பு: செப். 26)
மேற்குவங்கத்தின் மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தன் நண்பர்களோடு சேர்ந்து பலரிடமும் நன்கொடைகளை திரட்டுவதற்காக பக்கத்து மாநிலங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டுவந்தார்.
செல்வாக்குமிக்க நவாப் ஒருவரைச் சந்தித்து நன்கொடை வேண்டி நின்றார் வித்யாசாகர். மக்களின் அறியாமையை அகற்றி கல்விக்கண் திறக்கும் நோக்கோடு, பல்கலைக் கழகம் அமைக்க நன்கொடை வேண்டும் வித்யாசாகரின் முயற்சியைப் பாராட்டாமல், ஆணவத்தோடு தன்னுடைய ஷூ ஒன்றை கழற்றி அவரின் பையில் போட்டார் அந்த நவாப்.
நவாப்பின் இச்செயலால் அதிர்ச்சியோ, மனத்தளர்ச்சியோ அடையாத ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்கள் புன்முறுவலோடு நவாப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த ஷூவை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
அடுத்த நாள் நவாப்பின் அரண்மனைக்குச் சற்றுதூரம் தள்ளி ஒரு ஏலவிற்பனைக்கு ஏற்பாடு செய்தார் வித்யாசாகர். ”பெருமதிப்பு மிக்க நவாப் அவர்களின் ஒற்றை ஷூ ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்” என்று கூறியவுடன் நவாப்பின் ஷூ பெருந் தொகைக்கு ஏலம் போனது. இந்தச் செய்தி உடனடியாக நவாப்பின் காதுகளுக்கும் எட்டியது.
தன் ஷூ ஏலத்தில் விடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த நவாப் உடனடி யாக வித்யாசாகரை தன் அரண்மனைக்கு வரவழைத்தார்.
தான் அவமானப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாமல் அதையே வெகுமானமாக்கிய’ வித்யாசாகரின் செயலைப் பாராட்டி விட்டு அந்த ஷூ ஏலம்போன தொகையளவிற்கு நன்கொடையும் கொடுத்தனுப்பினார்.
துளையிடுதலை பொறுத்துக் கொள்ளும் மூங்கில்தான், புல்லாங்குழலாகி இதழ்களோடு உறவாடி, இனிய இசைதந்து காற்றின்வழி காதுகளை வருடி நம் மனங்களை கொள்ளை கொள்கிறது.
- ருக்மணி பன்னீர்செல்வம்
நன்றி: நமது நம்பிக்கை
காண்க:
Ishwar Chandra Vidyasagar
வித்யாசாகர் வாழ்வில் (முத்துக்கமலம்)
பிரபலங்கள் வாழ்வில் (ஈகரை)
banglapedia.org
Ishwar Chandra (Encyclopædia Britannica)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக